logo

|

Home >

to-practise >

kandha-puranam-of-kachchiyappa-sivachariyar-jayanthan-kanavukaan-padalam

கந்தபுராணம் - மகேந்திர காண்டம் - சயந்தன்  கனவு காண்  படலம்

Kandhapuranam of Kachchiyappa Chivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

மகேந்திர காண்டம் - சயந்தன்  கனவு காண்  படலம்


 

செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

3. மகேந்திர காண்டம்

 

 

10.  சயந்தன்  கனவுகாண்  படலம்

 

விண்ணு ளார்களுஞ் சயந்தனும் வியன்மகேந் திரத்தின்

உண்ணி லாம்பெருந் துயருடன் மாழ்கிய துணர்ந்தான்

எண்ணி லாவுயிர் தோறுமுற் றின்னருள் புரியும்

அண்ண லார்கும ரேசனாம் அறுமுகத் தமலன்.                   1

 

வெஞ்சி றைத்தலை மூழ்கியே அவுணரால் மெலிந்து

நெஞ்ச ழிந்திடும் அவர்தமை அருள்வது நினைந்தான்

தஞ்ச மின்றியே தனித்தயர் சிறுவரைத் தழுவி

அஞ்ச லென்றுபோற் றிடவரும் ஈன்றயாய் அனையான்.           2

 

இனிய சீறடிக் குமரனிற் செந்திவந் திமையோர்

வினைகொள் கம்பலை அகற்றுவான் இருந்திடும் விமலன்

தனது ணர்ச்சியின் றாகியே அவசமாஞ் சயந்தன்

கனவின் முன்னுற வந்தனன் அருள்புரி கருத்தால்.                3

 

வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம்

மாறி லாதவேல் அபயமே வலமிடம் வரதம்

ஏறு பங்கயம் மணிமழுத் தண்டுவில் இசைந்த 

ஆறி ரண்டுகை அறுமகங் கொண்டுவேள் அடைந்தான்.            4

 

தந்தை யில்லதோர் பரமனைத் தாதையா வுடைய

கந்தன் ஏகியே யுனையதன் னுருவினைக் காட்ட

இந்தி ரன்மகன் உளப்படும் யாக்கையுள் இருந்த

முந்து கண்களாற் கண்டனன் தொழுதனன் மொழிவான்.           5

 

தொண்ட னேன்படும் இடுக்கணை நாடியே தொலைப்பான்

கொண்ட பேரருள் நீர்மையிற் போந்தனை குறிக்கின்

விண்டும் அல்லைஅப் பிரமனும் அல்லைமே லாகும்

அண்டர் நாதனும் அல்லைநீ ஏவர்மற் றருளே.                           6

 

என்ற காலையில் அறுமுகப் பண்ணவன் யாம்அக்

கொன்றை வேணியின் மிலைச்சிய பரஞ்சுடர் குமரன்

உன்றன் அல்லலும் இரக்கமும் மையலும் உணர்ந்து

சென்ற னம்மெனக் கூறியே பின்னருஞ் செப்பும்.                  7

 

நுந்தை தன்குறை நுங்குறை யாவையும் நுவன்று

வந்து நந்தமை வேண்டலும் வரம்பில்சே னையொடும்

இந்த ஞாலத்தின் எய்தியே கிரவுஞ்சம் என்னும்

அந்த வெற்பையுந் தாரகன் தன்னையும் அட்டாம்.                8

 

அனைய வன்றனை அட்டபின் செந்திவந் தமர்ந்தாம்

வனச மீமிசை இருந்திடு பிரமனும் மாலும்

உனது தாதையும் அமரரும் நம்வயின் உறைந்தார்

இனையல் வாழிகேள் நுங்கையும் மேருவின் இருந்தாள்.          9

 

வீர வாகுவாந் தூதனை யாமிவண் வித்தேஞ்

சூரன் மைந்தன்அங் கொருவனைப் பலரொடுந் தொலையா

நேரி லாதஇக் கடிநகர் அழித்து நீறாக்கிப்

பாரின் மாலையில் மீண்டிடப் புரிதுமிப் பகலின்.                  10

 

செல்லும் இப்பகல் கழிந்தபின் நாளையே செந்தி

மல்ல லம்பதி நீங்கிஇந் தங்கையல் வைகிச்

சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர்தந் தொகையும்

அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும்.                            11

 

அட்ட பின்னரே நின்னைவா னவருடன் அவுணன்

இட்ட வெஞ்சிறை நீக்கிநுந் திருவெலாம் ஈதும்

விட்டி டிங்குன தாகுலம் என்றனன் வினைதீர்ந்

துட்டே ளிந்தவர் போதத்தின் உணர்வுமாய் உறைவோன்.          12

 

ஐயன் ஈங்கிவை உரைத்தவை கேட்டலும் அகத்துள்

மையல் மாசிருள் அகன்றன புகுந்தன மகிழ்ச்சி 

மெய்யு ரோமங்கள் சிலிர்த்தன உகுத்தன விரிநீர்

சைய மேயென நிமிர்ந்தன சயந்தன தடந்தோள்.                  13

 

பற்றி னால்வரும் அமிர்தினை எளிதுறப் படைத்துத்

துற்று ளோரெனத் தண்ணெனத் தனதுமெய் சுருதி

கற்ற கற்றன பாடினான் ஆடினான் களித்தான்

மற்ற வன்பெறும் உவகையின் பெருமையார் வகுப்பார்.           14

 

வேறு

 

நிகழ்ந்திடு மறவியை நீங்கி இவ்வகை

மகிழ்ந்திடும் இந்திரன் மதலை எம்பிரான்

திகழ்ந்திடு பதமலர் சென்றி றைஞ்சியே

புகழ்ந்தனன் இனையன புகல்வ தாயினான்.                      15

 

நொய்யசீர் அடியரேம் நோவு மாற்றியே

ஐயநீ வலிதுவந் தளித்தி யானுரை

செய்வதும் உண்டுகொல் சிறிது நின்கணே

கையடை புகுந்தனங் காத்தி யாலென்றான்.                       16

 

சயந்தன்மற் றிவ்வகை சாற்ற யாரினும்

உயர்ந்திடு பரஞ்சுடர் ஒருவன் கேட்குறா

அயர்ந்தநுங் குறையற அளித்துந் திண்ணமென்

றியைந்திட மேலுமொன் றிசைத்தல் மேயினான்.          17

 

இந்நகர் குறுகயாம் ஏய தூதுவன்

நின்னையுஞ் சுரரையும நேர்ந்து கண்ணுறீஇ

நன்னயங் கூறியே நடப்ப உய்க்குதும்

அன்னதுங் காண்கென அருளிப் போயினான்.              18

 

படைப்புறா தயர்ந்திடு பங்க யன்கனா

அடுத்துனக் கருள்செய ஆறொ டைவரை

விடுத்துமென் றேகிய விமலன் போலவே

இடர்ப்படு சயந்தன்முன் இவைசொற் றேகினான்.          19

 

ஏகிய காலையின் இறந்து முன்னரே

போகிய புலமெலாம் பொறியில் தோன்றலும்

ஆகிய கனவினை அகன்று பைப்பய

நாகர்கோன் திருமகன் நனவின் நண்ணினான்.            20

 

வேறு

 

தந்தி நஞ்சந் தலைக்கொளச் சாய்ந்தவர்

மந்தி ரத்தவர் வாய்மைவந் துற்றுழிச்

சிந்தை மையலைத் தீர்ந்தெழு மாறுபோல் *

இந்தி ரன்தன் மதலை எழுந்தனன்.                              21

 

( * மந்திரத்தவர்ஸஸஸதீர்ந்தெழுமாறுபோல் - மந்திரம்

  அறிந்தவர்களது சத்தியம் பொருந்திய உடனே விஷ

  மயக்கம் நீங்கி எழுந்தன்மை போல வந்துற்றுழி - கேட்டவுடனே

  எனினுமாம்.)

 

நனவு தன்னிடை நண்ணிய சீர்மகன்

கனவின் எல்லையிற் கண்டன யாவையும்

நினைவு தோன்றினன் நெஞ்சங் குளிர்ந்துநம்

வினையெ லாமிவண் வீடிய வோவென்றான்.                    22

 

கவலை தூங்கிக் கடுந்துயர் நீரதாய்

அவல மாகிய ஆழியில் ஆழ்ந்துளான்

சிவகு மாரன் திருவருள் உன்னியே

உவகை யென்னும் ஒலிகடல் மூழ்கினான்.                       23

 

அனைய காலை அயர்ந்திடு வானுளோர்

கனவு தோறுங் கடிதுசென் றிந்திரன்

தனய னுக்குமுன் சாற்றிய வாறுசொற்

றினைய ரென ஏகினன் எம்பிரான்.                              24

 

அம்மென் கொன்றை அணிமுடிக் கொண்டவன்

செம்ம லேகலுந் தேவர்க னாவொரீஇ

விம்மி தத்தின் விழித்தெழுந் தேயிரீஇ

தம்மி லோர்ந்து தவமகிழ் வெய்தினார்.                  25

 

சில்லை வெம்மொழித் தீயவர் கேட்பரேல்

அல்லல் செய்வரென் றஞ்சிக் கனாத்திறம்

மல்லன் மைந்தன் மருங்குறு வார்சிலர்

மெல்ல அங்கவன் கேட்க விளம்பினார்.                  26

 

வேறு

 

அண்டர்கள் மொழிதரும் அற்பு தத்தையுட்

கொண்டனன் அங்கவை குமரன் றான்முனங்

கண்டது போன்றிடக் களித்துப் பாரெலாம்

உண்டவ னாமென உடலம் விம்மினான்.                 27

 

அறுமுக முடையதோர் ஆதி நாயகன்

இறைதரும் உலகெலாம் நீங்கல் இன்றியே

உறைவதுங் கருணைசெய் திறனும் உன்னியே

மறைமுறை அவனடி வழுத்தி வைகினான்.                      28

 

ஆகத் திருவிருத்தம் - 445

     - - -

 

 

11.  வீ ர வா கு  ச ய ந் த னை  தே ற் று  ப ட ல ம்

 

இத்திறம் அமரரொ டிந்தி ரன்மகன்

அத்தலை இருத்தலும் அனையர் யாவரும்

மொய்த்திடு சிறையக முன்கண் டானரோ

வித்தக அறிவனாம் வீர வாகுவே.                              1

 

வேறு

 

மாகண்டம் ஒன்பான் புகழுந் திறல்வாகு அங்கண்

ஆகண்டலன் மைந்தனை விண்ணவ ராயி னாரைக்

காய்கண்ட கராமவு ணத்தொகை காத்தல் கண்டான்

பேய்கண்ட செல்வந் தனைக்காத் திடும்பெற்றி யேபோல்.          2

 

கண்ணோட லின்றித் துயர்வேலியிற் காவல் கொண்ட

எண்ணோர் எனைக்கண் டிலராயுணர் வின்றி மாழ்க

விண்ணோர்கள் காணத் தமியேன் செலவேண்டு மென்றான்

மண்ணோர் அடியால் அளக்குந்தனி மாயன் ஒப்பான்.                     3

 

ஓங்கார மூலப் பொருளாய் உயிர்தோறு மென்றும்

நீங்கா தமருங் குமரேசனை நெஞசில் உன்னி

யாங்காகுவ தோரவன் மந்திரம் அன்பி னோதித்

தீங்கா மவுணர் செறிகாப்பகஞ் சென்று புக்கான்.                   4

 

தாமந்தரும் மொய்ம்புடை வீரன் சயந்தன் விண்ணோர்

ஏமந்தரு வன்சிறைச் சூழலுள் ஏக லோடுந்

தூமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீங்கி

மாமந் திரமாம் வலைப்பட்டு மயங்கல் உற்றார்.                          5

 

எண்டா னவரிற் புடைகாப்பவர் யாரும் மையல்

கொண்டார் குயிற்றப் படுமோவியக் கொள்கை மேவத்

தண்டார் அயில்வேற் படைநாயகன் தானை வேந்தைக்

கண்டார் சயந்த னொடுதேவர் கருத லுற்றார்.                            6

 

ஏமாந் தவுணர் சிறுகாலையின் இன்னல் செய்ய

நாமாண் டனர்போல் அவசத்தின் அணுகு மெல்லை

மாமாண் படைய அருள்செய்தநம் வள்ளல் தூதன்

ஆமாம் இவனென் றகங்கொண்டனர் ஆர்வ முற்றார்.                     7

 

அன்னா அமருங் களஞ்சென் றயிலேந்து நம்பி

நன்னா யகமாந் திருநாமம் நவின்று போற்றிப்

பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன்

முன்னா அணுகி இருந்தான்அடல் மொய்ம்பின் மேலோன்.         8

 

செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம்

எறிகின்ற வேலை அமுதிற்செவி ஏக லோடும்

மறிகின்ற துன்பிற் சயந்தன் மகிழ்வெய்தி முன்னர்

அறிகின்றி  லன்போல் தொழுதின்ன அறைத லுற்றான்.            9

 

தாவம் பிணித்த தெனுங்குஞ்சித் தகுவ ரானோர்

பாவந் தலைச்சூழ் வதுபோலெமைப் பாடு காப்ப

மாவெம் படரில் இருந்தேங்கண் மருங்கின் ஐய

நீவந்த தென்னை இனிதிங்கு நிகழ்த்து கென்றான்.                 10

 

வேறு

 

முறையுணர் கேள்வி வீரன் மொழிகுவான் முதல்வன் தந்த

அறுமுக ஐயன் தன்பின் அடுத்துளேன் அவன்தூ தானேன்

விறல்கெழு நந்தி பாலேன் வீரவர கென்போ¢ நுங்கள்

சிறைவிடும் பொருட் சூர்முன் செப்புவான் வந்தேன் என்றான்.      11

 

என்னலும் அமர ரோடும் இந்திரன் குமரன் கேளாச்

சென்னியின் அமிர்துள் ளூறல் செய்தவத் தயின்ற மேலோர்

அன்னதற் பின்னர் நேமி அமிர்தமும் பெற்றுண் டாங்கு

முன்னுறு மகிழ்ச்சி மேலும் முடிவிலா மகிழ்ச்சி வைத்தான்.              12

 

அந்தர முதல்வன் மைந்தன் அறைகுவான் ஐய துன்பூர்

புந்தியேங் குறைவி னாதற் பொருட்டினாற் போந்தாய் அற்றால்

இந்தவன் சிறையும் நீங்கிற் றிடரெலாம் அகன்றி யாங்கள்

உய்ந்தனம் பவங்கள் தீரும் ஊதியம் படைத்து மென்றான்.         13

 

பூண்டகு தடந்தோள் வீரன் புகலுவான் சூர்மேல் ஒற்றா

ஈண்டனை விடுத்த வேற்கை எம்பிரான் வலிதே நும்மை

ஆண்டிடு கின்றான் முன்னர் ஆக்கமும் பெறுதின் பின்னும்

வேண்டிய தெய்து கின்றீர் என்றனன் மேலுஞ் சொல்வான்.         14

 

