logo

|

Home >

panniru-thirumurai >

thirumuraikalil-pillaiyar

திருமுறைகளில் மூத்த பிள்ளையார் (விநாயகர்)

பன்னிரு திருமுறைகளில் பல இடங்களில் மூத்த பிள்ளையார் என்று அழைக்கப்படும் விநாயகர் பற்றிய குறிப்பு உள்ளது. அவைகளின் தொகுப்பு இங்கு தரப்படுகிறது.
 

  அங்கமும் வேதமும் ஓதுநாவர்    
         அந்தணர் நாளும் அடிபரவ    
   மங்குல் மதிதவழ் மாடவீதி    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   செங்கய லார்புனற் செல்வமல்கு    
         சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்    
   கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.1  

  நெய்தவழ் மூவெரி காவலோம்பும்    
         நேர்புரி நூன்மறை யாளரேத்த    
   மைதவழ் மாட மலிந்தவீதி    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்    
         சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்    
   கைதவழ் கூரெரி யேந்தியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.2

  தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்    
         தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ    
   மால்புகை போய்விம்மு மாடவீதி    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
   கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.3

  நாமரு கேள்வியர் வேள்வியோவா    
         நான்மறை யோர்வழி பாடுசெய்ய    
   மாமரு வும்மணிக் கோயில்மேய    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
   காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.4

  பாடல் முழவும் விழவும்ஓவாப்    
         பன்மறை யோரவர் தாம்பரவ    
   மாட நெடுங்கொடி விண்தடவும்    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
   காடக மே1யிடமாக ஆடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.5

  புனையழ லோம்புகை அந்தணாளர்    
         பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப    
   மனைகெழு மாட மலிந்தவீதி    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
   கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.6

  பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்    
         பொன்னெடுந்தோள்வரை யாலடர்த்து    
   மாண்டங்கு நூன்மறையோர் பரவ    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
   காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.8

  அந்தமும் ஆதியும் நான்முகனும்    
         அரவணை யானும் அறிவரிய    
   மந்திர வேதங்க ளோதுநாவர்    
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்    
   செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
   கந்தம் அகிற்புகை யேகமழுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.   1.6.9

  இலைமரு தேயழ காகநாளு    
         மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்    
   நிலையமண் தேரரை நீங்கிநின்று
         நீதரல் லார்தொழு மாமருகல்    
   மலைமகள் தோள்புணர் வாயருளாய்    
         மாசில்செங் காட்டங் குடியதனுள்    
   கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே.  1.6.10

நறைகொண்ட மலர்தூவி 
 விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் 
 முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் 
 செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.1

வாரேற்ற பறையொலியுஞ் 
 சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ 
 டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்றம் உடைத்தாய 
 செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.2 

வரந்தையான் சோபுரத்தான் 
 மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் 
 கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் 
 குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.3  

தொங்கலுங் கமழ்சாந்தும் 
 அகில்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த 
 அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த 
 செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்
 கணபதீச் சரத்தானே.   1.61.4  

பாலினால் நறுநெய்யாற் 
 பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை 
 கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் 
 செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.5  

நுண்ணியான் மிகப்பெரியான் 
 ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நம் 
 தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் 
 குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.6  

மையினார் மலர்நெடுங்கண் 
 மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் 
 அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச் 
 செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.7  

தோடுடையான் குழையுடையான் 
 அரக்கன்தன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் 
 பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் 
 குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையான் நாடுடையான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.8  

ஆனூரா வுழிதருவான் 
 அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் 
 வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் 
 குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.9  

செடிநுகருஞ் சமணர்களுஞ் 
 சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் 
 கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் 
 கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் 
 கணபதீச் சரத்தானே.   1.61.10  

சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
எந்தவன் இராமன தீச்சரமே.   1.115.2 

