4.111 சரக்கறை - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

1039

விடையும் விடைப்பெரும் பாகாவென்
விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல்
பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும்
மாலைப் பிறையொதுங்குஞ்
சடையு மிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.1
1040

விஞ்சத் தடவரை வெற்பாவென்
விண்ணப்பம் மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ
வணமுந் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வா
யரவும் விரவியெல்லாஞ்
சந்தித் திருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.2
1041

வீந்தார் தலைகல னேந்தீயென்
விண்ணப்பம் மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண்
ணீறுந் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி
யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.3
1042

வெஞ்சமர் வேழத் துரியாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற்
கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாகம் நகுசிர
மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.4
1043

வேலைக் கடல்நஞ்ச முண்டாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
காலற் கடந்தா னிடங்கயி
லாயமுங் காமர்கொன்றை
மாலைப் பிறையும் மணிவா
யரவும் விரவியெல்லாஞ்
சாலக் கிடக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.5
1044

வீழிட்ட கொன்றையந் தாராயென்
விண்ணப்பம் மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா
மணியுஞ் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு
மரவுமென் பாமையோடுந்
தாழிட் டிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.6
1045

விண்டார் புரமூன்று மெய்தாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி
நீறுந் தொழுதுபாதங்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி
லாயமுங் காமர்கொன்றைத்
தண்டார் இருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.7
1046

விடுபட்டி ஏறுகந் தேறீயென்
விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை
குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.8
1047

வெண்டிரைக் கங்கை விகிர்தாவென்
விண்ணப்பம் மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத்
திரமேற் கபாலவடங்
குண்டிகை கொக்கரை கோணற்
பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.9
1048

வேதித்த வெம்மழு வாளீயென்
விண்ணப்பம் மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா
மணியுஞ் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத்
துண்டமும் பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.10
1049

விவந்தா டியகழல் எந்தாயென்
விண்ணப்பம் மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத்
திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ்
சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை
யோவென் றனிநெஞ்சமே.

4.111.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page