உலமெலாங் கடந்த தொளீர் உன்னுதிர் உன்னி யாங்கு

நலமெலாம் வழிபட் டோர்க்கு நல்கிய குமரன் தன்னால்

தலமெலாம் படைத்த தொல்லைச் சதுர்முகன் முதலாம் வானோர்

குலமெலாம் உய்ந்த தென்றால் உமக்கொரு குறையுண் டாமோ.   15

 

தேவர்கள் தேவன் வேண்டச் சிறைவிடுத் தயனைக் காத்த

மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் செய்தா னும்பால்

பாவமும் பழியுந் தீங்கும் பையுளும் பிறவு மெல்லாம்

போவது பொருளோ தோற்றப் புணரியும் பிழைத்தீர் அன்றே.              16

 

சீர்செய்த கமலத் தோனைச் சிறைசெய்து விசும்பி னோடும்

பார்செய்த வுயிர்கள் செய்த பரஞ்சுடர் நும்மை யெல்லாஞ்

சூர்செய்த சிறையிந் நீக்கத் தொடர்ந்திவண் உற்றான் என்றால்

நீர்செய்த தவத்தை யாரே செய்தனர் நெடிது காலம்.                      17

 

சங்கையில் பவங்கள் ஆற்றுந் தானவர் செறிந்த மூதூர்

இங்கிதின் அறிஞர் செல்லார் எம்பிரான் அருளி னால்யான்

அங்கணம் படர்வோர் என்ன அகமெலிந் துற்றேன் ஈண்டே

உங்களை யெதிர்த லாலே உலப்பிலா உவகை பூத்தேன்.           18

 

என்றலும் மகிழ்ச்சி எய்தி இந்திரன் மதலை யாங்கள்

வன்றளைப் படுமுன் போனார் மற்றெமைப் பயந்தோர் அன்னோர்

அன்றுதொட் டின்று காறும் ஆற்றிய செயலும் அற்றால்

ஒன்றிய பயனும் யாவும் உரைமதி பெரியோ யென்றான்.          19

 

வீரனங் கதனைக் கேளா விண்ணவர் கோமான் தொன்னாள்

ஆரணங் குடனே காழி யடைந்ததே  எழுவா யாகச்

சீரலை வாயில் அந்நாட் சென்றிடு காறு முள்ள

காரிய நிகழ்ச்சி யெல்லாங் கடிதினிற் கழறி னானே.                      20

 

மேதகு தடந்தோள் வீரன் விண்ணவர் கோமான் செய்கை

ஓதலுஞ் சயந்தன் கேளா உரைசெய்வான் அன்னை தன்னைத்

தாதையை யடிகள் தன்னைச் சண்முகத் தனிவேற் செங்கை

ஆதியை யெதிர்ந்தால் ஒத்தேன் ஐயநின் மொழிகேட் டென்றான்.   21

 

இறைதரும் அமரர் தம்மோ டிந்திரன் புதல்வன் றன்னை

அறிவரில் அறிவன் கண்ணுற் றறுமுகம் படைத்த அண்ணல்

மறையிடை வதிந்த நுங்கள் வன்சிறை மாற்றும் வைகல்

சிறிதிவண் இருத்தி ரென்று பின்னருஞ் செப்பு கின்றான்.           22

 

தன்னிகர் இன்றி மேலாய்த் தற்பர வொளியா யாரும்

உன்னரும பரமாய் நின்ற ஒருவனே முகங்க ளாறும்

பன்னிரு புயமுங் கொண்டு பாலகன் போன்று கந்தன்

என்னு மோர்பெயரும் எய்தி யாவருங் காண வந்தான்.            23

 

பங்கய முகங்கள் ஆறும் பன்னிரு புயமும் கொண்ட

எங்கடம் பெருமான் போந்த ஏதுமற் றென்னை என்னில்

செங்கண்மா லுந்தி பூத்தோன் சிறுமையும் மகவான் துன்பும்

உங்கடஞ் சிறையும் நீக்கி உலகெலாம் அளிப்பக் கண்டாய்.         24

 

சிறுவிதி வேள்வி நண்ணித் தீயவி நுர்ந்த பாவம்

முறைதனில் வீரன் செற்று முற்றவு முடிந்த தில்லை

குறைசில இருந்த ஆற்றாற் கூடிய துமக்கித் துன்பம்

அறுமுகப் பெருமான் அன்றி யாரிது நீக்கற் பாலார்.                       25

 

தாட்கொண்ட கமல மன்ன சண்முகத் தெந்தை வேலாற்

காட்கொண்ட கிரியி னோடு தாரகற் கடந்த பூசல்

தோட்கொண்ட மதுகை சான்ற சூர்முதல் களைய முன்னம்

நாட்கொண்ட தன்மையன்றோ நறைகொண்ட அலங்கல் தோளாய்.  26

 

காலுறக் குனித்துப் பூட்டிக் கார்முகத் துய்ப்ப ஓர்செங்

கோலினுக் குண்டி யாற்றார் குணிப்பிலா அவுணர் யாரும்

மாலினுக் கரிதாம் அண்ணல் மாமகன் கரத்திற் கொண்ட

வேலினுக் கிலக்க தில்லை விடுப்பது மிகைய தன்றே.                    27

 

வாரிதி ஏழும் எண்ணில் வரைகளும் பிறவுங் கொண்ட

பாருடன் உலகீ ரேழும் படைத்தபல் லண்டம் யாவும்

ஓரிறை முன்னம் அட்டே உண்டிடும் ஒருவன் செவ்வேல்

சூரனை அவுண ரோடுந் தொலைப்பதோர் விளையாட் டம்மா.      28

 

சுறமறி அளக்கர் வைகுஞ் சூரபன் மாவின் மார்பில்

எறிசுடர்  எ•கம் வீசி இருபிள வாக்கின் அல்லால்

சிறையுளீர் மீள்கி லாமை தேற்றியும் பொருநர் செய்யும்

அறநெறி தூக்கி ஒற்றா அடியனை விடுத்தான் ஐயன்.                     29

 

ஆளுடை முதல்வன் மாற்றம் அவுணருக் கிறைவன் முன்போய்க்

கேளிதென் றுரைப்பன் அற்றே கிளத்தினுங் கடனாக் கொள்ளான்

மீளுவன் புகுந்த தெல்லாம் விளம்புவன் வினவி எங்கோன்

நாளைவந் திவரை யெல்லாம் நாமற முடிப்பன் காண்டி.           30

 

நீண்டவன் தனக்கும் எட்டா நெடியதோர் குமரன் செவ்வேல்

ஆண்டிருந் தேயும் உய்த்தே அவுணர்யா வரையுங் கொல்லும்

பாண்டிலந் தேர்மேற் கொண்டு படைபுறங் காத்துச் சூழ

ஈண்டுவந் தடுதல் அன்னாற் கிதுவுமோ ராடல் அன்றே.            31

 

ஈரிரண் டிருமூன் றாகும் இரும்பக லிடையே எங்கோன்

ஆரிருஞ் சமர மூட்டி அவுணர்தம் மனிகந் தன்னைச்

சூரொடு முடித்து நும்மைத் துயா¢ச்சிறைத் தொடர்ச்சி நீக்கிப்

பேரிருஞ் சிறப்பு நல்கும் பிறவொன்று நினையல் மன்னோ.                32

 

என்றிவை பலவும் வீரன் இமையவர் குழத்தி னோடுங்

குன்றெறி பகைஞன் மைந்த னுணர்தரக் கூற லோடு

நன்றென உவகை பூத்து நாமவேல் நம்பி யாற்ற

வென்றிபெற் றிடுக வென்று வீற்றுவீற் றாசி சொற்றார்.           33

 

எண்டகும் ஆகி கூறி இந்திரன் றனது மைந்தன்

அண்டரொ டங்கை கூப்பி அளியரேந் தன்மை யெல்லாங்

கண்டனை தாதை கேட்பக் கழறுதி இவண்நீ யுள்ளங்

கொண்டது முடிக்கப் போதி குரைகழற் குமர வென்றான்.          34

 

வயந்திகழ் விடலை அங்கண் மற்றவர் தம்மை நீங்கிக்

கயந்தகு காவ லோர்தங் கருத்தின்மால் அகற்றி யேக

இயந்திர மன்னோர் தேறி இமையவர் குழாத்தி னோடு

சயந்தனைச் சுற்றி முன்போல் தடைமுறை ஓம்ப லுற்றார்.                35

 

ஆகத் திருவிருத்தம் - 480

     - - -

 

 

12.  அ வை பு கு  ப ட ல ம்

 

மடந்தையொ டிரிந்திடும் வாச வன்முகன்

அடைந்திடு சிறைக்களம் அகன்று வானெறி

நடந்தனன் அவுணர்கோன் நண்ணு கோன்நகர்

இடந்தரு கிடங்கரை இகந்து போயினான்.                1

 

அகழியை நீங்கினான் அயுதந் தனின்னும்

மிகுதிகொள் நாற்படை வௌ¢ளந் தானைகள்

தகுதியின் முறைமுறை சாரச் சுற்றிய

முகில்தவழ் நெடுமதில் முன்ன ரேகினான்.                       2

 

கான்கொடி கங்கைநீர் கரப்ப மாந்தியே

மீன்கதிர் உடுபதி விழுங்கி விட்டிடும்

வான்கெழு கடிமதில் வரைப்பின் முன்னரே

தான்கிளர் கோபுரங் கண்டு சாற்றுவான்.                  3

 

குரைகடல் உண்டவன் கொண்ட தண்டினால்

வருபுழை மீமிசை வாய்ப்பத் தாரகன்

பெருவரை நிமிர்ந்திடு பெற்றி போலுமால்

திருநிலை பலவுடைச் சிகரி நின்றதே.                           4

 

தூணம துறழபுயச் சூரன் என்பவன்

சேணுறும் அண்டமேற் செல்லச் செய்ததோர்

ஏணிகொ லோவிது என்ன நின்றதால்

நீணிலை பலவுடன் நிமிர்ந்த கோபுரம்.                           5

 

துங்கமொ டிறைபுரி சூரன் கோயிலி

பொங்குசெம் மணிசெறி பொன்செய் கோபுரம்

எங்கணு முடியுநாள் இரளி வாய்ப்படும்

அங்கிவிண் காறெழும் வடிவம் அன்னதே.                6

 

அண்டமங் கெவற்றினும் அமர்ந்து நிற்புறும்

விண்டொடர் வரைகளும் மேரு வானவும்

பண்டிதன் மிசையுறப் பதித்த தொக்குமாற்

கொண்டியல் சிகரியுட் கூட சாலைகள்.                  7

 

மெய்ச்சுடர் கெழுமிய வியன்பொற் கோபுரம்

உச்சியில் தொடுத்திட முழங்கு கேதனம்

அச்சுத னாஞ்சிவன் அளவை தீர்முகத்

துச்சிதொ றிருந்தரா ஒலித்தல் போலுமால்.                      8

 

திசைபடு சிகரியிற் செறிந்த வான்கொடி

மிசைபடும் அண்டமேல் விடாமல் எற்றுவ

பசைபடும் அதளுடைப் பணைய கத்தினில்

இசைபடப் பலகடிப் பெரிதல் போலுமால்.                9

 

விண்ணவர் தாமுறை வியன்ப தத்தொடுந்

திண்ணிலை இடந்தொறுஞ் சிவண வைகினர்

அண்ணலங் கோபுரம் அதனிற் கைவலோன்

பண்ணுறும் ஓவியப் பாவை என்னவே.                          10

 

என்பன பலபல இயம்பி ஈறிலாப்

பொன்புனை தோணியம் புரிசைச் சூழலின் 

முன்புறு கோபுர வனப்பு முற்றவும்

நன்பெரு மகிழ்ச்சியான் நம்பி நோக்கினான்.                      11

 

புதவுறு கோபுரப் பொருவில் வாய்தலுள்

மதவலி உக்கிரன் மயூர னாதியோர்

அதிர்தரு நாற்படை அயுதஞ் சுற்றிடக்

கதமொடு காப்பது காளை நோக்கினான்.                  12

 

நோக்கிய திறலவன் நொச்சி தாவியே

ஆக்கமொ டமர்தரும் அவுணன் கோயிலுள்

ஊக்கமொ டும்பரான் ஓடி முன்னுறு

மேக்குயர் குளிகை மிசையிற் போயினான்.                      13

 

வேறு

 

சூளிகை மீமிசை துன்னுபு சூரன்

மாளிகை யுள்ளவ ளந்தனை யெல்லாம் 

மீளரி தாவிழி யோடுள மேவ

ஆளரி நேர்தரும் ஆண்டகை கண்டாள்.                  14

 

கண்டதொ ரண்ணல் கடுந்திறல் வெஞ்சூர்

திண்டிறல் வாளரி சென்னிகொள் பீடத்

தெண்டகும் ஆணை இயற்றிய செம்பொன்

மண்டபம் வைகுறும் வண்மை தெரிந்தான்.                      15

 

அருந்தவ வேள்வி அயர்ந்தரன் ஈயும்

பெருந்திரு மிக்கன பெற்றுல கெல்லாந்

திருந்தடி வந்தனை செய்திட வெஞ்சூர்

இருந்திடு கின்ற இயற்கை இசைப்பாம்.                  16

 

ஐயிரு நூறெனும் யோசனை யான்றே 

மொய்யொளி மாழையின் முற்றவு மாகித்

துய்யபன் மாமணி துஞ்சிவில் வீசி

மையறு காட்சிகொள் மண்டபம் ஒன்றின்.                17

 

மேனகை யோடு திலோத்தமை மெய்யின்

ஊனமில் காமர் உருப்பசி யாதி

வானவர் மங்கையர் வட்டம் அசைத்தே

மேனிமிர் சீகரம் வீசினர் நிற்ப.                                  18

 

சித்திர மாமதி செங்கதிர் பாங்காய்

முத்தணி வேய்ந்து முகட்டிள நீலம்

உய்த்து மணித்தொகை உள்ளம் அழுத்துஞ்

சத்திர மாயின் தாங்கினர் நிற்ப.                         19

 

வௌ¢ளடை பாகு வௌ¤ற்றுறு சுண்ணங்

கொள்ளும் அடைப்பைமென் கோடிகம் வட்டில்

வள்ளுடை வாளிவை தாங்கி மருங்காய்த்

தள்ளரு மொய்ம்புள தானவர் நிற்ப.                             20

 

வெம்மைகொள் பானுவை வெஞ்சிறை யிட்ட

செம்மலும் ஏனைய சீர்கெழு மைந்தர்

மும்மைகொள் ஆயிர மூவரு மாகத்

தம்முறை யாற்புடை சார்ந்தனர் வைக.                          21

 

பாவ முயன்று பழித்திறன் ஆற்றுங்

காவிதி யோ£¢கரு மங்கள் முடிப்போர்

ஆவதொர் சாரண ராய்படை மள்ளர்

ஏவரும் ஞாங்கரின் எங்கணும் நிற்ப.                            22

 

நாடக நூல்முறை நன்று நினைந்தே

ஆட அரம்பைய ராயுள ரெல்லாஞ்

சேடியர் கின்னரர் சித்தர் இயக்கர்

பாடுற வீணைகள் பண்ணினர் பாட.                             23

 

