logo

|

Home >

to-practise >

kandapuranam-dhaana-padalam

கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - தானப் படலம்

Kanda puranam of Kachchiyappa Chivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

தக்ஷ காண்டம் - தானப் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

5. தக்ஷ காண்டம்

 

16. தானப் படலம்

 

போனதோர் பொழுதிலவன் துவசமிற்ற

மகத்தூணிற் பொருக்கென் றெய்திக்

கானுலா வியகொடியுங் கழுகுமிடைந்

தனயாருங் கலங்கத் தானே

மானமார் வேதவல்லி மங்கலநா

ணுங்கழன்ற மற்றித் தன்மை

ஆனதோர் துன்னிமித்தம் பலவுண்டால்

முடிவோன்கண் அவையு றாவோ.                              1

 

வேறு

 

இந்த வாறுதுன் னிமித்தங்கள் பலநிகழ்ந் திடவுஞ்

சிந்தை செய்திலன் சிறுவதும் அஞ்சிலன் தீயோன்

தந்தை தன்னையும் நாரணன் தன்னையுந் தகவால்

முந்து பூசனை புரிந்தனன் முகமன்கள் மொழியா.         2

 

மற்றை வானவர் யாவர்க்கும் முனிவர்க்கும் மரபால்

எற்று வேண்டிய அவையெலாம் நல்கியே இதற்பின்

பெற்ற மங்கையர் தமக்கும்மா மருகர்க்கும் பெரிதும்

அற்ற மில்லதோர் மங்கலத் தொல்சிறப் பளித்தான்.               3

 

நாலு மாமுகக் கடவுள்சேய் இத்திறம் நல்கி

மாலும் யாவருங் காத்திடத் தீத்தொழில் மகஞ்செய்

வேலை நோக்கியே தொடங்கினன் அவ்விடை வேள்விச்

சாலை தன்னிடை நிகழ்ந்தன சாற்றுவன் தமியேன்.               4

 

முன்னரே தக்கன் ஏவலும் வினைசெயல் முறையால்

மன்னு தேனுவோ ராடகச் சாலையின் மாடே

பொன்னின் மால்வரை நடுவுசேர் வௌ¢ளியம் பொருப்பை

அன்ன தாமென அன்னமாம் பிறங்கலை அளித்த.         5

 

ஏதம் நீங்கிய தீயபால் அடிசிலும் எண்ணில்

பேத மாகிய முதிரையின் உண்டியும் பிறவாம்

ஓத னங்களும் வீற்றுவீற் றாகவே உலகின்

மாதி ரங்களிற் குலகிரி யாமென வகுத்த.                6

 

நெய்யி னோடளாய் விரைகெழு நுண்டுகள் நீவிக்

குய்யின் ஆவியெவ் வுலகமும் நயப்புறக் குழுமி

வெய்ய தாகிய கருனைகள் திசைதொறும் மேவும்

மையல் யானைக ளாமென வழங்கிற்று மாதோ.                  7

 

அண்ணல் சேர்வெந்தை 1தோயவை நொலையலே ஆதிப்

பண்ணி யங்களுந் தாரமுங் கனிவகை பலவும்

மண்ணின் மேலுறு கிரியெலாங் குலகிரி மருங்கு 

நண்ணி னாலெனத் தொகுத்தன யாவரும் நயப்ப.         8

 

(பா-ம் - 1 தோசையே)

 

விருந்தி னோர்கொள விழுதுடன் பால்தயிர் வௌ¢ளந்

திருந்து கங்கையும் யமுனையு மாமெனச் செய்த

அருந்தும் உண்டிகள் யாவையும் வழங்குகோ அதனில்

பொருந்து கின்றது தந்ததென் றாலது புகழோ.                    9

 

தாவில் பாளித மான்மதஞ் சாந்துதண் பனிநீர்

நாவி வௌ¢ளடை செழும்பழுக் காயொடு நறைமென்

பூவு மேனைய பொருள்களும் நல்கின புகழ்சேர்

தேவர் கோமகன் பணிபுரி கின்றதோர் தேனு.                     10

 

(1. துவசம் - கொடி.  கொடி - காகம்.  மங்கல நாண் - திருமங்கலியம். 

2. சிறுவதும் - சிறிதும்.  மொழியா - மொழிந்து.  4. தமியேன் - அடியேன்.

5. ஆடகச்சாலை - பொன்மயமான பாகசாலை.  

அன்னமாம் பிறங்கல் - சோறாகிய மலை.  6. முதிரை - கடலை.  

ஓதனம் - சோறு.  7. நீவி - கலந்து.  குய் - தாளிப்பு.  

கருனைகள் - பொரிக்கறிகள்.

8. வெந்தை - பிட்டு.  தோயவை - தோசை.  நொலையல் - அப்பம்.

பண்ணியங்கள் - பலகாரங்கள்.  தாரம் - அருமைப் பண்டங்கள். 

9. விழுது - நெய்.  கோ - காமதேனு.  10. பாளிதம் - கர்ப்பூரம். 

மான்மதம் - கஸ்தூரி.  நாவி புனுகு.  வௌ¢ளடை - வெற்றிலை.  

பழுக்காய் - பாக்கு.  நறை - தேன்.  தேனு - காமதேனு.)

 

ஆவ திவ்வகை யாவது நல்கியே அங்கண்

மேவு கின்றது மணியும்அச் சங்கமும் வியன்சேர்

காவும் அம்புய நிதியமுந் தக்கனாங் கடியோன்

ஏவ லாலருட் சாலையில் அடைந்தன இமைப்பில்.               11

 

கணித மில்லதோர் பரிதிகள் மேனியிற் கஞலும்

மணிக ளோர்புடை தொகுத்தன ஆடக வரைபோல்

அணிகொள் காஞ்சன மோர்புடை தொகுத்தன அம்பொற்

பணிக ளாடைக ளோர்புடை தொகுத்தன படைத்தே.               12

 

மற்றும் வேண்டிய பொருளெலாம் உதவிஅம் மருங்கில்

உற்ற வேலைஅத் தக்கன தேவலின் ஒழுகா

நிற்றல் போற்றிய முனிவரர் யாவரும் நிலத்தோர்க்

கிற்றெ லாமிவண் வழங்குதும் யாமென இசைத்தார்.              13

 

வேறு

 

இன்ன வேலையில் இச்செயல் யாவையும்

முன்ன மேயுணர் முப்புரி நூலினர்

துன்னி மேயமனந் தூண்டவந் தொல்லையில்

அன்ன சாலை தனையணைந் தாரரோ.                   14

 

சாலை காண்டலுந் தக்கனை ஏத்தியே

பாலர் தன்மையிற் பாடினர் ஆடினர்

கோல மார்பிற் குலாவிய வெண்டுகில்

வேலை யாமென வீசிநின் றார்த்துளார்.                  15

 

மிண்டு கின்றஅவ் வேதியர் தங்களைக்

கண்டு வம்மின் கதுமென நீரெனாக்

கொண்டு சென்று குழுவொடி ருத்தியே

உண்டி தன்னை உதவுதல் மேயினார்.                           16

 

மறுவில் செம்பொன் மணிகெழு தட்டைகள்

இறுதி யில்லன யாவர்க்கும் இட்டுமேல்

நறிய உண்டிகள் நல்கியின் னோர்தமக்

குறவி னாரென ஊட்டுவித் தார்அவண்.                  17

 

அன்ன காலை அரும்பசி தீர்தரத்

துன்ன வுண்டுஞ் சுவையுடைத் தாதலால்

உன்னி உன்னியிவ் வுண்டிகள் சாலவும்

இன்னம் வேண்டு மெனவுரைப் பார்சிலர்.                 18

 

(11. மணி - சிந்தாமணி.  சங்கம் - சங்கநிதி.  கா - கற்பகத்தரு. 

அம்புயநிதி - பதுமநிதி.  12. கஞலும் - விளங்குகின்ற.  ஆடகம், 

காஞ்சனம் - இவைகள் பொன்களின் வகைகள்.  

17. தட்டைகள் - தாம்பாளங்கள்.)

 

குற்ற மொன்றுள கூறுவ தென்னினி

நற்றவஞ் செய்து நான்முக னால்இவண்

உற்ற உண்டி யெலாமுண ஓர்பசி

பெற்றி லோமெனப் பேதுறு வார்சிலர்.                           19

 

வீறு முண்டி மிசைந்திட வேண்டும்வாய்

நூறு நூற தெனநுவல் வார்தமை

ஏற வேண்டு மிதிலமை யாதெனச்

சீறி யேயிகல் செய்திடு வார்சிலர்.                               20

 

புலவர் கோன்நகர் போற்றிய தேனுவந் 

தலகில் இவ்வுண வாக்கிய தாலெனாச்

சிலர்பு கன்றனர் தேக்கிட உண்மினோ

உலவ லீரென ஓதுகின் றார்சிலர்.                       21

 

அறிவி லாத அயன்மகன் யாகம்இன்

றிறுதி யாமென் றிசைத்தனர் அன்னது

பெறுதி யேனுமிப் பேருண வேநமக்

குறுதி வல்லையில் உண்மினென் பார்சிலர்.                      22

 

உண்டி லேம்இவண் உண்டதில் ஈதுபோற்

கண்டி லேம்ஒரு காட்சியும் இன்பமுங்

கொண்டி லேம்இன்று கொண்டதில் ஈசனால்

விண்டி லேம்எனின் மேலதென் பார்சிலர்.                23

 

எல்லை யில்லுண வீயும்இத் தேனுவை

நல்ல நல்லதொர் நாண்கொடி யாத்திவண்

வல்லை பற்றிநம் மாநக ரிற்கொடு

செல்லு தும்மெனச் செப்புகின் றார்சிலர்.                 24

 

மக்கள் யாவரும் வானவர் யாவரும்

ஒக்கல் யாவரும் உய்ந்திட வாழ்தலால்

தக்கன் நோற்ற தவத்தினும் உண்டுகொல்

மிக்க தென்று விளம்புகின் றார்சிலர்.                            25

 

மைந்தன் இட்டன மாந்திட நான்முகன்

தந்தி லன்வயின் சாலவும் ஆங்கவன் 

சிந்தை மேலழுக் காறுசெய் தானெனா

நொந்து நொந்து நுவலுகின் றார்சிலர்.                           26

 

குழுவு சேர்தரு குய்யுடை உண்டிகள்

விழைவி னோடு மிசைந்தன மாற்றவும்

பழுதி லாவிப் பரிசனர் தம்மொடும்

எழுவ தெப்படி என்றுரைப் பார்சிலர்.                            27

 

(20. வீறும் - மிக்க.  இகல் - சண்டை.

21. புலவர்கோன் - இந்திரன்.

25. ஒக்கல் - சுற்றம்.  

27. குழுவு - (வாசனைப்) பொருள்களின் கூட்டம்.பரிசனர் - நட்பினர்.)

