சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம் - பகுதி 4a
படலம் 51 - 60 (1692 - 2022 )

kanchip purANam of civanjAna munivar
part 4a / paTalam 51 -60 /verses 1692 - 2022
In tamil script, Unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of SIngapore for the preparation of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 4a - (1692 - 2022)

51. வீராட்டகாசப்படலம் 1692 -1746
52. பாண்டவேசப்படலம் 1747-1755
53. மச்சேசப்படலம் 1756-1765
54. அபிராமேசப்படலம் 1765-1774
55. கண்ணேசப் படலம் 1775-1786
56. குமரகோட்டப் படலம் 1787-1831
57. மாசாத்தன் தளிப் படலம் 1832-1868
58. அனந்த பற்பநாபேசப் படலம் 1869-1878
59. கச்சி மயானப்படலம் 1879-1901
60. திருவேகம்பப்படலம் 1902-2022

    காஞ்சிப் புராணம்
    51. வீராட்டகாசப்படலம் (1692 -1746)

    அறுசீரடிக்கழி நெடிலாசிரிய விருத்தம்
    1692 தண்காமர் புனல்குடையுந் தையலார்
          திமிர்ந்தநறுந் தகர ஞாழல்
    எண்காதங் கமழிலஞ்சி மகாலிங்கத்
          தளிபுகன்றாம் இதன்வ டாது
    விண்காவ லுடையார்மன் இளநகைபூத்
          திவ்வாலம் விடுக்கா அன்றி
    உண்காவென் றருள்செய்தான் வீராட்ட
          காசநகர் உரைத்து மாலோ
    விடுக்கா -விடுக்கவோ. உண்கா - உண்கவோ
    1
    1693 சர்வசம்மாரக்காலத் திருக்கூத்து
    வள்ளவாய் நறைக்கமல வெண்பீடத்
          தரசிருக்கும் மாதர் அன்னப்
    புள்ளவாம் நடைநல்லாள் முலைமுகட்டிற்
          கோட்டியபூங் களபந் தோய்ந்த
    கள்ளவாந் தொடைத்திண்டோள் மறைக்கிழவன்
          ஒருவனுக்குக் கடையேன் உள்ளத்
    துள்ளவாம் இறைவகுத்த பராத்தங்கள்
          ஓரிரண்டும் ஒழிந்த காலை
    2
    1694 ஐவண்ண நிறம்படைத்த திருமுகமைந்
          துடையபிரான் அருளால் அந்திச்
    செவ்வண்ணக் காலத்தீ உருத்திரப்புத்
          தேள்நுதற்கண் செந்தீப் பொங்கி
    மொய்வண்ண அண்டமெலாம் முழங்கிநிமிர்ந்
          தெழுந்துருக்கி உண்டு தேக்கி
    மெய்வண்ண மனத்தன்பர் வினைப்பறம்பின்
          நீறாக்கி விட்ட தாக
    வினைப்பறம்பின் நீராக்கி - மலையைச் சாம்பலாக்கியதைப் போல
    வினைமலையை நீறாக்கி.
    3
    1695 ஆயநாள் இரவில்லை பகலில்லை
          அயனில்லை அரியு மில்லை
    மேயவான் முதல்பூதம் இலையேனைப்
          பவுதிகத்தை விளம்பு மாறென்
    பாயபே ரண்டமெலாம் இவ்வாறு
          படநீற்றிப் புரமூன் றட்ட
    காய்க ணையோன் ஆனந்த மேலீட்டின்
          தன்னியல்பு கருத்துட் கொள்ள
    4
    1696 கடைநாளும் அழியாது தன்னொருபாற்
          பெருமாட்டி காப்ப வைகும்
    நடைமாறாத் திருக்காஞ்சி நகர்மன்னி
          உலகீன்ற நங்கை காண
    இடையாம இரவெல்லாம் திருக்கூத்து
          நவின்றருளி எறுழ்கால் வெள்ளை
    விடையாளுந் தனிப்பாகன் ஆர்த்தார்த்து
          வீரநகை விளைத்தான் மேன்மேல்
    5
    1697 அவ்விரவு புலர்காலை திருநடனம்
          நீத்திலிங்க வடிவ மாகி
    அவ்வரைப்பின் விளங்கினான்
          ஆதலினால் வீராட்ட காசத் தேவாம்
    அவ்விலிங்கம் வழிபட்டுச் சிலர்சித்தர்
          அற்புதமாம் சித்தி பெற்றார்
    அவ்வியல்பு தனைக்கேட்டுக் கொங்கணமா
          முனிச்செல்வன் அங்கண் எய்தி
    6
    1698 கொங்கணமுனிவர் வழிபாடு
    அவ்விலிங்க மேன்மையினை அளந்தறிவான்
          ஆங்கதன்றன் சென்னி மீது
    செவ்வனே தன்குளிகை ஈந்திட்டான்
          மற்றவற்றின் சிரமேல் வைப்பின்
    எவ்வமுற நீறாக்கும் அனையதையக்
          கணமேயவ் விலிங்கம் உள்ளால்
    வௌளவியது தனைக்கண்டான் வியப்பெய்தி
          அவ்விலிங்க முன்னர் வைகி
    7
    1699 மெய்த்தவங்கள் இனிதாற்றிப் பேறுற்றான்
          இன்னுமவண் மேவிச் சீர்சால்
    சித்திகளை உழவாது பெறுகின்றோர்
          எல்லையிலர் செந்நீர் தேக்கும்
    முத்தலைவேல் வீராட்ட காசேசன்
          மேன்மையெவர் மொழிவார் மாயன்
    அத்தலத்தே வழிபட்டுப் பவளநிறம்
          பெற்றானவ் வகையுஞ் சொல்வாம்
    8
    1700 திருமால் பவளநிறம் பெற்ற வரலாறு
    எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    விரிதிரை சுருட்டிக் கரைமிசை எறியும்
          வெள்ளிவெண் பாற்கடல் வரைப்பின்
    எரிமணி மாடப் போகமா புரத்தின்
          எய்தருந் தனியிடத் திருந்து
    புரிமுறுக் குடைந்து நறவுகொப் புளிக்கும்
          பூந்தவி சணங்கினோ டிணங்கி
    வரிவளைக் குடங்கை வானவன் விளையாட்
          டியற்கையின் மகிழ்வுறும் ஒருநாள்
    9
    1701 மாயிரு ஞால முழுதுமீன் றளித்து
          மனைவியும் மணாளனு மாயோர்
    ஆயிடைப் பொழுது கழிப்பிய தம்முட்
          கதைசில அறைகுவா னமைந்தார்
    பாயபாப் பணையில் அறிதுயில் அமர்வோன்
          பனிமலர்க் கிழத்தியை நோக்கித்
    தேயும்நுண் நுசுப்பின் அகன்றபே ரல்குல்
          ஒருகதை கேளெனச் செப்பும்
    10
    1702 நன்னிறம் படைத்த நாமநீர்ப் பரவை
          நளிதிரைப் பாற்கடல் மாமை
    புன்னிறந் தோற்ற வெள்ளொளி விரிக்கும்
          புகரறு கயிலையெம் பெருமான்
    மின்னிடை மருங்குல் உமையுடன் ஒருநாட்
          கறங்குவெள் ளருவியஞ் சாரல்
    தன்னிறம் மாண்ட மந்தரப் பறம்பின்
          தனியிடத் தினிதுறும் ஏல்வை
    11
    1703 எழால்மிடற் றளிகள் கொள்ளைகூட் டுண்ண
          ஈர்ந்தொடை நறாவிரி ஐம்பால்
    கழாமணி மேனிப் பிராட்டியை நோக்கிக்
          காளியென் றெம்பிரா னழைப்ப
    வழாநிலைக் கற்பின் உள்ளகம் வெதும்பி
          வரிவிழி நித்திலம் உகுத்துக்
    குழாமுடை இமையோர் ஏத்தெடுத் திறைஞ்சுங்
          கோமளை யின்னது கூறும்
    12
    1704 விடுந்தகைக் காள நிறம்படைத் துளன்யான்
          வெண்ணிறம் படைத்துளை நீயே
    நெடுந்தகாய் நமக்குப் புணர்ச்சி யெவ்வாறு
          நிகழும்மற் றிங்கிது காறும்
    கடுந்தகை என்மாட் டருளினால் இன்பக்
          கலவியில் திளைத்தனை இனிநான்
    அடுந்தகைப் படையோய் கவுரியாம் வண்ணம்
          பெறுமுறை அருடியென் றிரந்தான்
    கடுந்தகை- விரும்புதற்கேலாத இயல்பு. கவுரி - பொன்னிறம்
    13
    1705 பொலங்குவட் டிமயப் பனிவரைப் பிராட்டி
          புகன்றன திருச்செவி சாத்தி
    இலங்குவெண் ணீற்றுச் சுந்தரக் கடவுள்
          இயம்புவான் வரிவிழி கேட்டி
    கலங்கஞர் எய்தேல் கடவுளர் கருமப்
          பொருட்டுனை இம்முறை அழைத்தேம்
    நலங்கொள உலகம் நாள்தொறும் புரத்தல்
          நங்கட னாதலின் கண்டாய்
    14
    1706 மற்றது பின்னர்த் தெளிதிநீ கவுர
          நிறம்பெறு மாறுனக் குரைப்பல்
    வெற்றிடம் இன்றி எங்கணும் நிறைந்து
          பரவெளிப் பரப்பிடை மேவும்
    பெற்றியன் யானே யாயினுந் தகைசால்
          பீடுயர் தலங்களின் மாட்டும்
    அற்றமில் மறையோர் அகத்திலு முலவா
          வருள்சுரந் தினிதுவீற் றிருப்பேன்
    15
    1707 மேம்படும் அவற்றின் உத்தமத் தளிகள்
          விதியுளி மறைநெறி ஒழுக்கம்
    ஓம்பிமிக் குயர்ந்தோர் உள்ளமும் எனக்குச்
          சிறந்தன அவற்றினும் மேலாய்த்
    தேம்பொழில் வேலிக் காசிமா நகரும்
          யோகிகள் சிந்தையுஞ் சிறந்த
    வாம்பகர் அவற்றிற் காஞ்சியும் உண்மை
          அடியவர் உள்ளமுஞ் சிறந்த
    16
    1708 தகைபெறும் அவற்றின் வேறெனக் கினிய
          தானம்மற் றெங்கணும் இல்லை
    நகைமலர்க் கொடியே அந்நகர் எய்தி
          நயந்தெனை அருச்சனை யாற்றி
    மிகையறு தவத்தான் வேட்டவா பெறுதி
          என்றலும் விளங்கிழை உமையாள்
    பகைவினை துரக்குங் காஞ்சியின் எய்திப்
          பஞ்சதீர்த் தக்கரை ஞாங்கர்
    17
    1709 மாதவம் இயற்றிப் பொன்னுருப் பெற்றுக்
          கவுரியாய் வயங்கினள் இனைய
    மேதகும் இறும்பூ தென்னெனப் புகல்வேன்
          வெறிமலர்ப் பங்கயத் தவிசின்
    மாதர்வாள் நகையாய் என்றெடுத் துரைத்தான்
          மந்தரம் அலமரச் சுழற்றி
    ஓதநீர் அளக்கர் அமுதெடுத் திமையோர்க்
          கூட்டிய பெருந்திறற் குரிசில்
    18
    1710 செய்யவள் கேட்டு வியப்புமீக் கூர்ந்து
          செப்புவாள் என்னையா ளுடையாய்
    ஐயவிச் செயலைக் கேட்டொறும் உலவா
          அற்புதம் பயக்குமால் மன்ற
    மெய்யுணர் வின்பச் சத்தியும் சிவனும்
          விளைக்குமிவ் விளைவுக ளெல்லாம்
    மையறத் தெளிந்தோர் திருவிளையாட்டின்
          வண்மையென் றியம்புவார் மன்னோ
    19
    1711 இற்றலாற் காமற் காய்ந்துமுற் றுணர்ந்து
          வரம்பிலின் புடைய வீசனுக்கு
    மற்றெவன் உளதோ அவ்விளை யாட்டும்
          உலகெலாம் உய்யுமா றன்றே
    அற்றென உணராக் கயவர்கள் காமத்
          திறமெனக் கருதுவர் அனையர்
    பெற்றியை யாரே தெளிதரற் பாலார்
          பிறங்கொளி மணிநிறக் குரிசில்
    20
    1712 திருமகள் வேண்டுகோள்
    நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளும்
          நிலைபெறத் தொழிற்படுத் துடைய
    தலைவனங் கவனே பனிவரைப் பிராட்டி
          தன்னையும் நின்னையும் இடப்பால்
    மலரணைப் புத்தேள் தன்னையும் எனையும்
          வலப்புடைக் காலருத் திரனைக்
    கலைமகள் தனையும் உளத்திடைத் தந்தான்
          காத்துயிர்த் தழிப்பது கருதி
    21
    1713 அகிலமுந் தானே அருள்தொழில் நடாத்தும்
          ஆங்கவற் கெவற்றினும் சால
    மிகுபெருங் காத லுமையவ ளிடத்தும்
          விரவும்நின் னிடத்தினும் அன்றே
    முகிலுறழ் கூந்த லவளென் நீயும்
          முதல்வனே யுன்னடி யேற்கு
    மகிழ்வுமீக் கிளைப்ப அவ்வுரு பெறுதி
          என்றனள் மலரணைக் கிழத்தி
    22
    1714 விளங்கிழை மாற்றம் அச்சுதன் கேளா
          வெகுண்டுநின் மனக்கருத் திதுவேல்
    களங்கனை அனையேன் றன்னுடன்
          இந்நாள் காறும்நீ பொலஞ்சுடர் நிறத்தாய்
    வளங்கெழும் இன்பம் என்னணம் நுகர்ந்தாய்
          மற்றினிச் செக்கர்வான் உருவம்
    உளங்கொளப் பெறுகேன் என்றவட் கியம்பிக்
          கதுமெனக் கரந்தனன் ஊங்கு
    23
    1715 கச்சிமா நகரம் எய்திவீ ராட்ட
          காசநல் வரைப்பினுக் கெதிரா
    அச்சிவன் வீர நகைதிரண் டனைய
          சக்கர தீர்த்த முண்டாக்கி
    முச்சகம் ஏத்துங் கங்கையிற் சிறந்த
          அத்தடம் மூழ்கிநோன் பியற்றிப்
    பச்சைமால் வதிந்தான் வதிந்திடம் பச்சை
          வண்ணனா லயமெனப் படுமால்
    24
    1716 ஆங்கனம் வைகி நாள்தொறும் ஈரே
          ழாயிரம் அளிகெழு பொகுட்டுத்
    தேங்கமழ் கமலங் கொண்டுவீ ராட்ட
          காசமா தேவனை அருச்சித்
    தோங்குபே ரன்பின் தொழுதெழுந் திரப்ப
          உலப்பருங் கருணைமீக் கூர்ந்து
    மாங்குயில் பாகன் எதிரெழுந் தருளி
          வழங்கினன் பவளம்நேர் வடிவம்
    25
    1717 பொரியரைக் காயாம் போதுறழ் வண்ணங்
          கழீஇத்துகிர் புரைநிறம் எய்திப்
    பெரிதுளம் மகிழ்ந்தான் ஆயிடைச் சிலநாள்
          வைகிமீண் டரவணைப் பெருமான்
    விரிதிரைத் தீம்பாற் கடலகத் தணுகி
          விரைமலர்க் கிழத்தியோ டிணங்கித்
    தெரியிழைத் திருவே காண்டிநீ பவளச்
          சேயொளி தழைக்குமிவ் வடிவம்
    26
    1718 கச்சறப் பணைத்துப் புடைபரந் தெழுந்த
          கதிர்மணி முலையினாய் இதுவென்
    இச்சையாற் பெற்றேன் விழந்தவா றென்மாட்
          டின்னலம் நுகரெனக் கேட்டுப்
    பச்சிளந் தோகை இந்நிறம் அடிகள்
          இச்சையாற் படைத்ததேல் மாய
    விச்சையே போலும் நிலைமையன் றெனக்கீ
          தென்பயன் விளைத்திடு மென்றாள்
    27
    1719 பாய்சிறைக் கலுழப் புள்ளர சுகைக்கும்
          ப•றலைச் சேக்கையன் வெகுளா
    நீயினி யிருந்தை வண்ணமா கென்னச்
          சபித்தலும் நேரிழை மேனிச்
    சேயொளி கருகக் கண்டுளம் பதைத்தாள்
          சிறியனேன் செய்பிழை பொறுத்திங்
    கேயுமிச் சாபம் தவிர்த்தருள் பொறையாள்
          கொண்கனே யென்றடி பணிந்தாள்.
    இருந்தை- கரி. பொறையாள்- பூமி
    28
    1720 திருமகள் காஞ்சியை யடைதல்
    தெம்முனை கடந்த திகிரியோன் இரங்கிச்
          சீற்றத்தால் விரைந்துனைச் சபித்தேன்
    அம்முறை யாற்றாற் கரிநிறம் பெற்றாய்
          ஆயினும் முன்னையின் விழைய
    வெம்முலைப்போகம் எனக்குள தாகவெருவலை
          எனத்தழீஇக் கொள்ளச்
    செம்மலர்த் திருவும் அடியிணை இறைஞ்சித்
          திருந்துதன் இருக்கையுட் புக்காள்
    29
    1721 புக்கபின் அங்கண் பாங்கியர் தம்மோ
          டுசாவினள் புதுநறாக் கான்று
    நக்கபூஞ் சோலைக் காஞ்சிமா நகரை
          நண்ணியாங் கிணைவிழி களிப்பத்
    திக்கெலாம் பரசத் திகழுல காணித்
          தீர்த்தநீர்த் தடங்கரை மாடே
    மைக்குழல் உமையாள் இனிதமர்ந் தருளித்
          தவஞ்செயும் வரைப்பினைக் கண்டாள்
    30
    1722 அனையநல் வரைப்பு நுண்பில மாகி
          அருட்பர வெளியதாய்த் திகழும்
    கனைகடல் உடுக்கை நிலமகட் குந்தித்
          தானமாம் கமழ்நறுங் கடுக்கைத்
    தனிமுதற் பிரமந் தனக்கொரு வடிவாம்
          தாழ்குழலுமையவட் கடியார்
    வினைதபு மூலத் திருவுரு வதுவே
          விளங்கொளிக் காஞ்சியம் பதியுள்
    31
    1723 குறைவிலா நிறைவாய் உண்மையாய்
          அறிவாய்க் கொட்புறு மனமடங் கிடமாய்
    மறைமுடிப் பொருளாய் இன்பமாய்ச்
          சிவமாய் மாசற வயங்குபே ரொளியை
    நிறைதவ யோகத் தலைவர் இவ்வாறு
          நெஞ்சகத் தேவழி படுவார்
    அறைகடற் பரப்பிற் காஞ்சிமா நகரின்
          ஆயிடை வழிபடு வாரால்
    32
    1724       காமகோடி - பெயர்க்காரணம்
    ஒருமுறை யங்கட் காமமாம் தருமம்
          உஞற்றுநர் தமக்குமத் தருமம்
    தருபயன்கோடி யாதலிற் கரடத்
          தடத்திழி கடாம்படு கலுழிப்
    பெருவரை வதனப்பிள்ளையைக் குகனைப்
          பெற்றவள் அமர்பிலம் அதுதான்
    கருதரு காமக் கோடியென் றுலகிற்
          காரணப் பெயரினால் வயங்கும்
    33
    1725 அன்றியும் காமக் கிறையவர் தனத
          ரனையவர் கோடியர்த் தரலால்
    என்றுமோ ரியல்பின் எங்கணும் விரவி
          யெவற்றினுங் கடந்தபே ரொளியைக்
    குன்றுறழ் கொம்மைக் குவிமுலைத் தடத்தாற்
          குழைத்தருள் கருணையெம் பிராட்டி
    நன்றுவீற் றிருக்கும் பேரொளிப் பிலத்திற்
          கப்பெயர் நாட்டலும் ஆமால்.
    34
    1726 இன்னுமிப் புவனப் பரப்பினிற் காம
          மென்பன மனைவியர் மக்கள்
    பொன்னணி யிருக்கைப் பூண்முதற் பலவாம்
          பூந்தளிர் அணிநலங் கவற்றுந்
    தன்னடி வணங்கி இரந்தவர் தமக்குத்
          தடங்கிரி பயந்தபே ராட்டி
    அன்னவை கோடி யளித்திட லானு
          மப்பெய ரெய்துமங் கதுவே
    35
    1727 அல்லதூங் கவைத்தாட் கரும்பகட் டூர்தி
          அடுதொழிற் கூற்றினைக் குமைத்த
    கொல்லையேற் றண்ணல் நுதல்விழிச்
          செந்தீக் கோட்படும் ஒருதனிக் கருப்பு
    வில்லியை விளையாட் டியற்கையிற் கோடி
          காமரா விழித்துணைக் கடையால்
    அல்லியங் கோதை யாங்களித் திடலால்
          அப்பெயர் பூண்டது மாமால்
    36
    1728 மற்றுமா ருயிர்சேர் நாற்பொருட் பயனில்
          வகுத்தமூன் றாவது காமம்
    பற்றுகா மத்திற் கோடியா முடிவிற்
          பயில்வது வீடுபே றாகும்
    உற்றவர் தமக்கு வீடுபே றளிக்கும்
          உண்மையி னானுமப் பெயராற்
    சொற்றிடப் படுமால் உலகெலாம் ஈன்றா
          ளமர்ந்தருள் சுடரொளி விமானம்
    37
    1729 பின்னரும் ஒன்று ககரமே அகரம்
          மகரமாப் பிரிதரும் மூன்றும்
    அன்னவே றுகைக்கும் அயனரி ஈசன்
          ஆயமுத் தேவரைப் பகரும்
    இன்னவர் தம்மை யுகந்தொறுங் கோடி
          முறையெழில் விழிகளிற் படைத்தாள்
    மின்னிடைப் பிராட்டி யென்பத னானும்
          அப்பெயர் விளங்கு மென்பதுவே
    38
    1730 வேறுமொன் றாங்கட் காவெனப் படுவாள்
          வெண்மல ராட்டிமா வென்பாள்
    ஊறுதேங் கமலப் பொகுட்டணை யணங்காம்
          ஊங்குவர் இருவரும் முகிலை
    மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி
          தன்னிடை வருமுறை யானும்
    ஏறுமத் திருப்பேர் எம்பெரு மாட்டிக் கென்றெடுத்
          தியம்புவர் உணர்ந்தோர்
    39
    1731 விந்துவின் வயங்கி யம்பைவீற் றிருக்கும்
          வியன்திருச் சக்கர வடிவாம்
    அந்தவான் பிலந்தான் இயம்பிய காமம்
          அனைத்திற்கும் ஆதர மாகிப்
    பந்தமில் காமக் கோட்டமென் றொருபேர்
          பரித்திடும் மற்றெவற் றினுக்கும்
    முந்திய பீட மாதலின் ஆதி பீடமும்
          மொழிந்திடப் படுமால்
    40
    1732 இனைய தாகிய திருப்பிலம் அதனை
          எழால்மி டற்றிளஞ் சுருப்பினம் முரலும்
    நனைக லுழ்ந்தலர் மலர்த்தவி சிருக்கை
          நகைமலர்க்கொடி கண்டுகை தொழுதே
    அனைய சூழலின் இடப்புறம் வைகி அடங்க
          லார்புரம் அழலெழச் சிரித்த
    முனைவ னார்க்கொரு சத்தியாய் இன்பாய்
          முழுது மாகிய அகில காரணியை
    41
    1733 பாதம் ஒன்றொடு நிவிர்த்தியால் தரைக்கண்
          பதமி ரண்டொடு பதிட்டையால் புனற்கண்
    பாதம் நான்கொடு வித்தையால் கனற்கண்
          பதங்கள் எட்டொடு சாந்தியால் வளிக்கண்
    பாதம் ஒன்பத னொடுவெளிப் பரப்பிற் பகருஞ்
          சாந்தியின் அதீதமாங் கலையாற்
    பாதம் ஆயிரத் தொடுபர வெளிக்கண்
          பயிலும் அக்கரத் தனிமுதற் பரையை
    42
    1734 திருமகள் வழிபாடு
    எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    கருமை செம்மைவெண் ணிறமுடை யாளைக்
          காமக் கோடிவான் பிலவடி வாளை
    அருவி தாழ்குவட் டணிமலை மகளை மாயை
          யோடுல கனைத்துமீன் றாளை
    உருகி நெக்குநெக் குளப்பெருங் கோயி லுள்ளு
          றுத்தியென வுடம்பினைப் பொதிந்து
    மருவு மிக்கரு நிறஞ்செதிள் எடுப்பான்
          கருணை செய்கென வழிபட லுற்றாள்
    43
    1735 வருண னாருனை வாருணி யெனப்பிருகு
          மாதவற் கருளிய வாற்றால்
    பிருகு வாரநா ளுனைவழி படுவார் பெருவ
          ளத்தொடு வாழ்வாரென் றுரைப்ப
    அருவி னைப்புலக் குறும்பெறிந் துயர்ந்த
          பிருகு மாமுனி மகளடி யேற்கும்
    கருணை செய்வது கடனுனக் கன்றே கருப்பும்
          வில்லியைக் காய்ந்தவர்க் கினியாய்
    44
    1736 காஎ னப்பெய ரியகலை மகளைமுந்தை
          ஞான்றுநின் கண்ணெனப் புரந்தாய்
    மாஎ னப்பெய ருடையமற் றெனையும் மலர்ந்த
          நின்விழி போற்புரந் தருளி
    ஏஎ னப்பிறழ் தடங்கணாய் காமக்கண்ணி
          யாம்பெயர் எய்துவை என்னாப்
    பூஎ னப்பயில் அணைமிசைக் கிழத்தி போற்றி
          சைத்தலும் எதிரெழுந் தருளி
    45
    1737 திருமகள் வரம் பெறல்
    எம்பி ராட்டிவான் கருணைகூர்ந் தருளி யேட
          விழ்ந்தபூந் தவிசுறை யணங்கே
    கம்பி யாதிமற் றுன்னுடற் கருமை கரிய
          சாந்தமாக் கழிகமுன் னையினும்
    நம்பு நல்லுருப் பெறுதியிப் பொழுதே நார
          ணற்குமிக் குரியவ ளாவாய்
    வம்ப றுத்தெழுந் தோங்கியண் ணாந்து மதர்த்து
          வீங்கிய வனமுலைத் தோகாய்
    46
    1738 அழகு வாய்ந்தநின் வடிவினிற் கழியும்
          அனைய சாந்தணி நுதலினர் தமக்கு
    விழவும் இன்பமுஞ் செல்வமும் புகழும்
          மேக லின்மையும் இகழுமற் றொழிக
    பழைய வேதமுற் றுணர்ந்துயர் சிறப்பிற்
          பனுவ லாட்டியு மிவணமர் செயலாற்
    கழிவில் அன்பின்நீ வேட்டவா றெனக்குக்
          காமக் கண்ணியாம் பெயருறு கென்ன
    47
    1739 இறைவி திருமாலுக்குக் கட்டளை யிடுதல்
    இனைய வாறிவண் நிகழ்வுழிச் சுரும்பர்
          இமிருந் தாமரை உந்தியங் கடவுள்
    மனைய கத்துமா மடந்தையைக் காணான்
          மனமழுங்கினன் பிரிவுநோய் வருத்தக்
    கனைக டற்பரம் பெங்கணுந் தேடிக்
          காஞ்சி மாநகர் ஆவயின் கண்டான்
    அனைய தாரமும் இறைவியும் தம்முள் அறைவ
          கேட்டவண் ஒளித்துநின் றனனால்
    48
    1740 ஒள்வ ளைக்கரத் திருவரும் அவனை யுணர்ந்து
          நோக்கினர் என்னையா ளுடையாள்
    கள்வன் ஒத்திவண் நிற்பவன் யாரே யெனக்க
          டாயினள் கடிமலர் அணங்கும்
    வெள்க லுற்றுமுன் இறைஞ்சினள் மாயோன்
          விரைவின் அம்பிகை திருவடி வணங்கி
    உள்ள கம்பெரு மகிழ்ச்சியின் திளைப்ப
          ஒரும ருங்குற ஒடுங்கிநின் றனனே
    49
    1741 நங்கை நாகணைக் குரிசிலை நோக்கி
          நன்று வந்தனை யோவென வினவி
    அங்கண் முச்சகம் நீபுரந் தளிக்கும் ஆரு
          யிர்த்தொகை இனிதுவாழ்ந் தனவே
    பங்க யக்கணாய் என்றலும் கலுழப் பாகன்
          நின்னருட் கருணைபெற் றுடையேம்
    எங்கள் வாழ்வினுக் கெவன் குறையானும்
          இவளும் உய்ந்தனம் எனத்தொழு துரைத்தான்
    60
    1742 இறைவி பின்னரும் ஒன்றவற் கியம்பும்
          ஈண்டு முப்பதிற் றிரண்டறம் வளர்க்கும்
    முறையின் என்னறச் சாலையீ திங்கோர்
          மூரிப்பாரிடம் இதற்கிடை யூறாய்க்
    குறைவி லாற்றலி னுழிதரு மதனைக்
          குறும்ப டக்குதி நீயென யேவ
    நறைம லர்த்துழாய் மோலியும் இறைஞ்சி
          நயந்து பஞ்சதீர்த் தத்தடங் கரைப்பால்
    51
    1743 மூரிப் பாரிடம் - வலிய பூதம்
    திருமால் பூதத்தை யடக்கல்
    அன்று பாரிடம் பாரிடை வீழ்த்தி யாற்ற
          லான்மிதித் ததன்மிசை நின்றான்
    நின்ற வன்றனை உந்திமேல் எழும்ப நெரித்தி
          ருந்தனன் இருந்தவன் றனையும்
    வென்றி சால்விறற் பூதம்மேல் உந்த நீண்டு
          மற்றதன் மிசைப்படக் கிடந்தான்
    கன்று பூதமும் வலிமுழு திழந்து கமலக்
          கண்ணனை வணங்கியொன் றிரக்கும்
    52
    1744 வள்ள லேமலர்த் திருவிளை யாடு மார்ப
          னேபெரும் பசியெனை வருத்த
    உள்ளு டைந்துளேன் ஆண்டுதோ றடிமேற்
          கொரும கன்றனை உயிரொடும் உதவின்
    கொள்ளும் அப்பலி யேற்றுளம் மகிழ்வேன்
          கொடுத்தி யிவ்வரம் எனக்கென வரவப்
    பள்ளி யோனுமற் றாகென விளம்பிப் பத்தர்
          போற்றவத் தலத்தினி திருந்தான்
    53
    1745 கள்வன் நின்றவன் இருந்தவன் கிடந்தவன்
          என்னும் நால்வகைக் கரிசறு வடிவால்
    வெள்வ ளைக்கரக் கடவுளங் கமர்ந்தான்
          விமல நாயகி ஆணையி னாற்றான்
    முள்ளெ யிற்றராப் பணம்புரை அல்குல்
          முளரி மாதுமப் பிலத்தயல் இருந்தாள்
    புள்ளு யர்த்தவற் கினியவாம் அங்கட்
          போற்றப் பெற்றவர் வைகுந்தம் புகுவார்
    54
    1746 கறைமி டற்றிறை வைகும்வீ ராட்ட காச
          மேன்மையின் தொடர்ச்சியால் இங்கே
    அறைக ழல்திரு நாயகன் வரலா
          றனைத்துங் கூறினாம் அத்திரு நகரை
    நிறைவி ருப்பினால் வழிபடப் பெறுவோர்
          நிலமி சைப்பெரு வாழ்வின ராகிப்
    பிறைமு டிப்பிரான் திருவடிக் கலப்பிற்
    பெறல ரும்பர போகமுற் றிருப்பார்
    55

