திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமணஞ்சேரி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 16வது திருப்பதிகம்)

2.16 திருமணஞ்சேரி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து	
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி	
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்	
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.	2.16.1
	
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய	
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்	
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்	
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.	2.16.2
	
எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய	
இப்பாலா யெனையும் ஆள வுரியானை	
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி	
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.	2.16.3
	
விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்	
உடையானை ஊழிதோ றூழி உளதாய	
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி	
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.	2.16.4
	
எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்	
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை	
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்	
செறிவானைச் செப்பவல் லார்க் கிடர் சேராவே.	2.16.5
	
மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்	
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை	
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி	
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.	2.16.6
	
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்	
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை	
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்	
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.	2.16.7
	
எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்	
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை	
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி	
பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.	2.16.8
	
சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலும்	
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க	
வல்லார்நன் மாதவ ரேத்தும் மணஞ்சேரி	
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.	2.16.9
	
சற்றேயுந் தாமஅறி வில்சமண் சாக்கியர்	
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை	
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி	
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.	2.16.10
	
கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த	
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை	
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி	
பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.	2.16.11

	        - திருச்சிற்றம்பலம் -
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page