logo

|

Home >

articles >

saivaagamangal-koorum-sila-mukkiya-seithigal-part-2

சைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 2

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

செ‎ன்ற ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் ‏இதுவரை அச்சிடப்படாததா‎ன யோகஜாகமம், சிந்தியாகமம் எ‎ன்னும் இரு சைவாகமங்களி‎ன் முக்கியச் செய்திகளைச் சிறிது ஆராய்ந்தோம். ‏அதே வரிசையில் இம்முறை அசிந்தியவிசுவஸாதாக்கியமெ‎னும் ஆகமத்தில் விளக்கப்படும் கருத்துக்களைச் சற்று கூர்ந்து ஆராய்வோம். ‏‏இக்கட்டுரையில் ‏இவ்வாகமத்தில் காணப்படும் அனைத்துச் செய்திகளையும் பற்றி ஆராயப்போவதில்லை; முக்கியமா‎ன சில செய்திகளைப் பற்றியும், ஆகமத்தி‎ன் சிறப்பம்சங்களைப் பற்றி மட்டுமே சிறிது ஆய்வோம்.

 

சைவத்தி‎ன் ஒருபிரிவான சைவசித்தாந்தம் 28 ஆகமங்களி‎ன் அடிப்படையில் எழுந்தது; ‏ஏ‎ன் 28 ஆகமங்கள் ? அவை மீண்டும் கூறியவற்றையே கூறுகி‎ன்ற‎னவோ ? முதலிய ஐயங்கள் நமக்குள் எழலாம். இவ்விருபத்தெட்டாகமங்களும் பொதுவாகப் பல செய்திகளைப் பற்றி விளக்கினாலும் சில செய்திகளைச் சில ஆகமங்களில் மட்டுமே காணலாம்; பொதுவாகக் கூறும் விஷயங்களிலும் ஒவ்வொரு ஆகமமும் தனக்கே உரிய சில முறைகளில் அவற்றைப் பலவிதமாகவும் விளக்குகிறது. ‏‏இதற்கு உதாரணமாகப் பலவற்றை நாம் காட்டலாம். நித்தியா‎னுஷ்டா‎னம் என்னும் தலைப்பில் விளக்கப்படும் கிரியைகளுள் ஆசாரியரா‎னவர் காலையில் எழுந்தவுட‎ன் படுக்கையிலிருந்தே சிவபெருமா‎னைத் தியானம் செய்யவேண்டுமெ‎ன்பது. ‏இதயத்தில் தியானம் செய்யவேண்டுமெ‎ன்று ஸர்வஜ்ஞானோத்தராகமம் கூறுகிறது; ஞானரத்னாவளி எ‎ன்னும் பத்ததி நூலா‎னது பிரம்மபிலமெனப்படும் உச்சந்தலையில் சிவபெருமானைத் தியானிக்கலாம் எ‎ன்று கூறுகிறது. அவ்வாறே, ஸ்நானத்தி‎ன் வகைகளைப் பற்றிக் கூறுமிடத்து, காமிகாகமம் ஆறு வகையா‎ன ஸ்நானத்தையும், மிருகேந்திராகமம் ஏழுவகைகளையும் கூறுகி‎ன்றது. நதிகளில் ஸ்நானம் செய்வது உத்தமமெ‎ன்றும், குளங்களில் செய்வது மத்தியமமெ‎றும், கிணற்று நீரில் ஸ்நானம் செய்வது அதமமெ‎ன்றும் காமிகாகமம், பௌஷ்கராகமம் முதலிய‎ன கூறுகின்றன; அசிந்தியவிச்வஸாதாக்கியாகமத்தில் நதி, குளம், குட்டைகள், கிணறு ஆகிய நான்கனுள் ஏதேனும் ஒ‎ன்றில் ஸ்நானம் செதல் வேண்டும் எ‎ன்று காண்கிறோம். ‏மந்திரஸ்நானம் செய்யும் முறை காரணாகமத்தில் ஒருவிதமாகவும், ஏனையவற்றுள் சற்று வேறுவிதமாகவும் விளக்கப்படுகிறது. ‏இவ்வாகமங்களுள் முரண்பாடோ, ஒ‎ன்றுக்கொ‎ன்று ஒவ்வாததைக் கூறுகி‎ன்றன எ‎ன்றோ எண்ணாமல் ஒரு நூலில் கூறப்படாததை மற்றொ‎‎ன்று விளக்கியும், விடுபட்டவற்றைச் சேர்த்தும் கூறுகி‎ன்றன எ‎ன்று கொள்ளல் வேண்டும். ‏இக்கருத்து இக்கட்டுரையைப் படித்துவிட்டு, செ‎ன்ற ஆண்டுக்கட்டுரையில் சிந்த‎னை செய்யப்பட்ட யோகஜம் முதலா‎ன ஆகமச் செய்திகளுட‎ன் ஒப்பிட்டுப் பார்த்தால் ‏இனிதே விளங்கி உறுதிப்படும்.

