logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தத்துவத்திரய நிர்ணயம் மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விருத்தி உரையும்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சத்தியோஜோதி சிவாசாரியர்

இயற்றிய

இதற்கு

அகோர சிவாசாரியாரியற்றிய விருத்தி உரையும்

(தமிழ்மொழி பெயர்ப்பு)

            உரைமங்கலம்.

    எந்தப் பரமசிவனுடைய அநுக்கிரகத்தினால் மனதினாற் சிந்தித்தற்குரிய காணப்படும் பொருள்களும், 
காணப்படாத பொருள்களும் நிலைபெறுகின்றனவோ, அந்தப் பரமசிவனை வணங்கித் தத்துவத்திரய 
நிர்ணயத்திற்கு உரைசெய்கின்றேன்

                நூல்

    (அவதாரிகை) ஆசிரியர் தன்னாலியற்றப்படும் பிரகரணம் இடையூறின்றி முடிதற்பொருட்டு 
அப்பிரகரணத்தாற் கூறப்படும் பொருள்களினால் பரமசிவனை விசேடித்து நமஸ்கரிக்கின்றார்

(1)     இயல்பாகவே பிரகாசமுடையவராயும், தன்வயத்தராயும் உள்ள யாதொரு பரமசிவன், மலத்தினுடைய 
பலவிதமான தன்மையை அறிந்து உயிர்களின் பொருட்டுப் பலவிதமான பலத்தைத் தருகின்றாரோ, 
அவர் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன் என்பதாம்.

    இயல்பாகவே பிரகாசமுடையவர் என்றதனால், தான்  இயல்பாகவே மலமில்லாதிருத்தல் பற்றி 
எல்லாப் பொருள்களையும் அறிகின்ற ஞானக்கிரியா சத்திகளின் பிரகாசத்தை யநாதியாகவேயுடைய 
அநாதி முத்தன் என்பது பெறப்பட்டது.  அவனுக்கு ஞானக்கிரியா சத்திகளின் பிரகாச ரூபமான மலமின்மையை 
அநாதியெனக் கொள்ளாமல், ஆதியெனக் கொண்டு அவனை ஆதிமுத்தனெனக் கொள்வோமாயின், 
அவனுக்கு அதனைச் செய்தற்கு ஒருவன் வேண்டப்படுமெனப்பட்டு அவனையும் ஆதி முத்தனெனக் 
கொண்டு வரம்பின்றியோடுதல் என்னுங் குற்றத்திற்கிடனாம். ஆதலால், இந்தப் பரமசிவன் ஒருவருக்கும் 
வசப்படாமல் தன்வயத்தனா யிருக்கின்றான் என்க .

    இவ்விதமான பரமசிவன் சத்திரூபமான தனது மகிமையால் மலத்தினுடைய பல வேறு வகைப்பட்ட 
தன்மையை யறிந்து மலத்தினால் மறைக்கப்பட்டுச் சுவதந்திரமில்லாத உயிர்களின் பொருட்டுப் பல வேறு 
வகைப்பட்ட பலன்களைத் தருகின்றான். அவ்விஷயத்தில் பக்குவ மலர்களுக்கு மல பாகத்திற்குத் தகுந்தவாறு 
பரமோக்ஷத்தையும், அபரமோக்ஷத்தையும் தருகின்றார். மல பரிபாகமற்றவர்களுக்கு மலபரிபாகம் 
வருதற்காகவே அவரவர்களின் புண்ணிய பாவ கன்மங்களுக்குத் தக்கவாறு போக ரூபமான பலத்தைத் 
தருகின்றார். இதனால், இவர் எல்லா உயிர்களுக்கும் அநுக்கிரகஞ் செய்கின்றவர் என்பது சித்தித்தது. 
(ஆதலால்) அநாதியான ஞானக்கிரியா சத்திப் பிரகாசமென்னும் சிவத்தன்மையுடையவர் பரமசிவனே (யாவர்).
 அவரின் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன். (1)

    (அ -கை ) இவ்வாறு, நூலாசிரியர் பரமாசாரியராகிய பரமசிவனை நமஸ்கரித்துக்கொண்டு 
மாணாக்கர்களுக்கு இந்நூலைக் கேட்பதில் அவாவுண்டாதற் பொருட்டுத் தனது பிரகரணத்தின் ஆரம்பத்தை 
மேற்கொள்கின்றார்.

(2)     பின்னர், எல்லா வுயிர்களாலும் செய்யப்பட்ட நமஸ்காரத்திற்கு உரியவரான பரமசிவன் அருளிச் 
செய்த நூல்களில் குருவினுடைய உபதேசத்தால் அறியப்பட்ட சில பொருள்களின் உண்மையை மந்தாதிகாரிகளின் 
நன்மையின் பொருட்டுச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் என்பதாம்.

    இவ்விடத்தில் இரௌரவாகமத்தினாற் கிடைத்த பொருளினுண்மையைத் தத்துவ சங்கிரகம் 
என்னும் பிரகரணத்தாற் சுருக்கமாகக் கூறிச் சுவாயம்புவாகமத்தாற் கிடைக்கும் பொருளை இந்தத் 
தத்துவத்திரய நிர்ணயம் என்னும் பிரகரணத்தால் ஆசிரியர் விளக்குகின்றார் என்க. ஆதலினாற்றான், 
தத்துவ சங்கிரகம் என்னும் பிரகரணத்து இறுதியில் " சுவிர்த்தி என்னும் பிரசித்தி பெற்ற இரௌரவ 
விருத்தியைச் செய்த சத்தியோஜாத சிவாசாரியர் இவ்வாறு தத்துவங்களைக் கூறினார்" என்று 
சொல்லப்பட்டிருக்கின்றது.

    இந்தப் பிரகரணத்து இறுதியிலும் " உயிர்களுக்கு அநாதியேயுள்ள அறியாமையை நீக்குதற்கு 
சுவாயம்புவாகம சம்பந்தமாக விருத்திகாரரால் இந்தத் தத்துவத்திரய நிர்ணயம் சொல்லப்பட்டது"
என்று சொல்லுகின்றனர்.

    எல்லா வுயிர்களாலுஞ் செய்யப்படும் நமஸ்காரத்தைப் பெற்றுக் கொள்ளுபவர் பரமசிவனே 
யாதலால் நமஸ்காரத்தைப் பெற்றுக் கொள்ளுபவர் என்னும் அப்பதத்தாற் பரமசிவனே கொள்ளப்படுகின்றனர்.
பரமசிவன் ஒருவனே தான் சர்வேசுவரனா யிருத்தல்பற்றி எல்லோராலும் ஆராதிக்கத் தகுந்தவனாதலால்,
அந்தப் பரமசிவனா லருளிச் செய்யப்பட்ட சிவாகமங்களினால் பரமேசுவரன் முதல்  இடைவிடாத குருபரம்பரை 
முறையில் கிடைத்த பொருளினுண்மையை மந்த அறிவினரின் நன்மையின் பொருட்டுச் சொல்லுகின்றேன். (2)

(3)     சம்பு என்னும் பரசிவமும், உயிரும், மாயையும் ஆகிய மூன்றும், நித்தமாய், வியாபகமாய், கர்த்திரு 
சத்தியுடன் கூடினதாய் இருக்கின்றன. ஆதலால், இம்மூன்று தத்துவங்கள் மாத்திரம் விகாரமான 
காரியங்களனைத்தும் ஒடுங்குங் காலத்திலும் (ஒடுங்காது) நிலைபெறுகின்றன என்பதாம். 

     இவ்விடத்தில், சம்பு என்னும் பதத்தால், இன்னொருவரால் ஏவப்படாமை என்னும் சுகத்தைத் தருகின்றவர் 
என்கிற காரணம் பற்றிப் பிரிக்க முடியாத சிற்சத்தியுடன் கூடிய பரம சிவன் குறிக்கப்படுகின்றார். உயிர் என்னும் 
பதத்தால் உயிர்கள் அநேகமாயினும் உயிர்த்தன்மை என்னும் சாதியொருமை பற்றி எல்லா உயிர்களுங் கொள்ளப்படும்.
மாயையென்று பொதுவாய்க் கூறப்பட்ட பதத்தால் அசுத்த புவனத்திற்கு முதற் காரணமான அசுத்தமாயையும், 
சுத்த புவனத்திற்கு முதற்காரணமான சுத்தமாயை யென்னும் விந்துவும் கொள்ளப்படும். அவ்வாறே, 
இரெளரவாகமத்தில்,  "மாயைக்கு மேல் மகாமாயை"  என்று கூறப்பட்டிருத்தல் காண்க. இந்த மூன்றும் 
அநாதியாகையால் நித்தமாயுள்ளன. இவற்றை ஆதி என்று கொண்டால் இவற்றின் தோற்றத்திற்குக் காரணம்
வேண்டப்பட்டு அவ்வாறே மேலுஞ்சென்று வரம்பின்றியோடுதல் என்னும் குற்றத்திற்கிடனாம். 

