logo

|

Home >

to-practise >

puranam-iraivan-vidaiyerudhal-vrishabharudhar

புராணம் இறைவன் விடையேறுதல் (ரிஷபாரூடர்)

(விருஷபாரூடர்)

    கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்கள் ஆயிரம் கொண்டது பிரம்மதேவனுக்கு ஒரு பகல் ஆகிறது. அதே அளவு காலம் கொண்டதே அவருக்கு இரவு ஆகிறது. இவ்விதமான இரவு பகல் கொண்ட முன்னூற்றி அறுபத்தி ஐந்து தினங்கள் கொண்டது ஒரு ஆண்டு ஆகிறது. இந்த ஆண்டுகளின்படி நூறு ஆண்டுகள் பிரம்மதேவனின் ஆயுளாகும். பிரம்மதேவனின் ஆயுளாகிய இத்தகைய நூறு ஆண்டுகள் திருமாலுக்கு ஒரு பகலாகும். அதே அளவு காலம் அவருக்கு இரவாகும். இப்படி இரவும் பகலுமாகிற முன்னூற்றி அறுபத்தி ஐந்து தினங்கள் திருமாலுக்கு ஆயுளாகும். இவ்விதம் அனேக பிரமதேவர்கள் திருமால்களின் ஆயுள்கள் முடிந்தபிறகு மஹாபிரளயம் ஏற்பட்டு மஹா ஸம்ஹாரம் ஏற்படுகிறது. 

    அச்சமயம் சிவபெருமானார் தமது தேவியார் காணத் திருநடனம் புரிவார். மஹாப் பிரளயமாகிற அக்கினிப் பிரளயத்தைக் கண்டு தருமதேவதை மிகவும்பயந்து எருதின் (விடை, இடபம், விருஷபம் என்பவை எருதினைக் குறிக்கும் பெயர்கள்) வடிவமெடுத்துச் சிவபெருமானைச் சரணமடைந்து 'இறைவனே! அடியேன் அழியாத வண்ணம் என்னைக் காத்தருள் புரிய வேண்டும். மேலும் எனக்குச் சிறந்த ஆற்றலையும் அளித்து என்னைத் தேவரீரது வாகனமாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என வேண்டியது. 

    பெருமானும் அந்த வேண்டுகோளை அங்கீகரித்துத் தருமதேவதையாகிய விருஷபத்தினைத் தமது வாகனமாகக் கொண்டும் அதற்குப் பேராற்றலையும், என்றும் அழிவில்லாத் தன்மையையும், எப்பொழுதும் தன்னிடமிருந்து நீங்காத் தன்மையினையும் அளித்தருளினார். பக்தர்களுக்கு அருள்புரியும்போது தருமதேவதையாகிய எருதின்மேல் உமையுடன் எழுந்தருளி வருவார். இத்திருக்கோலமே 'விருஷபாரூட மூர்த்தி, 'விடையேறும் பெருமான்' என்பதாகும். தருமதேவதையினைத் தவிர மஹாவிஷ்ணுவும் பரமேச்வரன் முப்புரம் எரித்த காலத்தில் விருஷபரூபம் எடுத்து அவரைச் சுமந்தார். இக்காரணத்தினால் செங்கண்மால் விடை என்று கூறப்படுகிறது. இறைவன் விடையேறிய இவ்வரலாறு ஸ்காந்த மஹாபுராணம்  சங்கர ஸம்ஹிதை சிவரஹஸ்ய கண்டம் தக்ஷகாண்டத்தில் கூறப் பட்டுள்ளது. 
 

Related Content

ருஷபாரூட மூர்த்தி