 

இந்த நல்லுண வீண்டு நுகர்ந்திட

நந்தம் மைந்தரை நம்மனை யாங்கொடு

வந்தி லம்மினி வந்திடு மோவெனாச்

சிந்தை செய்தனர் செப்புகின் றார்சிலர்.                   28

 

அன்ன பற்பல ஆர்கலி யாமெனப்

பன்னி நுங்கும் பனவர்கள் கேட்டனர்

என்ன மற்றவை யாவையும் ஆர்தர

முன்ன ளித்து முனிவர் அருத்தினார்.                            29

 

அருத்தி மிச்சில் அகற்றி அருந்தவ

விருத்தி மேவிய வேதியர் தங்களை

இருத்தி மற்றொர் இருக்கையில் வாசநீர்

கரைத்த சந்தின் கலவை வழங்கினார்.                           30

 

நளிகு லாவிய நாவி நரந்தம்வெண்

பளிதம் வௌ¢ளடை பாகுடன் ஏனவை

அளியு லாவும் அணிமலர் யாவையும்

ஔ¤று பீடிகை உய்த்தனர் நல்கினார்.                            31

 

அரைத்த சாந்தம் அணிந்துமெய் எங்கணும்

விரைத்த பூந்துணர் வேய்ந்துபைங் காயடை

பரித்து நின்ற பனவர்புத் தேளுறுந்

தருக்க ளாமெனச் சார்ந்தனர் என்பவே.                  32

 

ஆன பான்மையில் அந்தணா யாவரும்

மேன காதலின் வெய்தென ஏகியே

வான மண்ணிடை வந்தென ஏர்கெழு

தான சாலை தனையடைந் தார்களே.                            33

 

அடையும் வேலை அயனருள் காதலன்

விடையி னால்அங்கண் மேவு முனிவரர் 

இடைய றாதவர்க் கீந்தனர் ஈந்திடுங்

கொடையி னால்எண்ணில் கொண்டலைப் போன்றுளார்.           34

 

பொன்னை நல்கினர் பூணொடு பூந்துகில் 

தன்னை நல்கினர் தண்சுட ரோனென

மின்னை நல்கும் வியன்மணி நல்கினர்

கன்னி யாவுங் கறவையும் நல்கினார்.                           35

 

படியி லாடகப் பாதுகை நல்கினர்

குடைகள் நல்கினர் குண்டிகை நல்கினர்

மிடையும் வேதியர் வேண்டிய வேண்டியாங்

கடைய நல்கினர் அங்கைகள் சேப்பவே.                  36

 

(29. ஆர்கலி - கடல்.  பன்னி - கூறி.  நுங்கும் - உண்ணும். 

பனவர்கள் - அந்தணர்கள்.  30. மிச்சில் - எச்சில். 

31. நாவி - புனுகு.  நரந்தம் - கஸ்தூரி. 

33. தானசாலை - தானம் வழங்கும் இடம். 

34. இங்குத் தானங்களை வரையறை இன்றி வழங்கினார்கள் என்க. 

35. கன்னிஆ - கன்னிப் பசு; கடாரி.  கறவை - கன்றுடைய பசு.)

 

இந்த வண்ணம் இறையதுந் தாழ்க்கிலர்

முந்து நின்ற முனிவரர் ஆண்டுறும்

அந்த ணாளர்க் கயினியொ டாம்பொருள்

தந்து நின்று தயங்கினர் ஓர்புடை.                       37

 

அற்ற மில்சிறப் பந்தணர் ஆயிடைப் 

பெற்ற பெற்ற பெருவளன் யாவையும்

பற்றி மெல்லப் படர்ந்தனர் பற்பல

பொற்றை செய்தனர் போற்றினர் ஓர்புடை.                       38

 

வரத்தி னாகும் வரம்பில் வெறுக்கைதம்

புரத்தி னுய்த்திடும் புந்தியில் அன்னவை

உரத்தி னால்தமக் கொப்பரும் வேதியர்

சிரத்தின் மேற்கொடு சென்றனர் ஓர்புடை.                39

 

அரிதன் ஊர்தியும் அன்னமும் கீழ்த்திசை

அரிதன் ஊர்தியும் ஆங்கவன் மாக்களும்

அரிதன் ஊர்தியும் ஆருயிர் கொண்டிடும்

அரிதன் ஊர்தியும் ஆர்ப்பன ஓர்புடை.                    40

 

தான மீது தயங்கிய தேவரும்

ஏனை யோர்களும் இவ்விடை ஈண்டலின்

மீன மார்தரு விண்ணென வெண்ணிலா

மான கோடி மலிகின்ற ஓர்புடை.                        41

 

நரம்பின் வீணை ஞரலுறும் வேய்ங்குழல்

பரம்பு தண்ணுமை பண்ணமை பாடல்நூல்

வரம்பின் ஏய்ந்திட வானவர் வாடவே

அரம்பை மார்கள்நின் றாடினர் ஓர்புடை.                 42

 

தேவர் மாதருஞ் சிற்சில தேவருந்

தாவி லாமகச் சாலையின் வைகிய

காவு தோறுங் கமல மலர்ந்திடும்

ஆவி தோறும்உற் றாடினர் ஓர்புடை.                            43

 

வேத வல்லி வியப்புடன் நல்கிய

காதல் மாதருங் காமரு விண்ணவர் 

மாத ராருஞ் சசியும் மகத்திரு

ஓதி நாடியங் குற்றனர் ஓர்புடை.                        44

 

இனைய பற்பல எங்கணும் ஈண்டலிற்

கனைகொள் பேரொலி கல்லென ஆர்த்தன

அனையன் வேள்விக் ககன்கடல் யாவையுந்

துனைய வந்தவண் சூழ்ந்தன போலவே.                 45

 

ஊன மேலுறும் உம்பரும் இம்பரும்

ஏன காதலின் மிக்கவண் ஈண்டுவ

வான யாறு வருந்தி யும்புவித்

தான யாறுந் தழீஇயின போன்றவே.                            46

 

(37. அயினி - சோறு.  38. பொற்றை - மலை.  

39. வெறுக்கை - செல்வம்.  40. கீழ்த்திசை அரி - இந்திரன்; இவன் 

ஊர்தி ஐராவதம்.  மாக்கள் - இங்கு உச்சைச் சிரவ முதலிய குதிரைகள். 

அரிதன் ஊர்தி அக்கினி தேவன் வாகனமான ஆட்டுக்கடா. 

41. தானமீது - சுவர்க்கத்தில்.  42. ஞரலுறும் - ஒலிக்கும். 

43. மகச்சாலை - யாகசாலை.  ஆவி - வாவிகள்.  

46. ஊனம் மேலுறும் - வருங்காலத்தில் துன்பமடையும்.)

 

ஆகத் திருவிருத்தம் - 1256

     - - -

 

 

17.  வே ள் வி ப்  ப ட ல ம்

 

இகந்த சீர்பெறும் இப்பெருஞ் சாலையில்

அகந்தை மிக்க அயன்பெருங் காதலன்

மகம்பு ரிந்தது மற்றது சிந்திடப்

புகுந்த வாறும் பொருக்கெனக் கூறுகேன்.                 1

 

வேறு

 

மருத்து ழாய்முடி மாலயன் பாங்குற மகத்தின்

கருத்த னாகிய தீயவன் முன்னமே கருதி

வரித்த மேலவர் தங்களை நோக்கியே மரபின்

இருத்து முத்தழல் என்றலும் நன்றென இசைந்தார்.               2

 

முற்றும் நாடிய இருத்தினோர் அரணியின் முறையால்

உற்ற அங்கியை வேதிகைப் பறப்பைமேல் உய்த்துச்

சொற்ற மந்திர மரபினால் பரிதிகள் சூழ்ந்து

மற்று முள்ளதோர் விதியெலாம் இயற்றினர் மன்னோ.            3

 

ஆங்கு முத்தழல் விதிமுறை செய்தலும் அயன்சேய்

பாங்கர் உற்றிடும் இருத்தினர் யாரையும் பாரா

நீங்கள் உங்களுக் காகிய செய்கையை நினைந்து

தூங்கல் இன்றியே புரிமினோ கடிதெனச் சொன்னான்.              4

 

சொன்ன வாசகங் கேட்டலும் இருத்தினோர் தொகையின்

முன்ன மாகிய அம்மகந் தனக்கவி முழுதும்

வன்னி யாதியாஞ் சமிதையுந் தருப்பையும் மற்றும்

இன்ன போல்வதுங் கொடுவழங் கினர்களா றிருவர்.               5

 

அந்த வேள்விசெய் வித்தனர் ஒருவரால் அவிகள்

எந்தை எல்லவர் கொள்ளவே அவரவர்க் கிசைத்த

மந்தி ரந்தனைப் புகன்றனர் ஒருவர்அவ் வானோர்

தந்த மைக்குறித் தழைத்தனர் ஒருவர்பேர் சாற்றி.         6

 

மற்ற வார்க்கெலாம் அமைந்திடும் அவிகளை மலர்க்கை

பற்றி யங்கிவாய் அளித்தனர் ஒருவர்அப் பரிசின்

அற்றம் நோக்கியே இருந்தனர் ஒருவர்அங் கதற்கு

முற்றும் நல்லருள் புரிந்தனர் ஒருவரம் முதல்போல்.             7

 

இருத்தி னோர்களும் பிறரும்ஈ தியற்றுழி யாக

கருத்த னாகிய தக்கன்அத் தேவரைக் கருதிப்

பரித்து நுங்குதிர் என்றவி புரிதொறும் பகர்ந்தே

அருத்தி உற்றனன் கடவுளர் தமக்கெலாம் அமுதின்.               8

 

திருந்து கின்றநற் சுவையினால் தூய்மையால் திகழும்

மருந்து போன்றன என்னினும் உயிர்தொறும் மனத்தும்

இருந்த எம்பிரான் அன்றியே மிசைதலின் இமையோர்க்

கருந்தும் நீரலா நஞ்சென லாகிய அவிகள்.                       9

 

(1. இகந்த - அளவு கடந்த.  2. மரு - வாசனை.  மகத்தின் கருத்தன் - 

யாக கருத்தா. 

3. இருத்தினோர் - வேள்வியில் ஆசாரியனுக்கு ஒத்தாசை செய்பவர்;

சாதகாசாரியர்.  அரணி - தீக்கடைக்கோல்.  அங்கி - அக்கினி. 

பறப்பை - நெய் விடு கருவிகள்.  பரிதிகள் - யாக மேடைகள். 

5. வன்னியாதியாம் சமிதை - வன்னி முதலிய சமித்துக்கள். 

இருத்தினோர் ஆறு இருவர் என்க.  

7. அங்கிவாய் அளித்தனர் - அக்கினிமூலமாக அளித்தனர். 

9. உயிர்தொறும் மனத்தும் இருந்த எம்பிரான் - சிவபெருமான்.

அருந்தும் நீரலா - உண்ணத்தகாத.)

 

ஆகத் திருவிருத்தம் - 1265

     - - -

 

 

18.  உ மை வ ரு  ப ட ல ம்

 

பேசுமிவ் வேள்வி பிதாமகன் மைந்தன்

நாசம் விளைந்தட நாடி இயற்ற

மாசறு நாரத மாமுனி யுற்றே

காசினி மேலிது கண்டனன் அன்றே.                             1

 

கண்டனன் ஆலமர் கண்டனை நீக்கிப்

புண்டரி கந்திகழ் புங்கவன் மைந்தன்

அண்ட ருடன்மகம் ஆற்றினன் அன்னான்

திண்டிறல் கொல்லிது செய்திடல் என்னா.                2

 

எண்ணிய நாரதன் எவ்வு லகுஞ்செய்

புண்ணிய மன்னதொர் பூங்க யிலாயம்

நண்ணிமுன் நின்றிடு நந்திகள் உய்ப்பக்

கண்ணுதல் சேவடி கைதொழு துற்றான்.                 3

 

கைதொழு தேத்திய காலஅன் னானை

மைதிகழ் கந்தர வள்ளல்கண் ணுற்றே

எய்திய தென்னிவண் இவ்வுல கத்தில்

செய்திய தென்னது செப்புதி என்றான்.                           4

 

எங்கணு மாகி இருந்தருள் கின்ற

சங்கரன் இம்மொழி சாற்றுத லோடும்

அங்கது வேலையில் அம்முனி முக்கட்

புங்கவ கேட்டி யெனப்புகல் கின்றான்.                            5

 

அதிர்தரு கங்கை அதன்புடை மாயோன்

விதிமுத லோரொடு மேதகு தக்கன் 

மதியிலி யாயொர் மகம்புரி கின்றான்

புதுமையி தென்று புகன்றனன் அம்மா.                          6

 