    இம்மூன்று தத்துவங்களும் நித்தமென்று நூல்களிலும் நன்றாய்க் கூறப்பட்டிருத்தல் காண்க. இன்னும், 
இம்மூன்றும் வியாபகமா யிருக்கின்றன. இம்மூன்றனுள் சிவமும், உயிர்களும் எவ்விடத்தும் செல்லுதல்
என்னும் வியாபகத் தன்மையுடையன. அவ்வாறு கொள்ளவில்லையானால் ஆகாயம் போல் வடிவமில்லாத 
பொருள்களெனப்பட்டு எங்குஞ் செல்லுதல் கூடாது . ஆதலின், சிவனுக்கு எல்லாப் பொருள்களுக்கும் 
நிலைக்களமாயிருக்குந் தன்மையும், உயிர்களுக்கு எல்லா வுலகங்களினுஞ் சென்று புண்ணிய, பாவ ,
கன்ம பலன்களை யநுபவிக்கும் தன்மையும் கூடாதென்றுணர்ந்து கொள்க.  மாயையும் தன் காரியத்தளவில் 
வியாபகமா யிருக்கின்றது. 

    இவ்விடத்தில் ஆணவ மலத்தைப் பற்றிக் கூறாத கருத்தென்னை யெனின்,  அவ்வாணவமலம் 
நித்தியமாயும், வியாபகமாயுமுள்ள உயிர்களை அநாதியே மறைக்கும் பொருளாதலின், அம்மலமும் 
அவ்வாறே நித்தியமாயும், வியாபகமாயுமிருக்கும் என்பது அருத்தாபத்திப் பிரமாணத்தாற் 
சித்தித்தலாலென்க.  இவ்வாறு வியாபகமாதல் போலவே, இம் மூன்று தத்துவங்களும் கர்த்திரு சத்தியுடன் * 
கூடியன. 

* கர்த்திருசக்தி- தொழிற்செய்யுஞ் சத்தி.

    அவற்றுள், சிவமும், உயிர்களும் அறிவுடைப் பொருள்களாதலின், முறையே உலகத்துக்குக் 
கருத்தாவாயும், போகத்தை அநுபவிப்பதாயும் இருத்தல் பற்றிக் கர்த்திரு சத்தியுடன் கூடியனவாகும்.
கர்த்திரு சத்தியிருத்தலால், ஞாதிரு **சத்தியையும் உடையனவேயாகும். ஞானக் கிரியைகளே அறிவின் 
சொரூபமாதலால், கிரியா சத்தி யிருத்தல் பற்றி ஞானசத்தியும் உண்டென்றறிந்து கொள்க.
அவ்வாறே, அறிவானது ஞானக்கிரியா ரூபமென்று நூல்களினுங் கூறப்பட்டிருக்கின்றது.

 **ஞாதிருசத்தி - அறியுஞ்சத்தி,

    மாயையோவெனில், கர்த்தாவான பரமசிவனுடைய சத்தியால் அதிட்டிக்கப்படுதலின்,
கர்த்திரு சத்தியுடன் கூடியதென்று சொல்லப்பட்டது. ஆதலால், பதி, பசு பாசம் என்னும் மூன்று தத்துவங்களும் 
காரியப் பொருள்கள் ஒடுங்கின காலத்தும் ஒடுங்காது விளங்கிக் கொண்டிருக்கின்றன.     (3)

    (அ-கை) இவ்வாறு, இம்மூன்று தத்துவங்களுக்கும் சமான தர்மத்தோடு கூடியிருக்குந் தன்மையைக்
 கூறிவிட்டு,  இனி வேறுபட்ட தர்மத்தோடு கூடியிருக்குந் தன்மையைக் கூறுகின்றார்.

(4)     சிவனும், உயிர்களும் அளவில்லாத எண்ணையுடையவர்.  மாறுதல் என்னும் பரிணாமம் அற்றவர்.
 அறிவுடனும் கூடினவர்,  மாயா தத்துவமோ எனில் ஒன்றே. மாறுதல் என்னும் பரிணாமத்தோடு கூடினது.
 அறிவில்லாதது என்பதாம்.

    உயிர்கள் அனந்தமாகலான் , அளவில்லாத எண்ணையுடையனவாயின. சிவனோவெனில், 
ஒருவனாதலின், அளவில்லாத எண்ணையுடையன் என்றது எவ்வாறு கூடும் எனில், அநேகமாயுள்ள 
அறிவுடைப் பொருள், அறிவில்லாத பொருள்களுக்கு நிலைக்களமாய் இருப்பதால் உபசாரத்தால் 
உண்டான பேதத்தோடு கூடியிருத்தல்பற்றி உபசாரமாக அளவில்லாத எண்ணையுடையவன் என்று 
கூறப்பட்டது. அல்லது, மலமில்லாமையினால் உண்டான எல்லாப் பொருள்களையும் அறிதலும், 
எல்லாவற்றையுஞ் செய்தலுமான சிவத்தன்மையோடு கூடிய முத்தான்மாக்களையும் சிவசப்தத்தால் 
கொண்டு அளவில்லாத எண்ணையுடையவன் சிவன் என்று கூறப்பட்டதென்பதாம்.

    அந்தச் சிவனும், உயிர்களும் விகாரமற்றிருத்தல் பற்றிப் பரிணாம ரூபமான மாறுதலுடன் 
கூடாதவர். முன் கூறியவாறுபோல், சைதன்னியத்துடன் கூடினவர். மாயா தத்துவம் என்னும் சுத்தமாயை, 
அசுத்தமாயைகள் மேலான முதற்காரணமாய் இருத்தல்பற்றி ஒன்றாயிருக்கின்றன. இவற்றை 
அநேகமெனக் கூறின் சடமாயும்,அநேகமாயும் இருத்தலால் (கடம் முதலியன போல) அநித்தமென்றாகி 
அவை, தனக்கு வேறான காரணத்தை யுடையனவாகும். அம்மாயா தத்துவம் முதற் காரணமாய் 
இருப்பது பற்றியே, காரிய ரூபமான மாறுதலுடன் கூடினதாயும், மண் முதலியன போற் சடமாயும் இருக்கின்றது (4)

    (அ-கை) இவ்வாறு, சிவனுக்கும், ஆன்மாக்களுக்கும் மாயா தத்துவத்தைவிட வேறான தர்மமுடைமை 
யுண்டென்று அறிவித்து , இப்பொழுது ஆன்மாக்களை விடச் சிவனுக்கும் சிவனை விட ஆன்மாக்களுக்கும் 
வேறான தன்மை யுண்டென்று கூறுகின்றார்.

(5)     எவர் எவ்விடத்துஞ் செல்லுகின்ற  சாமர்த்தியமுடையவரோ ,  அவரே ஈசுவரர் . அவருள், ஒருவனான 
பரமசிவன் அநாதியாய்ச் சித்தித்த குணசாமர்த்தியமுடையவன்.  பதியோடு சமம்பெற்ற முத்தான்மாக்களுக்கும், 
ஈசுவரர் எனப்படும் வித்தியேசுவரர்களுக்கும் அந்தப் பரமசிவனாலேயே மலமின்மையும், எல்லாப் 
பொருள்களையும் விஷயமாய்க்கொண்ட ஞானக்கிரியைகளும் உளவாகின்றன என்பதாம்.

    எல்லாப் பொருள்களையும் விஷயமாகச் செய்யும் ஞானக்கிரியா சாமர்த்தியமுடையவ ரனைவரும், 
சுதந்திரர்களாயிருத்தல் பற்றி, "ஈசுவர" என்னும் மொழியால் அழைக்கத் தகுந்தவரேயாவர். அவர்களுள் 
ஒருவனான பரமசிவன் மாத்திரம் அநாதியாய்ச் சித்தித்த குண சாமர்த்தியமுடையவன் என்று கீழே 
கூறப்பட்டிருத்தலால், சிவனோடு சாமியம் என்னும் முத்தியடைந்த முத்தான்மாக்களுக்கும், ஈசுவரர்களான
வித்தியேசுவரர் முதலியோர்களுக்கும் நிமித்த காரணரான அந்தப் பரமசிவனாலேயே மலமின்மையும், 
சிவத்தன்மையின் தோற்றமும் உளவாயின என்க.

