திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
வேணுபுரம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 81வது திருப்பதிகம்)

2.81 வேணுபுரம்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

877

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

01
878

சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

02
879

கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

03
880

நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.

04
881

ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

05
882

மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

06
883

நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

07
884

இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.

08
885

தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.

09
886

நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.

10

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page