பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
943 | நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.1 |
944 | அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத் துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம் வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த் திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.2 |
945 | இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த பகழி யொடுவில் லுடையான் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலந் திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.3 |
946 | மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால் இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம் நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத் திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.4 |
947 | முழுநீ றணிமே னியன்மொய் குழலார் எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம் கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ் செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.5 |
948 | ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண் டானார் அடலே றமர்வான் இடமாம் வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த் தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.6 |
949 | காரூர் கடலில் விடமுண் டருள்செய் நீரூர் சடையன் நிலவும் இடமாம் வாரூர் முலையார் மருவும் மறுகில் தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.7 |
950 | கரியின் உரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம் புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள் தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.8 |
951 | பேணா முனிவன் பெருவேள் வியெலாம் மாணா மைசெய்தான் மருவும் இடமாம் பாணார் குழலும் முழவும் விழவிற் சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.9 |
952 | குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த எறியும் மழுவாட் படையான் இடமாம் நெறியில் வழுவா நியமத் தவர்கள் செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.93.10 |
953 | போரார் புரமெய் புனிதன் அமருஞ் சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள் ஏரார் இமையோர் உலகெய் துவரே. |
7.93.11 |
திருச்சிற்றம்பலம்
சுவாமி: சித்த நாதர் அம்பிகை: சௌந்தர நாயகி