ஈங்கிது கூறலும் எம்பெரு மான்றன்

பாங்கரின் மேவு பராபரை கேளா

ஆங்கவன் மாமகம் அன்பொடு காண்பான்

ஓங்கு மகிழ்ச்சி உளத்திடை கொண்டாள்.                7

 

அங்கணன் நல்லரு ளால்அனை யான்றன்

பங்குறை கின்றனள் பாங்கரின் நீங்கி

எங்கள் பிரானை எழுந்து வணங்கிச்

செங்கை குவித்திது செப்புத லுற்றாள்.                           8

 

தந்தை எனபடு தக்கன் இயற்றும்

அந்த மகந்தனை அன்பொடு நோக்கி

வந்திடு கின்றனன் வல்லையில் இன்னே

எந்தை பிரான்விடை ஈகுதி என்றாள்.                           9

 

என்றலும் நாயகன் ஏந்திழை தக்கன் 

உன்றனை எண்ணலன் உம்பர்க ளோடும்

வன்றிறல் எய்தி மயங்குறு கின்றான்

இன்றவன் வேள்வியில் ஏகலை என்றான்.                       10

 

இறையிது பேசலும் ஏந்திழை வேதாச்

சிறுவ னெனப்படு தீயதொர் தக்கன்

அறிவிலன் ஆகும் அவன்பிழை தன்னைப்

பொறுமதி என்றடி பூண்டனள் மாதோ.                           11

 

பூண்டனள் வேள்வி பொருக்கென நண்ணி

மீண்டிவண் மேவுவல் வீடருள் செய்யுந்

தாண்டவ நீவிடை தந்தருள் என்றாள்

மாண்டகு பேரருள் வாரிதி போல்வாள்.                  12

 

மாதிவை கூறலும் வன்மைகொள் தக்கன்

மேதகு வேள்வி வியப்பினை நோக்குங்

காதலை யேலது கண்டனை வல்லே

போதுதி என்று புகன்றனன் மேலோன்.                           13

 

(1. பிதாமகன் - பிரமன்.  4. மைதிகழ் கந்தரம் - நீலகண்டம். 

6. கங்கை அதன்புடை - கங்கா நதிக்கரையில்.  

7. பராபரை - அம்பிகை. 10. ஏந்திழை - உமாதேவியே! 

வன்திறல் - மிக்க செருக்கு. ஏகலை - போகாதே.  

11. இறை - சிவபெருமான்.  பொறுமதி பொறுப்பாயாக.மதி : முன்னிலையசை. 

12. மாண்டகு - மாட்சிமை மிக்க.  வாரிதி - கடல்.)

 

 

வேறு

 

அரன்பிடை புரிதலும் அம்மை ஆங்கவன்

திருவடி மலர்மிசைச் சென்னி தாழ்ந்தெழா

விரைவுடன் நீங்கியோர் விமானத் தேறினாள்

மரகத வல்லிபொன் வரையுற் றாலென.                 14

 

ஐயைதன் பேரருள் அனைத்தும் ஆங்கவள்

செய்யபொன் முடிமிசை நிழற்றிச் சென்றெனத்

துய்யதொர் கவுரிபாற் சுமாலி மாலினித்

தையலார் மதிக்குடை தாங்கி நண்ணினார்.                       15

 

துவரிதழ் மங்கலை சுமனை யாதியோர்

கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில்

இவர்தரும் ஒதிமம் எண்ணி லாதஓர்

அவிர்சுடர் மஞ்ஞைபால் அடைவ தாமென.                      16

 

கால்செயும் வட்டமுங் கவின்கொள் பீலியும்

மால்செயும் நறுவிரை மல்க வீசியே

நீல்செயும் வடிவுடை நிமலை பாற்சிலர்

வேல்செயும் விழியினர் மெல்ல ஏகினார்.                17

 

கோடிகம் அடைப்பைவாள் குலவு கண்ணடி

ஏடுறு பூந்தொடை ஏந்தி யம்மைதன்

மாடுற அணுகியே மானத் தேகினார்

தோடுறு வரிவிழித் தோகை மார்பலர்.                           18

 

நாதன தருள்பெறு நந்தி தேவியாஞ்

சூதுறழ் பணைமுலைச் சுகேசை என்பவள்

மாதுகை திருவடி மலர்கள் தீண்டிய

பாதுகை கொண்டுபின் படர்தல் மேயினாள்.                      19

 

கமலினி அனிந்திதை என்னுங் கன்னியர்

அமலைதன் சுரிகுழற் கான பூந்தொடை

விமலமொ டேந்தியே விரைந்து செல்கின்றார்

திமிலிடு கின்றதொல் சேடி மாருடன்.                            20

 

அடுத்திடு முலகெலாம் அளித்த அம்மைசீர்

படித்தனர் ஏகினர் சிலவர் பாட்டிசை

எடுத்தனர் ஏகினர் சிலவர் ஏர்தக

நடித்தனர் ஏகினர் சிலவர் நாரிமார்.                              21

 

(15. ஐயை - அம்பிகை. 

16. துவர் - செந்நிறம். இவர்தரு - செல்லாநின்ற.

17. கால் - காற்று.  பீலி - மயில்விசிறி.  நீல் - நீலநிறம்.  நிமலை - அம்பிகை. 

18. கோடிகம் - பூந்தட்டு; அணிகலச் செப்புமாம்.  கண்ணடி - கண்ணாடி.  

தோடு - காதணி.  19. சூது - சொக்கட்டான் காய்.

20. அமலை - அம்பிகை.  விமலம் - தூய்மை.  திமில் - திமிலம் : பேரொலி. 

21. சிலவர் - சிலர்.  நாரிமார் - பெண்கள்.)

 

பாங்கியர் சிலதியர் பலரும் எண்ணிலா

வீங்கிய பேரொளி விமானத் தேறியே

ஆங்கவள் புடையதாய் அணுகிச் சென்றனர்

ஓங்கிய நிலவுசூழ் உடுக்கள் போன்றுளார்.                22

 

தண்ணுறு நானமுஞ் சாந்துஞ் சந்தமுஞ்

சுண்ணமுங் களபமுஞ் சுடரும் பூணகளும்

எண்ணருந் துகில்களும் இட்ட மஞ்சிகை

ஒண்ணுத லார்பரித் துமைபின் போயினார்.                      23

 

குயில்களுங் கிள்ளையுங் குறிக்கொள் பூவையும்

மயில்களும் அஞ்சமும் மற்றும் உள்ளவும்

பயிலுற ஏந்தியே பரைமுன் சென்றனர்

அயில்விழி அணங்கினர் அளப்பி லார்களே.                      24

 

விடையுறு துவசமும் வியப்பின் மேதகு

குடைகளும் ஏந்தியுங் கோடி கோடியாம்

இடியுறழ் பல்லியம் இசைத்தும் அம்மைதன்

புதைதனில் வந்தனர் பூதர் எண்ணிலார்.                  25

 

அன்னவள் அடிதொழு தருள்பெற் றொல்லையில்

பன்னிரு கோடிபா ரிடங்கள் பாற்பட

முன்னுற ஏகினன் மூரி ஏற்றின்மேல்

தொன்னெறி அமைச்சியற் சோம நந்தியே.                       26

 

இவரிவர் இத்திறம் ஈண்ட எல்லைதீர்

புவனமும் உயிர்களும் புரிந்து நல்கிய

கவுரியம் மானமேற் கடிது சென்றரோ

தவலுறு வோன்மகச் சாலை நண்ணினாள்.                      27

 

ஏலுறு மானநின் றிழிந்து வேள்வியஞ்

சாலையுள் ஏகியே தக்கன் முன்னுறும்

வேலையில் உமைதனை வெகுண்டு நோக்கியே

சீலமி லாதவன் இனைய செப்பினான்.                           28

 

(22. உடுக்கள் - நட்சத்திரங்கள். 

23. நானம் - கஸ்தூரி.  சாந்து - கலவைச் சந்தனம்.  சந்தம் - சந்தனம்.

மஞ்சிகை - பேழை; பெட்டி.  24. பூவை - நாகணவாய்ப்பறவை.  

அஞ்சம் - அன்னம்.  பரை - உமை. 

26. சோமநந்தி - இவன் ஒரு தலைமைக் கணாதிபன். 

28. சீலமிலாதவன் - ஒழுக்கமற்ற தக்கன்.)

 

 

வேறு

 

தந்தை தன்னொடுந் தாயி லாதவன்

சிந்தை அன்புறுந் தேவி யானநீ

இந்த வேள்வியான் இயற்றும் வேலையில்

வந்த தென்கொலோ மகளிர் போலவே.                  29

 

மல்லல் சேரும்இம் மாம கந்தனக்

கொல்லை வாவென உரைத்து விட்டதும்

இல்லை ஈண்டுநீ ஏக லாகுமோ

செல்லும் ஈண்டுநின் சிலம்பில் என்னவே.                30

 

மங்கை கூறுவாள் மருகர் யார்க்குமென்

தங்கை மார்க்கும்நீ தக்க தக்கசீர்

உங்கு நல்கியே உறவு செய்துளாய்

எங்கள் தம்மைஓர் இறையும் எண்ணலாய்.                      31

 

அன்றி யும்மிவண் ஆற்றும் வேள்வியில்

சென்ற என்னையுஞ் செயிர்த்து நோக்குவாய்

நன்ற தோவிதோர் நவைய தாகுமால்

உன்தன் எண்ணம்யா துரைத்தி என்னவே.                32

 

ஏய முக்குணத் தியலுஞ் செய்கையுள்

தீய தொல்குணச் செய்கை ஆற்றியே

பேயொ டாடல்செய் பித்தன் தேவியாய்

நீயும் அங்கவன் நிலைமை எய்தினாய்.                  33

 

அன்ன வன்தனோ டகந்தை மேவலால்

உன்னை எள்ளினன் உனது பின்னுளோர்

மன்னு கின்றவென் மருகர் யாவரும்

என்னி னும்மெனக் கினியர் சாலவும்.                            34

 

ஆத லாலியா னவர் பாங்கரே

காத லாகியே கருது தொல்வளன்

யாது நல்கினன் இந்த வேள்வியில்

ஓது நல்லவி யுளது நல்கினேன்.                        35

 

புவனி உண்டமால் புதல்வ னாதியாம்

எவரும் வந்தெனை ஏத்து கின்றனர்

சிவனும் நீயுமோர் சிறிதும் எண்ணலீர்

உவகை யின்றெனக் குங்கள் பாங்கரில்.                  36

 

ஏற்றின் மேவுநின் இறைவ னுக்கியான்

ஆற்றும் வேள்வியுள் அவியும் ஈகலம்

சாற்று கின்றவே தத்தின் வாய்மையும் 

மாற்று கின்றனன் மற்றென் வன்மையால்.                       37

 

அனைய தன்னிஈண் டடுத்த நிற்கும்யான்

தினையின் காறுமோர் சிறப்புஞ் செய்கலன்

எனவி யம்பலும் எம்பி ராட்டிபால்

துனைய வந்ததால் தோமில் சீற்றமே.                           38

 

(30. மல்லல் - வளப்பம்.  நின்சிலம்பில் - உனது கயிலை மலைக்கு.  

33. தீயதொல் குணம் - தாமதகுணம. 

36. உவகை இன்று - விருப்பம் இல்லை. 

37. சாற்றுகின்ற - சிவபரமாக உரையாநின்ற.  வாய்மை - உண்மைப் பொருளை. 

38. தினை - ஒரு தானியம்; இது அளவில் சிறியது.  துனைய - விரைவாக.)

