logo

|

Home >

to-practise >

kandhapuranam-thirupparankundru-ser-padalam

கந்தபுராணம் - தேவ காண்டம் - திருப்பரங்குன்று சேர் படலம்

Gandhapuranam of Kachchiyappa Chivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

தேவ காண்டம் - திருப்பரங்குன்று சேர் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

5. தேவ காண்டம்

 

1.  திருப்பரங்குன்று சேர் படலம்

 

இன்ன பண்பினாற் சிவனடி வழிபடல் இயற்றி

அந்நி லைக்கள நீங்கியே அமரர்கண் முனிவர்

தன்ன தானையந் தலைவர்கள் புடைதழீஇச் சாரப்

பொன்னின் மஞ்ஞையின் எருத்தமேல் கொண்டனன் புனிதன்.1

 

சீர்தயங்கிய யூரமேல் அமர்தருஞ் செவ்வேள்

சார்த லுற்றிடு மாலயன் மகபதி தம்மை

நேர்த லில்படை வீரரை நோக்கியே நீவிர்

ஊர்தி மேலராய் வம்மின் நம்புடையென உரைத்தான்.             2

 

வேறு

 

மற்றது காலையில் வண்டு ழாய்முடிக்

கொற்றவன் முதலிய குழுக்கொ டேவரும்

வெற்றிகொள் வீரமும் வேறு தத்தமக்

குற்றிடும் ஊர்திமேல் ஒருங்குற் றீண்டினார்.              3

 

ஞாயிறு கறங்கென நணுகும் பொன்முடிக்

கோயிலின் மருங்கினில் குழீஇக் குழீஇயிரண்

டாயிர வௌ¢ளமாம் அடல்வெம் பூதரும்

ஏயென எழுந்தனர் எழுந்த பூழியே.                      4

 

மிக்குயர் அறிஞரை மேவில் கீழ்மைசெய்

மக்களு மேல்நெறி அடைதல் வாய்மையே

தக்கதொல் பூதர்கள் சரணந் தோய்தலில்

புக்கது பொன்நகர் புவியும் பூழியாய்.                     5

 

அழற்றிய பல்கதிர் ஆத பத்திரம்

நிழற்றிய விண்ணளாய் நிமி£¢த்த கேதனங்

குழற்றிய துளைவயிர் கோடு காகளம

மிழற்றிய கேரிகை மிகவும் ஆர்த்தவே.                  6

 

மேக்குயர் வட்டமும் விளங்கு காம்புமாய்

நீக்கமில் கவிகைகள் நிழற்றி மல்குவ 

மாக்கிளர் ப•றொடை வானக் கம்பலந்

தூக்கிய திறனெனத் தோன்று கின்றவே.          7

 

மேற்றலை கடவிய வெய்யன் வெம்மையால்

நோற்றலை எய்திவான் உணங்க நோன்றிரை

ஆற்றலை முயன்றென அனிக வேலையுட்

கோற்றலை அசைவவெண் கொடியின் கானமே.   8

 

பாங்கமை பதலையே முதல பல்லியம்

ஆங்கொலி வழங்குவ அவுணத் தீயரைத்

தாங்கினை யென்றிறை தண்டஞ் செய்திட

வாங்கிய திரைக்கடல் வாய்விட் டொக்குமால்.            9

 

காந்தளஞ் சென்னியன் கடவு மாமயில்

கூந்தொறுங் கூந்தொறுங் குலைந்து ப•றலைப்

பாந்தளங் கசைதலும் பசலை மூக்கினால்

ஆய்ந்திடு கின்றன அகிலங் குத்தியே.            10

 

மூக்குடை அலகினால் முகிலைக் கீறியே

ஊக்கொடு பரலென உருமுப் பற்றுமால்

தீக்கிளர் வன்னதோர் செய்ய சூட்டுடைக்

கூக்குரல் வாரணங் கொடிய தாகையால்.         11

 

இந்நிகழ் வுற்றிட எழுந்த தானைகள்

முன்னயல் கடைக்குழை மொய்த்துச் சென்றிடப்

பன்னிரு மொய்ம்புடைப் பகவர் மேலவன்

அந்நக ரத்தினும் அகன்று போயினான்.           12

 

பொரியரை விளவுகால் புனிற்றுத் தீங்கனி

வருபயன் கொண்டுதாம் வறிது வீழ்த்தெனக்

கரியினம் பாரிடக் கணங்கள் ஆர்ப்பினால்

வெருவின உணர்வில மயங்கி வீழ்ந்தவே.               13

 

சாற்றிடில் தம்வினை தம்மைச் சூழுமால்

ஆற்றலில் பெற்றம தலைக்கும் வல்லியம்

மாற்றருந் துப்புடை வயவர் தானையுள்

ஏற்றுரி முரசினுக் கிடைந்த ழிந்தவே.                   14

 

குஞ்சரம் எறிந்திடுங் கொலைவல் கோளரி

எஞ்சலில் கயமுகா¢ எண்ணில் பூதர்கள்

விஞ்சிய பிளிற்றொலி வினவி மெய்பனித்

தஞ்சின நஞ்செழ அயர்ந்த தேவர்போல்.          15

 

உரங்குறை போழ்தில்யார் ஒடுங்கல் இல்லவர்

வரங்குறை மான்முக வயவர் ஓதையால்

கரங்குறை வின்றிநீள் கடுங்கண் யாளிபோய்க்

குரங்குறை சூழலுட் குலைந்து புக்கவே.          16

 

வசைபடு பாரிடம் வழுக்க லில்வகை

மிசைபடும் ஊற்றமாய் மேற்கொண் டுற்றன

இசைபடு பாரிடம் இடிக்குங் கொட்பினால்

அசைபடு கின்றன அடுக்க லானவே.                     17

 

உரகமும் மடங்கலும் ஒடுங்கி உட்கியே

வரைகளின் முழைபுக வானத் தார்ப்பன

அரிமுக வீரர்தம் அரவத் தன்மையால்

இரிவன புரள்வன எழிலி யேறெலாம்.                   18

 

காட்டக எயினர்தங் கல்லென் சும்மையால்

கூட்டுறை புட்குலங் குலைவுற் றாலெனச்

சூட்டுடை வாரணந் தோகை ஆர்ப்பது

கேட்டுளம் நடுங்கினர் கிலேசங் கொண்டுளார்.     19

 

அரங்கு மதலைமேல் ஆடு நீரரின்

மரங்களை அலைத்திடு கடுவன் மந்திகள்

கரங்குலை வோடுபற் காட்டி வாய்வெரீஇ

இரங்கின சேவலங் கொடியி டிப்பினால்.          20

 

ஆரண முழங்கொலி அமரர் வாழ்த்தொலி

சீரண இயவொலி சேனைப் பேரொலி

காரணம் இல்லவன் கடவு மாமயில்

வாரண வொலிகளான் மறைத லுற்றவே.         21

 

இடனுறு குறிஞ்சியில் இனைய தன்மையால்

நடவைகொள் பெரும்படை நடுவண் ஏகியே

சுடர்பொழி வேலினான் தூய கூடலின்

குடதிசை யமர்பரங் குன்றை எய்தினான்.         22

 

ஆவதோர் பொழுதினில் அங்கண் முன்னுறை

மூவிரு தவத்தரும் முளா¤ யான்முதல்

கூவரும் எந்தையை இறைஞ்சி இவ்விடை

மேவுதி சிறந்ததிவ் வெற்பென் றோதினார்.               23

 

என்றலும் முருகவேள் யாமும் இவ்வரைச்

சென்றிட நினைந்தனம் அதனைச் செப்பினீர்

நன்றும தெண்ணமும் நமது சிந்தையும்

ஒன்றிய வேயென உவப்பிற் கூறினான்.          24

 

மைம்மலை துழனியும் வடிவும் பெற்றுடைக்

கைம்மலை பொழிதரு கடாங்கொள் சாரலின்

அம்மல யேறினன் அமலை தன்னொரு

செம்மலை யாகிவந் துதித்த சிற்பரன்.                   25

 

வற்றருந் திரைக்கடல் வடாது மாதிரப்

பொற்றையை நுகர்ந்தெனப் பூத சேனைகள்

கொற்றவன் வருபரங் குன்றின் சாரலைச்

சுற்றிய மிசையினுந் துவன்றிப் புக்கவே.         26

 

காலையங் கதுதனிற் கடவுட் கம்மியன்

மாலுறு கிரிதனில் வரம்பில் வீதியுங்

கோலநற் றெய்வதக் குலமுங் கோயிலுஞ்

சோலையும் வாவியுந் துவன்ற நல்கினான்.              27

 

அத்துணை எம்பிரான் அமரர் கம்மியன்

கைத்தொழில் நோக்கியே கருணை செய்துபோய்ச்

சித்திர மறுகிடைச் சேனை வீரரை

வைத்தனன் மந்திர வரைப்பை எய்தினான்.               28

 

ஏயின மஞ்ஞைநின் றிழந்து நான்முகன்

மாயவன் மகபதி வயவர் மற்றையோர்

ஆயினர் புடைவர அவையி னூடுபோய்ச்

சீயமெல் லணைமிசைச் சிறப்பின் வைகினான்.    29

 

பரீஇயயல் வந்திடு பங்க யன்முதல்

மரீஇயினர் தமையெலாம் வயின்வ யின்றொறும்

ஒரீயினன் அமரரை ஒல்லை யேவினான்

பொரீஇயினர் இல்லதோர் புனித மேலையோன்.   30

 

குலக்கி£¤ பொருவிய குறளின் வேந்தரும்

வெலற்கருந் திறலுடை வீர மொய்ம்பனும்

இலக்கரும் எண்மரும் யாரும் எந்தைதன்

மலர்க்கழல் தொழுதனர் மருங்கின் ஈண்டினார்.    31

 

ஏவலின் இயன்றனர் இனையா¢ நின்றிட

மூவிரு பராசர முனிசி றார்களுஞ

சேவலை யுயரிய தேவ நாயகன்

பூவடி அருச்சனை புரிந்து போற்றினார்.           32

 

வழிபடு புதல்வர்கள் வழுத்தி நின்றுழ

உழுவலன் போடுகண் ணோடிச் செஞ்சடைக்

குழவிவெண் பிறையினான் கூறுந் தொல்லருள்

முழுவதும் நினைந்தனன் முற்று ணர்ந்துளான்.    33

 

சலம்புரி யும்பரா சரனெ னும்முனி

குலம்புரி தவமெனுங் குமரர் தேர்வுறப்

புலம்புரி போதகப் பொருண்மை யாவையும் 

நலம்புரி குமரவேள் நவின்று வைகினான்.               34

 

பொருவரு மகேந்தர புரத்தை நீங்கியே

தரணியில் வந்தவா சாற்றி னாம்இனிப்

பெருமைகொள் இந்திரன் பெண்ணை எம்பிரான்

திருமணஞ் செய்திடுஞ் செய்கை செப்புவாம்.             35

 

ஆகத் திருவிருத்தம் - 35

      - - -

 

 

2.  தெ ய் வ யா னையம்மை திருமணப் படலம்

 

காய்ந்திடு தம்பகை கடந்து பொன்னகர்

வேந்தியல் முறையருள் வேற்கை வீரற்குக்

கூந்தலஞ் சிறுபுறக் குஞ்ச ரத்தனை

ஈந்திட மகபதி இதயத் தெண்ணினான்.           1

 

விருத்த மதாகும்இவ் விழைவை இந்திரன்

திருத்தகு மாலயன் தேவர் தேர்வுற

உரைத்தனன் வினவலும் உவகை பெற்றுநின்

கருத்துநன் றாலெனக் கழறல் மேயினார்.         2

 

பன்னிரு மொய்ம்புடைப் பகவன் பாற்படப் 

பின்னலஞ் கரிமுழற் பிடியும் மொய்கைவாய்

முன்னுற அருந்தவம் முயன்று வைத்தனன்

இன்னுழி அதன்பயன் எய்திற் றேகொலாம்.               3

 

கயலுறழ் விழியுடைக் கடவுள் யானையை

வியல்வரை எறிந்திடு வேற்கை அண்ணலுக்

கியல்புளி வதுவையால் ஈதற் கிவ்விடை

முயலுதி கடிதென மொழிந்து வைகினான்.               4

 

மற்றது போழ்தினின் மகத்தின் செம்மலோர்

ஒற்றனை நோக்கியே ஒல்லை மேருவாம்

பொற்றையின் மனைவியைப் புதல்வி தன்னுடன்

இற்றையில் விளித்தனை ஏகுநீ என்றான்.        5

 

என்றலுந் தூதுவன் இசைந்து மேருவிற்

சென்றனன் புலோமசைத் தெரிவை முன்புபோய்

நின்றனன் வணங்கினன் நினது சிந்தைபோல்

ஒன்றிய கேளென உரைத்தல் மேயினான்.        6

 

மாண்டனன் வெய்யசூ£ மதலை தன்னொடு

சேண்டொடர் அமரருஞ் சிறையின் நீங்கினார்

ஆண்டலை உயர்த்தவன் அனிகந் தன்னொடு

மீண்டனன் திருப்பரங் குன்ற மேயினான்.         7

 

நின்றிட அனையது நினது நாயகன்

உன்றனை மகளடும் ஒல்லை யிற்பரங்

குன்றிடை இருக்கையிற் கொண்டு செல்கெனா

இன்றெனை விடுத்தனன் ஏகுநீ யென்றான்.               8

 

அம்மொழி வினவலும் அணங்கின் நல்லவள்

விம்மித முற்றனள் விழுமம் நீங்கினாள் 

எம்மையும் இல்லதோர் இன்பம் எய்தினாள்

கொம்மென எழுந்தனன் குமரி தன்னொடும்.              9

 

புடையுற வணங்கினர் போற்றி மேருவின்

இடையுறு புலோமரை ஏம மாகியே

அடலயி ராவத் வானை மேற்கொடு

மடமகள் தன்னொடும்  வானத் தேகினாள்.               10

 

பொருப்பினுள் மேலதாய்ப் புவியிற் பேர்பெறுந்

திருப்பரங் குன்றிடைச் சென்று தேவர்கோன்

இருப்பதோர் மந்திரத் தெய்தி வைகினாள்

மருப்பிரண் டுடையதோர் வார ணத்துடன்.               11

 

உரையுமவ் வெல்லையின் உயர்ம கேந்திரச்

சிறையினும் அகன்றிடு தெய்வத் தையலார்

இறைவியைப் பெற்றன மியாமுய்க் தோமெனா

முறைமுறை வணங்கினா£¢ முகிழ்த்த கையினார்.        12

 

சேணுறும் எழிலிவாய் திறந்த மின்னுவைக்

காணுறு கின்றதோர் கலாப மஞ்ஞைபோல்

மாணுறு புலோமசை வரலும் மாதரார்

ஏணுறு கின்றனர் ஏமம் பெற்றனர்.                      13

 

கண்டனள் மதலையைக் கருணை யால்தழீஇக்

கொண்டனன் மகிழ்ந்தனள் கொங்கை பாலுக

விண்டனள் கவற்சியை வெறுமை யுற்றுளோர்

பண்டுள பெருநிதி படைத்த பான்மைபோல்.              14

 

ஆடுறு பசியினோர் ஆக்கங் கண்டுழி

நீடுறும் உவகையான் நிறை பெற்றென

மாடுறு புலாமசை வடிவங் காண்டலு

கூடினர்  தன்மையுங் குரிசில் எய்தினான்.        15

 

வேறு

 

அப்போது வானோர் குழுவோ டயிராணி கேள்வன்

செப்*போது கொங்கை மகமூஉ மணஞ்செப்பல் முன்னி

ஒப்போதும் நீர்மை யிலதாம் ஒருவன் கழற்கே

கைப்போது தூவிப் பணிந்தேத்திக் கழறல் உற்றான்.               16

 

( * ஓது - உவமவுருபு.)