நெருப்புரு வெள்விடை மேனியர் 
 ஏறுவர் நெற்றியின்கண் 
மருப்புறு வன்கண்ணர் தாதையைக் 
 காட்டுவர் மாமுருகன் 
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை 
 யார்விறன் மாதவர்வாழ் 
பொருப்புறு மாளிகைத் தென்புற 
 வத்தணி புண்ணியரே.   1.117.8 

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.   1.123.5 

செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் 
 சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் 
 கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் 
 பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் 
 காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.   1.126.6 
 

நீடல் மேவுநிமிர் புன்சடை
 மேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை
 யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய
 அனேகதங் காவதம்
பாடல் மேவுமனத் தார்வினை
 பற்றறுப் பார்களே.   2.5.1  

சூல முண்டுமழு வுண்டவர்
 தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன்
 அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை
 பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை
 குலாவிய கொள்கையே.   2.5.2  

செம்பி னாருமதில் மூன்றெரி
 யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி
 யனேகதங் காவதங்
கொம்பின் நேரிடை யாளொடுங்
 கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமநவி லாதன
 நாவென லாகுமே.   2.5.3  

தந்தத் திந்தத்தட மென்றரு
 வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்தவெந்த கதிரோனொடு
 மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல
 அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி
 வார்க்கிட மாவதே.   2.5.4  

பிறையு மாசில்கதி ரோன்அறி
 யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில் பசும்பொன்
 னணியார் அசும்பார்புனல்
அறையும் ஓசைபறை போலும்
 அனேகதங் காவதம்
இறையெம் மீசனெம் மானிட
 மாகவு கந்ததே.   2.5.5  

தேனை யேறுநறு மாமலர்
 கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல்
 அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண
 ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள்
 செய்வதும் வானையே.   2.5.6  

வெருவி வேழம்இரி யக்கதிர்
 முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி
 யாவகி லுந்திவெள்
அருவி பாயுமணி சாரல்
 அனேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல்
 சேர்வது வாய்மையே.   2.5.7  

ஈர மேதுமில னாகி
 யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக
 விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்றன்
 அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை
 யாயின மாயுமே.   2.5.8  

கண்ணன் வண்ணமல ரானொடுங்
 கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ
 ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல்
 அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை
 யாயின நாசமே.   2.5.9  

மாப தம்மறி யாதவர்
 சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு
 மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி
 ராகில் அனேகதங்
காப தம்மமர்ந் தான்கழல்
 சேர்தல் கருமமே.   2.5.10  

தொல்லை யூழிப்பெயர் தோன்றிய
 தோணி புரத்திறை
நல்ல கேள்வித்தமிழ் ஞானசம்
 பந்தன்நல் லார்கள்முன்
அல்லல் தீரவுரை செய்த
 அனேகதங் காவதம்
சொல்ல நல்லஅடையும்
 அடையாசுடு துன்பமே.   2.5.11
 

கரியின் மாமுக முடைய
 கணபதி தாதைபல் பூதந்
திரிய இல்பலிக் கேகுஞ்
 செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கைநன் மாதர்
 சதிபட மாநட மாடி
உரிய நாமங்கள் ஏத்தும்
 ஒலிபுனற் காழிநன் னகரே.   2.96.3 
 

பொன்னம்பூங் கழிக்கானற்
 புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள்
 அகன்றும்போய் வருவீர்காள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன்
 கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ்
 எனதல்லல் உரையீரே.   3.63.2 
 

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல்
 கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே
 துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னி
 கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர்
 அருளொருநாள் பெறலாமே.   3.63.6 
 

பலபல காமத்த ராகிப் 
 பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் 
 கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் 
 வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும் 
 உடையா ரொருவர் தமர்நாம்

       அஞ்சுவ தியாதென்று மில்லை 
       அஞ்ச வருவது மில்லை.   4.2.5 

நார ணன்னொடு
 நான்முகன் இந்திரன்
வார ணன்கும
 ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப்
 பூவனூர் மேவிய
கார ணன்னெனை
 யாளுடைக் காளையே.   5.65.10 
 

