தொண்டர் நாயகம்சண்டேசுவர நாயனார் புராணம் - நாடகம்முன்னுரை : பொருவில் பொன்னித் திருநதி என்னாளும் பொய்க்காமல் நீர் தரும் நீர் நாடாகிய சோழவள நாட்டில் மண்ணியாற்றின் தென்கரையில் முருகப் பெருமானின் திருஆணையினால் அளிக்கப்பட்ட திருமறையோர்கள் மிகுந்து இருக்கும் பழமையான ஊர் செல்வம் நிறைந்த திருச்சேய்ஞலூர். இங்கு வாழும் மறையோர்கள் சிவநெறிச் சாதனமாகிய திருவெண்ணீற்றின் ஒன்றுபட்ட ஒழுக்கமுடையவராய், இரண்டு பிறப்பின் சிறப்புடையவராய், முத்தீயினை என்றும் வளர்த்துக்கும் நிற்பவராய், நான்கு வேதங்களையும் முறையாய்ப் பயின்றவராய், ஐம்புலன்களும் தங்களைப் பின்செல்லும் தன்மையராய், அறுதொழிலின் மெய்யொழுக்கத்தினை உடையவராகவும் ஏழுலகமும் போற்றத் தக்கவராகவும் விளங்கினர். இத்தகையப் வேதப் பயனாம் சைவம் போல் மண்ணின் பயனாம் பெருமையையுடைய இப்பதியிலே காசிபக் கோத்திரத்தின் வழியில் வந்த எச்சதத்தன் - பவித்திரை என்ற அந்தணர் தம்பதியினர் இருந்தனர். இவர்கள் செய்த தவத்தின் பலனாக இவர்களுக்கு அருமறையின் துறை விளங்கவும், மறையோர்களின் குலம் பெருகவும், திருமன்றில் நடம்புரிபவர் சைவ வாய்மை வளரவும், மாதவத்தோர் வெற்றி விளங்கவும் விசாரசருமனார் திருஅவதாரஞ் செய்தார். காட்சி - 1.இடம் : எச்சதத்தன் இல்லம். பின்குரல் : எச்சதத்தன் தன் அரும் புதல்வர் விசாரசருமனாரைப் பற்றி பவித்திரையாரிடம் பெருமையாகக் கூறிக்கொண்டிருக்கின்றார். எச்சதத்தன் : பவித்திரை, நம் மகன் விசாரசருமன் ஏழு வயதை அடைந்து விட்டான், நம் மறை வழக்கப்படி அவனுக்கு உபநயனச் சடங்கு நடத்த வேண்டும். பவித்திரை : சுவாமி! நம் மகன் விசாரசருமன் ஐந்து வயதிலேயே அருமறைகள், ஆறங்கம் மற்றும் தன் இறைவன் மொழிந்த ஆகமங்களையும் உணர்ந்தவன்; அவன் பெருமையை என்னவென்று கூறுவது?! இத்தகைய தவப்புதல்வனைப் பெறுவதற்கு நாம் மாதவம் செய்தோம். காட்சி - 2.இடம் : வேதாகம பாடசாலை. பின்குரல் : விசாரசருமனாருக்கு உபநயனச் சடங்கு முறைப்படி நடந்தது. தம் மரபின் வழக்க்கின்படி முறையான ஆசானிடம் அவருக்கு வேதம் பயிலும் கடமையையும் செய்வித்தார் எச்சதத்தன். (ஆசிரியர் சொல்ல மறைச் சிறுவர்கள் வேதம் ஓதுகின்றனர்.) மாணவர் : விசாரசருமா! உன் அளவிற்கு வேதங்களை எங்களால் கற்க முடிவதில்லையே! ஆசிரியர் சொல்வதை உடனேயே கற்றுவிடுகிறாயே! நீ முன்பே வேதங்களைக் கற்றாயா?! விசாரசருமர் : சிவ சிவ! நடமே புரியும் சேவடியார் நம்மை உடையத் தலைவராம் அவர் திருவருளினால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது. அளவில்லாத கலைகளில் குறிக்கப்படும் பொருள்களுக்கெல்லாம் எல்லையாயுள்ள