    அவர்களுள், வித்தியேசுவரர் முதலியோர் அதிகார மலத்தின் ஏகதேசச் சேர்க்கையால் 
பரமசிவனுடைய ஆணையைப் பெற்று அதிகாரஞ் செய்கின்றனர். முத்தான்மாக்களோவெனில், 
பரமசிவனுடைய ஆணைக்கு விஷயமாகாதவர்களாதலாலும் பரமசிவனாலேயே பரமுத்தி 
அடைந்தவர்களாதலாலும் ஒரு விதமான காரியத்தின் பொருட்டும் பிரவிருத்திப்பதில்லை. (5)

    (அ-கை) அநாதி முத்தனான பரமசிவனுக்கும், சகளர், நிஷ்களர் முதலிய பேதமும், 
ஈசானர், தற்புருஷர் முதலிய பேதமும் நூல்களிற் கூறப்படுகின்றதே எனில், அதற்குச் 
சமாதானங் கூறுகின்றார்.

(6)     சுத்தாசுத்தமான காரியவர்க்கங்கள் சுத்தாசுத்தமான முதற் காரணங்களை 
முதன்மையாக வுடையன. ஆதலால், அநாதியாய்ச் சித்தித்த சுவாமியினிடத்தில் நூல்களில் 
கூறப்பட்ட யாதொரு சகள, நிஷ்கள பேதமும், சிருட்டி முதலிய பஞ்ச கிருத்தியத்தை விஷயமாகக் 
கொண்ட ஈசான முதலிய பேதமும் உபசாரமாகக் கூறப்பட்டன என்பதாம்.

    சுத்த காரியத் தொகுதியும், அசுத்த காரியத் தொகுதியும் சுத்த முதற் காரணத்தையும், 
அசுத்த முதற் காரணத்தையும்  முதன்மையாகக் கொண்டு தோன்றுகின்றன . "தோன்றுகின்றன '' 
என்னும் வினைச்சொல் மூலத்திலில்லையாயினும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஆதலால், 
அநாதியாய்ச் சித்தித்த அந்தப் பரமசிவனிடத்தில் யாதொரு சகள நிஷ்கள பேதமும், சிருட்டி, திதி, 
சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்னும் பஞ்ச கிருத்தியத்தை எதிர் நிரனிறையாய் விஷயமாகக்
கொண்ட * ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்னும் பேதமும் கூறப்பட்டனவோ 
அவையனைத்தும் தனது காரியமான உத்தியோக பேதம் பற்றியும், சிருட்டி முதலிய காரியரூபமான உபாதி 
பேதம் பற்றியும் நூல்களில் உபசாரமாகக் கூறப்பட்டனவேயன்றி உண்மையிலில்லை. அவ்வாறே நூல்களில் 
" அதிகார சிவம், போகசிவம், இலயசிவம் என்னும் சிவபேதமானது காரிய பேதம் பற்றி உபசாரமாகக் 
கூறப்பட்டனவேயன்றி உண்மையிற் கூறப்படவில்லை" என்றும் "ஈசுவரன், சதாசிவன், சாந்தன் என்னும் 
பேதமும் காரிய பேதம் பற்றியே சம்பவித்தன" என்றும் கூறப்பட்டிருத்தல் காண்க.

* ஈசானம்-அநுக்கிரகத்தையும்,  தற்புருடம்- திரோதானத்தையும், அகோரம்--சங்காரத்தையும், வாமதேவம்- திதியையும், 
சத்தியோஜாதம்--சிருட்டியையும் செய்யும்.

    பசு வர்க்கங்களுக்குள் உண்டான சகள, நிஷ்கள பேதம் உபசாரமோ , உண்மையோவெனில் 
உண்மையே.   எவ்வாறெனில், சகலர்கள், மும்மலமுடையரென்றும், கலாசம்பந்தமிருந்து ஞானத்தால் 
கர்மம் நசித்து வாசனா பலத்தால் சிறிது காலம் கலாசம்பந்தத்தோடு இருப்பவரென்றும் இருவகையினர். 
நிட்கலரும், பிரளயத்தில் கலைகள் ஒடுங்கினமையால் ஆணவமலம் கன்ம மலத்தோடு கூடிப் பிரளயாகலரென்றும் 
ஞான, யோக முதலிய சாதனங்களால் கன்மம் நசித்து ஆணவ மல மாத்திரத்துடன் கூடி விஞ்ஞானகலர் 
என்றும் இருவகையினர். முத்தான்மாவோவெனில் மலமற்றவனே. இவ்வாறே சுவாயம்புவாகமத்தில், 
" ஆத்மா மல பந்தமுடையவனாய்ப் பின்னர்த் தீக்ஷையினால் விமலனாய் முத்தனாயிருக்கின்றான். 
அந்த ஆத்மா கேவலனென்றும், சகலனென்றும், அமலனென்றும் மூன்று அவத்தையை யுடையவனாகின்றான் '' 
என்று கூறப்பட்டிருத்தல் காண்க.          (6)

    (அ-கை) பின்னர், பாசத்தாற் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவின் சொரூபத்தைப் பற்றிக் கூறுகின்றார்.

(7)      ஆன்மாக்களுக்கும் சிவனுக்குரிய குணம் போல் எங்குஞ் சென்றிருத்தல் என்னும் வியாபகத் தன்மை
 முதலிய குணங்களிருக்கின்றன. எல்லா ஆன்மாக்களுடைய அந்தக் குணங்கள் ஒரு மலத்தால் அநாதியே 
மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதாம்.

    சிவனைப்போல் ஞானக் கிரியா ரூபமாயும், வியாபகமாயும் உள்ள சொரூபமானது, ஆன்மாக்களுக்கும் 
இருக்கின்றது. அவ்வாறே மிருகேந்திரத்திலும் "யாதொரு காரணத்தால் முத்திக் காலத்தில் ஆன்மாக்களுக்கு 
எல்லாப் பொருள்களையும் விஷயமாகக் கொண்ட ஞானக்கிரியா சத்திகள் தோன்றுகின்றனவோ, அந்தக் 
காரணத்தால் எப்பொழுதும் ஆன்மாக்களிடத்தில் ஞானக் கிரியைகள் இருக்கின்றன” என்று 
கூறப்பட்டிருத்தல் காண்க.

    எல்லா ஆன்மாக்களுடைய சொரூபமான அந்த ஞானக் கிரியைகள் தன்னுடைய பிரகாசத்திற்கு 
வேறு துணையை விரும்புகின்றமையால் ஒருவிதமான மலமென்னும் பொருளால் மறைக்கப்பட்டுள்ளன.
அந்த மலமானது அநாதியே இருத்தல்பற்றி ஒன்றெனவே கொள்ளல் வேண்டும். அவ்வாறன்றி, அநேகம் 
எனக்கொள்ளின் அம்மலம் சடமாயிருத்தலால் அநேகமாயும், சடமாயும் உள்ள கடம் முதலியவற்றிற்கு 
வேறு காரணம் வேண்டப்படுமாறு போல இந்த மலத்திற்கும் வேறு காரணம் வேண்டப்படும். 
அவ்வாறாயின், ஆன்மாக்களுக்கு அநாதியாக மறைத்தலைச் செய்தல் கூடாது. இவ்வாறே
ஸ்ரீ சுவாயம்புவாகமத்திலுங் கூறப்பட்டிருத்தல் காண்க. (7)

(8)     அந்த மலத்தால் சுதந்திரமில்லாதனவாயுள்ள ஆன்மாக்கள், தமது சாமர்த்தியத்தின் விளக்கம் 
இன்றிச் செயலற்றனவாயும், அறிவில்லாதனவாயும் இருக்கின்றன. அவ்வான்மாக்கள் தமது சாமர்த்தியத்தை 
மலத்தால் மறைக்கப்படாததாகவும், எல்லாப் பொருள்களையும் அறியும் தன்மையுடையதாகவும் தாமே 
செய்து கொள்ளுதற்குச் சாமர்த்தியமுடையனவாகா என்பதாம். 

    ஆன்மாக்கள் மலத்தோடு கூடியிருத்தலால், தமது சாமர்த்தியமான  ஞானக்கிரியா சத்திகளின் 
விளக்கம் இன்றிச் சுதந்திரம் இல்லாதனவாயும், ஞானமில்லாதனவாயும், கிரியையில்லாதனவாயும் ஆகின்றன.
ஆதலால், தமது சாமர்த்தியத்தை  விளக்கம் செய்யக் கூடிய சிவனை எதிர்பார்க்கின்றன என்பது கருத்து.

    சுலோகத்தின் பிற்பாதியால் ஆன்மாக்கள் தமது ஞானத்தினால் தமது சாமர்த்தியத்தின் விளக்கத்தைச் 
செய்து கொள்ளுமென்றல் கூடாது என்று கூறுகின்றனர்.