 

சீற்ற மாயதீச் செறியு யிர்ப்பொடே

காற்றி னோடழல் கலந்த தாமெனத்

தோற்றி அண்டமுந் தொலைவில் ஆவியும்

மாற்று வானெழீஇ மல்கி ஓங்கவே.                             39

 

பாரும் உட்கின பரவு பௌவமுந்

சீரும் உட்கின நெருப்பும் உட்கின

காரும் உட்கின கரிகள் உட்கின

ஆரும் உட்கினர் அமர ராயுளார்.                        40

 

பங்க  யாசனப் பகவன் தானுமச்

செங்கண் மாயனுஞ் சிந்தை துண்ணென

அங்கண் உட்கினார் என்னின் ஆங்கவள்

பொங்கு சீற்றம்யார் புகல வல்லரே.                             41

 

வேலை அன்னதில் விமலை என்பவள்

பாலின் நின்றதோர் பாங்கி தாழ்ந்துமுன்

ஞாலம் யாவையும் நல்கும் உன்றனக்

கேலு கின்றதோ இனைய சீற்றமே.                             42

 

மைந்தர் யாரையும் வளங்கள் தம்மொடுந்

தந்து நல்கிய தாய்சி னங்கொளா

அந்த மாற்றுவான் அமைந்து ளாயெனின்

உய்ந்தி டுந்திறம் உண்டு போலுமால்.                           43

 

அறத்தை ஈங்கிவன் அகன்று ளானெனச்

செறுத்தி அன்னதோர் சீற்றம் யாரையும்

இறைக்கு முன்னரே ஈறு செய்யுமால்

பொறுத்தி ஈதெனப் போற்றல் மேயினாள்.                44

 

போற்றி நிற்றலும் புனிதை தன்பெருஞ்

சீற்ற மாய்எழுந் தீயை யுள்ளுற

மாற்றி வேள்விசெய் வானை நோக்கியே

சாற்று கின்றனள் இனைய தன்மையே.                          45

 

என்னை நீயிவண் இகழ்ந்த அன்மையை

உன்ன லேன்எனை யுடைய நாயகன்

தன்னை எள்ளினாய் தரிக்கி லேன்அதென்

கன்னம் ஊடுசெல் கடுவு போலுமால்.                            46

 

நிர்க்கு ணத்தனே நிமல னன்னவன்

சிற்கு ணத்தனாய்த் திகழு வானொரு

சொற்கு ணத்தனோ தொலைக்கு நாள்அடு

முற்கு ணத்தினை முன்னு மாறலால்.                           47

 

(42. வேலை அன்னதில் - அந்தச்சமயத்தில்.  விமலை - ஒரு சேடி. 

43. வளங்கள் தம்மொடு - தனுகரணபுவன போகங்களாகிய வளப்பங்களுடன். 

45. புனிதை - உமாதேவியார்.  46. கன்னம்ஊடு - காதினுள்.  கடுவு - விஷம்.

47. ஒரு சொற்குணத்தனோ - ஒரு குணமுடையவனோ.  தொலைக்கு நாள் 

அடு முற்குணத்தினை முன்னு மாறலால் - சங்கார காலத்திற்கு முன் உள்ள 

குணத்தினைக் கருதுவதன்றித் தாமதமாகிய ஒரு குணமுடையனோ இல்லை 

என்றபடி.  நிமலன் (சிவபெருமான்) நிற்குணத்தனே; அவனே சிற்குணனாகவும்

விளங்குவான்; சங்கார காலத்தில் சங்கரிக்கு முன் குணத்தினை எண்ணுவதே 

அல்லாமல் மற்றைய காலத்துத் தாமத குணமுடையவனோ அல்லன் என்பது கருத்து.)

 

துன்று தொல்லுயிர் தொலைவு செய்திடும்

அன்று தாமதத் தடுவ தன்றியே

நன்று நன்றது ஞான நாயகற்

கென்று முள்ளதோர் இயற்கை யாகுமோ.                48

 

தீய தன்றடுஞ் செயலும் நல்லருள்

ஆயில் ஆவிகள் அழிந்துந் தோன்றியும்

ஓய்வி லாதுழன் றுலைவு றாமலே

மாய்வு செய்திறை வருத்த மாற்றலால்.                 49

 

ஆன வச்செயல் அழிவி லாததோர்

ஞான நாயகற் கன்றி நாமெனும்

ஏனை யோர்களால் இயற்ற லாகுமோ

மேன காவலும் விதியும் என்னவே.                             50

 

முன்னரே எலா முடித்த நாதனே

பின்னும் அத்திறம் அளிக்கும் பெற்றியான்

அன்ன வன்கணே அனைத்து மாகுமால்

இன்ன பான்மைதான் இறைவன் வாய்மையோ.                   51

 

தோமி லாகமஞ் சுருதி செப்பியே

ஏம விஞ்சைகட் கிறைவ னாகியே

நாம றும்பொருள் நல்கும் எந்தையைத்

தாம தன்னெனச் சாற்ற லாகுமோ.                              52

 

ஆத லால்அவன் அனைவ ருக்குமோர்

நாத னாமரோ அவற்கு நல்லவி

ஈதல் செய்திடா திகழ்தி அஞ்சியே

வேதம் யாவையும் வியந்து போற்றவே.                 53

 

சிவனெ னுந்துணைச் சீரெ ழுத்தினை

நுவலு வோர்கதி நொய்தி லெய்துவார்

அவனை எள்ளினாய் ஆரி தாற்றுவார்

எவனை உய்குதி இழுதை நீரைநீ.                               54

 

(49. உயிர்கள் பிறப்பு இறப்புக்களில் வருந்தாமல் இளைப்பாறும் பொருட்டே

இறைவன் சங்காரத்தொழில் புரிகின்றார்ன; இச்செயல் அருட்டிறமே ஆகுமென்க.

50. நாம் எனும் - அகங்காரம் பொருந்திய.  மேன - முன் உரைத்த.  

காவலும் விதியும் - காத்தலும் படைத்தலும்.  51. இறைவன் வாய்மை - 

சிவபெருமானின் உண்மைநிலை.  52. ஏம விஞ்சை - உயிர்க்குப் பாதுகாவலான

வித்தை.  நாம் அறும் - நிந்தை இல்லாத.  54. சிவன் எனும் - மங்களாகரம் 

பொருந்திய.  துணைச்சீர் எழுத்து - 'சிவ' என்னும் இரண்டெழுத்து.  கதி - சிவகதி.)

 

வேறு

 

முண்டக மிசையினோன் முகுந்தன் நாடியே

பண்டுணர் வரியதோர் பரனை யாதியாக்

தொண்டிலர் எள்யி கொடுமை யோர்க்கெலாந்

தண்டம்வந் திடுமென மறைகள் சாற்றுமால்.                     55

 

ஈதுகேள் சிறுவிதி இங்ங னோர்மகம்

வேதநா யகன்தனை விலக்கிச் செய்தனை

ஆதலால் உனக்கும்வந் தடைக தண்டமென்

றோதினாள் உலகெலாம் உதவுந் தொன்மையாள்.         56

 

இன்னன கொடுமொழி இயம்பி வேள்விசெய்

அந்நிலம் ஒருவிஇவ் வகிலம் ஈன்றுளாள்

முன்னுள பரிசன முறையின் மொய்த்திடப்

பொன்னெழின் மானமேற் புகுந்து போந்தனள்.                    57

 

அகன்றலை உலகருள் அயன்தன் காதலன்

புகன்றன உன்னியுட் புழுங்கி ஐந்துமா

முகன்திரு மலையிடை முடுகிச் சென்றனள்

குகன்தனை மேலருள் கொடிநு சுப்பினாள்.                       58

 

ஒருவினள் ஊர்தியை உமைதன் நாயகன்

திருவடி வணங்கினள் சிறிய தொல்விதி

பெரிதுனை இகழ்ந்தனன் பெரும அன்னவன்

அரிதுசெய் வேள்வியை அழித்தி என்னவே.                      59

 

எவ்வமில்   பேரருட் கிறைவ னாகியோன்

நவ்வியங் கரமுடை நாதன் ஆதலின்

அவ்வுரை கொண்டில னாக அம்பிகை

கவ்வையொ டினையன கழறல் மேயினாள்.                      60

 

மேயின காதலும் வெறுப்பு நிற்கிலை

ஆயினும் அன்பினேற் காக அன்னவன்

தீயதோர் மகத்தினைச் சிதைத்தல் வேண்டும்என்

நாயக னேயென நவின்று போற்றினாள்.                  61

 

(55. கொண்டிலர் - கொள்ளாராய்.  தண்டம் - தண்டனை.

56. வேதநாயகன் - சிவபெருமான்.  57. ஒருவி - நீங்கி.  

58. ஐந்து மாமுகன் மலை - கயிலாயமலை.  ஐந்து மாமுகன் - ஈசானம், 

தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து 

திருமுகங்களையுடைய சிவபெருமான்.  குகன் - முருகன்.  நுசுப்பு - இடை. 

59. தொல்விதி - தக்கன்.  60. நவ்வி - மான்.  கவ்வை - துன்பம்.)

 

ஆகத் திருவிருத்தம் - 1326

     - - -

 

 

19. வீ ர ப த் தி ர ப்  ப ட ல ம்

 

அந்த வெல்லைஎமை யாளுடைய அண்ணல் அகிலந்

தந்த மங்கைதன தன்பினை வியந்து தளருஞ்

சிந்தை கொண்டசெயல் முற்றியிடு மாறு சிறிதே

புந்தி யுள்ளுற நினைநதனன் நினைந்த பொழுதே.         1

 

பொன்னின் மேருவின் இருந்திடு பொலங்கு வடெலாம்

மின்னும் வௌ¢ளிமுளை மேற்கொடுவிளங் கியதென

மன்னு தண்சுடர் மதிக்குறை மிலைச்சு மவுலிச்

சென்னி ஆயிரமும் வான்முகடு சென்றொ ளிரவே.               2

 

விண்ட லந்தனில் இலங்குசுட ரின்மி டலினைக்

கண்ட லந்தர ஒதுங்குவன போற்க திருலா

மண்ட லந்திகழ் முகந்தொறும் வயங்கு பணியின்

குண்ட லங்களிணை கொண்டகுழை கொண்டு லவவே.            3

 

ஆன்ற திண்கடல் வறந்திட இறந்த தனிடைக்

தோன்று கின்றதொர் மடங்கல்வலி யின்று தொலைய

மூன்று கண்கள்முக மாயிரமு மேவி முனிவால்

கான்ற அங்கிகளின் அண்டமுழு துங்க ரியவே.                   4

 

சண்ட மாருதமும் அங்கியும் ஒதுங்கு தகவால்

துண்ட மீதுறுங் உயிர்ப்புடன் எழுந்த சுடுதீ

அண்ட கோளமுடன் அப்புறமு மாகி அழியாக்

கொண்ட லூடுதவழ் மின்னுவென வேகு லவவே.         5

 

மலரின் வந்துறையும் நான்முகன் முகுந்தன் மகவான்

புலவர் தம்புகழ் அனைத்தையும் நுகர்ந்த பொழுதில்

சிலவொ ழுங்கொடித ழின்புடைகள் சிந்தி எனவே

நிலவு செய்தபிறை வாள்எயிறு நின்றி லகவே.                   6

 

துண்ட மீதின்அழ லோஇதழின் வீழ்ந்த சுசியோ

மண்டு தீவிழிகள் கான்றகனலோம னமிசைக்

கொண்டதோர் வெகுளி யாகிய கொடுந்த ழலதோ

எண்டி சாமுகமு மாகிஅடு கின்ற தெனவே.                      7

 

தண்ட லின்றுறையும் ஆவிகள் வெரீஇத் தளரமேல்

அண்ட ரண்டநிரை விண்டிட அவற்றி டையுறுந்

தெண்டி ரைக்கடல் கலங்கஅடல் உற்ற சிவனின்

கொண்ட ஆர்ப்புமுழு தெண்டிசை குலாய்நி மிரவே.               8

 

(2. குவடு - சிகரம்.  மிலைச்சு - சூடிய.  மவுலி - கிரீடம். 

