வடதிருமுல்லைவாயில் திருக்கோயில் தல வரலாறு

Vadatirumullaivayil Temple sthala puranam

இறைவர் திருப்பெயர்		: நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை.
தல மரம்			: முல்லை.
தீர்த்தம்				: கல்யாண தீர்த்தம்.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - திருவுமெய்ப் பொருளுஞ்.

vada_mullaivAyil temple

தல வரலாறு

  • இது தொண்டை நாட்டுத் தலம்; (வட) திருமுல்லைவாயில் ஆகும்; சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில் (தென்) திருமுல்லைவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத்தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர். (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்.) இவர்களைக் காணத் தொண்டைமான் வந்தான்; வரும் வழியில் 'கோழம்பேடு' என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை சேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்றறிந்து, மன்னன் மறுநாள் காலை யானைமீதேறி வந்தான். அவன் வருவதைக் கண்ட அசுரர்களின் குறு நில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிக்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டுவரத் திரும்பினான். அவ்வாறு திரும்பி இம்முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக்கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப் பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான், அப்போது இறைவன் காட்சி தந்து, "மன்னனே! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசு இல்லா மணியே! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிப் பெற்று வருவாயாக" என்று அருள்புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்கு நோக்கியுள்ளது என்கின்றனர்.) தொண்டைமான் (நந்தியம்பெருமானுடன்) வருவதையறிந்து, ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவம், பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

  • தொண்டைமான் கட்டிய திருக்கோயில்; சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.

  • நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. (தல வரலாறு காரணமாக)

  • பிரசன்ன விநாயகருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

  • மூலவர் அற்புதமான சுயம்பு மூர்த்தி; உயரமான லிங்கம். மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும், ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது; ஆவுடையாருக்கு மட்டும் தான். வருடத்திற்கொருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களைய்பபட்டு மீண்டும் சார்த்தப்படுகிறது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமி மீது இருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேக காலங்களில் மேன்மேலும் சந்தனம் சார்த்தப்படும்; ஆனால் களையப்படுவதில்லை. இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக் காப்பு இருந்து கொண்டே இருக்கும்.

  • சுவாமிக்கு முன்னால் இரு எருக்கந்தூண்கள் பூண்கள் இடப்பட்டு உள்ளன. (தொண்டைமான் அசுரர்களிடமிருந்து எடுத்து வந்தது.)

  • சுவாமிக்கு முன்பு வெளியில் ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலவை - இது பிற்காலத்தில் பிரதிஷ்டையானது) உள்ளது.

  • தொண்டைமானுக்கு அவசரத்தில் காட்சி தந்ததால் அப்பாள் சந்நிதி சுவாமிக்கு வலப்புறமாக உள்ளது.

  • இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய 'பச்சையம்மன் கோயிலும்' உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் செவிவழிச் செய்தியொன்று வருமாறு :- சென்னைப் பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை; சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை; இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும்; வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

  • சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் "அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே " என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயிலை அடைந்து 1-கி. மீ. சென்று கோயிலை அடையலாம். மெட்ரோ ட்ரெயின் மார்க்கமும் உள்ளது.

தொடர்பு :

  • 044 - 26376151

< PREV <
தொண்டை நாட்டு 21வது
தலம் திருவலிதாயம் (பாடி)
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 23வது
தலம் திருவேற்காடு