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே.   6.7.7 

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் 
குமரனும் விக்கின விநாய கனும்
பூவாய பீடத்து மேல யனும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப் 
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.10

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.   6.53.4 

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் 
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் 
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி 
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.   6.65.9 

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.   6.074.7 

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.   6.77.8
 

திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்    
 திரைகள் வந்து புரள வீசுங்    
கங்கை யாளேல் வாய்தி றவாள்    
 கணப தியேல் வயிறு தாரி    
அங்கை வேலோன் குமரன் பிள்ளை    
 தேவி யார்கோற் றட்டி யாளார்    
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்    
 ஓண காந்தன் தளியு ளீரே.   7.5.2 
 

தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
 மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குல
 வான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மத
 மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.1  

கூறு நடைக்குழி கட்பகு வாயன
 பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
 வாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
 யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.2  

கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
 லாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
 கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
 வாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.3  

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
 கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
 பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
 பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.4  

பைத்த படத்தலை ஆடர வம்பயில்
 கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
 கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
 வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.5  

தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
 ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
 நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
 பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.6  

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
 தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்
 பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
 மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.7  

புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
 தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
 காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
 குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.8  

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
 வேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
 நட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
 சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.9  

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
 நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
 மேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
 உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
 கச்சி அனேகதங் காவதமே.   7.10.10

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
 மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்
 எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்
 திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
 கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.   7.46.9 

தனதன்நல் தோழா சங்கரா ! சூல
 பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
 கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
 அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
 தொண்டனேன் நுகருமா நுகரே.   9.1.7 
 

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
 படுமிடர் குறிக்கொளாத(து) அழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
 உய்யமற்(று) அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
 திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
 கணபதி பின்னிளங் கிளையே.   9.7.5 

படுமதமும் இடவயிறும் 
  உடையகளி(று) உடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் 
  அகத்தியனுக்(கு) ஓத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்கு 
  ஒன்றினுக்கு வையிடுதல்
நடுவிதுவோ திருத்தில்லை 
  நடம்பயிலும் நம்பானே. 9.21.6 

…வாமன் புரவிமேல் 
 வந்தணைய - நாமஞ்சேர் 
வேழ முகத்து 
 விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை 
 ஒண்கண் - தாழ்கூந்தல்
…….   11.9.40-42

திருவாக்கும் செய்கருமம் 
 கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் 
 பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் 
 ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.   11.21.1  

கைக்கும் பிணியொடு காலன் 
 தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் 
 தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த 
 பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு 
 வாளன் திருவடியே.   11.21.2  

அடியமர்ந்து கொள்வாயே 
 நெஞ்சமே அப்பம்
இடியவலோ டெள்ளுண்டை 
 கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் 
 தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.   11.21.3  

வாழைக் கனிபல வின்கனி 
 மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள் 
 ளுண்டைஎல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும் 
 புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர் 
 மேனி விநாயகனே.   11.21.4  

விநாயகனே வெவ்வினையை 
 வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி 
 விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் 
 நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.   11.21.5  

கனிய நினைவொடு நாடொறும் 
 காதற் படும் அடியார்க்
கினியன் இனியொரு இன்னாங் 
 கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் 
 சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் 
 யானை முகத்தவனே.   11.21.6  

யானை முகத்தான் பொருவிடையான் 
 சேய் அழகார்
மான மணிவண்ணன் 
 மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து 
 விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.   11.21.7  

உளதள வில்லதோர் காதலென் 
 நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் 
 டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் 
 மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி 
 யானைக் கணபதியே.   11.21.8  

கணங்கொண்ட வல்வினைகள் 
 கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் 
 சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும் 
 கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.   11.21.9  

போகபந் தத்தந்தம் இன்றிநிற் 
 பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாளம் 
 பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை 
 போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்தெந்தை செந்தாள் 
 இணைபணிந் தேத்துமினே.   11.21.10  

