திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
சீர்காழி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 97வது திருப்பதிகம்)

2.97 சீர்காழி - திருவிராகம்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

1049

நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.

01
1050

பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.

02
1051

சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.

03
1052

நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.

04
1053

கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.

05
1054

அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.

06

இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.

07
1055

பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.

08
1056

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.

09
1057

நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.

10
1058

தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page