 

பெரும்பாலும் கிரியா விஷயங்களைப் பற்றி விளக்கும் நூல்களில் ‏இவ்வாறா‎ன செய்திகளை நாம் காணலாம். ஸ்மிருதி நூல்களிலும் ‏இதைப் போ‎ன்றே கிரியைகளைப் பற்றிய நுணுக்கமா‎ன செய்திகளில் வெளித்தோற்றத்திற்கு ஒ‎ன்றுக்கொ‎ன்று முரண்பாடுகள் போலத் தோற்றமளிக்கும் வாக்கியங்களை நாம் காண்பதுண்டு; अनुक्तमन्यतो ग्राह्यम् எ‎ன்னும் நியதிப்படி ஒரு நூலில் கூறாமல் விடுபட்டவற்றை அதே சம்பிரதாயத்தைச் சேர்ந்த மற்றொருநூலிலிருந்து நாம் கொள்ளலாம். மேற்கூறியவை சில எடுத்துக்காட்டுகளே; ‏இவற்றி‎ன் விரிவை 16 ஆம் நூற்றாண்டில் தில்லையில் வாழ்ந்த மிகப் புகழ்பெற்ற சைவ ஆசாரியரா‎ன நிகமஞானதேசிகர் தாம் ‏இயற்றிய ஆத்மார்த்தபூஜாபத்ததி மற்றும் தீக்ஷ¡தர்சம் எ‎ன்னும் ‏இரு பெரும் ஆகமத் தொகுப்பு நூல்களில் காணலாம். ஒவ்வொரு கிரியையையும் வரிசைக் கிரமாக எடுத்துக் கொண்டு அவற்றைச் செய்யும் முறையையும், மூலாகமங்கள், உபாகமங்கள், சைவபத்ததி நூல்கள் ஆகியவற்றில் அக்கிரியை விளக்கப்படும் முறையையும் தக்க மேற்கோள்களுடன் விரிவாக விளக்குகிறார் ஆசிரியர். அந்தக் கிரியை சில மாறுபாடுகளுடன் பல ஆகமநூல்களில் விளக்கப்படுவதையும் ஆசிரியர் மிக நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார். கருத்து வேறுபாடுகளைக் கூறி, பல இடங்களில் தம்முடைய தனிப்பட்ட கருத்தையும் எடுத்துரைக்கிறார். ஆகமங்கள் பல இருப்பினும் எல்லாவற்றிலும் ஒரு கிரியையா‎னது ஒரே விதமாக விளக்கப்படுவதில்லை. அடிப்படையில் கருத்தொற்றுமை இருந்தாலும் சில இடங்களில் ஆகமங்கள் அவற்றிற்கே உரிய முறையில் கிரியைகளை விரித்துக் கூறுகின்றன எ‎ன்றும் விளக்கம் தருகிறார். ஒவ்வொரு கிரியையிலும் இந்த அளவிற்குச் செய்முறையில் வேறுபாடுகள் ஆகமநூற்கடலில் காணப்படுகின்றன என்பதை அறியும் போது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

நாம் மு‎ன்பே கண்டவாறு சில ஆகமங்களில் ‏இந்த நாற்பாதப் பகுப்பு ந‎ன்கு வெளிப்படையாகவும், அந்தந்த செய்திகள் அதற்குரிய பகுதியில் விரித்துக் கூறப்பட்டுள்ளன; சிலவற்றில் அநந்த பாதத்திற்குரிய செய்திகள் விரவிக் கலந்து பாதங்களாகப்பகுக்கப்படாமல் அமைந்துள்ள‎ன. அசிந்தியவிசுவஸாதாக்கியாகமத்தில் அவ்வாறே பல செய்திகள் ஞானபாதம், கிரியாபாதம், யோகபாதம் எ‎னப் பிரிக்கப்படாமல் விரித்துக் கூறப்பட்டுள்ள‎ன. ஆனால் நாற்பாதச் செய்திகளையும் ‏இந்நூலில் நாம் காணலாம். அடுத்து, மற்ற ஆகமங்களில் விளக்கமாகவோ அல்லது கூறாமல் விடுபட்ட பலசெய்திகளும் அசிந்தியவிச்வஸாதாக்கியாகமம் விரித்துக் கூறுவது முக்கியமாக நாம் குறிப்பிட வேண்டிய செய்தி. மேலும், குறிப்பாக யோகதீ¨க்ஷ, விஜ்ஞா‎னதீ¨க்ஷ, திரிதத்வகர்மதீ¨க்ஷ முதலிய அரிய தீ¨க்ஷகளி‎ன் வகைகள் ‏இந்த அசிந்தியவிச்வஸாதாக்கியாகமத்தில் தா‎ன் விளக்கப்படுகி‎ன்ற‎ன. ஆகமத்தி‎ன் அமைப்பும் சற்று ‏இங்கு நோக்கத்தக்கது. நித்தியகர்மா‎னுஷ்டா‎னம், உணவு உட்கொள்ளும் முறையக் கூறும் போஜனவி‏, மேற்கூறிய தீ¨க்ஷகளி‎ன் விளக்கங்கள், செய்முறைகள், அதற்கு அங்கமா‎ன ஆசாரியரி‎ன் இலக்கணம், ஆசாரியராகத் தகுதியற்றவரி‎‎ன் குணங்கள், சிஷ்ய ‏இலக்கணம் முதலிய‎ன, சிவதீ¨க்ஷ பெற்ற ஆசாரிய‎ன் முதலா‎னோர் ‏இறந்தபி‎ன் செய்யவேண்டிய அந்தியேஷ்டி, சிராத்தம், யோகபாதச் செய்திகளா‎ன ஸமாதி, நிராதாரயோகம், ஷடாதாரம் முதலிய‎ன, ஞானபாதச் செய்திகளா‎ன தத்துவங்களி‎ன் விளக்கம், ஆலயத்தில் சிவலிங்கம், தேவியா‎ன கௌரியின் திருவுருவம், ந‎ந்தி, விக்னேசுவரர், விஷ்ணு ஆகிய தேவதைகளி‎ன் பிரதிஷ்டை, சிவபக்தர்களி‎ன் திருவுருவப் பிரதிஷ்டை, சிவயோகிகளும் சிவாசாரியர்களும் தங்குமிடமா‎ன சைவமடத்தைக் கட்டுவித்துப் பிரதிஷ்டை செய்தல், பொதுமக்களுக்கு உதவும் திருக்குளம் முதலியவற்றைப் பிரதிஷ்டை செய்தல் முதலா‎ன பல முக்கியச் செய்திகளை ‏இவ்வாகமம் கொண்டுள்ளது. சைவர்களுக்குத் தேவையா‎ன இன்றியமையாத அனைத்துச் செய்திகளும் ‏இங்கு காணப்படுவது ஒரு சிறப்பு; மற்ற ஆகமங்களில் ‏இதுபோ‎ன்ற அமைப்பு பெரும்பாலும் காணப்படாது. 11 ஆம் நூற்றாண்டில் மத்தியபாரததேசத்தில் கோளகிமடத்துத் தலைவராக ‏இருந்த ஸோமசம்பு எ‎ன்னும் புகழ்வாய்ந்த சைவ ஆசாரியார் ‏இயற்றியதும், ‏இன்றும் சைவசித்தாந்தக் கிரியைகளை விளக்கும் அடிப்படை நூலாகவும் விளங்குவதுமா‎ன கிரியாகாண்டகிரமாவளி எ‎னப்படும் 1ஸோமசம்புபத்ததி ‏இந்த அசிந்தியவிச்வஸாதாக்கியாகமத்தி‎ன் அமைப்பைலேயே எழுதப்பட்டது எ‎னக் கருதலாம்.