பொருள் அருட்கூத்து ஏற்றும் இயற்றும் திருவடியே ஆகும். மாணவர்: அது சரி! வேதங்களில் இந்திரன், அக்கினி முதலான பல பெயர்கள் கூறப்பட்டுளனவே அப்படியென்றால் பல தெய்வ வழிபாட்டையே வேதங்கள் காட்டுகின்றனவோ? அதில் உருத்திரன் எனச் சொல்லப்படுவது மட்டும் தான் சிவபெருமானோ? விசாரசருமர்: இல்லை இல்லை; மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும். ஆனால் வேதங்கள் பரம்பொருளாகிய சிவபெருமானின் பல்வேறு வகை ஆற்றல்களையே வெவ்வேறு பெயர்களில் போற்றுகின்றன. ஒரு மனிதரே வீட்டில் வீட்டுத் தலைவராகவும், நாட்டில் குடிமகனாகவும், பணியிடத்தில் ஊழியனாகவும் பெயர் பெறும் பொழுது எல்லாவற்றையும் இயக்கும் இறைவனை வேதங்கள் பலவாறு அழைப்பதில் என்ன வியப்பு? உருத்திரன் என்பது இறைவனுடைய மேலான ஒரு ஆற்றல் நிலை. எனவே வேதங்கள் முழுமையும் உரைப்பது சிவபெருமானின் புகழே. மாணவர்: நீ கூறியதற்கு ஆதாரம் உண்டா? விசாரசருமர்: ஓ நிச்சயமாக! எடுத்துக்காட்டாக இருக்கு வேதம் இரண்டாவது காண்டத்தில் “இந்திரன், மித்திரன், வருணன், அக்கினி, திவ்யன், சுபர்ணன், கருத்மான், யமன், மாதரிஷ்வான் எனப் பலவாகப் பெரியோர்களால் அழைக்கப்பட்ட மெய்ப்பொருள் ஒன்றே” என அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. இன்னுமோரிடத்தில் “ஒளி நிறைந்த அந்தப் பரம்பொருளை எல்லா உருவங்களின் ஊடே கண்டு திருநாமங்கள் பாடி யார் வணங்குகின்றார்களோ அவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வை இங்கேயே அடைந்தவர்கள் ஆகின்றார்கள்” என்கின்றது யசுர் வேதம். வேண்டின் இன்னும் பலபல காட்டலாம். இருக்கு மாமறை ஈசனையே தொழும் கருத்தினை அறியாதவர்கள் தான் பல கடவுள்கள் என மயங்குவர். மாணவர் : சிவசிவ சிவசிவ!! இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! நல்லன கூறும் நல்ல நண்பன் நீ! ஆமாம்! அப்படிப்பட்ட ஈசனுக்கு அடுத்தபடியாக உள்ளவரைப் பற்றியேனும் வேதம் கூறியிருக்கின்றதா? விசாரசருமர்: “இரண்டாவது, மூன்றாவது, நான்காவதாகக் கூட ஒருவரில்லை. ஐந்தாவது, ஆறாவது, ஏழாவதாகக் கூட ஒருவரில்லை. எட்டாவது ஒன்பதாவது, பத்தாவதாகக் கூட ஒருவரில்லை. ஒருவனே தேவன் என்று அறி” இது அதர்வண வேதம் போதுமா? மாணவர்: சம்போ மஹாதேவ! அற்புதம் அற்புதம்!! வேதம் காட்டும் பரம்பொருள் ஒன்றென்பதை நன்கு தெரிந்துகொண்டேன். இன்னும் ஒரு சந்தேகம்! வேதங்கள் உருவ வழிபாட்டைக் கூறுகின்றனவா? விசார சருமர்: “ஈஸா வாஸ்யம் இதம் ஸர்வம்” என்று இறைவனன்றி ஒன்றில்லையாகக் காட்டுவன வேதங்கள். முன்பே கூறிய யசுர்வேத மந்திரம் திருநாமம் பாடிடக் கூறுகின்றது. இன்னொரு