3. பணியின் குண்டலம் - சர்ப்பகுண்டலம்.  குழை - காது. 

5. சண்ட மாருதம் - பெருங்காற்று.  துண்டம் - மூக்கு.  6. நுகர்ந்த - உண்ட.

7. எண்டிசா முகம் - எட்டுத் திக்கு. 8.வெரீஇ -பயந்து.)

 

தராத லங்கண்முழு துண்டுமிழு கின்ற தகைசேர்

அராவி னங்கடமை யங்கடக மங்க தமொடே

விராய மென்றொடிக ளாவிடுபு விண்ணு றநிமிர்க்

திராயி ரங்கொள்புய மெண்டிசையெ லாஞ்செ றியவே.             9

 

வரத்தின் மேதகைய வேதன்முத லான வலியோர்

சிரத்தின் மாலிகை அடுக்கல்அவ ரென்பு செறிபூண்

பெரத்த கேழலின் மருப்பினுடன் ஆமை பிறவும்

உரத்தின் மேவுபுரி நூலொடு பெயர்ந்தொ ளிரவே.         10

 

குந்தம் வெம்பலகை தோமரமெ ழுக்கு லிசம்வாள்

செந்த ழற்கழுமுள் சூலமொடு பீலி சிலைகோல்

முந்து தண்டம்அவி ராழிவசி யால முதலாம்

அந்த மில்படைகள் அங்கைக டொறுங்கு லவவே.         11

 

ஐய மாழைதனின் மாமணியி னாகி அறிவார்

செய்ய லாதுவரு பேரணிக ளோடு சிவணிப்

பையு லாவுசுடர் வெம்பணிக ளான பணியும்

மெய்யெ லாமணி இடந்தொறும் மிடைந்தி லகவே.               12

 

நெஞ்ச லஞ்சல மரும்பிறவி நீடு வினையின்

சஞ்ச லஞ்சல மகன்றதன தன்பர் குழுவை

அஞ்ச லஞ்சலெனுமஞ் சொலென விஞ்சு சரண்மேற்

செஞ்சி லம்பொடு பொலுங்கழல் சிலம்ப மிகவே.         13

 

வேறு  

 

அந்தி வான்பெரு மேனியன் கறைமிட றணிந்த

எந்தை தன்வடி வாயவன் நுதல்விழி யிடையே

வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மா

முந்து வீரபத் திரனெனுந் திறலுடை முதல்வன்.                  14

 

அங்க வேலையில் உமையவள் வெகுளியால் அடல்செய்

நங்கை யாகிய பத்திர காளியை நல்கச்

செங்கை யோரிரண் டாயிரம் பாதிசெம் முகமாய்த்

துங்க வீரபத் திரன்றனை யடைந்தனள் துணையாய்.              15

 

எல்லை தீர்தரு படைக்கலத் திறையுமவ் விறைவற்

புல்லு கின்றதோர் திறலுடைத் துணைவியும் போலத்

தொல்லை வீரனுந் தேவியும் மேவரு தொடர்பை

ஒல்லை காணுறா மகிழ்ந்தனர் விமலனும் உமையும்.             16

 

9. தராதலங்கள் - உலகங்கள்.  10. கேழல் - பன்றி.  11. குந்தம் - ஈட்டி. 

பீலி - பேரீட்டி.  கோல் - அம்பு.  வசி - வாள்.  12. ஐ - அழகு; அ : சாரியை.

மாழை - பொன்.  14. அந்தி - அந்திப் பொழுது.  15. பாதி - இங்கு ஆயிரம். 

துங்கம் - உயர்வு.)

 

தன்னை வந்தடை பத்திரை தன்னொடு தடந்தாள்

மன்னு வார்கழல் கலித்திட வலஞ்செய்து வள்ளல்

அன்னை தாதையை வணங்கியே யவர்தமை நோக்கி

முன்ன நின்றுகை தொழுதனன் இவைசில மொழிவான்.           17

 

மால யன்றனைப் பற்றிமுன் தந்திடோ மறவெங்

காலன் ஆவியை முடித்திடோ அசுரரைக் களைகோ

மேலை வானவர் தம்மையுந் தடிந்திடோ வேலை

ஞாலம் யாவையும் விழுங்குகோ உலகெலா நடுக்கோ.            18

 

மன்னு யிர்த்தொகை துடைத்திடோ வரம்பில வாகித்

துன்னும் அண்டங்கள் தகர்த்திடோ நுமதுதூ மலர்த்தாள்

சென்னி யிற்கொடே யாதொன் றென்னினுஞ் செய்வன் 

என்னை இங்குநீர் நல்கியே தெப்பணிக் கொன்றான்.               19

 

என்ற வீரனை நோக்கியே கண்ணுதல் எம்மை

அன்றி வேள்விசெய் கின்றனன் தக்கன்அவ் விடைநீ

சென்று மற்றெம தவியினைக் கேட்டிஅத் தீயோன்

நன்று தந்தன னேயெனின் இவ்விடை நடத்தி.                    20

 

தருத லின்றெனின் அனையவன் தலையினைத் தடிந்து

பரிவி னால்அவன் பால்உறு வோரையும் படுத்துப்

புரியும் எச்சமுங் கலக்குதி அங்கது பொழுதின்

வருதும் ஆயிடை ஏகுதி என்றனன் வள்ளல்.                     21

 

அந்த வேலையில் பத்திரை தன்னொடும் அடலின்

முந்து வீரனவ் விருவர்தம் பதங்களின் முறையால்

சிந்தை அன்புடன் வணங்கியே விடைகொண்டு சிவனை

நிந்தை செய்தவன் வேள்வியை அழித்திட நினைந்தான்.           22

 

உன்னி மற்றறண் நீங்கியே ஆற்றவும் உருத்துத்

தன்னு யிர்ப்பினால் அளவையில் கணங்களைத் தந்து

துன்னு கின்றமெய் வியர்ப்பினால் சிலவரைத் தொகுத்து

வன்னி போல்மயிர்க் கால்தொறுஞ் சிலவரை வகுத்தான்.          23

 

மொழியி னிற்பல பூதரை அளித்தனன் முளரி

விழியி னிற்பல பூதரை அளித்தனன் வேணி

யுழியி னிற்பல பூதரை அளித்தனன் உந்திச்

சுழியி னிற்பல பூதரை அளித்தனன் தூயோன்.                    24

 

தோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் சுவையின்

கோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் குளிர்பொற்

றாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் தடக்கை

வாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் வலியோன்.              25

 

(17. பத்திரை - பத்திரகாளி.  18. தந்திடோ - வரவோ.  

முடித்திடோ - முடிக்கவே.  நடுக்கோ நடுங்குமாறு செய்யவோ. 

 20. கேட்டி - கேள்.  நடத்தி - திரும்பி வருவாயாக.  

21. பரிவு - அன்பு.  எச்சம் - வேள்வி.  வள்ளல் - சிவன். 

22. அவ்விருவர் - அம்மை அப்பர். 

23. தன் - இங்கு வீரபத்திரர்.  உயிர்ப்பு - சுவாசம். 

 25. சுவையின்கோள் - நாக்கு.)

 

கையி னிற்சில பூதரை அளித்தனன் களத்தில்

வெய்ய மார்பினிற் கன்னத்திற் சிலவரை விதித்தான்

ஐய தோர்முழந் தாள்தனிற் சிலவரை அளித்தான்

குய்ய மீதினில் ஊருவிற் சிலவரைக் கொடுத்தான்.        26

 

இன்ன தன்மையில் வீரபத் திரனெனும் இறைவன்

தன்னை நேர்வரும் எண்ணிலா வீரரைத் தந்து

துன்னு கின்றுழிப் பத்திரை என்பதோர் துணைவி

அன்ன பண்பினிற் காளிகள் தொகையினை அளித்தாள்.           27

 

வீர பத்திர உருத்திரன் வேறுவே றளித்த

சார தர்க்குளங் கோர்சிலர் நீனிறந் தழைப்போர்

கோர பத்திரம் மணிக்கலன் மின்னுவிற் குலவக்

காரெ னப்பொலிந் துருமெனக் கழறுகின் றனரால்.         28

 

அக்கு மாலையும் மணிகளும் உடுக்கள்போல் அவிரப்

பக்க பாணிலா எயிறுகள் பிறையெனப் பயில

மிக்கு நீடிய வடிவின ராகியே மேலாஞ்

செக்கர் வானெனச் சேர்ந்தெழு பூதர்கள் சிலரே.                   29

 

அண்ட ரைத்தொலை வித்திடும் வீரனை அடைந்தோர்

பிண்ட முற்றும்வான் நிறத்தினர் பூதரில் பெரியோர்

பண்டி ரைத்தொரு முனிமகன் பின்றொடர் பாலின்

தெண்டி ரைக்டற் றொகையெனக் கிளர்ந்தனர் சிலரே.              30

 

வெம்பொன் மேனியர் அணுகுறின் அவர்தமை விரைவில்

பைம்பொன் மேனியர் ஆக்குமத் திருநிழல் பரப்பி

அம்பொன் மார்புடை மகுந்தனில் வடிவுடை யவராய்ச்

செம்பொன் மால்வரை நிரையெனத் தோன்றினர் சிலரே.           31

 

மேய வான்பசப் பூ£தரு மேனிய ராகிக்

காய மித்துணை யெனப்படாக் கணக்கின ராகி

மாயர் கண்டுயில் சேக்கையைத் தங்கணே வகுத்துச்

சேய தொன்மரத் தொகையெனக் கெழீஇயினர் சிலரே.             32

 

வேறு

 

அங்க வர்க்குள் அடல்விடை ஆனனந்

தங்கி நின்று தயங்கினர் ஓர்சிலர்

பொங்கு சீற்றப் பொருதிறல் வாலுளைச்

சிங்க மாமுக மாய்த்தெழித் தார்சிலர்.                           33

 

புழைகொள் கையுடைப் போர்வலி யாளியின்

முழைகொள் மாமுக மாகிமொய்த் தார்சிலர்

வழுவை யானனம் மன்னினர் ஓர்சிலர்

உழுவை யின்முக மாகியுற் றார்சிலர்.                           34

 

(26. குய்யம் - அபானவாயில்.  ஊரு - தொடை.  28. பத்திரம் - பாட்படை. 

29. அக்கு மாலை - என்புமாலை; உருத்திராட்ச மாலையுமாம். 

30. அண்டர் - தேவர்.  பிண்டம் - உடல்.  முனிமகன் - இங்கு உபமன்னியு. 

32. பசப்பு - பசலை நிறம்.  மாயர் - திருமால்.  34. புழை - துவாரம்.  

முழை - குகை.  வழுவை - யானை.  ஆனனம் - முகம்.  உழுவை பலி.)