ஏத்தியே என்னுள்ளம் 
 நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு 
 மதமுகத்துத் - தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் 
 செம்பொற் கழலங்கை
முக்கட் கடாயானை முன்.   11.21.11  

முன்னிளங் காலத்தி லேபற்றி 
 னேன்வெற்றி மீனுயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன 
 னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை 
 யோர்சிங்க மேயுமையாள்
தன்னிளங் காதல னேசர 
 ணாவுன் சரணங்களே.   11.21.12  

சரணுடை யேன்என்று 
 தலைதொட் டிருக்க
முரணுடையேன் அல்லேன் 
 நான்முன்னம் - திரள்நெடுங்கோட்
டண்டத்தான் அப்புறத்தான் 
 ஆனைமுகத் தான்அமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.   11.21.13  

பண்டந்த மாதரத் தானென் 
 றினியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக் 
 குறுகுவர் கூருணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத 
 வார்சடைக் கற்றை யொற்றை
வெண்தந்த வேழ முகத்தெம் 
 பிரானடி வேட்கையரே.   11.21.14  

வேட்கை வினைமுடித்து 
 மெய்யடியார்க் கின்பஞ்செய்
தாட்கொண் டருளும் 
 அரன்சேயை - வாட்கதிர்கொள்
காந்தார மார்பிற் 
 கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.   11.21.15  

விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் 
 ணுஞ்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் 
 அன்பர்கள் பாய்மதமா
கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண் 
 டார்கரு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாவொரு 
 பாகன் பெருமகனே.   11.21.16  

பெருங்காதல் என்னோடு 
 பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் 
 வீசி - ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் 
 கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.   11.21.17  

வருகோட் டருபெருந் தீமையும் 
 காலன் தமரவர்கள்
அருகோட் டருமவ ராண்மையும் 
 காய்பவன் கூர்ந்தஅன்பு
தருகோட் டருமர பிற்பத்தர் 
 சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கட்செம் 
 மேனிய ஒண்களிறே.   11.21.18  

களியானைக் கன்றைக் 
 கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் 
 குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் 
 கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.   11.21.19  

நல்லார் பழிப்பில் எழிற்செம் 
 பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக 
 மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக 
 னேஎன்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள் 
 இருக்க மலர்த்திருவே.   11.21.20 

உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.  11.025.25
 

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே.   11.26.1  

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி 
 கொட்டும் -கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.   11.26.2  

மணிசிந்து கங்கைதன் மானக் 
 குருளையை வாள்அரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க் 
 கிளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் 
 தைத்தொடர்ந் தோர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித் 
 தோர்க்கில்லை பேதுறலே.   11.26.3  

பேதுறு தகையம் அல்லது தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோட்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.   11.26.4  

மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஓய மணியூசல் ஆடின்றே - பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.   11.26.5  

உந்தத் தளரா வளைத்தனம் 
 முன்னம்மின் ஓடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் 
 தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்கிற் 
 கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர 
 ணங்கள் வழுத்துமின்னே.   11.26.6  

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்த திவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.   11.26.7  

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே -தெழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாதையனே சூழாதென் அன்பு.   11.26.8  

அன்பு தவச்சுற்று காரழல் 
 கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் 
 றாம்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் 
 டோடிக் கடுநடையிட்
டின்பு தவச்சென்று நீயன்று 
 காத்த தியம்புகவே.   11.26.9  

கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவனா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
விரைநனி கீறி மூரி
அஞ்சேறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.   11.26.10  

மலைசூழ்ந் திழிகின்ற மாசுணப்பொற் பாறை
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் 
 திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.   11.26.11  

காலது கையது கண்ணது 
 தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது 
 வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது 
 மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் 
 கீன்ற விடுசுடர்க்கே.   11.26.12  

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.   11.26.13  

இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.   11.26.14  

பெற்றமெல் லோதி சிலம்பின் 
 மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன் 
 னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் ஐயன் புறங்காட் 
 டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை 
 ஆட்கொண்டு செய்தனவே.   11.26.15  

செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றன திணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பெளவம் இனிநீங் கலமே.   11.26.16  

அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசைஇழிவ 
 தொக்கும் - பலங்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் 
 தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.   11.26.17  

மதந்தந்த மென்மொழி மாமலை 
 யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் 
 ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் 
 தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் 
 உய்ய வளர்கின்றதே.   11.26.18  

வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.   11.26.19  

கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்
றறுத்தெறிந்து கொன்றழித்த 
 அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.   11.26.20  

ஏறு தழீஇயவெம் புத்தேள் 
 மருகஎங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் 
 செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் 
 தையநின் றன்னைஅல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் 
 காத வியன்சிரமே.   11.26.21  

சிரமே, விசும்புபோத உயரி 
 இரண்டசும்பு பொழியும்மே
கரமே, வரைத்திரண் முரணிய 
 விரைத்து விழும்மே
புயமே, திசைவிளிம்பு கிழியச் 
 சென்று செறிக்கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.   11.26.22  

சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்த
மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியங் கொம்பு. 11.26.23

….பவள மால்வரைப் 
 பணைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் 
 தலைவன் தந்தை
….  11.029.16

….மழைக்கட் கடத்துப் 
 புழைக்கைப் பிள்ளையும்
….  11.029.28

என்னை நினைந்தடிமை 
 கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் 
 தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை 
 வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.   11.32.1  

முகத்தாற் கரியன்என் றாலும் 
 தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை 
 உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர் 
 அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம் 
 பிளந்த ஒருகொம்பனே.   11.32.2  

கொம்பனைய வள்ளி 
 கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை 
 நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் 
 தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.   11.32.3  

பேசத் தகாதெனப் பேயெரு 
 தும்பெருச் சாளியும்என்
றேசத் தகும்படி ஏறுவ 
 தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும் 
 நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு நாரைப் 
 பதியுள் சிவக்களிறே.   11.32.4  

களிறு முகத்தவனாய்க் 
 காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட 
 தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் 
 ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.   11.32.5  

மகத்தினில் வானவர் பல்கண் 
 சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் 
 பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கைஅந்தக் கையது 
 மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது 
 போலும் அடுமருப்பே.   11.32.6  

மருப்பைஒரு கைக்கொண்டு 
 நாரையூர் மன்னும்
பொருப்பைஅடி போற்றத் 
 துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் 
 பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.   11.32.7  

மலஞ்செய்த வல்வினை நோக்கி 
 உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு 
 முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் 
 தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி 
 றேஉன்னை வாழ்த்துவனே.   11.32.8  

வனஞ்சாய வல்வினைநோய் 
 நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் 
 அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் 
 திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.   11.32.9  

நாரணன் முன்பணிந் தேத்தநின் 
 றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர் 
 மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி 
 யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென் 
 பவர்க்கில்லை அல்லல்களே.   11.32.10  

அல்லல் களைந்தான்தன் 
 அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் 
 ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் 
 திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.   11.32.11  

கோவிற் கொடிய நமன்தமர் 
 கூடா வகைவிடுவன்
காவிற் திகழ்தரு நாரைப் 
 பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் 
 தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் 
 தான்பெற்ற யானையையே.   11.32.12  

யானேத் தியவெண்பா 
 என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு 
 நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் 
 சூலம் வலன்ஏந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.   11.32.13  

ஏறிய சீர்வீ ரணக்குடி 
 ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும் 
 முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி 
 னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப் 
 பதியுள் விநாயகனே.   11.32.14  

கனமதில்சூழ் நாரையூர் 
 மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த 
 வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் 
 குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.   11.32.15  

வானிற் பிறந்த மதிதவ 
 ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு 
 நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி 
 தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் 
 றுரைப்பர்இவ் வையகத்தே.   11.32.16  