இருக்கு மந்திரம், “என் இக்கரங்கள் இறைவனே போல்வன. இவை இறைவனுக்கும் மேலானவை. இவையன்றோ உலகுக்கெல்லாம் மருந்தாக உள்ள சிவபெருமானைத் தொட்டு அருச்சிக்கின்றன!” என்கின்றது. இதற்கும் மேலாகவா வேண்டும் வேத வழி நாம் செய்யும் சிவ வழிபாட்டிற்கு அடிப்படை?! ஆசிரியர் - 1 : அருமறைகளையும் ஆறங்கம் மற்றும் ஆகமங்களையும் அவைகள் உள்ளிட்டப் பல கலைகளையும் ஆசிரியர் ஓதுவிக்கும் முன்னே விசாரசருமரிடம் இவ்வனைத்தும் நிலவுகின்ற அறிவின் திறத்தினைக் கண்டு மிகவும் வியப்படைகின்றேன். மாணவர் : உண்மைதான் குருவே! காட்சி - 3.இடம் : திருசேய்ஞலூர் வீதி. பின்குரல் : விசாரசருமர் சக மறைச் சிறுவர்களுடன் வேதப் பாடசாலையிலிருந்து தன் இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார். அப்போது, பசுவை மேய்க்கும் ஒருவர் ஒரு கோலினால் பசுவை அடிக்க, அதைக் கண்டு மனம் பொறாது விசாரசருமனார் விரைந்துச் சென்றுத் தடுக்கின்றார். விசாரசருமர் : ஆயனே! என்ன காரியம் செய்தாய்?! பசுக்களின் பெருமையை நீ அறிவாயா? கூறுகிறேன் கேள்!
கன்றுகளுடன் கூடிய இவ்ஆனிரைகளை இன்பம் தரும் வழியே மேய்த்துக் காக்கின்ற இதனின்மேல் செய்யத்தக்கக் கடமை வேறு இல்லை; இதுவே அம்பலக்கூத்தருடையத் திருவடிகளைப் போற்றும் நெறியுமாகும். நீர் இந்நிரைமேய்க்குந் தொழிலை ஒழிக! இனி இந்நிரையினை யானே மேய்ப்பன். ஆயர் : மண்ணிக்க மன்னிக்க வேண்டும் ஐயா! யான் அறியாது செய்த பிழைப் பொறுத்தருள வேண்டுகிறேன். காட்சி - 4.இடம் : மறையவர் இல்லம். பின்குரல் : “ஆனிரைகளை யானே மேய்ப்பன்” என்ற விசாரசருமனார், அப்பசுக்களை மிகச் சிறப்பான முறையில் மேய்த்து அவை வேண்டுமளவும் விரும்பி உண்ணும்படி செய்து நீர்த்துறையில் நல்ல குளிர்ந்த நீரைப் பருகச் செய்து அச்சங்கள் வராது காத்து அமுதமாகிய சுவையுள்ள சுவையுள்ளப் பாலினைத் தரும் நேரத்தில் அவற்றினை உடையோராகிய மறையவர்களின் மனைகள் தோறும் சேர்ப்பித்தார். இதோ மறையவர்கள்இதோ ஒரு மறையவர் விசாரசருமனாரின் ஆனிரை மேய்ப்பைப் புகழ்ந்துக் கூறுகின்றார். மறையவர் - 1 : பிரம்மச்சாரி விசாரசருமன் பசுக்களை மேய்த்ததன்பின் இந்தப் பசுக்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. நம் வேள்விச் சடங்குச் செய்வதற்குரிய ஆனைந்தினையும் நிரம்பவே தருகின்றன. மறையவர் - 2 : ஆமாம்! எங்கள் வீட்டுப் பசு தன் கன்றினைப் பிரியும் கவலையை மறந்து விசாரசருமனாரையே தன் கன்றாகக் கருதுகின்றது என்றால் பாருங்களேன்! மறைகள் அனைத்தையும் உணர்ந்த நம் விசாரசருமனார் நம் அனைவருக்கும் தெய்வமறைக் கன்றாகவே