    ஆகத் திருவிருத்தம் - 1746
    -----------

    52. பாண்டவேசப்படலம் (1747-1755)

    1747 கொச்சகக் கலிப்பா
    பேரின்பச் சாக்கியனார் கல்லெறிக்கும் பேறுதவு
    வார்தங்கும் வீராட்ட காச வரவிதுவால்
    சீர்தங்கு தென்பால் திருப்பாண்ட வேச்சரமாம்
    கார்தங்கு மிஞ்சிக் கடிநகரங் கட்டுரைப்பாம்
    1
    1748 தருமம் பயந்த தநயன் முதலோர்
    உருகெழுவெங் காட்டின் உரோமசனே யாதித்
    திருமுனிவர் தம்மோடுந் தீர்த்தமெலா மாடக்
    கருதி நடந்தார் கழியாத காதலார்
    2
    1749 அங்கங் கிலிங்கம் நிறுவி அருச்சித்துப்
    பங்கந் துமிக்கும் பரம்பொருளைப் போற்றிசைத்துச்
    சிங்கம் படுக்குந் திறலார் வருநெறியார்
    தெங்கம் பொழில்சூழ் திருக்காஞ்சி நண்ணினார்
    3
    1750 அங்கட் பலதளியும் நோக்கி அகமகிழ்ச்சி
    பொங்கித் திருக்கம்ப மாதியாப் புண்ணியநீர்க்
    கங்கைச் சடிலக் கடவு ளிடமெல்லாம்
    துங்கப்பே ரன்பின் தொழு தேகினார்
    4
    1751 வீராட்ட காசங் கடைக்கால் வியன்மலர்கொண்
    டாராப்பே ரன்பின் அருச்சித் ததன்தென்பால்
    ஏராரத் தத்தம் பெயர்சாத்தி எல்லாரும்
    தாரார்த்த கொன்றைச் சிவலிங்கந் தாபித்தார்.
    5
    1752 அறமைந்தன் வீமன் விசயன் அலர்பூந்தார்
    நறவிண்ட திண்டோள் நகுலசகா தேவர்
    மறனின்றி இன்னோர் மனைக்கிழமை பூண்ட
    முறையொன்று கற்பின் துரோபதைமுன் னானோர்
    6
    1753 சீரார் திருட்டத் துமனன் சிகண்டிமற்றும்
    ஏரார் கழற்கால் யதுமரபின் மன்னருடன்
    ஊரானாற் கன்பின் உரோமசர் முற்கலனார்
    பாரார் வியாதர் முதலாய பன்முனிவர்
    ஊர் ஆனாற்கு என்பதை ஆன் ஊர்வாற்கு என மாற்றிக் கொள்க.
    7
    1754 என்றினைய ரெல்லாம் இலிங்கந் தனித்தனியே
    நன்றிருத்தி யேத்தி நயப்பாடு பெற்றாரால்
    அன்றவர்கள் போற்றும் இலிங்க மவைகண்டோர்
    மன்றின் நடமாடும் வள்ளல் அருள்பெறுவார்
    8
    1755 கயிலாயம்
    அன்னவற்றின் தென்பால் கயிலாயம் அவ்வரைப்பின்
    நன்னர்க் கயிலாய நாதன் றனைநிறுவி
    மன்னுந் திசைக்கிறைமை பெற்றான் மருவலார்க்
    கின்னல்புரி முத்தலைவேல் ஈசானன் என்பவே
    9

    ஆகத் திருவிருத்தம் - 1755
    ------

    53. மச்சேசப்படலம் (1756-1765)

    1756 கலிவிருத்தம்
    பார்த்த ராதியோர் வழிப டும்புகழ்
    ஆர்த்த சூழல்கள் விளம்பி னாமருள்
    கூர்த்த வப்புலக் குடக்கண் இப்பிநீர்த்
    தீர்த்த ஞாங்கர்மச் சேசங் கூறுவாம்
    1
    1757 ஒப்பி லற்புத முணர்த்த வெம்பிரான்
    இப்பி முத்தமங் கெடுத்த ளித்தலால்
    செப்ப ரும்புகழ் இப்பி தீர்த்தமென்
    றப்பெ ரும்பெய ரதனுக் காயதே
    இப்பி முத்தம்- சிப்பியில் தோன்றும் முத்துக்கள்.
    2
    1758 மற்ற தன்கரை மச்ச லிங்கமென்
    றற்ற மில்லரி யருச்சித் துள்ளது
    துற்ற பாதகச் சோம காசுரன்
    கற்கு மாமறை கவர்ந்தொ ளித்தநாள்
    3
    1759 ஓத்தொ ழிந்தன வுலகம் யாவையும்
    நீத்த வேள்விய நிலைமை குன்றலான்
    தீத்தெ றும்பசித் தேவர் மாயனைச்
    சோத்து நீசரணெ னத்து தித்தனர்
    சோத்து - கீழோர் மேலோருக்குச் செய்யும் அஞ்சலி.
    4
    1760 அஞ்ச லீரென வருளி யச்சுதன்
    நெஞ்ச கத்துற நினைவின் நாடினான்
    எஞ்சு றாமறை யாவுங் கைக்கொடு
    வஞ்ச னாழியுள் மறைந்த வண்ணமே
    5
    1761 பிருகு மாமுனி சபித்த பெற்றியால்
    ஒருவ ருங்கய லுருவு தாங்குபு
    மரும லர்ப்பொழிற் காஞ்சி வைப்பிடைப்
    பொருவி லிப்பிநீர்ப் புடையில் நண்ணினான்
    6
    1762 வேறு
    சலங்கொள் மீனுருத் தன்பெயர் நாட்டியங்
    கிலிங்க மன்பி னிருத்தி யருச்சனை
    துலங்கச்செய்தருள் பெற்றுத் தொகுநிதிக்
    கலங்கள் மல்கு கடலகத் தெய்தினான்
    7
    1763 சோம கன்றனை யட்டுச் சுருதிகண்
    மாம றைக்குலத் தார்க்கு வழங்கினான்
    நாம நீர்க்கடல் நாகணைப் பள்ளிமேல்
    தாம ரைக்கண் வளருந் தகைமையான்.
    8
    1764 சங்க நேருருப் பஞ்ச சனப்பெயர்
    வெங்க ணானையு மாயிடை வீட்டியே
    துங்க வோசை வலம்புரித் தோற்றமாம்
    அங்க வன்ற னெலும்பை யணிந்தனன்
    9
    1765 கச்சி மாநகர் வைப்பிற் கருந்துழாய்
    மச்ச மர்ச்சித்த மச்சலிங் கத்தினை
    நச்சி யேத்துநர் தாம்பெறு நன்னலம்
    இச்ச கத்தெவர் இற்றென் றளப்பரே
    10

    ஆகத் திருவிருத்தம் 1765
    -------

    54.அபிராமேசப்படலம் (1766-1774)

    1766 கலிவிருத்தம்
    காவு சூழக் கஞலிச் சுருப்பினம்
    மேவு மச்சலிங் கேசம் விளம்பினாம்
    வாவி மல்கு மதன்வட மேற்றிசைத்
    தாவில் சீரபி ராமேச் சரஞ்சொல்வாம்
    1
    1767 வேறு
    மாவலி யெனப்பெயர் மரீஇய தானவர்
    காவல னுலகெலாங் காத்த ளிக்கும்நாள்
    தேவர்கட் கிறைவ னரசு தேய்தலின்
    யாவது செயலெனக் கினியென் றெண்ணுழி
    2
    1768 செந்தளிர் மலரடித் திருவின் நாயகன்
    இந்திரற் கிளையவ னென்னெக் காசிபன்
    மைந்தனாய்க் குறளுருத் தாங்கி மன்னினான்
    முந்தையோர்க் கரசிய லுதவ முன்னியே.