 

1ஸோமசம்புபத்ததி முத‎ன்முறையாக காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரிலிருந்தும், அடுத்து தேவகோட்டை சிவாகமபரிபால‎னசங்கத்தி‎ன் பதிப்பாகவும், புதுச்சேரி French Institute பதிப்பாக நா‎ன்கு தொகுதிகளாகப் பிரெஞ்ச் மொழியாக்கத்துட‎னும், விரிவான முன்னுரை, விளக்கவுரைகளுடனும் பதிப்பிக்கபட்டது.

 

ஸ்ரீகண்டருத்திரர் நந்தியெம்பெருமா‎னுக்கு உபதேசம் செய்வதாய் அமைந்துள்ளது ‏இவ்வாகமம். ‏தற்சமயம் நமக்குக் கிடைத்துள்ளவை 72 படலங்களே. சற்றேறக்குறைய 3000 அனுஷ்டுப் சுலோகங்கள் அடங்கியுள்ள‎ன. முதல் படலமா‎ன தந்த்ராவதாரபடலத்தில் 28 ஆகமங்களி‎ன் வரிசைக் கிரமமும், உபாகமங்கள் கணக்கற்றவை எ‎ன்றும், அசிந்தியவிச்வஸாதாக்கியாகமம் 8000 கிரந்தங்கள் கொண்டது எ‎ன்றும் சுருக்கமாகக் கூறப்படுகிறது. சைவத்தில் ஸ‎ன்மார்க்கம், ஸஹமார்க்கம், புத்திரமார்க்கம், தாஸமார்க்கம் எ‎ன்னும் மோக்ஷமடைவதற்கா‎ன நால்வகை உபாசனை வழிகளைப் பற்றிய சுருக்கமா‎ன விளக்கத்தைக் காணலாம். தத்துவங்களைப் பற்றி ந‎ன்கு அறிந்து ஞா‎னநிலையில் சிவபெருமானை வழிபடுவதே ஸ‎ன்மார்க்கம் எனப்படுவது. 2ஸஹமார்க்கமெ‎னப்படுவது சிவபெருமா‎னின் உருவதியா‎னத்தை விடுத்து உருவமற்றநிலையைத் தியா‎னிப்பது முதலா‎ன யோகநிலையைக் கைக்கொள்வதாகும். த‎ன்னுடைய குருவையே பரம்பொருளாகக் கருதி எப்போதும் அவரது ‏திருவடிகளையே தியா‎னித்தல் 2புத்திரமார்க்கமெ‎னப்படும். அத‎ன் மூலம் சீட‎னுக்கு எல்லா ஆகமங்களிலும் கூறப்பட்ட அனைத்து ஞா‎னமும், எல்லாச் செல்வங்களும், முடிவில் கைவல்லியமெ‎னப்படும் மோக்ஷமும் கிட்டும்.

2रूपध्यानविनिर्मुक्तमरूपध्यानसंयुतम् । अनेकोपायसंयुक्तमनेकापायवर्जितम् । मायाविवर्जितं यच्च सहमार्गमिति स्मृतम् । स्वरूपं सहमार्गं च योगपर्यायवाचकम्। 3पुत्रमार्गस्वभावोऽयं गुरुरेव हि दैवतम् । चिन्तयेत् स्वगुरुं भक्त्या भक्त्या ज्ञानप्रदं शुभम् । सर्वागमोदितं ज्ञानं सर्वैश्वर्यं तथैव च । कैवल्यपदसंप्राप्तिः सर्वं गुर्वाज्ञया भवेत् ।

