திருச்சிற்றம்பலம் திருநீலகண்ட நாயனார் புராணம்பின்குரல் : மூவாயிர மறையவர்கள் வாழும் பழமையான தில்லையின் கண் குயவர் குலத்தில் தோன்றியவர் திருநீலகண்ட நாயனார் . இட மருங்கில் இருந்தருளும் உமையம்மையாரை நோக்கியவாறு, நிலை பெற்ற சிற்றம்பலத்தின்கண், முதலும் முடிவும் இன்றி, வியக்கத்தக்கதும் ஒப்பற்றதும் ஆய திருக்கூத்தினை ஆடுகின்றப் பெருமானின் திருவடிகளை வாழ்த்தி வழிபட்டு வரும் பத்திமையில் சிறந்தவராகவும் இருந்தார்.நிலையில்லாத உலகியற் பொருள்களில் பற்று வைக்காது, நிலையுடைய மெய்ப்பொருளாகிய சிவபெருமானிடத்து மட்டுமே பற்று வைத்து வாழ்ந்ந்து வந்தார். உண்மையான அடியவர்களுக்கு உரிய தொண்டுகளைச் செய்து வருவதில் பெருவிருப்புடையவராகவும் விளங்கினார் உலகினரால் போற்றப்பெறும் செயற் பாடுகளையுடைய இல்லறத்தை ஏற்று, சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச் சார்ந்து வாழ்வதே வாழ்வெனக் கருதும் தன்மையராய் திகழ்ந்தார். காட்சி 1இடம் : திருநீலகண்ட நாயனார் இல்லம் திருநீலகண்டர் : திருநீலகண்டம்! இறைவா, பொன் மன்றினை இடமாகக் கொண்டு ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்கூத்தினை இயற்றும் இத்தில்லையம்பதியிலே வாழும் பேற்றினை அடியேனுக்கு அருளிய உன் பெருங்கருணையை நான் எவ்வாறு போற்றுவேன்? திருநீலகண்டம்! திருநீலகண்டம்! மனைவியார் : சுவாமி, அடியவர்களுக்காக திருவோடு செய்யவேண்டும் என்று கூறினீர்களே, தாங்கள் செய்து விட்டீர்களா? திருநீலகண்டர் : திருநீலகண்டம்! ஓ! இன்று காலையிலேயே செய்து முடித்து விட்டேனே. சிவனடியார்களுக்குரிய பணியினை தாமதிக்க கூடாது அல்லவா! சதா சர்வ காலமும் தன்னை நினைக்கும் அடியவர்கள் இரந்துண்டு உலகில் வேறு எவற்றிலும் மனம் சிதறாது தன் கழல் எட்டச் செய்வதற்குப் பயன்படுவன அன்றோ திருவோடு? நாம் செய்யும் மட்கலன்களை நாம் வாழ்வதற்கேற்ற ஊதியப் பொருளாக ஆக்கிக் கொண்டு ஏனையவற்றை கூத்தப்பெருமானின் அடியவர்களுக்கு, எந்நாளும் அவர்தம் திருவுள்ளம் மகிழ்தற்குக் காரணமான சிறப்புகள் பெருக அவர்களுக்குத் திருஓடு கொடுத்து வரும் ஒப்பற்ற பணியினையும் நமக்கு அருளிய எம் திருநீலகண்டத்து இறைவனின் கருணையை நினைக்கும் போது என் நெஞ்சம் உருகுகின்றது. திருநீலகண்டம்! திருநீலகண்டம்!! மனைவியார் : சிவ சிவ ! கண்ணுதற் கடவுளின் கருணையே கருணை! சுவாமி, எனக்கு ஒரு ஐயம்; அதனை நான் கேட்கலாமா? திருநீலகண்டர் : திருநீலகண்டம்! தாரளமாக கேட்கலாமே; உன் ஐயம்தான் என்ன? மனைவியார் : சுவாமி! பொதுவாக சிவனடியார்கள் இறைவனுடைய திருஐந்தெழுத்தையும், அவருடைய பலகோடி நாமங்களில் சிலவற்றையும் கூறிய வண்ணம் இருப்பர். ஆனால் தாங்களோ சதா சர்வ காலமும் இறைவனுடைய திருநீலகண்டத்தையே நினைந்தவாறும் கூறியவாறும் இருக்கின்றீர்கள். திருநீலகண்டத்தின் பெருமையை யானும் அறிலாமா?! அப்படியாயின் தாங்கள் அதை எனக்கும் அருளுங்கள். திருநீலகண்டர் : (பெருமானின் திருநீலகண்ட நாமத்தில் திளைத்து) திருநீலகண்டம்! திருநீலகண்டம்!! நன்று கேட்டாய் தேவி! நம் சிவபெருமான் உலகமெல்லாம் உய்தற் பொருட்டுப் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்ண, அந்நஞ்சு உட்செல்லாது தடுக்கப் பெற்று, கண்டத்திலேயே நீலவண்ணமாக இருக்கப்பெற்றது.