logo

|

Home >

to-practise >

kandhapuranam-of-kachiyapar-thiruvilaiyattu-padalam

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருவிளையாட்டுப் படலம்

Kanthapuranam of Kachiyapar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

உற்பத்தி காண்டம் - திருவிளையாட்டுப் படலம்


உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்



     14.  திருவிளையாட்டுப் படலம்

அனந்தரம தாகஉமை யம்மையொடு பெம்மான்
நனந்தலையில் வைகிய நலங்கொள்கும ரேசன்
இனங்கொடு தொடர்ந்தஇளை யாரொடு மெழுந்தே
மனங்கொளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான்.			1

தட்டைஞெகி ழங்கழல் சதங்கைகள் சிலம்பக்
கட்டழகு மேயஅரை ஞாண்மணி கறங்க
வட்டமணி குண்டல மதாணிநுதல் வீர
பட்டிகைமி னக்குமரன் ஆடல்பயில் கின்றான்.				2

மன்றுதொறு லாவுமலர் வாவிதொ றுலாவுந்
துன்றுசிறு தென்றல்தவழ் சோலைதொ றுலாவும்
என்றுமுல வாதுலவும் யாறுதொ றுலாவுங்
குன்றுதொறு லாவுமுறை யுங்குமர வேளே.				3

குளத்தினுல வும்நதி குறைந்திடு துருத்திக்
களத்தினுல வும்நிரைகொள் கந்துடை நிலைத்தாந்
தளத்தினுல வும்பனவர் சாலையுல வும்மென்
னுளத்தினுல வும்சிவன் உமைக்கினைய மைந்தன்.			4

இந்துமுடி முன்னவன் இடந்தொறு முலாவும்
தந்தையுடன் யாயமர் தலங்களி னுலாவும்
கந்தமலர் நீபமுறை கண்டொறு முலாவும்
செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி யுலாவும்.				5

மண்ணிடை யுலாவும்நெடு மாதிர முலாவும்
எண்ணிடை யுறாதகடல் எங்கணு முலாவும்
விண்ணிடை யுலாவும்மதி வெய்யவன் உடுக்கோள்
கண்ணிடை யுலாவும்இறை கண்ணில்வரு மண்ணல்.			6

கந்தருவர் சித்தர்கரு டத்தொகைய ரேனோர்
தந்தமுல காதிய தலந்தொறு முலாவும்
இந்திரன் இருந்ததொல் லிடந்தனில் உலாவும்
உந்துதவர் வைகுமுல கந்தொறு முலாவும்.				7

அங்கமல நான்முகன் அரும்பத முலாவும்
மங்கலம் நிறைந்ததிரு மால்பத முலாவும்
எங்கள் பெருமாட்டிதன் இரும்பத முலாவும்
திங்கள்முடி மேற்புனை சிவன்பத முலாவும்.				8

இப்புவியில் அண்டநிரை யெங்கணு முலாவும்
அப்புவழ லூதைவௌ¤ அண்டமு முலாவும்
ஒப்பில்புவ னங்கள்பிற வுள்ளவு முலாவுஞ்
செப்பரிய ஒர்பரசி வன்றனது மைந்தன்.				9

வேறு

இருமூவகை வதனத்தொடும் இளையோனெனத் திரியும்
ஒருமாமுக னொடுசென்றிடும் உயர்காளையி னுலவும்
பெருமாமறை யவரேயென முனிவோரெனப் பெயருந்
தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள்.				10

காலிற்செலும் பரியிற்செலும் கரியிற்செலும் கடுந்தேர்
மேலிற்செலும் தனியாளியின் மிசையிற்செலும் தகரின்
பாலிற்செலும் மானத்திடை பரிவிற்செலும் விண்ணின்
மாலிற்செலும் பொருசூரொடு மலையச்செலும் வலியோன்.			11

பாடின்படு பணியார்த்திடும் பணைமென்குழல் இசைக்கும்
கோடங்கொலி புரிவித்திடும் குரல்வீணைகள் பயிலும்
ஈடொன்றிய சிறுபல்லிய மெறியும்மெவ ரெவரும்
நாடும்படி பாடுங்களி நடனஞ்செயும் முருகன்.					12

இன்னேபல வுருவங்கொடி யாண்டுங்கும ரேசன்
நன்னேயமொ டாடுற்றுழி நனிநாடினள் வியவா
முன்னேயுல கினையீன்ளவள் முடிவின்றுறை முதல்வன்
பொன்னேர்கழ விணைதாழ்ந்தனள் போற்றிப்புகல் கின்றாள்.			13

கூடுற்றநங குமரன்சிறு குழவிப்பரு வத்தே
ஆடற்றொழி லெனக்கற்புத மாகும்மவன் போல்வார்
நேடிற்பிற ரிலைமாயையின் நினைநேர்தரு மனையான்
பீடுற்றிடு நெறிதன்னையெம் பெருமான்மொழி கென்றாள்.			14

அல்லார்குழ லவள் இன்னணம் அறியர்களின் வினவ
ஒல்லார்புர மடுகண்ணுதல் உன்றன்மகன் இயல்பை
எல்லாவுயிர் களுமுய்ந்திட எமைநீகட வினையால்
நல்லாய்இது கேண்மோவென அருளாலிவை நவில்வான்.			15

வேறு

ஈங்கனம் நமது கண்ணின் எய்திய குமரன் கங்கை
தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுத லாலே
காங்கெயன் எனப்பேர் பெற்றான் காமர்பூஞ் சரவ ணத்தின்
பாங்கரில் வருத லாலே சரவண பவன்என் றானான்.				16

தாயென ஆரல் போந்து தனங்கொள்பால் அருத்த லாலே
ஏயதோர் கார்த்தி கேயன் என்றொரு தொல்பேர் பெற்றான்
சேயவன் வடிவ மாறுந் திரட்டிநீ யொன்றாச் செய்தாய்
ஆயத னாலே கந்த னாமெனு நாமம் பெற்றான்.				17

நன்முகம் இருமூன் றுண்டால் நமக்கவை தாமே கந்தன்
தன்முக மாகியுற்ற; தாரகப் பிரம மாகி
முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்து மொன்றாய்
உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற வன்றே.				18

ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதக மன்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்.			19

மேலினி யனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக் கெல்லாம்
மூலம தாகி நின்ற மொழிப்பொருள் வினவி அன்னான்
மாலுறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே
ஞாலமன் னுயிரை யெலலா நல்கியே நண்ணும் பன்னாள்.			20

தாரகன் றன்னைச் சீயத் தடம்பெரு முகத்தி னானைச்
சூரபன் மாவை ஏனை யவுணரைத் தொலைவு செய்தே
ஆரணன் மகவான் ஏனை யமரர்கள் இடுக்கண் நீக்கிப்
பேரருள் புரிவன் நின்சேய் பின்னர்நீ காண்டி யென்றான்.			21

என்றலும் இளையோன் செய்கை எம்பெரு மாட்டி கோள
நன்றென மகிழ்ச்சி கொண்டு நணுகலும் உலக மெல்லாஞ்
சென்றரு ளாடல் செய்யுந் திருத்தகு குமரன் பின்னர்
ஒன்றொரு விளையாட் டுள்ளத் துன்னியே புரித லுற்றான்.			22

குலகிரி யனைத்து மோர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த்
தலைதடு மாற்ற மாகத் தரையிடை நிறுவும் எல்லா
அலைகடல் தனையும் ஒன்றா ஆக்குறும் ஆழி வெற்பைப்
பிலனுற அழுத்துங் கங்கைப் பெருநதி யடைக்கு மன்னோ.			23

இருள்கெழு பிலத்துள் வைகும் எண்டொகைப் பணியும் பற்றிப்
பொருள்கெழு மேரு வாதி அடுக்கலிற் பூட்டி வீக்கி
அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் றாக
உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும்.		24

ஆசையங் கரிகள் தம்மை அங்கைகொண் டொன்றோ டொன்று
பூசல்செய் விக்கும் வானிற் போந்திடுங் கங்கை நீரால்
காய்சின வடவை மாற்றுங் கவின்சிறைக் கலுழ னோடு
வாசுகி தன்னைப் பற்றி மாறிகல் விளைக்கு மன்றே.				25

பாதல நிலயத்துள்ள புயங்கரைப் படியிற் சேர்த்திப்
பூதல நேமி யெல்லாம் புகுந்திடப் பிலத்தி னுய்க்கும்
ஆதவ முதல்வன் றன்னை அவிர்மதிப் பதத்தி லோச்சுஞ்
சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்துச் செல்லும்.			26

எண்டிசை புரந்த தேவர் இருந்ததொல் பதங்க ளெல்லாம்
பண்டுள திறத்தின் நீங்கப் பறித்தனன் பிறழ வைக்குங்
கொண்டலி னிருந்த மின்னின் குழுவுடன் உருமுப பற்றி
வண்டின முறாத செந்தண் மாலைசெய் தணியு மன்றே.			27

வெய்யவர் மதிகோள் ஏனோர் விண்படர் விமானந் தேர்கள்
மொய்யுறப் பிணித்த பாசம் முழுவதுந் துருவ னென்போன்
கையுறு மவற்றில் வேண்டுங் கயிற்றினை இடைக்கண் ஈர்ந்து
வையகந் திசைமீச் செல்ல வானியில் விடுக்கு மைந்தன்.			28

வடுத்தவிர் விசும்பிற் செல்லும் வார்சிலை யிரண்டும் பற்றி 
உடுத்திரள் பலகோ ளின்ன உண்டையாக் கொண்டு வானோர்
முடித்தலை யுரந்தோள் கண்ட முகம்படக் குறியா வெய்தே
அடற்றனு விஞ்சை காட்டும் ஆறிரு தடந்தோள் அண்ணல்.			29

இத்திறம் உலகந் தன்னில் இம்பரோ டும்பர் அஞ்சிச்
சித்தமெய் தளர்த லன்றிச் சிதைவுறா வகைமை தேர்ந்து
வித்தக வெண்ணி லாடல் வியப்பொடு புரிந்தான் ஆவி
முத்தர்தம் விழியின் அன்றி முன்னுறா நிமல மூர்த்தி.				30

அயது காலை ஞாலத் தவுணர்கள் அதனை நோக்கி
ஏயிது செய்தார் யாரே யென்றுவிம் மிதராய் எங்கள்
நாயகன் வடிவந் தன்னை நனிபெரும் பவத்துட் டங்குந்
தீயவ ராத லாலே கண்டிலர் தியக்க முற்றார்.					31

சிலபகல் பின்னும் வைகுந் திறத்தியல் ஆயுள் கொண்டே
உலகினில் அவுணர் யாரும் உறைதலின் அவர்க்குத் தன்மெய்
நிலைமைகாட் டாது செவ்வேள் நிலாவலும் நேடி யன்னோர்
மலரயன் தெரியா அண்ணல் மாயமே இனைய தென்றார்.			32

ஆயதோர் குமரன் செய்கை அவனியின் மாக்கள் காணாத்
தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுண ரெல்லாம்
மாய்வது திண்ணம் போலும் மற்றதற் கேது வாக
மேயின விம்மி தங்கொல் இதுவென வெருவ லுற்றார்.			33

புவனியின் மாக்க ளின்ன புகறலுந் திசைகாப் பாளர்
தவனனே மதிய மேனோர் சண்முகன் செய்கை நாடி
அவனுரு வதனைக் காணார் அவுணர்தம் வினையு மன்றால்
எவரிது செய்தார் கொல்லென் றிரங்கினர் யாருங் கூடி.			34

தேருறு மனைய தேவர் தேவர்கோன் சிலவ ரோடு
மேருவி லிருந்தான் போலும் வேதனும் அங்கண் வைகும்
ஆருமங் கவர்பா லேகி அறைகுது மென்று தேறிச்
சூரர்கோன் றனக்கும் அஞ்சித் துயரொடு பெயர்த லுற்றார்.			35

வடவரை யும்பர் தன்னில் வானவ ரானோ ரேகி
அடைதரு கின்ற காலை ஆறுமா முகங்கொண் டுள்ள
கடவுள்செய் யாடல் நோக்கி அவனுருக் காணா னாகி
இடருறு மனத்தி னோடும் இருந்தஇந் திரனைக் கண்டார்.			36

அரிதிரு முன்ன ரெய்தி அடிதொழு தங்கண் வைகி
விரிகட லுலகின் வானின் மேஹவதொன் னிலைமை யாவுந்
திரிபுற வெவரோ செய்தார் தெரிந்திலம் அவரை ஈது
புரிகலர் அவுணர் போலும் புகுந்தஇப் புணர்ப்பென் னென்றார்.		37

வானவர் இறைவன் அன்னோர் மாற்றமங் கதனைக் கேளா
யானுமிப் பரிசு நாடி  யிருந்தனன் இறையுந் தேரேன்
ஆனதை யுணர வேண்டின் அனைவரு மேகி அம்பொன்
மேனிகொள் கமலத் தோனை வினவுதும் எழுதி ரென்றான்.			38

எழுதிரென் றுரைத்த லோடும் இந்திரன் முதலா வுள்ளோர்
விழியிடைத் தெரிய அன்னோர் மெய்த்தவம் புரிந்த நீரால்
அழிவற வுலகி லாடும் அறுமுகன் வதன மொன்றில்
குழவிய தென்ன அன்ன குன்றிடைத் தோன்றி னானால்.			39

வாட்டமொ டமரர் கொண்ட மயக்கறத் தனாது செய்கை
காட்டிய வந்தோன் மேருக் கனவரை யசைத்துக் கஞ்சத்
தோட்டிதழ் கொய்து சிந்துந் துணையென உயர்ந்த செம்பொற்
கோட்டினைப் பறித்து வீசிக் குலவினன் குழவி யேபோல்.			40

தோன்றிய குமரன் றன்னைச் சுரபதி சுரரா யுள்ளோர்
ஆன்றதோர் திசைகாப் பாளர் அனைவருந் தெரிகுற் றன்னோ
வான்தரை திரிபு செய்தோன் மற்றிவ னாகு மென்னாக்
கான்திரி அரியை நேரும் விலங்கெனக் கலங்கிச் சொல்வார்.			41

வேறு

நொய்தாங் குழவி யெனக்கொள்கிலம் நோன்மை நாடின்
வெய்தாம்  அவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்
எய்தாத மாயம் உளனால்இவன் றன்னை வெம்போர்
செய்தாடல் கொள்வம் இவணென்று தெரிந்து சூழ்ந்தார்.			42

சூழுற்ற வெல்லை இமையோர்க்கிறை தொல்லை நாளில்
காழுற்ற தந்தம் அறவேகிவெண் காட்டில் ஈசன்
கேழுற்ற தாள்அர்ச் சனைசெய்து  கிடைத்து வைகும்
வேழத்தை உன்ன அதுவந்தது மேரு வின்பால்.				43

தந்தங்கள் பெற்று வருகின்ற தனிக்க ளிற்றின்
கந்தந் தனில்போந் தடல்வச்சிரங் காமர் ஔ¢வாள்
குந்தஞ் சிலைகொண் டிகல்வெஞ்சமர்க் கோல மெய்தி
மைந்தன் றனைவா னவரோடும் வளைந்து கொண்டான்.			44

வன்னிச் சுடர்கால விசையோடு மரீஇய பாங்கிற்
பன்னற் படுகுன் றவைசூழ்தரு பான்மை யேபோல்
உன்னற் கரிய குமரேசனை உம்பர் கோனும்
இன்னற் படுவா னவரும்மிகல் செய்ய வுற்றார்.				45

தண்ணார் கமலத் துணைமாதரைத் தன்னி ரண்டு
கண்ணா வுடைய உமையாள்தரு கந்தன் வானோர்
நண்ணா ரெனச்சூழ் வதுநோக்கி நகைத்தி யாதும்
எண்ணாது முன்போல் தனதாடல் இழைத்த வேலை.				46

எட்டே யொருபான் படைதம்முள் எறிவ வெல்லாந்
தொட்டே கடவுட் படைதன்னொடுந் தூர்த்த லோடும்
மட்டேறு போதிற் கடுகின்றுழி வச்சி ரத்தை
விட்டே தெழித்தான் குமரன்மிசை வேள்வி வேந்தன்.				47

வயிரத் தனிவெம் படையெந்தைதன் மார்பு நண்ணி
அயிரிற் றுகளாய் விளிவாக அதனை நோக்கித்
துயரத் தழுங்க இமையோரிறை தொல்லை வேழஞ்
செயிருற் றியம்பி முருகேசன்முன் சென்ற தன்றே.				48

செல்லுங் கரிகண் டுமையாள்மகன் சிந்தை யாலோர்
வில்லுங் கணைகள் பலவும் விரைவோடு நல்கி
ஒல்லென் றிடநா ணொலிசெய்துயர் சாபம் வாங்கி
எல்லொன்று கோலொன் றதன்நெற்றியுள் ஏக வுய்த்தான்.			49

அக்கா லையில்வேள் செலுத்துங்கணை அண்டர் தம்மின்
மிக்கான் அயிரா வதநெற்றியுள் மேவி வல்லே
புக்காவி கொண்டு புறம்போதப் புலம்பி வீழா
மைக்கார் முகில்அச் சுறவேயது மாண்ட தன்றே.				50

தன்னோர் களிறு மடிவெய்தலுந் தான வேந்தன்
அன்னோ வெனவே இரங்கா அயல்போகி நின்று
மின்னோ டுறழ்தன் சிலைதன்னைம வெகுண்டு வாங்க
முன்னோன் மதலை பொருகோலவன் மொய்ம்பி லெய்தான்.			51

கோலொன்று விண்ணோர்க் கிறைமேல்கும ரேசன் உய்ப்ப
மாலொன்று நெஞ்சன் வருந்திப்பெரு வன்மை சிந்திக்
காலொன்று சாபத் தொழில்நீத்தனன் கையி லுற்ற
வேலொன் றதனைக் கடிதேகுகன் மீது விட்டான்.				52

குந்தப் படையோர் சிறுபுற்படு கொள்கை யேபோல்
வந்துற் றிடஅற் புதமெய்தினர் மற்றை வானோர்
கந்தக் கடவுள் சிலையிற்கணை யொன்று பூட்டித்
தந்திக் கிறைவன் தடம்பொன்முடி தள்ளி ஆர்த்தான்.				53

துவசந் தனையோர் கணைகொண்டு துணித்து மார்பிற்
கவசந் தனையோர் கணையால்துகள் கண்டு விண்ணோன்
அவசம் படஏழ் கணைதூண்டினன் ஆழி வேண்டிச்
சிவசங் கரஎன் றரிபோற்றிய செம்மல் மைந்தன்.				54

தீங்கா கியவோ ரெழுவாளியுஞ் செல்ல மார்பின்
ஆங்கார மிக்க மகவான் அயர்வாகி வீழ்ந்தான்
ஓங்கார மேலைப் பொருள்மைந்தனை உம்ப ரேனோர்
பாங்காய் வளைந்து பொருதார்படு கின்ற தோரார்.				55

இவ்வா றமரர் பொருமெல்லையில் ஈசன் மைந்தன்
கைவார் சிலையைக் குனித்தேகணை நான்கு தூண்டி
மெய்வா ரிதிகட் கிறைவன்றனை வீட்டி மற்றும் 
ஐவா ளியினால் சமன்ஆற்றல் அடக்கி னானால்.				56

ஒரம் பதனால் மதிதன்னையும் ஒன்றி ரண்டு 
கூரம் பதனாற் கதிர்தன்னையும் கோதில் மைந்தன்
ஈரம் பதனால் அனிலத்தையும் மேவு மூன்றால்
வீரம் பகர்ந்த கனலோனையும் வீட்டி நின்றான்.				57

நின்றார் எவருங் குமரேசன் நிலைமை நோக்கி
இன்றா ரையுமற் றிவனேயடு மென்று தேறி
ஒன்றான சிம்புள் விறல்கண்டரி யுட்கி யோடிச்
சென்றா லெனவே இரிந்தோடினர் சிந்தை விம்மி.				58

ஓடுஞ் சுரர்கள் திறநோக்கி உதிக்கும் வெய்யோன்
நீடுங் கதிர்கள் நிலவைத்துரக் கின்ற தேபோல்
ஆடுங் குமரன் அவரைத்துரந் தண்டர் முன்னர்
வீடுங் களத்தி னிடையேதனி மேவி நின்றான்.					59

ஒல்லா தவரிற் பொருதேசில உம்பர் வீழ
நில்லா துடைந்து சிலதேவர்கள் நீங்க நேரில்
வில்லா ளியாகித் தனிநின்ற  விசாகன் மேனாள்
எல்லா ரையும்அட் டுலவும்தனி ஈசன் ஒத்தான்.				60

வேறு

சுரர்கள் யாருந் தொலைந்திட வென்றுதான்
ஒருவ னாகி உமைமகன் மேவுழி
அருளின் நாரதன் அச்செயல் கண்டுவான்
குருவை யெய்திப் புகுந்தன கூறினான்.				61

நற்ற வம்புரி நாரதன் கூற்றினை
அற்ற மில்லுணர் அந்தணன் கேட்டெழீஇ
இற்ற தேகொல் இமையவர் வாழ்வெனாச்
சொற்று வல்லை துயருழந் தேகினான்.				62

ஆத பன்மதி அண்டர் தமக்கிறை
மாதி ரத்தவர் மால்கரி தன்னுடன்
சாதல் கொண்ட சமர்க்களந் தன்னிடைப்
போதல் மேயினன் பொன்னெனும் பேரினான்.				63

ஆவி யின்றி அவர் மறி குற்றது
தேவ ராசான் தெரிந்து படருறாத்
தாவி லேர்கெழு சண்முகன் அவ்விடை
மேவி யாடும் வியப்பினை நோக்கினான்.				64

முழுது ணர்ந்திடு மொய்சுடர்ப் பொன்னவன்
எழுதொ ணாத எழில்நலந் தாங்கியோர்
குழவி தன்னுருக் கொண்ட குமரனைத்
தொழுது நின்று துதித்திது சொல்லுவான்.				65

வேறு

கரியரி முகத்தினன் கடிய சூரனென்
றுரைபெறு தானவர் ஒறுப்ப அல்கலும்
பருவரல் உழந்துதன் பதிவிட் டிப்பெரு
வரையிடை மகபதி மறைந்து வைகினான்.				66

அன்னவன் நின்னடி அடைந்து நிற்கொடே
துன்னலர் தமதுயிர் தொலைத்துத் தொன்மைபோல்
தன்னர செய்தவுந் தலைவ னாகவும்
உன்னினன் பிறிதுவே றொன்றும் உன்னலான்.			67

பற்பகல் அருந்தவம் பயின்று வாடினன்
தற்பர சரவணத் தடத்திற் போந்தவுன்
உற்பவம் நோக்கியே உவகை பூத்தனன்
சொற்படு துயரெலாந் தொலைத்து ளானென.				68

கோடலும் மராத்தொடு குரவுஞ் செச்சையுஞ்
சூடிய குமரநின் றொழும்பு செய்திட
நேடுறும் இந்திரன் நீயித் தன்மையின்
ஆடல்செய் திடுவரை அறிகி லானரோ.				69

நாரணன் முதலினோர் நாடிக் காணொணா
ஆரண முதல்வனும் உமையும் அன்னவர்
சீரரு ளடைந்தனர் சிலரும் அல்லதை
யாருன தாடலை அறியும் நீரினார்.					70

பற்றிய தொடர்பையும் உயிரை யும்பகுத்
திற்றென வுணர்கிலம் ஏதந் தீர்கிலஞ்
சிற்றுணர் வுடையதோர் சிறியம் யாமெலாம்
உற்றுன தாடலை உணர வல்லமோ.					71

ஆதலால் வானவர்க் கரசன் ஆற்றவும்
ஓதிதான் இன்மையால் உன்றன் ஆடலைத்
தீதெனா வுன்னிவெஞ் செருவி ழைத்தனன்
நீதிசேர் தண்டமே நீபு ரிந்தனை.					72

மற்றுள  தேவரும் மலைந்து தம்முயிர்
அற்றனர் அவர்களும் அறிவி லாமையால்
பெற்றிடுங் குரவரே பிழைத்த மைந்தரைச்
செற்றிடின் எவரருள் செய்யற் பாலினோர்.				73

சின்மய மாகிய செம்மல் சிம்புளாம்
பொன்மலி சிறையுடைப் புள்ளின் நாயகன்
வன்மைகொள் விலங்கினை மாற்ற வல்லது
மின்மினி தனையடல் விசய மாகுமோ.					74

ஒறுத்திடும் அவுணர்க ளொழிய வேரொடும்
அறுத்தருள் உணர்விலா அளியர் உன்னடி
மறுத்தலில் அன்பினர் மற்றின் னோர்பிழை
பொறுத்தருள் கருணையாற் புணரி போன்றுவாய்.			75

பரமுற வணிகரைப் பரித்துப் பல்வளந்
தருகலங் கவிழ்ந்திடச் சாய்த்து மற்றவர் 
ஒருதலை விளிதல்போல் உன்னிற் பெற்றிடுந் 
திருவினர் பொருதுனைச் செருவில் துஞ்சினார்.			76

தொழுதகு நின்னடித் தொண்ட ராற்றிய
பிழையது கொள்ளலை பெரும சிந்தையுள்
அழிதரு மினையவர் அறிவு பெற்றிவண்
எழுவகை யருளென இறைஞ்சிக் கூறினான்.				77

பொன்னவன் இன்னன புகன்று வேண்டிட
முன்னவர் முன்னவன் முறுவல் செய்துவான்
மன்னவ னாதியர் மால்க ளிற்றொடும்
அந்நிலை எழும்வகை அருள்செய் தானரோ.				78

வேறு 

அந்தியின் வனப்புடைய மெய்க்குகன் எழுப்புதலும் அன்ன பொழுதே, 
இந்திரனும் மாதிர வரைப்பினரும் வானவரும் யாவரு மெழாஅச், 
சிந்தைதனில் மெய்யுணர்வு தோன்றுதலும் முன்புரி செயற்கை யுணராக், 
கந்தனொடு கொல்சமர் புரிந்ததென உன்னினர் கலங்கி யெவரும்.
								79
கலங்கினர் இரங்கினர் கலுழ்ந்தனர் புலர்ந்தனர் கவன்ற னர்உளம், 
மலங்கினர் விடந்தனை அயின்றவ ரெனும்படி மயர்ந்த னலிசேர், 
உலங்கென உலைந்தனர் ஒடுங்கினர் நடுங்கினர் உரந்த னையிழந்,
திலங்கெழில் முகம்பொலி விகந்தனர் பொருந்தமை யிகழ்ந்த னர்களே.		80

துஞ்சியெழும் அன்னவர்கள் ஏழுலகு முன்னுதவு சுந்த ரிதரும், 
மஞ்சனரு ளோடுவிளை யாடுவது காண்டலும் வணங்கி யனையான், 
செஞ்சரண் இரண்டினையு முச்சிகொடு மோயினர் சிறந்த லர்துணைக், 
கஞ்சமல ரிற்பல நிறங்கொள்அரி யின்தொகை கவைஇய தெனவே.		81

கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை யுமைதன், 
மைந்தநம பன்னிரு யுத்தநம நீபமலர் மாலை புனையுந், 
தந்தைநம ஆறுமுக வாதிநம சோதிநம தற்ப ரமதாம், 
எந்தைநம என்றுமிளை யோய்நம குமாரநம என்றுதொழுதார்.			82

பொருந்துதலை யன்புடன் எழுந்தவர்கள் இவ்வகை புகழ்ந்து மனமேல், 
அரந்தைகொடு மெய்ந்நடு  நடுங்குதலும் அன்னதை அறிந்து குமரன்,
 வருந்தலிர் வருந்தலி ரெனக்கருணை செய்திடலும் மற்ற வர்கடாம்,
 பெருந்துயரும் அச்சமு மகன்றுதொழு தேயினைய பேசி னர்களால்.		83

ஆயவமு தத்தினொடு நஞ்சளவி உண்குநரை அவ்வி டமலால், 
தூயவமு தோவுயிர் தொலைக்குமது போலுனது தொல்ல ருளினால், 
ஏயதிரு வெய்திட இருந்தனம்உன் னோடமரி யற்றி யதனால், 
நீயெமை முடித்தியலை அன்னதவ றெம்முயிரை நீக்கி யதரோ.			84

பண்டுபர மன்றனை இகழ்ந்தவன் மகத்திலிடு பாக மதியாம், 
உண்டபவம் இன்னமும் முடிந்தில அதன்றியும் உனைப்பொ ருதுநேர், 
கொண்டிகல் புரிந்தனம் அளப்பில்பவம் வந்தகும ரேச எமைநீ,
தண்ட முறை செய்தவை தொலைத்தனை உளத்துடைய தண்ண ளியினால்.		85

ஆதலின் எமக்கடிகள் செய்தஅரு ளுக்குநிக ராற்று வதுதான், 
ஏதுளது மற்றெமை உனக்டிய ராகஇவ ணீது மெனினும், 
ஆதிபரமாகிய உனக்கடியம் யாம்புதி தளிப்ப தெவனோ, 
தாதையர் பெறச்சிறுவர் தங்களை அவர்ககருள்கை தக்க பரிசோ.		86

அன்னதெனி னுந்தௌ¤வில் பேதையடி யேம்பிழை யனைத்தும் உளமேல்,
 உன்னலை பொறுத்தியென வேகுமர வேள்அவவை யுணர்ந்து நமைநீர், 
முன்னமொரு சேயென நினைந்துபொரு தீர்நமது மொய்ம்பு முயர்வும், 
இன்னுமுண ரும்படி தெரித்துமென ஓருருவம் எய்தி னனரோ.			87

எண்டிசையு மீரெழு திறத்துலகும் எண்கிரியு மேழு கடலுந், 
தேண்டிரையும் நேமிவரை யும்பிறவும் வேறுதிரி பாகி யுளசீர், 
அண்ட நிரை யானவு மனைத்துயிரும் எப்பொருளு மாகி அயனும், 
விண்டும் அரனுஞ்செறிய ஓருருவு கொண்டனன் விறற்கு மரனே.			88

மண்ணளவு பாதலமெ லாஞ்சரணம் மாதிர வரைப்பும் மிகுதோள், 
விண்ணளவெ லாமுடிகள் பேரொளியெ லாம்நயனம் மெய்ந்த டுவெலாம், 
பண்ணளவு வேதமணி வாய்உணர்வெ லாஞ்செவிகள் பக்கம் அயன்மால்,
எண்ணளவு சிந்தை யுமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈச னுயிரே.			89

ஆனதொரு பேருருவு கொண்டுகும ரேசனுற அண்டர் பதியும், 
ஏனையரும் அற்புதமி தற்புதமி தென்றுதொழு தெல்ல வருமாய், 
வானமிசை நோக்கினர்கள் மெய்வடிவம் யாவையும் வனப்பு முணரார், 
சானுவள வாஅரிது கண்டனர் புகழ்ந்தினைய சாற்றி னர்களால்.			90

வேறு

சேணலம் வந்த சோதிச் சிற்பர முதல்வ எம்முன்
மாணல முறநீ கொண்ட வான்பெருங் கோலந் தன்னைக்
காணலம் அடியேங் காணக் காட்டிடல் வேண்டு மென்ன
நீணலங் கொண்டு நின்ற நெடுந்தகை அதனைக் கேளா.			91

கருணைசெய் தொளிகள் மிக்க கண்ணவர்க் கருளிச் செவ்வேள்
அருணமார் பரிதிப் புத்தேள் அந்தகோ டிகள்சேர்ந் தென்னத்
அருணவில் வீசி நின்ற தனதுரு முற்றுங் காட்ட 
இரணிய வரைக்கண் நின்ற இந்திரன் முதலோர் கண்டார்.			92

அடிமுதன் முடியின் காறும் அறுமகன் உருவ மெல்லாங்
கடிதவ னருளால் நோக்கிக் கணிப்பிலா அண்ட முற்றும்
முடிவறு முயிர்கள் யாவும் மூவருந் தேவர் யாரும்
வடிவினில் இருப்பக் கண்டு வணங்கியே வழுத்திச் சொல்வார்.		93

அம்புவி முதலாம் பல்பே ரண்டமும் அங்கங் குள்ள
உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலுஞ்
செம்பது மத்தி னோனுஞ் சிவனொடுஞ் செறிதல் கண்டோம்
எம்பெரு மானின் மெய்யோ அகிலமும் இருப்ப தம்மா.			94

அறிகிலம் இந்நாள் காறும் அகிலமும் நீயே யாகி
ளுறைதரு தன்மை நீவந் துணர்த்தலின் உணர்ந்தா மன்றே
பிறவொரு பொருளுங் காணேம் பெருமநின் வடிவ மன்றிச்
சிறியம்யாம் உனது தோற்றந் தெரிந்திட வல்ல மோதான்.			95

முண்டகன் ஒருவன் துஞ்ச முராரிபே ருருவாய் நேமிக்
கண்டுயில் அகந்தை நீங்கக் கண்ணுதற் பகவன் எல்லா
அண்டமும் அணிப்பூ ணார மாகவே ஆங்கொர் மேனி
கொண்டன னென்னுந் தன்மை குமரநின் வடிவிற் கண்டேம்.			96

நாரணன் மலரோன் பன்னாள் நாடவுந் தெரிவின் றாகிப்
பேரழல் உருவாய் நின்ற பிரான்திரு வடிவே போலுன்
சீருரு வுற்ற தம்மா தௌ¤கிலர் அவரும் எந்தை
யாரருள் எய்தின் நம்போல் அடிமுடி தெரிந்தி டாரோ.				97

அரியொடு கமலத் தேவும் ஆடல்செய் தகிலந் தன்னோ
டொருவரை யொருவர் நுங்கி உந்தியால் முகத்தால் நல்கி
இருவரு மிகலு மெல்லை எடுத்தபே ருருநீ கொண்ட
திருவுரு விதனுக் காற்றச் சிறியன போலு மன்றே.				98

ஆகையால் எம்பி ரான்நீ அருவுரு வாகி நின்ற
வேகநா யகனே யாகும் எமதுமா தவத்தால் எங்கள்
சோகமா னவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை
நாகமே லிருந்து மாற்றால் நண்ணினை குமர னேபோல்.			99

