logo

|

Home >

campaigns-of-shaivite >

thirukkoyil-markazhi-vazhipaadu

திருக்கோயில் மார்கழி வழிபாடு

 

திருச்சிற்றம்பலம்


     மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்தியுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடனகலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. 

 

     மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை பொழுதாகக் கருதப்படுகின்றது. 

 

     மார்கழி முழுவதும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் வண்ண வண்ண கோலமிட்டு திருக்கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டி வழிபாடு செய்தமையில் இஃது பாவை நோன்பு என்றும் வழங்கலாயிற்று. மார்கழியில் பெண்கள் மட்டுமின்றி குடும்பத்துடன் அனைவரும் அதிகாலையில் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது செழிப்பான வாழ்வு அமைவதுடன் வேண்டிய பலனையும் தரும்.

 

     திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அ/மி ஸ்ரீகோமதி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் திருக்கோயிலில் தன்னார்வளர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 7-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. இதனைத் தொடர்ந்து எங்கள் ஊர் சிவாலயமான பத்மனேரி சிவாலயத்திலும் மார்கழி வழிபாடு நடைபெற வேண்டும் என்று விரும்பிய அவ்வூர் அன்பர்களும் சிவனடியார்களும் Shaivam.org-ன் வழிகாட்டுதலின்பேரில் மார்கழி வழிபாடு தொடங்கப்பட்டு மிகவும் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் இதனை தொடர்ந்து கீழபத்தை அ/மி ஸ்ரீசுகுந்தகுந்தலாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீகுலசேகரநாதர் திருக்கோயில், கருவேலங்குளம் அ/மி ஸ்ரீசௌந்தரபாண்டீஸ்வரர் திருக்கோயில், மேலச்செவல் அ/மி ஸ்ரீஆதித்யவர்ணேஸ்வரர் திருக்கோயில், வள்ளியூர் அ/மி ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில், ஏர்வாடி அ/மி ஸ்ரீதிருவழுதீஸ்வரர் திருக்கோயில், புலியூர்குறிச்சி அ/மி ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடம்போடுவாழ்வு அ/மி ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில், பேய்க்குளம், சாத்தான்குளம், சிங்கிகுளம், ஓமநல்லூர், திடீயூர் ஆகிய ஊர் சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

 

     களக்காடு மற்றும் மேற்குறிப்பிட்ட சிவாலயங்களில் மார்கழி வழிபாடு நடைபெறுவதை போல "எங்கள் ஊர் சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடு நடைபெற வேண்டும்" என்று விரும்பிய சுத்துபட்டு ஊர்களில் உள்ள தன்னார்வ அன்பர்கள், சிவனடியார்கள், ஊர்ப்பொதுமக்கள் களக்காடு மற்றும் மேற்குறிப்பிட்ட சிவாலய மார்கழி வழிபாட்டு அன்பர்களைத் தொடர்பு கொண்டு, கேட்டறிந்து இவ்வாண்டில் சுத்துப்பட்டு 70-ஊர்களில் உள்ள சிவாலயங்களில் மார்கழி வழிபாடு மிக விமரிசையாக நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதைக் கண்ணுறும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

 

    இதைப்போல அன்பர் பெருமக்களும் ஊர்ப்பொதுமக்களும் தங்கள் ஊர்களிலும் உள்ள சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டைத் தொடங்கி நடத்திட வேண்டுகிறோம். மார்கழி முழுவதும் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வருடம் முழுவதும் சிவாலயத்திற்குச் சென்று வழிபட்ட சிவபுண்ணியம் கிட்டும் என்பது திண்ணம்.

 

     தங்கள் ஊர் சிவாலயங்களிலும் இதுபோல் மார்கழி வழிபாட்டை தொடங்குவதற்கு ஏதேனும் வழிகாட்டுதல் தேவைப்படின் கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

     Mob : 8939679413.

 

     ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடு மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.

 

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

 

     என்ற வள்ளுவத்தின்படி மேற்குறிப்பிட்ட சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டைத் துவக்கி நடத்திக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் பணி நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

See Also :

Related Content

விகாரி (2019-20) வருட மார்கழி வழிபாடு

ஹேவிளம்பி  (2017-18) வருட மார்கழி வழிபாடு

விளம்பி (2018-19) வருட மார்கழி வழிபாடு

சார்வரி (2020-21) வருட மார்கழி வழிபாடு

பிலவ (2021-22) வருட மார்கழி வழிபாடு