|
Home > Scriptures & Stotras > Tamil
tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -V (verses 3029 - 3266)
திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஐந்தாம் அருட்பா (பாடல்கள் 3029-3266)
Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஐந்தாம் அருட்பா (பாடல்கள் 3029 -3266)
உள்ளுறை
|
1. அன்பு மாலை | 31 | 3029 - 3059 | |
2. அருட்பிரகாச மாலை | 100 | 3060 - 3159 | |
3. பிரசாத மாலை | 10 | 3160 - 3169 | |
4. ஆனந்த மாலை | 10 | 3170 - 3179 | |
5. பக்தி மாலை | 10 | 3180 - 3189 | |
6. சௌந்தர மாலை | 12 | 3190 - 3201 | |
7. அதிசய மாலை | 14 | 3202 - 3215 | |
8. அபராத மன்னிப்பு மாலை | 10 | 3216 - 3225 | |
9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை | 11 | 3226 - 3236 | |
10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை | 10 | 3237 - 3246 | |
11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை | 10 | 3247 - 3256 | |
12. ஆளுடைய அடிகள் அருண்மாலை | 10 | 3257 - 3266 | |
|
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் அருட்பா
1. அன்பு மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
3029
| அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே. 1 | |
3030 | நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே. 2
|
3031 | ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே
வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே
நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே. 3
|
3032 | சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே. 4
|
3033 | துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே. 5
|
3034 | கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே. 6
|
3035 | திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே. 7
|
3036 | குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே. 8
|
3037 | பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே. 9
|
3038 | அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு(184) நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே. 10
| | | | | | | | | |
184. வந்து - காற்று. ச.மு.க.
|
3039 | அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே. 11 | |
3040 | பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே. 12
|
3041 | என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே. 13
|
3042 | பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து
நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே. 14
|
3043 | சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே. 15
|
3044 | சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்
தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே. 16
|
3045 | ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே. 17
|
3046 | தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே. 18
|
3047 | அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே. 19
|
3048 | நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே. 20
|
3049 | ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே. 21
|
3050 | ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே. 22
|
3051 | இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.23
|
3052 | சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே. 24
|
3053 | ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே. 25
|
3054 | முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே. 26
|
3055 | ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே. 27
|
3056 | அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே. 28
|
3057 | மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.29
|
3058 | பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்
போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே. 30
|
3059 | செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே. 31
| | | | | | | | | | | | | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
2. அருட்பிரகாச மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
3060 | உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே. 1 | |
3061 | ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே. 2
|
3062 | திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி
வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே. 3
|
3063 | அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்
தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்
என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே. 4
|
3064 | இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே. 5
|
3065 | இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே. 6
|
3066 | ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே. 7
|
3067 | நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய்
குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே. 8
|
3068 | மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே. 9
|
3069 | அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்
கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே. 10
|
3070 | அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே. 11
|
3071 | ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே. 12
|
3072 | இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.13
|
3073 | கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே. 14
|
3074 | பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே. 15
|
3075 | ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே. 16
|
3076 | அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே. 17
|
3077 | காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர்
யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே. 18
|
3078 | துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.19
|
3079 | நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து
வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே. 20
|
3080 | சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே. 21
|
3081 | பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே. 22
|
3082 | செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே. 23
|
3083 | உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட
அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே. 24
|
3084 | விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே. 25
|
3085 | வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்
விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே. 26
|
3086 | தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.27
|
3087 | மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே. 28
|
3088 | படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம்
நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 29
|
3089 | முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து
அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே. 30
|
3090 | மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்
மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே. 31
|
3091 | வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே. 32
|
3092 | ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே. 33
|
3093 | விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி
என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே. 34
|
3094 | நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே. 35
|
3095 | புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
எம்பருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே. 36
|
3096 | மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே. 37
|
3097 | கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே. 38
|
3098 | கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே. 39
|
3099 | அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய்
இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே. 40
|
3100 | முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே. 41
|
3101 | மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே. 42
|
3102 | சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே. 43
|
3103 | தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந்
தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே. 44
|
3104 | கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே. 45
|
3105 | ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
நண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய்
இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
என்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே. 46
|
3106 | எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே. 47
|
3107 | சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே. 48
|
3108 | சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே. 49
|
3109 | உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும் | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |