|
Home > Temples of India > pADal peRRa sthalam
கோயில் (சிதம்பரம், தில்லை)
இறைவர் திருப்பெயர் : நடராசர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், (கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்)
இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி.
தல மரம் : தில்லை, ஆல்
தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன.
வழிபட்டோர் : சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற பதி.
தேவாரப் பாடல்கள் : மூவர் பாடல் பெற்ற தலம்.
தல வரலாறு
'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கம். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து,
கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
- தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில்
உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)
- இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
- சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு
புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில்
வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார் ' என்ற பெயர் பெற்றது.
சிறப்புக்கள்
இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும் ', காசி 'புருவமத்தி'யாகவும்,
சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.
- பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.
- பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
- இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
- "சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம்புரிந்தருளும் இடம் - 'தப்ரசபா ' எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும்
'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.
- "பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.
- "பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன்
வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.
- "நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
- "இராச சபை" இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.
- வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம்
சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.
- வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப் பதி.
- சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
- மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.
- திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.
- உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.
- திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத்தலம்.
- இராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.
- சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம்.
- நடராச சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.
- சிற்றம்பலம் - சிற்சபை நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம் ' உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
|