அலைமு கப்பரி ஆனனம் எய்தியே

கொலைமு கத்துக் குழீஇயினர் ஓர்சிலர்

மலைமு கத்து மரைகளி றெண்குடன்

கலைமு கத்துக் கவினடைந் தார்சிலர்.                          35

 

இனையர் தங்குழு எண்ணில அன்னர்கைப்

புனைய நின்ற பொருபடை எண்ணில

வினைகொள் வன்மையும் வீரமும் இற்றென

நினைவ தற்கரி தெங்ஙன் நிகழ்த்துகேன்.                 36

 

கையில் எண்ணில் படையினர் காய்கனல்

செய்ய பூணினர் தீக்கலுழ் கண்ணினர்

வெய்ய சொல்லர் வெருவரு மேனியர்

வையம் யாவும் மடுக்குறும் வாயினார்.                         37

 

கட்டு செஞ்சடைக் கற்றையர் காய்ந்தெழு

நெட்ட ழற்கு நிகர்வரு நாவினர்

வட்டி மாலைகள் மானும் எயிற்றினர்

தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார்.                          38

 

துண்ட மீது சொரிதருந் தீயினர்

அண்ட கூடம் அலைத்திடுங் கையினர்

சண்ட மாருதந் தாழ்க்குஞ் செலவினர்

உண்டு போரென் றுளந்தளிர்ப் பெய்துவார்.                       39

 

மடித்த வாயினர் வானவர் என்பினால்

தொடுத்த கண்ணி துயல்வரு மார்பினர்

தடித்த தோளர் தனித்தழல் என்னினும்

பிடித்து நுங்கும் பெரும்பசி மிக்குளார்.                           40

 

நச்சில் தீயவர் நானில மங்கையும்

அச்சுற் றெஞ்ச அடிகள் பெயர்த்துளார்

கச்சைத் தோல்மிசை கட்டிய தட்டியர்

உச்சிட் டம்மென் றுலகினை உண்கிலார்.                 41

 

சூழி யானை துவன்றிய மால்வரைப்

பாழி யாகப் படர்செவி வாயினர்

ஊழி மாருதம் உட்கும் உயிர்ப்பினர்

ஆழி யாக அகன்ற அகட்டினார்.                         42

 

(35. அலை முகப்பரி - கடலிடத்துள்ள வடவை என்னும் குதிரை.

மறை - மான்.  எண்கு - கரடி.  கலை - குரங்கு.  38. வட்டி - பலகறை.

40. நுங்கும் - தின்னும்.  41. நச்சில் - விடத்தைக்காட்டிலும்.  

தட்டி - அரையில் கட்டும் உடை விசேடம்; அரைச் சல்லடம். 

உச்சிட்டம் - (திருமால் உண்ட) எச்சில்.  42. சூழி - முகபடாம்.)

 

ஆழ்ந்த சூர்ப்பசுங் கண்ணர் அடித்துணை

தாழ்ந்த கையர் தடக்குறுந் தாளினர்

வீழ்ந்து மிக்க வியன் அத ரத்தினர்

சூழ்ந்த பூதத் தொகையினர் யாவரும்.                           43

 

வேறு

 

அத்தகை நின்றிட அண்ண லுடன்சேர்

பத்திர காளி பயந்திடு கின்ற

கத்து கடற்புரை காளிகள் தம்மை

இத்துணை யேயென எண்ணரி தாமால்.                  44

 

அந்தமில் பல்படை அங்கையில் ஏந்தி

உந்திய தும்பைகள் உச்சி மிலைச்சிச்

சுந்தர மெய்திய தோற்றம தாகி

விந்தை யெனச்சிலர் மேவினர் அன்றே.                 45

 

தோளின் மிசைத்திரி சூலம் இலங்கக்

கோளில் உயிர்ப்பலி கொள்கலன் ஏந்தித்

தாளிடை நூபுர சாலமி லங்கக்

காளிகள் போற்சிலர் காட்சி மலிந்தார்.                           46

 

வாகினி எங்குள வென்றிட மல்கு

மோகினி போற்சிலர் மொய்த்தனர் மாயச்

சாகினி போற்சிலர் சார்ந்தனர் அல்லா

யோகினி போற்சிலர் உற்றனர் அம்மா.                   47

 

அயிருற அண்டம் அனைத்தையும் ஏற்றா

உயிரவி நுங்கிய உன்னி யெழுந்தே

செயிரவி யாது தெழித்திடு தொன்னாள்

வயிரவி போற்சிலர் மன்னினர் மாதோ.                  48

 

நீடலை மாலை நிலத்திடை தோய

ஆடுறு பாந்தள் அணிக்கலன் மின்ன

ஈடுறு வானுரும் ஏறென ஆர்த்தே

மோடிக ளாமென மொய்த்தனர் சில்லோர்.                49

 

இவ்வகை மாதர்கள் யாவரும் வெவ்வே

றைவகை மேனிய ராய்வத னங்கள்

கைவகை எண்ணில ராய்க்கவின் மாட்சிச்

செவ்விய ராய்ச்செரு மேற்கிளர் கின்றார்.                50

 

வேறு

 

கணந்திகழ் அனைய பூதர் காரிகை மார்கள் யாரும்

அணங்குறு காளி தன்னோ டாண்டகை வீரன் தாளில்

பணிந்தனர் பரசி அன்னார் பாங்கரில் விரவிச் சூழ்ந்து

துணங்கைகொ டாடிப் பாடித் துள்ளியே போத லுற்றார்.            51

 

ஈட்டுமிக் கெழுந்து செல்லும் இன்னதோர் பூதர் தம்மில்

மோட்டிகல் பானு கம்பன் முதலிய கணங்கள் முத்தி

வீட்டுடைத் தலைவ னான வீரபத் திரன்முன் னாகி

ஈட்டுடைப் பல்லி யங்கள் யாவையும் இயம்பிச் சென்றார்.         52

 

கொண்டபே ராற்ற லோடுங் குலவிய வீரன் தன்பால்

அண்டமேல் உரிஞ்சப் பல்வே றணிப்பெருங் கவிகை கொண்டும்

விண்டுலாங் கவரி யீட்டம் வீசியுஞ் சேற லுற்றார்

தண்டனே பினாகி சிங்கன் ஆதியாம் தறுகட் பூதர்.         53

 

பாசிழை மகளிர் சில்லோர் பத்திரை பாங்க ராகித்

தேசுடைக் கவிகை ஈட்டந் திருநிழல் பரப்ப ஏந்தி

மாசறு கவரி வட்டம் பரம்பில இரட்டிப் பல்வே

றாசிகள் புகன்று செம்பொன் அணிமலர் சிதறிப் போந்தார். 54

 

படர்ந்திடு புணரி போலப் பார்முழு தீண்டித் தானை

அடங்கலும் ஆர்க்கும் ஓதை அகிலமுஞ் செறிய விண்ணும்

உடைந்ததவ் வண்டங் கொல்லோ உதுகொலோ இதுவோ என்னா

மிடைந்தபல் லண்டத் தோரும் விதிர்ப்பொடும் விளம்பல் உற்றார். 55

 

பூமிகள் எழுந்த அம்மா புவியெலாம் பரவித் தொல்பேர்

ஆழியும் அடைத்து வான்புக் கச்சுதன் பதங்கா றேகி

ஊழியின் முதல்வ னார்க்கும் ஒலியினால் உடைந்த அண்டப்

பாழிக டொறுமுற் றெல்லாம் புவனமும் பரந்த அன்றே.           56

 

அங்கெழு பூழி தன்னால் அவர்விழி கலுழுந் தீயால்

செங்கையிற் படைக்தேய்ப்பச் திறிய கனலால் வையம்

எங்கணும் எரிகள் துன்னி இரும்புகைப் படலம் ஈண்டிக்

கங்குலும் பகலுங் காணாக் கடைக்கப்பல் போன்ற தன்றே. 57

 

இப்பெருந் தானை சூழ எம்பிரான் எழுந்து சீற்றத்

துப்புடன் ஏகித் தக்கன் தொல்மகம் புரியுஞ சாலை

வைப்பினை அணுகித் தன்பால் வருடைத் தலைவர்க் கொன்று

செப்பினன் என்ப மன்னோ சேணுரு மேறு நாண்.         58

 

பற்றலர் புரமூன் றட்ட பரமனை இகழ்ந்து நீக்கிக் 

சிற்றினம் பொருளென் றுன்னிச் சிறுவிதி என்னுந் தீயோன்

இற்றிடு நெறியால் வேள்வி இயற்றும்இச் சாலை வாயில்

சுற்றொடு சேமஞ் செய்து துயக்கறக் காத்தி ரென்றான்.            59

 

என்றலுந் தானை யோர்கள் எயிற்புற முற்றுஞ் சூழ்ந்து

நின்றனர் வானி னூடு நெருங்கினர் வாய்தல் தோறுஞ்

சென்றனர் கொடிய தக்கன் சேனையாய் எதிர்ந்தோர் தம்மைக்

கொன்றனர் அவரூன் துய்த்துக் கூற்றனும் உட்க ஆர்த்தார். 60

 

(54. பாசிழை - பசிய ஆபரணம்.  57. பூழி - புழுதி.  கடைப்பகல் - ஊழிநாள். 

58. எம்பிரான் - வீரபத்திரன்.  59. சேமம் - பாது காவல்.  துயக்கு சோர்வு. 

60. எயில் - மதில்.  ஊன் - மாமிசம். உட் - அஞ்சுமாறு.)

                        

ஆகத் திருவிருத்தம் - 1386

     - - -

 

 

20. யாகசங்காரப் படலம்

 

ஆர்த்தலும் இறைவி தன்னோ டாண்டகை வீரன் வாசத்

தார்த்தொகை தூங்கும் யாக சாலையுள் ஏக லோடுந்

தீர்த்தனைத் தலைவி தன்னைத் திசைமுகன் முதலோர்யாரும்

பார்த்தனர் உளந்துண் ணென்று பதைபதைத் தச்சங் கொண்டார்.    1

 

மடங்கலின் வரவு கண்ட மானினம் போன்றும் வானத்

தடங்கிய உருமே றுற்ற அரவினம் போன்றும யாக்கை

நடுங்கினர் ஆற்றல் சிந்தி நகையொரீஇ முகனும் வாடி

ஒடுங்கினர் உயிரி லார்போல் இவைசில உரைக்க லுற்றார். 2

 

ஈசனும் உஆஆயு மேவந் தெய்தினர் என்பார் அன்னார்

காய்சினம் உதவ வந்த காட்சியர் காணும் என்பார்

பேசரி தந்தோ அந்தோ பெரிதிவர் சீற்றம் என்பார்

நாசம்வந் திட்ட தின்றே நம்முயிர்க் கெலாம் என்பார்.             3

 

தக்கனுக் கீறும் இன்றே சார்ந்தது போலும் என்பார்

மிக்கதோர் விதியை யாரே விலக்கவல் லார்கள் என்பார்

முக்கணெம் பெருமான் தன்னை முனிந்திகழ் கின்ற நீரார்

அக்கண முடிவர் என்றற் கையமும் உண்டோ என்பார்.            4

 

விமலனை இகழு கின்றான் வேள்வியேன் புரிந்தான் என்பார்

நமையெலாம் பொருளென் றுன்னி நடத்தினன் காணும் என்பார்

இமையவர் குழுவுக் கெல்லாம் இறுதி யின்றாமோ என்பார்

உமையவள் பொருட்டால் அன்றோ உற்றதீங் கிதெலாம் என்பார்.   5

 

ஈடுறு பூதர் யாரும் எங்கணும் வளைந்தார் என்பார்

ஓடவும் அரிதிங் கென்பார் ஔ¤த்திடற் கிடமே தென்பார்

வீடினங் காணும் என்பார் மேலனிச் செயலென் னென்பார்

பாடுசூழ் அங்கி நாப்பண் பட்டபல் களிறு போன்றார்.              6

 

அஞ்சினர் இனைய கூறி அமரர்கள் அரந்தை கூரச்

செஞ்சரண் அதனை நீங்காச் சிலபெரும் பூதர் சூழப்

பஞ்சுறழ் பதுமச் செந்தாட் பத்திரை யோடு சென்று

வெஞ்சின வீரன் வெய்யோன் வேள்விசெய் வதனைக் கண்டான்.   7

 

(1. இறைவி - பத்திரகாளி.  தீர்த்தனை - பரிசுத்தனான வீரபத்திரனை. 

தலைவி தன்னை - பத்திரகாளியை.  2. மடங்கல் - சிங்கம்.  உரும் ஏறு - இடியேறு. 

4. ஈறும் - அழிவும்.  5. நமை - நம்மை; இங்கு பிரமன் முதலிய தேவர்களை. 

பொருள் என்று - சிறந்த கடவுள் என்று.  6. ஈடு - வன்மை.  பாடு - பக்கம். 