தெரிகின்றார். காட்சி 4அஇடம்: பாடசாலை மாணவர்: விசாரசருமா! அன்றைக்கு எனக்கு வேத நாயகனே நம் சிவபெருமான் என உணர்த்தினாய்! ஆமாம், வேதங்களை நாம் பொது என்று சொல்கின்றோமே அது ஏன்? வேறு வகையும் காட்டும் ஆதி நூல்கள் உண்டா? விசாரசருமர்: வேதங்கள் ஒரு பரம்பொருளான இறைவனின் பல ஆற்றல்களைப் பல பெயர்களால் பலவாறு போற்றுகின்றன. அப்பரம்பொருளை ஈஸ்வரன் என்று சிவபெருமானுக்கே உரித்த பெயரால் பலவிடத்தும் காட்டிய போதிலும் அவை இறைவனை ஒரு வடிவமாகக் காட்டாத்தால் அவை பொது எனப்படுகின்றன. மாணவர்: ஓகோ! விசாரசருமர்: இறைவன் என்ற சொல்லே நம் சிவபெருமானையே குறிக்குமாயினும் அது ஒரு பொதுச் சொல் தானே! அது போன்றே வேதங்கள் அப்பரசிவமான ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத பரம்பொருளை, இது அவன் திருவுரு இவன் அவன் என நம்முடைய வழிபாட்டு உணர்வுக்கு எளிதில் எட்டும் வண்ணம் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல விடையின் மேல் மாதொருபாகனாக பூதப்படைசூழத் திருமால், பிரமன், இந்திரர், தேவர் நாகர் தானவர்க்கும் பெருமானாக நம் சிவபெருமானைக் காட்டுவன சிவாகமங்கள். இவை இவ்வாறு இறைவனைச் சிறப்புத் தோற்றத்தால் காட்டுவதால் சிறப்பு எனப் பெயர் பெறும். மாணவர்: ஆகா! அற்புதம்! எல்லாவற்றையும் கடந்த உரை உணர்விறந்த ஒரு பொருள்! அது எளிமையாக நமக்காக உருவம் தாங்கி சிவமென ஆட்கொள்ளும் கோலம்! பொது! சிறப்பு!! இவ்விரண்டும் பெற்று விளங்குவது நம் சைவமன்றோ! பெருமையாக இருக்கின்றது! ஆமாம், பிரமன் இந்திரர் என்று கூறினாயே! அவர்களும் வேதத்தில் கூறப்பட்ட இந்திரர் போன்ற நாமங்களா? விசாரசருமர்: இல்லை இல்லை! வேதங்களில் கூறப்பட்டது ஆற்றல் நிலைகள். ஆகமங்களிலும் புராணங்களிலும் கூறப்படும் இவர்கள் நம் போன்ற உயிர்களாக இருந்து சிவபெருமான் திருவருளால் தங்கள் தவத்திற்கு ஏற்ப இவ்வாற்றல் நிலைகளை அடைந்தவர்கள். மாணவர்: எனக்குப் புரியவில்லையே! விசாரசருமர்: புரியவில்லையா?! புரியும்படியாகக் கூறுகிறேன்; நம்முடைய கிராமத்தையே எடுத்துக் கொள்வோம். கிராமத் தலைவர் என்று ஒரு பதவி இருக்கின்றதல்லாவா! அதில் சென்ற வருடம் ஒருவர் இருந்தார். இவ்வருடம் ஒருவர் உள்ளார். அடுத்த வருடம் யாரோ! தகுதியுடைய ஒருவரை மன்னர் கிராமத் தலைவராக நியமிப்பதில்லையா? அப்படித்தான் சிவபெருமான் திருவருளால் பலர் அண்டமாளும் பதவிகளைப் பெறுகின்றனர். அப்பப்பா! என்ன கருணை நம்பெருமான் சிவனாருக்கு! ஆற்றல் நிலைகளை மேலோங்கி வரும் உயிர்களுக்கு எவ்வாறு அருள்கூர்ந்து அளிக்கிறார்! மாணவர்: எவ்வளவு ஆற்றல் நிலை வரைப் பெருமான் அளிப்பார்? விசாரசருமர்: அதற்குத்தான் எல்லையுண்டோ? தன்னுடைய திருவுருவையே திருநாமத்தையே பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தருபவர் என்றால் அவர் தம் பேரருளுடைமையை என்ன என்பது? மாணவர்: பக்குவப்பட்டால் நம் போன்றவர்களுக்கும் இறைவனின் திருவுருவமும் திருநாமமும் கிடைக்கும் என்கின்றாயா? விசாரசருமர்: நிச்சயமாக! அவர் தம் ஆனந்த வெள்ளத்தில் தன்னை இழந்தால், யாவர்க்கும் கிடைக்கும்;. அவர் தம் தாமமும் நாமமும். காட்சி - 5.இடம் : மண்ணியாற்றங்கரை. பின்குரல் : கன்றுகளைப் பிரிந்த ஆனினங்கள் தம்முன் நிற்கும் சிறிய மறைக்கன்றாகிய விசாரசருமரைக் கண்டு உருகி அக்கன்றுக்குத் தாம் தாயாகியத் தன்மையை அடைந்தனவாய் கணைனைத்துக்கொண்டு மடிசுரந்து கறவாமே பாலினைப் பொழிந்தன. விசாரசருமர் : சிவ சிவ! மறையவர்களின் பசுக்களுடையப் பால் வீணாகப் பூமிக்குச் செல்கின்றதே! எம்மை உடைய ஈசனுக்கு இப்பாலினால் திருமஞ்சனம் செய்து வழிபடுவேன். பின்குரல் : மண்ணியாற்றங்கரையிலே ஆத்தி மரத்தினடியிலே செங்கண் விடையவரின் திருமேனியாகியச் சிவலிங்கத்தை மணலினாலே செய்து சிவாலயமும் கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார். ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலாக சிவபெருமானது திருமுடியின்மேல் சாத்துதற்கு ஆகும் திருப்பள்ளித் தாமங்கள் பலவற்றையும் கொய்து இலைகளாற் கோர்த்து வைத்த பூங்கூடையினில் கொண்டு வந்து நறுமணம் தங்கும்படி வைத்தார். முன்னைத் தொடர்ச்சியாகிய அன்பினாலே அர்ச்சனைப் புரிந்து பாலின் திருமஞ்சனத்தை ஆட்டி, பூசனைக்குத் தேவையான பொருட்களில் தாம் தேடிக்கொள்ளாதவற்றை அன்பினால் நிரப்பி சிவனார் மெய்மைப் பூசனையைச் செய்து மகிழ்கின்றார். ஊரார் : அட! என்ன கொடுமை இது! வேள்விக்குப் பயனாகும் பாலினை இப்படி மண்ணில் கொட்டி விளையாடுகின்றானே இச்சிறுவன்; இதனை உடனடியாக மறையவர்களிடம் தெரிவிக்க வேண்டும். காட்சி - 6.இடம் : மறையவர் சபை. ஊரார் : அந்தணர் பெருமக்களே! இந்தக் கொடுமையை யான் என்னவென்று கூறுவேன்?! நம் ஆயனை விரட்டிவிட்டு, “யானே மேய்ப்பன்” என்று கூறி நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டு நம் பசுக்களின் பாலை மண்ணில் கொட்டி விளையாடுகின்றான் விசாரசருமன். சபை அந்தணர் : ஐயா! தாங்கள் கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லையே! விசாரசருமர் நம் ஆனிரைகளை மேய்க்க ஆரம்பித்த நாள்முதல் நம் பசுக்கூட்டங்கள் அனைத்தும் செழிப்பாகவும் மிகுந்த பாலையும் தருகின்றனவே! சருமனாரை சிறியப் பெருந்தகையார் என்று