இறைவர்:- ஐயா! நான் வந்தியம்மையின் கூலியாள், வந்தியம்மையின் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் நான் கரையை அடைக்கச் செல்கிறேன்.
பின்குரல்:- கூலியாளாக வந்த சொக்கநாதப் பெருமான் கூடை நிரம்ப மண்ணை எடுத்துக் கொட்டியும், வெள்ளத்தில் கூடை விழுமாறு செய்தும், பின் அதனை கு தித்து எடுத்தும், மர நிழலில் படுத்து உறங்கியும், பணி செய்பவர்களோடு சேர்ந்து பாடி ஆடியும் காவலர்களைக் கண்டால் பணிவோடு இருப்பது போல் பாவனை செய்தும் திருவிளையாடல் புகிறார்.
இறைவர்:- என்னப்பா, எப்போது பார்த்தாலும் வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள். இங்கு வாருங்கள் ஆடிப் பாடலாம்.
ஊரார்:- ஏப்பா, சும்மா இரு, காவலர்கள் கண்டால் தண்டிக்கப் போகிறார்கள். எங்களை வேலை செய்ய விடு.
இறைவர்:- ம்... எனக்கு ரொம்ப பசிக்கிறது, வந்தியம்மையிடம் சென்று பிட்டு சாப்பிட்டு வருகிறேன்.
காவலர்:- வந்தியம்மைக்கு கொடுக்கப்பட்ட கரைமட்டும் உயராது அப்படியே இருக்கின்றதே! கூலியாள் எங்கே! அவரை அழைத்து வாருங்கள்.
(இறைவரை அழைத்து வருகின்றனர்)
இறைவர்:- ஏம்பா, பிட்டு சாப்பிட விடமாட்டீர்களா! சாப்பிடாமல் எப்படி வேலை பார்ப்பது.
காவலர்:- ஏன் இன்னும் கரையை அடைக்கவில்லை.
இறைவர்:- என்னைச் சாப்பிட விட்டால்தானே நான் கரையை அடைக்கமுடியும்.
காவலர்:- நீ இன்று காலை முதல் பலமுறை பிட்டு சாப்பிட சென்று விட்டாய், கரையை அடைத்த பாடில்லை. அதுமட்டுமின்றி அடைக்கப்பட்ட கரைகளின் மீது ஏறி மிதித்து விளையாடுகிறாய். நீ யார் சித்தனா? பித்தனா? இல்லை வந்தியம்மையை ஏமாற்றி பிட்டு அருந்த வந்த எத்தனா? அழகிய வடிவம் கொண்ட உன்னைக் கண்டால் கூலியாள் போலவும் தெரியவில்லை. உன்னைப் பற்றி பாண்டிய மன்னனிடம் அறிவிப்போம். மன்னர் வரக்கூடிய நேரம்தான் இது.
(பாண்டிய மன்னர் வருகிறார்)
மகுடம்:- பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பாண்டியர் வாழ்க! வாழ்க!
மன்னர்:- கரையின் ஒருபகுதி உயரவே இல்லையே என்ன இது? இப்பங்கை அடைப்பவர் எங்கே?
காவலர்:- மன்னா! இவர்தான், இவர் தன் பணியும் செய்யாது, மற்றவரையும் பணிசெய்ய விடாது ஆடிப் பாடியும், குதித்து விளையாடியும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்.
மன்னர்:- என்ன தைரியம், கடமையைச் செய்யாது விளையாடி விட்டு என் முன் எந்த அச்சமும் இன்றி நிற்கின்றாரே?
(மன்னர் தன் கையிலுள்ள பிரம்பால் இறைவர் முதுகில் அடிக்கிறார்)
பின்குரல் :- பாண்டிய மன்னன் தன் கையிலுள்ள பொற்பிரம்பால் கூலியாள் வேடத்திலிருந்த இறைவரை அடிக்க சோதி வடிவான இறைவன் தான் கொண்டு வந்த கூடையிலுள்ள மண்ணை அவ் உடைப்பில் கொட்டி மறைந்தருளினார். அக்கணத்திலேயே அரசன் அடித்த அடி அரசன் முதுகிலும் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர் கள் மீதும், தாய் வயிற்றிலுள்ள் குழந்தைகள் மீதும், மால், அயன் முதலான தேவர்கள் முதுகிலும் பட்டது. இறைவர் மண்ணைக் கொட்டிய இடம் மலை போன்று உயர்ந்து விளங்கியது
மன்னன்: என்ன இது அதிசயம்! அவர் மறைந்துவிட்டாரே! அவரை அடித்த அடி என் மீது மட்டுமல்லாது, உங்கள் அனைவர் மீதிலும் விழுந்ததே! வைகைக் கரையும் அடைபட்டுவிட்டதே! வந்தவர் யாரோ சாதாரணமானவர் இல்லை. தவறு செய்துவிட்டேனோ? ஆலவாயண்ணலே! ஒன்றுமே புரியவில்லையே!!
