திருநீடூர்

Tirunidur temple


இறைவர் திருப்பெயர்		: அருட்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர், கற்கடேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்		: ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தர நாயகி, வேயுறுதோளியம்மை.

தல மரம்			: மகிழ மரம்.

தீர்த்தம்				: செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் ஆகியன.
வழிபட்டோர்			: இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன் ஆகியோர்.

தேவாரப் பாடல்கள்		: அப்பர், சுந்தரர்.

தல வரலாறு

  • ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் இஃது 'நீடூர் ' என்று பெயர் பெற்றதென்பர்.
  • தலமரம் மகிழமாதலின் மகிழவனம், மகிழாரண்யம், வகுளாரண்யம் எனவும் பெயர்களுண்டு.
  • கிருத யுகத்தில் இந்திரனும், திரேதா யுகத்தில் சூரியனும், துவாபர யுகத்தில் பத்திரகாளியும், கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
  • இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் - இதுவே இறுகி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும்; அதன் கால் சுவடு இலிங்கத்தில் பதிந்துள்ளது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.
  • இந்திரன் காவிரி மணலால் இலிங்கத் திருமேனி எடுத்து மந்திர விதிமுறைகளோடு வழிபடவும் மார்கழித் திருவாதிரை நாளில் இறைவனார் பாடியாடும் பரமனாக வெளிப்பட்டு இந்திரன் முதலான தேவர்களுக்கு அருள் பாலிக்கவே கோடித் தேவர்கள் கும்பிடும் நீடூர் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

சிறப்புக்கள்

  • சிவலிங்கத் திருமேனி சுயம்பு மூர்த்தியாகும்.
  • இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு ஆகியோர் வழிபட்டத் தலம்.
  • திருநாவுக்கரசரால் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பரவப்பட்டது. மேலும் பொதுத் திருத்தாண்டகத்திலும், திருப்புறம்பயம், திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகங்களிலும் போற்றப்பட்ட பெருமைக்குறியது.
  • திருஞானசம்பந்தர் திருநின்றியூரிலிருந்து திருப்புன்கூர் செல்லும் வழியில் "நாடு சீர் நீடூர் வணங்கி"ச் சென்ற வரலாறு சேக்கிழார் பெருந்தகையரால் குறிக்கப்பட்டுள்ளது.
  • தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்தும் மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனாரின் அவதாரத் தலம்; அவர் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம்.
  • முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.
  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநின்றியூர் இறைவரை வணங்கி புகழ் நீடூர் பணியாது திருப்புன்கூர் இறைவரை பணிந்திறைஞ்ச செல்லும்போது, மெய்யுணர்வு ஓங்கவே, நீடூர் இறைவரை வந்துப் பாடிப் பணிந்து தங்கிப் பின் திருப்புன்கூர் சென்ற வரலாற்றை சேக்கிழார் பதிவு செய்துள்ள வண்ணம் எண்ணி மகிழத்தக்கது.
  • வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தல புராணம் 14 சருக்கம், 400 பாக்களைக் கொண்டுள்ளது; மிக அரிய செய்திகளைக் கொண்டுள்ளது.
  • சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் இராசராஜன், மூன்றாம் இராசராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • முதற்குலோத்துங்கன் காலக் கல்வெட்டுப் பாடலால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள உமையொடு நிலாவின பெருமானுக்கு மிழலை நாட்டு வேள்கண்டன் மாதவன் உத்தம விமானத்தை அமைத்த செய்திப் பெறப்படுகிறது.
  • 3-வது இராசாதிராசன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
  • இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் திரு. அரு. அண்ணாமலை செட்டியார் குடும்பத்தினர் திருப்பணிகளால் முற்றிலும் கற்றளியாக மாற்றப்பட்டது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 20வது தலம்
திருப்புன்கூர்.
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 22வது தலம்
திருஅன்னியூர்.