சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருமுதுகுன்றம் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 25வது திருப்பதிகம்)


7.25 திருமுதுகுன்றம்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

பொன்செய்த மேனியினீர்	
  புலித்தோலை அரைக்கசைத்தீர்	
முன்செய்த மூவெயிலும்	
  எரித்தீர்முது குன்றமர்ந்தீர்	
மின்செய்த நுண்ணிடையாள்	
  பரவையிவள் தன்முகப்பே	
என்செய்த வாறடிகேள்	7.25.1
  அடியேனிட் டளங்கெடவே. 	
	
உம்பரும் வானவரும்	
  உடனேநிற்க வேயெனக்குச்	
செம்பொனைத் தந்தருளித்	
  திகழும்முது குன்றமர்ந்தீர்	
வம்பம ருங்குழலாள்	
  பரவையிவள் வாடுகின்றாள்	
எம்பெரு மான்அருளீர்	7.25.2
  அடியேன்இட் டளங்கெடவே. 	
	
பத்தா பத்தர்களுக்	
  கருள்செய்யும் பரம்பரனே	
முத்தா முக்கணனே	
  முதுகுன்றம் அமர்ந்தவனே	
மைத்தா ருந்தடங்கண்	
   பரவையிவள் வாடாமே	
அத்தா தந்தருளாய்	7.25.3
  அடியேன்இட் டளங்கெடவே. 	
	
மங்கையோர் கூறமர்ந்தீர்	
  மறைநான்கும் விரித்துகந்தீர்	
திங்கள் சடைக்கணிந்தீர்	
  திகழும்முது குன்றமர்ந்தீர்	
கொங்கைநல் லாள்பரவை	
  குணங்கொண்டிருந் தாள்முகப்பே	
அங்கண னேயருளாய்	7.25.4
  அடியேன்இட் டளங்கெடவே. 	
	
மையா ரும்மிடற்றாய்	
  மருவார்புரம் மூன்றெரித்த	
செய்யார் மேனியனே	
  திகழும்முது குன்றமர்ந்தாய்	
பையா ரும்மரவே	
  ரல்குலாளிவள் வாடுகின்றாள்	
ஐயா தந்தருளாய்	7.25.5
  அடியேன்இட் டளங்கெடவே. 	
	
நெடியான் நான்முகனும்	
  இரவியொடும் இந்திரனும்	
முடியால் வந்திறைஞ்ச	
  முதுகுன்றம் அமர்ந்தவனே	
படியா ரும்மியலாள்	
  பரவையிவள் தன்முகப்பே	
அடிகேள் தந்தருளாய்	7.25.6
  அடியேன்இட் டளங்கெடவே.	
	
கொந்தண வும்பொழில்சூழ்	
  குளிர்மாமதில் மாளிகைமேல்	
வந்தண வும்மதிசேர்	
  சடைமாமுது குன்றுடையாய்	
பந்தண வும்விரலாள்	
   பரவையிவள் தன்முகப்பே	
அந்தண னேயருளாய்	7.25.7
  அடியேன்இட் டளங்கெடவே.	
	
பரசா ருங்கரவா	
  பதினெண்கண முஞ்சூழ	
முரசார் வந்ததிர	
   முதுகுன்ற மமர்ந்தவனே	
விரைசே ருங்குழலாள்	
  பரவையிவள் தன்முகப்பே	
அரசே தந்தருளாய்	7.25.8
  அடியேன்இட் டளங்கெடவே.	
	
ஏத்தா திருந்தறியேன்	
  இமையோர்தனி நாயகனே	
மூத்தாய் உலகுக்கெல்லாம்	
  முதுகுன்றம் அமர்ந்தவனே	
பூத்தா ருங்குழலாள்	
  பரவையிவள் தன்முகப்பே	
கூத்தா தந்தருளாய்	7.25.9
  கொடியேன்இட் டளங்கெடவே. .	
	
பிறையா ருஞ்சடைஎம்	
  பெருமான் அருளாய்என்று	
முறையால் வந்தமரர்	
  வணங்கும்முது குன்றர்தம்மை	
மறையார் தங்குரிசில்	
  வயல்நாவலா ரூரன்சொன்ன	
இறையார் பாடல்வல்லார்க்	7.25.10
  கெளிதாஞ்சிவ லோகமதே.	

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - பழமலைநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page