    அவ்வாறு கூறியதன் கருத்தாவது, மலமானது திரவிய மாயிருத்தலால்  கண்ணிலுள்ள திரவியமான 
படலம் போல் ஞானமாத்திரத்தால்  நாசமடைவதில்லை. ஆனால் வேறான கண் வைத்தியன் செயலால் படலம் 
நசிப்பது போல, மலம் ஈசுவர வியாபாரமான தீக்ஷையினாலேயே நசிக்குமென்க. இவ் விஷயம் தத்துவ சங்கிரக 
லகு வியாக்யானத்தில் நம்மால் விரிவாய்க் கூறப்பட்டிருத்தல் காண்க.     (8)

(9)      யாதொரு காரணத்தால் ஆன்மாக்களுக்கு மலத்தின் தடையிருத்தல் பற்றிச் சிவனால் *வசீகாரம் 
அநாதியாய்ச் சித்தித்திருக்கின்றதோ, அந்தக் காரணத்தால் இந்த ஆன்மாக்கள் சிவனால் மறைக்கப்படுவனவாகவும்,
 கட்டப்படுவனவாகவும், சோதிக்கப்படுவனவாகவும், போதிக்கப்படுவனவாகவும் இருக்கின்றன என்பதாம்.

* வசீகாரம் - தன் வசமாகச் செய்தல்.

    ஆன்மாக்கள் மலத்தால் மறைக்கப்பட்டிருத்தலால், மலத்தால் மறைக்கப்படாத பரமசிவனால் 
அநாதியே தன்வசமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தக் காரணத்தினாற்றான் இவ்வான்மாக்கள் 
திரோதான சத்தியால் மறைக்கப்பட்டிருக்கின்றன. கன்ம பலன்களை அநுபவிப்பதற்காகக் கலை 
முதலிய தத்துவங்களாற் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விடத்தில், திரோதானமென்பது, பாசத்துக்குச் 
சாமர்த்தியத்தை உண்டுபண்ணி, ஆன்மாக்களுக்கு யோக்கியமான போகங்களை அநுபவிக்கச் 
செய்தல் என்னும் திரோபவமாகும்.  பின்னர், மலபரிபாகம் வந்து தீக்ஷையினால் மலம் முதலிய  
பாசம் நசிக்கச்செய்து சோதிக்கத் தகுந்தவராவர். அந்தச் சிவத்தன்மையின் விளக்கத்தால் 
அறிவிக்கத் தகுந்தவராகவும் ஆகின்றனர்.*     (9)

* சிவத்தன்மை விளங்கப்பெறுகின்றனர் என்பது கருத்து

    (அ-கை) இவ்விஷயத்தில் பூருவபக்ஷியினுடைய ஆசங்கையைக் கூறுகின்றார்.

(10)     ஞானம் முதலிய சாமர்த்தியம் நித்தியமாய்ச் சித்தித்திருந்தால் மலம் முதலியவற்றை ஒப்புக்கொள்ளுவது
 நியாயமாகும் எனில், அஃதுண்மையே. யாதொரு காரணத்தால் ஈசுவரனிடத்தில் ஞானக்கிரியா சாமர்த்தியம் 
நித்தியமாய்க் காணப்பட்டிருக்கின்றதோ, அந்தக் காரணத்தால் அதனினும் வேறாய் ஆன்மாவினிடத்து 
அநித்தியமான ஞானக்கிரியைகளை ஒத்துக்கொள்ளுதல் கூடாது என்பதாம்.

    ஞானக்கிரியா சாமர்த்தியம் நித்தியமாகச் சித்தித்திருந்தால் அவற்றை மறைத்தற் பொருட்டு 
மலம் முதலியவற்றை ஒப்புக்கொள்ளுவது நியாயமாகும். அந்த ஆன்மாவினிடத்துள்ள ஞானக்கிரியா 
சாமர்த்தியம் அநித்தியமாய்க் காணப்படுகிறபடியால் மறைக்கத் தகுந்த மலம் முதலிய பொருள்களை 
எதற்காக ஒப்புக்கொள்ளல் வேண்டும்? என்று ஆசங்கை நிகழ, அதற்குச் சமாதானங் கூறுகின்றார். அஃதுண்மையே.

    யாதொரு காரணத்தால் ஈசுவரனிடத்தில் அந்த ஞானக்கிரியா ரூபமான சைதன்னியமானது 
நித்தியமாகக் காணப்படுகிறதோ அந்தக் காரணத்தால் ஆன்மாக்களிடமிருக்கும் ஞானக் கிரியைகளும்,
 சைதன்னியமாயிருத்தல் பற்றி நித்தியமேயாகும். அவ்வாறு கொள்ளாவிடில், ஆன்மாக்களுக்கும் விகாரம் 
ஏற்பட்டுச் சடத்தன்மை, அநித்தியத் தன்மை முதலிய குற்றங்கள் சம்பவிக்கும் என்க (10)

    (அ-கை) மலம் என்னும் பொருளை ஒத்துக்கொள்ளா விடின் ஆன்மாக்களுக்குச் சரீர சம்பந்தமும் 
சம்பவியாது என்று கூறுகின்றார்.

(11)     சம்சாரிகளுக்கு மாயாவிகாரமான தேக சம்பந்தத்தில் கன்மத்தோடு கூடிய மலமானது காரணமாய் 
இருக்கின்றது.  மலசத்திகள் ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் வேறு வேறாக இருந்து கொண்டு ஆத்ம 
குணங்களை மறைக்கின்றன என்பதாம்.

    கன்ம பலன்களை அனுபவிப்பதன் பொருட்டுச் சரீர முதலியவை அவசியமாதலால், மலமில்லாத 
முத்தாத்மாக்களுக்குக் கர்மாநுபவம் இல்லாமை பற்றிச் சரீர சம்பந்தம் இல்லை. இவ்வாறே ஸ்ரீ சுவாயம்புவாகமத்தில்
“பசுவினுடைய மாயா மயமான எல்லா  உள்பொருள்களும் கர்மாநுபவத்திற்காகவே இருக்கின்றன” என்றும், 
"அவ்வாறே வேறிடத்திலும், உயிர்களுக்குக் கன்மத்தினாலும் அநேகவிதமான சரீரங்கள் உண்டாகின்றன" என்றும் 
கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறாயின் மலம் ஒன்றாதலால் ஒரு ஆன்மாவினுடைய மோக்ஷ காலத்தில் எல்லா 
ஆன்மாக்களும் மோக்ஷம் அடைய வேண்டும் என ஆசங்கை நிகழ, மலசத்திகள் என்னும் பிற்பாதியாற் சமாதானங் 
கூறுகின்றார். அஃதாவது, மலமானது ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் வேறு வேறான அநேக சத்திகளுடன் 
கூடியிருத்தலால் ஒரு சத்தியானது பரிபாகத்தால் நசிக்க அந்தச் சத்தியால் மறைக்கப்பட்ட ஆத்மாவுக்குத் 
தான் மோக்ஷம், அனைவருக்கும் இல்லையென்பது கருத்து என்க. (11)

(12)     மலமானது பக்குவமடையுங் காலத்தில் ஆன்மாக்களினுடைய ஞானக்கிரியைகளை மறைப்பதினின்றும் 
நீங்குகின்றது. பரிபாக விசேடத்தின் சேர்க்கையால் அந்த மலமானது  ஒவ்வொரு ஆத்மாவிற்கு ஒவ்வொரு சமயத்தில் 
ஒவ்வொரு விதமாக நீங்குகின்றது என்பதாம்.

    மலமோ வெனில், பரிபாக மடைவதனால் ஆன்மாக்களினுடைய ஞானக்கிரியைகளை மறைத்தலினின்றும் 
நீங்குகின்றது.  அம்மலம் சடப்பொருளாயிருத்தலால், தானாகவே நீங்குகிறதில்லை. ஆயின், எதனால் நீங்குகின்றதெனின், 
சிவனுடைய செய்கையான தீக்ஷையினாலேயே நீங்குமென்று மேலே சொல்லியிருக்கின்றோம். பரிபாக விசேட 
சேர்க்கையால் என்னும் பிற்பகுதியால், அந்த மலபரிபாகமானது, முறையே விரிகின்ற சுபாவமுடைய தாமரைபோல 
நியதமான காலத்தை யுடையதில்லை என்று கூறுகின்றார். (12)

    (அ-கை) ஆதலால், பரிபாக விசேட சம்பந்தத்தால் பரிபாகத்தின் தாரதம்மியம் நிகழ்ந்து 
அம்மலபரிபாக விசேஷ ரூபமான சாதன வேறுபாட்டால் ஆன்மாக்களுக்குப் பரமுத்தி, அபரமுத்தி 
என முத்தி வேறுபாடுகள் நிகழ்கின்றன என்று  கூறுகின்றார். 

(13)     ஆதலினாற்றான் ஆன்மாக்களுக்குக் காலபேதம், குணபேதம் என்னும் சாதன வேறுபாட்டால் 
முத்தி வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேறு காரணத்தாலில்லை. ஒரு காலத்தும் ஈசுவரனிடத்திருந்து 
முக்தி வேறுபாடு சம்பவிக்காது என்பதாம்.