 

கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய்

இந்நின்ற தேவர் சிறைமீட்டனை என்ற னக்கு

இன்னின்ற தொல்சீர் புரிந்தாயது முற்றும் நாடிச்

செய்ந்நன்றி யாகச் சிறியேன்செயத் தக்க துண்டோ.               17

 

முந்தேதமி யேன்பெறு மங்கையிம் மொய்வ ரைக்கண்

வந்தே யமர்வாள் அவள்தன்னை வதுவை செய்து

கந்தே புரைநின் பெருந்தோளிற் கலத்தி யாங்கள்

உய்ந்தே பிறவிப் பயன்பெற்றனம் ஓங்க வென்றான்.              18

 

என்னுந் துணையில் அமரேசனை எந்தை நோக்கி

அந்நங்க் தானும் மிகநோற்றனள் ஆத லால்நீ

முன்னும் படியே மணநாளை முடித்தும் என்னத்

தன்னுங் கடந்த மகிழ்வெய்தித் தருக்கி நின்றான்.         19

 

வடிக்கொண்ட ஔ¢வேற் படைநம்பிதன் வார்க ழற்கால்

முடிக்கொண் டடியேஞ் சிறந்தேங்கள் முதல்வ என்னாக்

கடிக்கொண்டே வாய்தற் புடைவந்து கணிப்பில் காதம்

நொடிக்கொண்ட போழ்திற் படர்தூதரை நோக்கி னானால்.  20

 

முன்னாகி யுள்ள பலதூதர் முகத்தை நோக்க

அன்னார் எவரும் தொழுதேபொன் னடிவ ணங்கி

எந்நாயக னேதமி யேஞ்செய்வ தென்கொ லென்னப்

பொன்னா டுடையான் இ•தொன்று புகல லுற்றான்.        21

 

மூவர்க்குள் மேலோன் கிரிசேர் முசுகுந் தனாதக்

காவற் கடவுள் தலைவர்க்கும் ககன மேவும்

தேவர்க்கும் ஏனைத் திசையோர்க்கும் முனிவ ராயோர்

ஏவர்க்கும் எந்தை மணநாளை எனச்சொல் வீரால்.        22

 

கந்தக் கடவுள் மணத்தன்மை கழறி வல்லே

இந்தப் பொருப்பி னிடையாவரும் ஈண்டும் வண்ணம்

தந்திட் டிடுங்கள் எனவாசவன் சாற்ற லோடும்

அந்தக் கணத்தில் தொழுதொற்றர் அகன்று போனார்.      23

 

வேறு

 

போனபொழு திற்புலவர் செம்மல் புலன்மிக்க

வானவர்கள் கம்மியனை வல்லையில் விளித்துக்

கானமர் கடம்புபுனை காளைதன் மணத்துக்

கானசெயல் முற்றுற அமைத்தியிவண் என்றான்.         24

 

புலவன துளங்கொடு பொருப்பின் ஒருசாரின்

நிலமிசை வரைப்பகல் நிதிக்கொடு விதித்துக்

குலமணி குயிற்றிநனி கோலம தியற்றி

வலனுயர் சிறப்பினொரு மண்டபம் அமைத்தான்.         25

 

மேலைநில முற்றுற விதானவகை போக்கி

மாலையொடு பல்கவரி வான்றுகில்கள் தூக்கி

ஆலய நனந்தலையில் ஆறுமுகன் வைக

நூலின்முறை நாடியொரு நோன்தவி சமைத்தான்.        26

 

வேதநெறி தந்திடு விசாகன் அயல்வந்த 

மாதவன் விரிஞ்சன்முதல் வானவர்கள் யாரும்

ஏதிலரும் வைகஇயல் கின்ற இடைதோறும்

ஆதனம் வரம்பில அமைத்தனன் இமைப்பில்.                    27

 

மன்றல்பயில் கின்றவது வைக்களன் மருங்கில்

குன்றுபுரை பல்சிகர கோபுரம் வகுத்தான்

அன்றிமணி மண்டபம் அளப்பில் அமைத்தான்

இன்றியமை யாப்பொதுவும் எண்ணில இழைத்தான்.              28

 

காலம்வரை யாதுகரு துற்ற பொழுதெல்லாம்

சாலவெவர் கண்ணுநனி தம்பயன் வழங்குஞ்

சோலைமலர் வாவிகள் சுனைத்தொகை தொகுத்தான்

ஏலும்வது வைக்குரிய ஏனவும் அளித்தான்.                      29

 

அவ்வகை யெலாம்புலவன் அங்ஙனம் வகுப்பச்

செவ்விது தெரிந்துவகை செய்தமரர் செம்மல்

மெய்வதுவை யாற்றும் வழவேண்டு கரணங்கள்

எவ்வெவையும் அங்கணொர் இமைப்பில் வருவித்தான்.   30

 

தேவர்முதல் வன்தனது செய்கை இதுநிற்க

ஏவலர் இசைத்திடலும் இவ்வதுவை காணக்

கோவியல் புரிந்தமுசு குந்தனெனும் நேமிக்

காவலன் வரும்பரிசு கட்டுரைசெய் கிற்பாம்.                     31

 

கல்லருவி தூங்கு கயிலைப்பொழி லின்மேனாள்

அல்லுறழ் மிடற்றவனும் அம்பிகையு மாக

னுல்லையின் மகிழ்ச்சியொ டிருப்பமுசு ஈட்டம்

வில்லுவ மரந்தொறும் வியன்சினையில் உற்ற.                  32

 

முற்றுணர் கருத்தின்முனி வோர்கள்என முள்காந்

துற்றிடு முசுக்கலையுள் ஒன்றிருவர் மீது

மற்றொரு வில்வத்திலை வரம்பில பறித்துத்

துற்றிடுவ தென்னநனி தூர்த்துளதை யன்றே.                     33

 

தூர்த்ததொரு காலைதனிற் சுந்தரிபொ ருளாய்ச்

சீர்த்திடலும் ஆங்கவள் செயற்கைதனை அண்ணல்

பார்த்துநமை ஈண்டுவழி பட்டுளது தன்னை

வேர்த்திடுவ தென்னிது விடுத்தியினி என்றான்.           34

 

என்றிடலும் அம்பிகை இகற்சின மிலாளாய்

நன்றருள் புரிந்திடலும் ஞானவடி வானோன்

வன்றிறல் முசுக்கலை மனத்திருள் அகற்றி

ஒன்றியமர் வாலுணர் வொருங்குதவி னானால்.           35

 

மெய்யுணர்வு சேர்தலும் வியன்சினை யின்நின்றும்

ஒய்யென இழிந்துமுசு உட்குவர லெய்தி

ஐயனையும் ஆய்தனையும் ஆர்வமொடு தாழ்ந்து

பொய்யடிய னேன்பிழை பொறுத்திர்என லோடும்.         36

 

பிழையிதென அச்சமொடு பேசல்எமை ஈண்டே

விழுமியதொர் கூவிளையின் மெல்லிலைகள் இட்டு

வழிபடல் புரிந்தனை மனுக்குலம் உதித்து

முழுதுலகை யாளுகென முன்னவன் மொழிந்தான்.               37

 

வேறு

 

அம்மொழி தேர்தலும் ஆயதொர் கள்வன்

கைம்மிக லுற்ற கலங்கஞர் எய்தி

விம்மி இரங்கி விதிர்ப்பொ டெழுந்தே

எம்மிறை வற்றொழு திவ்விவை செப்பும்.                       38

 

நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய்

இங்குறை கின்ற திகந்து நிலம்போய்

மங்குறு செல்வ வலைப்படு வேனேல்

எங்கள் பிரான்பினை எங்ஙனம் உய்கேன்.                39

 

என்னலும் அன்னதை எம்மிறை கேளா

நின்னுளம் நன்று நிலத்திடை வைகிப்

பின்னிவண் மீள்குதி பேதுறல் எய்தி

முன்னலை யாதும் முசுக்கலை என்றான்.                40

 

பொய்ம்மறை யான புலாலுடல் போற்றி

அம்மையில் வாழ்விடை அற்ற முறாமே

இம்முக னோடுற எற்கருள் என்னா

மெய்ம்முசு வின்கலை வேண்டிய தன்றே.                       41

 

அற்றமில் அவ்வரம் ஐயன் அளிக்கப்

பெற்றருள் கொண்டு பெருங்கயி லாயப் 

பொற்றை யகன்று பொருக்கென இம்பர்

மற்றொரு கணத்தினில் வந்தது மன்னோ.                42

 

ஆரஞர் மூழ்கியும் ஆக்கம் இழந்தும்

வாரிசு சுருங்கியும் வாய்மை நிறுத்தித்

தாரணி யாள்அரிச் சந்திரன் என்போன்

ஓர்மரு மான்என வேயுதித் தன்றே.                             43

 

மாமுக மேமுசு மற்றுள வெல்லாங்

காமரில் ஏர் தரு காட்சிய தாகிக்

கோமுறை சேர்முசு குந்தன் எனாவோர்

நாம இயற்பெயர் நண்ணிய தன்றே.                             44

 

ஆய வழிப்படும் அம்முசு குந்தன்

தூய பொலன்முடி தொன்முறை சூடி

மாயிரு ஞால வளாகம துள்ள

தேய மெலாமொர் செகிற்*கொடு காத்தான்.                      45

 

( * செகில் - தோள்மேல்.)

 

ஓவறு சீர்க்கரு வூரிடை மேவிக்

கோவியல் ஓம்புறு கொள்கை யனாகித்

தேவரை ஏவல்கொள் சீர்கெழு சூரன்

காவலின் ஆணை கடக்கலன் உற்றான்.                  46

 

சொற்றிறல் மேதகு சூரெனும் வெய்யோன்

உற்றிடும் வைப்பினில் ஓரிடை தன்னில்

மற்றொர் இளம்பிறை வைகிய வாபோல்

கொற்றவ னாம்முசு குந்தன் இருந்தான்.                 47

 

சூரனை எந்தை தொலைத்தது கேளா

ஆரஞர் நீங்கி அருஞ்சிறை பெற்ற

மேருவ தென்ன வியன்மிடல் பெற்றுச்

சீரிறை மாட்சி செலுத்தி அமர்ந்தான்.                            48

 

வேறு

 

அமரும் எல்லையின் அரசன் முன்னரே

இமைய வர்க்கிறை ஏவு தூதர்போய்க்

கமல மன்னபொற் கழல்கள் வாழ்த்தியே

தமது வன்மையாற் சாற்றல் மேயினார்.                         49

 

உனது நண்பனான் உறுபு ரந்தரன்

தனது தூதர்யாம் தாவில் சீர்பெறீஇ

நினது சுற்றமும் நீயும் வாழிகேள்

இனிது மங்கலம் இசைப்ப எய்தினேம்.                           50

 

அடாத தீமைசெய் தமரர் தஞ்சிறை

விடாத சூரனை வீட்டி வேலவன்

வடாது பூமி£ய் வந்து கூடலின்

குடாது சேர்பரங் குன்றில் வைகினான்.                   51

 

கொற்ற வேற்படைக் குமரற் கிந்திரன்

தெற்றெ னத்தருந் தெய்வ யானையை

இற்றை சென்றபின் ஈகின் றானிது

சொற்றி டும்படி தூண்டி னானெமை.                            52

 

மாறி லாதஅவ் வதுவை காணநீ

ஈறில் சேனையோ டெழுந்து தென்றமிழ்க்

கூறு சீர்ப்பரங் குன்றந் தன்னிடைச்

சேறி யாலெனாச் சிலதர் ஓதினார்.                              53

 

ஓத அன்னவன் உவகை சிந்தையின்

மீது பொங்குற மெய்ப னித்தெழீஇத்

தூத ரைத்தழீஇச் சோப னம்மிதற்

கேது மல்லையால் ஈவு மாறென்றான்.                          54

 

ஈண்டை மாநிதி யாவும் நல்குகோ

காண்ட குங்குடை கவரி நல்குகோ

ஆண்டி ருந்தஎன் அரசு நல்குகோ

வேண்டு கின்றதென் விளம்பு வீர்என்றான்.                       55

 

கோதில் சீர்முசு குந்தன் இந்தவா

றோதும் எல்லையில் உவகை யுற்றவன்

ஆத ரத்தின தளவை நோக்கியே

தூத ராயினோர் வியந்து சொல்லுவார்.                  56

 

சொல்வி னைப்படுந் தூதர்க் கிவ்வெலாம்

ஒல்வ தன்றிவை உதவிற் றொக்குமால்

வல்வி ரைந்துநீ வாச வன்முனஞ்

செல்வ தேயெனச் செப்பிப் போயினார்.                  57

 

போய தூதுவர் புவியின் மன்னவர்

ஆயி னோர்க்கெலாம் ஆறு மாமுகச்

சேய வன்மணஞ் செப்பி மாதிரம்

ஏயி னோர்க்கும்இங் கிதுவி ளம்பினார்.                  58

 

அகல்வி சும்பிடை அல்க லும்படர்

பகல வன்முதற் பகவர் யாவர்க்கும் 

இகலின் மாதவர் எவர்க்கும் இச்செயல்

விகல மின்றியே விளம்பி யேகினா£¢.                           59

 

வேறு

 

ஆய காலையின் முசுகுந்தன் அப்பதி தன்னில்

மேயி னார்களுந் தன்பெருஞ் சேனையும் வேற்கை

நாய கன்மணங் காணிய முன்னரே நடப்பான்

பாய்ம தக்கரி மிசைமுர சறைந்திடப் பணித்தான்.         60

 

அந்த நீர்மையை வள்ளுவன் அகன்கரு வூரில்

தந்தி யின்மிசை ஏறியே தனிமுர சறைந்து

முந்து சீர்க் கமலாலயத் தரன்விழா மொழிந்தே

இந்தி ரன்திரிந் திடுதல்போல் திரிந்தனன் இசைத்தான்.     61

 

வேறு

 

ஆனதோர் பொழுதில் அந்நகரின் மாக்களுஞ்

சேனையின் வௌ¢ளமுந் திசைக ளின்புறம்

போனதோர் பெரும்புறப் புணரிக் கேகுறும்

ஏனைய கடலென எழுத லுற்றவே.                              62

 

எண்டிசை யாறறுவ இபங்கள் ஆதலின்

அண்டமுந் தாங்குவான அயன்ப டைத்தென

விண்டொட நின்றிடும் வேழம் எண்ணில

கொண்டல்கள் சூழபோற் குலவச் சென்றவே.             63

 

வால்கிளர் கற்றையும் மதர்வை நோக்கமும்

பால்கிளர் செவிகளும் பழிப்பில் சென்னியுங்

கால்கிளர் செலவுமாய்க் கால்கள் சென்றென

மேல்கிளர் புரவியின் வௌ¢ளஞ் சென்றவே.                     64

 

ஐயிரு திசையினும் அணிந்து செல்வன

கொய்யுளை வயப்பரிக் குழாங்கள் பூண்டன

வெய்யவர் உதித்தென விளங்கு காட்சிய

வையமெண் ணில்லன வையம் போந்தவே.                     65

 

வலிபுணர் யாக்கையர் வயங்கொள் வாகையர்

கொலைகெழு பல்படைக் கூட்டுண் வாட்கையா¢

புலியுறழ் மானவப் பொருந ராயினார்

தலைவர்கள் தம்மொடு தழுவிப் போயினார்.                     66

 

அடல்வலி மானவர் அங்கை ஏந்திய

படைவகை மின்னுவ பல்லி யங்களும்

இடியொலி காட்டுவ ஈண்டு தானையுட்

கொடிநிரை விசும்புதோய் கொண்டல் ஆயவே.            67

 

தாளுறு கழலினர் சரம்பெய் தூணியர்

தோளுறு வில்லினர் தொடையற் குஞ்சியர்

வாளுறு தடங்கணார் மருங்கு மன்மத

வேளென ஒருசில வீரர் ஏகினார்.                        68

 

கறுத்திடுபல கைவாட் கையர் சாலிகை

பொறுத்திடு மெய்யின ராகிப் போகுவார்

மறுத்தவிர் மதிமுக மாதர் நாட்டவேல்

ஒறுத்திடு நம்மையென் றுன்னி னா£¢கோலோ.                   69

 

அடைந்திடு துன்பெலாம் ஆற்றி யம்புவி

மடந்தைமுன் செய்திடு மாத வத்தினால்

தொடர்ந்திடு பிடியினந் தொலையப் பூமிசை

நடந்தனர் வரம்பிலா நகைமென் கொம்பனார்.                    70

 

ஏரகல் மணந்தனக் கெய்தும் ஆசையால்

வாரக முலையுடை மடந்தை மார்பலர்

பாரக மலிதரப் பரவிப் போயினார்

தாரகை விண்ணெறி படருந் தன்மைபோல்.                      71

 

இடையிடை கால்களும் யாறுஞ் சேர்தலின்

படிமிசை நடந்திடு பாவை மார்களை

விடலைகள் ஏந்தியே மெல்ல ஏகினார்

கடலினும் பெரியதாங் காம மூழ்குவார்.                 72

 

தந்தி களின்மிசைத் தைய லாருடன் 

மைந்தர்க ளெகினார் மாநி லந்தனில்

அந்தமில் சீரயி ராணி தன்னொடும்

இந்திரா¢ போவதோர் இயற்கை போலவே.                       73

 

அதிர்குரல் தோ¢களில் அரிவை மாருடன்

கதுமெனப் போயினர் கணிப்பில் காளையர்

மதிமுகத் தாருடன் வரம்பில் வெய்யவர்

முதுவரைச் சிகரமேல் முடுகிச் சென்றென.                       74

 

கூற்றினை வென்றிடுங் கொலைக்க ணார்சிலர்

ஏற்றமில் பிடிமிசை ஏறிப் போந்தனர்

ஆற்றல தின்மையால் அவர்ந டைக்குமுன்

தோற்றன நாணியே சுமத்தல் போன்றவே.                       75

 

காமரு கொங்கையாற் கரிம ருப்பினை

ஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்

மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்

தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென.                      76

 

விரிதரு சேனையில் விண்ணிற் பாய்தரு

பரிகளின் மடந்தையர் பலரங் கேகினார்

கரையறும்அமரர்கள் கடைந்த பாற்கடல்

திரைதனில் வருபல திருவைப் போலவே.                77

 

மேகம துற்றிடு மின்னின் மீமிசைப்

போகிய சிலையொடும் போந்த தன்மைபோல்

பாகினை யன்னசொற் பாவை மா£¢நர

வாகனம் அவைகளின் மருவி யேகினார்.                 78

 

அவிகையில் முழுமதி அளிப்பப் பல்பொறி

குவிகையி லம்புயங் குலவிச் சென்றெனக்

கவிகையி லாதபங் கரப்ப மூடுபொற்

சிவிகையி லேகினார் தெரிவை மார்சிலர்.                79

 

வேறு

 

பரதனங் கவரும் அல்குற் பரத்தையர் தம்மைப் பாரா

விரதநன் முனிவர் தாமும் வேதியர் பலரும் ஈண்டிச்

சுரதநண் புடைய ராகுங் கணிகையர் தோளால் தாளால்

உரதனந் தன்னால் தாக்க உளைந்துளைந் தொதுங்கிப் போனார்.    80

 

வேண்டிய மாற்றங் கொள்ளாள் வெகுண்டுசென் றிடுவாள் முன்னம்

ஆண்டொரு மதமால் யானை அடர்த்துவந் திடலும் அஞ்சிப்

பூண்டிடு புலவி நீங்கிக் கணவனைப் புல்லிக் கொண்டாள்

தூண்டரு தோளி னானும் இபத்தினைத் தொழுது நின்றான்.        81

 

கூமருங் கலாப மஞ்ஞை இனமெனச் செல்லு மாதர்

மாமருங் கிறுங்கொல் இற்றால் மதன்அர சிறக்கும் என்றே.       