ஏகனை ஈசனை எந்தையை யெண்ணா

ராகிய தொல்லவு ணக்குழு வென்ன

வேகும் உளத்தின் கஞ்சுகர் வெங்கண்

மாகதர் சூரல் பிடித்து வழுத்த.                          24

 

உள்ளிடும் ஆயிர யோசனை யெல்லை

கொள்ளிட மான குலப்பெரு மன்றந்

தள்ளிட வற்ற சனங்கள் மிகுந்தே

எள்ளிட வௌ¢ளிடம் இன்றென ஈண்ட.                  25

 

வச்சிர மெய்வயி டூரியம் ஒண்பல்

உச்சியில வாலுளை யேயொளிர் முத்தம்

அச்சுறு கண்மணி யாம்அரி மாவின்

மெய்ச்சிர மேந்தும் வியன்தவி சின்கண்.                 26

 

மீயுயர் நீல வியன்கிரி உம்பர்

ஞாயிறு காலையின் நண்ணிய வாபோல்

பாயிருள் கீறிய பண்மணி கொண்ட

சேயபொன் மாமுடி சென்னியின் மின்ன.                 27

 

கறுத்தவ ராத்துணை கண்டிரு வெய்யோர்

உறுப்பிட கவ்வி யொசிந்து கலைப்போய்

முறுக்கிய வாலொடு முன்கலந் தென்ன

மறுத்தவிர் குண்டலம் வார்குழை தூங்க.                28

 

வீறிய மாமணி வெற்பின் மிசைக்கண்

ஏறிய ஒண்பகல் இந்துவி யற்கை

மாறிய வந்தென மால்வள மாகும்

நீறு செறிந்திடு நெற்றி இலங்க.                         29

 

விண்டுமிழ் கின்ற வியன்புழை தோறுந்

தண்டுளி வந்தமர் தன்மைய தென்னப்

புண்டரி கம்பொறை போற்றி யுயிர்க்கும்

வண்டர ளத்தொடை மார்பின் வயங்க.                   30

 

பங்கமில் சந்தொடும் பாளிதம் நானங்

குங்குமம் ஏனைய கந்திகள் கூட்டி

அங்கம தன்கண் அணிந்தன அண்டம்

எங்கும் உலாவி இருங்கடி தூங்க.                       31

 

வான்றிழ் நீனிற மாமுகி லின்பான்

தோன்றிய மின்புடை சுற்றிய தென்ன

ஏன்றுள அண்டம் எனைத்தையும் ஆற்றும்

ஆன்றுயர் தோளிடை அங்கதம் மல்க.                           32

 

மெய்த்துணை யாமிரு வெம்பணி ஞாலம்

பைத்தலை கொள்வ பரம்பொறை யாற்றா

தெய்த்தன பூண்கொடி யாப்புறு மாபோற்

கைத்தல முன்கட கஞ்செறி வெய்த.                             33

 

நீலம தாய நெடுங்கிரி மேல்பால்

வாலிய கங்கை வளைந்திடு மாபோல்

கோல மிடற்றிடை கோவைகொள் முத்தின்

சால்வுறு கண்ட சரங்கள் இமைப்ப.                             34

 

வீர மடந்தையர் மேதக நாளுஞ்

சீரிய தோளிணை செல்கதி யென்ன

ஏரியல் பன்மணி இட்டணி செய்த

ஆர வடுக்கல்பொன் ஆகம் இலங்க.                             35

 

அந்தியின் வண்ணமும் அத்தொளி யூருஞ்

சுந்தர மாலிடை சுற்றிய வாபோல்

முந்து பராரைகொள் மொய்ம்மணி யாடை

உந்தியின் ஒண்பணி யோடு வயங்க.                            36

 

இருபணி பார்முகம் இட்டிட வீட்டி

உருமொடு மின்னும் உலப்பில சுற்றிக்

கருமிட நூடு கலந்தென நுண்ணூல்

குரைகழல் வா£¢கழல் கொண்டு குலாவ.                37

 

மென்மணி மாழையின் வேதன் இயற்றிப்

பன்மணி மீது படுத்திய பல்பூண்

தொன்மணி மெய்புனை சூரபன் மாவோர்

பொன்மணி மாமுகில் போல இருந்தான்.                 38

 

இருந்திடு கின்ற இயற்கை விழிக்கோர்

விருந்தமு தாக வியப்பொடு நோக்கிச்

சுரந்திடு மன்பொடு சூளிகை வைகும்

பெருந்திறல் மாமுகில் இங்கிவை பேசும்.                39

 

மூவரின் முந்திய முக்கணன் அம்பொற் 

சேவடி பேணிய தேவர்கள் தம்முள்

தூவுடை வேலுள சூரபன் மாப்போல்

ஏவர் படைத்தனர் இத்திரு வெல்லாம்.                           40

 

ஓய்ந்து தவம்புரி வோருள் உவன்போல்

மாய்ந்தவர் இல்லை மறத்தொடு நோற்றே

ஆய்ந்திடின் முக்கண்எம் மையனும் இன்னோற்

கீந்தது போற்பிறர்க் கீந்ததும் இன்றால்.                  41

 

பாடுறு வேள்வி பயின்றழல் புக்கும் 

பீடுறும் இவ்வளம் ஆயின பெற்று

நீடுறு மாறு நினைந்திலன் வெய்யோன்

வீடுறு கின்ற விதித்திறன் அன்றோ.                             42

 

வேறு

 

மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை விரகின்மை கொண்ட குருகார் 

கச்சோத மென்று கருதிக் குடம்பை தனினுய்த்து மாண்ட கதைபோல்

அச்சோ வெனப்பல் இமையோரை ஈண்டு சிறைவைத்த பாவம் அதனால்

இச்சூர பன்மன் முடிவெய்து நாளை இதனுக்கொர் ஐய மிலையே.          43

 

மிகையான வீரம் வளமாற்றல் சால மேவுற்று ளோரும் இறையும்

பகையார்க ணேனும் உளராகி வாழ்தல் பழுதன்றி நன்றி படுமோ

மகவானை மங்கை யுடனே துரந்தும் அவர்மைந்த னோடு சுரரை

அகலாமல் ஈண்டு சிறைசெய்த பாவம் அதனால் இழப்பன் அரசே.          44

 

மன்னுந் திறத்தின் அமைச்சூர பன்மன் மாமக்கள் சுற்றம் நகரம்

முன்னும் படிக்கும் அரிதான செல்வ முடனாளை ஈறு படுமேல்

முன்னென் பவா¢க்கு முன்னாகும் ஆறு முகன்நல்கு முத்தி யலதேல்

என்னுண்டு நாளும் வினைசெய் துழன்ற இவன் ஆருயிர்க்கு நிலையே.     45

 

என்றித் திறங்கள் அருளோடு பன்னி எழில்கொண்ட வேர மிசையே

துன்றுற்ற வீரன் வளனோ டிருந்த சூரன்முன் ஏகல் துணியாக்

குன்றத்தி னின்று மிவரெல்லை போன்று குமரேசன் எந்தை அடிகள்

ஒன்றக் கருத்தினி டைகொண் டெழுந்து நடைகொண் டவைக்கண் உறுவான்.46

 

வேறு

 

நலஞ்செய் குளிகை நீங்கிவிண் ணெறிக்கொடு நடந்து

கலஞ்செய் திண்டிறல் வாகுவாம் பெயருடைக் கடவுள்

வலஞ்செய் வாட்படை அவுணர்கோன் மன்னிவீற் றிருக்கும்

பொலஞ்செய் கின்றஅத் தாணிமண் டபத்திடைப் போனான்.        47

 

எல்லை இல்லதோர் பெருந்திரு நிகழவீற் றிருந்த

மல்ல லங்கழல் இறைவனைக் குறுகிமாற் றலரால்

வெல்ல ருந்திறல் வீரவா குப்பெயர் விடலை

தொல்லை நல்லுருக் காட்டிஎன அவைக்கெலாந் தோன்ற.          48

 

ஒற்றை மேருவில் உடையதோர் பரம்பொருள் உதவுங்

கொற்ற வேலுடைப் புங்கவன் தூதெனக் கூறி

இற்றை இப்பகல் அவுணர்கோன் கீழியான் எளிதாய்

நிற்றல் எம்பிரான் பெருமையின் இழிபென நினைந்தான்.          49

 

மாயை  தந்திடு திருமகன் மன்னிவீற் றிருக்கும்

மீயு யர்ந்திடும் அரியணைக் கொருபுடை விரைவில்

போயி ருப்பது மேலன்று புன்மையோர் கடனே

ஆய தன்றியும் பாவமென் றுன்னினான் அகத்துள்.                50

 

இஆயை துன்னியே அறுமுகப் பண்ணவன் இருதாள்

நினையும் எல்லையில் ஆங்கவன் அருளினால் நிசியில்

தினக ரத்தொகை ஆயிர கோடிசேர்ந் தென்னக்

கனக மாமணித் தவிசொன்று போந்தது கடிதின்.                  51

 

நித்தி லப்படு பந்தருஞ் சிவிகையும் நெறியே

முத்த மிழ்க்கொரு தலைவனாம் மதலைக்கு முதல்வன்

உய்த்த வாறெனக் குமரவேள் வீரனுக் குதவ

அத்த லைப்பட வந்தது மடங்கலேற் றணையே.                  52

 

பன்னி ரண்டெனுங் கோடிவெய் யவரெலாம் பரவப்

பொன்னின் மால்வரை திரைக்கடல் அடைந்தவா போல

மின்னு லாவிய பொலன்மணிப் பீடிகை விறல்சேர்

மன்னர் மன்னவன் அவைக்களத் தூடுவந் ததுவே.                53

 

சிவன் மகன்விடு பொலன்மணித் தவிசுசேண் விளங்கிப்

புவன முற்றுறத் தன்சுடா¢ விடுத்தலிற் பொல்லாப்

பவம னத்தொடு தீமையே வைகலும் பயிற்றும்

அவுணர் மெய்மையுந் தெய்வதப் படிவமாக் கியதால்.                     54

 

அயிலெ யிற்றுடை அவுணர்கள் அணிகலந் தன்னில்

குயிலு டைப்பல மணிகளுங் குமரவேள் உய்த்த

இயலு டைப்பெருந் தவிசொளி பரத்தலின் இரவி

வேயிலி டைப்படு மின்மினி போல்விளங் கிலவே.                55

 

செக்கர் வானிற மதிக்கதிர் உடுக்களின் திரட்சி

தொக்க பாயிருள் பலவகை எழிலியின் துளக்கம்

மிக்க லாஞ்செறி மாலையின் உம்பர்மேல் வெய்யோன்

புக்க தேயெனத் தொலைத்ததால் அச்சபைப் பொலிவை.           56

 

திசைமு கத்தனுஞ் செயற்கருந் தவிசொளி செறிந்தே

அசைவ ருந்திறற் சூரபன் மாவெனும் அவுணன்

இசைமை தன்னையும் ஆணைதன் னையும்அவ னியாக்கை

மிசைகொள் பேரணிக் கதிரையும் விழுங்கின விரைவில்.          57

 

அனைய வான்தவி சவுணன்நேர் இருத்தலும் அதுகண்

டெனது நாயகன் விடுத்தனன் போலுமென் றெண்ணி

மனம மகிழ்ச்சியால் அறுமுகப் பிரானடி வழுத்தி

இனைய நாடுவான் இருந்தனன் ஆங்கதன் மிசையே.              58

 

பெருந்த னிச்சுடர் எறித்திடு பொன்மணிப் பீடத் 

திருந்து மேதகு சிறப்பொடு விளங்கிய ஏந்தல்

விரிந்த பல்கதி ருடையதோர் வெய்யவன் நடுவட்

பொருந்தி வைகிய கண்ணுதற் பரமனே போன்றான்.                      59

 

மின்னி ருந்தவேல் அவுணர்கோன் எதிருறும் விடலை

முன்னி ருந்தஆ டகன்றனை அடுமுரட் சீயஞ்

செந்நி ணங்கவர்ந் தலமர அணுகிமுன் றெற்றப்

பொன்னி ருந்தவி சிருந்திடும் வீரனே போன்றான்.                60

 

வெம்மைக் காலிருள் வேலைபோல் மூடிவிண் புவியைத்

தம்முட் சித்தரிற் காட்டலுஞ் சதுர்முகத் தொருவன்

நம்மொத் தாரிலை என்றிடச் சிவன்புகழ் நவிலுஞ்

செம்மைத் தொல்குண மாலுநேர்ந் திருந்தனன் திறலோன்.         61

 

இவற்றி யற்கையால்வீரவா குப்பெயர் ஏந்தல்

நிவப்பின் மிக்கதோர் பொன்மணித் தவிசின்மேல் நெஞ்சின்

உவப்பும் வீரமும் மேதக இருத்தலும் உற்ற

அவைக்க ளத்தினர் யாவருங் கண்டனர் அதனை.                 62

 

நோற்றல் முற்றுறும் வினைஞர்பால் நொய்தின்வந் திறுத்த

ஆற்றல் சால்வளம் போலவே அரியணை அதன்கண்

தோற்று மேலவன் நிலைமையைக் காண்டலுந் துளங்கி

ஏற்ற அற்புதம் எய்தினர் அவைக்களத் திருந்தார்.                 63

 

வேறு

 

வாரிலங் கியகழல் மன்னன் முன்னரே

தாரிலங் கியமணித் தசிவின் உற்றுளான்

வீரனும் போலுமால் வினையம் ஓர்கிலேம்

யாரிவன் கொல்லென இயம்பு வார்சிலர்.                 64

 

முந்திவட் கண்டிலம் முடிவில் ஆற்றல்சேர்

எந்தைமுன் இதுபொழு திருத்தல் மேயினான்

நந்தமை நீங்கியே நடுவ ணேயிவன்

வந்ததெவ் வாறென வழங்கு வார்சிலர்.                  65

 

ஒப்பருஞ் சனங்களோ டொன்றி நம்மெலாந்

தப்பினன் புகுந்தனன் தமிய னென்னினும்

இப்பெருந் தவிசிவண் இருந்த தாற்றவும்

அற்புதம் அற்புத மாமென் பார்சிலர்.                             66

 

சீயமெல் லணையொடு செம்மல் முன்னறே

ஏயெனும் அளவையின் ஈண்டு தோன்றினான்

ஆய்பவர் உண்டெனின் அறைவன் நம்மினும்

மாயன்இங் கிவனென வகுக்கின் றார்சிலர்.                       67

 

அறைகழல் ஒருவனை அவையத் தென்முனங்

குறுகிய விடுத்ததென் குழாங்கொண் டீரெனா

இறையவன் நங்களை யாது செய்யுமோ

அறிகில மெனப்பதைத் தழுங்கு வார்சிலர்.                68

 

ஒட்டலன்ஒருவனை ஒறுத்தி டாதிவண்

விட்டதெ னென்றிறை வெகுளு முன்னரே

கிட்டினம் அவன்றனைக் கெழுமிச் சுற்றயே

அட்டனம் வருதுமென் றறைகின் றார்சிலர்.                      69

 