    இந்திரற் கிளையவந் உபேந்திரன். காசிபன் மனைவியருள்
    இந்திரன் தாயாகிய அதிதியின் க்ருப்பத்தில் தங்கிப்
    பிறந்தமையால் இவ்வாறு கூறப்பட்டனன்.
    3
    1769 அலங்கொளிக் காஞ்சியி னபிரா மேச்சர
    விலிங்கமங் கியல்புளி வழிபட் டேத்தினான்
    வலம்பெறச் சிலபகல் வைகிக் கங்கைநீர்
    சிலம்புவே ணியனருள் செய்யப் போந்தனன்
    4
    1770 வெய்யவா ளவுணர்கோன் வேள்விச் சாலையின்
    எய்திமூ வடிநில மிரந்து வேண்டினான்
    கைதவ முணர்ந்தெதிர் தடுத்த காழ்படு
    மையறு வெள்ளியை விழியை மாற்றினன்
    5
    1771 தன்னடி மும்மையி னளவை சாலிடம்
    அந்நிலை யவுணர்கோ னளிப்ப யேற்றனன்
    கொன்னுற வளர்ந்தன னண்ட கூடமேல்
    சென்னிபோய் உரி?றத் திகழ்ந்து தோன்றினான்
    6
    1772 ஈரடிப் படுத்தன னுலகம் யாவுமற்
    றோடிக் கிடம்பெறா னுதவி னான்றனை
    ஆரிடைப் பாதலச் சிறையி னாக்கினான்
    ஏருடைப் புரந்தரற் கிறைமை நல்கினான்
    7
    1773 மறுவறுங் காஞ்சிமா வரைப்பின் நண்ணுபு
    நறுமலர்ச் சடையபி ராம நாயகன்
    பிறைமுடிக் காட்டுவான் வாம னப்பெயர்
    நிறைபுனற் குண்டமொன் றகழ்ந்து நீடியே
    8
    1774 புண்ணியப் பூம்புன லாட்டிப் போர்விடை
    அண்ணலைத் தொழுதுல களந்த பேருருக்
    கண்ணுதல் மகிழ்வுறக் காட்டிப் பூந்துழாய்ப்
    பண்ணவ னாயிடைப் பணியின் மேயினான்
    9
    ஆகத் திருவிருத்தம் 1774

    -------

    55. கண்ணேசப் படலம் (1775-1786)

    1775 கலிவிருத்தம்
    வாம னப்பெயர் மாணி தொழுமபி
    ராம நாத வரைப்பு விளம்பினாம்
    நாம நீர்த்தடங் காஞ்சி நகர்வயின்
    ஏமம் மாண்டகண் ணேச மியம்புவாம்
    1
    1776 கடலு யிர்த்த கடுவிடந் தாக்கிமுன்
    உடலெ லாங்கரி வுற்று வெதும்பலால்
    படவ ராவணைப் பண்ணவன் மாழ்கியவ்
    விடம யின்ற விமலனைப் போற்றுவான்.
    2
    1777 கச்சி யெய்தினன் கண்ணலிங் கத்தினை
    நச்சி யன்பின் நிறீஇநயந் தேத்தினான்
    பச்சை மென்கொடி பாகன் கருணைகூர்ந்
    திச்சை யாது விளம்புதி யென்றலும்
    3
    1778 குமுத வாய்ப்பசுங் கோமளை கூறநீ
    இமிழ்தி ரைக்கடல் வெவ்விட மென்பொருட்
    டமுது செய்தனை யங்கதன் முன்னமத்
    திமிர நஞ்சஞ் சிறிதெனைத் தாக்கலால்
    4
    1779 மேனி முற்றுங் கருகி வெதும்பினேன்
    யானி னிப்படும் வெப்பிது ஆற்றலேன்
    கானி லாய கடுக்கைத் தொடையொடு
    தூநி லாப்பிறை சுற்றிய மோலியாய்
    5
    1780 பங்கம் நீக்கி நலந்தரு பான்மையாற்
    சங்க ரன்சிவன் சம்பு வுருத்திரப்
    புங்க வன்னென நாமங்கள் பூண்டனை
    அங்க ணாவடி யேனுன் னடைக்கலம்
    6
    1781 என்று மாய னிரந்திது வேண்டலும்
    கொன்றை மாலைக் குழக னிரங்கினான்
    மன்ற லந்துணர் வாசத் துளவினோய்
    ஒன்று கேட்டி யுனக்கிது வேண்டுமேல்
    7
    1782 என்றும் யாம்மகி ழேகம்ப லிங்கமுன்
    சென்று நம்முடித் திங்கள் நிலாத்தயல்
    நின்று கச்சி நிலாத்துண்ட மாலென
    ஒன்று நாமம் பெறுதியென் றும்பர்கோன்
    8
    1783 நாம வெந்துயர் தீர்திறம் நல்குபு
    வாம மேகலை யோடும் மறைந்தனன்
    தூம லர்த்துள வோனும் தொழுதெழூஉத்
    தீமை தீரத் திருமுன்னர் வைகினான்
    9
    1784       கவுசிகீச்சரம்
    கரிய வன்பணி கண்ணலிங் கேசனை
    உரிய வன்பின் வழிபடு வோரும்பர்
    மருவி வாழ்குவர் மற்றுங் கவுசிகீச்
    சரமொன் றுள்ளது சங்கரன் தானமே
    10
    1785 அரைய ணங்கு வடிவிற் கழிந்தகா
    ருரிவை கோசத் துதித்த கவுசிகி
    இருமை யன்பின் இருத்தி யருச்சனை
    புரியும் பொற்பது மற்றும் புகலுவாம்
    11
    1786 மாகாளேச்சரம்
    எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    உலகாணித் தடமருங்கு மாகா ளேச மொன்றுளது
          மாகாள னெனும்பேரன்பின்
    விலகாத பரப்பரசு வீடு பேறு விழைந்தேதென்
          திசைக்கயிலை வேணித் திங்கட்
    கலையானைத் தொழுதுறைநாள் ஆணை யாற்றாற்
          காஞ்சியிற்போந் தவ்விலிங்கம் நிறுவிப் போற்றி
    நிலம்நீடு தென்கயிலை மீள நண்ணி நீப்பரிய
          பெருவாழ்வு நிலாய தன்றே
    12

    ஆகத் திருவிருத்தம் 1786
    ------

    56. குமரகோட்டப் படலம் (1787-1831)

    1787 எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    கடப்ப ரும்பிறவி வேலை சுவற்றுங் கண்ண
          லிங்கமொடு கவுசிகலிங்கம்
    மடப்பி டிக்கிட மளித்த பிரான்மா காள
          லிங்கமெனும் மூன்றும் மொழிந்தாம்
    அடற்ப டைச்செறுநர் சேனை யனைத்து
          மழித்து ழக்கிநிண முண்டு திளைத்துக்
    குடர்க்கொ ழுந்தொடை மிலைச்சிய செவ்வேற்
          குரிசில் வாழ்குமர கோட்டம் உரைப்பாம்
    1
    1788 குமாரக் கடவுள் திருவிளையாடல்
    தருக்க மிக்குடைய தாருகன் என்னுந்
          தான வர்க்கிறையை வெய்ய களத்தின்
    முருக்கி யாருயிர் செகுத்து விசும்பின்
          முதல்வனுக் கிறைமை நல்கிய பின்னர்ச்
    செருக்க டந்தவடி வேல்வல னேந்துஞ்
          செம்மல் வெண்கயிலை மால்வரை யெய்தி
    மருக்க டுக்கைமுடி வள்ளலை யோர்பால்
          மலைமடந்தையை வணங்கி மகிழ்ந்து
    2
    1789 அலகி லண்டமு மளித்து வளர்க்கு
          மம்மை யப்பர்தம் மடித்தலம் ஏறி
    நிலவ ரும்புகனி வாயெழில் காட்டி
          நெடிது போது விளையாடி யடுக்கற்
    குலம டப்பிடி கலன்பல பூட்டி விடுப்ப
          மீண்டு கொடிநீள் கடைவாயில்
    வலமி குத்தகய மாமுக னாவி மாட்டு
          முன்னிளவல் வைகுழி யுற்றான்
    3
    1790 ஊங்கு வன்மடி மிசைக்கொடு பல்கால்
          உச்சிமோந்துகவுள் முத்தம்மு முண்டு
    வீங்கு மன்பொடு தழீஇக்களி கூர்ந்து விடைய
          ளிப்பமுக மாறுடை யெங்கோன்
    யாங்கும் வைகுகண நாத ரிடந்தோ
          றெய்தி யாடலுறு வானது காலை
    ஆங்கணான் முகவ னும்பர் குழாத்தோ
          டம்மை யப்பரை வணங்க அணைந்தான்
    4
    1791 அங்கண் நின்றுவிளை யாட்டயர் செவ்வேல்
          அண்ண லைச்சிறிதும் நோக்கலன் நண்ணி
    மங்கை பாகனை வணங்கி வழுத்தி
          வாழ்வு பெற்றுவிடை கொண்டு தனாது
    பொங்கு சீருலக மெய்திய மீண்டான் மீளு
          மப்பொழுது மாவயி னாடுந்
    துங்க வேலிறையை நோக்கலன் ஏகத் தோகை
          மஞ்ஞையுடை யானது கண்டான்
    5
    1792       பிரமன் சிறைப்படல்
    செழும லர்க்கமலம் வைகிய செம்மல்
          இகழ்ந்து செல்லுமறி வின்மை குறித்து
    விழிசி வந்துகுறு மூர லரும்பி வருக
          வீண்டென விளித்தலு மன்னோன்
    கழிசெ ருக்கினன் வணங்கி யடங்கிக்
          கைகள் கூப்பிநணு கிப்புடை யுற்றான்
    கொழிம றைப்பனுவ லான்முகம் நோக்கிக்
          குன்றெ றிந்தசுடர் வேலிறை விள்ளும்
    6
    1793 யாவன் நீயுறைவ தெவ்விடம் யாது
          செய்தொழிலு மெக்கலை வல்லாய்
    நீவி ளம்புகென யான்பிர மன்சீர் நிறையருட்
          கருணை நுந்தை யெனக்கன்
    றேவ றுங்கலைகள் முற்ரும் விளங்க
          வோது வித்துலகம் நன்கு படைப்பான்
    ஏவ வைகுறுவல் சத்திய லோகத் தென்று
          பன்முறை வணங்கி யுரைத்து
    7
    1794 இமவ ரைத்தலைவி யோடு பிரானை யேத்த
          வேண்டியிவ ணெய்தின னன்னோர்
    தமத ருட்கருணை பெற்றனன் மீண்டேன்
          தாழ்வி லாதுசெய் தவத்திற னாலுன்
    கமல நோக்கருளு மின்று கிடைத்தேன்
          காதல் உன்னடி யேனினி யென்னூர்க்
    கமல நாயக செல்கின்றன னென்றா
          னறுமுகக்கடவு ளன்னது கேளா
    8
    1795 நன்று சொற்றனை யுணர்ச்சியின் மிக்காய்
          ஞாலம் முற்றுதவும் நான்முகன் நீகொல்
    குன்ற வில்லியரு ளாற்கலை யெல்லாங்
          கோதறத் தெளித லுற்றனை யன்றே
    ஒன்று மக்கலைகள் முன்னுற யென்னே
          யோது மக்கர மதன்பொருள் யாதோ
    இன்றெ னக்கிது விளம்புதி யென்றா
          னேட விழ்க்கும்மல ராளி யிறைஞ்சி
    9
    1796 ஐய நுந்தையரு ளின்றி யெமக்கோ ரறிவு
          முள்ளதுகொ லாதியி லோது
    மெய்யெ ழுத்தையறி கின்றில னங்கண்
          விளம்பும் முப்பொருளு மியானறி கில்லேன்
    உய்யு மாகருணை வைத்தெனை யாளென்
          றுரைத்தி ரந்துகடி தேக முயன்றான்
    பொய்க டந்தவனு மாதி யெழுத்தின் பொருளு
          ரைத்தலது போகலை யென்று
    10
    1797 சென்னி யைந்துடைய வெந்தை பிரான்றன்
          திருவ டிக்கண்விரை யாக்கலி வைப்பேன்
    பன்னு கிற்றிகடி தென்றலு மன்னோன்
          பகவ னீன்றதனி மாமக னீயே
    என்ன பல்கலையு முன்னிடை வைகு
          மெம்பிரா னடியி லாணை தரேல்யான்
    உன்ன ரும்பொருளி னுண்மை யெனக்குத் தெரிந்த
          வண்ணமுரை செய்குவ லென்று
    11
    1798 விரையாக்கலி - சிவன் எயரால் கூறப்படும் ஆணை
    அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    பல்கலைக்கும் முதலாகப் புகன்றிடுவ
          தோமென்னும் பதமா மந்தச்
    சொல்விளைக்கும் பொருள யன்மால்
          ஈசனெனும் மூவரெனச் சொல்வர் மேலோர்
    மல்குமறை யுட்பொருளாய்ச் சுடரொளியாய்
          யோகுடையார் மனத்தே தோன்றும்
    அல்கியசீர்ப் பிரணவத்தை யுணர்ந்தவரே
          வீட்டின்பம் அடைய வல்லார்
    12
    1799 முன்னெழுத்து மதன்பொருளு மிவ்வளவே
          யானறிந்தேன் முதல்வா போற்றி
    என்னையினி விடுத்தருளாய் எனலோடுங்
          கணங்கள் முகநோக்கி யின்னோன்
    புன்னிலையன் சிறிதேனு முணர்ந்திலான்
          தருக்குமிகப் பூண்டான் கண்டீர்
    துன்னரிய சிறையின்கண் மற்றிவனைப்
          புகுத்துமென வெகுண்டு சொல்லி
    13
    1800 தன்வரைப்பி லலரோனைச் சிறைப்படுப்பித்
          துலகமெலாந் தானே தோற்றும்
    இந்நிலைமைத் தலைநின்றான் அறுமுகவேளுட
          னெய்து முனிவர் தேவர்
    அன்னவனைக் கொடுபோதப் பின்சென்றார்
          அவ்வரைப்பி னளவு மப்பால்
    கன்னவில்தோள் கணநாதர் பிடித்துந்த
          மீண்டழுங்கிக் கயிலை புக்கார்
    14
    1801 பெருமான் பிரமனைச் சிறை விடுத்தல்
    புக்கிறைவன் றனைவணங்கி நிகழ்ந்தவெலாம்
          விண்ணப்பஞ் செய்யப் பூந்தேன்
    நக்கநறுந் தொடையிதழிக் கடவுளவர்
          தமைநோக்கி நவில்வான் என்னே
    அக்கமலன் விளம்பியவா நம்மையும்
          நம்புதல் வனையு மன்றே மான
    மிக்கபுகழ்ச் சுருதி யெலாம் பிரணவத்தின்
    பொருளாக விளம்பு மாறே.
    15
    1802 “எக்கலைக்கும் பூதங்க ளெவற்றினுக்கும்
          பிரமனுக்கு மீச னென்னத்
    தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவவோ”
          மெனவேதம் சாற்று மல்லால்
    முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணிய
          னோமெனவும் முக்காற் கூறும்
    இக்கருத்தை யறியானை எவ்வாறு
          விடுவிப்ப தியம்பு மின்னோ
    16
    1803 அருள்வலியா லாங்கவனை விடுவித்து மஞ்சேன்மி னென்று கூறித்
    திருநந்தி நாயகனை யெதிர்நோக்கி அறுமுகன்பாற் சென்று முற்றுந்
    தருகின்றான் றனைவிடுமோ வெகுளேலென் றெம்முரையாற் சாற்றித் தேன்பாய்
    மருவொன்று மலரோனை விடுவித்து நம்மாட்டுக் கொணர்தி யென்றார்.
    17
    1804 வேத்திரத்தின் படையாளி விடைகொண்டு வேற்படையோ னுலகம் நண்ணி
    மாத்தடிந்த பெருமானைத் தொழுதிறைஞ்சி யெங்கோவே மழுவா ளெம்மான்
    பூத்தவிசிற் புத்தேளை நீவிடுமா றருள்செய்தா னென்று போற்றி
    ஏத்தும்வழி யறுமுகவே ளிதழதுக்கி வெகுளுதலும் வெருவி மீண்டான்
    18
    1805 பிஞ்ஞகநின் திருவாணை விண்ணப்பஞ் செயச்சிறிதும் பேணா னாகி
    மஞ்ஞையான் சினவுதலின் வெரீஇப்பெயர்ந்தே னெனநந்தி வள்ளல் கூற
    மொய்ஞ்ஞிமிறு முரல்பூந்தார்க் கடவுளரும் முனிவரருங் கேட்டுத் தம்முள்
    கைஞ்ஞெரித்தார் வெருக்கொண்டா ரிறையவனே காவாயென் றடியில் வீழ்ந்தார்
    19
    1806 சயிலாதி வாய்மொழியும் சுரர்முனிவர் மனத்துயரும் தரைசால் வெள்ளிக்
    கயிலாயத் தெம்பிரான் திருவுளத்திற் கொண்டருளிக் கருணை கூர்ந்து
    மயிலாலும் மலைமகளோ டெழுந்தங்கண் மகவிருப்பா லெய்த நோக்கி
    அயிலாளுந் திருக்கரத்தான் விரைந்தெதிர்சென் றடிவணங்கிப் போற்றி நின்றான்
    20
    1807 அனையானை யிருவர்களும் மடித்தலமீ திருத்திமகிழ்ந் தன்புகூரக்
    கனிவாயின் முத்தங்கொண் டுச்சிமோந் தகங்கனியத் தழீஇய பின்னர்
    எனையாளுஞ் சிவபெருமான் குறுமூர லெழில்காட்டி மேனி தைவந்
    துனையோரா வேதியனைச் சிறைவிடுத்தி மைந்தாவென் றுரைத்துப் பின்னும்
    21
    1808       முருகக் கடவுள் காஞ்சியை அடைதல்
    நம்மாணை கடந்தனையா லன்னதற்குக் கழுவாய்நீ நயத்தல் வேண்டும்
    வெம்மாய மணுகரிய திருக்காஞ்சி நகர்வரைப்பின் மேவி யன்பின்
    அம்மாடே சேனாப தீச்சரமென் றோரிலிங்க மருச்சித் தேத்திக்
    கைமாணத் தவம்புரிதி யென்றருளக் கேட்டெழுந்தான் கடப்பந் தாரான்
    22
    1809 திசைமுகனைக் கணங்களாற் சிவபெருமான் திருமுன்னர்ச் செலுத்தி யுள்ளப்
    பசையினிரு முதுகுரவ ரடிவணங்கி விடைகொண்டு பழனக் காஞ்சி
    வசைகடந்த நகரெய்தி உலகாணித் தடமேல்சார் மாகா ளப்பால்
    இசைவிளங்கு தேவசே னாபதீச் சரவிலிங்க மிருத்திப் போற்றி
    23
    1810 புள்ளிமான் தோலுடுக்கை முஞ்சிநா ணரைப்பொலிய வக்கமாலை
    தெள்ளுநீர்க் குண்டிகையுங் கரத்தொளிரத் திருக்குமர கோட்ட மென்னும்
    உள்ளியோர் பிறப்பறுக்கு மாச்சிரமத் தினிதிருந்தா னுறுவர் போற்ற
    வள்ளியா ரிணைக்களப மணிக்கலச முலைதிளைக்கும் வாகைத் தோளான்
    24
    1811 குருமணிகள் வெயிலெறிப்பக் குயிற்றுநீள் மதிற்குமர கோட்ட மோர்கால்
    இருவிழியிற் காண்டல்பெறின் கடையோரு மெழுபிறப்பின் மறையோ ராவர்
    திருமறையோர் முதலானோர் தொழுதிறைஞ்சப் பெறுகிற்பின் தேவர் தேறாப்
    பொருணிலைமை தெளிந்தினபப் பெருவீட்டிற் பரபோகம் திளைத்து வாழ்வார்.
    25
    1812 கறங்கருவிப் பொலங்குடுமி வரைகிழித்த நெட்டிலைவேற் கடவுள் போற்றப்
    பிறங்கியவித் தேவசே னாபதீச் சரமுதலைப் பெட்பி னேத்தி
    மறங்குலவுஞ் சுடராழி வலனேந்து மாலுருகு முள்ளத் தானென்
    றறங்கரைவா ரெடுத்துரைக்கு மொருதிருப்பேர் பெற்றானம் முறையுஞ் சொல்வாம்
    26
    1813 மாப்பேரூழி
    கலிநிலைத்துறை
    முள்ள ரைச்செழுந் தாண்மலர் முளரிவீற் றிருக்கும்
    வள்ளல் கற்பமொன் றிறுதலும் யாவையும் மலங்கப்
    பொள்ளெ னப்பரந் துலகெலாம் விழுங்கிய புணரி
    வெள்ள நீர்மிசை மிதந்தனன் மார்க்கண்டி மேலோன்
    27
    1814 தனிய னாகிவெஞ் சலதியி னுழிதரும் தகைசால்
    புனித மாதவ னாயிடைப் பொறியராத் தவிசின்
    இனிது கண்வளர் மாயனைக் கண்டுசென் றிறைஞ்சி
    நனிம கிழ்ச்சிமீக் கிளர்ந்தெழு மனத்தொடு நவில்வான்
    28
    1815 நகைம லர்த்துழாய் நாயக ஞாலமற் றெவையும்
    பகல்செய் வெங்கதிர்ச் சண்டமாப் பரிதிநின் றெரிப்பத்
    துகள்ப டுஞ்செயல் கண்டயா னத்துணைப் பொழுதின்
    இகழ ருந்திற லறிவுபோ யெய்தினன் மயக்கம்
    29
    1816 ஏய்ந்த மையல்தீர்ந் திதுபொழு துணர்ச்சிவந் தெழுந்தேன்
    காந்து வெம்புனற் கடுந்திரைப் பரப்பிடை மிதந்து
    நீந்தி நீந்தியென் நெடியகால் கரங்களும் மெலிந்தே
    ஓய்ந்த நல்வினை யிருந்தவா றுனையிவண் கண்டேன்
    30
    1817 நிலம டக்கொடி வனமுலை திளைக்குநீள் மார்ப
    உலக மெங்கணும் கருகிருள் மூடிய துரவோய்
    இலகு பேரொளி யிருசுடர் யாங்ஙனம் போய
    குலவு மேனைய கோளொடு நாள்களெங் கிறந்த
    31
    1818 சகமி சைப்பயில் பொருளெலா மெவ்வுழிச் சார்ந்த
    திகழ நீஎனக் கிவையெலாந் தெரித்தியென் றிரப்ப
    நிகழு மாதவன் மாதவன் றன்னைநேர் நோக்கி
    அகலி டத்துள பொருளெலா மென்னகட் டுளவால்
    32
    1819 மாதவன், முன்னது திருமால்; பின்னது, மார்க்கண்டேய முனிவர்.
    மார்க்கண்டேயர் மாயனை முனிதல்
    புகுந்து நோக்குதி யென்றலும் முனிவரன் புகல்வான்
    முகுந்த முன்னொரு கற்பத்திம் மொழியினா லன்றே
    மிகுந்த வஞ்சனைப் படுத்தனை விளைமதுப் பிலிற்றி
    நகுந்த டம்பொகுட் டம்புய வாழ்க்கைநான் முகனை

