4.68 திருவாலங்காடு - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

659

வெள்ளநீர்ச் சடையர் போலும்
விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்
குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங்
கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.1
660

செந்தழ லுருவர் போலுஞ்
சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை
மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.2
661

கண்ணினாற் காம வேளைக்
கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று
மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.3
662

காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் தோளர் போலுந்
தூறிடு சுடலை தன்னிற்
சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங்
குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும்
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.4
663

பார்த்தனோ டமர் பொருது
பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்துக்
குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி
அம்போடுங் கொடுப்பர் போலுந்
தீர்த்தமாம் பழனை மேய
திருவாலங் காட னாரே.

4.68.5
664

வீட்டினார் சுடுவெண் ணீறு
மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங்
கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.6
665

தாளுடைச் செங்க மலத்
தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ
உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்
குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும்
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.7
666

கூடினார் உமைதன் னோடே
குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்
சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.8
667

வெற்றரைச் சமண ரோடு
விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும்
பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.9
668

மத்தனாய் மலையெ டுத்த
அரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால்
ஊன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்
பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார்
ஆலங்காட் டடிக ளாரே.

4.68.10

இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page