6.78 திருவாலங்காடு - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

775

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை யுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.1
776

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.2
777

ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே
புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.3
778

நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.4
779

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.5
780

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டா னிசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.6
781

மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.7
782

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.8
783

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை யுடையார் தாமே
ஊரா வேகம்பம் உகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.9
784

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.10

இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page