    முகுந்த -விளி. முன்னொரு கற்பத்தில் நான்முகனும் திருமாலை
    இவ்வாறு கேட்டு அவர் கூறியவார்த்தைகளை நம்பி, அவர் வயிற்றினுட்
    புகுந்து காணாது வருந்திப் பின் வெளிவருமாறின்றி நாபியின்
    வழியே வெளிப்போந்தனன் என்பது வரலாறு.
    33
    1820 முனைக டந்தவேல் மணிமுடி யம்பரீ டன்றன்
    மனையில் நாரதப் பருப்பத முனிவரை வஞ்சித்
    தனைய மன்னவன் புதல்வியைக் கவர்ந்துகொண் டகன்றாய்
    இனைய மாவலி தனக்குமுன் வஞ்சனை இழைத்தாய்

    அம்பரீடன் என்னும் அரசன் மகளை நாரதர் பருப்பதர்
    என்னும் இருமுனிவர்கள் மணக்க விரும்பி, இருவரும் ஒருவரை
    யொருவ ரறியாமல் திருமாலிடம் சென்று, நாரதர் பருப்பதர்க்குக்
    குரங்கு ம்கமும்,பருப்பதர் நாரதருக்குக் கிழமுகமும் உண்டாக
    வேண்டுமென்று கேட்க , இருவருக்கும் அவ்வாறே செய்து,
    அரசன் சபையில் இருவரும் அவ்வாறிருந்த காலையில், மாலை
    கொண்டு வந்த அரசன் மகள் அவ்விருவருக்கும் மாலையிட
    நாணியபோது, திருமால் தோன்றி, அவள் மாலையிடப் பெற்றனர்
    என்பது வரலாறு. திருமால் மாபலியை வஞ்சித்தமையை அபிராமேசப்
    படலத்திற் காண்க.
    34
    1821 இன்ன வாறுனை நம்புநர் அடியவ ரிடத்தும்
    துன்னு மாயமே செய்வதுன் தொழிலெனக் கண்டேன்
    நின்னை யஞ்சுகேன் நெறிக்கொடு செல்வனென் றியம்பி
    அன்ன நீரினைக் கரங்கொடு நீந்தியங்க கன்றான்
    35
    1822 மார்க்கண்டேயர் காஞ்சியை அடைதல்
    அறுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்
    செல்லு மெல்லை நீர்மிசைத் தோன்றும் வேத மாஞ்சினைப்
    பல்ல வங்கள் கண்டவை பற்றி யுள்ளி ழிந்தனன்
    ஒல்லை யங்கண் நோக்கினா னொளிப்பி ழம்பின் நீடிய
    மல்ல லம்பொ னிஞ்சிசூழ் மாடக் காஞ்சி மாநகர்
    36
    1823       சினை - கிளை. பல்லவம் -தளிர்
    எற்று தெண்டி ரைப்புன லிஞ்சி யின்வ ளைப்பவெண்
    புற்பு தத்தி னுள்வெளிப் பொற்பெ னத்தி கழ்ந்துநீள்
    ஒற்றை மாவி னாரரு ளொளிது ளும்ப மன்னுமூர்
    அற்பு தத்தை நோக்குதோ றற்பு தத்த னாயினான்
    37
    1824 அங்க ணெய்ப்பு நீத்தபி னண்ணல் கம்ப வாணரை
    உங்க ணெய்தி அர்ச்சனை உஞற்றி யவ்வி ராவெலாந்
    துங்க மாவின் நீழல்வாழ் சோதி முன்னர் வைகினான்
    சங்க மாழி யேந்தியோன் றானுந் தொடர நண்ணினான்
    38
    1825 திருமால் வரம் பெறல்
    நண்ணும் நெறியிற் காஞ்சிமா நகர மெய்தி யந்நகர்
    வண்ண முற்று மற்புதம் மருவ நோக்கி மாநிழல்
    அண்ண லாரை யேத்தியம் முனிவன் சொன்ன யாவையும்
    எண்ணி யெண்ணி நெஞ்சுளைந் தென்நி னைந்த வாறெனா
    39
    1826 சேர்ந்த வர்க்கு வஞ்சமே நாள்தொ றுஞ்செய் கின்றனேன்
    வார்ந்த கூந்த லம்பிகை மாயை யின்ம யங்கினேன்
    நேர்ந்த மாயம் நீக்குமா நீள்வ ரைப்பி ராட்டிதாள்
    சார்ந்து போற்று வேனெனத் தனிப்பி லத்தை நண்ணினான்
    அம்பிகை மாயை - இறைவியால் தொழிற்படுத்தப்படும்
    மாயை பிலம் - காமகோடிபீடம்
    40
    1827 ஆயி டைப்பி ராட்டியை யருச்சித் தேத்தி யருளினான்
    மாயம் நீங்கி மெய்யுணர் வெய்திப் பஞ்ச வாவிநீர்
    ஏய மூழ்கித் தேவசே னாப தீசத் தேகியந்
    நாய னாரை விதியுளி நயந்து பூசை யாற்றினான்
    41
    1828 கருணை கூர்ந்து நம்பனார் காட்சிதந் தளித்தலும்
    பரசி யேத்தி நின்னடிப் பத்தி மாறி லாவரம்
    அருள வேண்டும் மெய்த்தவ ரடியர் மாட்டு வஞ்சனை
    ஒருக ணத்து மெண்ணிடா வுளமெ னக்கு வேண்டுமால்
    42
    1829 ஈண்டு நின்பு தல்வனோ டெந்தை திருமுன் வைகவும்
    வேண்டு மென்றி ரந்துவிண் ணப்பஞ் செய்ய வெண்பிறை
    நீண்ட செஞ்ச டைப்பொதி நிரும லப்ப ரம்பொருள்
    ஆண்ட கைப்பி ரான்மகிழ்ந் தன்ன வாக யென்றுபின்
    43
    1830 என்று மன்பி னேகிநீ யுருகு முள்ளக் கோயிலான்
    என்று நாம மெய்துகென் றருளி யிறைவன் நீங்கினான்
    குன்றெ டுத்து முந்துகோ நிரைகள் காத்த குரிசிலும்
    மன்றல் வெட்சி மாலையா னருளி னங்கண் வைகினான்
    43
    1831 கூறு மிணைய மேன்மைசால் குமர கோட்ட வைப்பினிற்
    பாறு நச்சு வேலினான் பாத மங்கி யநிலநாள்
    வேறு நாற்றி னங்களில் விரும்பிச் சென்றி றைஞ்சினோர்
    பேறு முற்றும் யாவரே பேச வல்ல நீர்மையார்
    45

    ஆகத் திருவிருத்தம் - 1831
    -------------

    57. மாசாத்தன் தளிப் படலம் (1832-1868)

    1832 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    நறைகொப் புளிக்கும் நறும்பொகுட்டு நளின வாழ்க்கைப் புத்தேளைச்
    சிறையிற் புகுத்தும் பெருமானார் குமர கோட்டச் சிறப்புரைத்தாம்
    நிறையப் பூத்த மலர்ப்பொதும்பர் நீடும தற்குத் தென்திசைக்கண்
    முறையின் திகழும் மாசாத்த முதல்வன் தானம் எடுத்துரைப்பாம்
    1
    1833       சுராசுரர் கலகம்
    வைவா ளெயிற்றுத் தானவரும் வானவரும் மந்தரத்திற்
    பைவாய்த் தாம்பு பிணித்தீர்த்துக் கடைந்த ஞான்று பரவையெழும்
    வெவ்வாய் நஞ்சம் மிடற்றடக்கி வெருவா தளித்த பெருங்கருணை
    ஐவாயப் பணிப்பூண் பெருமா னாரருளான் மீளக் கடைந்தவழி
    2
    1834 சேட்டை யணங்கு திருமணியான் தெய்வமகளிர் மருத்துவர்நாற்
    கோட்டு மதமா முதல்பலவும் குரைநீர்க் கடலுள் தோன்றியபின்
    வாட்டு மிறவிப் பெரும்பிணிக்கு மருந்தா வமிழ்தந் தோன்றுதலும்
    வேட்ட விண்ணோர் அவுணர்களும் தம்முட் கலாங்கள் விளைத்தனரால்

    பாற்கடல் கடைந்த போது தோன்றியவை: சேட்டையணங்கு - மூதேவி;
    திரு -இலக்குமி; மணி- சிந்தாமணி; ஆன் - காமதேனு;
    தெய்வமகளிர்- அரம்பையர்கள்; மருத்துவர்- தேவவைத்தியர்;
    நாற்கோட்டு மதமா- ஐராவதமென்னும் யானை.இன்னும் கவுத்துவம் முதலியன.
    3
    1835 திருமால் மோகினி வடிவாதல்
    ஆற்றல் மிகையாற் சுதைக்குடத்தை யடல்வா ளவுணர் கைப்பற்றத்
    தோற்று மறுகிப் புத்தேளிர் அலமந் தேங்குந் துயர்நோக்கிக்
    காற்றும் நறுந்துளவக் கமஞ்சூற் கொண்ட லிணைவிழிக்குக்
    கூற்றம் பதைக்கும் மோகினியாம் வடிவுமாங்குக் கொண்டனனால்

    சுதை -அமுதம். காற்றும் -உமிழ்கின்ற. கமஞ்சூல் கொண்டல்- நிறைந்த
    சூல் கொண்ட கார்மேகம் என்பது ஆகுபெயராய்த் திருமாலைக் குறித்தது.
    4
    1836 கலிவிருத்தம்
    இரண்டறப் பெண்மையு மெழிலும் வஞ்சமும்
    திரண்டுருக் கொண்டெனத் திகழ்ந்து தோன்றிமால்
    முரண்தகு மவுணர்கைக் கொண்ட மூரிநீர்
    வரண்டுமா மணிக்கட லமிழ்தம் வாங்கினான்
    5
    1837 வாங்கிநின் றசுரருஞ் சுரரும் வல்லையே
    ஆங்கநீர் நிரைநிரை யாக வைகுமின்
    ஈங்குநல் லமிழ்தமெல் லீர்க்கும் வேட்டவா
    பாங்குறத் தனித்தனி பகுந்து நல்குகேன்
    6
    1838 வேல்விழி மாதர்யான் வீழ்ந்து ளார்பெறச்
    சாலநல் குவலெனச் சலதிச் சேக்கைவாழ்
    வரல்வளைக் குடங்கையான் மகிழக் கூறலும்
    கோல்வளைத் திதிமைந்தர் குறித்து நோக்கினார்.
    7
    1839 மோகினியின் முற்றுருவப் புனைவு
    எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    கலிதிரை முகந்த சூல்முகில் விளர்ப்பக்
          கமைகுழன் றிருண்டு நெய்த்தொழுகிப்
    பொலிவுற மகரம் வலம்புரி திருத்தி
          எ•கிடை தொட்டபூங் குழலைக்
    குலிகநீ ரளவி மழவிளம் பரிதிக்
          குரூஉச்சுட ருரிஞ்சிய காட்சி
    இலகொளித் தேய்வை யரும்பெறற்
          றிலக மிட்டகீற் றிளம்பிறை நுதலை
    8
    1840 மாற்றரு மதுகை ஐங்கணைக் கிழவன்
          வாங்கிய நறுஞ்சுவைத் தேறல்
    காற்றுவெஞ் சிலைக்குச் சிலைத்தொழில்
          பயிற்றுங் கட்டெழிற் புருவமென் கொடியைச்
    சீற்றவல் விடமு மமிழ்தமும் விரவிச்
          சிதரரி பரந்துமை தோய்ந்து
    கூற்றர சிருக்கு மிணைவிழி களவு
          கொள்ளநோக் கிடுஞ்சிறு நோக்கை
    9
    1841 செயிரறுந் தரள வெண்மணி நாலத்
          திருந்தெழில் படைத்தெதிர் கண்டோர்
    உயிரினைப் பருகிக் குமிழெனத்
          திகழ்ந்த ஒள்ளொளி நாசியின் வனப்பை
    வெயில்விடு மணிப்பூண் காளையர்
          மனங்க ளாடுபொன் னூசலின் விளங்கி
    மயிரெறி கருவி முதலெனக் கவின்று
          மணிக்குழை வயங்கிரு செவியை
    10
    1842 குயிலினஞ் சமழ்ப்பக் குழலிசை பழகும்
          சின்மொழிக் குருநகை மொக்குள்
    கயிரவம் மலர்ந்த செய்யவாய் அமிழ்தம்
          ஊற்றெழுங் கனியிதழ் ஒளியைப்
    பயிலிருள் ஒதுக்கிப் பால்நிலாக் கான்று
          படரொளி பரப்புவெண் மதியம்
    முயலறுத் தெழுந்தா லனையபே ரழகின்
          முண்டக வாண்முக மலரை
    11
    1843 மடலவிழ் பாளைப் பசியபூங் கமுகோ
          வயிறுநொந் தலறிமுத் துயிர்க்கும்
    குடவளைப் பொலிவோ யெனமரு ளுறுப்பக்கக்
          கவின்குடி இருந்தகந் தரத்தைக்
    கடிகமழ் கொழுஞ்சா றொழுகமென் கரும்பைக்
          கண்ணறத் தகர்த்திளம் பணையைத்
    தடவரைப் புகுத்தித் தொடையலை வாட்டித்
          தகையமை அணிகெழு புயத்தை
    12
    1844 மடிதிரைப் பரவை யமுழ்துற ழிசைய
          மகரயாழ் புறங்கொடுத் திரியத்
    தொடிகளும் வயிரக் கடகமும் செறித்துத்
          தூநலம் படைத்த கூர்ப்பரத்தை
    நொடிபயில் கிள்ளைப் பவளவாய் கடுக்கும்
          நுதியுடைக் கூருகிர் வனப்பின்
    படியறு விரல்வாய்ந் தொள்ளொளி துளும்பும்
          பனிமலர்க் காந்தளங் கரத்தை
    13
    1845 சுணங்குடை வனப்பு மாரமு மெழுதுந் தொய்யிலுஞ் சந்தனக் களியும்
    இணங்கியண் ணாந்து பாதிகாண் டகமேற் படாம்பொதி யிளமுலைப் பொருப்பை
    அணங்குறுத் திளையோர் மதியினைப் படுக்கும் படுகுழி யனையவுந் தியின்மேல்
    நுணங்குவண் டொழுக்கிற் கருமயிர் ஒழுகி நோக்கமை சிறுவயிற் றழகை
    14
    1846 கொடியென நுடங்கி வேளெனக் கரந்து குவிமுலைக் கிடைந்து செந்தளிர்க்கைப்
    பிடியினுள் அடங்கித் துடியெனச் சுருங்கி மின்னெனப் பிறங்குநுண் நுசுப்பைப்
    படிமையர் சீலக் குறும்பெலா மடக்கி நடுவுயர்ந் தகன்றெழில் படைத்து
    வடிமலர்ப் பகழி வேந்தர சிருப்ப வயங்கிய அல்குலின் பரப்பை
    15
    1847 நெட்டிலைக் கதலித் தண்டெனச் சேர்ந்து செறிந்தநீல் விலைவரம் பிகந்த
    வட்டொளி யரத்தம் நுழையிழைக் கலிங்க மணிகெழு வளம்பயில் குறங்கைக்
    கட்டெழில் மதவேள் ஊதுகா களமும் கணைபொதி அவநா ழிகையும்
    பெட்டவர் மருள வீற்றிருந் தனைய பிதிரொளிப் பொற்கணைக் காலை
    16
    1848 கறுத்தவான் முகனை வெரீஇப்பதம் பணியுங் கலைமதி வெள்ளுகிர் மதநூல்
    பொறித்தபுத் தகமாம் புறவடி வன்ன மென்னடைப் பூந்தளி ரடியைக்
    குறித்துரை உவமைக் கிடம்பெறா தள்ளிக் கொளத்தகும் பேரழ கமைந்த
    மறுத்தபூ மேனி யிளநலங் கனிந்து மணிநிறம் வயங்குகோ மளத்தை
    மாயோனமுதளித்தல் - சாத்தனாரவதாரம்
    17
    1849 கலிவிருத்தம்
    காண்டலு மாரவேள் கணைக்கி லக்கமாய்
    மாண்டன ரெனவறி வழிந்து மையல்நோய்
    பூண்டனர் தானவர் மடந்தை போல்வரும்
    ஆண்டகை மாயையா லவரை வஞ்சித்து
    18
    1850 கடவுளர்க் கமுதெலாங் கடுக வீந்தவர்
    வடிவெடுத் துடனுற வதியி ராகுவைத்
    தடநெடு மூழையா னரிந்து தானுமக்
    கடலமிழ் தருந்துபு களிப்பி னீடினான்
    19
    1851 வேறுகொள் ளவுணரை ஞாட்பின் வென்றுபோய்
    மாறடு மாழியா னிருக்கை மன்னினான்
    ஏறணி நெடுங்கொடி யெரியின் நீள்சடை
    ஆறணி யடிகளிவ் வனைத்துங் கேட்டரோ
    20
    1852 தன்னடி வழிபடச் சார்ந்த மாயனை
    அன்னவை யென்னெனக் கடாவி யவ்வுரு
    என்னெதிர் காட்டுகென் றியம்பச் சார்ங்கனும்
    மன்னிய மலைமகள் வதனம் நோக்கியே
    21
    1853 மையல்செய் மோகினி வடிவங் காட்டுபு
    வெய்தென நடந்தனன் வேளை வென்றகோன்
    ஒய்யென யெழுந்துசென் றுற்றுப் புல்லவுங்
    கையகன் றோடினான் கரிய மேனியான்
    22
    1854 மறுவலு மெம்பிரான் விந்து பற்றியாங்
    கிறுகுறத் தழீஇயின னினைய காலையின்
    உறுபுகழ்ச் சாத்தனூங் குவர்க்குத் தோன்றினான்
    நிறுமுறை யுலகெலாம் நிறுத்துங் கோலினான்
    23
    1855 சாத்தன் சிவனருள் பெற்று வதிதல்
    ஆயபின் கேசவன் வெள்கி யண்டர்கோன்
    சேயதாள் தொழுதுதன் னுலகஞ் சேர்ந்தனன்
    பாய்புகழ்ச் சாத்தனும் பகவன் தாளிணை
    வாயினால் துதிசெய்து வணங்கி வேண்டுவான்
    24
    1856 அரிலறச் செய்பணி யருளி நின்னருட்
    குரியபே ரிறைமையு முதவ வேண்டுமால்
    கருவிடம் பருகிய களைக ணெந்தைநின்
    திருவடிச் சார்புடைச் சிறிய னேற்கென
    25
    1857 மறைமிடற் றெம்பிரா னியம்பும் மைந்தகேள்
    இறைமைநம் மருளினா லெய்தற் பாலதாம்
    அறைதரும் அருளுமெய் யன்பி னாவதப்
    பொறைகெழு பத்தியும் பூசைப் பேறரோ
    26
    1858 பூசையா வதுசிவ லிங்க பூசையத்
    தேசமை யருச்சனைக் கிடனுஞ் சீர்த்திசால்
    ஆசறு தலங்களா மங்க வற்றினும்
    காசிமற் றதனினுங் காஞ்சி மாநகர்
    27
    1859 கண்ணகன் புரிசைசூழ் காஞ்சி வைப்பிடைப்
    புண்ணியச் சிவக்குறி நிறுவிப் பூசித்து
    விண்ணவர் தவமுனி வேந்தர் யாவரும்
    எண்ணரும் பேறுபெற் றின்பம் நீடினார்
    28
    1860 ஆயிடை நீயெமை யருச்சித் தேத்துதி
    மாயிருந் தலைமைநாம் வழங்கு கேமெனச்
    சேயிழை பங்கினா னருளிச் செய்தனன்
    காயிலைப் படையவன் காஞ்சி நண்ணினான்
    29
    1861 உருகெழு பனிவரைப் பிராட்டி ஒண்மலர்த்
    திருவடிச் சுவடுதோய் செல்வக் காஞ்சியின்
    மருவிவேற் கடவுளை வழுத்தி யாங்கவன்
    அருளினாற் சிவக்குறி நிறுவி யர்ச்சித்தான்
    30
    1862 மறைமுதல் விடைமிசைத் தோன்றி மற்றவற்
    கறைகழ லிமையவ ரருகு சூழ்தர
    முறைகெழு பூதங்கள் முழுதுங் காப்புறும்
    இறைமையின் மணிமுடி யினிது சூட்டினான்
    31
    1863 பல்கரி வீரர்தேர் பரிகள் தம்முடன்
    நல்கிய தலைமைபெற் றனைய சாத்தனும்
    ஒல்கிடை மலைமகள் உவகை மீக்கொள
    மல்குசீர்ப் பிலத்தயல் மகிழ்ந்து வைகினான்
    32
    1863 கடாநிரை ஏழுயர் கரிகள் மேற்கொடு
    நடாயுளங் களித்திறு மாந்து நாள்தொறும்
    வடாதுபாற் செண்டணை வெளியின் மாறடும்
    அடாவலி படைத்தவ னாடல் பேணுமால்
    33
    1865 வலம்படர் சிறப்பின்மா சாத்த னேத்திய
    நலம்படர் கருணைமா சாத்த நாதனைப்
    புலம்படர் சிந்தயாற் போற்றப் பெற்றவர்
    இலம்படா ரிருமையு மின்ப மெய்துவார்
    34
    1866 மங்களேச்சரம்
    எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    மற்றதன் வடபால் மலைமகள் இகுளை மங்களை மண்டபம் இழைத்து
    வெற்றிமண் டபத்தின்பிறகுற மங்க ளேசனை விதியுளி நிறுவி
    அற்றமில் சிறப்பின் மங்கள தீர்த்த மகழ்ந்துநீ ராட்டுபு தொழுதாள்
    பற்றுமங் களநா ளத்தடம் படிந்து பணிபவ ரிருமையும் பெறுவார்
    35
    1867 இராமநாதேச்சரம்
    உரைத்ததன் குடபால் தசரதன் மதலை யரக்கனை யடுபழி யொழிப்பான்
    அருட்குறி யிருத்திச் சேதுவில் தொழுதங் கண்ணலா ரேவலிற் காஞ்சி
    வரைப்பினுற் றிராம நாதனை நிறுவி வழிபடூஉக் கொடுவினை மாற்றித்
    திரைபுன லயோத்திப் புகுந்தர சளித்தான் சேதுவில் சிறந்ததத் தலமே
    36
    1868 மாதவீச்சரம்
    இனையதன் வடபால் மாதலி என்பா னிராகவ னிலங்கையர் கோமான்
    றனையடு ஞான்று வாசவன் விடுப்பத் தயங்குதேர் செலுத்துவா னாகி
    நனைமலர் வாகை முடித்தபி னிராமன் றன்னோடு காஞ்சியை நண்ணிப்
    புனைபுகழ் மாத லீச்சரந் தொழுது புரந்தரற் கினியவ னானான்
    37