எனவே நம் சிவபெருமானின் திருக்கழுத்தை, திருநீலகண்டம் என்று இத்திருந்து உலகம் போற்றுகின்றது.இவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் பொருடல்லவா நம் இறைவனுடைய கண்டம் கறுத்தது. அவர் அவ்வாறு செய்யாது இருந்திருந்தால் இவ்வுலகமே அழிந்திருக்கும் அல்லவா. நம் பொருட்டு தம் கண்டத்தை கறுக்கச் செய்த நம் சிவபெருமானின் இத்தனிப் பெருங்கருணையை நாம் தினைத்தனைப் பொழுதும் மறந்து விடக்கூடாது அல்லவா! அதுமட்டுமல்ல, திருநீலகண்டம் என்பது ஒப்பற்ற திருமந்திரமாகும். எனவே தான் திருநீலகண்டம்! திருநீலகண்டம் ! என்று நம் இறைவனை இறைஞ்சுகிறேன். தேவி, நம் இறைவனின் கண்டம் கருத்த வரலாறு உனக்குத் தெரியுமா?! முன்பொரு நாள்… காட்சி 2உமை: சுவாமி! தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமுதம் பெற பாற்கடலைக் கடைகின்றார்களாமே! சிவபிரான்: (புன்னகை புரிகிறார்.) உமை: சுவாமி! தங்கள் புன்னகை பொருள் பொதிந்ததாக உள்ளதே! சிவபிரான்: ஆணவமும் ஆணவமும் அமுது பெற முனைகின்றது! உமை: சுவாமி! எனக்கு ஒன்றும் புரியவில்லையே?! சிவபிரான்: தேவி உனக்குத் தெரியாததில்லை. இந்த அசுரர்கள் தம்முடைய வலிமையினைப் பெரிதாக நினைந்து ஆணவத்தால் தீங்கிழைத்து அழிபவர்கள். இந்த தேவர்களோ பிறர்க்கு உதவுவது எல்லாம் தாம் உயர்ந்து தம்மை எல்லாரும் தொழ வேண்டும் என்ற ஆணவத்தால். இந்த இரண்டு ஆணவங்களும் மும்முரமாகச் செயல்பட்டால் அமுதமா வரும்? (தேவர்கள், அசுரர்கள் ஓடி வருகின்றனர். ) தேவர்கள், அசுரர்கள் : இறைவா, சிவபெருமானே! நாங்கள் நீண்ட காலம் வாழ பாற்கடலில் அமுதம் கடைந்தோம். ஆனால், பெருமானே கொடிய ஆலாலமாகிய நஞ்சம் விளைந்தது. அந்நஞ்சம் எம்மை எல்லாம் துரத்துகின்றது, இறைவா! உம்மையே சரணம் அடைகின்றோம். எம்மைக் காப்பாற்றுவார் வேறு எவரும் இல்லை. எம் வாழ்முதல் ஆகிய பொருளே! இறைவா எம்மைக் காப்பாற்றும். சிவபிரான்: அஞ்சவேண்டாம்! நாம் காப்போம்! சுந்தரா! ம்ம்ம்! (சிவபெருமானின் அருட்கட்டளையால் சுந்தரர் ஆலால விடத்தை நாவல் பழம் அளவில் உருட்டி சிவபெருமானின் திருக்கரத்தில் கொடுக்கின்றார்.) (நஞ்சினை உண்கின்றார்.) உமை: சுவாமி! சுவாமி!! (பிரான் திருமிடற்றைப் பிடிக்கின்றார்.) சிவபிரான்: தேவி அச்சம் வேண்டாம்! நஞ்சோ அமுதமோ நம்மை என் செய்யும்? தேவர்கள் : இறைவா! அம்மை திருக்கரம் பட்டதும் நஞ்சம் தங்கள் திருமிடற்றிலேயே தங்கி விட்டது. மேலும் பொன் போன்ற தங்கள் மேனியில் தங்கள் கண்டம் நீலவண்ணத்துடன் அழகு மிளிர விளங்குகின்றது. இறைவா! அடைக்கலம் இன்றி உங்கள் திருவடிகளையே நாடி வந்த எங்களைக் காத்தருளினீர்கள். இன்று முதல் தங்களுடைய திருக்கருணையின் திறத்தை உலகத்தவர் உணர்ந்து போற்றி தங்களுக்கு இடர் வருபொழுதெல்லாம் வணங்கி இடர் தீரும் வண்ணம் தங்கள் திருக்கருணையின் அடையாளமாக இந்த நீலநிறம் எப்பொழுதும் தங்கள் கண்டத்து இருக்க