7. அரந்தை - துன்பம்.  பஞ்சு - செம்பஞ்சு.)

 

இடித்தென நக்குப் பொங்கி எரிவிழித் திகலி ஆர்த்துப்

பிடித்தனன் வயக்கொம் போதை பிளந்தது செம்பொன் மேரு

வெடித்தது மல்லல் ஞாலம் விண்டன அண்டம் யாவும்

துடித்தன உயிர்கள் முற்றும் துளங்கினர் சுரர்க ளெல்லாம்.         8

 

எழுகின்ற ஓசை கேளா இடியுண்ட அரவிற் கோரா

விழுகின்றார் பதைக்கின்றார் றார்வாய் வெருவுகின் றார்கள் ஏங்கி

அழுகின்றார் ஓடு கின்றார் அழிந்ததோ வேள்வி என்று

மொழிகின்றார் மீளு கின்றார் முனிவரும் இமையோர் தாமும்.     9

 

வானவர் பிறரிவ் வாறு வருந்தினர் என்னின் அங்கண்

ஏனையர் பட்ட தன்மை இயம்பரி தெவர்க்கும் என்றால்

நானது புகல வற்றோ நளிர்புனல் வறந்த காலத்

தானதோ ருருமே றுற்ற அசுணமாத் தன்மை பெற்றார்.            10

 

வேலையங் கதனின் மேலாம் வீரருள் வீரன் ஏகி

மாலயன் தானும் உட்க மகத்தின்முன் அடைத லோடுஞ்

சீலம தகன்ற கொள்கைச் சிறுவிதி அவற்கண் டேங்கிச்

சாலவு நடுக்குற் றுள்ளந் தளர்ந்தனன் தலைமை நீங்கி.            11

 

சாரதர் வளைந்த வாறும் சாலைய துடையு மாறும்

ஆருமங் குற்ற வானோர் அயர்வுறு மாறு நோக்கிப்

பேரஞர் உழந்து தேறிப் பெருந்திற லாளன் போல

வீரபத் திரனை நோக்கி விளம்பினன் இனைய தொன்றே.          12

 

இங்குகுந் தடைந்த தென்கொல் யாரைநீ என்ன லோடுஞ்

சங்கரன் தனது சேயான் தக்கநின் வேள்வி தன்னின்

அங்கவற் குதவும் பாகம் அருளுதி அதற்கா அந்தப்

புங்கவன் அருளி னாலே போந்தனன் ஈண்டை யென்றான். 13

 

இத்திறம் வீரன் கூற இருந்தவத் தக்கன் உங்கள் 

அத்தனுக் குலகம் வேள்வி அதனிடை அவியின் பாகம்

உய்த்திடா தென்ன அங்கண் உறைதரு மறைகள் நான்குஞ்

சுத்தமார் குடிலை தானுந் துண்ணென எழுந்து சொல்லும்.         14

 

ஈறிலா உயிர்கட் கெல்லாம் இறையவன் ஒருதா னாகும்

மாறிலா அரனே அல்லால் மகத்தினுக் கிறையா யுள்ளோன்

வேறொர்வா னவனும் உண்டோ வேள்வியில் அவற்கு நல்குங்

கூறுநீ பாணி யாது கொடுத்தியால் என்ற அன்றே.         15

 

(8. வயக் கொம்பு - வெற்றிக்கு ஊதும் கொம்பு.  

9. அசுணமா - இ•து இனிய இசையைக் கேட்டுக்களிக்கும் ஒரு மிருகம்; 

பறவை என்பாரும் உளர்.  14. உங்கள் அத்தன் - இங்குச் சிவபெருமான். 

 உலகம் - உலக மக்கள்.  குடிலை - பிரணவம்.)

 

தேற்றமில் சிதட னாகுஞ் சிறுவிதி கேட்ப இன்ன

கூற்றினால் மறைகள் நாங்குங் குடிலையும் ஒருங்கு கூடிச்

சாற்றலும் அன்னான் நல்காத் தலைமைகண் டிறவன் தொல்சீர்

போற்றியங் ககன்று தத்தம் புகலிடம் போய அன்றே.              16

 

போதலுந் தக்கன் தன்னைப் பொலங்கழல் வீரன் பாரா

வேதமும் பிறவுங் கூறும் விழுப்பொருள் கேட்டி அன்றே

ஈதியெம் பெருமாற் குள்ள இன்னவி எனலுங் கானில்

பேதையொ டாடல் செய்யும் பித்தனுக் கீயேன் என்றான்.          17

 

ஆங்கது கேளா அண்ணல் அம்புய னாதி யாகிப்

பாங்குற விரவும் வானோர் பல்குழு அதனை நோக்கி

நீங்களும் இவன்பா லானீர் நிமலனுக் கவிநல் காமல்

ஈங்கிவன் இகழுந் தன்மை இசைவுகொல் உமக்கும் என்றான்.      18

 

என்றலும் அனையர் தொல்லூர் இசைவினால் அதுகே ளார்போல்

ஒன்றுமங் குரையா ராகி ஊமரின் இருத்த லோடும்

நின்றதோர் வீரன் வல்லே நெருப்பெழ விழித்துச் சீறி

நன்றிவர் வன்மை என்னா நகையெயி றிலங்க நக்கான்.           19

 

கடித்தனன் எயிறு செந்தீக் கானற்னன் கனன்று கையில்

பிடித்திடு மேரு வன்ன பெருந்திறல் கதைய தொன்றால்

தடித்திடும் அகல மார்பத் தடவரை அகடு சாய

அடித்தனன் தக்கன் உள்ளம் வெருவர அரிமுன் வீழ்ந்தான். 20

 

விட்டுமுன் வீழத லோடும் வீரருள் வீரத் தண்ணல்

மட்டுறு கமலப் போதில் வான்பெருந் தவிசில் வைகுஞ்

சிட்டனை நோக்கி அன்னான் சிரத்திடை உருமுற் றென்னக்

குட்டினன் ஒருதன் கையால் மேல்வருங் குமர னேபோல்.         21

 

தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல

மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான் 

வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்

மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதிநாள் முதல்வன் போல்வான். 22

 

ஏடுலாந் தொடையல் வீரன் இத்திறம் இவரை முன்னஞ்

சாடினான் அதுகண் டங்கட் சார்தரும் இமையோர் யாரும்

ஓடினார் உலந்தார் வீழ்ந்தார் ஔ¤த்திடற் கிடமே தென்று

தேடினார் ஒருவர் இன்றிச் சிதறினார் கதறு கின்றார்.              23

 

         

(16. புகலிடம் - இருப்பிடம்.  போய - போயின.

17. பேதை - காளி.  பித்தன் - சிவன்.  ஈயேன் - கொடேன். 

19. தொல் ஊழ் - பழைய ஊழ்வினை.  இசைவினால் - தொடர்பால்.

அது - வீரபத்திரன் கூறியதை.  ஊமரின் - ஊமைகள் போல.  

20. அரி முன் - திருமால் முன்பு.  21. விட்டு - விட்டுணு.  கமலப்போதில்... 

...சிட்டன் - பிரமதேவன்.  மேல்வரும் - பின்வரும்.  

குமரன் போல் - குமரக் கடவுள் போல்.  

22. அன்னான் வாக்குறு தேவி - சரசுவதி. 

மற்றவர் - இலக்குமி முதலியோர்.  குயம் - முலை.)

 

 

வேறு

 

இன்னதோர் காலையில் இரிந்து போவதோர்

மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத்

தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச்

சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ.                  24

 

அடித்ததங் கொடுமதி அதனைத் தேய்த்தபின்

விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும்

இடித்தெனக் கவுளிடை எற்றி னானவன்

உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே.                25

 

எறித்தரு கதிரவன் எயிறு பார்மிசைத்

தெறித்திட உயிரொரீஇச் சிதைந்து வீழ்தலும்

வெறித்தரு பகனெனும் வெய்ய வன்விழி

பறித்தனன் தகுவதோர் பரிசு நல்குவான்.                 26

 

தொட்டலும் பகன்விழித் துணையை இத்திறம்

பட்டது தெரிந்துயிர் பலவும் பைப்பைய

அட்டிடு கூற்றுவன் அலமந் தோடலும்

வெட்டினன் அவன்தலை வீர வீரனே.                            27

 

மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன்

உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில்

அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறீஇத்

தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால்.                      28

 

அண்டர்கோன் வீழ்தலும் அலமந் தோடிய

திண்டிறல் அங்கியைத் திறல்காள் சேவகன்

கண்டனன் அங்கவன் கரத்தை ஒல்லையில்

துண்டம தாகவே துணித்து வீட்டினான்.                  29

 

கறுத்திடு மிடறுடைக் கடவுட் டேவனை

மறுத்தவன் நல்கிய வரம்பில் உண்டியும்

வெறுத்திலை உண்டியால் என்று வீரனும்

அறுத்தனன் எழுதிறத் தழலின் நாக்களே.                 30

 

துள்ளிய நாவொடுந் துணிந்த கையொடுந்

தள்ளுற வீழந்திடுந் தழலின் தேவியை

வள்ளுகி ரைக்கொடு வலங்கொள் நாசியைக்

கிள்ளினன் வாகையால் கிளர்பொற் றோளினான்.          31

 

அரிதுணைக் கின்னதோர் ஆணை செய்திடும்

ஒருதனித் திறலினான் உம்பர் மேலெழு

நிருதியைக் கண்டனன் நிற்றி யாலெனாப்

பொருதிறல் தண்டினால் புடைத்திட் டானரோ.                    32

 

(24. சின்னம் - சிதைவு.  25. கதிரவன் - சூரியன்.  கவுள் - கன்னம். 

26. பகன் எனும் வெய்யவன் - பகன் என்னும் மற்றொரு சூரியன். 

28. நாகம் - சுவர்க்கம்.  உடைந்தனன் - மனம் உடைந்து. 

29. அங்கியை - அக்கினி தேவனை.  சேவகன் - வீரபத்திரன். 

30. ஏழு திறந்து - ஏழு பகுதியினை யுடைய.)

 

வீட்டினன் நிருதியை வீரன் தன்பெருந்

தாட்டுணை வீழ்தலுந் தடிதல் ஓம்பினான்

ஓட்டினன் போதிரென் றுரைத்துச் செல்நெறி

காட்டினன் உருத்திர கணத்தர்க் கென்பவே.                       33

 

ஒழுக்குடன் உருத்திரர் ஒருங்கு போதலும்

எழு¢கொடு வருணனை எற்றிச் செங்கையின் 

மழுக்கொடு காலினை மாய்த்து முத்தலைக்

கழுக்கொடு தனதனைக் கடவுள் காதினான்.                       34

 

எட்டெனுந் திசையினோன் ஏங்கி வௌ¢கியே

அட்டிடுங் கொல்லென அஞ்சிப் போற்றலுங்

கிட்டி வைதனன் கேடு செய்திலன்

விட்டனன் உருத்திரர் மேவும் தொல்நெறி.                       35

 

தாணுவின் உருக்கொடு தருக்கு பேரினான்

நாணொடு போதலும் நடுந டுங்கியே

சோணித புரத்திறை துண்ணென் றோடுழி

வேணுவின் அவன்தலை வீரன் வீட்டினான்.                      36

 

மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்

பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்

குணமிகு வரிசிலை குனித்து வீரனோர்

கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான்.         37

 

இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்

சிரந்துணி படுதலும் செய்கை இவ்வெலாம்

அரந்தையொ டேதெரிந் தயன்தன் காதலன்

விரைந்தவண் எழுந்தனன் வெருக்கொள் சிந்தையான்.             38

 

விட்டனன் திண்மையை வெய்ய தோர்வலைப்

பட்டதொர் பிணையெனப் பதைக்குஞ் சிந்தையான்

மட்டிட அரியஇம் மகமும் என்முனங்

கெட்டிடு மோவெனா இவைகி ளத்தினான்.                39

 

ஊறகல் நான்முகத் தொருவன் வாய்மையால்

கூறிய உணர்வினைக் குறித்து நோற்றியான்

ஆரணி செஞ்சடை அமலன் தந்திட

வீறகல் வளம்பல வெய்தி னேனரோ.                            40

 

பெருவள நல்கிய பிரானைச் சிந்தையிற்

கருதுதல் செய்திலன் கசிந்து போற்றிலன்

திருவிடை மயங்கினன் சிவையை நல்கியே

மருகனென் றவனையான் மன்ற எள்ளினேன்.                    41

 

(33. செல்நெறி - போம் வழி.  34. எழு - எழுவாயுதம். 