அனைவரும் கூறுவதைக் தாங்கள் அறியாதவரா?! ஊரார் : ஐயா! யான் தாங்களுக்கு உரைத்தவைகள் அனைத்தும் அடியேன் என் இரு கண்களாலும் கண்ட காட்சியாகும்; ஆகையினால் சபையோர் இதனைத் தீர விசாரிக்க வேண்டுகிறேன். சபை அந்தணர் : ம்... அதுவும் சரிதான்! அப்பிரம்மச்சாரியின் தந்தையாராகிய எச்சத்தத்தனை இச்சபைக்கு அழைத்து வாருங்கள். (எச்சத்தத்தன் வருகின்றார்; சபையை வணங்குகின்றார்.) எச்சதத்தன் : பெருமை மிக்க மறையவர்களே என்னை இங்கு அழைத்ததின் காரணம் என்ன?! சபை அந்தணர் : உங்கள் மகன் நம்முஎங்களுடைய ஆனிரையை மேய்த்துச் செய்யும் செய்யும் காரியத்தை நீர் கேட்பீராகதீங்கினை நீர் கேட்பாயாக! ஊரார் : உங்கள் மகன் அந்தணாளர்கள் வேள்விக்கு பால் கறக்கும் பசுக்களை எல்லாம் மனம் மகிழ்ந்து மேய்ப்பவன் போல நடித்து மண்ணி ஆற்றங்கரையிலே பாலினனக் கறந்து மணலிலே கொட்டி விளையாடுகின்றான்; வேத ஆகமங்களைக் கற்றவன் செய்யும் செயலா இது?! எச்சத்தத்தன் : அந்தணர் பெருமக்களே! என் மகன் செய்த இப்பிழையினை நான் சிறிதும் அறிந்திலேன். இதுவரை நிகழ்ந்த தவறினை சபையோர் பொறுக்குமாறு வேண்டுகிறேன். இனி இச்செயல் நிகழ்ந்தால் அக்குற்றம் என்னுடையதே ஆகும். சபை அந்தணர் : உங்கள் வாக்கினை நாங்கள் நம்புகிறோம். இனி இத்தவறு நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டியது உம்முடைய கடமையாகும். எச்சதத்தன் : மிக்க நன்றி ஐயா! காட்சி 6அ:இடம்: பாடசாலை மாணவர்: விசார சருமா! இருக்கு, யஜுர், சாமம், அதர்வணமாக நாம் கற்கும் வேதங்களின் சாரத்தை எனக்கு விளங்குமாறு சொல்வாயா? விசாரசருமர்: நன்று தான் கேட்டாய். அருமறையின் சாரமாக விளங்குவது ஸ்ரீ ருத்ரம். இது வேதங்களின் இதயப் பகுதியாகவும் விளங்கி வேதத்தின் உட்பொருளையும் உணர்த்துவது. மாணவர்: ம்ம்.. இன்னும் சொல்லேன், அந்த உட்பொருள் பற்றி. விசாரசருமர்: வேதங்கள் முழுமையும் காண்பன போல், ஸ்ரீ ருத்ரமானது எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் கண்டு துதிக்கின்றது. ஆயினும் இறைவன் இப்பொருள்களாகவும் அன்றி அவற்றின் தலைவனாக உடையவனாக பதியாக விளங்குகின்றான் என்பதை அப்பதிக்கும் வணக்கம் என்பதாகவும், மேலான ஞானக் கண்ணோட்டத்தில் எங்கும் இறைவனைக் காணச்செய்கின்றன - உயர்ந்தோரிடத்தும், வஞ்சனை செய்வோரிடத்தும், தேரை உடையவரிடத்தும், நாயை உடையவரிடத்தும் அந்த நாயிடத்தும் கூட. மாணவர்: அப்பப்பா! எப்படி ஒரு கண்ணோட்டம் - அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தன் என மாறாத உணர்வாகக் கிடைத்துவிட்டால் நமக்கு இவ்வுலகிலேயே சிவலோகமான வாழ்வன்றோ! விசாரசருமா உன்னைப்போன்ற