7.52 திருவாலங்காடு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா	7.52.1
சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே	
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய	
அத்தா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.	
	
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே	7.52.2
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே	
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய 	
ஐயா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. 	
	
தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்	7.52.3
பூண்டாய் எலும்பைப்புரமூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே	
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய	
ஆண்டா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.	
	
மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதிமயங்கி	7.52.4
அறிவே அழிந்தே னையாநான் மையார் கண்ட முடையானே	
பறியா வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய 	
அறிவே ஆலங் காடஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. 	
	
வேலங் காடு தடங்கண்ணார் வலையுட் பட்டுன் நெறிமறந்து	7.52.5
மாலங் காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே	
பாலங் காடி நெய்யாடி படர்புன் சடையாய் பழையனூர்	
ஆலங் காடா உன்னுடைய அடியார்க் கடியேன் ஆவேனே. 	
	
எண்ணார் தங்கள் எயிலெய்த எந்தாய் எந்தை பெருமானே	7.52.6
கண்ணாய் உலகங் காக்கின்ற கருத்தா திருத்த லாகாதாய்	
பண்ணா ரிசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் 	
அண்ணா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.  	
	
வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா	7.52.7
விண்டார் புரங்க ளெரிசெய்த விடையாய் வேத நெறியானே	
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய	
அண்டா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. 	
	
பேழ்வா யரவி னணையானும் பெரிய மலர்மே லுறைவானும்	7.52.8
தாழா துன்றன் சரண்பணியத் தழலாய் நின்ற தத்துவனே	
பாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா பழையனூர் தன்னை	
ஆள்வாய் ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.	
	
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட	7.52.9
பெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானே	
பன்மா மலர்க ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்	
அம்மா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.	
	
பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழைய னூர்மேய	7.52.10
அத்தன் ஆலங் காடன்றன் அடிமைத் திறமே அன்பாகிச்	
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் சிறுவன் ஊரன் ஒண்தமிழ்கள்	
பத்தும் பாடி ஆடுவார்  பரமன் அடியே பணிவாரே.	
	
திருச்சிற்றம்பலம் 

  • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page