வையகத்தார் ஏத்த 
 மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் 
 புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் 
 பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான்.   11.32.17  

அமரா அமரர் தொழுஞ்சரண் 
 நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ 
 னேகொடித் தேர்அவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் 
 தோன்றின னேஎனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர 
 கத்தில் அழுந்துவரே.   11.32.18  

அவமதியா துள்ளமே 
 அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் 
 சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் 
 கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.   11.32.19  

நாந்தன மாமனம் ஏத்துகண் 
 டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் 
 நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய 
 னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ 
 னேஎனக் கென்னையனே.   11.32.20 

வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில் கொண்டோன் சேயவன் வீரணக் குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்கு சினச்
சாதகப் பெண் பிளை தன் ஐயன் தந்த தலைமகனே.  11.33.29

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.   12.1.3 
 

அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்து ஓர்
ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலுமா மேனி
மலர்ப்பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்கு எயிற்று அரவவெற்று அரையின்
நாம மூன்று இலைப் படைஉடைப் பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும்    12.25.81


சிறுத் தொண்டருடன் கூடச் செங்காட்டங் 
 குடியில் எழுந்தருளிச் சீர்த்தி 
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர் 
 அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் 
 சரத்தின் கண் போகம் எல்லாம் 
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் 
 மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்.   12.34.469 

போந்து மா மாத்தியர் தம் போர் 
 ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை 
வாய்ந்த மாதவர் அவர் தாம் 
 மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும் 
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் 
 சரம் பரவு காதல் கூர 
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று 
 அங்கு அன்பருடன் இருந்த நாளில்.   12.34.471


புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் 
 பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த 
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம் 
 திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக 
மைக் குலவு கண்டத்தார் மருகற் கோயில் 
 மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் 
கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் 
 காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்.   12.34.485  

மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு 
 செங் காட்டங் குடியின் மன்னிப் 
பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு 
 உடைக் கோலமே ஆகித் தோன்ற 
உருகிய காதலும் மீது பொங்க உலகர் 
 முன் கொள்ளும் உணர்வு நீட 
அருவி கண் வார்வுறப் பாடலுற்றார் 
 அங்கமும் வேதமும் என்று எடுத்து.   12.34.486  

கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் 
 கணபதி ஈச்சரம் காதலித்த 
அண்டர் பிரானை வணங்கி வைகும் 
 அப்பதியில் சில நாள்கள் போற்றித்
தொண்டருடன் அருள் பெற்று மற்றத் 
 தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப் 
புண்டரிகத் தடம் சூழ் பழனப் 
 பூம் புகலூர் தொழப் போதுகின்றார்.   12.34.487 
 

மன்னவனை விடை கொண்டு 
 தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ் பரஞ் சோதியார் 
 தாமும் பனி மதி வாழ்
சென்னியரைக் கணபதி ஈச்சரத்து 
 இறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா 
 முறை அன்பில் செய்கின்றார்.   12.42.11 

கண் நுதலார் கணபதீச்சரத்தின் 
 கண் கருத்து அமர
உண்ணிறை அன்பினில் பணி 
 செய்து ஒழுகுவார் வழுவின்றி
எண்ணில் பெரும் சீர் அடியார் 
 இடை விடாது அமுதுசெய
நண்ணிய பேர் உவகையுடன் 
 நயந்து உறையும் நாளின் கண்.   12.42.16 

கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் 
 சரத்தின் கண்
வண்ணமலர் ஆத்தியின் கீழ் 
 இருக்கின்றோம் மற்று அவர்தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு 
 உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திருவாத்தி 
 அணைந்தருளி அமர்ந்திருந்தார்.   12.42.41

அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் 
 உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தர் 
 வட தேசத்தோம் என்றார் வண்
துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் 
 சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் 
 இருந்தார் கணபதீச் சரத்து.   12.42.43 
 

Related Content

Lord Ganesha Purana

The History of Muruga Nayanar

திருமுறைகளில் முருகன்