விளிவிலாத் திறலுடை வேந்தன் தன்னெதிர்

களியுலா மனத்தொடு கடிதின் உற்றுளான்

தௌ¤விலா மாயையின் திறலன் போலுமால்

அளியனோ நுங்களுக் கவனென் பார்சிலர்.                70

 

மன்னவன் எதிருற வந்து ளான்றனை

அன்னவன் பணியினால் அடுவ தல்லதை

முன்னுற அதனையா முன்னு வோமெனில்

பின்னது பிழையெனப் பேசு வார்சிலர்.                          71

 

யாரிதை அறிகுவர் இனையன் இவ்விடைச்

சூருற உன்னியே துன்னி னான்கொலோ

சேரலர் பக்கமாய்ச் சேர்ந்து ளான்கொலோ

ஓருது மேலென உரைசெய் வார்சிலர்.                           72

 

கடுந்தகர் முகத்தவள் கையொன் றற்றநாள்

தடிந்தனன் காவலோர் தம்மை மன்னவன்

தொடுங்கழல் இவன்வருஞ் சூழ்ச்சி நோக்கியின்

றடும்பலர் தம்மையென் றச்சுற் றார்சிலர்.                73

 

வாசவன் முதலினோர் மருளத் தொல்லைநாட்

தேசுறும் விஞ்சையர் வடிவிற் சேர்வுறீஇ

ஆசிலோர் புன்னிறுத் தாணை காட்டிட

ஈசனே இங்கிவன் என்கின் றார்சிலர்.                            74

 

ஆயதோர் காசிபன் அதிதி தங்கள்பாற்

சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய்த்

தூயவான் புவியெலாம் அளப்பச் சூழ்ந்திடு

மாயனே இவனென மதிக்கின் றார்சிலர்.                  75

 

விண்டொடு சூளினை விளம்பி விண்புவி

உண்டொரு கணந்தனில் உந்தி காட்டிய

புண்டரி கத்தனே புணர்ப்பின் இவ்வுருக்

கொண்டன னாமெனக் கூறு வா£¢சிலர்.                  76

 

மூவரு ளாகுமோ முடிவின் மாதிரத்

தேவரு ளாகுமோ சேணில் வைகியே

தாவரு முனிவரர் தம்மு ளாகுமோ

ஏவரு ளாகுமோ இவனென் பார்சிலர்.                           77

 

மாலைதாழ் மார்புடை மன்னற் கின்னமும்

ஆலமார் கண்டனே அருளின் இன்னதோர்

கோலமாய் வரந்தரக் குறுகி னான்கொலோ

மேலியாம் உணருதும் விளைவென் பார்சிலர்.                    78

 

காற்றுடன் அங்கியுங் கடுங்கட் காலனுங்

கூற்றனும் ஓருருக் கொண்டு வைகிய

தோற்றமி தன்றியிச் சூரன் முன்வரும்

ஆற்றலர் யாரென அறைகின் றார்சிலர்.                  79

 

குன்றமும் அவுணனுங் குலைந்து பாடுற

ஒன்றொரு வேலினை ஒருவ னுய்த்தனன்

என்றனர் அன்னவன் ஈண்டு மன்னன்முன்

சென்றன னோவெனச் செப்பு வார்சிலர்.                  80

 

செற்றிய பன்மணிச் செம்பொன் மன்றமும்

முற்றிடும் அவுணரும் ஔ¤று வான்கதிர்

மற்றிவன் அணிகளின் தவிசின் வாள்பட

அற்றது பகற்சுட ராயென் பார்சிலர்.                             81

 

இருந்திடும் அவுணர்கள் யாரும் இத்திறம்

வருந்திறம் நினைகிலர் மறந்தும் இவ்விடை

தெரிந்திடின் இங்கிது திறல்கொள் மன்னனே

புரிந்திடு மாயையின் புணர்ப்பென் பார்சிலர்.                      82

 

நென்னலின் இறந்துயிர் நீத்த தாரகன்

முன்னுறு தன்னுரு முடிய இப்பகல்

இன்னதோ£¢ பொன்னுரு வெடுத்து முன்னைபால்

துன்னினன் கொல்லெனச் சொல்கின்றார்சிலர்.             83

 

வேறு

 

சங்க மேவினர் இனையன அளப்பில சாற்ற

அங்கண் ஓரரி மான்றவி சிருக்கையில் அவுணன்

துங்க மெத்துணை அத்துணைச் சிறப்பொடு தோன்றிச்

செங்கை வேலவற் புகழ்ந்துவீற் றிருந்தனன் திறலோன்.           84

 

அறிவர் மேலவன் தவிசில்வீற் றிருத்தலும் அவுணர்க்

கிறைவ னாங்கது நோக்கியே எயிற்றணி கறித்துக்

கறுவி யேநகைத் துரப்பிமெய் வியர்ப்பெழக் கண்கள்

பொறிசொ ரிந்திடப் புகையுமிழ்ந் தினையன புகல்வான்.           85

 

சுற்ற நீங்கியே இலையுண்டு விலங்கெனச் சுழன்று

வற்றன் மாமரக் காட்டகத் திருந்துடன் வருத்துஞ்

சிற்று ணர்ச்சியோர் வல்லசித் தியல்பிது சிறியோய்

கற்று ளாய்கொலாங் காட்டினை நமதுமுன் காண.                86

 

துன்று வார்சடை யோகினோர் அல்லது தொலைந்து

பின்று தேவரும் வல்லரிச் சிறுதொழில் பெரிதும்

ஒன்று மன்னதை இவ்விடைக் காட்டலர் உன்போல்

நன்று நன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம்.                              87

 

சித்த ராயினோர் செங்கண்மால் முதலிய தேவர்

இத்தி றத்தன காட்டுதற் கஞ்சுவ ரென்முன்

தத்தம் எல்லையிற் புரிந்திடல் அல்லது தமியோய்

பித்த னேகொலாம் நமக்கிது காட்டுதல் பிடித்தாய்.                88

 

உரைசெய் இந்நகர் மகளிருஞ் செய்வரூன் முற்றாக்

கருவி னுள்ளுறு குழவியுஞ் செய்திடுங் கருத்தில்

வரைக ளுஞ்செயும் மாக்களுஞ் செய்யுமற் றதனால்

அரிய தன்றரோ பேதைநீ புரிந்திடும் ஆடல்.                             89

 

என்னை எண்ணலை எதிருற இருந்தனை இதனான்

மின்னல் வாட்படை யுறைகழித் தொய்யென வீசிச்

சென்னி வீட்டுவன் நின்செயல் முற்றவுந் தெரிந்து

பின்னர் அத்தொழில்  புரிவனென் றேயுளம் பிடித்தேன்.           90

 

ஏணுற் றரெலாம் வழுத்திய அவுணரும் யாமுங்

காணக் காட்டினை நீயறி விஞ்சையைக் கண்டாம்

பூணித் தாயென வருமுனக் கித்துணைப் பொழுது

பாணித் தாவியை அளித்தனன் அன்னது பரிசே.                  91

 

வாச வன்கரந் தோடினன் பிறரிது மதியார்

கேச வன்னிது நினைகிலன் மறைகளின் கிழவோன்

ஆசி கூறியே திரிந்திடும் அவர்க்கெலாம் முதலாம்

ஈசன் என்னிடை வருகிலன் யாரைநீ யென்றான்.                  92

 

தீயன் இத்திறம் உரைத்தன கேட்டலுந் திறலோன்

காய மீனெனக் காயமேல் வியர்ப்பெழக் கனன்று 

மாயை செய்துழல் வலியிலார் போலெனை மதித்தாய்

ஆய புந்தியை விடுமதி கேளிதென் றறைவான்.                  93

 

புரந்த ரன்குறை அயன்முதல் அமரர்தம் புன்மை

வருந்தும் வானவர் சிறையெலாம் நீக்கிமற் றவர்தந் 

திருந்து தொல்லிறை உதவுவான் செந்திமா நகர்வந்

திருந்த ஆதியம் பண்ணவன் அடியனேன் யானே.                 94

 

துன்னை தானைகட் கரசராய் அறுமுகத் தொல்லோன்

பின்னர் வந்துளார் ஒன்பதோ டிலக்கமாம் பெயரால்

அன்ன வர்க்குளே ஒருவன்யான் நந்திபாங் கமர்ந்தேன்

ஒன்ன லார்புகழ் வீரவா கெனும்பெய ருள்ளேன்.                  95

 

தாரகப் பெயர் இளவலைத் தடவரை தன்னை

ஓரி றைக்குமுன் படுத்தவேல் அறுமுகத் தொருவன்

சூரெ னப்படு நின்னிடைத் தமியனைத் தூதாப்

பேர ருட்டிறத் துய்த்தனன் என்றனன் பெரியோன்.                 96

 

கொடுத்தி டாதவென் கொண்டவன் உரைத்தசொற் கொடுங்கோல்

நடத்து மன்னவன் கேட்டலும் ஆங்கவன் நம்மேல்

விடுத்த காரணம் என்னையோ விளம்புதி யென்ன

எடுத்து மற்றிவை எம்பிரான் தூதுவன் இசைப்பான்.                      97

 

மருத்து வன்றனைச் சசியொடு துரந்துசேண் வதிந்த

புரத்தை ஆரழற் கூட்டியே அனையவன் புதல்வன்

ஒருத்த னோடுபல் லமரரை உவளகந் தன்னில்

இருத்தி னாயென வினவினன் அறுமுகத் திறைவன்.                     98

 

இந்தி ராதிபர் அயன்முதற் பண்ணவர் யாரும்

வந்து வந்துவேண் டிடுதலும் அவர்குறை மாற்றப்

புந்தி கொண்டுபன் னிருபுயத் தெம்பிரான் புவிக்கண்

அந்த மின்றுறை பாரிடத் தானையோ டடைந்தான்.                       99

 

தரையின் நண்ணிநின் இளவலை வரையொடு தடிந்து

நெருக லேவந்து செந்தியின் வைகினான் நினையும்

விரைவின் வந்தட உன்னினான் இன்றுநும் மிசையே

அருள்கொ டேசில புகன்றெனைத் தூண்டினன் அதுகேள்.           100

 

நிறையும் இந்துவைப் படவராக் கவர்ந்தென நிகளச்

சிறைப டுத்தியே அமரரை வருத்தினை செய்யும்

மறையொ ழுக்கமும் நீக்கினை உலகம்ஆள் மன்னர்

அறமும் அன்றிது வீரர்தஞ் செய்கையும் அன்றால்.                       101

 

தாதை யாகியோன் காசிபன் ஆங்கவன் தனயன்

ஆத லானுனக் கமரரைச் சிறைசெய்வ தறனோ

வேத மார்க்கமும் பிழைத்தனை சிறுபொருள் விழைந்தாய்

நீதி யாலுல களிப்பதே அரசர்தந் நெறியே.                       102

 

உலத்தின் மாண்டதோட் சலந்தரன் அந்தகன் ஒருங்கே

கலத்தல் இல்லதோர் புரத்தவ ராதியோர் கடவுட்

குலத்தை வாட்டலின் இமைப்பினில வீந்தனர் கொடியோய்

நிலத்தின் உம்பரை வருத்துதல் அழகிதோ நினக்கே.                      103

 

மெய்மை நீங்கியே கொலைகள வியன்றுமே லுள்ள

செம்மை யாளரைச் சீறியே அணங்குசெய் தீயோர்

தம்மில் ஆற்றரும் பழிசுமந் தொல்லையில் தமரோ

டிம்மை வீடுவர் எழுமையுந் துயரினூ டிருப்பார்.                 104

 

இங்ங னந்திரு நீங்கியே துயருழந் திறப்பர்

அங்ங னம்பெரி தாரிருள் மூழ்குவர் அதற்பின்

உங்ங னம்பிறந் தயருவ ரென்றுமீ துலவார்

எங்ஙன் உய்வரோ பிறர்தமக் கல்லல்செய் திடுவோர்.                     105

 

தீது நல்லன ஆயிரு திருத்தவுந் தொ¤ந்தே

ஏதி லார்க்கவை செய்வரேல் தமக்குடன் எய்தும்

பேதை நீரையாய் அமரரைச் சிறைசெய்த பிழையால்

மாது யர்ப்படல்  அன்றியே இறுதியும் வருமால்.                 106

 

அண்டர் ஆற்றலை வவ்விய தாரகன் ஆவி

உண்ட கொற்றவேல் இருந்தது விடுத்திடின் உனையுங்

கண்ட துண்டம தாக்குமால் அறநெறி கருதித் 

தண்டம் வல்லையிற் புரிந்திலன் இத்துணை தாழ்த்தான்.          107

 

கெடுதல் இல்லதோர்அமரர்கள் சிறையிடைக் கிடப்ப

விடுதல் செய்தனை பல்லுகம் அவர்தமை இன்னே

விடுதல் உய்வகை யாகுமால் மறுத்தியேல் விரைந்து

படுத லேநினக் குறுதியாம் முறையுமப் பரிசே.                           108

 

ஆண்ட ளப்பில நோற்றனை வேள்விநின் றாற்றி

மூண்ட தீயிடை மூழ்கினோய்க் கெந்தைமுன் னளித்த

மாண்டி டாதபே ராயுளைத் திருவொடும் வாளா

ஈண்டொர் புன்னெறி யாற்றியே இழுக்குவ தியல்போ.                     109

 

சைய மேற்படு வளத்தொடு நீயுநின் தமரும்

உய்ய வேண்டுமேல் அமரர்தஞ் சிறையினை ஒழித்து

வைய மேலறத் தியல்புளி வாழிமற் றிதனைச்

செய்ய லாய்எனின் ஈங்குவந் தடுவனால் திண்ணம்.                      110

 

என்று மற்றிவை யாவையும் வரைபக எறிந்தோன்

உன்ற னக்கறை கென்றன் ஈங்குநீ உம்பர்

வன்ற ளைச்சிறை நீக்கியே அறத்தின்இவ் வளத்தை

நன்று துய்த்தனை நெடிதுநீ வாழ்கென நவின்றான்.                       111

 

மறம கன்றிடா வீரனிங் கினையன வகுத்தே

அறையும் வாசகங் கேட்டலும் வெகுளிமூ ளகத்தன்

பொறியு மிழ்ந்திடு கண்ணினன் புகையுமிழ் உயிப்பன்

எறியும் அங்கையன் இறந்திடும் முறுவலன் இசைப்பான்.          112

 

மேலை யாயிரத் தெட்டெனும் அண்டமும் வென்றே

ஏலு கின்றதோர் தனியிறை யாகிய எனக்குக்

கோல வாலெயி றின்னமுந் தோன்றிலாக் குதலைப்

பால னேகொலாம் இனையன புந்திகள் பகர்வான்.                 113

 

விறலின் மேதகும் அவுணராம் வலியிலார் மிகவும்

வறிய ராகிய தேவராம் மேலவர் மழலைச்

சிறுவ ராந்தனி முதல்வற்கும் அமைச்சியல் செய்வார்

எறியும் நேமிசூழ் உலகத்து வழக்கம்நன் றிதுவே.                 114

 