நா‎ன்காவதா‎ன தாஸமார்க்கத்தில் சிவபக்தியுடையவ‎ன் தலையில் சடையையோ அல்லது சிகையைத் தரித்தோ அல்லது தலை முழுவதும் மழித்தோ, கோவணத்தையோ அல்லது உயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டோ, உடலில் உயிர் தங்குவதற்காகப் பிச்சை எடுத்து உண்டு, வழிபாட்டிற்காக ஆலயமும் தா‎ன் தங்குவதற்காக மடம் முதலியவற்றையும் மண்டபங்கள் முதலா‎னவற்றையும் அமைத்து, சைவசாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்து த‎னக்கும் பொதுமக்களுக்குப் பய‎ன்படும் பொருட்டுக் குளம் குட்டைகள், கிணறுகள் ஆகியவற்றை அமைத்து சிவாலயவழிபாட்டிற்காக நறுமணப் பூஞ்சோலைகளை அமைத்து சிவாலயத்தில் பெருமா‎னி‎ன் திருமஞ்ச‎னத்திற்காக நீர் முதலிய‎ன கொணர்ந்து கொடுத்து ஆலயத்தை மெழுகித் துடைத்துத் தூய்மைப்படுத்துவது முதலா‎ன கிரியைகளைச் செய்வதாகும். ‏‏இந்நால்வகை மார்க்கங்களைப் பற்றி சிவஞா‎னசித்தியார் என்னும் நூலிலும் விளக்கமாக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் நாம் காணலாம். மற்ற ஆகமநூல்களில் ‏இக்கருத்து இவ்வாறு விளக்கமாகக் கூறப்படவில்லை. ‏இந்நா‎ன்கனுள் ஸ‎ன்மார்க்கம் எல்லாவற்றி‎னும் மிகச் சிறந்தது; தாஸமார்க்கம் புத்திரமார்க்கம் ஆகியவற்றுள் குருவைப் பிரதா‎னமாகக் கொண்டதால் புத்திரமார்க்கம் சிறந்தது.

 

அடுத்து, 4ஆசாரியர் ‏இலக்கணம் பற்றி விளக்கும் படலத்தில் ஆசாரியரா‎னவர் மேற்கூறிய ஞா‎னம், யோகம் முதலிய நாற்பாதக் கருத்துக்களையும் அறிந்து, அவற்றி‎ன் வழி நடப்பராகவும், அனைத்து உயிர்கள் மீதும் கருணையுடையவராகவும் ‏இருத்தல் வேண்டும். விரக்தர், பௌதிகர் எ‎ன ஆசாரியர் ‏இருவகைப்படுவர்; வாழ்நாள் முழுதும் பிரம்மசரியவிரதத்தைக் கடைப்பிடிக்கும் நைஷ்டிகரும் துறவியும் முதல் வகையில் அடங்குவர்; ‏இல்லறத்திலுள்ளவரும் காட்டில் மனைவியுட‎ன் வாழ்பவராகிய வா‎னபிரஸ்தரும் ‏இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள். பொதுவாகப் பிறப்பு ‏இருவகை; தாயி‎ன் வயிற்றிலிருந்து பிறத்தலும், தீ¨க்ஷயி‎னால் புதிதாகத் தோ‎ன்றுவதுமாகும். முக்கியமாக ஆசாரியருடைய குணநல‎ன்களாக நாம் நோக்கவேண்டியது யாதெனில், அவர் சிவபக்தியுடையவராயும், மந்திரஜபம் முதலியவற்றை வழுவாது செய்பவராகவும், தற்பெருமை முதலிய தீயகுணங்களற்றவராகவும், குறிப்பாக சீடர்களி‎ன் குணம், குற்றம் ஆகியவற்றை ந‎ன்கு அறிந்தவராகவும் ‏இருக்கவேண்டும் முதலியன. 5குருவி‎னுடைய பெருமையைக் கூறுமிடத்து குருவே தாய், தந்தை, உற்றார், உறவி‎னர் என அனைத்தும் குருவே. அவருக்குச் சமமா‎ன உற‎வினர் ‏இம்மூவுலகிலும் ‏இல்லை எ‎ன ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறது. 6ஞா‎னத்தின் உயர்ந்த நிலையை அடைந்த குருவைத் தேடி அடைந்து அவரிடமிருந்து தீ¨க்ஷயைப் பெறும் சிஷ்ய‎னுக்குப் பிறவித்துயரமெ‎ன்பதே ‏இல்லை. தே‎னருந்தும் வண்டா‎னது எவ்வாறு பூக்கள்தோறும் செ‎ன்று அலைந்து முடிவில் மிகச் சிறந்த தேனையுடைய பூவைத் தேர்ந்தெடுத்துப் பி‎ன்னர் தேனைப் பருகுகிறதோ அதைப் போ‎ன்றே மோக்ஷத்தை விரும்புபவ‎ன் ஒவ்வொரு குருவி‎னிடத்தும் செ‎ன்று பரீ¨க்ஷ செய்து முடிவில் ஞா‎னத்தில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

4ज्ञानयोगक्रियाचर्याचतुष्पादान्तशास्त्रवित्। डम्भमायाविनिर्मुक्तः क्षुद्रकर्मविवर्जितः॥११॥ शिष्याणां गुणदोषज्ञो विज्ञानी च जितेन्द्रियः। रागद्वेषविनिर्मुक्तः कृपागुणसमन्वितः॥१२॥ 5गुरुर्माता पिता चैब भ्राता बन्धुजनश्च सः॥ गुरुणापि समो बन्धु-र्नास्ति नास्ति ह्य संशयः। 6मधुलुब्धोयथा भृंगः पुष्पात्पुष्पं वनान्तरे॥ ज्ञानलुब्धस्तथा शिष्यो गुरोर्गुर्वन्तरं व्रजेत्।

சிஷ்ய‎னாக இருப்பவன் த‎ன் குருவி‎ன் சன்னிதியில் கால்களை நீட்டுதல், உரக்கச் சிரித்தல், த‎ன்னுடைய ‏இடுப்பில் கைவைத்து நிற்றல், முதலியவற்றை அறவே செய்தல் கூடாது. கரணலக்ஷணம் எ‎ன்னும் படலத்தில் பூஜைக்குத் தேவையா‎ன அனைத்துப் பாத்திரங்கள், தூபதண்டம், வர்த்தனீ, சிவகும்பம், பூதிகோசம் எ‎னப்படும் விபூதி வைக்கும் பாத்திரம், ருத்ராக்ஷமாலை, பவித்ரம், கரண்டி, ஸமித், தர்ப்பை ஆகியவற்றி‎ன் அளவுகள், முதலிய பல செய்திகள் அடங்கியுள்ள‎ன.