அருள் புரிய வேண்டும். சிவபிரான்: அப்படியே ஆகட்டும்! தேவாசுரர்களே! இதுவரை உம் ஆணவத்தால் பாற்கடல் கடைந்தீர்கள். நஞ்சுதான் கிடைத்தது. இப்பொழுது திருவருளினால் கடையுங்கள்! அமுதம் கிடைக்கும்! தேவர்கள்: அரகர அரகர! இறைவா! தங்கள் திருவருளே வாழும் வழி! திருநீலகண்டம் திருநீலகண்டம்!! காட்சி 3திருநீலகண்டர்: திருநீலகண்டம்! திருநீலகண்டம்!! மனைவியார் : சிவ சிவ : சுவாமி, திருநீலகண்டத்தின் பெருமையை இப்போழுது மிகவும் உணர்ந்தேன்! சிவ சிவ ! திருநீலகண்டர் : திருநீலகண்டம்! தேவி, நாம் கோயில் சென்று, நம் கூத்தப்பெருமானை வணங்குவோம். மனைவியார் : தங்கள் சித்தம்! இப்போழுதே செல்வோம். காட்சி 2பின்குரல் : திருமகளைவிடச் சிறந்த அழகினையுடைய திருநீலகண்டர் தம் மனைவியார், தம் கணவர்இளமை மீதூரக் காமத்துறையில் சிறியராகிஅவ்வூரில் ஒரு பரத்தையை அணைந்து, தம்முடைய வீட்டிற்கு வர, அதைக் கண்டு மானம் மீதூர, அதனைப் பொறுக்காமல், தம்மிடத்தி னின்றும் தோன்றிய ஊடலால், இல்வாழ்க்கையின் இன்றியமையாக் கடமைகளாய் உள்ள திருவமுதமைத்தல் அதனைக் காலத்தில் கொடுத்துதவுதல் முதலிய செயற்பாடுகளை எல்லாம் செய்து, மெய்யுறு புணர்ச்சிக்கு மட்டும் உடன்படாதவர் ஆயினார். இடம் : திருநீலகண்ட நாயனார் இல்லம் திருநீலகண்டர்: தேவி தேவி! மனைவியார்: (அழுதுகொண்டே) இத்தனை காலமும்| உயிருக்கு உயிராக அல்லவா வாழ்ந்து வந்தோம்.|| அன்பும் அறனும் நிறைந்த| இல்வாழ்க்கையாக மனம் சற்றும் கோணாமல்| நாம் கொண்ட தொண்டினைச் சிறப்புறச் செய்து அன்றோ வாழ்ந் து வந்தோம்||. என்ன குறை கண்டீர்கள்| தில்லைக் கூத்தபிரான் கழல்களை முதலாகக் கொண்டு நாம் வாழ்ந்த வாழ்வில்?|| வேறொரு பெண்ணை நினைந்து பார்க்கும் அளவிலும்| நான் உங்கள் அன்பிலிருந்து தவறி இருக்கிறேனா?| கூறுங்கள் சுவாமி!| கூறுங்கள்.| திருநீலகண்டர்: தேவி தேவி, நீ எந்தத் தவறும் செய்யவில்லை. உன்னைப் போன்ற ஒரு மனைவி யாருக்கு வாய்க்கும்? தேவி நம்முடைய இல்லறத்தில் எந்தக் குறையும் இல்லை. என்னுடைய இளமையின் துடிப்பு காரணமாக நான் செய்த இப்பிழையை மன்னித்துவிடு அன்பே! (மனைவியார் அருகில் வர முயற்சிக்கிறார்.) மனைவியார்: வேண்டாம் வேண்டாம், என் அருகில் வராதீர்கள். என்னைத் தீண்டாதீர்கள். தீண்டுவீராயின் எம்மைத்| திருநீலகண்டம்! திருநீலகண்டர்: (அதிர்ந்து அகல்கின்றார்.) என்ன! தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்! திருநீலகண்டம்! தேவி, உணர்ந்தோ உணராமலோ திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுவிட்டாய். எம்மை என்றும் கூறி ஆணையிட்டதனால் இனி மாதர் குலத்தையே இவ்வுடலினால் மட்டுமல்ல மனத்தினாலும் தீண்டேன். மனைவியார்: சுவாமி சுவாமி!! பாடல் : ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட ஆர்வம் காட்சி 3பின்குரல் : இளமை மீதூர்ந்த திருநீலகண்டரும் அவர் மனைவியாரும் தாம் இருவரும் ஒருங்கு ஏற்று நின்ற அளவில்லாத சீர்மை மிகுந்த திருவாணையைப் போற்றி ஒழுக, ஆண்டுகள் பலவும் சென்றன. வளம் மிக்க இளமைப் பருவம் கழிந்த பின், உடம்பின் கண் மிக்க மூப்புப் பருவம் வந்து மிக இளைத்த பொழுதும், தாம் இது காறும் சிவபெருமானிடத்து வைத்த அன்பினின்றும் நீங்காராயினார்.