பழையாறை வடதளி

இறைவர் திருப்பெயர்		: தர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் 
				  பழையாறை இறைவன்)
இறைவியார் திருப்பெயர்		: விமலநாயகி (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவியார்), சோமகலாம்பிகை (இவர் 
				  பழையாறை இறைவியார்)
தல மரம்			: நெல்லி.
தீர்த்தம்				: சோம தீர்த்தம்.
வழிபட்டோர்			: கருடன், ஆதிசேஷன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர்.

தல வரலாறு

  • இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடவரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

சிறப்புக்கள்

  • சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.
  • பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
  • தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கின.
  • இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது.
  • பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.
  • சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம்.
  • மங்கையர்க்கரசியார், அமர்நீதி நாயனார் அகியோர் அவதரித்த பதி.
  • மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)
  • இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.
  • இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.
  • குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
  • இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷ¤ணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 23வது தலம்
திருப்பட்டீச்சரம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 25வது தலம்
திருவலஞ்சுழி