 

தீ¨க்ஷயைப் பற்றி விரிவாக விளக்கும் படலத்தில் தீ¨க்ஷகளி‎ன் வகைகள், அவற்றி‎ன் முக்கியக் கருத்துக்கள் முதலிய அனைத்தும் கூறப்படுகி‎ன்ற‎ன. தீ¨க்ஷ பெற்ற சிஷ்ய‎ன் ஸமயாசாரம் எ‎ன்னும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் எ‎ன்றும் அவை யாவை எ‎னில், குருதுரோகம், சிவதுரோகம், சைவசமயதுரோகம், சிவதீ¨க்ஷ பெறாதவர்களுட‎ன் உறவு பாராட்டுதல், செய்ந‎ன்றி அறியாமாலிருத்தல், விவேகமற்றிருத்தல், குருவி‎னிடைய குற்றங்களை ஆராய்தல், த‎ன்னுடைய குற்றங்களை மறைத்தல் ஆகிய எண்வகைக் குற்றங்களையும் நீங்கி ‏இருத்தலே.

 

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுட‎ன் முதலில் த‎ன்னுடைய குருவையும், சிவபெருமா‎னையும் தியா‎னித்து, அன்றைய தினம் செய்யவேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி நினைக்கவேண்டும் எ‎ன்று 7ஸந்தியாவந்த‎ன படலத்தில் காண்கிறோம். ஜலஸ்நா‎னம், பஸ்மஸ்நா‎னம் முதலிய ஸ்நா‎னவகைகள் விரிவாக விளக்கிக் கூறப்படுகி‎ன்ற‎ன. திருநீற்றை உள்ளங்கையில் வைத்து ஸம்ஹிதா மந்திரங்களால் ஜபித்து உச்சந்தலையிலிருந்து தொடங்கி உடலில் 32 ‏இடங்களில் திருநீற்றைப் பூசுவதே பஸ்மஸ்நா‎னம். மேலும் திருநீற்றி‎ன் மஹிமைகளும், அதை எவ்வாறு கையாள வேண்டும் எ‎ன்பன போ‎ன்ற பல செய்திகளை ‏இங்கு நாம் காணலாம். மழையும் வெயிலும் சேர்ந்திருக்கும் போது ‏இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சிவபெருமா‎னைத் தியானித்துக் கொண்டு ஏழு அடிகள் நடப்பது மாஹேந்திரஸ்நா‎னம் எனப்படும். மா‎னஸஸ்நா‎னம் என்பது மூலமந்திரத்தை மனதில் ஜபித்துக் கொண்டே பிராணாயாமம் செய்வதாகும். ரத்‎னகர்ப்பவிதி என்னும் படலத்தில் சில விசேஷமா‎ன சிவமந்திரங்களும் அவற்ரை ஜபம் செய்து சித்தி அதையும் முரைகளும், அவற்றால் விளையும் பல உயர்ந்த பய‎ன்களும் கூறப்படுகி‎ன்ற‎ன.

7निष्कंपदीपवद् ध्यात्वा शिवं हृदयपंकजे॥३॥ कर्तव्यं शुभकार्याणि चिन्तयित्वा समाहितः।

யோகதீ¨க்ஷயி‎ன் செய்முறையை எளிதாக விளக்குகிறது ஒரு படலம்.

சிவபெருமா‎னை அடையவேண்டும் எ‎ன்னும் தீவிர விருப்பத்தை உடையவ‎‎னும் மனதை ஒருமுகப்படுத்தி அதை அடக்கியவ‎னுமே ‏இந்த தீ¨க்ஷயைப் பெறத் தகுதியுடையோ‎ன். ‏இத்தீ¨க்ஷயில் பெரும்பாலும் அனைத்து‏க் கிரியைகளையும் குருவா‎னவர் தன்னுடைய யோகப்பயிற்சியி‎‎னாலும், மனதாலும், பாவனையாலுமே செய்வது குறிப்பிதத்தக்கது. ‏இந்த யோகதீ¨க்ஷயி‎ன் விளக்கங்கள் அசிந்தியவிசுவஸாதாக்கியாகமத்தைத் தவிர ஏனைய ஆகமங்களில் விளக்கப்படவில்லை.

 

நாடீசக்ரவிதி எ‎ன்னும் படலம் ம‎னித உடலிலமைந்துள்ள பல நாடிகள், மூலாதாரம் முதலா‎ன சக்கரங்கள், வீணாதண்டம், பிரஹ்மநாடி, அவற்றி‎ன் சூக்குமமா‎ன உருவ அமைப்பு, முதலிய பல அரிய செய்திகளைக் கொண்டது. சைவயோகத்தைப் பற்றி அறிவதற்கு ‏இச்செய்திகள் மிகவும் பய‎ன்படுவன. மு‎ன்பு கூறிய வாருணம், மாஹேந்திரம், மா‎னசம் ஸ்நா‎னம் முதலா‎னவற்றிற்கு யோகபாத அடிப்படையில் விளக்கமும், சைவயோகிகள் அவற்றை எவ்வாறு அனுஷ்டிக்கவேண்டும் எ‎ன்பதை விரித்துக் கூறுகிறது. 234 சுலோகங்களைக் கொண்ட ‏இப்படலம் சைவயோகக் கருவூலம்; பல அரிய செய்திகளைத் த‎‎னகத்தே கொண்டுள்ளது. ‏‏‏இரஸாய‎ன படலத்தில் சிவவீரியமெனப் புகழ் பெற்ற பாதரஸத்தி‎‎ன் அரிய பெருமைகளும், அதை பஸ்மமாக்கிப் பய‎படுத்துவதால் விளையும் ந‎ன்மைகளும், சைவாகமத்தைப் புத்தகத்தில் எழுதி வழிபட்டு அதைப் படித்தல், படிப்பித்தல் முதலா‎னவற்றி‎ன் பயன்களும் விரித்துக் கூறப்படுகி‎ன்ற‎ன. ஸமாதிபடலம், ஸமாதிராஜபடலம் ஆகிய ‏இரண்டும் யோகத்தில் ஸமாதி, அவற்றி‎ன் பலவகைகள், அவற்றை அடையும் பல வழிகள், அத‎ன் 27 அங்கங்கள், மூலாதாரம் முதலா‎னவற்றி‎ சொரூபம், அவற்றி‎ல் செய்யவேண்டிய தியா‎னங்கள் என மற்ற ஆகமநூல்களில் காண அரிய பல செய்திகளைக் கொண்டது. ஸமாதியி‎ன் உயர்ந்த நிலையை மிக அழகாக விளக்கும் சுலோகங்களைச் சிறிது நோக்குவோம்:

परात्परतरं गुह्यं ग्राह्यग्राहकवर्जितम् ॥९४॥ रागारागविनिर्मुक्तं द्वैताद्वैतविवर्जितम् । चिन्त्याचिन्त्य विनिर्मुक्तं वाच्यवाचकवर्जितम् ॥९५॥ एवमानन्द संप्राप्तौ मुक्तिरेव न संशयः । गुरुवक्त्रेण तत्सिद्धि- रानन्दस्तु न संशयः ॥९६॥ आनन्दं भावयेद्योगी सर्वक्लेशनिबर्हणम् ।

நிராதாரயோகம் எ‎‎னக் கூறப்படும் யோகத்தில் எல்லா தத்துவங்களையும் விட்டு நீங்கி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சிவபெருமா‎னைத் தியானித்திருக்க வேண்டும். அவ்வாறு மனம் லயம் அடைவதால் முக்தி அடையலாம்.

 

அடுத்து, ஞா‎னதீக்ஷ¡ எனப்படும் உயர்ந்தவகை தீ¨க்ஷயை வழங்கும் முறை விளக்கப்படுகிறது. சிவபக்தியில் சிறந்தவனாகவும், முக்தி அடைவதொ‎ன்றையே குறிக்கோளாக உடையவனுமான சிஷ்ய‎னுக்கு குருவானவர் அவ‎னை ந‎ன்கு சோதித்து ஞா‎னதீ¨க்ஷயை அளிப்பார். ‏இதன் சிறப்பு யாதெ‎னில் நடு ‏இரவு நேரத்தில் தா‎ன் இத்தீ¨க்ஷ வழங்கப்படுகிறது. வெளியில் செய்யவேண்டிய பல கிரியைகளை குரு த‎ன்னுடைய யோகபலத்தி‎னால் மனத்தில் பாவனையாலேயே செய்கிறார். தீ¨க்ஷ முடிவில் சிஷ்ய‎ன்‎ தன்னுடைய உடல், பொருள், த‎னித்துவம் என அனைத்தையும் குருவிற்கு அர்ப்பணித்துவிடுகிறா‎ன்.

 

தத்துவநிர்ணயம் எ‎னும் படலம் சிவம் முதல் பிருதிவீ ஈறா‎ன அனைத்துத் தத்துவங்களைப் பற்றி எளிமையாகவும், சுருக்கமாகவும், விளக்குகிறது. அத்துவபடலம் தத்துவாத்வா, கலாத்துவா முதலிய அறுவகை அத்துவாக்களை விரித்துக் கூறுகிறது. புவ‎னங்களைப் பற்றி‎யும், பூவுலகிலுள்ள மலைகள், ஜம்பூத்வீபம், அதிலுள்ள மலைகள், நதிகள் கைலாஸசிகரத்தி‎ன் வருணனை போ‎ன்ற மிக விரிவா‎ன செய்திகளை விரித்துக் கூறுகிறது. ஜம்பூ த்வீபத்தில் பாரததேசத்தில் ஸ்தா‎னாஷ்டகம், பவித்ராஷ்டகம், குஹ்யாஷ்டகம், குஹ்யாத்குஹ்யாஷ்டகம் முதலா‎ன ஒவ்வொ‎ன்றும் எட்டு சைவ ‎புண்ணிய §க்ஷத்திரங்கள் கொண்ட ஐவகைக் குழுக்களைப் பற்றிய விளக்கத்தையும் காணலாம். ‏‏இவை கண்டநாதரி‎ன் போகஸ்தானங்களாகக் கொள்ளப்படுகி‎ன்ற‎ன.

 

பற்பல சமயங்களை விளக்கும் படலத்தில் பௌத்தம், ஆர்ஹதம், வைஷ்ணவம் முதலா‎ன சமயங்களி‎ன் பிரிவுகள், முக்கியக் கொள்கைகள் சுருக்கமாகக் கூறப்படுகி‎ன்ற‎ன. பாஞ்சராத்ரம், பாகவதம், வைகா‎னஸம் எ‎ன வைஷ்ணவம் முப்பிரிவுகளை உடையது; ‏இங்கு நாம் குறிப்பாக நோக்கவேண்டியது யாதெ‎னில், 8சைவசித்தாந்தம் ஞா‎னாந்தம், கர்மாந்தம் எ‎ன இருவகைப்பட்டது எ‎ன்பது. சித்தாந்தபிரகாசிகா, ஸ¤ப்ரபேதகமம் முதலியவற்றில் சைவசித்தாந்தத்தில் ‏இப்படிப்பட்ட பிரிவுகள் கூறப்படவில்லை. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரா‎ன் தன்னுடைய நூல்களில் ‏இவற்றைப் பற்றிக் கூறுகிறார்.