    ஆகத் திருவிருத்தம் 1868
    ---------

    58. அனந்த பற்பநாபேசப் படலம் (1869-1878)

    1869 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    வருவினை தெறுமா சாத்தன் தளியொளி மங்களேசம்
    திருவிரா மேசம் மாத லீச்சரந் தெளியச் சொற்றாம்
    தருவலர் நிரந்த முன்றின் மாலீச் சரத்தின் மேற்பால்
    ஒருவில்சீ ரனந்த பற்ப நாபத்தி னுண்மை சொல்வாம்
    1
    1870 இறைவனிறைவி திருவிளையாடல்
    எண்ணரு முயிர்க ளீன்ற யிருமுது குரவ ரானோர்
    அண்ணலங் கயிலை வெற்பின் அமர்வுழி யொருநா ளங்கண்
    உண்ணிறை களிப்பி னீடி ஒள்ளொளி மணிச்சூ தாடக்
    கண்ணிய ரகில முய்யக் கண்ணினா ரனைய காலை
    2
    1871 மாலையந் துளவோ னெய்தி வணங்கிசாந் தாற்றிக் கோடல்
    மாலைய னாகி நின்று மெய்வெயர் மாற்ற நோக்கி
    மாலைவெண் பிறைதாழ் வேணி வள்ளலு முமையு மாங்கண்
    மாலையவ் வினைக்குச் சான்று வைத்தன ராடி னார்கள்.
    சாந்தாற்றி - விசிறி.மாலையந் தன்மையன். மாலைப்பிறை- அந்திப்பிறை.
    மாலை - விட்டுணுவை. சொற்பின் வருநிலை அணி. சான்று - நடுவர்.
    3
    1872 பிடித்தெறி கவறாட் டத்திற் பிஞ்ஞகன் தோற்பச் செங்கேழ்
    அடித்தளிர்ப் பிராட்டி நோக்கி யடிகளை வென்றே னென்றாள்
    விடைக்கொடிப் பெருமாள் யாமே வென்றன மென்றான் பாசம்
    உடைத்தவர் தங்கட் கிவ்வா றுற்றன கலாங்கள் மேன்மேல்
    4
    1873 மாயோன் சாபமடைதல்
    யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென யிருவர் தாமும்
    மாதணி மார்பன் றன்னை வினாதலும் மாயோ னையன்
    தாமரை வதனம் நோக்கித் தலைவனும் வென்றா னென்றான்
    கோமளங் கவின்ற மேனிக் கோற்றொடி சீற்றங் கொண்டாள்
    ஐயன் வதனம் நோக்கி என்றது, முகத்துக்கஞ்சுதல் என்னும் வழக்கைக் குறிப்பது.
    5
    1874 கண்டது கண்ட வண்ணங் கழறிலை வாரம் பற்றித்
    தண்டுணர்த் துளவத் தாரோய் கைதவச் சான்று சொற்றாய்
    அண்டரும் பிறரு மேசக் கட்செவி யாதி யென்னா
    ஒண்டொடி சபிப்ப மாயோ னுளம்பதைத் திரந்து போற்றி
    6
    1875 மாயோன் சாப நீத்தருள் பெறல்
    அடியனேன் மடமை நீரா லறைந்தது பொறுத்துச் சாப
    முடிவளித் தருளா யென்றென் றேக்கற முதல்வி நோக்கி
    நெடிதருள் சுரந்து மாயோ யஞ்சலை நிலைநீர்க் காஞ்சிக்
    கடிநகர் வரைபி னேகிக் கடிதெமைப் புரிதி பூசை
    7
    1876 இகழறு மிலிங்க வேதி யென்னுரு விலிங்க மூர்த்தி
    திகழ்மதிச் சடில மோலிச் சிவபிரான் வடிவு கண்டாய்
    புகழ்தரு மிலிங்க வேதிப் பொற்பினா லென்னை நின்பேர்
    நிகழ்வுற நிறுவிப் போற்றி நீக்குதி சாபத் தீமை
    8
    1877 நலம்புரி யனந்த பற்ப நாபனென் றோங்கு வாயால்
    வலம்புரிக் கரத்தோ யென்று வழங்கினாள் குவவுத் திண்தோள்
    உலம்புரி யனந்த பற்ப நாபனு முமையாள் தன்னைப்
    பொலம்புரி சடிலத் தேவைத் தொழுது போய்க் காஞ்சி புக்கான்
    அனந்தன் பாம்பு. பற்பநாபந் தாமரை உந்தியன்.திருமால்
    9
    1878 வணங்கினன் திருவே கம்பம் மற்றத னயலே வேதி
    இணங்குறு மனந்த பற்ப நாபமா விலிங்கம் பூசித்
    தணங்கருள் பெற்றுப் பாந்தள் மூதுரி யகற்றி யாங்குப்
    பிணங்கிய சாபம் நீத்துப் பேரருட் குரிய னானான்
    10

    ஆகத் திருவிருத்தம் 1878
    ---------

    59. கச்சி மயானப்படலம் (1879-1901)

    1879 கொச்சகக் கலிப்பா
    சிற்பநிகழ் மணிமாட நெடும்புரிசைத் திருவனந்த
    பற்பநா பேசத்தின் பரிசறிந்த வாறுரைத்தாம்
    நிற்பனவும் சரிப்பனவுமாய் நிறைந்தபிரான் இனிதுறையும்
    அற்புதமாந் திருக்கச்சி மயானத்தின் அடைவுரைப்பாம்
    1
    1880 பண்டாசுரன் வரம் பெறல்
    முன்னொருநான் முகப்புருடப் பெயர்க்கற்பம் முடிவெய்திப்
    பின்னுறுசீர் அகோரமாங் கற்பத்துப் பிறங்குலகின்
    மன்னுயிர்கள் வளர்ந்தோங்கி வைகுநாள் விறற்பண்டன்
    என்னுமொரு வல்லவுணன் இப்புவனத் துளனானான்
    புருடப்பெயர்க் கற்பம்- தற்புருடகற்பம். வீரியம் -இந்திரியம்
    2
    1881 அங்கவன்செய் மாதவத்தா லகமகிழ்ந்து காட்சிதரும்
    பங்கயனை யடிவணங்கிப் பன்னுசுரா சுரர்முதலோர்
    தங்களுடம் பிடைவிரவித் தகைபெறுவீ ரியமனைத்தும்
    நுங்கவரம் அருளென்றான் முண்டகனும் நுனித்தெண்ணி
    நுங்க -உண்ண.
    3
    1882 அற்றாகென் றகலுதலும் அவுணர்கோன் உடம்புதொறும்
    உற்றாவி யுடன்விரவி வீரியங்கள் உண்டிருப்பப்
    பற்றாய வீரியம்போய் ஆருயிர்கள் பருவந்து
    வற்றாத ஒளிமாழ்கி வளர்வின்றி அ•கினவால்
    உடம்பு தொறும் உற்று ஆவியுடன் விரவி- உயிர்களுடன் கூடி
    அவை இருக்கும் இடமாகிய உடலில் தங்கி. அ•கின-குறைந்தன.
    4
    1883 தேவர் முதலியோர் முறையீடு
    எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    மருத்துவர் இயக்கர் வானவர் அவுணர் மானிடர் சித்தர்கந் தருவர்
    உருத்திரர் வசுக்கள் இராக்கதர் அருக்கர் உரகர்சாத் தியர்மருத் துக்கள்
    அருத்திகூர் விரிஞ்சன் அச்சுதன் பிறரும் அவ்விடர் ஆற்றலர் குழுமித்
    திருத்தகு கயிலைப் பருப்பதம் புக்குச் சிவபிரான் அடிதொழு துரைப்பார்
    5
    1884 வீரியம் இன்றி வலிகுறைந் தடியேம் வெற்றுடம் பெனத்திரி கின்றோம்
    காரணங் காணேம் அன்னது தவிர்க்கும் உபாயமுங் கண்டிலேம் என்று
    நாரணன் முதலோர் உலந்துநின் றிரப்ப நாயகன் நகைமுகிழ்த் துரைக்கும்
    சீரிய நுமது வீரியம் முழுதும் திருந்து பண்டாசுரன் கவர்ந்தான்
    வரம் தந்த பிரமனும் அறியாது போயினன். பண்டம் -உடல். அதிற்கலந்த
    அசுரனாகையால் பண்டாசுரன் எனப்பட்டான்.
    6
    1885 ஆங்கவன் எல்லா உடம்பினும் விரவி ஆவியோ டுறைதலின் எவ்வா
    றீங்கினி வெல்லப் படுவனென் றருள இமையவர் யாவரும் வெருவி
    மாங்குயிற் கிளவி மலைமகள் கொழுநா மறிதிரை வளைகடல் உயிர்த்த
    பூங்கடு மிடற்றுப் புனிதனே எம்மைப் புரப்பதுன் கடனெனத் துதிப்பார்.
    7
    1886 வேறு
    முடிவி லாற்றலை தன்வ யத்தினை முற்று ணர்ச்சியை பேரருள்
    மடிவி லாட்சியை தூய மேனியை மற்றி யற்கை யுணர்ச்சியை
    படியி லாவியல் பாக நீங்கிய பாச நோயை வரம்பிலின்
    புடையை யுன்னடி யேங்க ளென்று முனக்க டைக்கல மையனே
    8
    1887 அண்ட மோரணு வாம்வ ளர்ச்சியை யணுவின் நுண்ணியை யண்டமார்
    பிண்ட மெங்கணும் நின்ற சைக்கும் நிமித்த னாய்நிறை பெற்றியை
    கண்ட யோகியர் சிந்தை மேயினை கரணம் முற்று மகன்றனை
    ஒண்டொ டிக்கொரு பங்க யாங்க ளுனக்க டைக்கல மைய§
    9
    1888 பிரம மென்மரு மீச னென்மரும் சீவ னென்மரும் பேதுறுங்
    கரும மென்மரும் வேறு மவ்வவ கடவு ளென்மரு மாகியே
    முரணி யவ்வவர் பேச நின்றருள் முதல்வ னேமுத லீறிலா
    வொருவ னேயடி யேங்க ளென்று முனக்க டைக்கல மையனே
    10
    1889 இறைவன் வேள்வியில் உலகை ஒடுக்குதல்
    அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    இனைய வாறுளங் களிவரப் பழிச்சுறு மிமையவர் தமைநோக்கிக்
    கனைக ழற்பிரான் வீரியம் பெறுவதே கருத்துமக் கெனிலேற்கும்
    வினைமு டித்தவற் கொல்லுது மல்லது விரவி யெங்கணும் நிற்கும்
    அனைய கள்வனைச் செகுத்திட லரிதுமக் கிசைவுகொ லதுவென்றான்
    11
    1890 ஐயன் வாய்மொழி கேட்டலுங் கடவுள ரவ்வினை தாழாமே
    செய்ய வேண்டுமற் றுலகெலாம் புரப்பதெம் மிசைவுபெற்றோ செந்தீக்
    கைய னேயெனத் தலைவனு மன்னதேற் காஞ்சியின் நுமதாக்கை
    வெய்ய செந்தழற் குறியிடை யவியென விரவுகென் றருள்செய்தான்.
    தழற்குறி -நெருப்பாகிய இலிங்கம். அவியென -வேள்வித்தீயிலிடும் பொருளாக.
    விரவுக- சேர்க.
    12
    1891 யாங்க ளிங்கிருந் தென்பயன் நின்சுடர்க் குறியிடைக் கரந்தேமேல்
    ஓங்கு மின்பமே தலைப்படப் பெறுதுமென் றுரைத்தடி தொழுதேத்தும்
    ஆங்க வர்க்கெலாம் விடையளித் தருவரை அணங்கொடுந் திருக்காஞ்சி
    ஞாங்கர் எம்பிரான் செழுந்தழற் பிழம்பொளி நலந்திக ழுருக்கொண்டான்
    13
    1892 அளப்ப ருஞ்சிகைப் படலைமீக் கவைத்தெழுந் தெங்கணு மழல்வீசக்
    கிளைத்து நின்றுதன் வலப்புடை யுகிரினாற் குண்டமுங் கெழுவித்து
    வளைத்த குண்டத்து வாமதே வத்திரு வடிவின் நெய்பூரித்து
    விளக்கு தத்துவத் தருப்பைமுக் குணப்பெரும் பரிதிமே வரக்கொண்டு
    14
    1893 வேறு
    வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய
    வேள்விவேட் பவனுந் தானே வேள்விகொ ளிறையுந் தானே
    வேள்வியின் பயனுந் தானே என்பது விளக்கி யெம்மான்
    வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட் சத்தி யோடும்
    15
    1894 வண்டுற்ற மலரோ னாதி வலிகெழு தருக்க ளீறா
    அண்டத்தி னகத்த பூத மனைத்தையும் பெருங்கால் வேகச்
    சண்டத்தின் வாங்கி வாங்கி யாச்சியந் தயங்கு மங்கேழ்க்
    குண்டத்தில் தூய்மை செய்து கொழுந்தழல் மடுத்திட் டானால்
    ஆச்சியம்- நெய்
    16
    1895 வேறு
    மடுப்ப மடுப்ப மீதெழுந்து வயங்கிச் சுடருந் தழற்பிழம்பில்
    அடுப்ப நனைக்கும் புறத்தெண்ணீ ரண்ட முகடு வேவாமைத்
    தடுத்த தாகு மன்றாயின் மன்ற நிறையுஞ் சராசரங்கள்
    உடுத்த மேலைச் சுவர்த்தலமு முருகிக் கவிழு முலகன்றே.
    புறத்தெண்ணீர்- அண்டமுகட்டிலுள்ள ஆகாசகங்கை. 'அண்ட முகடு தழற்
    பிழம்பில் வேவாமை அடுப்ப நனைக்கும் புறத்தெண்ணீர் தடுத்த தாகும்' எனக் கூட்டுக
    17
    1896 வேறு
    இவ்வகை வடிவு முற்று மிணரெரிப் பிழம்பு ளாக்கிக்
    கௌளவையில் காலச் செந்தீப் பிரான்முதல் கணங்கள் தாமும்
    எவ்வமின் றொளிருந் தன்னோ டேகமாய்ச் சேர்த்துப் பின்னர்
    அவ்விடை விரவும் பண்டா சுரனையு மழலிற் பெய்தான்.