இத்தகைய வாழ்க்கை நெறியில் இவர்கள் ஒழுகி வரும் நாள்களில், நெருப்புத் தளிர்விட்டாற் போலச் சிவந்த நிறத்தையும் நீண்ட மின்னலையொத்து விளங்கும் சடையையும் உடைய சிவபெருமானும், தம் அடியவராகிய திருநீலகண்ட நாயனாரின் பெருமையை யாவரும் அறிதற்கு உரிய நல்வழி இது ஆகும் என்று, அவ்வழியை இவ்வுலகில் உள்ளார் விரும்பி உய்யுமாற்றான் அதனைக் காட்டுதற்கு அருள் மிகுந்த சிவயோகியாக வடிவு கொண்டு கீளும் கோவணமும் கொண்டு, அழியாத ஒளியை வீசுகின்ற திருவெண்ணீற்றின் ஒளி பரப்பும் திருமேனியின்கண் இடத்தோளோடு சேர்ந்து மார்பில் அசைகின்ற பூணூலுடனே, பேரொளி வீசுகின்ற திருநீற்றை முக்கீற்று வடிவாகத் தீட்டிய நெற்றியும்,நெடுஞ்சடை மறையுமாறு சுருண்டுகிடக்கும் தலைமயிரும், ஒளிவீசுகின்ற பற்களினின்றும் தோன்றும் வெள்ளிய நிலவும், மேம்படப், பிச்சை ஏற்றற்குரிய கலத்தை ஏந்திய வலத் திருக்கையும், உடையவராய் எழுந்தருளித் திருநீலகண்டர் மனையை அடைந்தார். இடம் : திருநீலகண்டர் இல்லம் திருநீலகண்டர் : திருநீலகண்டம்! திருநீலகண்டம்! வரவேண்டும் அடியவரே வரவேண்டும்! தாங்கள் இம்மனையில் எழுந்தருளப் யான் பெரும் பேறு பெற்றேன். திருநீலகண்டம்! திருநீலகண்டம்! பின்குரல் : சிவயோகியாராகிய பெருமானாரைத் தம்முடைய கண்களால் கண்டு மகிழ்ந்த திருநீலகண்டர், இவர் புண்ணிய வடிவுடைய ஒரு சிவனடியார் ஆவர் என்று கருதிப் போற்றி, மகிழ்ச்சியால் நன்கு வரவேற்பதற்குரிய இன்னுரைகளோடு எதிர் கொண்டு வழிபட்டார்.இளம் பிறை வளர்தற்கிடனாகிய சடைமுடியினை யுடைய சிவபெருமானை, அவர் அடியார் என்று கருதி பெருமகிழ்வு மிக, அடியவர்களை ஏற்றுப் போற்றுதற்கான வழிபாடுகளை முறைமையாகத் தம் உள்ளத்து நிறைந்த பெருவிருப்போடு செய்கிறார் திருநீலகண்டர் : திருநீலகண்டம்! எம் தலைவரே ! அடியேன் தங்கட்குச் செய்யத்தகும் பணிவிடை யாது! திருநீலகண்டம்! இறைவர் : திருநீலகண்டத்தை உம் உயிர் மூச்சாகக் கொண்டு துதிப்பது நமக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இத்திருவோட்டை உன்னிடத்தில் வைத்திருந்து நாம் விரும்பும் பொழுது நீ கொடுப்பாயாக. வேட்கோவரே, இவ்வோட்டினை ஒப்பிடின் தனக்குத் தானே ஒப்பானது; இவ்வுலகில் தன்னிடத்தில் சேர்ந்த பொருள்கள் அனைத்தையும் தூய்மையாக்குவது. இது பொன், மணிகள் ஆகியவற்றைக் காட்டிலும் போற்றத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இவ்வோட்டை நீ பெற்றுக்கொண்டு யாம் விரும்பும்போது தருவாயாக! திருநீலகண்டர் : திருநீலகண்டம்! இவ்வோட்டினை எங்கள் மனையில் வைத்து காக்கும் பெரும் பேறு பெற்றோம் .