எவ்வுரு வினுக்கும் ஆங்கோ ரிடனதா யுற்ற உன்றன்
செவ்வுரு வதனைக் கண்டு சிறந்தனம் அறம்பா வத்தின்
அவ்வுரு வத்தின் துப்பும் அகலுதும் இன்னும் யாங்கள்
வெவ்வுரு வதத்திற் செல்லேம் வீடுபே றடைது மன்றே.			100

இனையன வழுத்திக் கூறி யிலங்கெழிற் குமர மூர்த்தி
தனதுபே ருருவை நோக்கிச் சதமகன் முதலா வுள்ளோர்
தினகரன் மலர்ச்சி கண்ட சில்லுணர் வுயிர்க ளென்ன
மனமிக வெருவக் கண்கள் அலமர மயங்கிச் சொல்வார்.			101

எல்லையில் ஔ¤பெற் றன்றால் எந்தைநின் னுருவம் இன்னும்
ஒல்லுவ தன்றால் காண ஔ¤யிழந் துலைந்த கண்கள்
அல்லதும் பெருமை நோக்கி அஞ்சுதும் அடியம் உய்யத்
தொல்லையின் உருவங் கொண்டு தோன்றி யே அளித்தி யென்றார்.		102

என்றிவை புகன்று வேண்ட எம்பிரான் அருளால் வான்போய்
நிற்னபே ருருவந் தன்னை நீத்தறு முகத்தோ னாகித்
தொன்றுள வடிவத் தோடு தோன்றலுந் தொழுது போற்றிக்
குன்றிருஞ் சிறைகள் ஈர்ந்த கொற்றவன் கூற லுற்றான்.			103

தொன்னிலை தவாது வைகுஞ் சூரனே முதலா வுள்ள
ஒன்னலர் உயிரை மாற்றி உம்பரும் யானும் பாங்கர்
மன்னிநின் றேவல் செய்ய வானுயர் துறக்கம் நண்ணி
என்னர சியற்றி எந்தாய் இருத்திஎன் குறையீ தென்றான்.			104

இகமொடு பரமும் வீடும் ஏத்தினர்க குலப்பு றாமல்
அகனம ரருளால் நல்கும் அறுமுகத் தவற்குத் தன்சீர்
மகபதி யளிப்பான் சொற்ற வாசகம் சுடரொன் றங்கிப்
பகவனுக் கொருவன் நல்கப் பராவிய போலு மாதோ.				105

வானவர் கோனை நோக்கி வறிதுற நகைத்துச் செவ்வேள்
நீநமக் களித்த தொல்சீர் நினக்குநாம் அளித்தும் நீவிர்
சேனைக ளாக நாமே சேனையந் தலைவ னாகித்
தானவர் கிளையை யெல்லாம் வீட்டுதும் தளரேல் என்றான்.			106

கோடலங் கண்ணி வேய்ந்த குமரவேள் இனைய கூற
ஆடியல் கடவுள் வௌ¢ளை அடற்களிற் றண்ணல் கேளா
வீடுற அவுண ரெல்லாம் வியன்முடி திருவி னோடுஞ்
சூடின னென்னப் போற்றிச் சுரரோடு மகிழ்ச்சி கொண்டான்.			107

அறுமுகத் தேவை நோக்கி அமரர்கோன் இந்த வண்டத் 
துறைதரு வரைகள் நேமி உலகுயிர் பிறவும் நின்னால்
முறைபிறழ்ந் தனவால் இந்நாள் முன்புபோல் அவற்றை யெல்லாம்
நிறுவுதி யென்ன லோடும் நகைத்திவை நிகழத்த லுற்றான்.			108

இன்னதோ ரண்டந் தன்னில் எம்மில்வே றுற்ற வெல்லாந்
தொன்னெறி யாக என்றோர் தூமொழி குமரன் கூற
முன்னுறு பெற்றித் தான முறையிறந் திருந்த தெல்லாம்
அந்நிலை எவரும் நோக்கி அற்புத மடைந்து நின்றார்.				109

வேறு

	நிற்கு மெல்லையின் நிலத்திடை யாகிப்
பொற்கெ னத்திகழ் பொருப்பிடை மேவுஞ்
சிற்கு ணக்குரிசில் சேவடி தாழூஉச்
சொற்க நாடுள சுரேசன் உரைப்பான்.					110

ஆண்ட கைப்பகவ ஆரண மெய்ந்நூல்
பூண்ட  நின்னடிகள் பூசனை யாற்ற
வேண்டு கின்றும்வினை யேம்அது செய்ய
ஈண்டு நின்னருளை ஈகுதி யென்றான்.				111

என்ன லுங்குகன் இசைந்து நடந்தே
பொன்னி னாலுயர் பொருப்பினை நீங்கித்
தன்ன தொண்கயிலை சார்ந்திடு ஞாங்கர்
மன்னி நின்றதொரு மால்வரை புக்கான்.				112

குன்றி ருஞ்சிறை குறைத்தவன் ஏனோர்
ஒன்றி யேதொழு துவப்புள மெய்தி
என்றும் நல்லிளைய னாகிய எங்கோன்
பின்றொ டர்ந்தனர் பிறங்கலில் வந்தார்.				113

சூரல் பம்புதுறு கல்முழை கொண்ட
சாரல் வெற்பினிடை சண்முகன் மேவ
ஆரும் விண்ணவர் அவன்கழல் தன்னைச்
சீரி தர்ச்சனை செயற்கு முயன்றார்.					114

அந்த வேலையம ரர்க்கிறை தங்கண்
முந்து கம்மியனை முன்னுற அன்னான்
வந்து கைதொழலும் மந்திர மொன்று 
நந்த மாநகரின் நல்கிவ ணென்றான்.					115

அருக்கர் தந்தொகை அனைத்தையு மொன்றா
உருக்கி யாற்றியென ஒண்மணி தன்னால்
திருக்கி ளர்ந்துலவு செய்யதொர் கோயில்
பொருக்கெ னப்புனைவர் கோன்புரி குற்றான்.				116

குடங்கர் போல்மகு டங்கெழு வுற்ற
இடங்கொள் கோபுர விருக்கையின் நாப்பண்
கடங்க லுழ்ந்திடு கரிக்குரு குண்ணும்
மடங்கல் கொண்தொர் மணித்தவி சீந்தான்.				117

ஈந்த வெல்லைதனில் இந்திரன் ஏவப்
போந்து வானெறி புகுந்திடு தூநீர்
சாந்த மாமலர் தழற்புகை யாதி
ஆய்ந்து தந்தனர்கள் அண்டர்கள் பல்லோர்.				118

வேறு

அன்ன காலையில் அண்டர்கள் மேலையோன்
சென்னி யாறுடைத் தேவனை வந்தியா
உன்ன தாளருச் சித்தியா முய்ந்திட
இந்நி கேதனம் ஏகுதி நீயென்றான்.					119

கூற்ற மன்னதுட் கொண்டுவிண் ணொரெலாம்
போற்ற மந்திரம் புக்கு நனந்தலை
ஏற்ற ரித்தொகை ஏந்தெழிற் பீடமேல்
வீற்றி ருந்தனன் வேதத்தின் மேலையோன்.				120

ஆன காலை அமரர்கள் வாசவன்
ஞான நாயக நாங்கள் உனக்கொரு
தானை யாகுந் தலைவனை நீயெனா
வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினர்.					121

நொதுமல் பெற்றிடு நுண்டுகில் சூழ்ந்தனர்
முதிய சந்த முதலமட் டித்தனர்
கதிரும் நன்பொற் கலன்வகை சாத்தினர்
மதும லர்த்தொகை மாலிகை சூட்டினர்.				122

ஐவ கைப்படும்  ஆவியும்* பாளிதம்
மெய்வி ளக்கமும் வேறுள பான்மையும்
எவ்வெ வர்க்கும் இறைவற்கு நல்கியே
செவ்வி தர்ச்சனை செய்தன ரென்பவே.				123

( * ஐவகைப்படும் ஆவி - நறுமணம் கமழும் பொருட்டு, கோட்டம்,
    துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்ற ஐவகை வாசனை 
    பொருள்களைப் பொடித்து இடும் தூபம்.)

புரந்த ரன்முதற் புங்கவர் தம்முளத்
தரந்தை நீங்க அருச்சனை செய்துபின்
பரிந்து தாழ்ந்து பரவலும் ஆயிடைக்
கரந்து வள்ளல் கயிலையிற் போயினான்.				124

வெற்பின் மிக்குயர் வௌ¢ளியம் பொற்றையில் 
சிற்ப ரன்மறைந் தேகலுந் தேவரும்
பொற்பின் மேதகு பொன்னகர் அண்ணலும்
அற்பு தத்துடுன் அவ்வரை நீங்கினார்.					125

ஈசன் மைந்தன் இளையன் இமையவர்
பூசை செய்யப் பொருந்தலின் அவ்வரை
மாசில் கந்த வரையென யாவரும்
பேச ஆங்கொர் பெயரினைப் பெற்றதே.				126

ஆன கந்த வடுக்கலைத் தீர்ந்துபோய்
வான மன்னன் மனோவதி நண்ணினான்
ஏனை வானவர் யாவரும் அவ்வவர்
தான மெய்தனர் தொன்மையில் தங்கினார்.				127

உயவல் ஊர்திகொண் டொய்யென முன்னரே
கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள்
பயிலும் வீரரும் பாரிட மள்ளரும்
அயலின் மேவர ஆயிடை வைகினான்.				128

ஆகத் திருவிருத்தம் - 1179



15.	த க ரே று  ப ட ல ம்

சூரன்முத லோருயிர் தொலைக்கவரு செவ்வேள்
ஆருமகிழ் வௌ¢ளியச லத்தின் அமர் போழ்தின்
மேருவி லுடைப்பரன் விரும்பஅகி லத்தே
நாரதனொர் வேள்வியை நடாத்தியிட லுற்றான்.			1

மாமுனி வருஞ்சுரரும் மாநில வரைப்பில்
தோமறு தவத்தினுயர் தொல்லை மறையோரும்
ஏமமொடு சூழ்தர இயற்றிய மகத்தில் 
தீமிசை யெழுந்ததொரு செக்கர்புரை செச்சை.			2

அங்கிதனில் வந்ததகர் ஆற்றுமகந் தன்னில்
நங்களின மேபலவும் நாளுமடு கின்றார்
இங்கிவரை யான்அடுவன் என்றிசைவ கொண்டே
வெங்கனலை யேந்துபரி மீதெழுதல் போலும்.				3

மாருதமும் ஊழிதனில் வன்னியும் விசும்பில்
பேருமுரும் ஏறுமொரு பேருருவு கொண்டே
ஆருவது போல்விரைவும் அத்தொளியும் ஆர்ப்புஞ்
சேரவெழும் மேடம்அடு செய்கைநினைந் தன்றே.			4

கல்லென மணித்தொகை களத்தினிடை தூங்கச்
சில்லரிபெய் கிங்கிணி சிலம்படி புலம்ப
வல்லைவரு கின்றதகர் கண்டுமகத் துள்ளோர்
எல்லவரும் அச்சமொ டிரிந்தனர்கள் அன்றே.				5

இரிந்தவர்கள் யாவரையும் இப்புவியும் வானுந்
துரந்துசிலர் வீழ்ந்துதொலை வாகநனி தாக்கிப்
பரந்ததரை மால்வரை பராகமெழ ஓடித்
திரிந்துயிர் வருந்தஅடல் செய்தது செயிர்த்தே.			6