காமருங் கவற்சி கொள்ளக் கரத்தினால் அவரைப் புல்லித்

தாமருங் காகப் போனார் தார்முடி இளைய ரானோர்.                      82

 

கணவன்தன் பிழையை உன்னிக் கனன்றிடுங் கணவன் தோளை

அணைவுறா நீர்மை உன்னி மகிழ்ந்திடும் இவ்வா றாகிப்

மணவினை தன்னை உன்னி மகிழ்ந்திடும் இவ்வா றாகிப்

புணர்கயிற் றூசல் போலும் புந்திகொண் டொருத்தி போனாள்.      83

 

கையிலார் கைகள் பெற்றும் காலிலார் கால்கள் பெற்றும்

மொய்யிலார் மொய்கள் பெற்றும் மூங்கைகள் மொழியைப் பெற்றும்

மையல்சேர் குருட ரானோர் வாள்விழி பெற்றுஞ் சென்றார்

ஐயன்மேல் உள்ளம் வைத்தார்க் கனையதோ அரிது மாதோ.               84

 

விடந்தரு வேற்கண் நல்லாள் வௌ¤ப்படு கொங்கை தன்னைப்

படந்தனில் மறைத்த லோடும் பாங்கிலோர் காளை பாராத்

தொடர்ந்தனன் அவள்பின் போனான் துணைமுலைப் படத்திற் சிக்கிக்

கிடந்ததன் மதியை மீட்கக் கிலேசமோ டேகு வான்போல்.          85

 

நெய்தலுங் கமலப் போதும் நீலமும் நெடுநீர்ப் பொய்கை

கொய்தனர் குமர ரானோர் கொடுங்குழை மடந்தை மார்தங்

கைதனிற் கொடுத்துச் செல்வார் கன்னிமீர் இவையோ நுங்கண்

மைதிகழ் விழிக்குத் தோற்ற மலரெனக் காட்டு வார்போல்.        86

 

அரிசன மேனி நல்லாள் அணிதுகில் அசைவின் சீரால்

கரிசனம்* அன்ன கொங்கை காண்டலுந் தளர்ந்தோர் காளை

தெரிசனந் தன்னில் ஈதென் சிந்தையைப் பிணித்த தென்றால்

பரிசனந் தனில்என் னாமோ என்றுயிர் பதைத்து நின்றான்.         87

 

( * கரிசனம் - யானைக்கோடு.)

 

கற்பக வல்லி அன்னாள் ஒருத்திதன் காதல் மூழ்கி

அற்பகல் ஏவல் செய்வான் ஆங்கவள் செல்லும் போதில்

பொற்புறு படாத்தின் நீங்கிப் பூண்முலை சிறிது தோன்றப்

பற்பகல் நோற்று வேண்டும் பரிசில்பெற் றாரை ஒத்தான்.         88

 

ஒப்பிலா ஒருவேற் காளை ஔ¢ளெயிற் றூறு தாங்கித்

துப்புறு பவளச் செவ்வாய் திறக்கலள் சொல்லும் ஆடாள்

அப்படி ஒருத்தி செல்ல அநங்கவேள் அமுதம் வைத்த

செப்பினிற் குறியுண் டாங்கொல் திறக்கலீர் சிறிது மென்றான்.      89

 

புடைதனில் ஒருத்தல் புல்லப் போவதோர் பிடியின் மேவும்

மடவரல் வெருவ லோடும் மற்றது கண்டோர் வள்ளல்

இடையகல் தேரும் மாவும் யானையும் படையுங் கொண்டீர்

கடகரி ஒன்றற் கஞ்சுங் காரணம் யாதோ என்றான்.                       90

 

ஆழியில் அமுதம் பொங்கி அலையெறிந் தொழுகிற் றென்ன

ஏழிசை நரம்பு கொண்ட மகரயாழ் இசையப் பண்ணி

வேழமுந் தேரும் ஊர்ந்து விறலிய ரோடு பாணர்

நீழலும் பருந்து மென்ன நெறிப்பட இசைத்துப் போனார்.           91

 

வெங்கரி நுதலில் அப்பும் வீரசிந் துரம்வில் வீச

மங்கையர் மைந்தர் பூணும் படைகளும் வயங்க மாடே

தொங்கலுங் கவிகைக் காடுந் துவசமும் இருளைச் செய்யக்

கங்குலும் பகலும் மாலைக் காலமும் போலு மாதோ.                     92

 

கொக்கரை படகம் பேரி குடமுழாக் கொம்பு காளந்

தக்கைதண் ணுமைத டாரி சல்லரி நிசாளந் தாளம்

மெய்க்குழல் துடியே பம்பை வேறுபல் லியமுந் தாங்கி

மைக்கடல் வாய்விட் டென்ன வரம்பிலோர் இயம்பிப் போனா£¢.   93

 

ஆரண முனிவர் தாமும் அமரரும் அகல்வான் செல்வார்

சீரணி முசுகுந் தன்மேல் திருமலர் சிதற லுற்றா£¢

காரண மில்லா வள்ளல் கடிமணந் தாமுங் காண்பான்

தாரணி தன்னிற் செல்லுந் தாரகா கணங்கொ லென்ன.             94

 

இன்னன சனங்கள் ஈண்டி எங்குமாய் ஏகும் எல்லைத்

தன்னுறு கிளைஞர் தாமுந் தந்திரக் கிழவர் யாரும்

முன்னொடும் பின்னும் பாங்கு மொய்த்துடன் செல்லத் தானோர்

பொன்னெடுந் தேர்மேல் கொண்டு முசுகுந்தன் போத லுற்றான்.     95

 

வேறு

 

அடவியும் இகந்தனன் அகணி நாட்டுடன்

இடையிடை அடுக்கலும் யாறும் நீங்கினான்

படர்தலும் அவன்வழப் பரிதி நாயகன்

நடுவுறும் உச்சிமேல் நண்ணி னானரோ.                 96

 

அண்ணலம் படைகளும் அளப்பின் மாக்களும்

உண்ணெகிழ் உவகையோ டொல்லை வந்திடத்

தண்ணிழல் வெண்குடைத் தரணி காவலன்

பண்ணவன் மேவுறு பரங்குன் றெய்தினான்.                      97

 

முசுமுக முடையவன் முன்னர் வந்துழி

வசுமதி இறைபுரி மன்னர் ஏவரும்

அசைவறு திருவொடும் அனிகந் தன்னொடுந்

திசைதொறுந் திசைதொறுஞ் சென்றங் கெய்தினார்.                98

 

முறைநெறி யாற்றிடும் முசுகுந் தன்முதல்

இறையவர் யாவரும் ஈண்டு தானையுங்

குறைதவிர் சனங்களுங் குன்றஞ் சூழ்ந்துற

நிறுவினர் ஒன்றிய நெஞ்சங் கொண்டுளார்.                       99

 

புழையுறு கரங்களாற் போத கஞ்சில

உழைவரு பிடிதனக் கும்பர் தாருவின்

குழைகளை முறித்தன கொடுத்துக் கோட்டினான்

மழைமுகில் கீறியே வாரி நல்குவ.                             100

 

படர்சிறை நீங்கிய பராரை வெற்பெலாம்

அடிகளின் ஒற்றியே அசைந்து போந்தெனக்

கடிகமழ் மும்மதக் கரிகள் ஓர்சில

விடலருந் தளையொடு மெல்லச் சென்றவே.                     101

 

மூடுறு கணமுகில் முழக்க றாததோர்

கோடுயர் குன்றினைக் குறித்து நோக்கியே

ஈடுறு திசைக்கரி முதென் றுன்னியே

ஓடுவ ததன்மிசை ஒன்றொர் யானையே.                 102

 

வேறு

 

கலையகல் அல்கு லார்பாற் காதலான் முயங்கி வல்லே

உலைவுறு சேக்கைப் போரில் உடைந்திடு குமர ரேபோல்

மலைபொரு பிடிக ளோடு மலைந்துதம் மதநீர் சிந்தி

நிலையழி வெய்தி வௌ¢கி நின்றதோர் நெடுநல் வேழம்.         103

 

உடம்பிடி புரையும் ஒண்கண் மோகினி யொருத்திக் காகத்

திடம்படும் அவுணர் யாருந் திரண்டுடன் சென்ற வாபோல்

மடம்படு பிடியொன் றேக மையல்மேல் கொண்டு மாடே

கடம்படும் ஒருத்தல் வேழங் கணிப்பில படர்ந்த அன்றே.          104

 

காழுற்ற தந்தம் மின்னக் கபோலத் துமதநீர் வீழ

ஊழிப்பேர் உருமுத் தன்னை உமிழ்ந்தென ஒலிமீக் கொள்ளக்

கேழுற்ற மணிவில் லென்னக் கிளர்நுதல் ஓடை பொங்க

வேழத்தின் நிரைக ளெல்லாம் மேகம்போ லுலாவு கின்ற.          105

 

இருநெடு விசும்பிற் செல்லும் எழிலியை எயிற்றாற் பாய்ந்து

சொரிதரு புனலை வாரித் துதிக்கையால் வீசு கின்ற

பருமணி யோடை யானை பாய்திரைப் பரவை ஏழுங்

கரதலம் எடுத்துச் சிந்துங் கண்ணுதற் களிறு போலும்.             106

 

கன்றொடு பிடிகள் சூழக் கடாம்படு கைம்மா ஒன்று

நின்றிடு கந்திற் சேர்ந்து நிகளத்தோ டமர்ந்த நீர்மை

குன்றுகள் புடையிற் சுற்றக் குருமணி நீலப் பொற்றை

ஒன்றொரு தமிய தாகி உற்றவா றொத்த தம்மா.                 107

 

எருத்தமேல் இடிக்கும் பாகர் இசைக்குறி கொள்ளா தாகி

மருத்தினும் விசைமேற் கொண்டு வன்கரித் தண்ட நோக்கி

உருத்திடு கொடுஞ்சொல் தாயர் ஒறுக்கவும் ஒருவன் மாட்டே

கருத்துறு கணிகை நெஞ்சிற் போவதோர் கடுங்கண் வேழம்.               108

 

தூவகங் கொண்ட செங்கேழ் அங்குசந் தூண்டு பாகர்

நாவகங் கொண்ட சொல்லான் நவிற்றுமந் திரத்தால் வாக்கால்

பாவகங் கொண்ட பைங்கட் பாரிடம் வழப்பட் டாங்குச்

சேவகங் கொண்ட பொங்கர் சேர்ந்தன சிலகைம் மாக்கள்.          109

 

அந்தமி லாத செல்வத் தவுணருக் கரசன் முன்னம்

வெந்திறற் கால்கள் தம்மை வியன்சிறைப் படுத்தி யென்னக்

கந்திடைப் பிணிக்கப் பட்ட கடுநடைப் புரவி யெல்லாம்

பந்தியில் ஒழுங்கு கொண்டு நின்றன பாங்க ரெங்கும்.             110

 

வீரவேல் தடக்கை வள்ளல் விழவினைக் காண விண்ணோர்

ஊரொடு திசையும் ஏனை உலகமும் ஒருங்குற் றென்னக்

காரினும் ஒலிமேல் கொண்ட கலினவாம் புரவி பூண்ட 

தேர்நிரை அநந்த கோடி செறிந்தன திசைகள் எங்கும்.             111

 

விடங்கெழு வேற்க ணாரும் வெலற்கரும் வீரர் தாமுந்

தடங்கெழு தானை வௌ¢ளத் தலைவரும் ஏனை யோரும்

இடங்கெழு துளைத்துன் னூசி இழைதொடுத் திசைக்கப் பட்ட

படங்கெழு மாட கூடத் தாவணம் பரவிப் புக்கார்.                 112

 

கன்னெடுந் தாரை கான்ற கார்முகில் வளைப்ப செங்கண்

முன்னவன் நிரையைக் காத்த முதுவரை நிலைய தென்னப்

பன்னிறப் பசுங்காய் சிந்தும் பழுமரக் காமர் காவுட்

பொன்னிவர் புனைமாண் கோயில் புரவலற் கமைந்த தன்றே.              113

 

முத்தமுந் துகிரும் பொன்னும் முழுமணிக் கலனுஞ் சந்துஞ்

சித்திரப் படமும் மற்றுந் தெற்றிமேல் நிரைத்துச் சீர்சால்

உத்தம வணிகா¢ உற்றார் உயர்ச்சியுங் கற்புந் தூக்கி

அத்தகு பொருளை யார்க்கும் அளித்திடுங் கொடையி னார்போல்.   114

 

மடப்பிடி மான்தேர் நீங்கி வானிடைத் தவறி மின்னின்

கொடித்திரள் செல்லு மாபோல் குவலயம் படர்ந்து பொங்கர்

இடத்தினில் ஒதுங்கி வெற்பின் எதிரெதிர் கூவி மஞ்ஞை

நடித்திடும் ஆடல் நோக்கித் திரிந்தனர் நங்கை மார்கள்.            115

 

கோலொடு வில்லும் வாளுங் குந்தமும் வயங்கப் பாத

சாலமுங் கழலும் ஆர்ப்பத் தபனிய மணித்தார் தாழச்

சோலையின் உலவிச் சாரல் அருவியுஞ் சுனையுங் கண்டு

மால்கரி மலைவும் நோக்கி மடங்கலில் திரிந்தார் மைந்தர்.        116

 

தாரிடைப் படிந்த வண்டு தடமலர்க் குவளை சேர

வாரிடைப் படிந்த கொங்கை மாதரும் மைந்தா¢ தாமும்

ஊரிடைப் படிந்த செங்கேழ் ஆதவன் உருப்பந் தீர

நீரிடைப் படிதல் வேட்டு நெடும்புனல் துறையில் வந்தார்.         117

 

வெண்ணிற முகிலின் உம்பர் விஞ்சையர் வேந்தர் தாமும்

ஒண்ணுதல் அணங்கி னோரும் ஒருங்குடன் திரண்ட தென்னக்

கண்ணகல் தடாகம் புக்க கனங்குழை மகளிர் மைந்தர்

தண்ணுறு புனல்பாய்ந் தாடித் தலைத்தலை திரிதல் உற்றார்.              118

 

கழியுண்ட உவரிக் கானற் கடைசியர் நாட்டம் அஞ்சிப்

பழியுண்டு மறைந்த வாபோல் ஒருசிறை பயிலு நெய்தற்

குழியுண்ட போதை நோக்கிக் குரைபுனல் தடத்துக் கம்மா

விழியுண்டு கொல்லோ என்றே கொழுநரை வினவு கின்றார்.              119

 

பங்கயம் வதனம் என்பார் பாசியைக் கூந்தல் என்பார்

செங்கிடை அதரம் என்பார் புள்ளலி செப்பல் என்பார்

சங்கினைக் களமே என்பார் தடாகமும் ஒருத்தி யல்ல

மங்கையர் பலரே என்பார் திரைகளை மணித்தூ சென்பார்.         120

 

தத்தையை யனைய சொல்லாள் ஒருத்திதன் நீழல் தன்னை

அத்தடந் தன்னில் நோக்கி அளியனை அறியா தீண்டோர்

மைத்தடங் கண்ணினாளை மருவினை என்று கேள்வன்

கைத்தலந் தன்னை விட்டு வெகுண்டனள் கரையிற் போனாள்.     121

 

குளத்திடைப் புனல்வாய்ப் பெய்து கொப்பளித் திடுவான் தன்மேல்

உளத்திடை வெகுளி யெய்தி ஊடினள் ஒருத்தி ஏகி

முளைத்திடு கமலக் கானின் முகமலா வுறுப்பு முற்றும் 

ஔ¤த்தனள் நிற்ப நாடிக் காண்கலன் உலைதல் உற்றான்.         122

 

