திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர்
(காளையார்கோயில்)

இறைவர் திருப்பெயர்		: காளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்.
இறைவியார் திருப்பெயர்		: சொர்ணவல்லி, சௌந்தர நாயகி, மீனாட்சி.
தல மரம்			: மந்தாரை
தீர்த்தம்				: கஜபுஷ்கரணி (ஆனைமடு), சிவகங்கைக்காளி, 
				 விஷ்ணு, சரஸ்வதி, கௌரி, ருத்ர, லட்சுமி, சுதர்சன 
				 தீர்த்தங்கள் முதலியன.
வழிபட்டோர்			: ஐராவதம்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	பிடியெலாம் பின்செலப்.
				 2. சுந்தரர் -	தொண்ட ரடித்தொழலுஞ்.
kanapper temple

தல வரலாறு

 • இறைவன் காளைவடிவங்கொண்டு கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங்கொண்டு சுந்தரருக்குக் காட்சி தந்து "யாம் இருப்பது கானப்பேரூர்" என்று கூறி ஆற்றுப்படுத்திய தலம்.

 • பண்டாசுர வதத்தின்பின் காளி இங்கு வந்து காளீசுவரை வழிபட்டு கரிய உருவம்மாறி சுவர்ணவல்லியாகி இறைவனை மணந்தாள.

 • நந்தியிடம் சாபம் பெற்ற ஐராவதம் இங்கு வந்து ஆனைமடு தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்றதாகவும் வரலாறு.

சிறப்புகள்

 • தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கோயில் திருப்பணி செய்யப்பட்டு, அவர்களுடைய கட்டளையில் 6 காலபூசைகளும் நடைபெறுகின்றன.

 • தக்ஷிணகாளிபுரம், சோதிவனம், மந்தாரவனம், மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், வேதாருவனம், பூலோககைலாயம், மகாகாளபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

 • இங்குள்ள மூன்று சந்நிதிகளில் தேவாரப்பாடல் பெற்றவர் காளீஸ்வரரே.

 • இப்பகுதியில் இம்மூன்று சந்நிதிகளையொட்டி வழங்கும் பழமொழி: "காளைதேட - சோமர் அழிக்க - சொக்கர் சுகிக்க" என்பதாகும்.

 • இக்கோபுரத்தின் மீதேறிப் பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம். இதையொட்டி, "மதுரைக் கோபுரம் தெரிய கட்டிய மருதுபாண்டி வாராண்டி" என்னும் கும்பிப்பாட்டும் இங்கு வழக்கில் உள்ளது.

 • மருதுபாண்டியர் அக்கோபுரத்தைக் கட்டி உயிரையும் கொடுத்து காத்து இருக்கிறார். மருது பாண்டியரை கைது செய்ய எண்ணிய ஆங்கியேர், அவர்கள் சரணடையாவிட்டால் இக்கோபுரத்தை இடித்துவிடப்போவதாகப் பறைசாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் கோபுரத்தை காக்க விரும்பி உயிரைப்பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்றனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ்நாடு
சென்னை - இராமேஸ்வரம்; திருச்சிராப்பள்ளி - மானாமதுரை இருப்புப் பாதைகளில் உள்ள நாட்டரசன்கோட்டை நிலையத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். பேருந்துகளும் உள்ளன.

தொடர்பு :

 • 04575-232516

< PREV <
பாண்டி நாட்டு 9வது
தலம் திருஆடானை
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 11வது
தலம் திருப்பூவனம்