இவ்வோட்டினை பாதுகாப்பான இடத்தில் வைத்து தாங்கள் விரும்பும் போது கொடுக்கிறேன். திருநீலகண்டம்! பின்குரல் : நிறைந்த புகழினையுடைய திருநீலகண்டர், அத்திருவோட்டைத் தொழுது வாங்கிக் கொண்டு, விரைவாகத் தம் வீட்டில் காப்புமிக்க தோர் இடத்தில் வைத்து, மீண்டும் சிவபெருமானாகிய சிவயோகியை அடைந்தார் இறைவர் : வேட்கோவரே! நாம் வருகிறோம். திருநீலகண்டர் : தங்கள் சித்தம்! திருநீலகண்டம்! திருநீலகண்டம்! காட்சி 4பின்குரல் : பல நாள்கள் கழிந்த நிலையில், சிவயோகியார் தாம் முன்பு அவரிடத்து வைத்த அழகிய திருவோட்டை அவர் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தினின்றும் மறையச் செய்து, சிறப்பு அமைந்த பத்திமையினால் என்றும் திருந்திய குணத்தை உடைய திருநீலகண்டரிடத்துள்ள தூய அப்பத்திமையைப் பிறரும் உணருமாறு செய்ய, முன்பு வந்தது போன்ற வேடங் கொண்டு, அவர் மனைக்கு எழுந்தருளினார் இடம் : திருநீலகண்ட நாயனார் இல்லம் இறைவர் : வேட்கோவரே! வேட்கோவரே! மனையில் இருக்கிறீரா? திருநீலகண்டர் : திருநீலகண்டம்! வர வேண்டும் வர வேண்டும்! எம்பெருமான், அடியேன் இல்லத்திற்குத் திருவுளங்கொண்டு எழுந்தருளியது நாங்கள் செய்த பெருந்தவமே யாகும். இறைவர் : ம்ம்ம்… வேட்கோவரே! அதெல்லாம் இருக்கட்டும்; முன்னாள் யாம் நின்னிடத்தில் கொடுத்த பேரொளி மிக்க திருஓட்டினை எமக்கு அளித்து விட்டு பிறகு மற்றதை பேசலாமே. திருநீலகண்டர் : திருநீலகண்டம்! தங்கள் உத்தரவு. இதோ இப்பொழுதே எடுத்து வருகிறேன்! திருநீலகண்டம்! பின்குரல் : மறையவர் திருவோட்டினை, விரைந்து வாங்குதற்குரிய குறிப்போடு கூற, அப்பெருமுனிவர் தந்தருளிய அத்திருவோட்டைத் தம் மனையில் முன் வைத்த இடத்திற்குச் சென்று கொண்டுவருதற்குப் புகுந்த திருநீலகண்டர், அத்திருவோட்டைக் காணாமல் திகைத்தார் பிற இடங்களில் தேடியும் காணாதவ ராய், இவ்வாறு மறைந்த மாயை ஒன்றையும் அறியாது, தாம் அச்சிவயோகியாருக்கு எவ்வித மாற்றமும் கூற இயலாதவராகி நின்றார். திருநீலகண்டர் : திருநீலகண்டம்! திருவோட்டினை காணவில்லையே.இங்கு தானே வைத்தேன். தேவி! இங்கு வைத்த வோட்டினை நீ எடுத்தாயா! திருநீலகண்டம்! மனைவியார் : இல்லையே; நான் அதனை எடுக்கவில்லையே. திருநீலகண்டர் : திருநீலகண்டம்! இது என்ன மாயம்! இறைவா! நான் என் செய்வேன். வந்திருக்கும் மறையவருக்கு என்ன பதில் கூறுவேன். திருநீலகண்டம்! இறைவர் : வேட்கோவரே! மிக விரைவில் எடுத்து வருவதாக மனையுள் புகுந்த நீர், இத்துனைக் காலம் தாழ்ப்பது ஏன்? சீக்கிரமாக எம் வோட்டினை எடுத்து வாரும்; யாம் பல இடங்களுக்குச் செல்லவேண்டும். திருநீலகண்டர் : எம் தலைவரே! நூல் இழைகளால் அழகுபெறச் சேர்க்கப்பெற்ற முந்நூலையணிந்த மார்பினையுடைய எம்முதல்வரே! நீவிர் என்னி டத்துக் கொடுத்துச் சென்ற விரும்பத்தகும் அத்திருஓடு வைத்த விடத்தும் பிறவிடத்தும் கூடத் தேடிக் கண்டிலேன். பெருமானே! நும் பழைய திரு ஓட்டினும் புதிதாக வனையப் பெற்றிருக்கும் நல்ல திரு ஓட்டினைத் தருகின்றேன்; அதனை ஏற்று இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும் சுவாமி! திருநீலகண்டம்! இறைவர் : வேட்கோவரே! என்ன கூறுகிறீர்? யான் உன்னிடத்து வைத்த மண் ஓடேயன்றிப் பொன்னால் செய்ததொரு ஓட்டைக் கொடுத்தாயாயினும் அதனைக் கொள்ளமாட்டேன். காப்பாற்றித் தருமாறு முன்னை நாளில், யாம் கொடுத்து வைத்த அவ்வோட்டினையே கொண்டு