தாம்பெறு கொழுநர் தம்மைத் தத்தமக் குரிய புத்தேள்

ஆம்பரி சுன்னுந் தன்மை ஐயம தில்லை யென்னக்

காம்புறழ் தடந்தோள் நல்லார் கணவர்மேற் கரத்தால் அள்ளிப்

பூம்புனல் வீசு கின்றார் பூசனை புரிகு வார்போல்.                 123

 

ஞெண்டொடு வராதலுஞ் சேலும் யாமையும் நிலாவெண் சங்கும்

புண்டரீ கத்த டாகங் குடைந்திடும் பூசல் அஞ்சித்

தெண்டிரை அமுதச் சொல்லார் சிற்சில உறுப்புத் தன்னைக்

கண்டுகண் டிரிவ தென்னத் திரிவன கலக்க மெய்தி.                      124

 

ஏந்திழை மகளிர் தாமும் மைந்தரும் இருநீர் தன்னுட்

பாய்ந்தன ராடும் எல்லைப் பங்கய விலைக டோறுஞ்

சேர்ந்திடு திவலை ஈட்டஞ் சிறந்தவர் சேர்த லாலே

பூந்தடம் பொய்கை யாக்கை பொடித்தன போலும் அன்றே.         125

 

நோக்கினும் நுழைகு றாத நுண்துகில் மறைத்த அல்குல்

தேக்குதண் பொய்கை யாடுஞ் செவ்வியில் தெரியத் தோன்ற

நீக்கரும் பெருநாண் கொண்டு நின்றிடா தொருத்தி யோடித்

தாக்கணங் கென்னப் போய்த்தன் கொழுநனைத் தழுவி கொண்டாள்.126

 

உட்டௌ¤ வில்லா நங்கை ஒலிபுனல் தடத்தின் ஆடுங்

கட்டழ குளதோர் காளை கவிரிதழ் வெளுப்பு நோக்கிக்

கிட்டியான் நிற்க உன்றன் கேழ்கிளர் அதரத் தெச்சில்

இட்டனள் யாரிங் கென்னா வெகுளிகொண் டிகலிப் போனான்.      127

 

வேறு

 

வெளுத்தன சேயிதழ் விழிசி வந்தன

அளித்தொகை எழுந்தன அளகஞ் சோ£¢ந்தன

குளித்திடு மலர்த்தடங் கொடிய னார்க்கெலாங்

களித்திடு கணவருங் கள்ளும் ஒத்ததே.                   128

 

பையர வல்குலார் படியும் பான்மையால்

துய்யதோர் குமிழிகள் செறிந்து தோன்றுவ

வையபூந் தடமெலாம் அவரை நோக்குவான்

மெய்யெலாம் விழிகளாய் விழித்தல் போன்றவே.         129

 

மன்னரும் மகளிரும் படிந்த வாசநீர்

செந்நிறக் குங்கும நானஞ் சேர்தலான்

மின்னொடு கூடிய முகிலு மெல்லியல்

பொன்னொடு கூடிய மாலும் போலுமால்.                130

 

வேறு

 

பூசு சாந்தமும் நானமும் பொய்கையில்

வாச நீரெங்கும் மாகி மணங்கமழ்ந்

தாசை யெங்கும் உலாவி அவ்வானவர்

நாசி யூடு மடுத்து நடந்தவே.                                   131

 

இன்ன தன்மையில் ஏர்கெழு மைந்தரும்

அன்ன மென்னடை யார்களும் அத்தடந்

தன்னின் ஆடித் தடங்கரை ஏறியே

பொன்னின் மாண்கலை பூணொடு தாங்கினார்.            132

 

வௌ¤று மென்னகை மெல்லியல் மாதரும்

ஔ¤று மேனி உவாக்களும் ஒன்றியே

பிளிறு மையற் பிடியும் பெருமதக்

களிறு மென்னக் கடிபொழில் ஏகினார்.                   133

 

ஏகி னார்க்கவ் விரும்பொழில் மீச்செறி

மேக சாலமும் மீன்தொகை ஈண்டிய

மாக நாடும்அவ் வானவர் வந்துசேர்

போக பூமிப் பொதும்பரும் போன்றதே.                           134

 

பளிங்க டுத்திடு பாங்கா¤ன் வேங்கைவீ

விளங்கு சாயையை மெய்யென நோக்கியிக்

குளங்கொள் பூமலர் கொய்துநல் கீரெனாத்

தளர்ந்தொ ருத்தி தலவனை வேண்டினாள்.                       135

 

அங்கொ ருத்தியை நோக்கியொ ரண்ணலுன்

கொங்கை யொத்திடாக் கோங்கலர் கொள்கென

வெங்கை தன்முலைக் கொப்பதென் றெண்ணியோ

செங்கை யாற்பறித் தீரென்று சீறினாள்.                  136

 

வேறு

 

மலர்ந்த வாள்முக முங்கையர் நோக்கலும் வறிதாய்ப்

புலர்ந்து நின்றிடு தருக்களும் பொலிவினை யெய்தி

அலர்ந்த வேயெனின் ஆடவர் தங்களை அன்னார்

கலந்த போதுறு மின்பமார் கட்டுரைத் திடுவார்.                   137

 

மேற்ற லத்தெழு தாரகை மேதினி வரைப்பில்

தோற்று காட்சியோ இங்கிவை என்னவோர் தோன்றல்

கூற்ற மன்னவேற் கண்ணிநின் கூரெயிற் றிற்குத்

தோற்ற முல்லையின் அரும்புகாண் இவையெனச் சொன்னான்.    138

 

மலையும் மேற்கணாள் ஒருத்திசொல் வினவிமற் றொருத்தி

முலையின் மேல்விழி வைத்தவன் முறிகளும் முகையும்

இலையு மாப்பறித் துதவலும் உமக்குமால் ஈந்தாள்

தலையின் மேலிவை சூட்டுமென் றெறிந்தனள் தரியாள்.           139

 

காதல் மங்கைபால் வைத்தசிந் தையன் கரவீரப்

போது கொய்யலன் இலைகொய்து பொற்கரத் தளிப்ப

ஏதி லாளநிற் சேர்தலின் இங்கிவை நுகா¢ந்து

சாத லேதலை எனச்சினத் தாளரு தையல்.                              140

 

வேறு

 

இங்கு முலைநேர் குரும்பை இவையாய் குயம்போல்

தங்கும் மிளநீர் உவையன்னவள் தன்னை ஈன்றாள்

கொங்கை நிகரும் அடற்பாளைக் குழுவி தென்றோர்

மங்கை நகைப்ப அவைகாட்டியொர் வள்ளல் நின்றான்.            141

 

ஒவாத தெங்கின் இளம்பாளையின் ஒன்று தன்னைத்

தாவா ஒருவன் கொடுவந்தொரு தையல் முன்போய்ப்

பாவாய் தமியேன் உயிரேநின் பணைமு லைக்காங்

கோவாத முத்தத் தொடையிங்கிது கொள்க வென்றான்.            142

 

மின்னார் தமக்கோ ரரசேவெறி வேங்கை வீயும்

புன்னாக வீயுங் கொணர்ந்தேன் புனைகிற்றி என்ன

மன்னா வுனக்குப் பலருண்டுகொல் மாதர் என்னாத் 

தன்னாவி அன்னான் தனைச்சீறியொர் தையல் போனாள்.          143

 

பொன்பெற்ற மார்பன் ஒருவன்சில போது கொய்து

கொன்பெற்ற வேண்கண் மடவார்கைக் கொடுத்த லோடும்

பின்பெற்ற நங்கை வெகுண்டாள் பழுதென்று பேசி

முன்பெற் றவளும் அவைசிந்தி முனிந்து போனாள்.                      144

 

அப்பூர் விழியாள் ஒருமூவகைத் தாய பூவும்

மைப்பூங் குழலிற் புனைந்தாளதொர் வள்ளல் நோக்கி

மெய்ப்பூவை யன்னாய் மருங்குல்முடி வெய்த மென்கார்

முப்பூ விளைந்த படியென்கொல் மொழிக வென்றான்.                    145

 

இத்தன்மை மைந்தர் பலரும்மிகல் வேற்க ணாரும்

மெய்த்தண் மலர்க்கா வுலவாவிளை யாடி மீண்டு

தத்தம் படமா ளிகைபுக்கனர் தானும் ஆங்கே

அத்தம் மயவெற் படைந்தான்கதிர் ஆயி ரத்தோன்.                       146

 

வேறு

 

ஏலக் காவின் மாக்கள் புகுந்தே இனிதாடும்

கோலச் செவ்வி நோக்கின னாங்கொல் குடபாலின்

மாலைச் செக்கர் வானம தாகும் மலிதண்பூஞ்

சோலைக் குள்ளே தானும் அடைந்தான் சுடர்வெய்யோன்.         147

 

முந்தைச் செக்க ராகிய புத்தேள் மொய்ம்பிற்சூழ்

தந்திப் போர்வை போலிருள் ஈட்டஞ் சார்வெய்த

அந்தத் தேவன் மீமிசை அண்டத் தவர்வீசும்

கந்தத் தண்போ தொப்பன தாரா கணமெல்லாம்.                  148

 

படையா நேமிப் பண்ணவ னார்பாற் கடலுக்கோர்

தடையா யுற்றார் என்றிமை யோர்தண் தயிர்வேலை

கடையா நிற்ப வேதிரள் வெண்ணெய் கடிதேவந் 

தடையா நிற்றல் போல உதித்திட் டதுதிங்கள்.                           149

 

காணப் பட்டான் விண்மதி என்னக் காமத்தில்

பூணப் பட்ட மாமதி தோன்றப் புலர்வெய்தி

யாணர்க் கிண்ணத் துள்நிறை தேறல் இனிதட்டிப்

பாணிக் கொண்டே மேவுதல் உற்றார் பலமாதர்.                  150

 

வேறு

 

தூயதன் றாகிய புனலெலாம் நல்கியே சூழ்ந்த தெங்கின்

காயின்வந் திடுபயன் கொள்ளுவார் போற்சில காளை மார்கள்

ஆயதண் தேறலை அரிவைமார் நுகருவான் அருளி யன்னார்

வாயின்வந் தூறு மெல்லமிர் தினைக்கொள் வதற்குள்ளம் வைத்தார்.       151

 

தௌ¢ளுபேர் அமிர்தநேர் சொல்லினார் தேறல்பெய் கின்ற வௌ¢ளி

வள்ளமா னவையெலாம் பொலிவன வானகத் திடையு தித்த

வௌ¢ளிதா கியமதி ஒன்றினை நோக்கிஒண் புவியி னூடே

கொள்ளையாய் மதிபல மாறுமா றாய்எழுங் கொள்கை போலும்.   152

 

அளியினுக் குணவதாந் தேறல்வாய்க் கொண்டதோர் அரிவை யாற்றக்

களிமயக் கெயதுவாள் இந்துவை நோக்கியிக் கடிய தேறல்

துளியினைக் கோடியேல் உனதுமா சுள்ளதுந் தொலையும் இன்னும்

ஔ¤யினைப் பெறுதிநின் ஊனமுந் தவிர்தியென் றுரைசெய் கின்றாள்.153

 

கருதியான் உண்டிடு நறவினைக் கண்டுகா மித்து நாளுந்

திரிதியால் மதியமே நாணமுற் றாய்கொலோ செப்பு கில்லாய்

பரிதியார் தம்மின் வீறெய்துவாய் அன்னதைப் பகிர்வன் இங்ஙன்

வருதியால் என்றனள் தேறலால் தௌ¤விலா மையல் பெற்றாள்.  154

 

என்னொடே தோன்றினாய் யானெனும் தன்மையா யாதும் வேண்டாய்

பின்னரு முன்னுமாய் வைகலுந் திரிகுவாய் பிரிகி லாதாய்

இன்னறா உண்கெனா உதவினுங் கொள்கிலாய் என்றொ ருத்தி 

தன்னதாம் நீழலோ டூடினாள் வாடினாள் தளர்தல் உற்றாள்.               155

 

அங்கைவள் ளந்தனில் மதுவையுண் டயருவாள் அன்ன தற்குள்

செங்கயல் விழியையும் வாலிதழ்ப் பொலிவையுந் தெரிய நோக்கி

இங்கெனைக் கூடியே கணவர்போ யினர்கொலாம் என்றோ ருத்தி

பொங்குசீற் றத்தளாய் ஓடினாள் நாடினாள் புலர்தல் உற்றாள்.              156

 

வேறு

 

திருந்திழை மார்சிலர் செவ்வித் தேறலை

அருந்தினர் வெறுத்தனர் அமுதந் தன்னையும்

பொருந்திடு கணவரைப் புணரும் ஆசையால்

வருந்தினர் தழலென மதியை உன்னுவார்.                       157

 

வாடுகின் றார்சிலர் மகிழ்நர் வந்திட

ஊடுகின் றார்சிலர் உவக்கின் றார்சிலர்

பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்

ஆடுகின் றார்சிலர் நறவம் ஆர்ந்துளார்.                  158

 

அந்தரப் புள்ளடும் அளிகள் தம்மொடும்

வந்தடுத் தவரொடும் மடந்தை மார்சிலர்

சுந்தரத் தேறலைத் துய்த்து வாமமாந்

தந்திரக் கிளைஞர்போல் தம்மில்  ஈண்டினார்.                    159

 

விள்ளுறு நாணினர் வீழுந் தூசினர்

உள்ளுறு களிப்பினர் உரைம மயங்கினர்

தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்

கள்ளினும் உளதுகொல் கருத்த ழிப்பதே.                 160

 

இத்திற மதுவினை இனிதின் மாந்தினோ£

மத்தரின் மயங்கினர் மனந்தெ ளிந்துழத்

தத்தம திறைவருந் தாமுங் கூடியே

அத்தலை முயங்கினர் ஆர்வ மிக்குளார்.                 161

 

ஏயுறு பரிசனம் இனைய தன்மையான்

மேயின இங்கிது விளம்பி னாம்இனி

ஆயிடை வந்திடும் அரசர் செய்கையும்

நாயகன் வதுவையும் நவிலு வாமரோ.                          162

 

கொன்னுனை வேல்முசு குந்த னாதியாம்

மன்னவர் யாவரும் வையம் நீங்கியே

தன்னிகர் இலாததோர் தலைவன் மேவிய

பொன்னிவா¢ குடுமியம் பொருப்பில் ஏறினார்.                    163

 

ஏறினர் வெற்பின் மேலெவருந் தெய்வத

நூறெரி கம்மியன் நுனித்துச் செய்திடு

மாறகல் திருநகர் வளங்கண் டிந்திரன்

சாறயர் வதுவையஞ் சாலை நண்ணினார்.                       164

 

அம்முசு குந்தனை யாதி யாகிய

வெம்முடி மன்னரும் இமைய வர்க்கிறை

செம்மலர் அடிகளைச் சென்னி சேர்த்தினார்

கைம்முறை தொழுதனர் களிப்பின் மேலுளார்.                   165

 

கயமலர் குவளையில் கண்கள் மிக்குளான்

அயலுறும் அரசருக் கருளி ஆங்கவர்

செயல்முறை வினவியே சிறப்பி னாகிய

நயமொழி பலவுடன் நவின்று மேவினான்.                       166

 

மேதகு கதியராய் விசும்பிற் சென்றிடும்

மாதவன் மதிமுதல் அமரர் யாவரும் 

மாதிர இறைவரும் மாத வத்தரும்

பாதல வாணரும் பரங்குன் றெய்தினார்.                  167

 

விண்டொடர் பிறங்கலின் மிசையி வர்ந்துபோய்

அண்டரும் பிறருமாய் அமரர் கோன்தனைக்

கண்டனர் தொழுதனர் களிப்பின் மாதவர்

எண்டகும் ஆசிகள் இயம்பி எய்தினார்.                   168

 

விறல்வரை மாதரும் விண்ணின் மாதருஞ்

செறிபுனல் மாதருந் திசையின் மாதரும்

உறுதவ மாதரும் உரக மாதரும்

மறுவகல் புலோமசை வயின்வந் தீண்டினார்.                     169

 

சூரர மங்கையர் தொல்லை விண்ணவர்

பேரர சியற்றிய பிரான்றன் காதலி

சீரடி வந்தனை செய்து தெய்வத

வாரண மென்பவள் மருங்கில் எய்தினார்.                170

 

தெய்வத யானைகேள் தீய சூருயிர்

வவ்விய வேலினான் மனைவி யாதியால்

எவ்வுல கிற்குநீ இறைவி யாமென

அவ்வவர் அடிபணிந் தன்பொ டேத்தினார்.                171

 

கயற்புரை நோக்குடைக் கடவுள் யானைபால்

இயற்படு திருநலன் இருக்கப் பின்னருஞ்

செயற்படு கோலமுஞ் சிறிது செய்திட

மயற்பட உன்னினர் மடநல் லாரெலாம்.                  172

 