எட்டுள திசைக்கரி இரிந்தலறி யேங்கக்
கிட்டியெதிர் தாக்குமதி கேழ்கிளரும் மானத்
தட்டிரவி தேரொடு தகர்ந்துமுரி வாக
முட்டும்அவர் தம்பரியை மொய்ம்பினொடு பாயும்.			7

இனையவகை யால்தகரி யாண்டுமுல வுற்றே
சினமொடுயிர் கட்கிறுதி செய்துபெயர் காலை
முனிவர்களும் நாரதனும் மொய்ம்புமிகு வானோர்
அனைவர்களும் ஓடினர் அருங்கயிலை புக்கார்.			8

ஊறுபுக அன்னவர் உலைந்துகயி லைக்கண்
ஏறிவரு காலையில் இலக்கமுட னொன்பான்
வீறுதிறல் வீரரொடு மேவியுல வுற்றே
ஆறுமுக வண்ணல்விளை யாடலது கண்டார்.				9

ஈசனிடை நண்ணுகிலம் ஈண்டுகும ரேசன்
நேசமொடு நந்துயரம நீக்கவெதிர் வந்தான்
ஆசிறுவன் அல்லன்இவன் அண்டர்பல ரோடும்
வாசவனை வென்றுயிரை மாற்றியெழு வித்தான்.			10

எங்குறை முடித்திடல் இவற்கௌ¤து நாமிப்
புங்கவனொ டுற்றது புகன்றிடுது மென்னாத்
தங்களில் உணர்ந்துசுரர் தாபதர்கள் யாரும்
அங்கவன்முன் ஏகினர் அருந்துதிகள் செய்தே.			11

வந்துபுகழ் வானவரும் மாமுனிவர் தாமுந்
தந்திமுக வற்கிளவல் தன்னடி வணங்கக்
கந்தனவர் கொண்டதுயர் கண்டுமிக நீவிர்
நொந்தனிர் புகுந்தது நுவன்றிடுதி ரென்றான்.				12

கேட்டிஇளை யோய்மறை கிளத்தும் ஒரு வேள்வி
வேட்டனமி யாங்களது வேலையிடை தன்னில்
மாட்டுகன லூடொரு மறித்தகர் எழுந்தே
ஈட்டமுறும் எம்மையட எண்ணியதை யன்றே.				13

ஆடெழு கிளர்ச்சியை அறிந்துமகம் விட்டே
ஓடியிவ ணுற்றனம் உருத்தது துரந்தே
சாடியது சிற்சிலவர் தம்மையத னாலே
வீடியத ளப்பிலுயிர் விண்ணினொடு மண்மேல்.			14

நீலவிட மன்றிது நிறங்குலவு செக்கர்க்
கோலவிட மேயுருவு கொண்டதய மேபோல்
ஓலமிட எங்குமுல வுற்றதுயி ரெல்லாங்
காலமுடி வெய்துமொரு கன்னல்முடி முன்னம்.			15

சீற்றமொ டுயிர்க்கிறுதி செய்துலவு மேடத்
தாற்றலை அடக்கியெம தச்சமும் அகற்றி
ஏற்றகுறை வேள்வியையும் ஈறுபுரி வித்தே
போற்றுதி யெனத்தொழுது போற்றிசெயும் வேலை.			16

எஞ்சுமவர் தம்மைஇளை யோன்பரிவின் நோக்கி
அஞ்சல்விடு மின்களென அங்கைய தமைத்தே
தஞ்சமென வேபரவு தன்பரிச னத்துள்
மஞ்சுபெறு மேனிவிறல் வாகுவொடு சொல்வான்.			17

மண்டுகனல் வந்திவர் மகந்தனை அழித்தே
அண்டமொடு பாருலவி யாருயிர்க டம்மை
உண்டுதிரி செச்சைதனை ஒல்லைகுறு குற்றே
கொண்டணைதி என்றுமை குமாரனுரை செய்தான்.			18

	வேறு

	குன்றெழு கதிர்போல் மேனிக் குமரவேள் இனைய கூற
மன்றலந் தடந்தோள் வீர வாகுவாந் தனிப்பேர் பெற்றான்
நன்றென இசைந்து கந்தன் நாண்மலர்ப் பாதம் போற்றிச்
சென்றனன் கயிலை நீங்கிச் சினத்தகர் தேட லுற்றான்.		19

மண்டல நேமி சூழும் மாநில முற்று நாடிக்
கண்டில னாகிச் சென்றேழ் பிலத்தினுங் காண கில்லான்
அண்டர்தம் பதங்கள் நாடி அயன்பதம் முன்ன தாகத்
தண்டளிர்ச் செக்கர் மேனித் தகர்செலுந் தன்மை கண்டான்.		20

ஆடலந் தொழில்மேல் கொண்டே அனைவரும் இரியச் செல்லும்
மேடமஞ் சுரவே ஆர்த்து விரைந்துபோய் வீர வாகு
கோடவை பற்றி ஈர்த்துக் கொண்டுராய்க் கயிலை நண்ணி
ஏடுறு நீபத் தண்டார் இளையவன் முன்னர் உய்த்தான்.		21

உய்த்தனன் வணங்கி நிற்ப உளமகிழ்ந்த தருளித் தேவர்
மெய்த்தவர் தொகையை நோக்கி ஏழகம் மேவிற் றெம்பால்
எய்த்தினி வருந்து கில்லீர் யாருநீர் புவனி யேகி
முத்தழல் கொடுமுன் செய்த வேள்வியை முடித்தி ரென்றான்.		22

ஏர்தரு குமரப் புத்தேள் இவ்வகை இசைப்ப அன்னோர்
கார்தரு கண்டத் தெந்தை காதல வேள்வித் தீயிற்
சேர்தரு தகரின் ஏற்றைச் சிறியரேம் உய்யு மாற்றால்
ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்திடல் வேண்டு மென்றார்.		23

என்னலுந் தகரை அற்றே யானமாக் கொள்வம் பார்மேல்
முன்னிய மகத்தை நீவிர் முடித்திரென் றருள யார்க்கும்
நன்னய மாடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும்
அன்னதோர் குமர னெந்தை அடிபணிந் தருளாற் போந்தார்.		24

நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன்
புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்வி
அவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட் டமல மூர்த்தி
உவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தி யாக.		25

ஆகத் திருவிருத்தம் - 1204
  - - -


	16.  அ ய னை ச்  சி றை பு ரி  ப ட ல ம் 

மேடமூர்தி யாகவுய்த்து விண்ணுமண்ணும் முருகவேள்
ஆடல்செய் துலாவிவௌ¢ளி யசலமீதில் அமர்தரும்
நீடுநாளில் ஒருபகற்கண் நெறிகொள்வேதன் முதலினோர்
நாடியீசன் அடிவணங்க அவ்வரைக்கண் நண்ணினார்.		1

எனாதியா னெனுஞ்செருக் கிகந்துதன் னுணர்ந்துளார்
மனாதிகொண்ட செய்கை தாங்கி மரபின்முத்தி வழிதரும்
அனாதியீசன் அடிவணங்கி அருளடைந்து மற்றவன்
தனாதுமன்றம் நீங்கிவாயில் சாருகின்ற வேலையில்.			2

ஒன்பதோடி லக்கமான அனிகவீரர் உள்மகிழ்ந்
தன்பினோடு சூழ்ந்துபோற்ற அமலன் அம்பொ னாலய
முன்புநீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடாடி வைகினான் இராறுதோள் படைத்துளான்.		3

அங்கண்வைகும் முருகன்நம்பன் அடிவணங்கி வந்திடும்
புங்கவர்க்குள் ஆதியாய போதினானை நோக்குறா
இங்குநம்முன் வருதியா லெனாவிளிப்ப ஏகியே
பங்கயாச னத்தினோன் பணின்திடாது தொழுதலும்.			4

ஆதிதேவன் அருளுமைந்தன் அவனுளத்தை நோக்கியே
போதனே இருக்கெனாப் புகன்றிருத்தி வைகலும்
ஏதுநீ புரிந்திடும் இயற்கையென்ன நான்முகன்
நாதனாணை யால்அனைத்தும் நான்படைப்பன் என்றனன்.		5

வேறு

முருக வேளது கேட்டலும் முறுவல்செய் தருளித்
தரணி வானுயிர் முழுவதுந் தருதியே என்னில்
சுருதி யாவையும் போகுமோ மொழிகெனத் தொல்சீர்ப்
பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான்.			6

ஐய கேள்எனை யாதிகா லந்தனில் அளித்த
மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள்
செய்ய ஆகமம் பற்பல புரிந்ததிற் சிலயான்
உய்யு மாறருள் செய்தனன் அவையுணர்ந் துடையேன்.		7

என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீவிளம் புதியென முருகவேள் உரைப்ப
நன்றெ னாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்ற தோர்தனி மொழியைமுன் ஓதினன் நெறியால்.			8

தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாம றைத்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும்
ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான்.		9

முகத்தி லொன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன்
நகைத்து முன்னெழுத் தினுக்குரை பொருளென நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வௌ¢கினன் விக்கித்
திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே.			10

ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்.			11

தெருள தாகிய குடிலையைச் செப்புதல் அன்றிப்
பொருள றிந்திலன் என்செய்வான் கண்ணுதற் புனிதன்
அருளி னாலது முன்னரே பெற்றிலன் அதனால்
மருளு கின்றனன் யாரதன் பொருளினை வகுப்பார்.			12

தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே.				13

எட்டொ ணாதவக் குடிலையிற் பயன்இனைத் தென்றே
கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள்
குட்டி னான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க.			14

மறைபு ரிந்திடுஞ் சிவனருண் மதலைமா மலர்மேல்
உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து
நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச்
சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமாஞ் சிலம்பில்.			15

அல்லி மாமலர்ப பண்ணவன் றனையருஞ் சிறையில்
வல்லி பூட்டுவித் தியவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால்.		16

ஒருக ரந்தனில் கண்டிகை வடம்பரித் தொருதன்
கரத லந்தனில் குண்டிகை தரித்திரு கரங்கள்
வரத மோடப யந்தரப் பரம்பொருள் மகனோர்
திருமு கங்கொடு சதுர்முகன் போல்விதி செய்தான்.			17

உயிரி னுக்குயி ராகியே பரஞ்சுட ரொளியாய்
வியன்ம றைத்தொகைக் கீறதாய் விதிமுத லுரைக்குஞ்
செயலி * னுக்கெலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயனெ னப்படைக் கின்றதும் அற்புத மாமோ.			18

( * விதிமுதல் உரைக்கும் செயல் - படைத்தல், காத்தல், அழித்தல்,
     மறைத்தல், அருளுதல் என்ற ஐந்து தொழில்கள்.)