வா. திருநீலகண்டர் : திருநீலகண்டம்! கேடிலாப் பெரியோய்! நீர் என்னிடத்து வைத்த திருஓடு காணாததாக, அதனை எவ்விடத்தும் தேடியும் யான் காணேன்; அதனின் நல்லதொரு திருஓடு மிக நீண்ட காலம் நீடித்துப் பயன்படத்தக்கதாய் இருப்பதொன்றைக் கொடுக்கின்றேன் என்று சொல்லவும், அதனை ஏற்றருளாது சினந்து அதனையே கொடு என்று கூறியது, என் உணர்வு முழுமையையும் ஒழித்துவிட்டது. திருநீலகண்டம்! இறைவர் :இனி உன்னிடத்து ஆக வேண்டியது என்ன இருக்கிறது? உன்னிடம் அடைக்கலமாக யான் வைத்த பொருளைக் கவர்ந்து கொண்டு, அதனை மறைத்தற்குரிய வஞ்சனையான நடிப்பைச் செய்து, பழியான இச்செயல் செய்ததற்கு, நீ சிறிதும் நாணாதவனாய் இருக்கின்றாய். அதனால் இவ்வூரில் உள்ளார் யாவரும் காண உன்னைப் பற்றிக் கொண்டு, எம் திருஓட்டைப் பெற்றுக் கொள்வதல்லால் இவ்விடத்தினின்றும் யாம் போகவும் மாட்டோம். திருநீலகண்டர் : திருநீலகண்டம்! ஐயா! பொருளும், அருமையும் ஆய வளங்களால் அத்திருவோட்டைக் கவர்ந்து கொண்டேன் அல்லேன். என் மனத்தகத்தும் அக்கள்ளமில்லாமையைக் காட்டுதற்கு நான் யாது செய்வேன்? திருநீலகண்டம்! இறைவர் : ம் அப்படியா! உன் விருப்பத்திற்குரிய உன்மகன் கையைப் பிடித்துக் கொண்டு திருக்குளத்தில் மூழ்கியவாறு நான் எடுக்கவில்லை என்னும் உறுதி மொழியைக் கூறிச் செல்வாயாக. திருநீலகண்டர் : திருநீலகண்டம்! அடிகளே! நீர் அருளிச் செய்த வண்ணம் அடியேன் செய்தற்குக் குற்றமற்ற சிறப்பினையுடைய மகன் இல்லை. யான் என் செய்வேன்! திருநீலகண்டம்! இறைவர் : அதனால் என்ன! கற்பில் உயர்ந்த உன் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு நெருங்கிய மலர்களையுடைய திருக்குளத்திற்குச் சென்று மூழ்கியவாறு உறுதி கூறுவாயாக. திருநீலகண்டர் : திருநீலகண்டம்! எம் தலைவரே! யானும் என் மனையாளும் ஒரு சூளுறவால், கையைத் தீண்டி மூழ்குதற்கு இயலாதுள்ளது; ஆதலின், நீர்மிக்க திருக்குளத்தில் யானே மூழ்கி என் உறுதிப்பாட்டை மெய்ப்பிக்கின்றேன். திருநீலகண்டம்! இறைவர் : ம் என்ன துணிச்சல்! யாம் கொடுத்த திருவோட்டைக் கொடுக்காமலும், அதனை நான் வஞ்சித்து எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு உன் மனைவியின் கையைப் பிடித்து நீரின் மூழ்கிச் சொல்லாமலும், மனத்தை வலிமை செய்து கொண்டிருக்கின்றாய். தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருக்கும் பெருமை வாய்ந்த ஊர்ச் சபையில் சென்று இவ்வழக்கினை நாம் சொல்வோம். காட்சி 5பின்குரல் : நல்லொழுக்கத்தில் முதன்மையாக நிற்பவர்களும், நான் மறைகளாகிய துறையில் நிற்பவர்களும் ஆகிய தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருந்த திருத்தமான ஊர்ச்சபை யிடத்து, அளவிறந்த குணங்களையுடைய சிவயோகியார் தன் வழக்கினை எடுத்துக் கூறுகின்றார். இடம் : தில்லை வாழ் அந்தணர்கள் சபை இறைவர் : சபையோர்களே! இந்தத் திருநீலகண்ட வேட்கோவனிடத்தில் எனக்கொரு வழக்குள்ளது! சபைத் தலைவர் : அடியவரே! முதலில் தாங்கள் யார்?! எந்த ஊர்? இறைவர் : யாம் எங்கும் இருப்போம். எம்மையறிந்தவர்கள் வெகு சிலரே; திருநீலகண்டன் எம்மை