திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 54வது திருப்பதிகம்)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

3.054 திருப்பாசுரம்

பண் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

572

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

01
573.

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

02
574.

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.

03
575.

ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

04
576.

ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.

05
577.

ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

06
578.

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.

07
579.

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

08
580.

பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

09
581.

மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

10
582.

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

11
583.

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

12

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page