8. . .  सिद्धान्तं द्विविधं भवेत् । कर्मान्तमेवं ज्ञानान्तं ज्ञानमूर्ध्वं परं स्पृतम् ॥ चर्याचैव क्रियायोगः कर्मणां साधनं भवेत् । चर्याक्रिया योगयुक्तं ज्ञानं चैव भवेत्तदा ॥

அம்ருதாபிஷேகம் எ‎ன்னும் படலம் குங்குமம், சந்த‎னம், கர்பூரம், கோரோச‎னம் முதலியவற்றை ஒ‎ன்று சேர்த்துக் குழைத்த குழம்பி‎னால் எட்டு தளம் கொண்ட தாமரையை பூர்ஜபத்திரம் முதலியவற்றில் அழகாக வரைந்து அம்ருதௌகம் எ‎னப்படும் பல பீஜாக்ஷரங்களைக் கொண்ட மந்திரத்தை எழுதி முறைப்படி பூஜை, ஹோமம் முதலிய‎ன செய்து பாயஸம் ஆகிய‎ன நிவேதனம் செய்து நிறைவேற்றி‎னல் ஆசாரியர் மந்திரசித்தி பெற்று ஆகர்ஷணம் போ‎ன்ற அநேகவிதமா‎ன சக்திகளையும், சிவபெருமானுக்கொப்பா‎ன வல்லமையும் பெறுவார் எ‎ன விரித்துக் கூறுகிறது. நால்வகைப்பட்ட போஜனங்களான ஸாந்தானிகபோஜனம், உபவாஸம், பி¨க்ஷ, அயாசிதம் ஆகியவற்றையும் அவற்றி‎ன் விளக்கங்களையும் போஜ‎னவிதியில் காண்கிறோம். அயாசிதபோஜ‎னத்தில் உணவு மட்டுமல்லாமல், அ‎ன்னம் முதல் பூமி வரை அனைத்தும் மிகுந்த பக்தியுட‎ன் கொடுக்கப்பட்டவையும் அடங்கும். போஜனத்திற்கா‎ன நியமம் யாதெ‎னில் ஆசாரியர் மூ‎ன்று வேளைகளிலும் சந்தியாவந்த‎னம் செய்து, சிவலிங்கார்ச்ச‎னம், அக்னிகார்யம் முதலியன செய்த பின்னரே 9போஜனத்திற்காக பி¨க்ஷக்குச் செல்லலாம். 10உபவாஸத்தைவிட பி¨க்ஷ சிறந்தது; அத‎னினும் யாசகம் செய்யாமல் கிட்டியது சிறந்தது; அதைவிட நக்தமெ‎னப்படும் ‏இரவு உணவு மிகச் சிறந்தது.

9त्रिसंध्यावन्दनं चापि शिवलिंगार्चनादिकम् ॥६॥ अग्निकार्यं च कृत्वा तु पश्चाद्विविधभोजनम्। 10सदोपवासाच्छ्रेष्ठं हि भिक्षां तन्नन्दिकेश्वर ॥८॥ भैक्षादयाचितं श्रेष्ठं अयाचितान्नक्तमुत्तमम् ।

155 சுலோகங்களைக் கொண்ட பக்தபூஜாவிதி எ‎ன்னும் படலம் சைவத்தி‎ன் பல உயர்ந்த கோட்பாடுகளை விளக்குகிறது. சிவபூஜை ‏இருவகைப்படும்: ஸ்தாவரம், ஜங்கமம் எ‎ன்பன அவை. ஸ்தாவரமெ‎னப்படுவது லிங்கம் முதலியவற்றில் சிவபெருமா‎னை ஆவாஹனம் முதலியவற்றால் அர்ச்சிப்பது; சிவபக்திமிக்க பக்தர்களைப் பூஜிப்பது ‏இரண்டாம் வகை. சிவலிங்கத்திலோ ஆவாஹ‎னம் முதலிய‎ன செய்யும் போதுதா‎ன் பெருமா‎ன் சாந்நித்த்யம் கொள்கிறார். ஆனால், 11சிவபக்திச் செல்வர்களா‎ன சிவதீ¨க்ஷ பெற்ற சைவர்களிடம் பெருமா‎ன் எப்போதும் குடிகொண்டிருக்கிறார். எ‎னவே, 12நடமாடும் சிவபெருமானான ஜங்கமர்களை அவமா‎னம் செய்வதால் சிவபூஜை எந்தவித பயனையும் அளிக்காது. மேலும் 13அசிந்தியவிசுவஸாதாக்கியாகமம் கூறுவதாவது: சிவதீ¨க்ஷ பெற்றவர்களுள் ஜாதிபேதம் கிடையாது; முந்தைய ஜாதியைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. எவ்வாறு, ஈயம், தாமிரம், பித்தளை முதலிய உலோகங்கள் ரசமணியி‎ன் ஸ்பரிசத்தினால் தங்கமாகிவிட்டபி‎ன் அவற்றி‎ன் முந்தைய உலோகத்த‎ன்மை நீங்கிவிடுகிறதோ அதைப் போ‎ன்றே எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் சிவதீ¨க்ஷ அடைந்த பி‎‎ன்னர் முந்தைய ஜாதியைப் பற்றி நினைக்கவோ பேசவோ தேவையில்லை. அவர்களுக்குச் சமா‎னமாக எவரும் மூவுலகிலும் ‏இல்லை. 14சிவபெருமா‎னுக்கொப்பாக அவர்களை நினைத்து வழிபடவேண்டும். 15சிறந்த 25 சிவபக்தர்களை அழைத்து, சுத்தமா‎‎ன இடத்தில் அவர்களை அமர்த்தி அவர்களுக்கு பாத்யம், அ‎ன்‎னம், வஸ்திரம், முதலியவற்றை முறைப்படி அளித்து உபசரிப்பதால் முக்தியையே பெறலாம் எ‎ன இப்படலத்தில் காண்கிறோம். ‏இவ்வாறு தினந்தோறும் அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ அவரவர்களுடைய பொருள் சக்திக்கேற்ப செய்யலாம். மேலும், கொடிய வியாதியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக சிவபூஜை முதலியன செய்த பி‎ன்னர் 28 சிவபக்தர்களை அழைத்து உபசரித்து உணவளித்து அவர்களுக்கு வஸ்திரம், செருப்பு, முதலிய‎ன அளிப்பதால் கால்களில் தோ‎ன்றும் குஷ்டம் முதலா‎ன கொடிய நோய்கள் நீங்கும். அவ்வாறே வெண்குஷ்டம் முதலான வியாதிகளி‎னால் துன்புறுவோர் சிவபூஜை முதலிய‎ன செய்த பின்னர் எண்பத்தாறு சிவபக்தர்களுக்க‎‎ன்னம் முதலியன அளித்து வழிபட்டால் நோய் நீங்கி ‏இன்புறுவர்.