பொன்னகம் அதனிடைப் புராரி சேயினைத்

தன்னக மிசைகொடு தவத்தை ஆற்றினாள்

பின்னக மயிர்முடிப் பிணையற் சூழலை

மென்ன விரல்களால் மெல்ல நீக்கினார்.                 173

 

காசறை விரவிய கடிமென் கூந்தலில்

பூசினர் நாவிநெய் புதிய சாந்தமும்

மாசறு பளிதமும் மற்று நீவியே

நேசமொ டொண்பனி நீர்கொண் டாட்டினார்.                      174

 

சேர்ந்ததோர் வெம்பணி சீற்றத் தாற்கரும்

பாந்தளை வாய்க்கொடு பற்று மாறெனப்

பூந்துகில் கிழிகொடு புனல்வ றந்திடக்

கூந்தலை ஒற்றினர் குழைமென் கொம்பனார்.                    175

 

மாந்தளி ரேயென வனப்பும் மென்மையுங்

காந்தியும் எய்தியே கடவுட் டன்மையால்

தோய்ந்திட லின்றியுந் துப்பின் வண்ணமாம்

பூந்துகில் ஒன்றினைப் புனைந்து டீஇயினார்.                      176

 

ஈரறு கதிர்களும் இம்பர் சேர்தலின்

ஆரிருள் யாவையும் அஞ்சி அவ்வைதன்

வாரொலி கூந்தலின் மறைபுக் காலெனக்

காரகில் நறும்புகை கமழ வூட்டினார்.                            177

 

பொலம்புரி உத்தியும் பொருத மஞ்ஞையும்

வலம்புரி மகரமும் மரபில் வானவா¢

குலம்புரி தவம்புரை கொம்பின் கூழையின்

நலம்புரி மங்கலம் நவின்று சாத்தினார்.                  178

 

விரியிணர்க் கோங்கமும் வெட்சி யுஞ்செரீஇ

மருமலர்1 இதழிடை வைத்து வாசமார்

தெரியலு¢தொடையலுஞ் செறியச் சூட்டியே

சுரிகுழல் முடித்தனர் சுழியத் தன்மையால்.                      179

 

(பா-ம் 1 இடையிடை)

 

ஒருமுயல் முழுமதி யுள்புக் காலென

இருவிழி புருவமாமம் இனைய வற்றொடு

கருநிறங் கண்டிடக் காமர் சாந்தினால்

திருநுதல் அதனிடைத் திலகந் தீட்டினார்.                 180

 

ஊட்டிய நறும்புகை ஓதி நின்றொழீஇத்

தீட்டிய திருநுதல் திலகந் சேர்தரப்

பூட்டினர் சுட்டியைப் புயங்கம் ஒன்றுநா

நீட்டிநஞ் சுமிழ்தரு நிலைமை ஈதென.                           181

 

கோல்வளை யந்நலார் குழையில் வல்லியஞ்

சூல்வளை மிடற்றினில் தொடையல் முத்தணி

கால்வளை கஞ்சநேர் கரத்துந் தோளினும்

வால்வளை தொடியிவை வயங்கச் சேர்த்தினார்.          182

 

கொட்டினர் கலவைகள் கொங்கை யின்மிசை

மட்டிமிர் பிணையலும் மணியின் கோவையும்

அட்டினர் படாமும்ஒன் றதன்கட் சேர்த்தினார்

இட்டிடை யிடைதனக் கிரக்கம் வைக்கிலார்.                      183

 

மாடக யாழ்புரை மழலைப் பெண்பிளை

ஆடக விரைமலர் அனைய தாள்களில்

பாடகம் பரிபுரம் பாத சாலங்கள்

சூடக முன்கையார் தொழுது சூழ்வித்தார்.                184

 

தெய்வத மடந்தையர் திருவின் செல்விபால்

இவ்வகை ஒப்பனை இயற்றி ஏத்தலும்

மைவிரி குவளைநேர் வடிவக் கண்ணினான்

அவ்விடை செய்திடும் அமைதி கூறுவாம்.                       185

 

வேறு

 

மேலை வானவர்க் கிறையவன் விரிஞ்சனை நோக்கி

சாலை யாகிய தெவ்வெலாத் தேவருஞ் சார்ந்தார்

மாலை தாழ்முடி எம்பெரு முதல்வற்கு மணஞ்செய்

காலை நாடியே இ•தெனக் கழறுதி யென்றான்.                   186

 

அப்பு ரந்தரன் மொழிதனை அம்புயன் வினவிச்

செப்பு கின்றதென் அறுமுகப் பரன்மணஞ் செய்தற்

கெப்பெ ரும்பக லாயினும் இனியதே எனினும்

ஒப்ப கன்றிடு முகூர்த்தம்இவ் வெல்லைஎன் றுரைத்தான்.         187

 

ஈவ தேமுறை யாயுளாய் இப்பகல் சிறந்த 

தாவ தேயெனின் யான்பெறும் அணங்கைஈண் டளிப்பான்

தேவ தேவனாம் அறுமுகச் செம்மலைக் கொணரப்

போவ தேகடன் எமக்கெனப் புரந்தரன் புகன்றான்.                 188

 

அனைய காலையில் அச்சுதக் கடவுளும் அயனும்

இனிது போதும்என் றிந்திரன் தன்னொடும் எழுந்து

முனிவர் யாவருந் தேவருஞ் சூழ்ந்துமுன் படரப்

புனித நாயகன் ஆலயம் நோக்கியே போனார்.                            189

 

போந்து மற்றவர் பொலன்மணிக் கோயிலுட் புக்குச்

சேந்தன் மாமலர் அடிகளை முடிகளிற் சேர்த்திக்

காந்தள் மெல்விரல் மடந்தைபாற் கடிமணம் புரிய

ஏந்தல் நீயவண் வந்திட வேண்டுமென் றிசைத்தார்.                       190

 

இன்ன வாசகம் வினவலும் இராறுதோ ளுடையோன்

அன்ன தாகவென் றருள்செய்து மடங்கலே றாற்றும்

பொன்னின் மாமணி அணையினும் பொருக்கென எழுந்தான்

துன்னு வீரரும் பாரிட முதல்வருந் துதிப்ப.                              191

 

எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறிச்

செழுந்த னிக்கம லத்தய னாதியாந் தேவர்

விழுந்து முன்பணிந் தேத்தியே விரைமலர் மாரி

பொழிந்து பாங்கராய் வந்திட வீதிவாய்ப் போந்தான்.                      192

 

கொற்ற வெண்குடை எடுத்தனர் குளிர்பனிக் கவரிக்

கற்றை வீசினர் ஆலவட் டங்கள்கா லசைத்தார்

ஒற்றை வாட்படை ஏந்தினர் உடுபதிக் கடவுள் 

மற்றை ஆதவன் மருத்துவன் சலபதி மறலி.                            193

 

ஆழி மாலயன் உவணமும் அன்னமும் அழியா

ஊழி நாயகன் ஊர்தியின் ஒலிகொலென் றுட்கக்

கேழி லாமலர்க் கிஞ்சுகச் சூட்டொடுங் கிளர்ந்து

கோழி நீள்கொடி ஆர்த்ததெவ் வண்டமுங் குலுங்க.                       194

 

வேதர் ஆர்த்தனர் வேதமும் ஆர்த்தன விண்ணோர்

மாதர் ஆர்த்தனர் மாதவர் ஆர்த்தனர் வயவெம்

பூதர் ஆர்த்தனர் பூதமைந் தார்த்தன புடவி

நாதர் ஆர்த்தனர் நாதமிக் கார்த்தன நகமே.                              195

 

திண்டி பேரிகை தண்ணுமை சல்லரி திமிலை

பண்டி யிற்பெயர் குடமுழாக் காகளம் படகந்

தொண்ட கந்துடி துந்துபி வலம்புரித் தொகுதி

அண்டம் விண்டிட இயம்பினர் பூதரில் அநேகர்.                  196

 

அஞ்சி லோதியின் மேனகை உருப்பசி அரம்பை

கிஞ்சு கச்செவ்வாய்த் திலோத்தமை முதலினோர் கெழுமி

மஞ்ச மீதினும் மானத்தும் நின்றுவாள் விழிகள்

நஞ்சு மிழ்ந்திட அமுதெனப் பாடியே நடித்தார்.                           197

 

யாணர் வண்டினஞ் சுரும்புடன் அலமரும் யாழும்

வீணை யுங்கரம் பற்றியே விஞ்சையர் முதலோர்

சேண ரம்பையர் களிநடத் தோடுசீர் தூக்கும்

பாணி யும்மிசை வுற்றிட இசைத்தனர் பாடல்.                           198

 

பொருவில் வீரரும் பூதரும் புரந்தரன் முதலாஞ்

சுரரும் மாதவர் யாவரும் பிறருமாய்த் துன்னி

ஒருவர் மெய்யினை ஒருவர்மெய் நெருக்கவுற் றிடலால்

தெருவும் முற்றமும் இடம்பெறா வாயின சிறிதும்.                       199

 

வேறு

 

இன்ன தன்மைகள் இயல எல்லைதீர்

பொன்னின் வீதிவாய்ப் போந்து புங்கவர்

மன்னன் ஆற்றிய மணத்தின் சாலையின்

முன்னவர் வந்தனன் முடிவில் முன்னையோன்.          200

 

ஆவ தாகிய அண்ணல் தன்மிசைத்

தாவில் கும்பமேல் தருப்பை தோய்த்தநீர்

தூவி ஆசிகள் சொற்று மாதவர்

ஏவ ருந்திரண் டெதிர்கொண் டேத்தினார்.                 201

 

செங்கை தன்னிடைத் தேவர் மாதவர்

நங்கை மாரெலாம் நாலி ரண்டெனும்

மங்க லங்களும் மரபின் ஏந்தியே

எங்கள் நாயகற் கெதிர்ந்து போற்றினார்.                  202

 

பஞ்சி தூயநெய் பளித நாவியாய்

விஞ்சு தீஞ்சுடர் மிளிர்பொற் றட்டைகள்

அஞ்சில் ஓதியர் அங்கை ஏந்தியே

செஞ்செவ் வேள்முனஞ் சிறப்பித் தாரரோ.                       203

 

காலை யங்கதிற் காலை யங்கதிர்

மேலை விண்முகில் விட்ட கன்றெனக்

கோலஞ் செய்யநங் குமர நாயகன்

நீல மஞ்ஞைமேல் நின்று நீங்கினான்.                            204

 

ஏய மஞ்ஞைநின் றிழிந்து வேள்விசெய்

கோயில் முன்கடைக் குமரன் சேர்தலும்

ஆய போழ்தினில் அரம்பை மாரொடுந்

தூய தோர்சசி தொழுதங் கெய்தினாள்.                   205

 

எதிர்பு குந்திடும் இந்தி ராணிதன்

புதிய தோர்பசுப் பொழிந்த தீயபால்

நிதியின் கொள்கலம் நிரப்பி வந்துவேள்

பதயு கங்களிற் பரிவொ டாட்டினாள்.                            206

 

ஆட்டித் தீம்பயன் அலருங் கண்ணியுஞ்

சூட்டி மெல்லடி தொழுது பல்சுடர்

கூட்டி வைத்ததோர் கொள்க லந்தனைக்

காட்டி மும்முறை கடவுட் சுற்றினாள்.                           207

 

இனைய தன்மைகள் இயற்றி இந்திரன்

மனைவி வௌ¢கியே மடமின் னாரொடுந்

தனது மந்திரந் தன்னிற் போதலும்

அனகன் கண்டதற் கருள்செய் தேகினான்.                208

 

கோல மாமணி குயிற்றிப் பொன்னரி 

மாலை நாற்றியே வனப்புச் செய்திடுஞ்

சாலை புக்கனன் தனக்கு வேறொரு

மூல மில்லதோர் முதலின் வந்துளான்.                          209

 

வேறு

 

பக்க மாய்அரி பங்கயன் ஆதியோர்

தொக்கு வந்திடத் தொன்மணி மண்டபம்

புக்கு நம்பி புரந்தரன் உய்த்திடு

மிக்க பீடத்தில் வீற்றிருந் தானரோ.                              210

 

வீற்றி ருந்தபின் வேதனும் மாயனுந்

தேற்ற மிக்க முனிவருந் தேவரும்

ஆற்றல் வீரரும் அண்ணல்தன் ஏவலால்

கூற்ற ஏற்ற இடந்தொறும் வைகினார்.                           211

 

அந்த வெல்லை அவனியில் வாழ்முசு

குந்த னேமுதற் கொற்றவர் யாவரும்

வந்து வந்து வணங்கி வழுத்திடக்

கந்தன் எந்தை கருணைசெய் தானரோ.                  212

 

ஆன காலை அரியயன நாடொணா

ஞான நாயகன் நங்கையுந் தானுமோர்

மான மேல்கொண்டு மாயிருஞ் சாரதர்

சேனை சூழ்தரச் சேணிடைத் தோன்றினான்.                      213

 

அம்மை யுந்தன தத்தனும் வந்து

செம்மல் கண்டு சிறப்புடை ஓகையாய்

விம்மி  தங்கொண்டு மேதகும் அன்பினால்

இம்மெ னக்கடி தேயெழுந் தானரோ.                             214

 

கண்ண னாதிக் கடவுளர் யாவரும்

எண்ணி லாமுனி வோர்களும் எம்பிரான்

நண்ணி னான்இங்கு நாமுய்ந் தனமெனாத்

துண்ணெ னாவெழுந் தார்கை தொழுதுளார்.                      215

 

அனைய காலையில் ஆதியம் பண்ணவன்

இனிது மானத் திழிந்து கணத்துடன்

புனித நீடு பொலன்மணிச் சாலையுள்

வனிதை யாளடும் வந்துபுக் கானரோ.                    216

 

வேறு

 

அதுகண் டுநடந் தறுமா முகவன்

எதிர்கொண் டுவிரைந் திருவோர் பதமும்

முதிரன் பொடுதன் முடிசூ டினனால்

கதிருங் கமலங் களுமே வியபோல்.                             217

 

வந்தஞ் சலிசெய் துவணங்கியதோர்

கந்தன் தனையங் கவர்கை கொடெடாத்

தந்தம் முரனூடு தழீஇ முறையே

முந்தன் பொடுயிர்த் தனர்முச் சியையே.                 218

 

முதுவா னவரும் முனிவோர் எவரும்

மதுசூ தனனும் மலர்மேல் அயனுஞ்

சதவேள் வியனுஞ் சகமீன் றவர்தம்

பதமீ மிசைவந் துபணிந் தனரால்.                              219

 

தாழ்வுற் றிடுவோர் உமைசங் கரனைச்

சூழ்வுற் றுவலஞ் செய்துசூழ் வினையூ

டாழ்வுற் றிடுபுன் மையகன் றடியேம்

வாழ்வுற் றனமென் றுவழுத் தினரால்.                           220

 

உன்னற் கரிதா கியுயிர்க் குயிராய்

மன்னுற் றவனை மலைமங் கையுடன்

பொன்னிற் புனையும் புதுமன் றல்மனை

தன்னிற் குமரன் கொடுசார்ந் தனனால்.                   221

 

வேறு

 

ஆகியதொர் போழ்துதனில் ஆணைமுறை தன்னால்

மாகநெறி வந்தொரு மணித்தவிசு நண்ணத்

தோகையுடை மஞ்ஞையுறழ் தோற்றமுடை மாதோ£¢

பாகமுற வாயிடை பராபரன் இருந்தான்.                 222

 

மங்கையுமை யுஞ்சிவனும் வள்ளறனை நோக்கி

இங்குவரு கென்றுபின் எடுத்தினிது புல்லித்

தங்கள்வயின் வைத்துநணி தண்ணளி புரிந்தார்

அங்கது தெரிந்துதொழு தம்புயன் இசைப்பான்.            223

 

முன்னமொரு வைகல்தனில்மூவிரு முகத்தோன்

தன்னைஅசு ரப்படை தடிந்திட விடுத்தாய்

அன்னபரி சேயவுண ராயுளரை வீட்டி

நென்னல்இமை யோர்சிறையும் நீக்கிஅருள் செய்தான்.     224

 

நன்றியித னைக்கருதி நாங்கள்புரி கைம்மா

றொன்றுமிலை என்னினும் உளத்தெழும் விருப்பால்

வென்றியசு ரேசர்கிளை வீட்டுகும ரேசற்

கின்றுமக வான்மகளை ஈந்திட நினைந்தான்.                     225

 

அற்றமில் இரக்கமுடன் ஆருயிர்கள் முற்றும்

நிற்றலும் அளித்தருளும் நேரிழையும் நீயும்

மற்றிதுப கற்பொழுதில் வந்தனிர்கள் என்றால்

சிற்றடிய ரேங்கள்செயல் சீருளதை யன்றோ.                     226

 

என்றினைய நான்முகன் இசைத்திடலும் ஈசன்

நன்றென மகிழ்ச்சிகொடு நாமுமிது காண்பான்

மன்றல்மலர் கூந்தல்மலை மங்கையுடன் இங்ஙன்

சென்றனம் இதற்குரிய செய்கவினி யென்றான்.           227

 