தண்ணென் அம்புயத் தவிசினோன் சிறைபுகத் தானே
எண்ணி லாவுயிர்த் தொகையளித் தறுமுகன் இருந்தான்
அண்ண லந்திசை முகனொடு வந்துசூழ் அமரர்
உண்ண டுங்கியே தொழுதுதம் பதங்களி லுற்றார்.			19

ஆகத் திருவிருத்தம் - 1223
   - - - 


17.  அ ய னை ச்  சி றை  நீ க் கு  ப ட ல ம்

ஆல மாமிடற் றண்ணல்சேய் இத்திறம் அளப்பில்
காலம் யாவையும் அளித்தனன் இருத்தலுங் கரியோன்
நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடிச்
சீல வானவர் முனிவரைச் சிந்தனை செய்தான்.			1

சீத ரத்தனிப் பண்ணவன் சிந்தனை தேறி
ஆத பத்தினர் பரிமுகர் வசுக்கள்அன் னையர்கள்
கூத மற்றிடும் விஞ்சையர் உவணரோ டியக்கர்
மாதி ரத்தவர் யாவரும் விரைந்துடன் வந்தார்.				2

மதியும் ஏனைய கோள்களுங் கணங்களும் வான்றோய்
பொதிய மேயவ னாதியாம் பொவில்மா தவரும்
விதிபு ரிந்திடு பிரமரொன் பதின்மரும் வியன்பார்
அதனை ஏந்திய சேடனும் உரகரும் அடைந்தார்.			3

இன்ன தன்மையில் அமரரும் முனிவரு மெய்த
அன்னர் தம்மொடுஞ் செங்கண்மால் கயிலையை அடைந்து
முன்னர் வைகிய நந்திகள் முறையினுய்த் திடப்போய்த்
தன்னை யேதனக் கொப்பவன் பொற்கழல் தாழ்ந்தான்.		4

பொற்றி ருப்பதம் இறைஞ்சியே மறைமுறை போற்றி
நிற்ற லுஞ்சிவ னருள்கொடே நோக்குறீஇ நீவிர்
எற்றை வைகலு மில்லதோர் தளர்வொடும் எம்பால்
உற்ற தென்கொலோ என்றலும் மாலிவை உரைப்பான்.		5

வேறு

இறைவ நின்மகன் ஈண்டுறு போதனை
மறைமு தற்பத வான்பொருள் கெட்டடலும்
அறிகி லானுற அன்னவன் றன்னைமுன்
சிறைபு ரிந்தனன் சிட்டியுஞ் செய்கின்றான்.			6

கந்த வேளெனக் கஞ்சனும் ஐயநின்
மைந்த னாம்அவன் வல்வினை யூழினால்
அந்த மிபகல் ஆழ்சிறைப் பட்டுளம்
நொந்து வாடினன் நோவுழந் தானரோ.			7

ஆக்க மற்ற அயன்றன் சிறையினை
நீக்கு கென்று நிமலனை வேண்டலுந்
தேக்கும் அன்பிற் சிலாதன்நற் செம்மலை
நோக்கி யொன்று நுவலுதல் மேயினான்.			8

குடுவைச் செங்கையி னானைக் குமரவேள்
இடுவித் தான்சிறை என்றனர் ஆண்டுநீ
கடிதிற் சென்றுநங் கட்டுரை கூறியே
விடுவித் தேயிவண் மீள்கெனச் சாற்றினான்.			9

எந்தை யன்ன திசைத்தலும் நன்றெனா
நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்துபோய்
அந்த மற்ற அடற்கணஞ் சூழ்தரக்
கந்த வெற்பிற் கடிநகர் எய்தினான்.				10

எறுழு டைத்தனி ஏற்று முகத்தினான்
அறுமு கத்தன் அமர்ந்த நிகேதனங்
குறுகி மற்றவன் கோல மலர்ப்பதம்
முறைத னிப்ணிந் தேத்தி மொழிகுவான்.			11

கடிகொள் பங்கயன் காப்பினை எம்பிரான்
விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கெனைத்
தடைப டாதவன் றன்சிறை நீக்குதி
குடிலை யன்னவன் கூறற் கௌ¤யதோ.			12

என்னு முன்னம் இளையவன் சீறியே
அன்ன வூர்தி யருஞ்சிறை நீக்கலன்
நின்னை யுஞ்சிறை வீட்டுவன் நிற்றியேல்
உன்னி யேகுதி ஒல்லையி லென்றலும்.			13

வேற தொன்றும் விளம்பிலன் அஞ்சியே
ஆறு மாமுகத் தண்ணலை வந்தியா
மாறி லாவௌ¢ளி மால்வரை சென்றனன்
ஏறு போல்முக மெய்திய நந்தியே.				14

மைதி கழ்ந்த மணிமிடற் றண்ணல்முன்
வெய்தெ னச்சென்று மேவி அவன்பதங்
கைதொ ழூஉநின்று கந்தன் மொழிந்திடுஞ்
செய்தி செப்பச் சிறுநகை யெய்தினான்.			15

கெழுத கைச்சுடர்க் கேசரிப் பீடமேல்
விழுமி துற்ற விமலன் விரைந்தெழீஇ
அழகு டைத்தன தாலயம் நீங்கியே
மழவி டைத்தனி மால்வரை ஏறினான்.				16

முன்னர் வந்த முகில்வரை வண்ணனுங்
கின்ன ரம்பயில் கேசர ராதியோர்
நன்னர் கொண்டிடு  நாகரும் நற்றவர்
என்ன ருந்தொழு தெந்தையின் ஏகினார்.			17

படைகொள் கையினர் பன்னிறக் காழக
உடையர் தீயி னுருகெழு சென்னியர்
இடிகொள் சொல்லினர் எண்ணரும் பூதர்கள்
புடையில் ஈண்டினர் போற்றுதல் மேயினார்.			18

இனைய காலை யினையவர் தம்மொடும்
வனிதை பாதியன் மால்விடை யூர்ந்துராய்ப்
புனித வௌ¢ளியம் பொற்றை தணந்துபோய்த்
தனது மைந்தன் தடவரை யெய்தினான்.			19

சாற்ற ருந்திறற் சண்முக வெம்பிரான்
வீற்றி ருந்த வியனகர் முன்னுறா
ஏற்றி னின்றும் இழிந்துவிண் ணோரெலாம்
போற்ற முக்கட் புனிதனுட் போயினான்.			20

அந்தி போலும் அவிர்சடைப் பண்ணவன்
கந்தன் முன்னர்க் கருணையொ டேகலும்
எந்தை வந்தனன் என்றெழுந் தாங்கவன்
வந்து நேர்கொண்ட டடிகள் வணங்கியே.			21

பெருத்த தன்மணிப் பீடிகை மீமிசை
இருத்தி நாதனை ஏழுல கீன்றிடும்
ஒருத்தி மைந்தன் உயிர்க்குயி ராகிய
கருத்த நீவந்த காரியம் யாதென்றான்.				22

மட்டு லாவு மலர்அய னைச்சிறை
இட்டு வைத்தனை யாமது நீக்குவான்
சுட்டி வந்தன மாற்சுரர் தம்முடன்
விட்டி டையவென் றெந்தை விளம்பினான்.			23

நாட்ட மூன்றுடை நாயகன் இவ்வகை
ஈட்டு மன்பொ டிசைத்திடும் இன்சொலைக்
கேட்ட காலையிற் கேழ்கிளர் சென்னிமேற்
சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான்.			24

உறுதி யாகிய ஓரெழுத் தின்பயன்
அறிகி லாதவன் ஆவிகள் வைகலும்
பெறுவ னென்பது பேதைமை ஆங்கவன்
மறைகள் வல்லது மற்றது போலுமால்.				25

அழகி தையநின் னாரருள் வேதமுன்
மொழிய நின்ற முதலெழுத் தோர்கிலான்
இழிவில் பூசை இயற்றலும் நல்கிய
தொழில்பு ரிந்து சுமத்தினை யோர்பரம்.			26

ஆவி முற்றும் அகிலமும் நல்கியே
மேவு கின்ற வியன்செயல் கோடலால்
தாவில் கஞ்சத் தவிசுறை நான்முகன்
ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும்.			27

நின்னை வந்தனை செய்யினும் நித்தலுந்
தன்ன கந்தை தவிர்கிலன் ஆதலால்
அன்ன வன்றன் அருஞ்சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே.				28

வேறு

மைந்தநின் செய்கை யென்னே மலரயன் சிறைவி டென்று
நந்திநம் பணியா லேகி நவின்றதுங் கொள்ளாய் நாமும்
வந்துரைத் திடினுங் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தா யென்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல்.	29

அத்தன தியல்பு நோக்கி அறுமுகத் தமலன் ஐய
சித்தமிங் கிதுவே யாகில் திசைமுகத் தொருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவ னென்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான்.		30

நன்சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்கத்
தன்சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள் நோக்கி
முன்சிறை யொன்றிற் செங்கேழ் முண்டகத் தயனை வைத்த
வன்சிறை நீக்கி நம்முன் வல்லைதந் திடுதி ரென்றான்.		31

என்றலுஞ் சார தர்க்குட் சிலவர்க ளெகி யங்கண்
ஒன்றொரு பூழை தன்னுள் ஒடுங்கின னுறையும் வேதா
வன்றளை விடுத்தல் செய்து மற்றவன் றனைக்கொண்ட டேகிக்
குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் முன்னர் உய்த்தார்.		32

உய்த்தலுங் கமலத் தண்ணல் ஒண்கரம் பற்றிச் செவ்வேள்
அத்தன்முன் விடுத்த லோடும் ஆங்கவன் பரமன் றன்னை
மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து வௌ¢கினன் நிற்ப நோக்கி
எய்த்தனை போலும் பன்னாள் இருஞ்சிறை யெய்தி யென்றான்.	33

நாதனித் தன்மை கூறி நல்லருள் புரித லோடும்
போதினன் ஐய உன்றன் புதல்வன்ஆற் றியவித் தண்டம்
ஏதமன் றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித்
தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனித மென்றான்.		34

அப்பொழு தயனை முக்கண் ஆதியம் பரமன் காணூஉ
முப்புவ னத்தின் மேவும் முழுதுயிர்த் தொகைக்கும் ஏற்ற
துப்புற வதனை நன்று தூக்கினை தொன்மை யேபோல்
இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை யிருத்தி யென்றான்.		35

அருளுரு வாகும் ஈசன் அயற்கிது புகன்ற பின்னர்
முருகவேள் முகத்தை நோக்கி முறுவல்செய் தருளை நல்கி
வருதியால் ஐய என்று மலர்க்கையுய்த் தவனைப் பற்றித்
திருமணிக் குறங்கின் மீது சிறந்துவீற் றிருப்பச் செய்தான்.		36

காமரு குமரன் சென்னி கதுமென உயிர்த்துச் செக்கர்த்
தாமரை புரையுங் கையால் தழுவியே அயனுந் தேற்றா
ஓமென உரைக்குஞ் சொல்லின் உறுபொரு ளுனக்குப் போமோ
போமெனில் அதனை யின்னே புகலென இறைவன் சொற்றான்.	37

முற்றொருங் குணரும் ஆதி முதல்வகேள் உலக மெல்லாம்
பெற்றிடும் அவட்கு நீமுன் பிறருண ராத வாற்றால் 
சொற்றதோ ரினைய மூலத் தொல்பொருள் யாருங் கேட்ப
இற்றென வியம்ப லாமோ மறையினால் இசைப்ப தல்லால்.		38

என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னாத்
தன்றிருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்
ஒன்றொரு பதத்தி னுண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா
நன்றருள் புரிந்தா னென்ப ஞானநா யகனாம் அண்ணல்.		39

அன்னதோர் ஐய மாற்றி அகமகிழ் வெய்தி அங்கண்
தன்னிளங் குமரன் றன்னைத் தலைமையோ டிருப்ப நல்கி
என்னையா ளுடைய நாதன் யாவரும் போற்றிச் செல்லத்
தொன்னிலை யமைந்து போந்து தொல்பெருங் கயிலை வந்தான்.	40

முன்புறும் அயன்மால் தேவர் முனிவரை விடுத்து முன்னோன்
தன்பெருங் கோயில் புக்கான் தாவில்சீர்க் கந்த வெற்பில்
பொன்புனை தவிசின் ஏறிப் புடைதனில் வயவர் போற்ற
இன்பொடு குமர மூர்த்தி இனிதுவீற் றிருந்தா னன்றே.		41