அசரீரி :-அரிமருத்தன பாண்டியனே! உன்னுடைய பொருட்கள் யாவும் தரும நீதியில் வந்தமையால் நமக்கும் நமது அடியவர்க்கும் வாதவூரன் உதவும்படி செய்தான். நரிகளைப் பரிகளாக்கி நாமே கொண்டு வந்து கொடுத்தோம். நம் அருளினாலேயே அவை மீண்டும் நாகளாக மாறின. வாதவூரரின் துன்பத்தைப் போக்கும்படி வைகை ஆற்றில் வெள்ளத்தை உண்டாக்கினோம். வந்தியம்மைக்காக கூலியாளாக வந்து உன்னிடம் பிரம்படியும் கொண்டோ ம், நாமே மண்ணைக் கொட்டி வைகைக் கரையையும் சரி செய்தோம். வந்தியம்மையின் துன்பத்தை நீக்கி சிவலோக வாழ்வும் அளித்தோம். அனைத்தையும் நாம் வாதவூரனின் பால் கொண்ட அன்பின் பொருட்டே செய்தோம். இவ்வடியவனின் பெருமையை நீ சிறிதும் தொந்து கொள்ளவில்லை. வாதவூரன் என்னிடம் மிகவும் அன்பு கொண்டவன். உனக்கு இம்மைப் பயனும் மறுமைப் பயனும் தேடிக்கொடுத்தவன், எம்மைத் தவிர வேறு எதையும் விரும்பாதவன். அவன் விருப்பப்படி செல்லுமாறு விடுத்து சைவ நன்னெறி காத்து நின்று செங்கோல் ஆட்சி புriவாயாக.
மன்னன்:- பரம்பொருளே! தென் திருஆலவாயா! சொக்கநாதா! என்னே உனது கருணை! பேதையேன் செய்பிழை பொறுத்தருளுங்கள். தென் பாண்டி நாட்டானே! அடியேனுடைய குற்றத்தை நீக்கிய கோதிலா அமுதே! குணப்பெருங்கடலே!
வாதவூரர் எங்கே! அவரைக் கண்டு வணங்கி என் பிழையை பொறுத்தருள வேண்டுவேன்.
காவலாளி:- மன்னா! அவர் திருஆலவாய் கோயிலில் உள்ளார்.
பாடல்:- காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதாய ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணாய ஆலமுண் டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவற்கு மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே
மன்னன்:- திருவாதவூரரே! தங்கள் பெருமை அறியாது, நான் பல தீங்குகளை செய்து விட்டேன். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய ஈசனாரே தங்களுக்காக மண் சுமந்து பிரம்படி கொண்டார். சிவ! சிவ! நான் அறியாது செய்த தவற்றிற்காக மிகவும் வருந்துகிறேன்.
மாணிக்கவாசகர்:- மன்னா! வருத்தப்பட வேண்டாம். உங்கள் குல தெய்வமாக சோமசுந்தர கடவுள் விளங்குவதால், பொய்ம்மை நீங்கி நன்மை பெருகும் ஞானம் தங்களுக்கு கிடைத்துள்ளது. மனுநீதி வழியில் நின்று திருநீற்றின் அன்புநெறி பாதுகாத்து நல்லாட்சி புவாயாக! இறைவர் திருவுள்ளப்படி, அடியேன் பல தலங்களுக்கும் சென்று, எம் ஈசர் புகழை பாடுவேன்.
மன்னர்:- திருவாதவூரரே! தங்களால் நம் பாண்டி நாட்டிற்கே அளவிலா புகழும், பெருமையும் கிடைத்தது. சிவ! சிவ!