நாதனிவை கூறுதலும் நன்குமகிழ் வெய்தி

மாதவனும் நான்முகனும் வாசவனை நோக்கி

வேதமுறை யால்முருகன் வேட்டருள உன்றன்

கோதைதனை அன்பொடு கொணர்ந்திடுதி யென்றார்.       228

 

அந்தவமை யந்தனில் அதற்கிசைவு கொண்டே

பைந்தொடிநல் லார்களமர் பாங்கர்தனில் ஏகி

நந்தமைய ளித்தருளும் நங்கைவரு கென்னா

இந்திரன்வி ளித்திடலும் ஏந்திழையெ ழுந்தாள்.           229

 

கல்லுயர் பொருப்பினிடை காமரடி செல்ல 

அல்லனகொல் என்றுமணி நூபுரம் அரற்ற

மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க

எல்லவரும் உள்மகிழ எம்மனை நடந்தாள்.                      230

 

பஞ்சிதனின் மெல்லடி பனிப்பவரை யின்பால்

குஞ்சரி நடந்தசெயல் கூறுபுது மைத்தோ

செஞ்சுடர்வை வேலுடைய செம்மலடி தீயேன்

நெஞ்சக அடுக்கலினும் நின்றுலவும் என்றால்.            231

 

தந்திமுன் வளர்ப்பவரு தையல்மிக நொய்ய

செந்தளிர் ஒதுங்கமிளிர் சீறடி ஒதுங்கி

இந்திரையும் நாமகளும் ஏனையரும் ஏத்தப்

புந்திகளி கூ£¢தரு புரந்தரன்முன் வந்தாள்.                232

 

வேறு

 

இன்ன வேல்லையில் இந்திரன் தெய்வதக்

கன்னி தன்னைக் கடிமணச் சாலையின்

முன்னர் உய்ப்ப முனிவருந் தேவரும்

அன்னை வாழியென் றேயடி போற்றினார்.                233

 

கணங்கொள் பேரவை கைதொழு ஆண்டுறும்

அணங்கு தன்னுடன் ஆதியந் தேவனை

வணங்கி வேலுடை வள்ளலை நோக்கியே

கணங்கு சேர்முலை துண்ணென வௌ¢கினாள்.           234

 

மங்கை தாழ்தலும் வாலிதின் நோக்கியே

அங்கண் நாதன் அருள்செய அண்ணலைக்

கொங்கை யாற்குழை வித்தவள் கோல்வளைச்

செங்கை யோச்சிச் சிறுபுறம் நீவினாள்.                  235

 

திருத்த குந்திறற் சேவையுஞ் சேண்மிசை

அருத்தி பெற்ற அணங்கையும் முற்படும்

பெருத்த பொன்மணிப் பீடிகை மீமிசை

இருத்தி வைத்தனள் யாவையும் ஈன்றுளாள்.                     236

 

வேறு

 

அதிர்கழல் ஈசனொ டம்மை இருந்தாங்

கெதிரெதிர் விம்பம் இலங்கி வாபோல்

வதுவை யணிந்திடு மைந்தனும் மாதுங்

கதிர்மணி தோய்கன கத்தவி சுற்றார்.                            237

 

தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்

வெவ்வரி ஏற்றணை மேவுதல் காணா

வெவ்வெவ ருந்தொழு தேத்தினர் ஈன்ற

அவ்வையும் அத்தனும் ஆரருள் செய்தார்.                       238

 

அண்டர் தமக்கிறை யாங்கவர் கோலங்

கண்டு புகழ்ந்து கரந்தொழு துச்சி

கொண்டு மிளிர்ந்து குளிர்ந்திடு தேறல்

உண்ட சுரும்பினும் உள்மகிழ் வுற்றான்.                 239

 

நெஞ்ச மகிழ்ந்த நெடுந்தகை சொல்லால்

மஞ்சன மாமலர் மற்றுள முற்றும்

எஞ்சலி லாவகை ஏந்தி அவைக்கண்

அஞ்சமும் அஞ்ச வருஞ்சசி வந்தாள்.                           340

 

அன்னதொர் காலையில் அநத்ர நாதன்

பன்னிரு மொய்ம்பு படைத்திடு புத்தேள்

முன்னர் இருந்து முறைப்பட அன்னான்

பொன்னடி பூசை புரிந்திட லுற்றான்.                             341

 

சொல்லரு நாணொடு தோகை மடந்தை

நல்லதொர் கன்னல் நறும்புனல் உய்ப்ப

எல்லவ ரும்புகழ் இந்திரன் ஐயன்

மெல்லடி பற்றி விளக்கினன் அம்மா.                            342

 

செம்மல் பதங்கள் செம்புனல் ஆட்டிக்

கைம்மலி யுங்கள பந்தனை யூட்டி

அம்மலர் சூட்டி அகிற்புகை காட்டி

நெய்ம்மலி பூஞ்சுடர் நீட்டினன் அன்றே.                  343

 

இவ்வகை பூசை இயற்று தலோடும்

அவ்வயி ராணி அயிற்படை யோன்றாள்

செவ்விதின் ஆட்டிய தீர்த்திகை தன்னைக்

கைவகை யேந்தியொர் காப்பிடை உய்த்தாள்.                    344

 

அன்னுழி இந்திரன் ஆறுமு கேசன்

தன்னொரு கையிடை தந்தியை நல்கி

நின்னடி யேன்இவண் நேர்ந்தனன் என்னாக்

கன்னல் உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான்.                 345

 

மருத்துவன் மாமறை மந்திர நீரால்

ஒருத்தி பொருட்டினில் ஒண்புனல் உய்ப்பக்

கரத்திடை ஏற்றன னால்கழல் சேர்ந்தார்க்

கருத்திகொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன்.                     346

 

செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி

அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட

மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து

நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்.             347

 

மாவொடு வாழை வருக்கைகொள் பைங்காய்

தீவிய கன்னல் செறிந்திடு செந்தேன்

ஆவருள் பாலிவை அண்டர்கள் செம்மல்

மூவிரு மாமுக னைநுகர் வித்தான்.                             348

 

வார்த்தொகை சூழ்தரு மத்தளி தக்கை

பேர்த்த வலம்புரி பேரி கலித்த

ஆர்த்தனர் வீரர் அருங்கண நாதர்

தீர்த்தனை வந்தனை செய்து களித்தார்.                  349

 

தண்டுள வண்ணல் சரோருக மேலோன்

எண்டிசை பாலகர் இந்திரன் என்போன்

அண்டர்கள் ஏனையர் ஆங்கவர் கோலங்

கண்டு சிறந்தது கட்புல மென்றார்.                              350

 

ஆயது போழ்தினில் அம்புய முற்றோன்

காயெரி தந்து கலப்பைகள் கூவித்

தூயம ணம்புரி தொன்முறை வேள்வி

நாயக னைக்கொடு நன்றுசெய் வித்தான்.                 351

 

உலகருள் காரணன் ஒண்ணுத லோடும் 

வலமுறை யாக வயங்கனல் சூழ்ந்து

சிலையிடை யன்னவள் சீறடி தந்தான்

மலரயன் உச்சியின் மேலடி வைத்தான்.                 352

 

மாலினி காளிகள் மாமல ராட்டி

பாலின் நிறத்தி பராயினர் சூழச்

சாலினி மங்கலை தன்னொடு கண்டான்

வேலினின் மாவினை வீழ எறிந்தோன்.                  353

 

இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்

தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்

அவ்வை யொடத்தனை அன்பொடு சூழ்ந்து

வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான்.                     354

 

வேறு

 

அடித்த லத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்

தெடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கல் இருத்தி

முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு முதன்மை

கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்ககொள் கையினார்.        355

 

மலைம டந்தையும் இறைவனும் மைந்தற்கு மகட்குந்

தலைமை செய்தருள் புரிதலுஞ் சாலையுள் இருந்த

அலர வன்முதல் அமரரும் முனிவரும் அணங்கின்

குலம டங்கலும் அவரடி முடிமிசைக் கொண்டார்.                 356

 

அறுமு  கன்றனை அணங்கினை அவையுளோர் எவரும்

முறையில் வந்தனை செய்தலும் முழுதருள் புரிந்து

கறையி ளங்கிய கண்டனுங் கவுரியுங் கடிதின்

மறைத லுற்றனர் பரிசனந் தன்னொடு மன்னோ.                  357

 

மறைந்த காலையில் விம்மித ராய்மணச் சாலை

உறைந்த தேவரும் முனிவரும் உயிர்களுக் குயிராய்

நிறைந்த மேலையோர் நிலைமையை நினைந்துதம் வாயால்

அறைந்து கைதொழு தவர்பெயர் எடுத்தெடுத் தார்த்தார்.           258

 

வரைப டைத்தவர் மறைந்துழி வானவர் பலரும்

நிரைப டைத்துள முனிவருங் கவன்றது நீத்தார்

திரைப டைத்துள ஆழ்கடற் பட்டுளோர் சிறந்த

கரைப டைத்தென அணங்கொடு குமரனைக் கண்டு.               359

 

உமையும் ஈசனும் இருந்திடு பீடிகை உம்பர்க்

குமர நாயகன் தெய்வதக் களிற்றொடுங் கூடி

அமர அன்னது காண்டலும் மகிழ்சிறந் தன்னார்

கமல மெல்லடி தொழுதனர் வழுத்தினர் களிப்பால்.                       360

 

இனைய காலையில் அரியணைப் பீடநின் றிழியா

அனைவ ருந்தொழு துடன்வர ஆறுமா முகத்துப்

புனித நாயகன் மங்கல இசையொடும் போந்து

தனது கோயிலுட் புக்கனன் இறைவியுந் தானும்.                  361

 

வேலை யன்னதில் குமரவேள் வேள்விநா யகற்கு

மால யன்முதல் அமரர்க்கும் மற்றுளார் தமக்கும்

ஏல வேவிடை தந்துதன் பரிசனம் எவையும்

ஆல யந்தனிற் கடைமுறை போற்றுமா றளித்தான்.                      362

 

இன்ன தன்மைய தாகவே எம்மையீன் றெடுத்த

அன்னை தன்னுடன் அறுமுகன் உறையுளின் அடைந்து

பொன்னின் மஞ்சமேற் படுத்துமெல் லமளியிற்* புவனம்

மன்று யிர்த்தொகை யுய்ந்திட முயங்கிவை கினனால்.             363

 

( * “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்னும் பழமொழி

  இங்கு உன்னற்பாலது.)

 

சேணு தித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள்

நாணி னிற்கட்டி நகரிடைத் தந்துநற் கலன்கள்

பூணு தற்றுறும் அங்குசங் கைக்கொடு புயமாந்

தூணு றப்பிணித் தணைத்தனன் அருளெனுந் தொடரால்.          364

 

மருந்து போல்மொழிக் குமரியுங் குமரனும் மணந்தாங்

கிருந்த வெல்லையில் விரிஞ்சனும் மாலும் ஏனையரும்

விரைந்து தத்தமக் கியன்றதொல் லிருக்கையின் மேவப்

புரந்த ரன்பரி சனரொடுந் தன்மனை புக்கான்.                             365

 

முகிலு யர்த்தவன் முசுகுந்த னேமுதல் உள்ள

அகில மன்னர்க்குந் தேனுவின் பலபயன் அருத்தித்

துகிலும் ஆரமும் அணிகளும் இருநிதித் தொகையும்

விகல மின்றியே கொடுத்தனன் யாரையும் விடுத்தான்.            366

 

எல்லை யன்னதின் முசுகுந்த னாதியாம் இறைவர்

கல்ல கந்தனில் இழிந்துதஞ் சேனையின் கடலை 

ஒல்லை கூடியே வேறுபல் புலந்தொறும் ஒருவித்

தொல்லை யூர்புகுந் திருந்தனர் வீடுறுந் தொடர்பால்.                      367

 

மன்னர் யாவரும் விடைகொடு போதலும் மகவான்

தன்ன தாகிய கடிமனைக் கிழத்தியுந் தானும்

இன்னல் தீர்தரு போகம தாற்றினன் இருந்தான்

அன்ன பான்மையிற் சில்பகல் அகன்றன அன்றே.                 368

 

ஆகத் திருவிருத்தம் - 303

     - - -

 

 

3.  வி ண் கு டி யே ற் று  ப ட ல ம்

 

ஆன சிற்சில வைகல்சென் றிடுதலும் அணங்குந்

தானும் உற்றிடும் உறையுளை ஒருபகல் தணந்து

வான வா¢க்கிறை வினைக்குறை நிரப்புதல் வலித்துக்

கோன கர்ப்பெரும் புதவினில் வந்தனன் குமரன்.          1

 

உவாவின் மாதுடன் உவாவினுக் கிளையவன் உவாவில்

திவாக ரன்மதி யாமென வருதலும் தெரிந்து

தவாத அன்புடை வயவருஞ் சாரதர் எவரும்

அவாவொ டன்னவர் அடிமுறை வணங்கிநின் றார்த்தார்.   2

 

அனிகம் ஆர்த்திடல் செவிப்புலம் படா¢தலும் அடல்வேல்

புனித நாயகன் போந்தனன் போந்தனன் என்று

வனச மேலவன் மாலவன் மகபதி வானோர்

முனிவர் யாவரும் எழுந்தனர் விரைசெலல் முன்னி.              3

 

வேறு

 

எழுதரு கின்றவர் யாரும் ஓரிமைப்

பொழுதுறும் அளவையிற் போந்து மன்னுயிர்

முழுதருள் புரிதரு முதல்வன் சேவடி

தொழுதனர் இறைஞ்சினர் சூழ்ந்து போற்றலும்.           4

 

கொந்தவிழ் அலங்கலங் குவவுத் தோளினான்

வந்துவந் தனைபுரி வதனை நோக்கியே

நந்தனி யூர்தியை நடாத்திச் செல்கெனச்

சிந்தையில் விரைதரு தேர்கொண் டேகினான்.            5

 

ஆசுகன் உய்த்திடும் அம்பொற் றேர்மிசை

வாசவன் அருள்புரி மடந்தை தன்னுடன்

தேசுடை அறுமுகச் செம்மல் கண்ணுதல்

ஈசனுங் கவுரியும் என்ன எய்தினான்.                            6

 

வேறு

 

சூரி னோடு துனைபரித் தேர்மிசைச்

சூரி னோடு துணைவன்வந் தெய்தலும்

வாரி வீசினார் மாமலர் பன்முறை

வாரி வீசினர் வானவர் யாருமே.                7

 

பூத வீரரும் போர்ப்படை மள்ளரும்

மூது ணர்ந்த முனிவன் சிறார்களுங்

கோதை வேலுடைக் கொற்றவற் காம்பணி

ஏதும் ஆற்றி இனிதயற் சுற்றினார்.                      8

 

மாகர் யாரும் வணங்க அவரவர்

சேக ரத்தினிற் சேவடி சூட்டியே

தோகை மாமயில் தோன்றல்முன் நின்றதால்

ஆகை யால்தவம் ஆற்றலதே அன்றோ.          9

 

பூவி னன்முதற் புங்கவர் யாரையும்

மூவி ரண்டு முகத்தவன் கண்ணுறீஇ

நீவிர் எல்லிரும் நேர்ந்தநும் ஊர்தியின்

மேவி யெம்மொடு செல்லுமின் விண்ணென்றான். 10

 

என்ன லோடும் இனிதென நான்முகன்

அன்ன மீதினும் அச்சுதப் பண்ணவன்

பன்ன கேசன் பகைஞன்றன் மீதினும்

முன்னர் ஏறி முதல்வனை எய்தினான்.                   11

 

மாறில் வௌ¢ளி மலைப்படு தெண்கயத்

தூறு நீத்தத் தொழுக்கென மும்மதத்

தாறு பாயும் அடல்அவி ராவதத்

தேறி வந்தனன் இந்திரன் என்பவன்.                     12

 

மற்று நின்றுள வானவர் யாவரும்

முற்று ணர்ந்த முனிவருந் தத்தமக்

குற்ற வூர்திகள் ஊர்ந்தெம் மிறைவனைச்

சுற்றி நின்று துதித்துடன் மேயினார்.                     13

 

வள்ளல் இத்துணை வானுல கத்திடைப்

பொள்ளெ னப்புகப் போதுகின் றானெனாக்

கொள்ளை யிற்பலர் கூறலுங் கூளியின்

வௌ¢ள முற்றும் விரைந்தெழுந் திட்டவே.              14

 

குடகு ழாப்பணை கொக்கரை தண்ணுமை

படக மாதிய பல்லியம் ஆற்றியே

புடைநெ ருங்கிய பூதரில் எண்ணிலார்

இடிமு ழங்கிய தென்ன இயம்பினார்.                    15

 

ஈங்கித் தன்மையின் ஈண்டு பரிசனம்

பாங்குற் றேகப் பரஞசுடர்ப் பண்ணவன்

ஓங்கற் கொண்ட ஒருதனிக் கோநகர்

நீங்கிச் சேணின் நெடுநெறிப் போயினான்.         16

 

