திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
பல்பெயப்பத்து தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 128வது திருப்பதிகம்)

1.128 திருவெழுகூற்றிருக்கை

பண் - வியாழக்குறிஞ்சி

ஓருரு வாயினை மானாங் காரத்	
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்	
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்	
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை	
இருவரோ டொருவ னாகி நின்றனை		1.128.5

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்	
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி	
காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை	
இருநதி அரவமோ டொருமதி சூடினை	
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்		1.128.10

நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்	
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்	
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை	
ஒருதனு இருகால் வளைய வாங்கி	
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்		1.128.15

கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை	
ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்	
முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்	
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ	
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து	1.128.20

நான்மறை யோதி ஐவகை வேள்வி	
அமைத்தா றங்க முதலெழுத் தோதி	
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்	
பிரமபுரம் பேணினை	
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை	1.128.25

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை	
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை	
பாணிமூவுலகும் புதையமேல் மிதந்த	
தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி	
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை		1.128.30

வரபுரம் என்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்	
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை	
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்	
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை	1.128.35

ஐயுறு மமணரும் அறுவகைத் தேரரும்	
ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை	
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை	
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்	
மறைமுதல் நான்கும்			1.128.40

மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்	
மறுவிலா மறையோர்	
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை	
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்		1.128.45

அனைய தன்மையை யாதலின் நின்னை	
நினைய வல்லவ ரில்லைநீள் நிலத்தே.		1.128.47

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page