ஆங்குறு குமரப் புத்தேள் அருமறைக் காதி யாகி
ஓங்குமெப் பொருட்கு மேலாம் ஓரெழுத் துரையின் உண்மை
தீங்கற வணங்கிக் கேட்பச் சிறுமுனிக் குதவி மற்றும்
பாங்குறும் இறைவன் நூலும் பரிவினால் உணர்த்தி னானால்.	42

ஆகத் திருவிருத்தம் - 1265
   - - - 


18.  வி டை  பெ று  ப ட ல ம்

எல்லை அன்னதின் மாலருள் கன்னியர் இருவர்
சொல்ல ரும்பெரு வனப்பினர் சுந்தரி அமுத
வல்லி என்றிடும் பெயரினர் கந்தவேள் வரைத்தோள்
புல்லும் ஆசையால் சரவணத் தருதவம் புரிந்தார்.			1

என்னை யாளுடை மூவிரு முகத்தவன் இரண்டு
கன்னி மாருமாய் ஒன்றிநோற் றிடுவது கருத்தில்
உன்னி யேயெழீஇக் கந்தமால் வரையினை யொருவி
அன்னை தோன்றிய இமகிரிச் சாரலை யடைந்தான்.			2

பொருவில் சீருடை இமையமால் வரைக்கொரு புடையாஞ்
சரவ ணந்தனிற் போதலுந் தவம்புரி மடவார்
இருவ ரும்பெரி தஞ்சியே பணிந்துநின் றேத்த
வரம ளிப்பதென் கூறுதிர் என்றனன் வள்ளல்.				3

மங்கை மார்கொழு தெம்மைநீ வதுவையால் மருவ 
இங்கி யாந்தவம் புரிந்தனங் கருணைசெய் யென்ன
அங்கவ் வாசகங் கேட்டலும் ஆறுமா முகத்துத்
துங்க நாயகன் அவர்தமை நோக்கியே சொல்வான்.			4

முந்தும் இன்னமு தக்கொடி மூவுல கேத்தும்
இந்தி ரன்மக ளாகியே வளர்ந்தனை இருத்தி
சுந்த ரிப்பெயர் இளையவள் தொல்புவி தன்னில்
அந்தண் மாமுனி புதல்வியாய் வேடர்பால் அமர்தி.			5

நன்று நீவிர்கள் வளர்ந்திடு காலையாம் நண்ணி
மன்றல் நீமையால் உங்களை மேவுதும் மனத்தில்
ஒன்றும் எண்ணலீர் செல்லுமென் றெம்பிரான் உரைப்ப
நின்ற கன்னியர் கைதொழு தேகினர் நெறியால்.			6

ஏகு மெல்லையில் அமுதமா மென்கொடி யென்பாள்
பாக சாதனன் முன்னமோர் கு£வியாய்ப் படர்ந்து
மாக மன்னநின் னுடன்வரும் உபேந்திரன் மகள்யான்
ஆகை யால்எனைப் போற்றுதி தந்தையென் றடைந்தாள்.		7

பொன்னின் மேருவில் இருந்தவன் புல்வியை நோக்கி
என்னை யீன்றயாய் இங்ஙனம் வருகென இசைத்துத்
தன்ன தாகிய தனிப்பெருங் களிற்றினைத் தனது
முன்ன ராகவே விளித்தனன் இத்திறம் மொழிவான்.			8

இந்த மங்கைநந் திருமக ளாகுமீங் கிவளைப்
புந்தி யன்பொடு போற்றுதி இனையவள் பொருட்டால்
அந்த மில்சிறப் பெய்துமே லென்றலும் அவளைக்
கந்த மேற்கொடு நன்றெனப் போயது களிறு.				9

கொவ்வை போலிதழ்க் கன்னியை மனோவதி கொடுபோய்
அவ்வி யானையே போற்றிய தனையகா ரணத்தால் 
தெய்வ யானைஎன் றொருபெயர் எய்தியே சிறிது
நொவ்வு றாதுவீற் றிருந்தனள் குமரனை நுவன்றே.			10

பெருமை பொண்டிடு தெண்டிரைப் பாற்கடல் பெற்றுத்
திரும டந்தையை அன்புடன் வளர்த்திடும் திறம்போல்
பொருவில் சீருடைஅடல் அயிராவதம் போற்ற
வரிசை தன்னுடன் இருந்தனள் தெய்வத மடந்தை.			11

முற்று ணர்ந்திடு சுந்தரி யென்பவள் முருகன்
சொற்ற தன்மையை உளங்கொடு தொண்டைநன் னாட்டில்
உற்ற வள்ளியஞ் சிலம்பினை நோக்கியாங் குறையும்
நற்ற வச்சிவ முனிமக ளாகவே நடந்தாள்.				12

இந்த வண்ணம்இவ் விருவர்க்கும் வரந்தனை ஈந்து
கந்த மால்வரை யேகியே கருணையோ டிருந்தான்
தந்தை யில்லதோர் தலைவனைத் தாதையாய்ப் பெற்று
முந்து பற்பகல் உலகெலாம் படைத்ததோர் முதல்வன்.			13

வேறு

இத்திறஞ் சிலபக லிருந்து பன்னிரு
கைத்தல முடையவன் கயிலை மேலுறை
அத்தனொ  டன்னைதன் னடிப ணிந்திடச்
சித்தம துன்னினன் அருளின் செய்கையால்.			14

எள்ளருந் தவிசினின் றிழிந்து வீரராய்
உள்ளுறும் பரிசனர் ஒருங்கு சென்றிடக்
கொள்ளையஞ் சாரதர் குழாமும் பாற்பட
வள்ளலங் கொருவியே வல்லை யேகினான்.			15

ஏயென வௌ¢ளிவெற் பெய்தி யாங்ஙனங்
கோயிலின் அவைக்களங் குறுகிக் கந்தவேள்
தாயொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
ஆயவர் நடுவுற அருளின் வைகினான்.			16

அண்ணணங் குமரவேள் அங்கண் வைகலும்
விண்ணவர் மகபதி மேலை நாண்முதல்
உண்ணிகழ் தங்குறை யுரைந்து நான்முகன்
கண்ணனை முன்கொடு கயிலை யெய்தினார்.		17

அடைதரும் அவர்தமை அமலன் ஆலயம்
நடைமுறை போற்றிடும் நந்தி நின்மெனத்
தடைவினை புரிதலுந் தளர்ந்து பற்பகல்
நெடிதுறு துயரொடு நிற்றல் மேயினார்.				18

அளவறு பற்பகல் அங்கண் நின்றுளார்
வளனுறு சிலாதனன் மதலை முன்புதம்
உளமலி இன்னலை யுரைத்துப் போற்றலுந்
தளர்வினி விடுமின்என் றிதனைச் சாற்றினான்.		19

தங்குறை நெடும்புனற் சடில மேன்மதி
யங்குறை வைத்திடும் ஆதி முன்புபோய்
நுங்குறை புகன்றவன் நொய்தின் உய்ப்பனால்
இங்குறை வீரென இயம்பிப் போயினான்.			20

போயினன் நந்தியம் புனிதன் கண்ணுதற்
றூயனை வணங்கினன் தொழுது வாசவன்
மாயவன் நான்முகன் வானு ளோரெலாங்
கோயிலின் முதற்கடை குறுகினா ரென்றான்.			21

அருளுடை யெம்பிரான் அனையர் யாரையுந்
தருதிநம் முன்னரே சார வென்றலும்
விரைவொடு மீண்டனன் மேலை யோர்களை
வருகென அருளினன் மாசில் காட்சியான்.			22

விடைமுகன் உரைத்தசொல் வினவி யாவருங்
கடிதினி லேகியே கருணை வாரிதி
அடிமுறை வணங்கினர் அதற்குள் வாசவன்
இடருறு மனத்தினன் இனைய கூறுவான்.			23

பரிந்துல கருள்புரி பரையொ டொன்றியே
இருந்தருள் முதல்வகேள் எண்ணி லாஉகம்
அருந்திறற் சூர்முதல் அவுணர் தங்களால்
வருந்தின மொடுங்கினம் வன்மை இன்றியே.			24

அந்தமில் அழகுடை அரம்பை மாதரும்
மைந்தனும் அளப்பிலா வானு ளோர்களும்
வெந்தொழில் அவுணர்கள் வேந்தன் மேவிய
சிந்துவின் நகரிடைச் சிறைக்கண் வைகினார்.			25

இழிந்திடும் அவுணரா லியாதொர் காலமும்
ஒழிந்திட லின்றியே உறைந்த சீரொடும்
அழிந்ததென் கடிநகர் அதனை யானிவண்
மொழிந்திடல் வேண்டுமோ உணர்தி முற்றுநீ.			26

முன்னுற யான்தவம் முயன்று செய்துழித்
துன்னினை நங்கணோர் தோன்ற லெய்துவான்
அன்னவ னைக்கொடே அவுணர்ச் செற்றுநும்
இன்னலை யகற்றுதும் என்றி எந்தைநீ.			27

அப்படிக் குமரனும் அவத ரித்துளன்
இப்பகல் காறுமெம் மின்னல் தீர்த்திலை
முப்புவ னந்தொழு முதல்வ தீயரேந்
துப்புறு பவப்பயன் தொலைந்த தில்லையோ.			28

சூருடை வன்மையைத் தொலைக்கத் தக்கதோர்
பேருடை யாரிலை பின்னை யானினி
யாரொடு கூறுவன் ஆரை நோகுவன்
நீருடை முடியினோய் நினது முன்னலால்.			29

சீகர மறிகடற் சென்று நவ்விசேர்
காகம தென்னஉன் கயிலை யன்றியே
ஏகவோர் இடமிலை எமக்கு நீயலால்
சோகம தகற்றிடுந் துணைவர் இல்லையே.			30

ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாந்
தோற்றிய வெவ்விட மெனினுந் துய்க்கலாம்
மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர்
ஆற்றரி தாற்றரி தலம்இப் புன்மையே.				31

தீதினை யகற்றவுந் திருவை நல்கவுந்
தாதையர் அல்லது தனயர்க் காருளர்
ஆதலின் எமையினி அளித்தி யாலென
ஓதினன் வணங்கினன் உம்பர் வேந்தனே.			32

அப்பொழு தரியயன் ஐய வெய்யசூர்
துப்புடன் உலகுயிர்த் தொகையை வாட்டுதல்
செப்பரி தின்னினிச் சிற்துந் தாழ்க்கலை
இப்பொழு தருள்கென இயம்பி வேண்டினார்.			33

இகபரம் உதவுவோன் இவற்றைக் கேட்டலும்
மிகவருள் எய்தியே விடுமின் நீர்இனி
அகமெலி வுறலென அருளி ஆங்கமர்
குகன்முகன் நோக்கியே இனைய கூறுவான்.			34

வேறு
	
பாரினை யலைத்துப் பல்லுயிர் தமக்கும் பருவரல் செய்துவிண் ணவர்தம், 
ஊரினை முருக்கித் தீமையே இயற்றி யுலப்புறா வன்மை கொண் டுற்ற, 
சூரனை யவுணர் குழுவொடுந் தடிந்து சுருதியின் நெறி நிறீஇ மகவான், 
பேரர சளித்துச் சுரர்துயர் அகற்றிப் பெயர்தியென் றனன்எந்தை பெருமான்.	  35