நறைகொ டார்முடி அவுணா¢தங் குலத்தினை நலித்து

வறுமை செய்தனர் கடவுளர் அவர்திரு மாற்றிக்

குறிய ஏவலுங் கொண்டனன் ஒழுக்கமுங் கொன்றேன்

சிறையும் வைத்தனன் நங்குடித் தமர்முறை செய்தேன்.           115

 

நெடிய மால்மகன் உறங்குநாள் ஆணையை நீங்கித்

தொடுபே ருங்கடல் உலகெலாங் கொள்ளினுஞ் சுரரை

விடுவன் அல்லன்யான் வீடருஞ் சிறையினை விண்மேல்

உடைய அண்டத்தின் உச்சியின் ஒருதலை உய்ப்பேன்.            116

 

தப்பல் செய்திடு மகபதி முதலினோர் தமையும்

இப்ப திக்கணே கொணர்ந்தனன் சிறைசெய இருந்தேன்

கைப்பு குஞ்சிறை விடுவனோ விடுகிலன் கண்டாய்

ஒப்ப ருந்திறல் சூரனென் றொருபெய ருடையேன்.                117

 

மின்னு வச்சிரப் படிவமும் வேறுபல் வரமும்

முன்னொர் ஞான்றுதன் தாதைஎற் களித்திடு முறையைப்

பின்னர் யாவரே பெயர்ப்பவர் பெருஞ்சமர் இயற்றி

என்னை ஆற்றலால் வென்றிடு நீர்மையோர் எவரே.                      118

 

தான மாமுகத் தாரக எம்பியைத் தடிந்த

மான வேற்படை யவன்மிசை வருவது வலித்தேன்

பானல் வாய்ச்சிறு சேயொடு நீயமர் பயிறல்

ஊன மேயெனத் தடுத்தனர் ஆதலால் ஒழிந்தேன்.                 119

 

தூங்கு கையுடைத் தாரக இளவலைத் தொல்லை

ஓங்கல் தன்னொடும் அட்டது நென்னலே உணர்ந்தேன்

பாங்கி னோரையப் பாலன்மேல் உந்தியென் பழியும் 

வாங்கு கின்றனன் நாளையே காண்டியான் மன்னோ.                      120

 

அரிகள் எண்ணிலர் இந்திரர் எண்ணிலர் அல்லாச்

சுரர்கள் எண்ணிலர் அண்டங்க டொறுந்தொறும் இருந்தார்

செருவின் ஆற்றலர் வழுத்தியே போயினர் சிவன்கண்

நெருநல் வந்திடு சிறுவனோ என்னெதிர் நிற்பான்.                 121

 

ஓதி என்பல அமரரை விடுலின் உணர்ச்சி

ஏது மில்லதோர் மகவுதன் புன்மொழி ஏற்றுப்

பேதை ஆதலின் ஒற்றனாய் வந்தனை பிழைத்துப்

போதி நின்னுயிர் தந்தனன் யானெனப் புகன்றான்.                 122

 

அகில மார்பவன் இங்கிவை மொழிதலும் ஐயன்

வெகுளி வெங்கனல் சிந்திட வுளஞ்சுட வெகுண்டு

புகையும் அங்கியும் உயிர்ப்புற மயிர்ப்புறம் பொடிப்ப

நகையும் வந்திடச் சிவந்திட விழியிவை நவில்வான்.                    123

 

உய்ய லாவதோர் பரிசினை உணர்வுறா துழலுங்

கைய கேண்மதி கட்செவி மதியொடு கலந்த

செய்ய வார்சடைப் பரம்பொருள் திருநுதல் விழிசேர்

ஐயன் மேதக உணர்ந்திலை பாலனென் றறைந்தாய்.                      124

 

மானு டத்தரைத் தேவென்பர் வானகத் தவரை

ஏனை முத்தொழி லவரென்பர் இருவர்தங் களையும்

நானி லத்தினிற் பரம்பொருள் இவரென நவில்வார்

ஆன சொற்றிறம் முகமனே சரதமற் றன்றால்.                           125

 

ஆய புல்லிய புகழ்ச்சிபோற் கொள்ளலை அறிவோர்

தேய மாவது யார்க்குமெட் டாதது தௌ¤யில்

தூய வீடுபே றருளுவ துபநிடத் துணிவாம்

வாய்மை யாவது புகலுவன் கேளென வகுப்பான்.                 126

 

மண்ண ளந்திடு மாயனும் வனசமே லவனும் 

எண்ண ரும்பகல் தேடியுங் காண்கிலா திருந்த

பண்ண வன்நுதல் விழியிடைப் பரஞ்சுடர் உருவாய்

உண்ணி றைந்தபே ரருளினான் மதலையாய் உதித்தான்.           127

 

முன்ன வர்க்குமுன் னாகுவோர் தமக்குமுற் பட்டுத்

தன்னை நேரிலா தீசனாந் தனிப்பெயர் தாங்கி

இன்று யிர்க்குயி ராய்அரு வுருவமாய் எவர்க்கும்

அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண்.           128

 

ஈச னேயவன் ஆடலால் மதலையா யினன்காண்

ஆசி லாவவன் அறுமுகத் துண்மையால் அறிநீ

பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன்

தேசு லாவகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல்.                       129

 

பூதம் ஐந்தினுட் கீழ்நிலைத் தாகிய புவியுள்

ஓது  கின்றபல் லண்டத்தின் ஓராயிரத் தெட்டுங்

கோதில் ஆக்கமும் ப்டைகளும் உனக்குமுன் கொடுத்த

ஆதி ஈசனே அவனெனின் மாற்றுவ தரிதோ.                             130

 

ஏத மில்புவி அண்டங்கள் பெற்றனம் என்றே

பேதை யுன்னினை சிறிதவன் தன்னருள் பெறுவோர்

பூதம் மைந்தனும் ஏனைய திறத்தினும் புறத்து

மீது மாமண்டம் எவற்றிற்கும் வேத்தியல் புரிவா£¢.                      131

 

ஆதி யாகிய குடிலையும் ஐவகைப் பொறியும்

வேதம் யாவையுந் தந்திரப் பன்மையும் வேறா

ஓத நின்றிடு கலைகளும் அவ்வவற் றுணர்வாம்

போதம் யாவையுங் குமரவேள் பொருவிலா வுருவம்.                    132

 

எங்க ணும்பணி வதனங்கள் எங்கணும் விழிகள்

எங்க ணுந்திருக் கேள்விகள் எங்கணுங் கரங்கள்

எங்க ணுந்திருக் கழலடி எங்கணும் வடிவம்

எங்க ணுஞ்செறிந் தருள்செயும் அறுமுகத் திறைக்கே.             133

 

தாம ரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும்

ஏமு றப்படு மறைக்கெலாம் ஆதிபெற் றியலும்

ஓமெ னப்படுங் குடிலையே ஒப்பிலா முருகன்

மாமு கத்துளன் றாமவன் தன்மையார் வகுப்பார்.                 134

 

முக்கண் மூர்த்தியும் ஆங்கவன் முண்டகா சனனுஞ்

சக்க ரப்படை அண்ணலும் ஆங்கவன் தானே

திக்குப் பாலங் கதிர்களும் முனிவருஞ் சிறப்பின்

மிக்க தேவரும் ஆங்கவன் யாவர்க்கும் மேலோன்.                135

 

ஈட்டு மன்னுயிர் எவற்றிற்கும் இருவினைப் பயனைக்

கூட்டு வானவன் ஆங்கவை துலையெனக் கூடின்

வேட்ட மேனிலைக் கதிபுரி வானவன் மேலாய்க்

காட்டு வான்முதல் திறமெலாம் ஆங்கவன் கண்டாய்.                     136

 

சிறுவன் போலுறும் குரவனே போலுறும் தினையில்

குறியன் போலுறும் நெடியவ னாகியுங் குறுகும்

நெறியின் இன்னணம் வேறுபல் லுருக்கொடு நிலவும்

அறிவர் நாடருங் கந்தவேள் ஆடலார் அறிவார்.                   137

 

சிவன தாடலின் வடிவமாய் உற்றிடுஞ் செவ்வேள்

அவன தாணையின் அன்றியே பெயர்கிலா தணுவும்

எவர வன்றனி ஆற்றலைக் கடந்தவர் இவண்நீ

தவம யங்கினை அவன்தனி மாயையிற் சார்வாய்.                138

 

எல்லை இல்லதோர் பொருளெலாம் ஆகுறு மியாவும்

அல்ல னாகியும் இருந்திடும் அருவமு மாகும்

பல்வ கைப்படும் உருக்கொளும் புதியரிற் பயிலுந்

தொல்லை யாதியாம் அநாதியும் ஆகியே தோன்றும்.                     139

 

வாரி வீழ்தரும் புன்னுனித் துள்ளிகண் மான

நேரி லாதமா¢ குமரவேள் நெடிய பேர் உருவின்

ஓரு ரோமத்தின் உலப்பிலா அண்டங்கள் உதிக்கும்

ஆர வன்றிரு மேனியின் பெருமையை அறிவார்.                 140

 

தொலைவி லாவுயிர்த் தொகுதியுந் தொல்லையைம் பூதத்

தலகி லண்டமும் ஏனவும் ஆதியங் குமரன்

நிலைகொள் மேனியின் நிவர்தரும் உரோமத்தின் நின்றே

உலவை யின்றிமுன் னுதித்திடும் இறுதிநாள் ஒடுங்கும்.           141

 

ஆவ தாகிய வடிவத்தின் அகிலமுஞ் செறிந்து

மேவு மந்நிலை அனையனே அல்லது வேறிங்

கேவர் கண்டனர் அவ்வுரு வியற்கையை எங்கோன்

தேவர் யாவர்க்குங் காட்டிடக் கண்டனர் சிறிது.                   142

 

தண்டல் இல்லதோர் ஒன்றொரு மயிர்நுனித் தலையின்

அண்ட மெண்ணில கோடிகள் கோவைபட் டசையப்

பண்டு மேருவிற் கந்தவேள் கொண்டதோர் படிவங்

கண்டி லாய்கொலாங் கணிப்பிலாப் பவம்புரி கடியோய்.            143

 

அன்று கந்தவேள் அமைந்ததோர் பெருவடி வதனுள்

ஒன்று ரோமத்தின் இருந்ததற் காற்றிடா துனதாய்த்

துன்றும் ஆயிரத் தெட்டெனும் அண்டமாந் தொகையும்

இன்று நீயது தெரிகிலை சிறுவனென் றிசைத்தாய்.                144

 

அளப்ப ருங்குணத் தாதியாம் எம்பிரான் அமரர்

தளைப்ப டுஞ்சிறை மாற்றவுஞ் சதுர்முகன் முதலோர்

கொளப்ப டுந்துயர் அகற்றவுங் கொடியரை யறுத்து

வளப்ப டும்பரி சுவகெலாம் போற்றவும் வந்தான்.                145

 

வாழி யானநின் ஆயுளும் வன்மையும் வரமுங்

கேழில் சுற்றமும் படைகளும் வான்றொடக் கிளர்ந்து

பூழி யாலுயர் மால்வரைச் சூழலிற் புகுந்த

ஊழி மாருதம் போலடும் எம்பிரான் ஒருவேல்.                           146

 

ஆகை யாலிவை உணா¢ந்திலை இணையிலா தமர்ந்த

ஏக நாயக முதலவனைப் பாலனென் றிகழ்ந்தாய்

சேகு லாவிய மனமுடைக் கற்பிலாச் சிறியோய்

போக போகயாம் இவ்வொரு தவற்றையும் பொறுத்தாம்.          147

 

நொய்ய சொற்களால் எந்தையை இகழ்ந்தனை நொடிப்பின்

வெய்ய நாத்துமித் துன்னுயிர் வாங்குவம் விடுத்த

ஐயன் ஆணையன் றாதலின் அளித்தனம் அதனால்

உய்தி இப்பகல் வேற்படைக் குண்டியாய் உறைவோய்.                    148

 

உறுதி இன்னமொன் றுரைக்குவம் நீயுமுன் கிளையும்

இறுதி இன்றியே எஞ்சுதல் வேண்டுமேல் அமையோர்

சிறைவி டுக்குதி இகலினைத் தவிருதி செவ்வேள்

அறைக ழற்றுணை அரணமென் றுன்னியே அமர்தி.                      149

 

வேறு

 

எனறிவை பலப்பல இகப்பில்பெரு மாயைக்

குன்றெறி படைக்குரிசில் கொள்கைய தியம்பப்

புன்றொழில் படைத்துடைய பூரியன் உணர்ந்தே

கன்றினன் உயிர்த்தினைய கட்டுரைசெய் கின்றான்.        150

 

கூரெயி றெழாதகுழ விச்சிறுவன் உய்த்த

சாரென நினைந்துனது தன்னுயிர் விடுத்தேன்

பேரலை அவன்பெருமை பின்னுமொழி கின்றாய்

வீரமும் உரைக்குதியென் வெய்யசின முன்னாய்.          151

 

கொஞ்சுமொழ கொண்டகுழ விச்சிறுவன் மேலாய்

எஞ்சலில் தோர்முதல்வ னேயெனினு மாக

அஞ்சிடுவ னோசிறிதும் அண்டநிலை தோறும்

விஞ்சியமர் பண்ணவர்கள் யாவரையும் வென்றேன்.              152

 

சேண்பரம தாகியமர் தேவர்சிறை தன்னை

வீண்படு கனாவினும் விடுக்கநினை கில்லேன்

ஏண்பல பகர்ந்தனை எனக்கெதிர் இருந்தே

காண்பன தெலாமொரு கணத்திலினி யென்றான்.          153

 

கொற்றமிகு சூரனிவை கூறிஅயல் நின்ற

அற்றமறு மானவருள் ஆயிரரை நோக்கி

ஒற்றுமைசெய் தோனுயிர் ஒறுத்தல்பழி வல்லே

பற்றியிவ னைச்சிறை படுத்திடுதி ரென்றான்.                     154

 

என்னலுமவ் வாயிரரும் ஏற்றெரி விழித்துத்

துன்னுகன லைப்புகை சுலாவுவது மானப்

பொன்னின்மிளிர் பீடிகை அமர்ந்தபுகழ் வீரன்

தன்னைவளை குற்றனர் தருக்கினொடு பற்ற.             155

 

மிடற்றகுவர் சூழ்வரலும் வீரனெழுந் தன்னோர்

முடிச்சிகை ஒராயிரமும் மொய்ம்பினொரு கையால்

பிடித்தவுணர் மன்னன்அமர் பேரவை நிலத்தின்

அடித்தனன் நொடிப்பிலவா¢ ஆவிமுழு துண்டான்.        156

 

மார்புடைய மொய்ம்பொசிய வார்குருதி சோர

ஓர்புடையின் யாவரையும் ஒல்லைதனின் அட்டே

சூர்புடையின் முன்னநனி துன்னும்வகை வீசிச்

சீர்புடைய நம்பியிவை செப்பல்புரி கின்றான்.                     157

 