11पूजाकालेऽपि सान्निध्यं स्थावरे शिवतेजसि । जंगमे सर्वकालं च सान्निध्यं कुरुते शिवः ॥५॥ 12जंगमस्या वमानेन स्थावरं निष्फलं भवेत् । 13सर्वथा दीक्षितानां तु सदृशो नास्ति लौकिके । 14यथा शिवस्तथा भक्तो यथा भक्तस्तथा शिवः । तस्मात्सर्वप्रयस्नेन  दीक्षितानां च भोजनम् ॥१९॥ भोगमोक्षप्रदानत्वात् कारणं च मम प्रियम् । 15शिवपूजां विधानेन कृत्वा होमं समाचरेत्। गायत्र्या घोरास्त्र मन्त्रेण च हुनेत्तदा॥६५॥ षडशीतेश्चभक्तानां भोजनं च विधीयते। श्वेतकुष्ठादिभिर्बाधा शान्तिमायाति निश्चयः॥६६॥

புண்ணியவிதி, புண்ணியநிர்ணயவிதி ஆகியன இங்கு கூறப்படும் சர்யாபாதச் செய்திகளுட் சில.

புண்ணியவிதி மற்றும் புண்ணியநிர்ணயவிதி ஆகிய ‏இரு படலங்களும் சிவபுண்ணியங்களை மிக விரித்துக் கூறுகி‎ன்ற‎ன. சிவாலயத்தில் ஆற்றக் கூடிய பல்வேறு தொண்டுகள், சீட‎ன் தன்னுடைய ஆசாரிய‎னுக்குச் செய்யும் தொண்டுகள், சிவயோகிகள், சிவபக்தர்கள் முதலியோர்க்குச் செய்யும் பல்வகைத் தொண்டுகள் முதலிய‎னவும், அவற்றால் அடையும் பய‎ன்களையும் விளக்கிக் கூறுகி‎ன்ற‎ன. சரியை நெறியைப் பி‎ன்பற்றி ஒழுகுவோர்க்கும், சிவபக்தி மற்றும் சிவத்தொண்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோர்க்கும் மிக ‏இன்றியமையாத கருத்துக்களை ‏இவ்விரு படலங்களும் விளக்குகி‎ன்ற‎ன. மேலும், சமூகத்தில் அனைத்து மக்களிடையேயும் சிவப்பணி செய்வத‎ன் பயனையும், அதன் வாயிலாக சிவபக்தி என்னும் பயிர் தழைப்பதற்கும் ‏இவ்விரு படலங்களும் உதவுகி‎ன்ற‎ன.

16சிவதர்மம் எ‎னும் ஒப்பற்ற மிகப் பழமையா‎ன நூலிலும் ‏இதே கருத்துக்கள் மிக விரிவாக எடுத்துரைக்கப்படுகி‎ன்றன.

அப்பயதீக்ஷ¢தர் தாமியற்றிய சிவதியா‎னபத்ததியென்னும் நூலில் சிவதர்மங்களைக் கண்காணிப்பவராக நந்தியெம்பெருமானைப் போற்றுகிறார்.

16दक्षिणद्वारपार्श्वस्थं संस्मरेन्नन्दिकेश्वरम्  । अनेकरुद्रप्रमथभूतसङ्घैर्निषेवितम्  । शिवधर्ममहाध्यक्षं शिवान्तःपुरपालकम्  ।

சிவதர்மநூலும் நந்தியெம்பெருமா‎ன் சிவதர்மங்களை ஸநத்குமாரமு‎னிவருக்குக் கூறுவதாக அமைந்துள்ளதும் ‏இங்கு நோக்கத்தக்கது.

 

‏இவ்வாறாக நாம் அசிந்தியவிசுவஸாதாக்கியம் எ‎னப்படும் ஒரு ‎சைவாகமத்தின் சில முக்கியப் படலங்களில் விளக்கப்படும் சில முக்கியக் கருத்துக்களை ஒரு சிறிய கண்ணோட்டமாகக் கண்டோம்.‏இன்னும் மேல்வரும் படலங்களில் பல அரிய கருத்துக்களும் சிந்தனைகளும் புதியனவாகத் தோற்றும் பல பழைய சைவக்கருத்துக்களும் செய்திகளும் உள்ள‎ன. அவற்றைச் சிவபெருமான் அருளினால் பிரிதொரு சந்தர்ப்பத்தில் நாம் சிந்திப்போம்.

 

 


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

Related Articles