அந்த ரத்தில் அமருல கந்தனைக்

கந்த னங்கொரு கன்னலின் நீங்கியே

இந்தி ரப்பெயர் எய்திய மாதுலன்

முந்தி ருந்த முதுநகர் மேவினான.                      17

 

வேறு

 

விண்டொடர் பொன்னகர் மேலைச் சூர்மகன்

நுண்டுகள் செய்திட நொய்தின் உற்றதும்

அண்டர்கள் இறையவன் அகங்கொள் வேட்கையும்

கண்டனன் குமரவேள் கருணை யாழியான்.                      18

 

வீக்குறு கனைகழல் விமல நாயகன்

ஆக்கமில் விண்ணுல களிக்கும் பெற்றியால்

தேக்கிய விஞ்சையின் தெய்வத் தச்சனை

நோக்கினன் இனையன நுவறன் மேயினான்.                     19

 

செல்லலை யகன்றிடு தேவர் மன்னவன்

எல்லையில் வளனொடும் இருக்கும் பான்மையால்

தொல்லைய தாமெனத் துறக்க நல்குதி

வல்லையில் என்றலும் வணங்கிப் போயினான்.           20

 

வேறு

 

நூறெ ரிந்திடு நோன்மையோன், மாறில் பொன்னகர் மாடுற

வீறு மாமதில் விண்ணுலாம், ஆறு பாய அமைத்தனன்.           21

 

ஆயி ரம்மலர் அம்புயன், சேய வாய்கள் திறந்தென

ஞாயில் மாமதில் நள்ளுற, வாயில் நான்கு வகுத்தனன்.          22

 

நாற்றி சைக்கண நாதரும், ஆற்ற வேயரி தாமென

ஏற்ற கோபுரம் ஏழ்நிலை, வீற்று வீற்று விதித்தனன்.                     23

 

வண்ண மாமதில் வைப்பினுள், அண்ண லங்கிரி யாழிசூழ்

கண்ண கன்புவிக் காட்சிபோல், எண்ணில் வீதி இயற்றினான்.      24

 

பூவின் மேல்வரு புங்கவத், தேவு நாணுறு செய்கையில்

காவல் மாநக ரத்திடைக், கோவில் ஒன்று குறிற்றினான்.          25

 

தேவு காமுறு செய்வரை, காவி மல்கு கயத்தொடு

வாவி பொய்கை வரம்பில, ஓவில் பான்மையின் உதவினான்.            26

 

மாட மாளிகை மண்டபம், ஈடு சேரரி ஏற்றணை

பாடு சேர்தரு பாழிகள், நாடி ஏர்தக நல்கினான்.                  27

 

வேறு

 

ஏறுசீர் இந்திரன் இருக்குங் கோயிலும்

ஆறுமா முகப்பிரான் அமருங் கோட்டமும்

மாறிலா மாலயன் மந்தி ரங்களும்

வேறுளார் இருக்கையும் விதித்திட் டானரோ.                     28

 

கூன்முக வால்வளைக் குரிசில் ஊ£¤னும் 

நான்முகன் ஊரினும் நலத்த தென்றிட

வான்முக வியனகர் வளமை சான்றிட

நூன்முக நாடியே நுனித்து நல்கினான்.                   29

 

வேறு

 

பொன்னி னுக்குப் புகலிட மாகவான்

மன்னி னுக்குச்செய் மாநகர் வண்மையை

என்னி னுக்கும் இயம்பவற் றோகலை

மின்னி னுக்கும் விதிப்பருந் தன்மையே.                 30

 

இனைத்தி யாவும் இமைப்பிடைச் சிந்தையின்

நினைப்பிற் செய்த நிலைமையை நோக்கியே

நனைத்து ழாய்முடி நாரணன் நான்முகன்

மனத்தி னூடு மகிழ்ச்சியை மேவினார்.                  31

 

வல்லை வேதன் வகுப்பது மற்றுனக்

கில்லை நேரென் றினிது புகழ்ந்திட

அல்லல் தீர்அம ரர்க்கிறை காண்குறீஇப்

புல்லி னான்அப் புனைவனை என்பவே.                  32

 

அணங்கு சால்புரம் அவ்வகை நல்கியே

நுணங்கு நூலவன் சண்முகன் நோன்கழல்

வணங்கி நிற்பவ ருள்செய்து மாடுறு

கணங்க ளோடு கதுமெனப் போயினான்.                  33

 

அன்ன காலை அரம்பைய ரோடொரு

பொன்னின் மானம் புகுந்து புலோமசை

கன்னல் ஒன்றினில் காமரு பொன்னகர்

மன்னன் மந்திரம் வந்தடைந் தாளரோ.                  34

 

அடையும் எல்லை அறுமுகப் பண்ணவன்

இடைநி லைப்படும் இந்திரன் கோநகர்க்

கடைமு தற்செலக் கஞ்சனை யாதியோர்

உடைய தத்தம தூர்தியின் நீங்கினார்.                            35

 

அக்க ணந்தனில் அண்டர்கள் யாவரும்

தொக்கு டன்வரத் தோகையன் னாளுடன்

செக்கர் மாமணித் தேரினுந் தீர்ந்தொராய்ப்

புக்கு மேயினன் பொன்புனை மன்றமே.                  36

 

வேறு

 

தன்றுணை மஞ்ஞை யாகித் தாங்குதல் தெரிந்தி யானும்

இன்றிவற் பரிப்பன் என்னா இளவலும் அமைந்த தென்ன

மன்றிடை இருந்த தெய்வ மடங்கலந் தவிசின் உம்பர்

வென்றியந் தனிவேல் அண்ணல் வீற்றிருந் தருளி னானே.         37

 

அன்னதோர் அளவை தன்னில் அறுமுகன் அலரிற் புத்தேள்

முன்னவர் தம்மை எல்லாம் முழுதருள் புரிந்து நோக்கி

இந்நகா¢ அரசு போற்ற இமையவர் இறைவற் கின்னே

பொன்னணி மவுலி பொள்ளெனப் புனைதி ரென்றான்.             38

 

என்றிவை குமரன் கூற இனிதென இசைவு கொள்ளா

அன்றொரு கணத்தின் முன்னர் அட்டமங் கலமுந் தந்து

மன்றல்கொள் கவரி ஔ¢வாள் மணிமுடி கவிகை யோடு

நின்றுள உறுப்பும் ஏனைப் பொருள்களும் நெறியின் உய்த்தார்.     39

 

அரசியல் உரிமைத் தெல்லாம் ஆங்கவர் அழைத்துக் கங்கைத்

திரைசெறி தெண்ணீர் ஆட்டிச் செழுந்துகில் கலன்கள் சாந்தம்

விரைசெய்தார் புனைந்து சீய வியன்பெருந் தவிசின் ஏற்றி

வரிசையோ டிந்திரற்கு மணிமுடி சூட்டி னாரால்.                 40

 

சுடர்த்தனி மவுலி தன்னைச் சூட்டலுந் துறக்கத் தண்ணல்

அடித்துணை பணிந்தார் வானோர் அனைவரும் ஆசி தன்னை

எடுத்தெடுத் தியம்ப லுற்றார் இருடிகள் அரம்பை மாதர்

நடித்தனர் விஞ்சை வேந்தர் நல்லியாழ் நவின்றி சைத்தார்.                41

 

இந்திரன் அனைய காலை எம்பிரான் முன்னர் ஏகி

வந்தனை புரிந்து போற்றி வளமலி துறக்க நாடு

முந்துள அரசுஞ் சீரும் முழுதொருங் களித்தி எந்தாய்

உய்ந்தனன் இதன்மேல் உண்டோ ஊதியம் ஒருவர்க் கென்றான்.    42

 

என்றலும் அருள்செய் தண்ணல் இந்நகர் அரசு போற்றி

நன்றிவண் இருத்தி என்னா நாகர்கோன் தன்னை வைத்து

நின்றுள அமரர் தம்மை நிலைப்படும் இருக்கைக் கேவித்

தன்துணை அணங்குந் தானுந் தன்பெருங் கோயில் போந்தான்.     43

 

குறினெடில் அளவு சான்ற கூளியும் வயவர் யாரும்

வறியதோ ரணுவுஞ் செல்லா மரபினால் வாயில் போற்ற

உறையுளின் இருக்கை நண்ணி ஒருபெருந் தலைவி யோடும்

அறுமுக வள்ளல் பல்வே றாடல்செய் திருந்தான் அன்றே.         44

 

தூவியந் தோகை மேலோன் துணைவியோ டிருந்த காலைப்

பூவினன் முதலோர் தத்தம் புக்கிடம் அமர்ந்தா£¢ அன்றே

தேவர்கள் இறைவன் தானுஞ் சேயிழை சசியு மாக

மேவினன் இன்பந் துய்த்து விண்ணுல கரசு செய்தான்.            45

 

இனைத்தியல் கின்ற எல்லை இந்திர வளனே அன்றி

அனைத்துல கத்து முள்ள ஆக்கமும் தாம்பெற் றென்ன

மனத்திடை உவகை கொண்டு மாநகர் இருக்கை புக்குத்

தனித்தனி அமரர் எல்லாஞ் சாறயர்ந் தமர்த லுற்றார்.                     46

 

ஆகத் திருவிருத்தம் - 349

     - - -

 

 

4.  க ந் த  வெ ற் பு று  ப ட ல ம்

 

இப்படி சிலநாள் ஏக இதன்மிசை வைகல் ஒன்றில்

இப்பருங் கந்த வெற்பில் உறைவது கருதிச் செவ்வேள்

செப்புறழ் கொங்கை யோடுஞ் சினகரந் தணந்து செல்ல

அப்பரி சுணர்ந்து வேதா ஆதியர் யாரும் போந்தார்.                       1

 

பெருந்தகை யனைய காலைப் பிரமன்மால் முதலோர் யாரும்

விரைந்துதம் பதங்கள் செல்ல விடைபுரிந் தங்கண் வானத்

திருந்தர சியற்ற விண்ணோர்க் கிறைவனை நிறுவித் தெய்வத்

திருந்திழை அணங்கி னோடுஞ் சென்றுதன் தேரிற் புக்கான்.        2

 

தேரிடைப் புகுந்த ஐயன் திறலுடை மொய்ம்பன் பாகாய்ப்

பாரிடைச் சென்று முட்கோல் பற்றினன் பணியா லுய்ப்பப்

போருடைச் சிலைவல் லோரும் பூதா¢தங் கடலுஞ் சுற்றக்

காருடைக் களத்துப் புத்தேள் கயிலைமால் வரையிற் போந்தான்.   3

 

போனதோர் காலை வையம் பொள்ளென இழிந்து முக்கண்

வானவன் தன்னை ஆயோ டடிகளை வணக்கஞ் செய்து

மேனதோர் கருணை யோடும் விடைபெறீஇ விண்ணு ளோர்கள்

சேனையந் தலைவன் கந்தச் சிலம்பினிற் கோவில் புக்கான்.               4

 

புக்கதோர் குமர மூர்த்தி பொருதிறல் வயவர் யாருந்

தொக்கனர் பணியில் நிற்பத் தொல்படைக் கணங்கள் போற்ற

மைக்கருங் குவளை ஒண்கண் மடவர லோடு மேவி

மிக்குயர் மணிப்பீ டத்தில் வீற்றிருந் தருளி னானே.                      5

 

1துய்யதோர் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள்

செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க

வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்

பொய்யில்சீ ரடியார் வாழ்க வாழகஇப் புவன மெல்லாம்.          6

 

(பா-ம் 1 துய்யதா மறைகளாலுந் துதித்திட அரிய தான 

  செய்யவேள் அடிகள் வாழ்க.)

 

ஆகத் திருவிருத்தம் - 355

     - - -

 

 

5. இ ந் தி ர பு ரி ப்  ப ட ல ம்

 

காசினி வியத்தகு கந்த வெற்பிடைத்

தேசுடை முருக§விசேர்ந்த செய்கையைப்

பேசினன் இங்கினிப் பிறங்கு பொன்னகர்

வாசவன் இயற்கையும் மற்றுங் கூறுகேன்.                       1

 

துண்ணென அவுணரைத் தொலைத்த வேற்படைப்

பண்ணவன் அருளினால் பலரும் போற்றிட

விண்ணர சியற்றிய வேந்தன் ஓர்பகல்

எண்ணினன் உளந்தனில் இனைய நீரதே.                 2

 

பற்றலர் சிறுதொழில் பலவு மாற்றியே

உற்றதும் அளப்பிலா உகமொ ளித்தது

மற்றதன் இடையிடை வந்த தீமையும்

பெற்றிடு துன்பமும் பிறவும் உன்னினான்.                3

 

மறுத்தனன் சசியுடன் வைகும் வாழ்க்கையை

வெறுத்தனன் வெறுக்கையை வேந்தியற் கையுஞ்

செறுத்தனன் தவத்தினாற் சேர்வன் வீடெனாத்

துறத்தலை உன்னினன் துறக்க மேயினான்.                      4

 

இந்திரன் இயற்கையை எண்ணி வானவர்

மந்திரி யாகியும் மன்ன னாகியும்

அந்தண னாகியும் அமரும் பொன்னவன்

புந்தியில் ஈதொரு புணா¢ப்பை உன்னினான்.                      5

 

உன்னிய மேலவன் உம்ப ருக்கெலாம்

மன்னவ னுழைதனில் வந்து வைகியே

கொன்னவில் வச்சிரங் கொண்ட பாணியாய்

இன்னன கேளென இயம்பல் மேயினான்.                 6

 

புன்றொழி லாகிய பொய்யும் வாய்மையாம்

ஒன்றொரு பெரும்பயன் உதவு மாயிடின்* 

என்றனர் சுரகுரு இந்தி ரன்பதம்

நின்றிட ஈதொரு நிகழ்ச்சி கூறுவான்.                            7

 

( * 'பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த, நன்மை

  பயக்கு மெனின்' என்னும் திருக்குறள் கருத்தினை இங்கு

  ஒப்பு நோக்குக.)

 

வேறு

 

அன்பு நீங்கிய அவுணருக் கரசனாற் பட்ட

துன்ப மானதை உன்னியே துறக்கமேல் அரசும்

இன்ப வாழ்க்கையும் வெறுத்தனை இவைவெறுத் தனையேல்

பின்பு தோற்றுநீ ஆற்றலால் பெறும்பயன் யாதோ.                8

 

சிந்தை வெந்துயர் உழந்தவ ரல்லரோ திருவும்

அந்த மில்பெரு வாழக்கையும் எய்துவர் அதுதான்

மைந்த வாழிகேள் நின்னள வன்றுகாண் மதிக்கின்

இந்த மூவுல கந்தனில் வழங்கிய இயற்கை.                             9

 

ஓவ ருந்தவம் இயற்றிய முனிவரில் உலகத்

தேவர் தங்களில் பாதலத் தோர்களிற் சிறந்த

மூவ ரென்றுபேர் பெற்றிடு முதல்வர்கள் தம்மில்

ஏவர் மங்கையர் முலைத்தலைப் போகம்விட் டிருந்தோர்.         10

 

போன துன்பினுக் கஞ்சியே புகுந்தவித் திருவை

ஊன மாமெனத் துறந்துநீ தமியைதோற் றுழலின்

ஆன போதுறுந் துயரினுக் கவதியும் உண்டோ

கானல் நீந்திட வெருவியே கடல்புக வற்றோ.                            11

 

ஆக நோவுற வருத்தியே ஐம்புலன் அவித்து

மோக மாதியாம் மூவிரு குற்றமும் முருக்கி

யோகு செய்திடும் மேலையோர் பெறும்பயன் உரைக்கில்

போக மன்றிஒன் றில்லைகாண் எல்லைதீர் புகழோய்.                     12

 

காண்ட கும்புலன் ஒடுங்குமாங் கரணமும் இலையாம்

பூண்ட செய்கையும் ஒழியுமா மியாக்கையும் போமாம்

ஆண்டொர் பேரின்பம் உண்டென்பர் அதனையார் அறிந்தார்

ஈண்டு கண்டதே மெய்யென்பர் உலகுளோர் யாரும்.                      13

 

பொய்ம்மை உற்றிடு கானலைப் புனலென விரும்பிக்

கைம்மிசைக் கொண்ட அமிர்தினைக் கமருகுத் தாங்கு

மெய்ம்மை யிற்சிலர் உண்டெனும் வீடுபே றுன்னி

இம்மை யிற்பயன் இழக்குதி நன்றுநின் எண்ணம்.                14

 

மங்கை மார்இடத் தின்பமே இன்பமற் றவரோ

டிங்கு வாழ்வுறும் வாழ்க்கையே இயல்புறும் வாழக்கை

அங்க வர்ப்பெறு செல்வமே செல்வம்ஆங் கவர்தங்

கொங்கை புல்குறா வறுமையே கொடியதோர் வறுமை.            15

 

மறுவி லாதவாள் மதிமுக மடந்தையர் புணர்ப்பைச்

சிறிய இன்ப மென்றுரை செய்வர் அன்னதன் சிறப்பை

அறிவ ரேயெனின் ஆங்கதே பேரின்ப மாகும்

இறைவ நீயது கேட்டியேல் மொழிகுவன் என்றான்.                       16

 