எந்தைநெடு வேலுனை இனித்தடிதல் திண்ணம்

மந்தமுறு முன்னமுன தைம்புலனும் வெ•க

வந்தபல துப்புரவும் வல்லைபெரி தார்ந்தே

புந்திதௌ¤ வாய்அமர்தி போந்திடுவ னென்றான்.          158

 

சீயவிறல் அண்ணலிவை செப்பியகல் காலை

ஆயவன் இருந்திடும் அரித்தவிசு தானும்

மீயுறவெ ழுந்துவிசும் பிற்றலையின் ஏகி

மாயையென ஒல்லையின் மறைந்துபடர்ந் தன்றே.        159

 

ஆகத் திருவிருத்தம் - 639

     - - -

 

 

13.  ச த மு க ன்  வ தை ப்  ப ட ல ம்

 

ஒண்ணில வெயிற்றினரொ ராயிரரை அட்டே

எண்ணலன் அவைக்களம் இகந்துபடர் காலைக்

கண்ணினழல் காலும்வகை கண்டுபுடை யாக

நண்ணுசத மாமுகனை நோக்கிநவில் கின்றான்.           1

 

ஆறுமுகன் ஆளையிவன் ஆயிரரை இங்ஙன்

கோறல்புரிந் தானெனது கொற்றமுழு தௌ¢ளி

வேறலுடை யோர்களென மேன்மைபல செப்பிச்

சேறல்புரி வான்தவிசும் உம்பரிடை செல்ல.                      2

 

ஒட்டியநம் வீரரை ஒறுத்தகல் வனேனும்

விட்டதொரு தூதனொடு வெஞ்சமர் இயற்றி

அட்டல்பழி யாகுமவன் ஆற்றலை அடக்கிக்

கட்டிவிரை வால்வருகெ னக்கழற லோடும்.                     3

 

சூற்குல முகிற்பொருவு சூரனடி தாழா

ஏற்கும்விடை பெற்றிசைவின் ஏகுதல் புரிந்தான்

நாற்கடலும் மேவினும் நதுப்பரிய ஊழிக்

காற்கனலின் ஓதைதொடர் காட்சியது மான.                      4

 

ஏகுசத மாமுகன் இலக்கமற வீரர்

பாகம்வர எண்ணில்படை பாணிமிசை பற்றி

வேகமொடு சென்றதனி வேலன்விடு வீர

வாகுவினை எய்தியொரு மாற்றம்அறை கின்றான்.               5

 

காவல்பல நீங்கிவரு கள்வஉல குள்ளோர்

ஏவரும வியப்பவரும் எங்களிறை முன்னம்

மேவினை இகழ்ந்துசில வீரருயிர் வௌவிப்

போவதெவன் நில்லுனது போர்வலி அழிப்பேன்.           6

 

பட்டிமை உருக்கள்கொடு பாறல்அரி தாசை

எட்டுள பரப்பதனுள் ஆண்டகல்வை யேனும்

விட்டிடுவ னோவென விளம்பிவெரிந் எய்திக்

கிட்டுதலும் வீரனிது கேட்டனன் எதிர்ந்தான்.                      7

 

வேறு

 

கொற்ற வேலுடை அண்ணல்தன் தொழியினைக் கொண்டிலன் இகழ்ந்தென்னைப், 

பற்ற ஆயிரர் தஙகளை விடுத்தலும் படுத்தனன் பெயர்காலை, 

மற்று மீதொரு வயவனை உய்த்தனன் மன்னவன் இவன் ஆவி, 

செற்று மாநக ரந்தனை அழித்தனன் செல்லுவன் இனியென்றான்.          8

 

கருதி இன்னணஞ் சதமுகன் எனப்படு காவலன் றனைநோக்கிக், 

குருதி வேலுடைப் பண்ணவன் அடிமனங் கொண்டுதிண் டிறல்வாகு, 

பொருதல் உன்னியே ஈண்டறை கூவினை பொள்ளெனப் படையோடு, 

வருதி யாலெனத் தௌ¢விளி யெடுத்தனன் மறலிக்கும் இறைபோல்வான்.  9

 

எல்லை யன்னதிற் சதமுகற் சூழ்தரும் இலக்கரும் எதிரூன்றி, 

வில்லு மிழ்ந்திடு வெஞ்சாந் தொடுத்தனர் வேற்படை விடுக்கின்றார்.  

கல்லெ னும்படி நேமிகள் உருட்டினர் கப்பணஞ் சிதறுற்றார்.  

வல்லை முத்தலைப் படையெழு மழுக்கொடே எறிகின்றார்.        10

 

அணிகள் பட்டவர் விட்டஇப் படைவகை அண்ணன்மேற் புகலோடுந், 

துணிகள் பட்டன நெரிந்தன எரிந்தன துகளுமாய்ப் போயிற்றால், 

மணிகள் பட்டிடும் இருஞ்சிறைக் கலுழர்க்குள் வலியன்மேற் படுநொய்ய, 

பணிகள் பட்டன போன்றன வேறிலை படியெடுத் துரைத்தற்கே.    11

 

இலக்க மாகிமுன் னின்றபேர் ஆண்டகை இவர்செய லினைநோக்கி, 

இலக்க மாய்முழு துலகமுந் துளக்கியே இராயிரப் பத்தென்னும், 

இலக்க மாமுடி கொண்டதோர் சூளிகை இம்மெனப் பறித்தேந்தி, 

இலக்கமாகிய யெதிர்பொரு தானவர் தங்கள்மேல் எறிந்திட்டான்.    12

 

ஏதி லான்விடு சூளிகை சிறகர்பெற் றிறந்துவீழ் மேருப்போல், 

மீது சென்றமர் இயற்றியே நின்றிடும் வெய்யவர் மிசையெய்தித், 

தாது முற்றவுஞ் சாந்துபட் டொருங்குறத் தனுவெலாஞ் சிதைத்திட்டே 

ஓத நீர்முகி லார்ப்பொடு புவிக்கண்வீழ்ந் துடைந்தன உதிராகி.      13

 

கொடிசெ றிந்திடு சூளிகை தன்னுடன் அவுணா¢தங் குழாங் கொண்ட, 

முடிசி தைந்தன நாசிநீ டலையெலாம் முடிந்தன முடிவில்லா, 

வடிவ மைந்திடு கன்னகூ டத்தொகை மாய்ந்தன நிலைகொள்ளும், 

அடித கர்ந்தன கொடுங்கையும் மாண்டன ஒழிந்தவும் அழிவுற்ற.   14

 

இலக்கர் தம்மையுஞ் சூளிகை தன்னுடன் இமைப்பொழு தினில் அட்டு, 

நிலக்கண் வீரனின் றிடுதலுஞ் சதமுகன் நிரைவிழி கொடுநோக்கிக், 

கலக்க நண்ணியே தமரினைக் காண்கிலன் கவன்றனன் தௌ¤வெய்தி, 

உலக்கை சூலம்வேல் சக்கரந் தோமரம் ஓச்சுதல் உறகின்றான்.     15

 

உற்ற காலையின் ஒண்டிறல் மொய்ம்பினோன் உருகெழு சினஞ் செய்தோர், 

பொற்றை நேர்தரு சிகரியைப் பறித்தனன் பொள்ளென எறிகாலை, 

மற்றொர் வார்சிலை வணக்கியே வெய்யதீ வாளியா யிரம் பூட்டி, 

இற்று வீழ்வகை இடைதனில் அறுத்தனன் எறிதரு கதிர்வேலான்.   16

 

அறுத்த நூறுகோல் பின்னரும் ஆங்கவன் ஆகத்தின் நடுவெய்தச், 

செறித்த காலையின் வீரவா குப்பெயர்ச் செம்மல்போய் அவன்வில்லைப், 

பறித்த னன்முறித் தெறிதலுஞ் சதமுகன் பற்றவீ திடையென்னாக், 

குறித்தொ ரைம்பதிற் றிருகரம் ஓச்சியே குரிசிலைப் பிடித்திட்டான்.        17

 

பிடித்த தானவத் தலைவனை அண்ணலோர் பெரும்புயங் கொடுதாக்கிப், 

படித்த லைப்படத் தள்ளலும் வீழ்ந்துளான் பதைபதைத் தெழுகாலை.  

அடித்த லத்தினால் உதைத்தனன் அசனியால் அழுங்குறும்அரவம்போல, 

துடிப்ப வேயுரத் தொருகழல் உறுத்தினன் சோரிவாய் தொறுஞ்சோர.        18

 

கந்த னப்படு மொய்ம்புடை வெய்யசூர் கட்டுரை முறைபோற்றி, 

வந்தெ திர்த்திடு சதமுகத தவுணனை மிதித்திடும் அறமைந்தன், 

அந்த கப்பெயர் அசுரனை யாற்றல்பெற் றமர்முய லகன்றன்னைத், 

தந்தியைப்பதம் ஒன்றுகொண் டூன்றிய தாதைபோல் திகழ்கின்றான்.         19

 

வேறு

 

மின்னல் வாளெயிற் றவுனன் மார்பகம் விடரெ னும்படி விள்ளவே, 

தன்னொர் பாத முறுத்தி மற்றொரு தாளி னைக்கொடு தள்ளியே, 

சென்னி யாவும் உருட்டி னான்திசை முற்றும் நின்று பரித்திடுங், 

கன்ன மார்மத மால்க ளிற்றினும் வன்மை சான்றிடு கழலினான்.           20

 

நூறு சென்னியும் இடறி யாங்கொரு நொடிவரைப் பின்முன் அவுணனை, 

ஈறு செய்தனன் அதுமு டித்தபின் எல்லை யின்சின மெய்தியே, 

ஆறு மாமுக வள்ளல் வாய்மை இகழந்து ளான்அவை யத்தைமுன், 

ஈறு செய்துபின் இந்நக ரத்தை யென்று நினைந்தனன்.             21

 

               ஆகத் திருவிருத்தம் - 660

                                     - - -

 

 

14.  கா வ லா ள ர்  வ தை ப்  ப ட ல ம்

 

சுடரும் வேற்படைத் தொல்கும ரேசன

தடிகள் முன்னி அருளுடன் ஆண்டகை

படிய ளந்திடு பண்ணவ னாமென

நெடிய பேருருக் கொண்டுநின் றானரோ.                 1

 

திசைய ளந்தன திண்புயஞ் சென்றுசேண்

மிசைய ளந்தன மேதகு நீண்முடி

வசுதை யாவும் அளந்தன வார்கழல்

அசைவ ருந்திறல் ஆடவன் நிற்பவே.                           2

 

திருவு லாங்கழற் சீறடிச் செம்மல்பேர்

உருவு தாங்கி உகந்தனன் நிற்றலும்

அரவின் வேந்தரும் ஆதியங் கூர்மரும்

வெருவி னார்கள் வியன்பொறை ஆற்றலார்.                     3

 

கதிரெ றித்திடு காமரு பூணினான்

மதுகை பெற்ற வடிவொடு நிற்றலும்

அதுப ரித்தற் கருமையின் ஆற்றவும்

விதலை யுற்றது வீர மகேந்திரம்.                               4

 

உலங்கொள் வாகுவின் ஒண்பதம் ஊன்றலும்

விலங்கி யேதளர் வீர மகேந்திரம்

இலங்கை நீர்மையெய் தாமல் இருந்ததால்

குலங்கொள் தானவக் கோமகன் ஆணையால்.            5

 

சேண ளாவிய சென்னியன் எண்டிசை

காண நிற்புறு காட்சியன் கந்தவேள்

ஆணை காட்டிநி றுவிய ஆடலாந்

தாணு வென்னத் தமியன் விளங்கினான்.                 6

 

சான்ற கேள்வித் தலைமகன் தாட்டுணை

ஊன்று கின்ற வுழிதொறும் மாநிலம்

ஆன்று கீண்டிட அவ்வப் புழைதொறுங்

தோன்று கின்றன சூழ்கடல் நீத்தமே.                            7

 

ஆத்தன் ஊன்றும் அடிதொறுந் தோன்றிய

நீத்தம் யாவும் நெடுந்திறல் வெய்யசூர்

வாய்த்த கோயில் வளைந்திறை போற்றிய

வேத்த வைக்களந் தன்னினும் மேவிய.                  8

 

பூழை கொண்டு புறம்படர் நீத்தநீர்

மாழை கொண்டவன் கோயில் வளைந்துராய்ப்

பேழை கொண்ட பிணிப்பறு பாந்தள்போல்

கூழை கொண்ட மறுகிற் குலாயதே.                             9

 

துய்ய  பூழை தொறுந்தொறுந் தோன்றுநீர்

மையல் வெங்கரி வாம்பரி தேர்படை

கைய ரிக்கொடு காசினி யாறுபோல்

செய்ய மாநகர் யாங்கணுஞ் சென்றதே.                  10

 

தோட்ட தன்ன சுழிப்படு வாரியின்

ஈட்ட மாநகர் வீதிதொ றேகியே

பாட்டின் மாளிகை பற்பல சாடியே

மீட்டும் ஒல்லையின் வேலை மடுத்ததே.                11

 

எம்மை யாளுடை எந்தைதன் தூதுவன்

செம்மை நீடு திருவுரு நோக்கியே

கைம்ம றிக்கொடு கண்டனர் யாவரும்

அம்ம வோவென அச்சமுற் றோடினார்.                  12

 

மாவு லாவரும் மன்னவன் கோயிலுட்

காவ லாளர்இக் காளையைக் கண்ணுறீஇ

ஓவி தோர்வஞ்சகன் உற்றனன் ஈண்டெனாக்

கூவி ளித்தனர் தத்தமிற் கூடினார்.                              13

 

கூடு கின்ற குணிப்பருங் காவலோர்

நீடு மெய்கொடு நின்றவற் கஞ்சியே

ஆடல் பூண்டிலம் என்னின் அரசனே

சாடு நம்மைச் சரதமென் றெண்ணினா£¢.                14

 

குமரி மாமதிற் கோயிலுட் போற்றியே

அமரி யோர்கள ரைம்பது வௌ¢ளத்தர்

திமிர மேனியர் தீயுகு கண்ணினர்

சமரி யற்றத் தலைத்தலை மண்டினார்.                          15

 

மண்டி மற்றவர் வல்லெழுத் தோமரம்

பிண்டி பாலம் பெருங்கதை ஆதியாக்

கொண்ட கொண்ட கொடும்படை வீசியே

அண்டம் விண்டிட ஆர்த்தனர் ஆடினார்.                  16

 

ஆடும் எல்லை அடுபடைத் தானவர்

பாடு சூழ்ந்த பரிசினை நோக்கினான்

நீடு சான்ற இடித்தொகை ஆயிர

கோடி போற்புயங் கொட்டிநின் றார்ப்பவே.                17

 

அலைக்க வந்த அவுணப் படையெலாங்

கலக்க மூழ்கிக் கருத்துணர் வ•கியே

உலக்கு றாத உருமிடி உண்டிடும்

புலைக்க டுந்தொழிற் புள்ளென லாயவே.                 18

 

வேறு

 

