தலமர சிறப்புகள்

வில்வ மரம்



வில்வம் Aegle marmalos, Corr.; Rutaceae

வில்வம் / vilvam / Aegle marmalos
வில்வம்
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத் தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த ததுவனார் தங்குங் கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார் வீதித் தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவை யாறே. - திருஞானசம்பந்தர்.

திருவையாறு, திருவெறும்பியூர், திருஇராமேச்சரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான இஃது ஒரு கற்ப மூலிகையாகும்; அஃதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. இஃது கூவிளம், கூவிளை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.

இது மூன்று கூட்டிலைகளை மாற்றடுக்கில் கொண்டு உருண்டையான மணமுள்ள சதைக்கனிகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம். திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்பெறும்.

வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

திருமுறைகளில் வில்வம் / கூவிளம் பற்றிய குறிப்பு :-

தண்ணறு மத்தமுங் கூவிளமும் 
	வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய 
	நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் 
	புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் 
	ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.		1.7.3



< PREV <
வாழைமரம்
Table of Content > NEXT >
விழல்புல்