    மதங்கம் முதலிய மூலாகமங்களில் ஏழு விதமாகக் கூறப்பட்ட முத்தியானது பத்தி சிரத்தை என்னும் 
குண வேறுபாடு, காலவேறுபாடு முதலிய சாதன வேறுபாட்டால் உண்டாகின்றன. அச்சாதன வேறுபாடானது 
மலபரிபாக தாரதம்மியத்தினாலேயே நிகழ்கின்றன .வேறு விதத்தால் நிகழ்தலில்லை. மலபரிபாகத்தைக் 
காரணமாகக் கொள்ளாத தனித்த ஈசுவரனிடமிருந்தே இவ்விதமுத்தி வேறுபாடுகள் உண்டாவனவல்ல. 
இவ்வாறு கொள்ளவில்லையானால், நடுவின்மை முதலிய தோஷங்கள் ஈசுவரனுக்கும் உண்டெனக் 
கொள்ள வரும். எல்லா ஆன்மாக்களுக்கும் அநுக்கிரகம் செய்யும் ஈசுவரனுக்கு நடுவின்மை 
உண்டென்றல் கூடாது என்க.      (13)

    (அ-கை) இம் மலபரிபாக தாரதம்மியம் பற்றியே நைட்டிகம் முதலிய தீக்ஷை வேறுபாடும் 
பொருத்தமுடையன என்று கூறுகின்றார்.

(14)     இவ்வாறு அளவில்லாத மலபரிபாகம் என்னும் நிமித்தத்திற்கு ஏற்ப, ஈசுவரனால் முத்தியின் 
பொருட்டு நல்ல யுத்தியுடன் சாதன வேறுபாடுகள் கூறப்பட்டன. அவ்வேறுபாடுகள் வேறு காரணத்தாற் 
கூறப்படவில்லை என்பதாம்.

    இதன் கருத்தாவது, மலபரிபாகம் அநேகமன்றி ஒரே விதமாய் இருந்தால் மல நிவிர்த்திக்கான 
உபாயமும், நிவிர்த்தியினாலுண்டாகும் பயனும் ஒரேவிதமாக இருக்கவேண்டும்.  அவ்வாறின்மையின், 
மலபரிபாகம் அநேக விதமென்க. இவ் விதமான தீக்ஷையின் வேறுபாடும் மலபரிபாகத்தின் வேறுபாடும் 
நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்க் கூறப் பட்டிருக்கின்றன (14)

    (அ-கை) சாதனங்கள் அநேகம் என்பதை விரித்துக் கூற ஆரம்பிக்கின்றார்.

(15)     மலமானது எந்த ஆத்மாவிற்கு எவ்வகைப்பட்ட பாசங்களோடு எவ்வாறு நின்று தடை செய்கின்றதோ, 
அவ்வாறே அந்த ஆன்மாவிற்கு அவ்வகைப்பட்ட பாசங்களோடு அவ்வாறு நின்று பந்தப்படுத்துந் 
தன்மையினின்றும் நீங்குகின்றது என்பதாம்.

    மலமானது, எந்த விஞ்ஞான கேவலர் முதலிய ஆன்மாக்களுக்கு எத்துணைப் பாசங்களோடு 
எவ்வாறு  நின்று தடைசெய்கின்றதோ, அந்தந்த ஆன்மாக்களுக்குத் தன்னுடனிருக்கும் அத்துணைப் 
பாசங்களோடு, தான் பந்தப்படுத்துந் தன்மையினின்று நீங்குகின்றது. அஃதாவது, விஞ்ஞான கேவலருக்கு 
மலம் தான் மாத்திரமாயிருந்து தனது காரியரூபங்களான அறியாமை, செயலில்லாமை, கேடடைதல் என்னும் 
பாசங்களோடு கூடித் தடைசெய்கின்றது. இவ்வாறே சுவாயம்புவாகமத்திலுங் கூறப்பட்டிருத்தல் காண்க.
பிரளயாகலருக்குக் கன்மத்துடன் கூடி மேற்கூறப்பட்ட பாசங்களோடு தடை செய்கின்றது.  சகலருக்கு 
அக்கன்மங்களோடும், அவற்றிற்கு உரிமையான பொது, சிறப்பு என்னும் புவனங்களோடும் மேற்கூறிய 
பாசங்களோடுங் கூடித் தடைசெய்கின்றது.  நீங்கும் பொழுதும் அவ்வவற்றோடு நீங்குகின்றது என்க (15)

(16)     (ஆதலால்) இவ்வாறு மலநாசங்களைச் செய்யக் கூடிய முத்தி சாதனங்கள் யாதொரு காரணத்தாற் 
சிவசாத்திரங்களான சிவாகமங்களிற் காணப்படுகின்றனவோ, அந்த முத்தி சாதனங்கள்,மலபரிபாகத்தின் 
தாரதம்மியமான அந்தக் காரண வேறுபாடில்லையாயின் யுத்தியுடன் கூடினவையாகச் சித்திப்பதில்லை என்பதாம்.

    வேறாயும், உடனாயும் உள்ள பாசங்களுக்கு நாசத்தைச் செய்வனவாயும், சகலர் முதலிய வேறுபாட்டால் 
சாதார, நிராதாரமென்னும் பகுப்பினையுடையனவாயும், நைட்டிகம் முதலிய வேறுபாடுகளையுடையனவாயும் 
விளங்கும் தீக்ஷை என்னும் சாதனங்கள் எந்தக் காரணத்தால் நூல்களிற் சொல்லப்படுகின்றனவோ, அந்தக் 
காரணத்தால் அந்தச் சாதனங்கள், மலபரிபாக தாரதம்மிய மென்னுங் காரண வேறுபாடு இல்லையாயின்
யுக்திக்குப் பொருத்தமாகச் சித்திப்பதில்லை. ஆதலால், நூல்களிற் கூறப்படுஞ் சாதன வேறுபாடு யுத்தியோடு 
பொருந்த வேண்டுமாயின என்னும் அருத்தாபத்திப் பிரமாணத்தால் முத்தி வேறுபாடும், அதற்குக் காரணமான 
மலபரிபாக வேறுபாடும் உறுதியாய்க் கொள்ளத்தக்கன. 

    மலபரிபாகத்திற்கு அடையாளங்கள் நூல்களிற் சொல்லப் படுகின்றன.  எவ்வாறெனில் எந்த ஆன்மாவுக்குச் 
*சத்தி நிபாதம் உண்டாகின்றதோ அந்த ஆன்மாவிற்கு அதனடையாளமாக முத்தியில் மிகுந்த விருப்பமும், 
சமுசாரத்தில் வெறுப்பும், சிவனடியார்களிடத்துச் சிரத்தையும், சிவசாத்திரங்களில் பத்தியும் நிகழும். 
இவ்வித அடையாளம் இருந்தாற்றான் ஆசிரியரால் தீட்சை செய்யத் தகுந்தவராவர். இல்லையாயின், 
தீட்சைக்கு உரியராகார் என்க.

* மலபரிபாகத்தில் நிகழ்வது சத்திநிபாதம்.

    (அ-கை) இவ்விஷயத்தில் பூருவபக்ஷியின் ஆசங்கையைக் கூறுகின்றார்.

(17)     மலத்தைப் பக்குவமாகச் செய்பவர் எவர்? எனில் எவரொருவர் உயிர்களின் பொருட்டு பலவிதமான 
கன்மங்களுக்கேற்பச் சரீர முதலிய சாதனத்தோடு கூடிய  பலவிதமான போகங்களை முதற்காரணமான 
அசுத்த மாயையிலிருந்து தோற்றுவித்துக் கூட்டுவிக்கின்றாரோ அவரேயாம் என்பதாம்.

    மலம், தான் சடமாயிருத்தலால் தானே பரிபாகமடையாது.  ஆதலால், அதனைப் பாகஞ் செய்பவர் யார் ? 
என்பது வினாவின் கருத்து. இதற்குக் கூறிய சமாதானமாவது எவரொருவர் நானாவிதமான கன்மங்களுக்கு 
போக்கியமான நானாவித சுகதுக்காநுபவங்களையும், அச்சுக துக்காநுபவங்களுக்குச் சாதனங்களான சரீர 
முதலியவற்றையும், அசுத்த மாயா தத்துவத்திலிருந்து தோற்றுவித்து உயிர்களின் பொருட்டுக் கொடுக்கின்றாரோ
 அவர் தான் பரமசிவன்.  அந்தப் பரமசிவனே மலத்தையும் திரோதான சத்தியால் பாகமடையச் செய்கின்றார். 
அவ்வாறு செய்யும்  விஷயத்தில் அசுத்தாத்துவாவில் அனந்த தேவரை யதிட்டித்துச் செய்கின்றார். பரம சிவன் 
நேரே செய்வதில்லை. அவ்வாறே கிரணாகமத்திலும் "சுத்தாத்துவாவில் சிவன் கருத்தா ; அசுத்தாத்துவாவில் 
அனந்தர் கருத்தா '' என்று கூறப்பட்டிருத்தல் காண்க. (17)

    எவரொருவர் சுவாப காலத்தில் * முதற்காரணத்தைப் பரிணமிப்பதற்கு யோக்கியமாகச் 
செய்கின்றவராயிருக்கின்றாரோ, அவரே பிரளய காலத்தில் ஆன்மாக்களுடைய இளைப்பு நீக்கத்தின் 
பொருட்டு அந்த முதற்காரணத்தில் (ஒடுக்கி) வைக்கப்பட்ட உலகத்தையும் போக யோக்கியமாகச் 
செய்கிறார் என்பதாம்.

