நாடகம் 6: ஏயர்கோன் இரும்பிணி தீர்த்தார்காட்சி 1:(ஏயர்கோனும் அடியார்களும் பாடிகொண்டு இருக்கின்றார்கள்.) மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. ஏயர்கோன்: ஆகா! அரசர் பெருமான் எவ்வளவு அழகாக இறைவனை பாடுகின்றார். அவர் தம் தேவாரப் பாடல்களே நம் ஆரூர்ப் பெருமானுக்கு இனிய அணிகலன்கள்! அடியார்: ஐயா! தாங்கள் திருவாரூர்ப் பெருமானைப் பற்றிச் சொன்னவுடன் நினைவுக்கு வருகின்றது. ஊரெல்லாம் ஒரே கோலாகலம். திருவாரூர்ப் பெருமான் ந ம்பியாரூரருக்காக பரவையாரின் சினம் தணிவிக்க அவர் மனைக்கு இரண்டு முறை தூது சென்றாராம். ஏயர்கோன்: சிவ சிவ! இதென்ன கொடுமை! அரியும் அயனும் இந்திரனும் குற்றேவல் செய்யக் காத்திருக்கும் அண்ட முதல்வரை ஒரு அடியவர் தன் மனைவியி டம் தூதாக அனுப்புவதா?! சிவ சிவ! நினைக்கவே ஏற்கவில்லையே! பாவியேன் காதுகளில் இச்செய்தி விழுந்து உள்ளத்தைப் புண்ணாக்கி விட்டதே! இறைவா! ஆரூரர் அனுப்பினாரென்றால் தாங்களும் உடன்படலாமா? எங்கள் கோனே! எங்கள் கோனே! காட்சி 2:(ஏயர்கோன் சூலை நோயால் துடிக்கிறார்.) ஏயர்கோன்: சிவ சிவ! பெருமானே! கொடிய சூலை நோய் வயிற்றை வேல் கொண்டு குத்துவது போல் வருத்துகின்றது! குடரைப் பிசைகின்றது, வலிக்கின்றது பெருமானே! அடியார்க்கு மாமருந்தே! ஒரு பற்றே! இறைவா, இதனைத் தீர்த்துப் பெருங்கருணை புரிய வேண்டும்! பெருமானே! பெருமானே! இறைவர்: கலிக்காமரே! வன்றொண்டர் வந்து தீர்த்தாலன்றி இந்நோய் தீராது! ஏயர்கோன்: என்ன? வன்றொண்டனா? இறைவா! என் தந்தை, அவரது தந்தை அவர்க்கும் தந்தை என்று எமது கூட்டமெல்லாம் உமது திருவடியே சரணம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இருக்கையில் தங்களைப் பெண்ணிடம் தூது அனுப்பிய நம்பியோ வந்து தீர்ப்பது? அதற்கு இந்தச் சூலை நோயால் வருந்துதலே மேல்! இறைவா! இறைவா! காட்சி 3:(சுந்தரர் உலாவிக்கொண்டிடு இருக்கின்றார்.) நம்பி: ஏயர்கோன் கலிக்காமர் எவ்வளவு பெரிய அடியவர். அப்பெரியவர் பரவை மனைக்குப் பெருமான் தூது சென்றதற்கு எவ்வளவு வருந்துகிறார். அவருக்குத் தான் பெருமான் மேல் எவ்வளவு அன்பு! அத்தகு அடியவர் வருந்தும் பிழை செய்துவிட்டேன்! இறைவன் தம்மைத் தோழமையாக அருளிய பெரும்பண்பால் அவரிட மே எல்லாமும் கேட்டுப் பெறும் நியமத்தாலன்றோ செய்தேன்! அது இவ்வடியவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டதே! இறைவர்: நம்பீ! கலிக்காமருக்கு உள்ள கொடிய சூலை நோயை நம் கட்டளைப்படி நீ சென்று தீர்த்து வா! நம்பி: உத்தரவு! திருவருள் பெருமான்! காட்சி 4:(கலிக்காமர் சூலையால் வருந்த அவர் தேவியார் அருகில் இருக்கின்றார்.) ஒரு பெண்: அம்மா! சுந்தரர் இங்கு வரப்போவதாக செய்தி சொல்லி அனுப்பியுள்ளார் அம்மா! கலிக்காமர்: ஆ! வேண்டாம், நம்பி தீர்த்து இந்தச் சூலை நோய் தீரத்தேவையில்லை! உயிர் இருந்தால் தானே இச்சூலை! (வயிற்றைக் கிழித்துக் கொள்கின்றார்.) கலிக்காமர் துணைவியார்: பெருமானே! தங்களோடு நானும் வருகின்றேன்! (கத்தியை எடுக்க முற்படுகின்றார். அப்போது ..) ஒரு பெண்: அம்மா! சுந்தரர் நம் வாயிலருகே வந்துவிட்டார் அம்மா! கலிக்காமர் துணைவியார்: (கண்களைத் துடைத்துக்கொண்டு) யாரும் இங்கு அழக்கூடாது! இச்செய்தி யாருக்கும் தெரிய வேண்டாம்! சீரடியாராம் நம்பிகளை பூரண கும்பம் வைத்து வரவேற்போம்! (நம்பிகளை வரவேற்கின்றனர்.) நம்பி: ஏயர்கோனார் உற்ற சூலை நோயைத் தீர்க்க எம்பெருமான் கட்டளையோடு வந்துள்ளேன். பெரியவரைக் காணவேண்டும்! பெண்: ஓ! அதெல்லாம் ஒன்றும் துன்பமில்லை! ஐயா துயில் கொண்டிருக்கின்றார்கள்! நம்பி: துன்பமில்லை என்றால் மகிழ்ச்சி தான். என்றாலும் என் மனநிம்மதிக்காக அவரைக் கண்டே ஆக வேண்டும்! அவர் எங்கே! (நம்பிக்கு ஏயர்கோனைக் காட்டுகின்றனர்.) நம்பி: ஆ! இத்துயில் தான் நீங்கள் கூறியதா! இவர் முன்னம் நானும் என் உயிரைச் செலுத்துவேன்! (நம்பி கத்தியை எடுகின்றார்.) ஏயர்கோன்: (உயிர்பெற்று) கேளிரேயாகிக் கெட்டேன்! ஆரூரரே! தங்களது அன்பின் பெருமைக்கே அன்றோ இறைவர் தூது சென்றார். திங்கள் சூடினரேனும் திரி புரம் எரித்தனரேனும் புகழே அன்றிப் பழி இல்லாத எம்பெருமான் செய்யத் தகாத ஒன்றை என்று தான் செய்துள்ளார்? நாமே காரணம் அறியாது மயங்குகின்றோம். ஆரூரர் ஆண்ட நம்பியே நும் பெருமையே பெருமை! நம்பி: தங்கள் பேரன்பே பேரன்பு! வாருங்கள் ஐயா! திருப்புன்கூர் இறைவரைச் சென்று வணங்குவோம்! ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக் கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணற் சிவன் தன்மேற் சென்ற தாதை தாளற எறிந்த சண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள்செயக் கண்டு பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன் பூம்பொழில் திருப்புன்கூர் உளானே. |