பன்மழைக் குலங்களிற் படைக்கலங்கள் யாவையும்

வன்மைபெற்ற வீரருய்ப்ப வந்துமேனி படுதலுஞ்

சின்மயத்தன் ஒற்றன்மிக்க செய்யவீழ் விழுத்திய

தொன்மரத் தியற்கைபோன்று சோரிசோர நின்றனன்.                      19

 

ஆனகாலை வீரவாகு அறிவனங்கி யிற்சினைஇ

மானவீரர் மீதலாது வாளெடுக்க லேனெனாத்

தேனின்மாப் பெருங்கடல் திளைத்தலைக்கு மத்தெனத்

தானவப் பதாதியைத் தடிந்தலைத்தல் மேயினான்.                20

 

மிதித்தனன் கொதித்தனன் விடுத்திலன் படுத்தனன்

சதைத்தனன் புதைத்தனன் தகர்த்தனன் துகைத்தனன்

உதைத்தனன் குதித்தனன் உருட்டினன் புரட்டினன்

சிதைத்தனன் செகுத்தனன் செருக்கினன் தருக்கினன்.              21

 

சிரத்தினை நெரித்தனன் திறம்புயம் இறுத்தனன்

கரத்தினை முரித்தனன் களத்தினைத் திரித்தனன்

உரத்தினைப் பிரித்தனன் உருத்தனன் சிரித்தனன்

புரத்தினை உரித்தனன் பொடித்தனன் படைத்திறம்.                22

 

எடுத்தனன் சுழற்றினன் எறிந்தனன் சிலோர்தமைப்

புடைத்தனன் இடித்தனன் புயத்தினாற் சிலோர்தமைப்

பிடித்தனன் பிசைந்தனன் பிழிந்தனன் சிலோர்தமை

அடித்தலங் கொடித்தலத் தரைத்தனன் சிலோர்தமை.                      23

 

பெருத்தனன் சிறுத்தனன் பெயர்ந்தும்வேறு பல்லுருத்

தரித்தனன் நடந்தனன் தனித்தனி தொடர்ந்தனன்

மருத்தெனக் கறங்கினன் வளைந்தனன் கிளர்ந்தனன்

ஒருத்தன்வௌ¢ளம் ஐம்பது உலக்குறக் கலக்கினான்.                     24

 

மஞ்ஞை அன்னம் ஒண்புறா மடக்குயில் ரிட்பயில் 

செய்ஞ்ஞலங்கொள் மாடமீது சேனங்கூளி பிள்ளைகள்

பிஞ்ஞகன் குமாரனாடு பேரமர்க் களம்படும்

அஞ்ஞையாளர் குருதியூன் அருந்துமா றிருந்தவே.                25

 

மானினஞ் செறிந்திரைந்து வந்தவெல்லை தன்னிடைத்

தானொர்சிங்க ஏறுபுக்க தன்மைபோல் அவுணர்தங்

கோனிருந்த உறையுளிற் குலாயகாவ லாளராஞ்

சேனைவௌ¢ளம் ஐம்பதுஞ் சினத்தின்வல்லை சிந்தினான்.        26

 

முறிந்தனர் உறுப்பியாக்கை முற்றும்வேறு வேறவாய்ப்

பிறிந்தனர் தகர்ந்தனர் பிறங்குசென்னி சோரியுட்

செறிந்தனர் புதைந்தனர் சிதைந்தனர் உருண்டனர்

மறிந்தனர் இறந்தனா¢ மடிந்தனர் கிடந்தனர்.                             27

 

இன்னபான்மை வீற்றுவீற்றின் அவுணர்தானை யாவையுஞ்

சின்னபின்ன மாகியே சிதைந்துவீழந் துலந்திட

உன்னுகின்ற முன்னமட் டுலம்பினான் சிலம்பினின்

மன்னன்மங்கை நூபுரத்தின் வந்தவீர வாகுவே.                   28

 

வள்ளல்நின்று சமரிழைப்ப மாண்டவீரர் யாக்கையின்

உள்ளதாது வானஏழும் உருவம்வேறு காண்கிலா

தள்ளலாகி யொன்றுபட்ட தங்கிதன்னின் உருகியே

வௌ¢ளியாதி உலகம்யாவும் விரவும்வண்ணம் என்னவே.         29

 

ஆகத் திருவிருத்தம் - 689

      - - -

 

 

15.  ந க ர ழி  ப ட ல ம்

 

ஆசுறும் அவுண வௌ¢ளம் ஐம்பது முடித்தோன் ஐஞ்ஞூ

றோசனை அளவை யான்றே ஒராயிர மும்ப ரேகித்

தேசுறு மேரு வென்னச் சிகரமோ ரிலக்கஞ் சூடி

வீசுபொன் சுடர நின்ற வேரமொன் றங்கட் கண்டான்.                     1

 

புறத்திருள் இரிய வைகும் பொலஞ்சுடர்ப் பொன்செய் வேரந்

திறத்தியல் கோயில் முன்னஞ் சேர்ந்தது தன்னை வீரன்

பறித்தொரு கரத்தின் ஏந்திப் பதகனாஞ் சூர பன்மன்

அறத்தியல் இழுக்கி வைகும் அவைக்களம் வீசி ஆர்த்தான்.               2

 

பன்மணி செறிந்த பொற்பிற் பாயொளி எரிபொன் வேரம்

மன்னவன் உறையுஞ் செம்பொன் மாயிரு மன்றில் போதல்

மின்னவிர் மேரு வாதி வெற்பெலாம் மிகலின் ஒன்றிப்

பொன்னகர் பொடிப்பச் செல்லுந் தன்மையைப் போலும்அம்மா.     3

 

வார்த்தரு கழற்கால் வீரன் வானுரும் ஏறும் உட்க

ஆர்த்திடு துழனி யேகி அரசன்மே வியவத் தாணி

சேர்த்தவர் கன்னத் தூடு செறியுமுன் எறித லுற்ற

பேர்த்திடு செம்பொன் வேரம் பேரவை மிசையுற் றன்றே.          4

 

விற்செறி தூபிச் செம்பொன் வியன்மணி கஞலும் வேரங்

கற்செறி பெருந்தோள் வீரன் எறிதலுங் கடிது  நண்ணிப்

பொற்செறி மார்பிற் சூரும் புதல்வருஞ் சிலரும் வைகுஞ்

சிற்சில இடையே அன்றி மன்றெலாஞ் சிந்திற் றாமால்.           5

 

தடத்தனி வேரங் கீண்டு தபனியத் தவைக்கண் ஓச்சி

இடித்தனன் ஒருதான் நிற்கும் எம்பிரா னேவல் தூதன்

படைத்தளித திறுதி வேலைப் பசும்பொனார் தசும்பின் அண்டம்

உடைத்துல கழித்து நிற்கும் ஒருபெருங் கடவுள் ஒத்தான்.         6

 

புலவுகொள் அலகு வெவ்வாய்ப் புட்செறி பொதும்பர் தன்னில்

பலமுடை உருமு வீழப் பட்டதோர் பரிச தென்னத்

தொலைவகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்சீர்

மலிவுறு சனங்க ளோடு மன்றமங் குற்ற தம்மா.                  7

 

இடிந்தன மிசையின் எல்லை இற்றபித் திகையின் சூழல்

பொடிந்தன உத்தி ரங்கள் போதிகை பூழி யாகி

முடிந்தன மதலை யாவும் முரிந்தன கபோதம் வீழ்ந்த

மடிந்தன திருவுஞ் சீரும் மன்றழி வுற்ற தன்றே.                  8

 

பீடிகை புரைத்த பொற்பிற் பேரவை தகர்த லோடும்

பாடுற அரசர் சூழ்ந்த பரிசனர் தம்முட் சில்லோர்

ஓடினர் சிலவர் மெய்யூ றுற்றனர் சிலவர் நெக்கு 

வீடினர் சிலவர் ஆற்ற மெலிந்தனர் புலம்ப லுற்றார்.                      9

 

நெக்கது பொதியி லாக நிரந்தது செம்பொற் பூழி

திக்கொடு புவியும் வானுஞ் செறிந்தன அவுண ராகித்

தொக்கனர் உடைந்து மாய்ந்து தொகைபிரிந் தழிந்தார் தொல்லைத் 

தக்கனின் உணர்வு தீர்ந்த தகுவர்கோன் இவற்றைக் கண்டான்.      10

 

ஆயிர நாமத் தண்ணல் அனையவன் வன்மை காணா

ஆயிரம் வடவை யேபோல் அழன்றுதன் னயலின் நின்ற

ஆயிர நெடுந்தோள் ஐஞ்ஞூ றானனங் கொண்ட தீயோர்

ஆயிரர் தம்மை நோக்கி அடலுரும் ஏற்றிற் சொல்வான்.           11

 

விழிப்பரு நிவப்பின் ஓங்கும் வேரமொன் றதனைக் கீண்டே

தெழிப்பொடு குமரன் தூதன் செலுத்தினன் செம்பொன் மன்றம்

இழிப்புறத் தகர்ந்து வீழ்ந்த தீண்டுசில் லிடமே அன்றிப்

பழிப்பெனக் கிதன்மேல் உண்டோ பட்டதென் புகழும் மன்னோ.     12

 

கோறலே கொற்ற மன்றால் ஒற்றனைக் குறுகி நீவிர்

மாறுபோர் இயற்றி யேனும் மற்றவன் வழாத வாற்றல்

ஈறுசெய் திடாது பற்றி எம்முனர்த் தருதிர் மெய்யின்

ஊறுசெய் தவனை வானோ ருடன்சிறை உய்ப்ப னென்றான்.               13

 

அன்னவர் அதனைக் கேளா அரசவீ தருளிக் கேண்மோ

ஒன்னலன் தூதன் சோரி உயிரொடு குடித்தற் குற்றாம்

நின்னருள் ஆணை நாடி நெஞ்சகம் புழுங்கி யஞ்சி

இன்னதோர் பொழுதுந் தாழ்த்தேம் இனியது புரிது மென்றார்.              14

 

என்றனர் வணக்கஞ் செய்ய இனிதென உவகை பூத்துக்

கன்றிய அவுணர் தங்கள் காவலன் விடுப்ப அங்கட்

சென்றனர் பத்து நூற்றுத் திறலுடை மொய்ம்பர் முன்னம்

நின்றிடு வீர வாகு நிலைமையை உரைக்க லுற்றாம்.                     15

 

வேறு

                

வேரம தெறிந்தவை வீட்டி நின்றுளான்

சூருரை நகர்வளந் தொலைச்சிச் சூழுநர்

சேருறும் இருக்கையுஞ் சிதைப்பன் இன்றெனா

ஓருறு புந்தியில் உன்னி னாரோ.                        16

 

மறிப்பிணை முதலிய மான்கள் புள்ளினஞ்

சிறப்புறு தண்டலை மணியிற் செம்பொனிற்

குறிப்பினர் குயிற்றுசெய் குன்றம் யாவையும்

பறித்தனன் திசைதொறும் பரவ வீசினான்.                17

 

வரைவயி றுயிர்த்திடு மாசில் பல்பகை

அரதன நிரைகளின் அணிய செம்பொனின்

மரபினில் இயற்றிய வரம்பில் தெற்றிகள்

விரைவொடு தொட்டனன் எடுத்து வீசினான்.                     18

 

முடிவகல் பேழையின் மூட்டு நீக்கியே

அடியுறு கொள்கலம் அவற்றைச் சாய்த்தெனப்

படியுறு மண்டபம் பலவுந் தொட்டெடா

இடிபுரை ஓதையான் யாண்டும் வீசினான்.                19

 

மலரயன் மிசையுறு மாயற் புல்லுவான்

நிலமகள் கைகளை நீட்டி யென்னவான்

உலகெலாம் இகந்துமேல் ஓங்கு கோபுரம்

பலபல பறித்தனன் பாங்கர் ஓச்சினான்.                   20

 

மூளுறும் எரிசிகை முடித்துத் தானவர்

கேளடு தமித்தமி கெழுமி யுற்றென

வாளுறு மாமணி வயங்கு தூபிகைச்

சூளிகை பலபல தொட்டு வீசினான்.                             21

 

கற்றிடும் விஞ்சையின் கழகம் பல்கடைத்

தெற்றிகள் வேதிகை சிறந்த சாலைகள்

துற்றிடு பழுமரச் சோலை வாவிகள்

மற்றுள பிறவொடும் மட்டித் தானரோ.                          22

 

கந்துக வியனிரை கரிகள் தேர்த்தொகை

பந்தியிற் சாலையிற் பயின்று நின்றன

அந்தமின் றாயின் அள்ளி அள்ளியே

உந்தினன் திசைதொறும் உரற்றி வீழவே.                23

 

நிலவரை சூழ்தரு நேமி வெற்பென

மலிதரு செம்மணி வகையிற் பண்ணிய

பலவகை இயந்திரப் பதண இஞ்சிகள்

ஒலிகழற் காலினான் உதைத்து வீட்டினான்.                      24

 

பூழியம் பொற்புயப் புனிதன் வெய்யசூர்

வாழுறு கோநகர்  வளத்தை யின்னணம்

ஊழியின் மருத்தென உலாவி யட்டபின்

சூழுறு கிடங்கருந் தூர்த்திட் டானரோ.                    25

 

அறந்தலை நின்றிடா அரசன் கோயில்நின்

றெறிந்திடு சிகரிகள் இலங்கு சூளிகை

நிறைந்திடு மண்டபம் நெருங்கு காமர்காச்

செறிந்தன பிறவொடு சென்று சேணெலாம்.                      26

 

உளர்ந்திடு வரியளி யுலாவு தொங்கலான்

வளர்ந்திடு பாணியான் மன்னன் செல்வமாய்க்

களைந்தெறி கின்றன கணிப்பி லாதவுங்

கிளர்ந்திடு நெடுமுகில் கிழித்துச் சென்றவே.                      27

 

சூரெனும் அவுணர்கோன் படைத்த தொல்வளஞ்

சேரிய மிசைவரத் தெரிந்து வானிடைச்

சாருறு கடவுளர் தம்முள் ஏங்கியே

ஏரியல் தொகைபிரிந் திரியல் போயினார்.                28

 

ஊனிவர் குருதிவேல் ஒருவன் ஓச்சிய

தானவர் கோன்வளந் தகைந்து விண்ணவர்

மேனிகழ் பதங்களை வீட்டி ஏகியே

வானதி தன்னையும் வல்லை தூர்த்தவே.                29

 

வெறித்திடு தார்ப்புய விடலை நொய்தினில்

பறித்தெறி அவுணர்கோன் பலவ ளங்களும்

எறித்திடு தீங்கதிர் எல்லை வேந்தனை

மறைத்தன பணிபல மயங்கிச் சூழ்ந்தபோல்.                     30

 

சோலையின் மண்டபத் தொகையிற் சூளிகைப்

பாலினிற் சிகரியிற் பயின்ற புள்ளெலாம்

மேலுறு செலவினில் விரைவின் ஏகியே

மாலயன் புள்ளடு மருவி வைகியே.                             31

 

செஞ்சுடர்ச் சூளிகை சிகர மாதிகள்

விஞ்சிய மிசைவர விழித்துத் தாளிலோன்

எஞ்சிய  வுடலமும் இறுங்கொல் இன்றெனா

அஞ்சினன் அழுங்கினன் அலரி பாகனே.                  32

 