*சுவாப காலம்-ஒடுக்கி வைத்திருக்குங் காலம்.

    சுவாப காலத்தில் பரமசிவன் நானாவித சத்தியையுடைய மாயையைக் காரிய ரூபமாய்ப் 
பரிணமிப்பதற்கு யோக்கியமாகச் செய்கின்றான். ஆன்மாக்களையும் மறுபடியும் போக 
யோக்கியர்களாகச் செய்கின்றான்     (18)

(19)     கன்மங்களையும் உயிர்களின் போகத்தின் பொருட்டு யோக்கியமாகச் செய்கின்றார்.
 சர்வ வல்லமையைத் தரக்கூடிய பரமசிவன், எப்பொழுதும் தயையுடையவராதலால் உலகமானது 
காரிய ரூபமாய் விளங்கும் பொழுதும் எப்பொழுதும் மலத்தோடு கூடிய சில கன்மங்களைக் கன்ம 
நிவிர்த்தியின் பொருட்டுப் போக யோக்கியமாகச் செய்கின்றார் என்பதாம்.

    கன்மங்களையும் உயிர்களின் போகத்திற்கு யோக்கியமாகச் செய்கின்றார்.  அஃதாவது, பக்குவமாகச் 
செய்கின்றாறென்பது கருத்து.  அவ்வாறே, மிருகேந்திரத்திலும் " சகலாவத்தையைப் போல கேவலாவத்தையிலும் 
மல பரிபாக தாரதம்மியத்திற்குத் தக்கவாறு அறிவிக்க வேண்டியவர்களை அறிவித்துக் கொண்டும், 
'மறைப்புச் சத்தியாற் றடுக்கவேண்டியவர்களைத் தடுத்துக்கொண்டும், உயிர்களின் கன்மங்களைப் 
பக்குவமாகச் செய்துகொண்டும், மாயா சக்திகளைப் பரிணமிப்பதற்குத் தயாராகச் செய்துகொண்டும் 
தோன்றுதற்குரிய சித்துப் பொருள் சடப்பொருள்களையும் பார்த்துக்கொண்டும் இருக்கின்றார் " என்றும், 
அவ்வாறே " சம்சாரத்தினால் துன்பமடைந்த சம்சாரிகளுக்கு இளைப்பு நீக்கத்தின் பொருட்டு எல்லா வுயிர் 
வர்க்கங்களுக்கும் நன்மையைச் செய்பவரான சிவபெருமான், போக சாதனங்களை உயிர்களுடன் கூட 
மாயையில் ஒடுங்கச் செய்து அந்த மாயையினையும் கடந்து நிற்கின்றார் ' என்றும் கூறப்பட்டிருத்தல் காண்க.

     இவ்வாறு பிரளயகாலத்தில் சிவனுடைய வியாபாரத்தைத் தெரிவித்து திதிகாலத்திலும் சிவனுடைய 
வியாபாரத்தைக் கூறினார்.  எவ்வாறெனின், ஆன்மாக்களுக்குச் சர்வஞ் ஞத்துவத் தன்மை சர்வ கர்த்திருத் தன்மை 
யென்னும் பெரும் வல்லமையைத் தருபவரான பரம சிவன் எப்பொழுதுங் கருணையோடு கூடியிருத்தலால் 
உலகம் காரிய ரூபமாயிருக்கும் பொழுதும், மலத்தோடு கூடிய சில கன்மங்களை அநுபவத்தினால் 
பக்குவமடையச் செய்து நிவிர்த்திக்கு யோக்கியமாகச் செய்கின்றார் என்றவாற்றாலென்க. இதன் கருத்தாவது, 
மல பரிபாகத்தின் பொருட்டுப் பக்குவமான சில கன்மங்களைத் திதி காலத்தில் அநுபவிக்கச் செய்கின்றார் என்பது (19)

(20)     மல நிவிர்த்திக்கு முன்னரே மலத்திற்குத் தடை செய்யும் சாமர்த்தியத்தை உண்டுபண்ணுதற் 
பொருட்டு உயிர்களுடைய ஆற்றலுக்குத் தடையையும், பாசத்திற்குச் சகாயத்தையும் செய்கின்றவராய் 
அந்தப் பரமசிவன் காணப்படுகின்றார் என்பதாம்

    மல நிவிர்த்தி யடைவதற்கு முன்னர், அந்த மலம் சடமாயிருத்தலால், அதற்குத் தானாகவே 
பரிபாகம் சம்பவிக்காமை பற்றி அதன் சாமர்த்தியத்தை நிகழச் செய்யும் பொருட்டுத் திரோதான 
சத்தியால் உயிர்களின் ஆற்றலுக்குத் தடையையும், தடை செய்யும் சக்திக்குச் சகாயத்தையும் 
செய்கின்றவராய்ப் பரமசிவன் காணப்படுகின்றார். உயிர்களுக்கு அநுக்கிரகம் செய்வதற்காகப் 
பிரவிருத்தித்த பரமசிவன் அவ்வுயிர்களினுடைய ஆற்றலை மறைத்துப் பாசங்களுக்கு அநுக்கிரகஞ் 
செய்தல் பொருந்துமோவெனில், இக்கேள்வி பொருந்தாது. 

    எதனாலெனில், கூறுதும் :--மலம் பரிபாகமடையவில்லையாயின் அதனை நீக்க முடியாது. 
ஆதலால் அம்மல பரிபாகத்தின் பொருட்டு மாயாகாரியங்களின் சம்பந்தத்தால் போகங்களை 
அநுபவிக்கச் செய்தல் என்னும் திரோதானத்தை ஈசன் செய்கின்றான். இத்திரோதானம் துக்கத்தைத் 
தரக்கூடியதாயிருப்பினும், நோய் நிவிர்த்தியின் பொருட்டுத் துக்கத்தைத் தரக்கூடிய காரம் முதலிய 
மருந்துகளால் பின்னர் துக்க நிவிர்த்தியாகிய சுகத்தை வைத்தியன் தருமாறு போலென்க. 
அவ்வாறே மிருகேந்திரத்திலும், '' எவ்வாறு வைத்தியன் நோயுடையானைப் புல் முதலியவற்றின் 
கார முதலியவற்றை வைத்துத் துன்புறச் செய்யினும், முடிவில் நன்மையாய் முடிகின்றமையால்,
துன்பத்தைத் தருபவனாக ஆகின்றானில்லையோ, அவ்வாறே ஈசனும் மல நீக்கத்திற்காகச் செய்யும் 
துன்பாநுபவத்தைத் துன்பமாக எண்ணக்கூடாது"  என்று கூறப்பட்டிருத்தல் காண்க. (20) 

(21)     சிவபெருமான், மலம் நிவிர்த்திக்கு யோக்கியமாயிருப்பதை யறிந்து உயிர் வர்க்கங்களின் 
முத்தியின் பொருட்டு சாதனத்தைச் சேர்க்கின்றார். கேவலத்தில் மாயைக்குப் பரிபாகம் உளவாதல் 
போல மலத்திற்கும் அசேதனமாயிருத்தலாற் பரிபாகம் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாம்.

    மலம் பரிபாகமடைந்து நிவிர்த்திக்கு யோக்கியமானதென்று அறிந்து பரமசிவன் உயிர்களின் 
முத்தியின் பொருட்டுத் தீட்சையென்னும் பெயருடைய தனது சத்தி ரூபமான சாதனத்தைச் 
சேர்க்கின்றாரென்பது கருத்து. அவ்வாறாயின், கன்மாநுபவத்தையே மல பரிபாகத்திற்குக் காரணமாகக் 
கூறியிருத்தலால் பிரளய காலத்தில் மலத்திற்குப் பரிபாகம் சம்பவியாதென்று வினவ, பிரளய காலத்தில் 
மாயையைப் போல மலமும் சடப்பொருளா யிருத்தலால் சித்துப் பொருளாகிய பரமசிவனால் 
அதிட்டிக்கப்பட்டுப் பரிபாகத்தை யடைகிறது என்று சமாதானம் கூறப்பட்டது . (21)

    (அ-கை) இவ்விஷயத்தில் பூருவபக்ஷிகளின் ஆசங்கையைக் கூறுகின்றார்.