அருத்திகொள் குமரன் இனையசொல் வினவி அப்பணி புரிகுவ னென்னப், 
புரத்தினை யட்ட கண்ணுதல் பின்னர்ப் பொள்ளென உள்ளமேற் பதினோர், 
உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட இவன்கையிற் படையாய், 
இருத்திரென் றவரைப் பலபடை யாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில்.	36

பொன்றிகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமுந் தொன்னாள்,
நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங் கொடிவாள், 
வன்றிறற் குலிசம் பகழியங் குசமும் மணிமலர்ப் பங்கயந் தண்டம், 
வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில்.	37

ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ, 
தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம்,
மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும், 
நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான்.	38

அன்னதற் பின்னர் எம்பிரான் றன்பா லாகிநின் றேவின புரிந்து, 
மன்னிய இலக்கத் தொன்பது வகைத்தா மைந்தரை நோக்கியே எவர்க்கும், 
முன்னவ னாம்இக் குமரனோ டேகி முடிக்குதிர் அவுணரை யென்னாத், 
துன்னுபல் படையும் உதவியே சேய்க்குத் துணைப் படை யாகவே கொடுத்தான். 39

நாயகன் அதற்பின் அண்டவா பரணன் நந்தியுக் கிரனொடு சண்டன், 
காயெரி விழியன் சிங்கனே முதலாங் கணப்பெருந் தலைவரை நோக்கி, 
ஆயிர விரட்டி பூதவௌ¢ ளத்தோ டறுமுகன் சேலையாய்ச் சென்மின், 
நீயிரென் றருளி அவர்தமைக் குகற்கு நெடும்படைத் தலைவரா அளித்தான்.	    40

ஐம்பெரும் பூத வன்மையும் அங்கண் அமர்தரும் பொருள்களின் வலியுஞ், 
செம்பது மத்தோ னாதியாம் அமரர் திண்மையுங் கொண்டதோர் செழுந்தேர், 
வெம்பரி இலக்கம் பூண்டது மனத்தின் விரைந்து முன் செல்வதொன் றதனை, 
எம்பெரு முதல்வன் சிந்தையா லுதவி யேறுவான் மைந்தனுக் களித்தான்.	    41

இவ்வகை யெல்லாம் வரைவுடன் உதவி யேகுதி நீயெனக் குமரன், 
மைவிழி உமையோ டிறைவனைத் தொழுது வலங்கொடே மும்முறை வணங்கிச், 
செவ்விதின் எழுந்து புகழ்ந்தனன் நிற்பத் திருவுளத் துவகையால் தழுவிக், 
கைவரு கவானுய்த் துச்சிமேல் உயிர்த்துக் கருணைசெய் தமலைகைக் கொடுத்தான்.	42

கொடுத்தலும் வயின்வைத் தருளினாற் புல்லிக் குமரவேள் சென்னிமோந் துன்பால்,
அடுத்திடும் இலக்கத் தொன்பது வகையோர் அனிகமாய்ச் சூழ்ந்திடப் போந்து, 
கடக்கரும் ஆற்றல் அவுணர்தங் கிளையைக் காதியிக் கடவுளர் குறையை, 
முடித்தனை வருதி என்றருள் புரிந்தாள் மூவிரு சமயத்தின் முதல்வி.		43

அம்மையித் திறத்தால் அருள்புரிந் திடலும் அறுமுகன் தொழுதெழீஇ யனையோர்,
தம்விடை கொண்டு படர்ந்தனன் தானைத் தலைவராம் இலக்கமே லொன்பான், 
மெயம்மைகொள் வீரர்யாவருங் கணங்கள் வியன்பெருந் தலைவரும் இருவர், 
செம்மல ரடிகள் மும்முறை இறைஞ்சிச் சேரவே விடைகொடு சென்றார்.		44

நின்றிடும் அயன்மால் மகபதி எந்தாய் நீயெமை அளித்தனை நெஞ்சத், 
தொறாரு குறையும் இல்லையால் இந்நாள் உய்ந்தனம் உய்ந்தன மென்று,
பொன்றிகழ் மேனி உமையுடன் இறைவன் பொன்னடி பணிந்தெழ நுமக்கு, 
நன்றிசெய் குமரன் தன்னுடன் நீரும் நடமெனா விடையது புரிந்தான்.		45

ஆகத் திருவிருத்தம் - 1310
    - - - 


19.  ப டை  யெ ழு  ப ட ல ம்	

கண்ணுதல் விடைபெற் றரியயன் மகவான் கடவுளர் தம்மொடு கடிதின், 
அண்ணலங் குமரன் தன்னொடு சென்றே அயல்வரும் மருத்தினை நோக்கித், 
தண்ணளி புரியும் அறுமுகத் தெந்தை தனிபருந் தேர்மிசை நீபோய்ப்,
பண்ணொடு முட்கோல் மத்திகை பரித்துப் பாகனாய்த் தூண்டெனப் பணித்தான்.	1

மன்புரி திருமால் இனையன பணிப்ப மாருதன் இசைந்துவான் செல்லும், 
பொன்பொலி தேரின் மீமிசைப் பாய்ந்து பொருக்கென மருத்துவர் நாற்பான், 
ஒன்பது திறத்தார் புடைவரத் தூண்டி உவகையோ டறுமுகத் தொருவன், 
முன்புற வுய்த்துத் தொழுது மற்றிதன்மேல் முருகநீ வருகென மொழிந்தான்.		2

மாருதன் இனைய புகன்றுகை தொழலும் மற்றவன் செயற் கையை நோக்கிப், 
பேரருள் புரிந்து கதிரிளம் பரிதி பிறங்குசீர் உதயமால் வரைமேல், 
சேருவ தென்னக் குமரவேள் அனைய செழுமணி இரதமேற் செல்லச், 
சூரினி இறந்தான் என்றுவா சவனுஞ் சுரர்களும் ஆர்த்தனர் துள்ளி.		3

வேறு

ஓங்கு தேர்மிசைக் குமரவேள் மேவலும் உவப்பால்
ஆங்க வன்றன தருள்பெறுந் திறலினோர் அணுகிப்
பாங்கர் நண்ணினர் முனிவருந் தேவர்கள் பலரும்
நீங்க லின்றியே அவர்புடை சூழ்ந்தனர் நெறியால்.			4

இனந்த னோடவர் முருகனை அடைதலும் இருநீர்
புனைந்த சென்னியன் கயிலையில் இருந்தவெம் பூதர்
அனந்த வௌ¢ளத்தில் இராயிர மாகும்வௌ¢ ளத்தர் 
வனைந்த வார்கழற் றலைவர்தம் முரைகொடு வந்தார்.		5

எழுவி யன்கரை நேமிவெஞ் சூலம்வாள் எறிவேல்
மழுமு தற்படை யாவையும் ஏந்திய வலியோர்
நிழன்ம திப்பிறை ஞெலிந்தென* நிலாவுமிழ் எயிற்றர்
அழலு குத்திடும்** விழியினர் அசனியின் அறைவார்.			6

( * ஞெலிந்தன.  ** அழலுருத்திடும்.)

நெடியர் சிந்தினர் குறியினர் ஐம்பெரு நிறனும்
வடிவில் வீற்றுவீற் றெய்தினர் வார்சடைக் கற்றை
முடியர் குஞ்சியர் பலவத னத்தரோர் முகத்தர்
கொடிய ரென்னினும் அடைந்தவர்க் கருள்புரி குணத்தோர்.		7

நீறு கண்டிகை புனைதரும் யாக்கையர் நெடுநஞ்
சேறு கண்டனை அன்றிமற் றெவரையும் எண்ணார்
மாறு கொண்டவர் உயிர்ப்பலி நு குவோர் மறலி
வீறு கொண்டதொல் படைதனைப் படுத்திடு மேலோர்.		8

அண்டம் யாவையும் ஆண்டுறை உயிர்த்தொகை யனைத்தும்
உண்டு மிழ்ந்திட வல்லவர் அன்றியும் உதரச்
சண்ட அங்கியா லடுபவர் அட்டவை தம்மைப்
பண்டு போற்சிவன் அருளினால் வல்லையிற் படைப்போர்.		9

முன்னை வைகலின் இறந்திடும் இந்திரன் முதலோர்
சென்னி மாலைகந் தரத்தினில் உரத்தினில் சிரத்தில்
கன்ன மீதினில் கரத்தினில் மருங்கினில் கழலில்
பொன்னின் மாமணிக் கலனொடும் விரவினர் புனைவார்.		10

இந்த வண்ணமாஞ் சாரதப் படையினர் ஈண்டித்
தந்தம் வெஞ்சமர்த் தலைவர்க ளோடுசண் முகன்பால்
வந்து கைதொழு தேத்தியே இறுதி சேர்வைகல் 
அந்த மில்புனல் அண்டம துடைந்தென ஆர்த்தார்.			11

ஆர்த்த சாரதர் எந்தைபா லாயினர் அதுகால் 
பேர்த்தும் ஆயவர் இடித்தெனப் பூதரில் பெரியோர்
வார்த்த யங்கிய தண்ணுமை திமிலைவான் படகஞ்
சீர்த்த காகள முதலிய இயம்பினர் சிலரே.				12

ஆன காலையில் அதுதெரிந் தறுமுகத் தொருவன்
வான ளாவிய புணரிகள் சூழ்ந்திட வயங்கும்
பானு நாயகன் வந்தெனப் பரந்துபா ரிடத்துச்
சேனை சூழ்தரக் கயிலைநீத் தவனிமேற் சென்றான்.			13

கொள்ளை* வெஞ்சினச் சாரதர் இராயிரங் குணித்த
வௌ¢ளம் வந்திடக் கந்தவேள் அவனிமேல் மேவக்
கள்ள வான்படை அவுணர்கள் கலந்துசூழ்ந் தென்னப்
பொள்ளெ னத்துகள் எழுந்தது வளைந்தது புவியை.			14

( * கொள்ளை - மிகுதி.)

எழுத ருந்துகள் மாதிர வரைப்பெலாம் ஏகி
ஒழியும் வான்பதஞ் சென்றதால் ஆங்கவை யுறுதல்
குழுவின் மல்கிய சாரதர் ஆர்ப்புமுன் குறுகி
மொழிதல் போன்றன விண்ணுளோர் இமைப்பில்கண் மூட.		15

கழிய டைத்திடு நேமிகள் பலவொடு ககன
வழிய டைத்திடு பூமியும் ஒலியும்மன் னுயிர்கள்
விழிய டைத்தன நாசியை யடைத்தன விளம்பு
மொழிய டைத்தன அடைத்தன கேள்வியின் மூலம்**.			16

( ** கேள்வியின் மூலம் - கேட்டற்கேதுவாயுள்ள செவி.)

பேரி டங்களாந் தனுவுடைப் பூதர்கள் பெயரப்
பாரி டங்கள்தாம் இடம்பெறா ஆதலிற் பல்லோர்
காரி டங்கொளும் வான்வழிச் சென்றனர் கண்டோர்
ஓரி டங்களும் வௌ¢ளிடை இலதென வுரைப்ப.			17

அவனி வானெலாம் பூழியால் மறைத்தலும் அதனைச்
சி¢வன்ம கன்றன தொளியினால் அகற்றினன் செல்வான்
கவன வாம்பரி இரதமேற் பனிபடுங் காலைத்
தவன நாயகன் *** அதுதடிந் தேகுதன் மையைப் போல்.		18

( *** தவனநாயகன் - சூரியன்.)

ஆகத் திருவிருத்தம் - 1328
  - - -

 

முந்தையது : உற்பத்திக் காண்டம் - பகுதி - 2


 

அடுத்தது : உற்பத்திக் காண்டம் - பகுதி - 4


 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்