ஏமஞ் சான்றிடு குரவன்மற் றிவையிவை இசைப்ப

நாமஞ் சாற்றிடு குலிசமாப் படையினன் நகையா

ஓமஞ் சான்றிடு தீமுன்னர் இழுதென உடைந்து

காமஞ் சான்றிடும் உளத்தனாய் இனையன கழறும்.                       17

 

பொருந்து மாசினை அகற்றிநற் காட்சியைப் புரியும்

மருந்து போலுறு குரவநீ மடந்தையர் சிறப்புந்

திருந்து காமநல் லின்பமும் எனக்கருள் செய்யா

திருந்த காரண மென்கொலோ இன்றுகா றென்றான்.                       18

 

வேறு

 

வெற்றுட லத்தில் விழித்தொகை பெற்ற

சிற்றறி வோன்இவை செப்புத லோடும்

மற்றிவண் உள்ளம் மயங்கினன் என்னாக்

கற்றுணர் மந்திரி கட்டுரை செய்வான்.                   19

 

மாதர்கள் மேன்மைகள் மன்மத நன்னூல்

ஓதிடும் உண்மையை ஓர்ந்துணர் கின்ற

காதல் இலாவழி கட்டுரை செய்யார்

ஆதலின் ஐய அறைந்திலன் இந்நாள்.                            20

 

கோண்மதி யேகுடை யாவரு கோன்தன்

மாண்மதி நூலெனும் வான்கடன் முற்றும்

நீண்மதி யால்உணர்ந் தேன்அதன் நீர்மை

கேண்மதி யென்று கிளர்த்திடு கின்றான்.                  21

 

ஈறில வென்றும் இயம்பினர் பத்தே

நூறுடன் எட்டெனும் நூலும் நுவன்றார்

வேறும் இசைத்தனர் மெய்ச்சம யந்தான்

ஆறென ஓதினர் ஆங்கவை தம்முள்.                            22

 

சுதையமு தேயெனத் துய்த்திடு நீரார்க்

கிதமிக நல்குவ திம்மையின் முத்திக்

கதியருள் கிற்பது காமல் உலோகா

யதமென வேநெறி யொன்றுள தன்றே.                   23

 

அச்சம யத்தலை யாற்றிடை நின்றே

எச்சமில் வீடுபெற் றின்புறு கின்றோர்

மெச்சியல் ஆடவர் மேலதை ஈவோர்

நச்சுறு கூ£¢விழி நா£¤யர் தாமே.                               24

 

அம்மட வார்இய லானவும் அன்னோர்

தம்மை அடைந்திடு தன்மையும் மேவுஞ்

செம்மைகொ ளாடவர் செய்கையும் எல்லாம்

மெய்மைய தாக விளம்பிடும் வேள்நூல்.                25

 

சாதி இயற்கைகள் தத்துவம் மாந்தர்

தீதில் கணத்தொடு தேசம் அவத்தை

போது கருத்திவை ஆதிய போர்வேள்

வேதம் உரைக்கும் விழுப்பொருள் மாதோ.                       26

 

வசைதவிர் மாலினி மால்வட வைப்பேர்

இசையினி அத்தினி ஏந்திழை யோர்க்காம்

அசைவறு தொல்மர பாடவர் யார்க்குஞ்

சசன்இட பன்அசு வன்இவை தாமே.                             27

 

முன்னம் உரைத்திடும் மும்மர புக்குட்

கன்னியர் ஆடவர் காமர் குறிக்கு

மன்னி ஆழமும் நீளமும் முற்றும்

இன்னன வென்றிட ஏற்ப தியற்கை.                             28

 

அந்தமில் தேவர் அருந்தவர்நாகர்

கந்தரு வத்தர் கணங்கெழு பூதர்

முந்தும் அரக்கர் இயக்கா¢ முரட்பேய்

தந்திறன் ஆவது தத்துவ மாமே.                        29

 

எண்மைகொள் தத்துவ யாற்றிடை நின்ற

பெண்மைய ரைவளி பித்தென ஓதும்

வண்மைகொள் முக்குணம் மன்னினர் மற்றவ்

வுண்மை படைத்திடல் ஒண்குண னாமே.                30

 

வேறு

 

உருவும் வண்ணமும் ஓங்கும் செயற்கையும்

அரிவை மார்கள்தம்  நாளும் தனையவுந்

தெரிய நாடித் தௌ¤ந்தறி கிற்பரால்

மரபு தான்முதல் வன்குணத் தீறுமே.                            31

 

ஏறு தேசந்தொ றீண்டிய மாதர்தம்

ஊறும் நீதியும் உள்ளமுஞ் செய்கையும்

வேறு வேறு வினவியெல் லோர்களுந்

தேற நிற்பது தேச இயற்கையே.                        32

 

தரித்த வாலை தருணை பிரவுடை

விருத்தை யாகும் வியன்பரு வங்களின்

உரைத்த காலமும் உள்ளத்தின் வேட்கையும்

பிரித்த றிந்திடப் பெற்றத வத்தையே.                           33

 

கோல மாம்முக் குணத்தர்முப் பான்மையர்

நால்வர் எண்மராம் நாரியர் பற்றுற 

ஏவலும் ஆடவர் எய்துதற் கேற்றபல்

கால முந்தெரி கிற்பது காலமே.                         34

 

மக்கள் காமம் வடிவினில் வைகலும்

பக்கந் தோறும் இழிந்துயர் பான்மையால்

புக்க தோரிடை நாடிப் புரையொரீஇத்

தக்க செய்வதுஞ் சாற்றிய மேலதே.                             35

 

பற்று ளோரையும் பற்றிலர் தம்மையும்

முற்று ளோரையும் முற்றிலர் தம்மையும்

மற்று ளோரையும் மாந்தர்கள் தேற்றமு£ல்

துற்ற செய்கை உளங்கொள் கருத்ததே.                  36

 

வேறு

 

இங்கிவை ஆடவர் இயல்புஞ் சால்புறு

மங்கையர் பான்மையும் வகுத்த தன்னவர்

பொங்கிய புணர்வகை புணர்ச்சிக் கேற்பதோர்

அங்கிதம் பிறவுமேல் அறைய நின்றவே.                 37

 

புல்லுதல் சுவைத்திடல் புணர்ந கக்குறி

பல்லுறல் மத்தனம் பயிலுந் தாடனம்

ஒல்லொலி காணமோ டுவகை ஆதிய

எல்லையில் புணர்நிலைக் கியைநத என்பவே.                    38

 

வேறு

 

விரைதலே சமந்தூக் கென்னும் வேகமும் உச்சம் நீசம்

புரைதவிர் சமமென் றோதும் பொருண்மையுங் குணத்திற் பற்றிப்

பரவும்ஐ வகையில் ஈரைம் பகுதியாற் பிறவாற் சேர்தல்

உரைதரு புணர்ச்சி யாகும் உபரியும் அனைய தொன்றே.          39

 

உறுத்தலே நெருக்கல் மெல்ல உரோசுதல் உறுதல் முன்னா

மறுத்தவிர் தருவு சூழ்ந்த வல்லியே மரமேற் கோடல்

செறித்தவௌ¢ ளரிசி பாலார் தீம்புனல் செயிர்தீர் காட்சிப்

புறத்தி லோர்உறுப் புறுத்தல் புணர்ச்சியிற் புல்லற் பால.           40

 

வைத்தலே துடித்தல் ஒற்று மரபொப்பு விலங்கு சுற்றே

உத்தர மதுக்கல் உள்ளீ டோங்குசம் புடாதி தன்னால்

பத்துடன் ஒன்றும் ஏனைய பல்வகை உறுப்பு நாடி

முத்திறத் தமிர்தம் உண்டல் முன்மொழி சுவைத்த லாமே.        41

 

சுரிதகம் எண்ணாட் டிங்கள் தூயமண் டலமே மஞ்ஞை

நிரலடி முயலின் புன்கால் நெய்தலின் இதழே வேங்கை

உருகெழு நகவி ரேகை உருவில்ஏழ் உறுப்பி லெங்கும்

வரன்முறை நகத்தால் தீட்டல் வள்ளுகிர்க் குறிய தன்றே.          42

 

துவர்படு பவள மாலை சுனகமூ டிகமே ஏனக்

கவரடி மணிபோழ் வட்டக் கடிகண்டப் பிரத முற்றும்

இவைஅல பிறவும் போல இன்னமு துண்ட தானம்

அவைதமில் நெறியால் தந்தம் அழுத்தல் பற்குறிய தம்மா.        43

 

உரமுதல் ஐந்தில் ஐம்பால் உணர்தொழில் முறையால் ஏற்பப்

பொருவரு புணர்ச்சி வேலை புடைத்திடல் புடைப்ப தாகும்

கரிகர மாதி யாய கனங்குழை மகளிர் வெ•க

மருவிய வழிபா டன்றே மத்தனம் என்ப வல்லோர்.                      44

 

மயில்புற வன்னங் காடை வண்டு வாரணஞ் செம்போத்துக்

குயிலென இசைக்கும் எட்டின் குரலினைப் பயின்று காமர்

இயலுறு மகளிர் பாங்கர் எய்துழ இவையில் வேண்டுஞ்

செயல்வகை புரியு மாறு சிறந்தசீற் கார மாமே.                          45

 

பாரியல் கிராமி யஞ்சீர்ப் பவுத்திக நாக பாசம்

ஏரியல் நாக ரீகம் இந்திரா ணிகமே கூர்மஞ்

சாரிதம் ஆய்தம் மூர்த்தஞ் சங்கிரா ணிகமண் டூகம்

பாரிசம் பிடிதஞ் சூலஞ் சுரும்பிதம் பதும பீடம்.                          46

 

எண்டகுஞ் சம்பு டம்வேட் டிதம்விசும் பிதமுற் புல்லம்

பிண்டிதம் பீடி தம்மே பிரேதுகை அநுபா தந்தான்

பண்டதங் கடக மத்த பத்மவா சனஞ்ச மூர்த்தம்

தண்டகம் லளிதம் வேணுச் சாரிதஞ் சமவே சன்னம்.                     47

 

ஆடவஞ் சமபு டத்தோ டமர்பரி வத்த கஞ்சங்

காடகந் தேனு கம்மற் கடகம்ஐம் பதமே சானு

மாடமர் துகிலம் பீனம் ஆத்திக மேகூர்ப் பன்னம்

பீடிதோ ருகமம் பீதம் பீடிகை யோடு பின்னும்.                           48

 

ஒட்டுவிக் கிரம மேகோ யூதகம் என்னும் நாற்பான்

எட்டுள திறத்தி னானும் இவையல பிறவாற் றானும்

மட்டமர் குழலி னா£¢கள் மகிழ்தர மதனூல் தேறுஞ்

சிட்டா¢கள் புணரும் பான்மை சித்திரக் கரண மாமே.                     49

 

திணைநிலை மகளிர் தத்தந் திறங்களுஞ் சேர்தல் மாண்பும்

உணர்குவ ரெனினும் மற்ற ஒண்குழு வதனுள் நின்ற

கணிகையிற் பரத்தை காமக் கன்னியர் ஒழிந்தோர் தம்மைப்

புணர்கையும் பிறவுந் தேர்¢தல் புலமையோர் கடனாம் அன்றே.            50

 

முன்னுற மதன நூலின் முறையெலாந் தொகையிற் கூறி

அன்னதன் வகையுங் கூறி அகலமும் எடுத்துக் கூறிப்

பொன்னவன் இருத்த லோடும் புரந்தரன் அவற்றை ஓர்ந்து

கன்னியைப் புணருங் காமக் கவலைமேற் கருத்தை வைத்தான்.    51

 

கொற்றவெங் குலிச வள்ளல் குரவனை இறைஞ்சி எந்தை

சொற்றிடு பான்மை யெல்லாந் துணிவது வாகக் கொண்டே

மறறொரு பொருளும் வெ•கேன் வரம்பிலா இன்பந் தன்னைப்

பெற்றனன் போலும் என்னப் பெருமகிழ் வெய்திப் போனான்.               52

 

வேறு

 

திரைசெறி கடலெனத் திளைக்கும் இன்பநூல்

உரைசெய்து பொன்னவன் உவப்பிற் போந்திட

விரைசெறி தொங்கலான் மேலைப் பொன்னகர்

அரசினை மதலைபால் ஆக்கி னானரோ.                 53

 

விண்ணுல காளுறும் வேந்தி யற்கையை

அண்ணலஞ் சயந்தனுக் கருளி இந்திரன்

தண்ணுறு சசிமுகச் சசியைக் கூடியே

எண்ணரும் போகமுற் றினிது வைகினான்.                       54

 

அலைகடல் அமிர்தினை வெறுக்கும் ஆயிழை

இலவிதழ் அமுதமே இனிதென் றுண்டிடுங்

கொலையயி ராவதந் துறக்குங் கோல்வளை

முலையயி ராவத முயங்கி மேவுமே.                           55

 

வெல்குறும் வலியுடை விருத்தி ரன்மிசைச்

செல்குறுந் தெய்வதத் தேரைச் சீறிடும்

ஒல்குறு நுசுப்பினை உடைய மங்கைதன்

அல்குலந் தேர்மிசை அசைந்து வைகுமே.                56

 

கருங்கடல் சூழ்புவி கவிழ்ந்து துன்புற

இரங்கிய இடிக்கொடி இகழ்ந்து காய்ந்திடும்

பொருங்கணை விழியுடைப் புலோம சைத்திரு

மருங்குல்மின் கொடியின்மேல் மகிழ்ச்சி கொள்ளுமே.             57

 

இயற்படு தவமுனி யாக்கை என்பினாற்

செயற்படு வச்சிரஞ் செங்கை நீத்திடு

மயிற்பெடை யன்னதோர் மடந்தை கண்ணெனும்

அயிற்படை சேர்ந்திட அதனைத் தாங்குமே.                      58

 

இருள்நிற விசும்பினில் இடைய றாமலே

வருசிலை இரண்டையும் மறக்கு மாமலர்த்

திருநிகர் வனப்புடைத் தெய்வ மங்கைதன்

புருவவெஞ் சிலைகளே பொருளென் றுன்னுமால்.         59

 

ஏந்தலம் புயலினை இகழும் ஏந்திழை

கூந்தலம் புயல்மிசை உவகை கூ£¢ந்திடும்

பூந்தரு வல்லியை முனியும் பூண்முலை

வாய்ந்திடும் உரோமமாம் வல்லி புல்லுமே.                      60

 

இத்திறம் இந்திரன் இந்தி ராணிபால்

வைத்திடும் உளத்தினன் மறுமை எய்தினுங்

கைத்திடு கருத்தினன் காமத் தின்பமே

துய்த்தனன் மதனநூல் துணிபு நாடியே.                  61

 

வேறு

 

அன்னதோர் நாளில் ஓர்நாள் அமரர்கோன் ஆணை போற்றிப்

பொன்னகர் செங்கோல் ஓச்சிப் புரந்திடு சயந்தன் என்போன்

தன்னயல் வந்து வைகுந் தாபதர் அமரர் தம்முள்

முன்னுற கின்ற ஆசான் முகனெதிர் நோக்கிச் சொல்வான்.         62

 

எந்தைகேள் மலரோன் ஆதி இயம்பிய அமரர் யாரும்

அந்தமில் முனிவர் யாரும் ஆற்றல்வெஞ் சூரன் தன்னால்

வெந்துயர் உழந்து தொல்லை மேன்மையும் இழந்து தாழ

வந்தகா ரணம தென்கொல் என்றலும் மறையோன் சொல்வான்.    63

 

விண்ணவ ராயி னோர்க்கும் மேதகு முனிவர் யார்க்கும்

எண்ணமில் சூரன் தன்னால் எய்திய தீமை யெல்லாம்

நண்ணலர் புரமூன் றட்ட நாதனை அன்றித் தக்கன்

பண்ணிய மகத்திற் புக்க பாவத்தால் விளைந்த தென்றான்.        64

 

என்றலுஞ் சயந்தன் கேளா ஈதுகா ரணமேல் அந்தப்

புன்றொழில் தக்கன் வாழ்க்கை புரமெரி படுத்த தேவை

அன்றியே செய்த வேள்வி ஆயிடை நிகழ்ச்சி யாவும்

ஒன்றற உரைத்தல் வேண்டும் சிறியனேன் உணர்தற் கொன்றான்.   65

 

சயந்தனென் றுரைக்கும் வள்ளல் சாற்றிய துணரா ஆற்ற

வயந்தனை எய்தி வாழி மதலைகேள் இதனை என்னா

வியந்திடும் அகந்தை தன்னால் மிக்குறு தக்கன் காதை

நயந்தரு மொழியால் ஆசான் இத்திறம் நவிலல் உற்றான்.         66

 

ஆகத் திருவிருத்தம் - 421

     - - -

 

 

தேவகாண்டம் முற்றுப்பெற்றது

ஆகக் காண்டம் ஐந்துக்குத் திருவிருத்தம் - 8278

* * *


·  முந்தையது : யுத்த காண்டம்...

·  அடுத்தது : தக்ஷ காண்டம்...


 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்