நன்கறிவான். இருப்பினும், இப்பொழுது அதுவல்ல வழக்கு! சபைத் தலைவர் : சரி உம் வழக்கைக் கூறும்? இறைவர் : இந்த திருநீலகண்ட வேட்கோவனிடம், யாம் ஒப்பற்ற திருவோடு ஒன்றினைக் கொடுத்துச் சென்றோம்; பொன்னும் மணியும் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது. இவனிடத்துக் கொடுத்த அத்திருவோட்டைத் திருடிவிட்டான். திருடியதை இவன் மறுக்கவும் செய்கிறான். இதுவே எமது வழக்கு. சபைத் தலைவர் : திருநீலகண்டரே! இவ்வடியவர் கூறுவதென்னே? இவர் தங்களிடம் திருவோடு கொடுத்தாரா? திருநீலகண்டர் : ஆமாம்! சபையோரே பெருஞ் செல்வம் இதுவென்று இவர் திருவோடு கொடுத்தது உண்மையே. இறைவர் : ம்ம்ம்! இப்போதாவது இதனை இவன் ஒத்துக்கொண்டானே! சபைத் தலைவர் : அப்படியாயின், அதனைக் அவரிடம் திருப்பிக் கொடுக்கவேண்டியதுதானே! திருநீலகண்டர் : பெருமை மிக்க சபையோரே! இவ்வடியவர் கொடுத்த அந்த ஒப்பற்ற திருவோட்டை யான் மிகவும் பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தேன். ஆனால், தற்பொழுது எங்குத் தேடியும் காணவில்லை; மாயமாய் மறைந்து விட்டது போலும். இறைவர் : (வாய்விட்டுச் சிரிக்கின்றார்) கள்வன்; பொய்யன்; திருடன். எல்லாம் செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல நடிக்கின்றான். இவன் மகா நடிகன் போலும். சபைத் தலைவர் : அடியவரே! சற்றுப் பொறுமையாக இருங்கள்; நாங்கள் அறிந்தவரை திருநீலகண்டர் நீர் கூறுவதுபோல் தவறானவர் இல்லை! திருநீலகண்டரே, இதன்பொருட்டு தங்களின் கருத்து? திருநீலகண்டர் : சபையோரே, நீடித்து உழைக்கும் மற்றொரு ஓட்டினை யான் தருகிறேன் என்று கூறினும், இப்பெரியோர் ஏற்க மறுக்கின்றார். சபைத் தலைவர் : பிறகென்ன? அடியவரே, தாங்கள் நீலகண்டர் கொடுக்கும் வேறொரு ஓட்டினைப் பெற்றுக்கொள்ளலாமே?! இறைவர் : எமது ஓடு எப்பொருளுக்கும் ஈடு இணையற்றது, ஒப்பற்றது என்று யாம் முன்பே கூறியதைக் கருத்தில் கொள்ளவில்லையோ?! எமக்கு, எம் ஒப்பற்ற திருவோடே வேண்டும்; இதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை. சபைத் தலைவர் : அடியவரே, தாங்களோ தங்கள் உறுதிபாட்டில் வலுவாய் உள்ளீர்கள்; திருநீலகண்டரோ, யான் திருடவில்லை, ஓடு மறைந்துவிட்டது என்கிறார்; அதனால்.… இறைவர் : சபையோரே, அவன் திருடவில்லையென்றால், எமக்கு அவன் தன் புத்திரனைப் பிடித்துக் கொண்டு சத்தியம் செய்து கொடுக்கலாமல்லவா? அதற்கும் இவன் மறுக்கின்றான். திருநீலகண்டர் : எமக்குப் புத்திரர் பேறு இல்லை என்பதை இச்சபையோர் நன்கறிவர்; ஆதலின் அஃது ஆகாதென்றேன். இறைவர் : ம்ம்ம்… சரியான கள்வன்தான் இவன். ஆனால் என்ன, இவனுக்கு கடமை தவறா ஒப்பற்ற மனைவி இருக்கிறாளல்லவா?! அவளின் அழகிய கரத்தைப் பற்றிக் கொண்டு திருக்குளத்தில் சத்தியம் செய்து தரலாமே? இதை ஏன் மறுக்கின்றான் இக்கயவன். சபைத் தலைவர் : திருநீலகண்டரே, இவர் கூறுவதுபோல தங்களின் மனைவி கரத்தைப் பிடித்துக் கொண்டு தாங்கள் அவருக்கு உறுதி கூற வேண்டும்; இதுவே சபையின் தீர்ப்பு. திருநீலகண்டர் : இதுவே சபையின் தீர்ப்பானால் யான் இயன்றவாறு செய்து