    கௌளவை- துன்பம். அவ்விடை விரவும் பண்டாசுரனை என்றது, ஒவ்வோர்
    உயிருடனும் எல்லா உடம்பிலும் நுட்பமாகக் கலந்திருந்து, அவை
    தீயில் இடப்படுந்தோறும் அவற்ரினின்றும் நீங்கிக்கொண்டே வந்து
    முடிவிலெல்லாம் அழிந்தமையால் வேறு நிலையின்றித் தன்வடிவத்தோடு
    வந்து நின்ற பண்டாசுரனை என்றவாறு.
    18
    1897 எண்ணரு முயிர்க ளெல்லா மெரியகத் தொடுங்கி நாளும்
    கண்வளர் காலத் தெய்து மின்பத்திற் களித்து வாழ்ந்த
    அண்ணுதற் கரிய அத்தீ யன்றுதொட் டிலிங்க மாகிப்
    புண்ணிய மயான லிங்க மெனப்பெயர் பொலிவுற் றன்றே
    19
    1898 அத்தகை யிலிங்கந் தன்னி லளப்பருங் கருணை பூத்துப்
    பைத்தபாப் பல்குற் செவ்வாய்ப் பனிவரை யணங்கி னோடுந்
    தத்துநீர் வேணிப் பெம்மான் றன்னடி யிணைக்கீழ்ச் சிந்தை
    வைத்தவர்க் கிருமைப் பேறும் வழங்கிவீற் றிருக்கு மன்னோ
    20
    1899 சிவகங்கை வரலாறு
    நிகழ்பெரு வேள்வி முற்றி நிறைந்தநெய்க் குண்டந் தன்னைத்
    திகழ்சிவ கங்கைப் பேரால் தீர்த்தநா யகமாச் செய்து
    புகழப விரத நன்னீ ராடினான் புரமூன் றட்ட
    இகழறு சீற்றத் துப்பி னீர்ந்துழாய்ப் பகழி வல்லான்.
    புகழ் அபவிரத நன்னீர் ஆடி- வேள்வி செய்வோர் அதனை முடித்தபின்
    அபவிரத ஸ்நானம் என ஒரு கிரியை செய்தல் முறை.
    துழாய்ப்பகழி -திருமாலாகிய அம்பு
    21
    1900 மறக்களிற் றடியி னேனை யடியெலா மடங்கு மாறும்
    உறக்கு மால்வித்தி னுள்ளால் ஒடுங்கிய வாறும் போலத்
    திறப்படச் சிவபி ரான்செய் சிவகங்கைத் தடத்தி னண்டப்
    புறத்தன அகத்த தீர்த்த மியாவையும் பொலிய வைகும்
    22
    1901 அத்தடம் படிந்து மேனாள் அருந்தவ முனிவர் சில்லோர்
    வித்தக மயானத் தெம்மான் அருளினால் வினையி னீங்கி
    முத்தியிற் கலந்தார் முளரிநீ ரிலஞ்சி மேன்மை
    சித்தமா சகன்றீர் யாரே யிற்றெனத் தெரிய வல்லார்
    23

    ஆகத் திருவிருத்தம் 1901
    -----

    60. திருவேகம்பப்படலம் (1902-2022)

    1902 கலிநிலைத்துறை
    கல்வித்தமி ழோர்புகழ் கச்சி மயான மீதால்
    தொல்லைத்தவத் தீரினித் தோமறு சீர்த்தி சான்ற
    மல்லல்தலங் கட்கர சாமணித் தெய்வக் கோயில்
    செல்வத்திரு வேகம்பஞ் சிந்தையுட் கொண்டு சொல்வாம்.
    தமிழ்க்கல்வியோர் என மாறுக. ஏகம்பம் என்பது ஏகாம்பரம் என்பதன் திரிபு
    1
    1903 உலகத் தோற்றம்
    மயானச்சுட ரின்வடி வான்மணி வண்ணன் தேறாத்
    தியானப்பொரு ளாக்கைக ளோடும் விராய சிந்தைத்
    தயாவற்ற பண்டன் றனையட்டபி னாவியெல்லாம்
    உயாவற்றுட லோடிசை யத்திரு வுள்ளஞ் செய்து
    2
    1904 பகுப்பின்றி மன்னும் பழமாமறை தன்னைநோக்கி
    வகுக்கும்படைப் பின்பொருட் டுத்தனி மாவதாகிச்
    செகுக்குந்திறல் வல்ல மயானத்தின் மேற்றி சைக்கண்
    தொகுக்குந்தளிர் பூகனி துன்ற வயங்கு கென்றான்
    3
    1905 வேறு
    தாவ ரும்பழ மாமறை தம்பிரான் அருளான்
    மேவ ருந்தனிச் சூதமாய் மயானத்தின் மேற்பாற்
    பூவ ரும்பிமென் தளிர்கனி புதுமலர் துறுமி
    ஓவ ருங்குளிர் நிழல்குலாய் ஓங்கிய தன்றே
    4
    1906 கொன்றை மாலிகைச் சடைமுடிக் குழகனங் கதன்கீழ்த்
    துன்று மானந்தப் பேரொளி யிலிங்கமாத் தோன்றி
    வென்ற நல்லெழில் விரிந்ததன் மெய்யிடப் புறத்து
    மன்றல் வார்குழ லிலளிதை மாதினை யுயிர்த்தான்
    5
    1907 வணங்கு நுண்ணிடைக் கிடர்செய மதர்த்துமே லெழுந்த
    இணங்கு பூண்முலை இலளிதைப் பிராட்டியும் எழுந்தங்
    கணங்கு வெம்பவக் கடலின்நின் றருட்கரை விடுக்கும்
    நிணங்கொள் சூற்படை நெடுந்தகை திருவடி இறைஞ்சி
    6
    1908 விளங்கு மேகம்பம் மேவிய விமலவிண் ணவர்கள்
    துளங்க ஆர்கலி முகட்டுவந் தெழுஞ்சுடு விடத்தைக்
    களங்கு லாவவுண் டமைத்தருள் களைகணே யெனக்கு
    வளங்கு லாவிய அருட்பணி வகுத்தரு ளெனலும்
    7
    1909 நிரந்த நீளுல குக்குபா தானம்நீ நிமித்தம்
    அரந்தை தீர்த்தருள் செய்யும்யா மாதலி னணங்கே
    கரந்த வையகம் பண்டுபோற் காண்டகு மாறுன்
    சுரந்த பேரெழில் வடிவினில் தோற்றெனப் பணித்தான்
    8
    1910 அரவு மம்புலிக் குழவியு மலையெறி நதியும்
    விரவு செஞ்சடைப் பெருந்தகை பணித்தமெய் யருள்தன்
    சிரமி சைக்கொடு செறிந்தபல் லுயிர்களும் முறையால்
    பரவை நித்தில முறுவலாள் படைப்பவ ளானாள்
    9
    1911 எண்க ணாளனை யெழில்வலக் கண்ணினும் பதும
    வண்க ணாளனை மற்றிடக் கண்ணினும் நுதல்மேல்
    ஒண்க ணாளனை நள்ளுடைக் கண்ணினு முலவாப்
    பெண்கள் நாயகி யீன்றனள் முத்தொழில் பிறங்க
    10
    1912 தழங்கு மங்கியங் கடவுள்கா யத்திரிச் சந்தம்
    முழங்கு சீரிர தந்திர சாமமுத் தோமம்
    பழங்க ணின்மறை யோருட னயத்தினைப் பரிவின்
    வழங்கு பேரருட் கருணைகூர் மதிமுகத் தளித்தாள்

    இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்கள் இருக்குகள் எனப்படும்.
    அவற்றை இசை கூட்டிப் பாடின் சாமங்களாம். அவை இரதந்திரம்
    முதலிய பெயர் பெறும். தோமம் சாமத்திற்கு உறுப்பு. முகத்தில்
    காயத்திரிச் சந்தத்தையும் இரதந்திர சாமத்தையும் மூன்று தோமங்களையும்
    அந்தனர்களையும் ஆட்டைஉம் படைத்தனன். அயம் - அஜம்-ஆடு.
    11
    1913 காம ரிந்திரன் திரையிட்டுப் பெனக்கரை சந்தம்
    தோமி லைந்துமூன் றுறழ்ந்ததோ மம்பெருஞ் சாமம்
    தாம நீண்முடி மன்னவ ரவியினைத் தகைசால்
    மாம ணிக்கலன் வயங்குமென் புயத்திடைத் தந்தாள்.
    தோளில் இந்திரனையும் திருட்டுப்புச் சந்தத்தையும் பதினைந்து
    தோமத்தையும் பிருகத் சாமத்தையும் சத்திரியர்களையும்
    அவிசையும் படைத்தனள்.
    12
    1914 தக்க விச்சுவ தேவர்கள் சாகதச் சந்தம்
    பொக்க மில்வயி ரூபமாம் புகலருஞ் சாமம்
    தொக்க மேன்மையிற் பதினெழு தோமமான் வணிகர்
    இக்கி ளந்தவை முழுவதுங் கவானிடத் தீன்றாள்,
    விச்சுவ தேவர்கலையும் சாகதச் சந்தத்தையும் வயிரூப சாமத்தையும்
    பதினேழு தோமத்தையும் பசுக்களையும் வைசியர்களையும்
    துடையில் தோற்றுவித்தனள்.
    13
    1915 சந்த மாமனுட் டுப்புவை ராசமென் சாமம்
    வந்த மூவெழு தோமம்வாம் புரவிபின் னவரைச்
    செந்த ளிர்ப்பதத் தீன்றன ளிவர்க்கொரு தெய்வம்
    தந்தி லாமையின் முன்னவ ரிவர்தொழுந் தலைவர்.
    பின்னவர்- சூத்திரர். முன்னவர்- முன்சொன்ன மூன்று வருணத்தார்.
    அனுட்டுப்புச் சந்தத்தையும் வைராச சாமத்தையும் இருபத்தொரு
    தோமத்தையும் குதிரைகளையும் சூத்திரர்கலையும் திருவடியில் தோற்ருவித்தனள்.
    14
    1916 ஏனைப் புல்மரம் முதலிய பூதகா ரியமும்
    மேனிப் பாலுரோ மங்களி னுயிர்த்துமெய் யன்பின்
    நானப் பூங்குழல் நாயகி மாந்தரு நீழல்
    வானக் கங்கைதோய் முடிச்சடை வள்லலைத் தொழுதாள்
    15
    1917 தொழுத நங்கையைத் தூமடித் தலமிசைக் கொண்டு
    முழுது மாகிய முன்னவன் மாந்தரு நிழற்கீழ்
    விழும ணித்தவி சும்பரின் விளங்கிவீற் றிருந்தான்
    கழுமல் நீங்கியெவ் வுயிர்களுங் களிப்பொடு வளர்ந்த.
    கழுமல் - துன்பம்
    16
    1918 மூவர் வரம் பெறல்
    அந்த ணாளன்முன் முவருமி லளிதை யவள்பால்
    வந்த மாத்திர யேதுயின் றெழுந்தவர் மான
    முந்தை வாலறி வெய்தினார் முதல்விதன் பதமும்
    எந்தை பாதமுந் தொழுதெழுந் திறைஞ்சியேத் தெடுப்பார்
    அந்தணாளன் - பிரமன்
    17
    1919 அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    தரங்கவெண் புணரி கான்ற தழல்விடம் பருகி யெம்மை
    இரங்கியன் றளித்தாய் மற்றும் இன்றொரு பண்டன் றன்னால்
    உரங்கெழும் அடியேம் ஆவி முழுவது முய்யக் கொண்டு
    வரங்கிளர் கருணை கூர்ந்த வள்ளலே போற்றி போற்றி
    18
    1920 சைவச்செந் தழலின் யாங்க ளாகுதிச் சமிதை யாகச்
    செய்வித்து வேள்வி யாற்றுஞ் சிவபிரா னருளி னாலே
    உய்வித்து மீள வெம்மை யுதவிய கருணை நாட்டத்
    தெய்வப்பூங் கொம்ப ரன்ன செல்விநின் சரணம் போற்றி
    19
    1921 அம்மையாய் அப்ப னாகிக் குருவுமாய்த் தெய்வ மாகிக்
    கம்மைநீர்க் காஞ்சி வைப்பி னிருவகை யுருவு தோற்றி
    எம்மையு மாண்டு கொண்ட யிருமுது குரவீர் அன்பர்
    வெம்மனச் சுரும்பு வீழும் விரைமலர்ப் பாதம் போற்றி
    20
    1922 மைந்தர்கள் குழறிப் பேசு மழலைமென் கிளவி வேட்கும்
    தந்தையுந் தாயு மென்னத் தமியரேம் புகழ்ச்சி கொண்டு
    புந்திமிக் குவகை பூப்பத் திருவருள் புரியீ ரென்று
    நைந்திரு விழிநீர் சோர நயந்திருந் துதிகள் செய்தார்
    21
    1923 மடங்கருங் காதல் மேன்மேல் வளர்ந்தெழக் குடந்தம் பட்ட
    முடங்குகால் ஞிமிறு பாயும் முண்டகத் திறையை மாலை
    அடங்கமூ வுலகும் நீற்று மண்ணலை யருளின் நோக்கி
    விடங்கனி மிடற்றுப் புத்தேள் வேட்டதென் உறைமின் என்றான்
    22
    1924 அவ்வண்ணமே யருளிச் செய்யக் கேட்டவ ரறைத லுற்றார்
    கவ்வெனுங் கமலத் தோனு மவ்வெனுங் கரிய மாலும்
    மவ்வெனு மரனு மாய மற்றெமை விழியி னீன்ற
    இவ்வன்னை காமக் கண்ணி யெனப்பெயர் பெறுக மன்னோ
    23
    1925 சேந்தமென் தளிர்கள் கோதித் தீங்குயி லினிது கூவும்
    ஏந்திணர்ச் சாகை தோறு மிளநறா வொழுக்கி வாசப்
    பூந்துக ளுகுத்துச் சீதப் புதுநிழல் விரிக்குந் தெய்வ
    மாந்தரு வடியின் நீவிர் வைகலும் வதிக வென்றார்
    24
    1926 தவளவெண் ணீற்று மேனித் தலைவனவ் வரங்கள் நல்கி
    இவறிமற் றவர்கள் மீட்டு மிணைக்கரங் குவித்து வேண்டப்
    புவனமோர் மூன்று முய்யப் புதுநிழல் மாவின் மூலத்
    தவிரொளி மயமாய்த் தோன்று மருட்குறி மேன்மை விள்ளும்
    25
    1927 திருவேகம்பப் பெயர் மாட்சி
    எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்
    இன்னி சைச்சுரும் புளமலர்த் தொடைய லிணங்கு
          தோட்டுணை மைந்தர்காள் கேண்மின்
    மன்னு ருத்திர னொருவனே பிரம மொன்று
          மற்றிலை யென்பது துணிபால்
    பன்னு மெய்ப்பொருட் பிரமமாம் வேத மொற்றை
          மாவெனப் பணைத்தது கண்டீர்
    அன்ன தற்கிறையாகிய யாமே யிலிங்க
          மாயத னடித்தலத் துறைகேம்
    26
    1928 ஏதம் நீக்குசொல்வடிவினுந் தனிமா
          யெனப்ப டுந்தரு வடிவினு மதற்கு
    நாதர் யாமெனத் தெளிமினிங் கெமது
          நாம மேகம்ப நாதனென் றுரைப்ப
    ஆதி மந்திர மஞ்செழுத் திதுவே வைம்பெ
          ருங்கொடும் பாதக மறுக்கும்
    ஓது மைவகைப் பிரமமந் திரத்து மஞ்செ
          ழுத்தினு முயர்ந்ததிம் மனுவால்
    27
    1929 விதிவ ழாதபல் லுறுப்புடை மறையின்
          மிக்க தாகுங் காயத்திரி யதனின்
    அதிக மஞ்சமா மந்திர மதனி னாறி
          ரண்டெழுத் ததனினெட் டெழுத்தாம்
    பதியு மேன்மையெட் டெழுத்தி னஞ்செழுத்
          துக்கோடி கோடிமேம் பட்டதஞ் செழுத்தின்
    நுதலு மேகம்ப நாதமா மனுத்தான் நூறு
          கோடியி மிக்கதென் றுணர்வீர்
    அஞ்சமாமந்திரம்- aம்ஸ மந்திரம். ஆறிரண்டு எழுத்து- `ஓம் நமோ
    பகவதே வாசுதேவாய:`. எட்டெழுத்து- `ஓம் நமோ நாராயணாய`
    அஞ்செழுத்து பஞ்சாக்கரம். `ஏகாம்ரநாத:` என்பதனுள் ஒற்று நீக்கி ஐந்தெழுத்தாம்.
    28
    1930 அன்ன தன்மையின் மனுயெவற் றினுக்கு
          மதிகமாகிய வேகம்ப நாதன்
    என்னும் மந்திரம் இயம்புநா வுடையாற்
          கிப்பி றப்புறும் பெறும்பய னெய்தும்
    பன்ன ரும்பெருங் கீர்த்தியும் ஊக்கப் பாடும்
          ஆக்கமு மாயுளும் வளரும்
    மன்னு கல்வியுங் கேள்வியு மொழுக்கும்
          வழுக்கி லானவ னேயெனத் துணிவீர்
    29
    1931 கன்னி தந்தைதாய் வேதியர்ச் செகுத்தோர்
          கள்ளு மாந்துநர் கள்ளுநர் குரவன்
    பன்னி மாணலம் விழைந்தவர் மற்றைத் தீர்வு
          காணரும் பழிவினை விளைத்தோர்
    என்ன ராயினு மேகம்ப நாத னென்னும்
          மந்திரம் ஒருமுறை கணிப்பின்
    துன்னும் வெங்கொடும் பாதக மனைத்தும்
          துனைவி னங்கவர் தம்மைவிட் டோடும்
    துனைவின் -விரைவுவாக
    30
    1932 அறப்ப யன்பொரு ளின்பம்வீ டென்றா வனைத்து
          மோதுநர்க் களிக்குமிம் மனுவை
    இறப்ப வந்துமுற் றிரும்பசிப் பிணிபின்
          னீண்டி யாருயிர் கவற்றும்வல் லிடரின்
    மறப்பி னாயினுங் கிளக்க வல்லுநரே மற்றெ
          மக்குமிக் கினியவர் கண்டீர்
    சிறப்ப விம்முறை மனுவிதன் பெருமை
          தெரிந்து கூறினர்க் கின்பவீ டளிப்பேம்
    31
    1933 என்று மாவடி முளைத்தெழுந் தருளு மிலிங்க
          மேன்மையை யெடுத்துரைத் தருள
    ஒன்று மானந்த வுததியின் மூழ்கி வொன்ன
          லார்க்குடர் குழம்பியுள் வெதும்ப
    வென்ற கூர்ம்படைத் தாணுமா லயனாவிளம்பு
          மூவரும் விரைத்தபூந் தொடையல்
    கொன்றை வர்சடை முதல்வனார் கமலக்
          கொழும லர்ப்பதந் தொழுதுபோற் றிசைத்து
    32
    1934 காட்டின் நாடகங் குயின்றரு ளிறைவ கம்ப மேவிய கருணையங் கடலே
    மோட்டு நீர்ப்புவி வியத்தரு மினைய முதுந கர்ப்பெருந் தன்மையுந் தனிமா
    ஈட்டு மேன்மையு மெமக்குரைத் தருளா யென்று வேண்டலு மீர்ந்துண ரிதழித்
    தோட்டு மாலிகைச் சடைமுடிக் குழகன் தொன்ன கர்த்திறங் கேண்மினென் றியம்பும்
    33
    1935 காஞ்சித் திருநகர் மாட்சி
    கறங்கு வண்டிமிர் கமலமுந் துழாயுங் கடுக்கை மாலையுந் துயல்வரு புயத்தீர்
    பிறங்கு கவ்வெனும் மொழிப்பொருள் பிரமம் பிரமமானயாம் அஞ்சிக்கப் படலால்
    உறங்கி டாப்புகழ்க் காஞ்சி யென்றுரைக் குமொரு திருப்பெயர் எய்து மிந்நகரம்
    அறங்க ரைந்தநூ லெமைப்பரம் பிரம மகில காரண மென்பது தெளிவீர்
    34
    1936 இலகு வாணகை அரிமதர் மழைக்கண் இருண்ட வார்குழல் வேய்மருள் பணைத்தோள்
    கலப மாம்யில் இயலெழில் மடவார் உந்தித் தானத்தைக்காஞ்சியென் றுரைப்ப
    சுலவு வெண்டிரைப் பனிக்கட லுடுக்கைத்தொல்லை நானில மடக்கொடி தனக்குக்
    குலவு காஞ்சிநற் றானமாய்ப் பொலிந்த கொள்கை யானுமத் திருப்பெயர் வழங்கும்.
    35
    1937 மற்றுங் கவ்வெனல் சென்னியோ டின்ப மலர வன்றனை யுணர்த்துமஞ் சித்தல்
    சொற்ற பூசனை யடைவுமாம் யாருஞ் சென்னி மேற்கொடு தொழத்தகுஞ் சிறப்பால்
    பற்றி வைகுநர் பேரின்ப முறலாற் பங்க யத்தவன் வழிபட லானும்
    பெற்ற தாகுமித் திருப்பெய ரிதனாற் பிரம லோகமென் றுரைக்கவும் படுமால்
    36
    1938 வீடு பேற்றினர் தேவரென் றுரைப்ப விழையு மிந்நகர் வரைப்பிடை வீடு
    கூடும் வாழ்க்கையர் நிறைதலின் தேவ புரமெ னபடுங் கொடுவினைத் திறத்தாற்
    பாடு சான்றபோர் புரிவருந் தகவி னயோத்தி யென்னவும் பகரு மிந்நகரம்
    நீடு மன்னவர் உறைதரு மயோத்தி நிகழும் முத்தருக் குறைவிடம் அன்றால்.
    அயோத்தி- போரில் பகைவரால் வெல்லப்படாதது. இது சீவன் முத்தருக் கிடமாதலால் வினைத்திறத்தால் வெல்லப்படாதது.
    37
    1939 சுவர்க்க மெய்தினர் தேவரென் றோதுஞ் சுருதி யாலது நாக நாடன்று
    நவிற்று ருத்திர லோகமே சுவர்க்க மாகு மாதலின் நலங்கெழுஞ் சோதி
    நிவக்கு மென்றிடு மயோத்திநீள் பிரம லோகம் நீடொளித் தேவமா புரமும்
    புவிக்குள் மேதகு காஞ்சியே யன்றிப் புவனம் மூன்றினும் வேறில்லை கண்டீர்
    38
    1940 இத்தி ருப்பெருங் காஞ்சியி னெம்மை மறலிக் கஞ்சுநர் இகபரம் விழைந்தோர்
    நித்த மன்பொடு வழிபடூஉப் பழிச்ச நிறைந்த பேரருட் கருணைபூத் துறைகேம்
    மெய்த்த மாமறை முழுது மிவ்வாறு விளம்பும் ஆதலின் மற்றெமக் கினிய
    உத்த மப்பதி யிதுவெனத் தெளிமின் ஓங்கு மாந்தருப் பெருமையு முரைப்பாம்
    39
    1941 மாந்தருவின் மாட்சி
    மீது மன்னிய மூலமுங் கிழக்கு நோக்கு சாகையு மாய்விரை கமழும்
    பாத வந்தனை உணர்ந்தவன் வீடு பற்றும் ஆங்கது பலகனி படைத்துச்
    சீத வார்புனல் ஒழுக்கறாக் கம்பைத் திருந திக்கரை மருங்கொலி வேதச்
    சூத மாமர மெனத்திகழ்ந் தொளிருந் தொல்லை வையகம் பெரும்பயன் படைப்ப
    40
    1942 ஏழி ரட்டிய கல்வியு மதன்மேல் மல்லி கைக்கொடி எனப்படர்ந் தமரும்
    பாழி விச்சைகட் கிறைவியாங் காமக் கண்ணி அத்தரு பசுங்கொடிக் கினியாள்
    ஊழி ஈற்றினு முலப்பருந் தகைசான் றோங்கு மாவினுக் குரிமையம் யாமே
    ஆழி யேந்திய நாரணன் விரிஞ்ச னரனெ னப்படு மன்புடைப் புதல்வீர்

