|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஅழுந்தூர் - (தேரழுந்தூர்)
Sthala puranam of Thiruvazhundur (Therazhundur) Temple
இறைவர் திருப்பெயர் : வேதபுரிசுவரர், அத்யாபகேசர்
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரியாம்பிகை
தல மரம் : சந்தனம்
தீர்த்தம் : வேதாமிர்த தீர்த்தம்
வழிபட்டோர் : வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - தொழுமா றுவல்லார்)
தல வரலாறு :
இவ்வூர் தற்போது தேரழுந்தூர், தேரழந்தூர் என்றெல்லாம் மக்களால் வழங்கப்படுகிறது.
அகத்தியர் இத்தல இறைவனைப் பூஜிப்பதை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் இத்தலம் தேர்-அழுந்தூர் = தேரழுந்தூர் என்று வழங்குகிறது என்னும் வழக்குள்ளது.
வேதங்கள், தேவர்கள், திசைப்பாலகர்கள் வழிபட்டத் திருத்தலம். இத்தலம் "சந்தனவனம்" என்றும் விளங்கியுள்ளது.
சிறப்புகள் :
ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கிய சந்நிதி. இராஜகோபுரத்தைக் கடந்தவுடன் இடதுபுறம் ஸ்ரீமடேஸ்வரர் ஆலயம் உள்ளது.
சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா, கந்தசஷ்டி முதலிய சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன. மாசியில் நடைபெறும் புனர்வசு விழா சிறப்பானது.
இங்கு அகத்தியருக்கும், காவிரிக்கும் சந்நிதி உள்ளது.
இது கம்பர் அவதரித்த ஊராகும். அவர் வாழ்ந்த இடம் "கம்பர் மேடு" என்று வழங்குகிறது.
இரும்பிடர்த் தலையார் என்னும் தமிழ்ச் சான்றோரும் வாழ்ந்த பதி.
ஆறு கல்வெட்டுகள் உள்ளன. யாவும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவை. இக்கல்வெட்டுக்களில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவள நாட்டுத் திருவழுந்தூர்" என்றும்; இறைவனின் திருநாமம் "திருவழுந்தூர் உடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டுக்கள், சுவாமிக்கு நாள்தோறும் காவிரியிலிருந்து திருமஞ்சனத்திற்கு புனித நீர் கொண்டு வருவதற்குக் கட்டளை வைத்துள்ள செய்தியையும் கூறுகின்றது.
அமைவிடம்
இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் தேரழுந்தூர் நிலையத்திலிருந்து 3-கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் உள்ளது.
அ/மி. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேரழந்தூர் & அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் - 609 808.
|