முடிக்கின்றேன். இறைவர் : ம்ம்ம்! இப்பொழுதாவது ஒத்துக்கொண்டாயே! வா செல்லலாம் திருக்குளத்திற்கு. காட்சி 6பின்குரல் : திருநீலகண்டர் தம்மனைவியாரை அழைத்துக் கொண்டு மறை யவர் வேடங்கொண்டு நிற்கும் சிவபெருமானாகிய சிவயோகியார் முன்பு, சினம் மிக்க ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டிருக்கும் சிவ பெருமான் வீற்றிருந்து அருளும் திருப்புலீச்சரம் எனும் திருக் கோயிலின் முன்னுள்ள அரும்புகளும் மலர்களும் உடைத்தாகிய சோலை சூழ்ந்த அத்திருக்குளத்திற்கு அண்மையில் வந்து, தம் மனைவியாரைத் தீண்டாதிருக்கும் உண்மையை அங்கும் காப்பாராய், மணிகள் இழைத்த மூங்கில் தண்டின் இருபுறத்தையும் தாமும் மனைவியாருமாகப் பிடித்துக் கொண்டு திருக்குளத்தில் இறங்கினார்கள். இடம் : திருப்புலீச்சரம் திருக்குளம் இறைவர் : திருநீலகண்டரே! `உம் மனைவியின் கையைப் பிடித்து மூழ்க வேண்டும்; ஏன் மூங்கில் தண்டினை பிடித்துக் கொண்டு மூழ்க முயல்கிறீர்?! பின்குரல் : இவ்வாறு சிவயோகியார் கேட்க குற்றமற்ற திருநீலகண்டரும் தாம் தம் மனைவியாரைத் தீண்டி மூழ்க இயலாதிருக்கும் சூழலை யாவரும் கேட்குமாறு, முன்னாளில் நிகழ்ந்த தம் சூளுறவைச் சொல்லித் திருக்குளத்தில் மூழ்கினார். திருநீலகண்டர் : பேரடியவரே! முன்போருநாள் யான் ஒரு பரத்தையை அணைந்து, எம்முடைய வீட்டிற்கு வந்த போது , அதைக் கண்டு மானம் மீதூர பொறுக்காமாட்டாமல் , தம்மிடத்தினின்றும் தோன்றிய ஊடலால் தம்மை தீண்டக் கூடாது என்று என் உயிரினும் மேலான எம் இறைவன் திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுக் கூறியதால், அன்று முதல் இன்று வரை எம் திருநீலகண்டத்து இறைவன் திருவருளால் அவ்வாணையை பாதுகாத்து வருகிறேன். இன்று அதனை காக்கும் பொருட்டே இம்மூங்கில் தண்டினை பற்றி கொண்டு மூழ்குகிறேன். பின்குரல் : திருக்குளத்தின் மூழ்கி எழும் பொழுது திருநீலகண்ட நாயனாரும், அவருடைய மனைவியாரும் தாம் அடைந்த மூப்புப் பருவம் நீங்கி, யாவரும் விரும்பத்தக்க இளமைப் பருவத்தை அடைந்து, தேவர்களும், முனிவர்களும் போற்றிப் பொழிந்த தெய்வ மணம் மிக்க மலர் மழையில் மீண்டும் முழுகுகின்றவர்களைப் போலப் பொலிவடைந்து தோன்றினர். வியக்கத் தக்க இளமைப் பருவம் அடைந்த அவ் விருவரையும் கண்டவர்கள் யாவரும் இது காறும் தமக்கு முன்னிருந்த மறைமுதல்வராகிய சிவயோகியாரைக் காணவில்லை. இவ்வாறு நிகழ்ந்த வண்ணந்தான் யாது? என்று ஐயுற்று நின்ற திருநீலகண்ட நாயனாரும் மனைவியாரும், பரந்து நிற்கும் விண்ணிடத்து விடையின் மீது உமையொரு கூறனாய் இறைவர் எழுந்தருளி இருப்பதைக் காண்கிறார்கள் இறைவர் : ஐம்புலன்களையும் வென்று சிறப்படைந்தவர்களே! நம்முடைய சிவலோகத்தில் அன்போடு நீங்கள் இருவரும் எந்நாளும் இவ்விளமை நீங்காமல் இருந்து வாழ்வீர்களாக. பின்குரல் : திருநீலகண்ட நாயனாரும், கற்பிற் சிறந்த அவர் மனைவியாரும், சிவபெருமானின் திருவருளினால் யாவரும் செய்தற்கரிய செய்கையைச் செய்து யாவரும் பெறற்கரிய இளமையைப் பெற்றுச் சிவலோகத்தை அடைந்து பேரின்பத்தைப் பெற்றார்கள்` திருச்சிற்றம்பலம் |