ஒரு நண்பனை அளித்த அந்தத் திருவருளுக்கு என் வணக்கத்தினைக் கூறுகின்றேன். சிறிய பெருந்தகையே! என் போன்றோருக்காக அந்த ஸ்ரீருத்ரத்தின் மெய்ப்பொருளை எப்போதும் நினைக்கும் வண்ணம் எளிதாகக் கூறுவாயா! விசாரசருமர்: அந்த ஸ்ரீருத்ரத்தின் நடுவணதாக அமைகின்ற “நம: சிவாய” என்ற திருமந்திரமே வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது. “எதுவும் எனதன்று எல்லாம் சிவனுடையது” என உணர்த்துவது. எக்காலத்தும் எவ்விடத்தும் யாராக இருந்தாலும் அன்பொடு ஓதத் தகுந்தது. அவ்வாறு உணர்ந்து ஓதுவாருக்கு ஒப்பில்லாத சிவ சாயுச்சியமாம் வீடுபேற்றினை வழங்கவல்லது. (நாத்தழுதழுக்க) நம: சிவாய நம: சிவாய நம: சிவாய (வணங்குகின்றார்.) என் உள்ளம் அந்தப் பேரன்பின் பெருமானை ஸ்ரீருத்ரத்தால் அதன் மெய்ப்பொருளான பங்சாட்சரமாம் நம:சிவாய மந்திரத்தால் வணங்கக் கன்றை நினைந்த பசு போல் விரைகின்றது. நீ இந்த ஐந்தெழுத்தை இடையறாது ஓதி உய்வுறு. நான் ஆநிரைகள் கொண்டு சென்று என்னுயிர்த் தலைவனை வணங்குவேன். நம:சிவாய நம:சிவாய (மாணவரும் உடனே நம:சிவாய மந்திரத்தில் திளைக்கிறார்.) காட்சி - 7.இடம் : மறையவர் சபைமண்ணியாற்றங்கரை. பின்குரல் : மகனால் தனக்குப் பழி வந்தது என்று நினைந்து, மகனாரிடமும் அதனைச் சொல்லாதவராய் இந்த நிலைமையினை யானே நாளை நேரில் கண்டறிவேன் என்று எண்ணி, எச்சதத்தன் ஆனிரைகளை மேய்க்கச் சென்ற விசாரசருமனாரைப் மறைந்து, பின்தொடர்ந்துச் சென்றார். எச்சதத்தன் மண்ணி ஆற்றங்கரையில் உள்ள ஓர் குரா மரத்தின் மீது ஏறி, நடக்கவிருப்பதைக் காண மறைந்திருந்தார். விசாரசருமர் : எம்பெருமானே! நித்தமும் உம்மை தீம்பாலினாலே திருமஞ்சனம் செய்து வழிபடும் பெரும்பேறினைப் பெற்றேன். என்னையும் பொருளாக இன்னருள் பொழியும் தேவரீருடைய தனிப்பெருங் கருணையை எவ்வாறு போற்றுவேன்! (விசாரசருமனார் வேத மந்திரத்தால் இறைவனை அர்ச்சிக்கின்றார்.) பின்குரல் : அவையோர் கூறிய குற்றத்தை நேரில் கண்ட எச்சதத்தன் கடுங்கோபங் கொண்டு விசாரசருமரை நோக்கி வருகின்றார்; அருகில் கிடந்த ஒரு தண்டினால் விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடிக்கின்றார். ஆனால் சிவ பூசனையில் மூழ்கி இருக்கும் சிறிய பெருந்தோன்றலார், உளமும் புலனும் அரனாரிடத்து ஒடுங்கி இருந்தமையால் தன் தந்தையார் தன்னை அடித்தனை உணராதவாய் இருக்கின்றார். எச்சதத்தன் : விசாரசருமா! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?! மறையவர்களின் உடைமையாகிய இப்பசுக்களின் பாலை எடுக்க உமக்கு உனக்கு என்ன உரிமை இருக்கின்றது? வேதங்களைக் கற்ற நீ இவ்வாறு செய்தல் குற்றம் என்று அறியவில்லையா? நான் கேட்டுக்கொண்டேயிருக்கின்றேன்கேட்டுக்கொண்டிருக்கின்றேன் நீ ஒன்றும் அறியாதவனாய், உன் செயலிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றாயே?! (எச்சதத்தன் மீண்டும் தண்டினால் விசாரசருமனாரின் முதுகில் அடிக்கின்றார்.) பின்குரல் : எச்சதத்தன் பலகாலும் அடிக்க மேலாம் பெரியோர் அதனை உணராதவராகி தம் சிவ பூசையில் சலியாததைக் கண்டு, அறிவு அழிந்து வெகுண்டோனாகிய எச்சதத்தன் திருமஞ்சனக் குட பாலினை தம் காலினால் இடறிச் சிந்தி, மண்ணிக்க மன்னிக்க இயலாத சிவ அபச்சாரத்தைச் செய்தவனாயினான். பாலினை இடறி சிவ அபச்சாரத்தைச் செய்த தீயவனை தந்தையென அறிந்து அவருடைய தாள்களை தண்டிக்கும்படி அருகில் கிடந்த கோலினை எடுக்க, முறைமையினால் அதுவே மழுவாகிட அதுகொண்டு எச்சதத்தனின் தாள்களை எறிந்தார். முதுமறையோனாகிய எச்சதத்தன் தன் தாள்களை இழந்து மண்ணின்மேல் துடிதுடித்து வீழ்ந்து உயிர் நீத்தான். பெற்றத் தாதை தன் கண்முன்னே கால்களை இழந்து துடிதுடித்து உயிர் நீத்ததைக் கண்டு சிறிதும் தளறாது, தம் சிவ பூசைக்கு வந்த இடையூற்றைப் போக்கினவராய் முன்போலே அர்ச்சிக்கத் தொடங்க - நீண்ட சடையினை உடைய சிவபெருமான் உமாதேவியாருடன் விடையின்மேல் காட்சி அளித்தார். (விசாரசருமர் இறைவனை வீழ்ந்து வணங்குகின்றார்.) சிவபெருமான் விசாரசருமரை எடுத்து நோக்குகின்றார்; இறைவனார் : “அன்பனே நம் பொருட்டாக உன்னைப் பெற்றத் தந்தை வீழும்படி எறிந்தாய் - இனி உனக்கு நாமே அடுத்த தந்தையாகினோம். மேலும், நீ தொண்டர்க்கெல்லாம் அதிபனாக நாம் உண்ட கலமும், உடுக்கும் உடைகளும், சூடும் மாலை, அணிகலன் முதலியனவும் ஆகிய அனைத்தும் உனக்கே உரிமையாகும்படி சண்டீசனாகும் பதவியையும் தந்தோம்”. பின்குரல் : சிவபெருமானார் தன்னுடைய சடாமுடியிலிருந்து பிறையுடனே சேர்ந்த கொன்றை மாலையை எடுத்து விசாரசருமனாரின் முடியில் சூட்டி, சண்டீசன் என்னும் தன்னுடைய திருப்பெயரையும் சூட்டி அருளினார். பாதகத்துக்குப் பரிசு வைத்த சிவபெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!! சண்டீசப் பெருமான் மலரடிகள் போற்றி! போற்றி!! முதுமறையோனாகிய எச்சதத்தன் உலகம் அறியும்படியும் சிவ அபராதம் செய்தும் சிவபெருமானின் திருவருளினால் நான்மறையின் ஒழுக்கமுடைய திருசேய்ஞலூர் பிள்ளையாரின் திருக்கையில் ஏந்திய அழகிய மழுவினாலே தண்டிக்கப்பட்டதால், அந்தப் பிழையினின்று நீங்கியவனாய் தன் சுற்றத்தாருடனே சிவலோகஞ் சேரும் பேற்றினையும் பெற்றான். வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர் திருச்சிற்றம்பலம் |