    வித்தை பதினெட்டினுள் வேதம் நான்கும் மாமரமாயினமையின், ஏனைய பதினான்கும் மல்லிகைக்கொடியாயின. வேதமாமரத்திற்கு இறைவர் தலைவர்ரயினமையின் , ஏனைய வித்தைகளாகிய கொடிக்கு அம்மையார் தலைவராயினர்.
    41
    1943 மாறி லாமறை யெமது வாசகமாம் வாசகத் தோடு வாச்சியந் தனக்கு
    வேறு பாடில்லை யாதலி னெமக்கு மினைய மாவிற்கும் வேறுபா டில்லை
    ஈறி லாவிதன் மூலத்தி னென்று மிலிங்க மூர்த்தி யாயு றைகுதும் நெருநல்
    காறும் யாவரும் கண்டிலர் இந்நாட் கவுரி யோடுநீர் காணவீற் றிருந்தோம்
    42
    1944 அகில நாமமும் எமக்குரிப் பெயராம் அவற்றி னும்பவன் முதற்பெயர் சிறப்பாத்
    தகும வற்றினுஞ் சம்புவே மயோபு சங்க ரன்மயக் கரன்சிவன் மற்றை
    இகழ ருஞ்சிவ தரனெனும் பெயர்கள் இனிய வாகுமங் கெவற்றினும் மேலாய்ப்
    புகழ்ப டைத்தயே காம்பர நாதன் எனப்பு கல்பெயர் எமக்குமிக் கினிதாம்
    43
    1945 இன்ன தன்மையிற் கான்முளை முதலோர்க் கித்தி ருப்பெய ரிட்டழைப் பவர்க்குத்
    துன்னும் வல்வினை முழுவது மகலத் தொலைத்து முத்தியும் செல்வமு மளிப்பேம்
    பன்ன ருந்தனி மந்தணம் உமக்குப் பகர்ந்து ளேமெனப் பண்ணவன் இறுப்ப
    அன்ன மூவரும் உவகைமீக் கிளைப்ப அம்மை அப்பரை வணங்கிவே றுரைப்பார்
    44
    1946 கம்பாநதி மாட்சி
    எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    கன்னி மாநதி கம்பை ஒன்றிவண் உள்ள தென்றருள் செய்தனை
    இன்ன காரணம் என்று தேறிலம் இறைவ னேயென எம்பிரான்
    முன்னெ ழுந்து மதர்த்து வீங்கி முகிழ்த்த மென்முலை அம்பிகை
    தன்னை நோக்கி மகிழ்ந்த மைந்தர்கள் கேண்மின் என்றது சாற்றுவான்
    45
    1947 வடிவம் எட்டு நமக்க மைந்தன மறையு ரைக்கும் அவற்றுளோர்
    வடிவ மாம்புனல் உலகெ லாமிது தூய்மை செய்யும் வனப்பது
    வடிவம் உற்றவர் உயிர்த ளிர்ப்ப வழங்கு மற்றிது மாநதி
    வடிவு கொண்டிவன் ஒழுகு கின்றது மன்னு யிர்த்தொகை உய்யவே
    46
    1948 இந்ந திப்புனல் எம்மை நேர்வர யார்வி ழிக்கும் அகப்படா
    துன்ன ருஞ்சிவ யோக சிந்தையுள் யாமு றைந்திடு மாறுபோல்
    வன்னி லத்தின் அகத்து வார்ந்து வழங்கு கின்றது காண்மினோ
    கன்னி யாறிது கம்பை என்றொரு கார ணப்பெயர் பெற்றதே
    47
    1949 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    பன்னுபா வென்றல் தூய்மை பருகுதல் காப்புங் கூறும்
    கன்னிவான் கங்கை யாதி கம்மெனும்புனல்கள் தம்பால்
    துன்னிமூழ் குநர்வெம் பாவத் தொகுதிமெய் யழுக்குந் தீரத்
    தன்னிடை முழுகித் தூய்மை தாங்கலாற் கம்பை யென்ப.
    48
    1950 கம்மெனுஞ் சிரமேல் தீண்டின் தூய்மைசேர் கவினால் உண்டோர்
    கம்மெனு மாவி தம்மைக் காத்தலான் மூழ்கி னோரைக்
    கம்மெனும் பெருவீட் டின்பம் நுகர்விக்குங் காட்சி யானும்
    கன்மநோய் அறுக்கு மிந்தத் தடநதி கம்பை யாமால்
    49
    1951 எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    கங்கை மாநதி யமுனை வாணி முதல்க வின்பெறு நதியெலாம்
    ஒங்கு வெண்டிரை எற்று கம்பை நறும்பு னற்கிணை யெய்துறா
    மங்க லந்தரு கம்பை மென்புனல் தோய்ந்த காற்று வழங்கிடத்
    தங்கண் மேவிய புன்ம ரங்களு மின்ப முத்தியை யண்ணுமால்
    50
    1952 யோக நன்னிலை யிற்ற வத்தின் வழீஇயி னாருயர் கம்பையின்
    மோக மில்கய லாதி யாகி யுயிர்த்து முத்தியின் நண்ணுவார்
    போகு மக்கரை யிற்கி ளைத்த புத்ல்ம ரங்க ளுருத்திர
    லோக நின்று வழூஉம் உருத்திர ராகு முண்மை யுணர்ந்திடீர்
    51
    1953 யாண்டி றப்பவர் கட்கு மிப்புனல் இருதி வேலையி னுச்சியில்
    தீண்டு மேலவர் முத்தி யெய்துவர் தீஞ்சு வையமிழ் துண்பவ்ர்
    ஏண்ட குந்திற லமர ராகுவ ரினைய பூம்புன லுண்பவர்
    ஆண்ட நம்முட னாவ ராதலி னமிழ்தின் மிக்கது கம்பைநீர்
    52
    1954 காட்சி யெய்தரு மேன்மை சான்றுயர் கம்பை வார்புன லாற்றினால்
    ஆட்சி யெய்திய பதியெ வற்றினு மதிக மாயது காஞ்சியூர்
    மீட்சி யில்புக ழிவ்வி ரண்டினும் வேறெ மக்குள வேணவா
    மாட்சி பெற்றுறு கங்கை காசியின் வைத்தி லேமிது மெய்மையே
    53
    1955 பன்னிரு பெயர் மாட்சி
    அறுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்
    புவன சாரம் மும்மூர்த்தி வாசம் விண்டு புரம்காஞ்சி
    தவமார் கலிசித் திலயசித்து சகல சித்தி தபோமயவூர்
    கவினார் பிரம புரமாதி பீடங் கன்னி பாப்பவினைப்
    பவநோ யறுக்குஞ் சிவபுரமாப் பகர்பன் னிரண்டு திருப்பெயர்த்தால்
    54
    1956 புவனம் மூன்றன் பயனாகிப் பொலிவு பெறலால் புகழ்தகைய
    புவன் சார மெனத்திகழும் புனல்கால் உயிர்தீ இருசுடர்வான்
    புவன வடிவாம் நந்தமைநீர் மும்மூர்த் திகளும் பூசித்துப்
    புவன மேத்த வைகலின்மும் மூர்த்தி வாச புரமாமால்
    55
    1957 பரவு மேக வாகனமாங் கற்பத் தெம்மைப் பங்கயக்கண்
    வரத ராசன் வழிபடலால் விண்டு புரமாம் வளர்காஞ்சி
    புரமா யதுமுன் வகுத்துரைத்தாம் பொல்லாக் கலிநோய் கலியுகத்தும்
    விரவா வண்ணம் நல்குதலால் விளங்குங் கலிசித் தெனப்படுமால்
    56
    1958 கடைநா ளெமக்கீ தாடரங்காம் கவினா லிலய சித்தாகும்
    தடைதீர் சகல சித்திகளும் தரலாற் சகல சித்திபுரம்
    படையா வாய்மைத் தவமியற்றிப் பனிமால் வரையின்வரும்
    நடையாள் வழுத்தும் பரப்பிரம மயமாம் நகரந் தபோமயமாம்
    57
    1959 வேத னெமக்குத் தகுஞ்சோம வேள்வி செயலாற் பிரமபுரம்
    ஆதி பீடம் முதற்பீட மாய சிறப்பால் கன்னியெனுங்
    காத லணங்கு புரந்திடலாற் கன்னி காப்பிங் கெமைக்கண்டோர்
    பேதமின்றிச் சிவனுண்மை பெறலா லாகுஞ் சிவபுரமே
    58
    1960 வேறு
    எடுத்தி யம்புமிப் பன்னிரு நாமமும் வைகறை யெழுந்தோதில்
    அடுத்த தீக்கனாக் காட்டிய விடும்பைநோய் வறுமைதீர்ந் தருள்வாரி
    மடுத்து வான்கதி யெய்துமா றுமக்கிவை வகுத்தன மருளாலென்
    றுடுத்த திக்குடை நாயகன் விளம்பலு முவகையங் கடலாழ்ந்து
    59
    1961 மூவர் விண்ணப்பங் கேட்டு பெருமான் உபதேசஞ் செய்தல்
    உலம்ப டைத்ததோள் பண்டனா மவுணனா லொளியிழந் துலந்தேமை
    நலம்ப டைத்தவான் சோதியு ளொடுக்கிமீட் டிறைவிதன் நடுவாமம்
    வலம்ப டைத்தமூ விழியினும் வருவித்த வள்ளலே அடியேங்கள்
    புலம்ப டைத்தினிச் செய்பணி யருளெனப் போற்றினர் முதல்மூவர்
    60
    1962 ஓது மவ்வுரை திருச்செவி சாத்தியெ முளங்களி வரச்செய்யுங்
    காதல் மைந்தர்நீ ராதலின் நுமக்கருள் காட்டுது மெனவோர்பால்
    போத ளாங்குழல் முகிழ்முலைப் பொலந்தொடிப் பூங்கணை மதர்வேற்கண்
    மாதர் வாணுதற் பசுங்கொடி மணந்தவன் வாய்மலர்ந் தருள்செய்யும்
    61
    1963 பிள்ளை வண்டினம் முரன்றுபண் பயிற்றிவார்ந் திழிநறாப் பெருவெள்ளங்
    கொள்ளை கூட்டுணும் மலர்த்தடம் பொதும்பரிற் கொழிதமிழ் மறைப்பாடற்
    கிள்ளை பாடுசீர்க் காஞ்சியி னென்று மிக்கிளரொளி யிலிங்கத்தே
    வெள்ளை வாணகைத் துவரித ழுமையொடு மினிதுவீற் றிருக்கின்றேம்.
    'கொழிதமிழ் மறைப்பாடல்', என்றமையால், படைப்புக் காலத்திலேயே
    இறைவனால் அருளிச் செய்யப்பட்ட தமிழ்மறைகள் இருந்தன வென்பது
    ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும்.
    62
    1964 எம்மை யாவருங் காணல ரொருபொழு தியோகியர்க் கெதிர்காண்பேம்
    அம்ம நீரிவண் எம்மடிப் பூசனை யருமறை விதியாற்றான்
    மும்மை யாகிய வுலகமும் படைத்தளித் தழிக்குமா முயல்கிற்பீர்
    நம்மி டத்துறு பத்தியு மருச்சனை நலத்தினாற் பெறுவீரால்
    63
    1965 படைத்தி பங்கய னளித்திமா லுருத்திரன் பற்றற வுலகெல்லாந்
    துடைத்தி யென்றருள் வழங்கியிச் சுரிகுழல் தேவியு மெமையீண்டே
    கிடைத்த பேரன்பின் நாள்தொறும் பூசனை யாற்றுக வெனக்கேட்டோர்
    அடைத்த நல்விதி புகல்மறை யாதது வந்தவா றெவனென்றார்
    64
    1966 என்ற மூவருக் கிளநிலா முகிழ்த் தெம்பிரா னுரைசெய்யும்
    நன்று கேண்மினெம் மிரவிடைத் திருநடம் நவின்றிருள் புலர்காலை
    மன்ற வெம்மிடை யொடுங்கிய வுலகுயிர் முழுவதும் வழுவாமே
    தொன்று போற்படைத் திடுவது கருதினேம் முத்தொழில் புரிவீர்காள்.
    'எம் இரவு' - எமக்கு இரவாகிய சங்காரகாலம்
    65
    1967 படரொ ளிப்பிழம் பாகுமிவ் விலிங்கமே பற்றிநின் றுலகெல்லாம்
    உடைய நம்மிடை நிலைபெறு மறைகளை முன்னுற உயிர்ப்பித்தேம்
    தொடையி ணங்குமப் பழமறை முழுவதும் நம்மடி தொழு தேத்திக்
    கடையி லாதபே ரன்பினாற் பழிச்சின சிரமிசைக் கரங் கூப்பி
    66
    1968 பாரின் மேயினை பாரொரு வடிவினை பாரினுக் கறியொண்ணாய்
    பாரும் மற்றை யப்பாரிடைப் பொருளும்நின் னாணையிற் பயில்வித்தாய்
    நீரின் மேயினை நீரொரு வடிவினை நீரினுக் கறியொண்ணாய்
    நீரும் மற்றையந் நீரிடைப் பொருளுநின் னாணையின் நிலைப்பித்தாய்
    67
    1969 நெருப்பின் மேயினை நெருப்பொரு வடிவினை நெருப்பினுக் கறியொண்ணாய்
    நெருப்பும் மற்றையந் நெருப்பிடைப் பொருளுநின் னாணையின் நிறுவித்தாய்
    மருத்தின் மேயினை மருத்தொரு வடிவினை மருத்தினுக் கறியொண்ணாய்
    மருத்தும் மற்றையம் மருத்திடைப் பொருளும்நின் னாணையின் வதிவித்தாய்
    68
    1970 விண்ணின் மேயினை விண்ணொரு வடிவினை விண்ணினுக் கறிவொண்ணாய்
    விண்ணும் மற்றையவ் விண்ணிடைப் பொருளுநின் னாணையி னிறுவித்தாய்
    கண்ணு மாருயி ரிருசுட ரெவற்றினு மிம்முறை கலந்தோங்கி
    எண்ணி னாலறி வரும்பெரு முதல்வநின் இணையடி மலர்போற்றி.
    67, 68, 69 ஆகிய இச்செய்யுட்களில் இறைவன் அட்டமூர்த்தமாயும்
    அவற்றின் வேறாயும் உடனாயும் இருப்பது கூறப்பட்டது. 'மேயினை'- உடனாதல்.
    'வடிவினை'- ஒன்றாதைல், 'அறிவொண்ணாய்'- வேறாதல்
    69
    1971 கலிவிருத்தம்
    இன்ன வண்ணம் பழிச்சி யெமைத்தொழும்
    மன்னு மன்பின் மறைகளை நோக்கிநீர்
    நன்னர் வேட்டன நல்குதும் வேதங்காள்
    சொன்மின் என்றலுஞ் சொல்லுத லுற்றன
    70
    1972 எந்தை நின்முகத் தெங்களை ஈன்றனை
    அந்த மெய்ப்பெரும் பேறுடை யெங்களைச்
    சிந்தை செய்து திருவருள் வைத்துநின்
    சந்த மேனி அணியெனத் தாங்குவாய்
    71
    1973 நயக்கு மாறினி நாங்கள் உலகிடைச்
    செயத்த கும்பணி செப்புதி மற்றெமை
    வியப்ப வேதங்கள் என்று விளித்தனை
    உயர்த்த வப்பெயர்க் காரண மோர்கிலேம்
    72
    1974 என்ற மாமறை தம்மை யியல்பினால்
    அன்று கோவணம் நூபுர மாதியா
    மன்ற மெய்யணி யாக்கி மகிழ்ந்துபின்
    ஒன்று கூறினம் ஊங்கிவை கேட்பவே
    73
    1975 அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
    அறம்பாவ மென்றிரண்டி னெம்முண்மைத் தன்மையினு மகில லோகந்
    திறம்பாமற் பிரமாண மாவீர்வித் தெனும்பகுதி ஞானஞ் செப்பும்
    புறம்பாயா மனப்பெரியோர் நும்மொழியா னெமையுணரும் பொலிவான் வெள்ளிப்
    பறம்பாறா மெமக்கினிய பான்மையீர் வேதமெனப் பெயர்பெற் றீரால்