வள்ளுறு வசிகெழு வயிர மாமுடி

உள்ளபல் சூளிகை உம்பர் செல்வன

பிள்ளைகள் எறிந்திடப் பிறங்கு பம்பரம்

பொள்ளென ஈண்டிவான் போவ போன்றவே.                     33

 

மீப்படு வியன்முகில கிழித்து விண்மிசை

மாப்பெருஞ் சிகரிகள் வல்லை செல்வன

நீப்பருங் ககனமான் நெடுங்க துப்பினில்

சீப்பிடு கின்றதோர் செய்கை போலுமால்.                 34

 

பயனுறு பழுமரப் பைம்பொற் காமர்கா

வயனெறி தந்திட அகல்விண் செல்வன

நயனறும் அவுணனூர் நணிய கற்பகம்

வியனுல இருந்திட மீள்வ போன்றவே.                          35

 

ஐயன தொற்றுவன் அள்ளி வீசிய

செய்யபல் பொருள்களுஞ் செறிந்து சேணெலாங்

கொய்யுளை வயப்பரிக் கொடிஞ்சித் தேர்மிசை

வெய்யவன் செலவினை விலக்கு கின்றவே.                     36

 

திருமிகு சூளிகை சிகர மாதகள்

நிரல்பட ஏகியே நிரந்த பல்வகைப்

பருமணி யெரிசுடர் பரப்பி வான்படர்

இரவிதன் கதிரையும் இகலி வென்றவே.                 37

 

மின்னவிர் சிகரிபொன் வேர மாதிகள்

என்னவும் வான்படர்ந் தெழாலின் விஞ்சையர்

உன்னுறும் ஓங்கலும் உவண வைப்பெனும்

பொன்னெயில் வட்டமும் பூழி செய்தவே.                38

 

குன்றொடு சூளிகை கோபு ரம்பிற

ஒன்றுடன் ஒன்றுபட் டுரிஞ்சி யாயிடைத்

துன்றிய மணிதிசை தோறுஞ் சிந்துவ

மின்றிகழ தாரகை விளிந்து வீழ்வபோல்.                39

 

பொற்றைகள் சிகரகோ புரங்கள் தத்தமில்

எற்றுழிப் புகையென எழுந்து பூழிகள்

சுற்றிய புலிங்கமுந் தோன்று கின்றன

வெற்றவெம் புயல்களு மின்னும் போலவே.                      40

 

ஏழுயர் களிறனான் எறிந்த யாவையுஞ்

சூழுற வானிடைத் துவன்ற எற்றலிற்

கேழுறு நுண்டுகள் கெழுமிச் சிந்துவ

பூழியின் நெடுமழை பொழியுந் தன்மைபோல்.                    41

 

ஆரியன் ஓச்சிய அணிகொள் மண்டபம்

வேரமொ டகன்பொழில் பிறவும் விண்ணுறீஇத்

தாரகை முதற்சுடா¢த் தனுக்கள் சார்ந்திடச்

சோரியும் இடையிடை துளித்த தென்பவே.                      42

 

புந்தியி லான்மகம் புகுந்த தீமையால்

இந்திர னாதியோர் யாருஞ் சூரனால்

நொந்தனர் அவன்நகர் வளமும் நோவுற

அந்தரத் தவரையும் அலக்கண செய்தவே.                43

 

வெற்புறழ் மொய்ம்பினான் விடுத்த சூளிகை

பற்பல பொருந்தலும் பட்ட வன்னிபோய்

எற்படு கதிருடை  இரவி பச்சைமாப்

பொற்புறு கொய்யுளை பூழி செய்ததே.                           44

 

பொன்னவிர் சிகரகோ புரங்க ளாதிய

துன்னிய தாக்கலில் தோன்றித் தீப்பொறி

இன்னுயிர் வழங்கிய வெல்லை எங்கணும்

வன்னிபெய் மழையென மயங்கி வீழ்பவே.                       45

 

வழுவுறும் அவுணர்கோன் வளங்கள் யாவையும்

கெழுதகு விசும்பினைக் கிழித்துச் சேறலின்

எழிலிகள் வயிறுடைந் திரங்கி ஆற்றலா

தழுதென உலகெலாம் அறல்சிந் துற்றவே.                       46

 

வேறு

 

ஏசிலா அறிவன் விட்ட இன்னபல் வெறுக்கை யாவும்

மாசகல் விசும்பின் ஏகி மதிமுடி அருள்பெற் றுள்ள       

கோசிகன் துறக்க முய்த்த கொற்றவன் தவறி யென்ன     

ஆசுற மீண்டு ஞாலத் தகிலமும் வீழந்த அன்றே.                 47

 

படிதனில் திசையின் பாலிற் பௌவத்திற் பழுவந் தன்னில்

தடவரை தன்னில் இன்ன தகையன பிறவிற் சூர

னுடையபல் வளங்க ளெல்லாம் உரற்றியே வீழ ஆண்டும்

இடைதரு முயிரின் பொம்மல் வெருவிவீழ்ந் திரித லுற்ற.        48

 

அலைந்தது பரிதி ஓங்கல் அதிர்ந்தது மேருச் சையங்

குலைந்தது சூழுங் குன்றங் குலுங்கிய அசலம் ஏழுங்

கலைந்தது நாகர் வைப்புங் கலங்கிய கடலும் பாரும்

உலைந்தன உயிர்கண் முற்றும் ஓடின திசையின் யானை.                49

 

தண்படு தொடலை மார்பன் தானெறிந் தவற்றிற் பல்வே

றொண்புவி முழுதுஞ் சிந்திற் றொழிந்தன உலப்பி லாத

எண்பதி னாயி ரப்பேர் யோசனை யெல்லைத் தாகிக்

கண்படு சூரன் ஊரின் கல்லென வீழ்ந்த மாதோ.                  50

 

முடிந்திடல் அரிய சூரன் மொய்வளம் அவனூர் முற்றுந்

தடிந்தெறி உருமே றென்னத் தணப்பற வீழ்த லோடும்

இடிந்தன மாட வீதி யாவையும் கடிகா இற்ற

பொடிந்தன சிகரி யாதி புரிசைகள் மறிந்து மாண்ட.                       51

 

மண்டபஞ் சிகரி வேரம் அணிமதில் மாட கூடம்

எண்டகு பொதியின் முற்றும் இடிபட எழுபொற் பூழி

விண்டொடு திசைபார் யாண்டும் வெறுக்கையின் வடிவ மாக்கி

அண்டா¢தம் உலகீ தென்றே அறிகுறா வகைசெய் தன்றே.         52

 

புடையகல் பொன்செய் மூதூர் பொள்ளெனத் தகர்ந்து வீழ

மிடைதரு வீதி முற்று மேயின சனங்கள் பூசல்

கடைவரு நாள தெல்லைக் ககனமூ தண்ட கூடம்

உடைதலும் முடியும் ஆவி அரற்றுமா றொத்த தன்றே.                   53

 

   வேறு

 

நாக முந்து நறுநிழல் மாதவி

நாக முந்து நறுநிழற் பொற்கணி

சேக ரம்பல சிந்திடு காழுடைச்

சேக ரம்பல வோடு சிதைந்தவே.                54

 

கோட ரங்குல வுற்றிட வான்றொடுங்

கோட ரங்குல வுற்றிடு தண்டலைக்

கோட ரங்குலங் கோலஞ்செய் பொன்வரைக்

கோட ரங்குல வுற்றிறை கொண்டவே.                   55

 

ஓடும் வாவியின் மீனினம் ஓங்குபுள் 

ளோடும் வாவிவிண் ணுற்றிட வீதியின்

மாட மாலை வரிசையின்  மல்கிய

மாட மாலை மறிந்திடி பட்டதே.                        56

 

அண்ட ரண்டரும் அந்நகர் மாண்டன

அண்ட ரண்டம் அளவிடு சூளிகை

மண்ட பம்மதின் மாடந் தரித்தயர்

மண்ட பம்மதின் மாதவம் யாவதே.                     57

 

பூவை யன்ன மணிமயில் பொற்புறு

பூவை யன்ன மணிமயில் பொற்புறா

வாவி யோடைவண் டான மழிந்திட

வாவி யோடைவண் டானம் அழியுமால்.         58

 

மொய்யு டைத்தறி மோதித் தளைபரீஇ

மையு டைப்பெரு மால்கரி சோரிநீர்

மெய்யி டத்துக விண்முகி லச்சுறக்

கையெ டுத்துக் கதறி உடைந்தவே.                      59

 

ஈடு சான்ற வெருத்த முரிந்திட

நீடு பூநுதல் நெக்குறக் கிம்புரிக்

கோடு சிந்தக் குருதியு குத்தரோ

ஓடி வீழ்வ உவாக்கள் அரற்றியே.                       60

 

கார்கொள் சிந்துரங் காயத் திடையிடைச்

சோரி சோர்தரத் தோன்றுவ ஈற்றினின்

மேரு வாதி விலங்கலை மெய்க்கனல்

சாரும் வெம்புகை தன்னொடுஞ் சூழ்ந்தபோல்.     61

 

கோடிகள் இற்ற கொடிஞ்சி முரிந்தன

இடைகொள் பீடிகை எல்லைகள் நெக்கன

அடிகொள் சில்லியும் ஆருஞ் சிதைந்தன

பொடிய தாகிப் புரண்டன தேர்களே.                      62

 

பந்தி தோறும் பராவிய ஐங்கதிக்

கந்து கங்கள் கலங்கி நெரிந்திட

நொந்து மேனி நொறில்வரு செம்புனல்

சிந்தி யோடச் சிதறிய திக்கெலாம்.                      63

 

சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை

மதுகை வெம்பரி வாய்களின் வீழ்தரு

முதிர வாரி யொலிகடல் புக்கதால்

இதுகொ லோவட வைக்கனல் என்னவே.         64

 

காள வெங்கரிக் காலின் வயப்பரித்

தாளின் ஊடகப் பட்டுத் தரைபுகா

மூளை சிந்த முழுதுடல் பூழியாய்

மாளு கின்றனர் மாநக ரோர் சிலர்.                      65

 

ஆளி மொய்ம்புடை அண்ணல்முன் வீசின

நீளு மாநகர் ஞௌ¢ளலின் வீழ்தலுந்

தோளி ழந்து சுவல்முரிந் தொய்யெனத்

தாளி ழந்து தரங்கமுற் றா£¢சிலர்.                      66

 

பொற்றை யன்ன பொலன்மணி மாளிகை

இற்று வீழ்தலும் என்னிது வென்றெழீஇ

வெற்ற வௌ¢ளிடை மேவுதல் முன்னியே

முற்றம் வந்திடு முன்மறிந் தார்சிலர்.                    67

 

ஊடு மைந்தரும் ஒண்டொடி மாதரும்

மாட மோடு மறிந்தனர் தம்முடல்

வீடி விண்மிசை வேற்றுரு வெய்தியே

கூடி யேவழிக் கொண்டன ரோர்சிலர்.                    68

 

உவமன் இல்லவன் ஓச்சின எங்கணும்

அவதி யின்றிப் பொழிய வவைதெரீஇத்

தவறி லாதுசெய் தாழ்வரை கீண்டெடாக்

கவிகை யாத்தமைக் காத்துநிற் பார்சிலர்.         69

 

விறற்கொள் வாகு விடுத்தன கல்லக

வுறைப்பின் வீழ ஒதுங்கிடம் இன்மையிற்

சிறக்கு மாநகர்ச் செந்தரைக் கொண்டகீழ்

அறைக்கு ளேபுக் கலமரு வார்சிலர்.                     70

 

மாதர் தங்களை மக்களை அன்னையைத்

தாதை மாரைத் தமதுகைப் பற்றியே

ஏதின் மாடம் இகந்துகச் சோரிநீர்

வீதி போந்து வெருவிநிற் பார்சிலர்.                     71

 

கருவி வானினுங் கண்ணகன் திக்கினுந்

தரணி தன்னினுந் தாவிலன் வீசிய

திருவ ளங்கள் செறிந்தன விழ்தலும்

வெருவிப் போய்க்கடல் வீழ்ந்தொளிப் பார்சிலர்.   72

 

கிழிந்த சென்னியிற் கேழ்படு செம்புனல்

கழிந்து தோன்றவுங் கண்டனர் ஐயுறாப்

பொழிந்து மெய்ப்புறம் போர்த்தலுந் தேற்றியே

அழிந்தி ரங்குற ஆகுலிப் பார்சிலர்.                      73

 

ஆடல் மொய்ம்பினன் ஆர்த்துமுன் வீசிய

மாட வீதி வளநகர் எங்கணும்

நீட வீழதலும் நிற்றலை அஞ்சியே

ஓடி யூறுற் றுயிர்துறப் பார்சிலர்.                74

 

திங்கள் சூடி திருமகன் விட்டன

எங்கும் வீழும் இறப்பினை நோக்கியே

அங்கி வெங்கணை தொட்டறுத் தன்னவை

தங்கள் ஆருயிர் தாங்கிநிற் பார்சிலர்.                    75

 

மையல் மாதரும் மைந்தரும் ஆவியும்

பொய்யில் புந்தியும் ஒன்றிப் புணர்தலுஞ்

செய்ய மாடஞ் சிகரமொ டேவிழ

மெய்யும் ஒன்றி விளிந்திடு வார்சிலர்.                   76

 

அந்தண் மாடத் தறிவன் விடுத்தன

வந்து வீழ மறிந்துரு மேறெனச்

சிந்த வேயுகு செம்பொறி மெய்ப்பட

வெந்து சின்னம் விரவுறு வார்சிலர்.                     77

 

வரங்கொள் வீர மகேந்திரத் தின்னணந்

தரங்க மெய்திச் சனங்களெல் லாமிரீஇ

உரங்கள் சிந்தி அழிந்துழி ஒல்லென

இரங்கும் ஓதை எழுகடல் உண்டதே.                     78

 

மன்றி னிற்கரி பொய்த்து மனுநெறி

கொன்று வாழுங் கொடியர்தம் மில்லெனத்

துன்று மாடத் தொகைவௌ¢ ளிடையதாய்ப்

பொன்றி வீழ்ந்தன புல்லென வாகியே.                   79

 

நீறு பட்ட நெடுநகர் எங்கணும் 

ஊறு பட்ட உயிர்கடஞ் சோரிநீர்

ஆறு பட்டிட அங்கவை யோடளாய்ச்

சேறு பட்டன செக்கர்விண் போலவே.                    80

 

மலிந்த சீர்த்தி மகேந்திர மாபுரம்

அலைந்து தொல்லைத் திருமுழு தற்றதால்

மெலிந்தி டும்படி விண்ணவர் தம்மெலாம்

நலிந்த வன்வளம் நன்றுறு மேகொலாம்.         81

 

ஆகத் திருவிருத்தம் - 770

      - - -


·  அமுந்தையது : மகேந்திர காண்டம் - பகுதி 1...

·  அடுத்தது : மகேந்திர காண்டம் - பகுதி 3...

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்