(22)     பரமசிவன் மலத்தை, நிவிர்த்திக்க யோக்கியமாகச் செய்கின்றார் எனில், அவ்வாறு செய்யுங் 
காலத்து எல்லா ஆன்மாக்கள் விஷயத்திலும் ஒரேவிதமாக ஏன் செய்கின்றாரில்லை? என்று கேட்கும் 
பூருவபக்ஷியானவன் அடுத்த சுலோகத்திற் கண்டவாறு நம்மால் வினாவத் தகுந்தவனாவன் என்பதாம். (22)

    (அ - கை) எவ்வாறு வினாவத் தகுந்தவன் என்பதைக் கூறுகின்றார்.

(23)     பரமசிவன் அவரவர்களுடைய கன்மங்களை ஒரே  காலத்தில்  அநுபவிக்க யோக்கியமாகவாவது 
கன்மங்களைச் செய்த மறு க்ஷணத்தில் அநுபவிக்க யோக்கியமாகவாவது ஏன் செய்கிறாரில்லை? என்று 
கேட்போம். அநேகமாயிருத்தலால் வெவ்வேறு காலங்களில் அநுபவிக்க யோக்கியமாயிருக்கின்றது 
என்று பூருவபட்சி சமாதானங்கூறின், அது சமாதானமாகாது என்பதாம்.

    அசுவமேதம், பிரமக்கொலை முதலிய கன்மங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடான பயனை
யுடையனவாயிருத்தல் பற்றி ஒரே காலத்தில் அநுபவங் கூடாதென்று  சமாதானங்  கூறின், அந்தச் சமாதானம் 
பொருந்தாது என்றன .     (23)

    (அ-கை)  அது ஏன் சமாதானமாகாது என்று கேட்பவனுக்குக் கூறுகின்றார்.

(24-25)      யாதொரு காரணத்தால் ஈசுவரனிடத்தில் சர்வ விகாரங்களையும் உண்டுபண்ணுவதில்
 சாமர்த்தியம் வாய்ந்த சத்தியும், மாயையினிடத்தில் எல்லாக் கன்ம பலன்களுக்கும் வியாபகமா யிருக்குந் 
தன்மையும், சம்சாரியினிடத்தில் வியாபகத் தன்மையும் போகத்தை யநுபவிக்கும் கர்த்தாவாயிருக்குந் 
தன்மையும் இருக்கின்றனவோ, அந்தக் காரணத்தால், ஈசுவரன் மாயா தத்துவத்தில் நின்று அநேக விதமான 
தநு கரணாதிகளை யுண்டுபண்ணி ஒரே காலத்தில் எல்லாக் கன்ம பலன்களையும் உயிரை யநுபவிக்கும்படி 
செய்யவேண்டும் என்பதாம்.

    எல்லா உயிர்களுக்கும் ஒரே காலத்தில் மல பரிபாகத்தை ஈசன் ஏன் செய்வதில்லை என்று கேட்கும் 
பூருவபக்ஷியை, எந்தக் காரணத்தால் சிவனிடத்தில் சாதாரண அசாதாரணம் என்னும் மாயா விகாரங்களை 
யுண்டுபண்ணும் விஷயத்தில் சாமர்த்தியம் வாய்ந்த சத்தியிருக்கின்றதோ அவ்வாறே மாயையினிடத்திலும்
எல்லாக் கன்ம பலன்களிடத்திலும் வியாபகமாயிருக்குந் தன்மையும், சம்சாரியினிடத்தில் வியாபகத்
தன்மையும், போகத்தை யநுபவிக்கும் கர்த்தாவாயிருக்குந் தன்மையும் இருக்கின்றனவோ, அந்தக் காரணத்தால் 
ஈசன் மாயா தத்துவத்திலிருந்து ஒரே காலத்திலேயே அநேக சரீரம் முதலியவற்றை யுண்டுபண்ணி எல்லாக் கன்ம 
பலன்களையும் உயிரை யநுபவிக்கச் செய்தல் வேண்டும் என்று கேட்போம்.     (24-25)

    (அ-கை) மறுபடியும் பூருவபக்ஷியின் ஆசங்கையைக் கூறுகின்றார். 

(26)     முற்பிற்பாடான முறையில் அநுபவிக்கப்படும் கன்ம பலன்களைக்கொண்டு (கன்மத்தின் பக்குவமும் 
ஒன்றன் பின்னொன்றாக உண்டாகும் என்று) அனுமானஞ் செய்கின்றோம். (என்பது பூருவபட்சியின் கூற்று) .
அவ்வாறே பரமசிவன் மலங்களையும் பக்குவஞ் செய்கின்றான். (என்பது சமாதானம்) ஆதலால், கன்ம 
பரிபாகத்திற்கு நீ கூறுஞ் சமாதானமே மல பரிபாகத்திற்குமாம் என்பதாம்.

    கன்ம பலத்தின் அநுபவம் ஒன்றன் பின் ஒன்றாய் நிகழக்காண்கின்றமையால், சூரியனால் 
தாமரையிதழ்கள் ஒன்றன்பின் ஒன்றாய் விரியப்படுமாறு போல, சிவபெருமானால் கன்ம பரிபாகமும், 
அதன் பலன்களை பநுபவிப்பவனுடைய தகுதிக்குத் தக்கவாறு ஒன்றன்பினொன்றாய்ச் செய்யப்படுகிறதென்று       ( திருத்:படுறதென்று/படுகிறதென்று)
அநுமானஞ் செய்கின்றோம் எனில், நன்று சொன்னாய். நீ சொல்லியவாறு போலவே, ஆன்மாக்களுக்கு 
ஒன்றன் பின் ஒன்றாய்  நிகழக்கூடிய சம்சாரத்தில் வைராக்கியம், சிவபத்தி முதலிய சத்திநிபாதக் குறிகளைக்
 கொண்டு அந்தச் சத்திநிபாதத்திற்குக் காரணமான மல பரிபாகமும் ஒன்றன் பின் ஒன்றாய் உண்டாகின்றதென்று 
நம்மாலும் அநுமானஞ் செய்யப்படுகின்றது. ஆதலால், உன்னால் ஒரே காலத்தி லுயிர்களனைவருக்கும் மலபரிபாக 
முண்டாகட்டும் என்ற ஆசங்கை நம்மிடஞ் செய்யத் தக்கதன்று. அவ்வாறே, வேறு நூல்களிலும் கேள்வியுஞ் 
சமாதானமும் வாதி பிரதிவாதிகளுக்குப் பொதுவாயிருந்தால் அவ்விஷயத்தில் ஒருவனை ஒருவன் கேள்வி 
கேட்கத் தகாதென்று கூறப்பட்டிருத்தல் காண்க (26)

    (அ-கை) இவ்விஷயத்தையே வெளிப்படையாகக் கூறுகின்றார்.

(27)     மேலே கூறப்பட்ட சத்திநிபாதத்திற்குக் காரணமான தீக்ஷை செய்தல் முதலிய காரியங்களைக் 
கொண்டு மல நாசம் ஊகித்தறியப் படுகின்றபடியால் பரமேசுவரனும் மலத்தைப் பரிபக்குவமாகச் 
செய்வதற்குச் சமர்த்தனாகின்றான் என்பதாம்.

    மேலே கூறப்பட்ட தீக்ஷை செய்தல் முதலிய சக்தி நிபாதக் குறிகளைக்கொண்டு மல நிவிர்த்தி 
யறியப்படுகின்றது. படவே, ஒன்றன்பினொன்றாய்க் காரியங்கள் காணப்படுகின்றமையால் அவ்வாறே 
மல பரிபாகத்தையும் சிவன் செய்கின்றான். ஒரே காலத்திற் செய்கிறதில்லை யென்று அநுமானஞ் 
செய்கின்றோம்.     (27)

    (அ-கை) இவ்வாறு திதி காலத்தில் மல பரிபாகம் கிரமமாய்க் காணப்படுவதுபோலச் 
சங்கார காலத்தும் மல பரிபாக யோக்கியர்களுக்குத் தகுந்தவாறு மல பரிபாகம் உண்டாகின்றது. 
அவ்வாறின்றி ஒரே காலத்தில் அனைவருக்கும் மல பரிபாகம் உண்டாகின்றதில்லை. ஆதலால், 
சங்காரகாலத்தில் ஒரே விதமாக மலபரிபாகத்தை ஈசுவரன் ஏன் உண்டு பண்ணவில்லை? என்னுங் 
கேள்வி உன்னாற் கேட்கத் தக்கதில்லை.  கேட்பின், நீயே சமாதானங் கூறத்தகுந்தவனாவாய் 
என்று கூறுகின்றார்.