    அறம்பாவம் என்றிரண்டினும் எம் உண்மைத் தன்மையினும்
    என உம்மையைக் கூட்டுக. வெள்ளிப்பறம்பு ஆறாம் - கயிலை மலைக்கு வழியாகும்.
    74
    1976 வேதியர்கள் முதல்மூவ ருமையோதி வீடுபே றடைக முற்றும்
    ஓதுமறை யிரண்டானு மொன்றானு மோதாது புறநூல் கற்கும்
    ஏதிலிரு பிறப்பாள ரிருட்குழிவீழ்ந் திடர்ப்படுவா ராக நீயிர்
    பேதியா மெய்யன்பி னெமையீண்டு வழிபாடு பேணி வாழ்மின்
    75
    1977 உலகுய்தற் பொருட்டுநா மெவ்விடத்தி னெவ்வுருவ மெடுப்போ மங்கண்
    நலமெய்து மதற்கியைந்த வடிவம்நீர் கொள்கென்று நயப்ப முன்னாள்
    அலர்தலைமா நிலம்பரசு மிந்நகரின் வரமளித்தே மடியா ருட்கும்
    வலமன்னுந் திரள்திண்தோள் மைந்தர்க ளாதலி னம்மறைக ளெல்லாம்
    76
    1978 ஈங்குநாம் பரஞ்சோதி யிலிங்கவடி வாயமர்ந்தே மாக ஈண்டைத்
    தேங்க விழ்க்குங் கவிழிணர்ப்பூங் கனிதுவன்று மொருமாவாய்த் திகழ்ந்து நின்ற
    வீங்குதிறற் புரம்மூன்று மிறுத்தநாள் போர்க்கோலம் மேயி னேம்யாம்
    ஆங்கவையுங் கொய்யுளைவெங் கலினவாம் பரிவடிவா யமைந்த காண்மின்
    77
    1979 மற்றைவே டுருவாதி வடிவம்நாங் கொண்டுழிமா மறையு மாங்கண்
    பற்றமைகூ ருகிர்ஞாளி முதலியவாய்ப் போந்தனவிப் பதியு ளோர்பால்
    வெற்றிநடம் புரிகாலை நூபுரமாய்ப் பொலிந்தன அவ்விரிநீர்ச் சூழல்
    அற்றைநாள் முதல்வேத நூபுரப்பேர் பெற்றுவினை யறுக்கு மாலோ
    78
    1980 மாண்டபெரு வளம்படைத்த தாருகா வனத்திடைநாம் பயிக்க வேடம்
    பூண்டவழிக் கோவணமாய்ப் பொலிந்தனவா லிவ்வாறு நம்பால்
    வேண்டும்வரம் பெற்றோங்கும் வேதநு லுணராதா ரெம்மைத் தேறார்
    ஆண்டகைமை வேதியர்க்கு மேம்பாடு வேதமே யாகு மன்றே
    79
    1981 இத்தகைய மாமறைநூல் முந்நாளித் திருக்காஞ்சி வரைப்பில் தென்சார்
    தத்துநீ ரலைபுரட்டுஞ் சேயாற்றின் தடங்கரைக் கணிமையோர் கட்கும்
    மெய்த்தவர்க்கு மோதுவித்தோ மாதலினான் மேவுதிரு வோத்து ரென்னும்
    அத்தலத்தி னெமைத்தொழுவோர் அருமறைநூல் முழுதுணர்ந்து வீடு சேர்வார்.
    80
    1982 இன்னமறை விதியாலிவ் வேகம்பத் தெமைப்பூசை யியற்றீ ரென்னப்
    பன்னகப்பூ ணணிமார்பிற் பரமேட்டி பணித்தமொழி பேணி யன்னோர்
    சென்னிமிசைக் கரங்கூப்பி யானந்தப் பெருங்கடலில் திளைத்து வாழ்ந்து
    பொன்னிமயப் பிடிமணந்த மனவாளன் நம்பிகழல் பூசிப் பாரால்
    81
    1983 இலளிதை முதலியோர் இறைவனை வழிபடல்
    கலிவிருத்தம்
    சயமுறு காரணத் தலைவர் மூவரைக்
    கயல்விழித் தோற்றிய காமக் கண்ணியாம்
    பெயரிய இலளிதைப் பிராட்டி வானளாய்
    உயரிய மாமுதல் ஒளியைப் பூசித்தாள்
    82
    1984 மற்றதற் கணியதென் மருங்கி னப்பெயர்
    பற்றிய சிவக்குறி நிறுவிப் பாயிதழ்
    பொற்றசெந் தாமரைப் புனிதன் பூசனை
    தெற்றெனச் செய்தனன் தெளிந்த சிந்தையான்
    83
    1985 பன்னரு மாமுதல் வாம பாகத்தின்
    அன்னண மணியணி யகன்ற மார்பினான்
    மன்னிய வுலகெலாம் மயக்கு மாசையின்
    பொன்னவிர் மலர்கொடு பூசை யாற்றினான்
    84
    1986 பேதமில் பாவனை பிறங்கத் தாணுவும்
    காதலிற் பூசைமுன் னியற்றிக் கண்ணுதல்
    மேதகை யடிகளோ டொருமை மேயினான்
    ஆதலி னிருவர்க்கு மில்லை வேற்றுமை
    85
    1987 வெள்ளக் கம்பர்
    வாலிய சிந்தையான் மலர்ப்பொ குட்டணை
    மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை
    ஆலிய அன்பினால் அருச்சித் தேத்துவார்
    தோலுடற் பொறைகழீஇத் தூய ராகுவார்.
    86
    1988 கள்ளக்கம்பர்
    மருள்புரி கருத்தினான் மாய னேத்தலின்
    கருதுமப் பெயரிய கள்ளக் கம்பனைத்
    திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
    உருகெழு கொடுவினை மைய லுட்படார்
    87
    1989 நல்ல கம்பர்
    உருத்திரன் நகத்தகு மொருமை பூண்டுயர்
    கருத்தொடும் வழிபடு நல்ல கம்பனை
    அருத்தியின் வழிபடும் அடிய ரெம்பிரான்
    மருத்தபூந் திருவடிக் கலப்பின் மன்னுவார்
    88
    1990 கருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர்
    தருதிரு வேகம்ப னென்று தன்னொடு
    மருமலர்க் கவிழிணர் மாவின் நீழல்வாழ்
    ஒருவனே நால்வகை யுருவம் மேயினான்
    89
    1991 தென்னுயர் கச்சியின் அகில சித்தியும்
    மன்னுயிர்க் குதவிய மகிழ்ந்த நம்பிரான்
    அன்னணம் பூசைகொண் டருளி மூவர்க்கு
    முன்னிய வரங்களும் முறையின் நல்கினான்
    90
    1992 இறைவி வேண்டுகோள்
    இறைவியிம் மாநிழ லினிது வைகிய
    மறைமுத லடியிணை வழிபட் டேத்துபு
    நிறைபெரு மகிழ்ச்சியின் நீடு காதலாற்
    குறைவறு வரம்பல குறித்து வேண்டுவாள்
    91
    1993 வேறு
    வேதக் கோவண வேதப் புரவிய
    வேதப் பூணவ வேத முதல்வனே
    வேதத் தானு முணர்வரு மேதகாய்
    வேதச் செல்வயென் விண்ணப்பங் கேண்மதி
    92
    1994 மன்ற லார்மறை மாவி னடித்தலத்
    தென்றும மேவுதி யேனுமி யோகியர்க்
    கன்றித் தோன்றிலை யாயினை ஈண்டினி
    மன்ற யாவர்க்குங் காட்சி வழங்குவாய்
    93
    1995 தெள்ளு தீம்புன லித்திருக் கம்பையும்
    வள்ள லோரிடைக் காண்டக மன்னுகென்
    றொள்ளி ழைக்கிரி யுத்தமி வேண்டலும்
    பிள்ளை வெண்பிறைக் கண்ணியன் பேசுமால்
    94
    1996 இறைவன் கூறல்
    வேறு
    மன்னுயிர் முழுவதும் பயந்த மாணிழாய்
    அன்னவை யுய்யுமா கருதி யன்பினால்
    இன்னவை புகன்றனை மகிழ்ச்சி யெய்தினேம்
    பன்னுதும் மனங்கொளப் பரிந்து கேண்மதி
    95
    1997 மேதகு சிற்பர வியோம ரூபம்நீ
    ஓதிய சிற்பர வியோம ரூபியாம்
    மாதர்வா ணுதலியப் பரம வானமும்
    பேதுற வொழிக்குமிப் பிலத் துவாரமே
    96
    1998 மற்றிரு வேங்கட்கும் வடிவ மாகுமப்
    பொற்றனிப் பிலத்தினைப் புண்ணி யஞ்செய்து
    பற்றறத் துறந்தவர் காண்பர் பற்றமை
    சிற்றறி வுடையவர் தமக்குச் சேயதே
    97
    1999 ஆயிடை மகிழ்ந்தினி துறைது மாய்தொடி
    மேயவப் பிலத்தினும் மிக்க காதலின்
    ஏயுமிச் சுடரொளி யிலிங்கத் துன்னொடு
    மாயிரும் புவிதொழ மன்னி வைகுகேம்
    98
    2000 இதற்குமுன் னீண்டெமை யெவருங் காண்கிலர்
    இதற்குமேல் நீபெறு மெழில்வ ரத்தினாற்
    கதித்திட யாவருங் கண்டு போற்றுக
    கதிர்த்தவான் பிலத்திடை யுனையுங் காண்கவே
    99
    2001 எற்றுநீர்க் காஞ்சியே யெமக்கு மேனியாம்
    தெற்றெனத் தெளிமதி யினைய சீர்மையான்
    முற்றொளி வானவர் முனிவர் தாமெலாம்
    மற்றிவண் விளங்கியும் மறைந்து வைகுவார்
    100
    2002 உலகமிக் கோயிலி னுறுப்பு முற்றுமாய்க்
    குலவியீங் கெமைத்தொழு துறையுங் கோற்றொடிப்
    புலவுவேல் இணைவிழிப் புளகப் பூண்முலை
    இலவிதழ் மதிநுத லிமய மாதராய்.
    101
    2003 அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
    விரவுசீர் நல்ல கம்பம் விளங்கொளி வெள்ளக் கம்பம்
    வரமருள் கள்ளக் கம்பம் வண்டிரு மயானம் வாலீச்
    சரமெனு மிலிங்க மைந்தில் தகுபஞ்ச பிரம மாகி
    இரவுசெய் குழலாய் நின்னோ டினிதுவீற் றிருப்பங் கண்டாய்
    102
    2004 வாலீச்சரம்
    என்னலு மிறைஞ்சி நல்வா லீச்சரம் யாங்க ணெந்தாய்
    அன்னது கண்டோர் யாவ ரதன்திறம் யாதோ வென்னப்
    பொன்னவிர் சுணங்கு பூத்த பொம்மல்வெம் முலையாள் கேட்ப
    கன்னல்வே ளெரிய நோக்குங் கண்ணுத லருளிச் செய்யும்
    103
    2005 வாலிமா விலிங்க மேன்மை கேண்மதி மயானக் கீழ்சார்
    சீலமார்சித்தர் பல்லோர் சித்திகள் வேண்டிப் போற்ற
    மூலமாய் ஒளியாய் இன்பாய் முகிழ்த்தது வாயு லிங்கம்
    ஏலவார் குழலா யென்றும் மகிழ்ந்தினி திருப்பே மங்கண்
    104
    2006 வாலிமுன் தொழுது நேர்ந்தார் வலத்தினிற் பாதி யாண்டுந்
    தோல்வியில் வாகை யோடும் பெற்றனன் தோகா யென்றான்
    கோல்வளை வாலி யென்பான் யாரெவன் குமரன் மற்றுன்
    பால்வரம் பெற்ற தெவ்வா றென்றலும் பகர லுற்றான்
    105
    2007 பண்ணவர் முனிவ ரான்றோர் பாங்குற மிடைந்து வைக
    விண்ணவர்க் கிறைவன் புத்தேள் வேத்தவைத் தவிசின் மேனாள்
    நுண்ணிடை யணங்கு நல்லார் மின்கொடி நுடக்கம் மானக்
    கண்ணெதி ராடு மாடல் கண்டுவீற் றிருந்தா னாக
    106
    2008 ஆங்கவ ராடல் காணு மாசையா லிருள்கால் சீக்குஞ்
    செங்கதிர்க் கடவுள் மான்தேர் செலுத்துரு மருண னாங்கண்
    வெங்கதிர் விடைபெற் றேகி யரம்பையர் விண்ணோ ரெல்லாம்
    எங்கணும் நிறைந்த வாற்றா லிடம்பெறா திதனைச் செய்வான்
    107
    2009 அற்புத வனப்பின் வாய்ந்த அரம்பைய ரெவர்க்கும் முன்னர்
    நிற்பது நோக்கித் தானும் நேரிழை வடிவு கொண்டு
    பொற்புறு மாடல் பார்த்து நிற்றலும் புல்லா ருட்கும்
    மற்பொலி குலிசப் புத்தேள் அத்தகை வடிவைக் கண்டான்
    108
    2010 காண்டலுங் குழைத்த வில்வேள் கடுங்கணைக் கிலக்க மாகி
    மூண்டவெங் காம மூழ்கி முரணினால் வலிந்து பற்றி
    ஆண்டொரு பாங்க ரெய்தி யணிமுலை பொதியப் புல்லிப்
    பூண்டபே ரின்ப வெள்ளப் புதுநலம் பருக லோடும்
    109
    2011 வாலி பிறப்பு
    அரக்கர்கோன் நகைப்ப நந்தி வெகுண்டுனை யழிப்ப வல்வா
    னரக்குலந் தாமே யென்னச் சபித்தவா நயந்து விண்ணோர்
    குரக்கின மானா ரன்றே யினையவன் குரக்கு வேந்தாய்ச்
    சுரர்க்கிறை கூற்றா லப்போ தாயிடைத் தோன்றி னானால்
    br> இராவணன் குபேரனிடத்திலிருந்து கவரந்த புட்பக விமானத்தின்மேலேறு
    ஆகாயவழியாகக் கயிலைக்கு அருகில் வந்தான். கயிலைமலை விமானத்தைத்
    தடுக்கவே, தடையுற்று நின்று காரனத்தை ஆராய்ந்தான். அப்பொழுது
    நந்திதேவர் வந்து, இது இறைவன் இருக்கும் மலையாதலின் வேறு வழியில்
    செல்க அஎனக் கூறினார், அதைக் கேட்ட இராவணன் சினந்து,
    குரங்கு ம்கம் உடையவனே, நீ யார் என்னை மருட்ட என எள்ளி நகைத்தான்,
    நந்தி தேவர் வெகுண்டு ‘ நீ என்னைக் குரங்கு முகனென்று பழித்தாய்.
    உனது நகரம் குரங்குகளால் அழியக் கடவது’ எனச் சபித்தார்.
    110
    2012 ஆயபின் கூத்து நோக்கி யாவயின் நின்று போந்து
    சேயொளிப் பரிதித் தேர்மேல் திகழ்ந்தனன் வலவ னாகக்
    காய்கதிர்க் கடவுள் அங்கண் நிகழ்ந்தமை கடாவி முற்றும்
    வாய்மையிற் புகலக் கேட்டவ் வடிவிவண் காட்டு கென்னா
    111
    2013 உவகைமீ தூர மேன்மேல் வேண்டலு மூரு வில்லான்
    பவளவாய் கரிய கூந்தல் பான்மொழி திதலை பூத்த
    குவிமுலை பரந்த அல்குல் கோல்வலைத் தளிர்க்கை தோற்றிக்
    கவினுருக் கொண்டா லென்னக் காட்டினன் தனாது பெண்மை.
    ஊரு இல்லாந் துடையில்லாத அருணன்.
    112
    2014 சுக்கிரீவன் பிறப்பு
    காண்டலுங் கதிரோன் றானுங் காமுற்றுக் கலவி செய்ய
    ஆண்டகைச் சுக்கி ரீப னாயிடைப் பிறந்தா னிப்பால்
    மாண்டகு மகவா னீன்ற வாலியைக் கமலக் கையால்
    தீண்டின னுச்சி மோந்து செவியறி வுறுத்தல் செய்வான்
    113
    2015 பண்ணவர் முனிவர் யாரும் பரவினர் பேறு பெற்ற
    புண்ணிய நகரங் காஞ்சி யாயிடைப் போந்து முக்கண்
    அண்ணலைத் தொழுது மைந்தா கவிகளுக் கரசாம் பேறு
    நண்ணுகென் றுரைப்ப வாலி நளிர்புனற் காஞ்சி புக்கான்
    114
    2016 நடலைவெம் பிறவி மாற்றுஞ் சிவகங்கை நன்னீ ராடிச்
    சுடரொளித் திருவே கம்பந் தொழுதுபோய் மயானக் கீழ்பால்
    மடனறச் சித்தர் பல்லோர் வழிபடும் பெருமை சான்ற
    கடனுடை வாயு லிங்கங் கண்களி பயப்பக் கண்டான்
    115
    2017 மடல்பெறு வேட்கை யாளன் வாயுவின் மிடலென் றெண்ணிக்
    கடல்புரை யன்பி னங்கட் கைதொழூஉத் தவங்க ளாற்றி
    மடலவிழ் கடுக்கை நம்பால் வரம்பல கொண்டு நேர்ந்தார்
    அடல்வலி பாதி யோடு குரக்கினத் தரசும் பெற்றான்
    116
    2018 பெற்றபி னிலிங்கந் தன்னைப் பிறங்குதன் னிருக்கை யுய்ப்பான்
    பற்றினன் வலியாற் காஞ்சிப் பதிநமக் கினிய வாற்றான்
    மற்றவன் பெயர்க்க லாற்றான் மிடலெலாம் வைத்து வாலிற்
    சுற்றியீர்த் தணிவா லிற்றுத் தூரத்தே யலறி வீழ்ந்தான்
    117
    2019 வீழ்ந்தவ னெழுந்து வந்து மென்மல ரடிகள் போற்றித்
    தாழ்ந்தெழுந் தடியே னில்லந் தனிலெழுந் தருளிச் சூடும்
    போழ்ந்தவெண் மதியாய் செய்யும் பூசைகொண் டருளா யென்று
    சூழ்ந்துநின் றிரந்து வேண்டத் தோன்றிமுன் னிதனைச் சொன்னேம்
    118
    2020 கச்சிமூ தூரின் நீங்காக் காதல மெம்மை யீண்டே
    அர்ச்சனை புரிதி நின்வா லழுந்திய தழும்பு பூண்டு
    சச்சைவெண் ணீற்று வாலீச் சரனென விளங்கித் தோன்றி
    முச்சகம் பரச வாழ்து மெனமொழிந் திலிங்கத் துற்றேம்
    119
    2021 அன்றுதொட் டனைய சூழ லற்புதத் திருவா லீசம்
    என்றொரு பெயரி னோங்கும் ஏரிழாய் பஞ்ச தீர்த்த
    மன்றநீர் வாவி மூழ்கி வகுத்தவிப் பஞ்ச லிங்கம்
    நன்றுகண் டேத்தப் பெற்றோர் நலிவினைப் பிறவி தீர்வார்
    120
    2022 இன்னணமருளிச் செய்து பொலங்குவட் டிமயம் பூத்த
    மின்னொடும் மூவ ரோடும் விளங்கொளித் திருவே கம்பந்
    தன்னிடைக் கரந்து நின்றான் சதாசிவப் புத்தே ளந்த
    நன்னகர்ப் பெருமை முற்றும் யாவரே நவில வல்லார்
    121

    ஆகத் திருவிருத்தம் 2022
    --------


    This page was last updated on May 25, 2008.
    Feel free to send corrections to the webmaster.

    Back to thamizh shaivite literature Page
    Back to Shaiva Sidhdhantha Home Page