(23)     திதிகாலத்தில் இருவருக்குஞ் சமாதானம் ஒன்றான விடத்து சங்கார காலத்திலும் மாயைக்கும் 
கன்மத்திற்கும் பரிபாகமுண்டாகும் விஷயத்தில் (இவ்வாறு) கேட்பாயாகில் நீயே சமாதானங் கூறத் 
 தகுந்தவனாவாய் என்பதாம்.

    மாயைக்குப் பரிபாகமாவது காரியப்படுஞ் சாமர்த்தியத்தை யுண்டுபண்ணுதல். கன்மத்திற்குப் 
பரிபாகமாவது பலன்றரச் செய்தல். ஏனைய வெளிப்படை.      (28)

    (அ-கை) எவ்வாறு சமாதானஞ் சொல்லத் தகுந்தவன் என்பதைக் கூறுகின்றார்.

(29-30)     நியமமற்றதான சிருட்டியாரம்பத்தில் மாயாப் பிரவாகத்தின் மத்தியில் எந்தப் பொருள் 
எந்தக் காலத்தில் எந்தவிதமாக உண்டாகின்றதோ, அந்தப் பொருள் அந்தக் காலத்தில் அந்தப் பிரகாரமே 
ஈசுவரனால் தோற்றுவித்தற்கு உரியதாகின்றது. இச்சமாதானம் முத்திவிஷயமான கேள்வியிலும் அந்த 
முத்திக்குக் காரணமான மல பரிபாக விஷயமான கேள்வியிலும் ஒக்கும் என்பதாம்.

    ஒரே காலத்தில் மாயா காரியங்கள் உண்டாகட்டுமேயென்று பூருவபட்சியைக் கேட்டவிடத்து, 
இன்னதன் பின்  இன்னதுண்டாக வேண்டுமென்னும் நியமமில்லாத சரீர முதலியவற்றின் சிருட்டி திதி 
சங்காரம் காணப்படுகின்றமையால் மாயாப்பிரவாஹத்தின் மத்தியிலிருந்து எந்தப்பொருள் எந்தக் 
காலத்தில் எந்த முறையாக உண்டாகின்றதோ அந்தப்பொருள் அந்தக் காலத்தில் அந்தப் பிரகாரம் 
ஈசுவரனால் தோற்றுவித்தற்கு உரியதாகின்றது என்று அப்பூர்வபட்சி விடை கூறுவனாயின் இவ்வாறு 
கர்ம பரிபாகமும் ஒரே காலத்தில் உண்டாகட்டும் என்று கேட்டவிடத்தும் சமாதானம் சொல்லத் தகுந்தவனாவன்.
இச்சமாதானமே ஒரே காலத்தில் அனைவருக்கும் மோட்சத்தை ஈசுவரன் ஏன் கொடுக்கக் கூடாது என்னுங்
கேள்விக்கும் அந்த மோட்சத்திற்குக் காரணமான மல பரிபாகம் அனைவருக்கும் ஒரே காலத்தில் ஏன் 
உண்டாகக் கூடாது என்னுங் கேள்விக்கும் விடையாகும்.      (29)

    (அ--கை) இந்த மலத்திற்குப் பொருளாயிருக்குந் தன்மையும், ஒன்றாயிருக்குந் தன்மையும் 
உண்டென்று  நூல்களில் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றன என்று கூறுகின்றார். 

(30-31)     அசுத்தியைச் செய்யும் ஆணவ மலத்திற்குப் பொருளாயிருக்குந் தன்மையும், ஒன்றாயிருக்குந்
 தன்மை முதலியனவும் நூல்களில் விரிவாகவும் நன்றாகவுங் கூறப்பட்டிருக்கின்றன. அந்த மலத்திற்கு அநேக சத்திகள் 
உண்டென்று ஒத்துக்கொள்ளாவிடில் அதற்கு நிவிர்த்தியில்லை. மலத்திற்கு அநேக சத்தி முதலியன உண்டென்பது 
நூலோடு பொருந்திய யுத்தியினால் சித்தித்திருக்கின்றது என்பதாம்.

    அந்த மலம் ஒன்றாயும், அநாதியாயும் , வலிமையாயும், வியாபகமாயும், பரிபாகத்தில் நசிக்கும் 
அநேக சத்திகளையுடைய எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்றதென்று , நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றது. அந்த மலத்தின் 
சொரூபமானது மேலே கூறியவாறு அநேக சக்திகளையுடையதாகும். அவ்வாறு ஒத்துக்கொள்ள வில்லையாயின், 
மலம் ஒன்றாயிருத்தலால் உயிர்களிடத்திலிருந்து அம்மலத்தை விலக்க முடியாது. எவ்வாறெனில், மலம் 
ஒன்றாயிருந்தால் ஒருவன் முத்தியடையும் பொழுது அனைவரும் முத்தியடைய வேண்டும். 

    அல்லது, முத்தியென்பதே இல்லாமற் போக வேண்டும் என்ற ஆசங்கை நிகழும். ஆதலால், அநேக 
சத்திகளை யுடையதா யிருக்கின்றது என்றனர். மலத்திற்கு அநேக சத்திகளுடன் கூடியிருக்குந் தன்மை 
முதலிய சொரூபம் நூலொடு பொருந்திய யுத்தியினால் நிர்ணயிக்கப்படுகின்றது. முதலிய என்னும் சொல்லால் 
அநாதித்தன்மை கிரஹிக்கத் தகுந்தது. நூல்களிலும் அவ்விதமே அந்த மலம் ஆன்மாக்களுக்கு அநாதி 
காலத்திலேயே இருக்கின்றதென்று சொல்லல் வேண்டும்; நடுவில் வந்ததென்றால் வந்ததற்குக் காரணங் 
கூறவேண்டும்; காரணமன்றி வருமென்றால் சுவபாவமானபடியால் முக்தான்மாக்களையும் மறைக்கும் ; 
மறைத்தாலென்னவெனில், மோக்ஷப் பிரயத்தனம் வீணாகும் என்று கூறப்பட்டிருத்தல் காண்க. அந்த மலத்தைப் 
பற்றிய ஆராய்ச்சி நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்ச் செய்யப்பட்டிருக்கின்றது. 
விரிவை அவ்விடத்துக் காண்க. விரியுமென்றஞ்சி இவ்விடத்தில் விரிக்க வில்லை (30-31)

    (அ-கை) நூலைப் பூர்த்தி செய்கின்றார்.

(32)    இரெளரவாகமத்திற்கு விருத்தியுரை செய்த காரணத்தால் விருத்திகாரரென் றழைக்கப்படும் 
சத்தியோஜோதி சிவாசாரியரால் உயிர்களுக்கு அநாதியாகவே சித்தித்திருக்கும் சுவாயம்பு வாகம 
சம்பந்தமான பொருள்களை அறியாதிருக்குந் தன்மையை நீக்குதற் பொருட்டுச் சுருக்கமாய்த் தத்துவத்திரய
நிர்ணயஞ் சொல்லப்பட்டது என்பதாம். 

    அநாதியே மலத்தால் மறைக்கப்பட்ட ஞானக்கிரியா சத்திகளோடு உயிர்கள் கூடியிருத்தலால் 
நையாயிகர்களால் உண்டு பண்ணப்படும் அறியாமையை அவ்வுயிர்களிடமிருந்து நீக்குதற்கு இந்நூல் 
செய்தாரென்பது கருத்து. உயிர்கள் விகாரமற்றிருத்தலால், அவற்றை மறைக்கும் மலமும், மலமிருத்தலினால் 
இருக்கின்றதெனச் சித்திக்கும் மாயையும், மல நிவிர்த்தியைச் செய்யும் சிவனும் இப்பிரகரணத்தில் 
சுருக்கமாய்க் கூறப்பட்ட விஷயங்களாகும்.

            தத்துவத்திரய நிர்ணயம் முற்றுப் பெற்றது

    சோழதேசத்தில் குண்டின குலத்தில் உதித்தவராயும் ஸ்ரீசர்வாத்ம சிவனுடைய தாமரை மலர்போன்ற 
பாதங்களின் தூளிகளை ஆராதிக்கின்றவராயும் உலகமெங்கும் பிரசித்தி பெற்றவராயும் உள்ள ஸ்ரீமத் அகோர
சிவாசாரியரால் ஸ்ரீ ஜன்யை யென்னும் இவ்வியாக்யானத்தால் தத்துவத்திரய நிர்ணயத்தின் விளக்கம் 
சுருக்கமாய்ச் செய்யப்பெற்றது.

    அகோரசிவாசாரியரா லியற்றப்பெற்ற தத்துவத்திரய நிர்ணயத்தின் விருத்தி முற்றுப் பெற்றது.

                சிவபெருமான் திருவடி வாழ்க.

Related Content

தத்துவ சங்கிரக மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விருத்தி உரைய