காலினை - வாயு தேவனை.  தனதனை - குபேரனை. 

35. எட்டெனும் திசையினோன் - ஈசானன்.  

36. வேணுவின் - பாட்படையினால்.  37. பிணைஎன - மான் வடிவங் கொண்டு.

38. எச்சன் - யாகத்தின் அதி தேவதை.  39. மட்டிட - அளவிடுதற்கு.

40. ஊறு அகல் - குற்றம் அற்ற.  ஈறு அகல் - எல்லையற்ற. 

41. மன்ற - மிகவும்.  எண்ணினேன் - இகழ்ந்தேன்.)

 

வேதநூல் விதிமுறை விமலற் கீந்திடும் 

ஆதியாம் அவிதனை அளிக்கொ ணாதெனத்

தாதையோன் வேள்வியில் தடுத்தி யானுமிவ்

வேதமாம் மகந்தனை இயற்றி னேனரோ.                42

 

தந்தைசொல் லாமெனுந் ததீசி வாய்மையை

நிந்தனை செய்தனன் நீடு வேள்வியில்

வந்தவெண் மகள்தனை மறுத்துக் கண்ணுதல்

முந்தையை இகழ்ந்தனன் முடிவ தோர்கிலேன்.                   43

 

அன்றியும் வீரன்நின் றவியை ஈதியால்

என்றலும் அவன்தன தெண்ணம் நோக்கியும்

நன்றென ஈந்திலன் மறையும் நாடிலேன்

பொன்றிட வந்தகொல் இனைய புந்தியே.                 44

 

அல்லியங் கமலமேல் அண்ணல் ஆதியாச்

சொல்லிய வானவர் தொகைக்கு நோற்றிட

வல்லபண் ணவர்க்கும்வே தியர்க்கும் மற்றவர்

எல்லவர் தமக்குமோர் இறுதி தேடினேன்.                45

 

துதிதரு மறைப்பொருள் துணிபு நாடியும்

நதிமுடி அமலனை நன்று நிந்தியா

இதுபொழு திறப்பதற் கேது வாயினேன்

விதிவழி புந்தியும் மேவு மேகொலாம்.                          46

 

எனத்தகு பரிசெலாம் இனைந்து தன்னுடை

மனத்தொடு கூறியே மாளும் எல்லையில்

நினைத்தறி வின்மையை நிகழ்த்தின் ஆவதென்

இனிச்செய லென்னென எண்ணி நாடினான்.                      47

 

பாடுறு சாரதர் பரப்பும் வேள்வியின்

ஊடுறு வீரன துரமுஞ் சீற்றமுஞ்

சாடுறு பத்திரை தகவுங் கண்ணுறீஇ

ஓடுவ தரிதென உன்னி யுன்னிமேல்.                            48

 

சென்றதோர் உயிரொடு சிதைந்த தேவர்போல்

பின்றுவன் என்னினும் பிழைப்ப தில்லையால்

வன்றிறல் வீரன்முன் வன்மை யாளர்போல்

நின்றிடல் துணிபெனத் தக்கன் நிற்பவே.                 49

 

(42. இவ்வேதமாம் - இந்தத் துன்பத்திற்குரிய.  

45. ஓர் இறுதி - ஒரு அழிவுக் காலத்தினை.  

46. நிந்தியா - நிந்தித்து.  48. சாடுஉறு - கொலைபுரிகின்ற.)

 

 

வேறு

 

கண்டு மற்றது வீரபத் திரனெனுங் கடவுள்

கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி

அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால்

தண்ட மீதென வாள்கொடே அவன்தலை தடிந்தான்.              50

 

அற்ற தோர்சென்னி வீழுமுன் இறைவன்அங் கையினால்

பற்றி ஆயிடை அலமரும் பாவகற் பாராத்

திற்றி ஈதெனக் கொடுத்தனன் கொடுத்தலுஞ் செந்தீ

மற்றொர் மாத்திரைல் போதினில் மிசைந்தது மன்னோ.            51

 

மெல்ல வேயெரி யத்தலை நுகர்தலும் வேத

வல்லி யாதியாந் துணைவியர் தக்கன்மா மகளிர்

சில்லி ருங்குழல் தாழ்வரச் செங்கரங் குலைத்தே

ஒல்லை யத்திறங் கண்டனர் புலம்பிவந் துற்றார்.                 52

 

அந்த வேலையின் மறைக்கொடி தன்னைமுன் னணுகி

முந்தி வார்குழை இறுத்தனன் ஏனையர் முடியுந்

தந்த நங்கையர் சென்னியும் வாள்கொடு தடிந்து

கந்து கங்கள்போல் அடித்தனள் பத்திர காளி.                     53

 

காளி யாம்பெயர்த் தலைவியுங் கருதலர் தொகைக்கோர்

ஆளி யாகிய வீரனும் ஏனைஅண் டர்களைக்

கேளி ராகிய முனிவரைத் தனித்தனி கிடைத்துத்

தாளில் ஆர்ப்பினில் தடக்கையில் படைகளில் தடிந்தார்.           54

 

மருத்தும் ஊழியில் அங்கியும் உற்றென மாதும்

உருத்தி ரப்பெரு மூர்த்தியும் வந்தென உயர்சீர்

தரித்த வீரனும் பத்திர காளியுந் தக்கன்

திருத்தும் வேளவியைத் தொலைத்தனர் தனித்தனி தெரிந்தே.      55

 

அண்ணல் தன்மையுந் தேவிதன் நிலைமையும் அயரும்

விண்ணு ளோர்சிலர் நோக்கியே யாங்கணும் விரவி

அண்ணு கின்றனர் யாரையுந் தொலைக்குநர் அம்மா

எண்ணி லார்கொலாம் வீரனும் இறைவியும் என்றார்.             56

 

இற்றெ லாம்நிகழ் வேலையில் வீரன திசையால்

சுற்று தானையர் இத்திறம் நோக்கியே சூழ்ந்த

பொற்றை போலுயர் காப்பினை வீட்டியுள் புகுந்து

செற்ற மோடுசென் றார்த்தனர் வானுளோர் தியங்க.               57

 

சூர்த்த நோக்குடைப் பூதருங் காளிகள் தொகையும்

ஆர்த்த காலையின் முனிவருந் தேவரும் அயர்ந்து

பார்த்த பார்த்ததோர் திசைதொறும் இரிதலும் படியைப்

போர்த்த வார்கட லாமென வளைந்தடல் புரிய.                   58

 

(50. தண்டம் - தண்டனை.  51. அலமரும் - சுழலுகின்ற.  

பாவகன் - அக்கினி.  ஈது திற்றி - இதனைத் தின்னுவாய். 

52. சில் - தலையில் அணியும் ஓர் ஆபரணம்.  

53. வார்குழை - நீண்ட காதினை.  கந்துகம் - பந்து.  

54. ஆளி - சிங்கம்.  கேளிர் - சுற்றத்தினர்.  

57. காப்பினை வீட்டி - மதிலினை இடித்து.  58. சூர்த்த - அச்சம் தரும்.)

 

 

வேறு

 

தியக்குற்றனர் வெருளுற்றனர் திடுக்கிட்டனர் தெருள்போய்த்

துயக்குற்றனர் பிறக்குற்றனர் தொலைவுற்றனர் மெலியா

மயக்குற்றனர் கலக்குற்றனர் மறுக்குற்றனர் மனமேல்

உயக்குற்றனர் இமையோர்களும் உயர்மாமுனி வரரும்.           59

 

அளிக்கின்றனர் தமைத்தம்முனை அருண்மக்களை மனையைக்

களிக்கின்றதொ ரிளையோர்தமைச் சுற்றந்தனைக் கருதி

விளிக்கின்றனர் பதைக்கின்றனர் வெருக்கொண்டனர் பிணத்தூ

டொளிக்கின்றனர் அவன்வேள்வியில் உறைகுற்றதொர் மறையோர். 60

 

அலக்கட்படும் இமையோர்களும் அருமாமுனி வரரும்

நிலக்கட்படு மறையோர்களும் நெடுநீர்க்கட லாகக்

கலக்குற்றனர் வரையாமெனக் கரத்தாற்புடைத் துதிர்த்தார்

உலக்கிற்றிர ளாகச்சினத் துயர்மால்கரி ஒத்தே.                   61

 

முடிக்குந்திறல் பெருங்கோளரி முழங்கிற்றென முரணால்

இடிக்கின்றனர் கலைமானென இமையோர்தமை விரைவில்

பிடிக்கின்றனர் அடிக்கின்றனர் பிறழ்பற்கொடு சிரத்தைக்

கடிக்கின்றனர் ஒடிக்கின்றனர் களத்தைப்பொரு களத்தில்.           62

 

முறிக்கின்றனர் தடந்தோள்களை முழுவென்புடன் உடலங்

கறிக்கின்றனர் அடிநாவினைக் களைகின்றனர் விழியைப்

பறிக்கின்றனர் மிதிக்கின்றனர் படுக்கின்றனர் சங்கங்

குறிக்கின்றனர் குடிக்கின்றனர் குருதிப்புனல் தனையே.             63

 

எடுக்கின்றனர் பிளக்கின்றனர் எறிகின்றர் எதிர்போய்த்

தடுக்கின்றனர் உதைக்கின்றறர் தடந்தாள்கொடு துகைத்துப்

படுக்கின்றனர் தலைசிந்திடப் படையாவையுந் தொடையா

விடுக்கின்றனர் மடுக்கின்றனர் மிகுமூனினைப் பகுவாய்.           64

 

நெரிக்கின்றனர் சிலர்சென்னியை நெடுந்தாள்கொடு மிதியா

உரிக்கின்றனர் சிலர்யாக்கையை ஒருசிற்சிலர் மெய்யை

எரிக்கின்றனர் மகத்தீயிடை இழுதார்கடத் திட்டே

பொரிக்கின்றனர் கரிக்கின்றனர் புகைக்கின்றனர் அம்மா.            65

 

அகழ்கின்றனர் சிலமார்பினை அவர்தங்குடர் சூடி

மகிழ்கின்றனர் நகைக்கின்றனர் மதர்க்கின்றனர் சிவனைப்

புகழ்கின்றனர் படுகின்றதொர் புலவோர்தமைக் காணா

இகழ்கின்றனர் எறிந்தேபடை ஏற்கின்றனர் அன்றே.        66

 

கரக்கின்றதொர் முனிவேர்களைக் கண்டேதொடர்ந் தோடித்

துரக்கின்றனர் பிடிக்கின்றனர் துடிக்கும்படி படிமேல்

திரக்குன்றுகொ டரைக்கின்றனர் தெழிக்கின்றனர் சிலவூன்

இரக்கின்றதொர் கழுகின்றொகைக் கீகின்றனர் மாதோ.             67

 

(61. அலக்கண் - துன்பம்.  62. பெருங் கோளரி - பெருஞ் சிங்கம். 

களத்தை - கழுத்தை.  63. கறிக்கின்றனர் - மெல்லுகின்றனர். 

சங்கங் குறிக்கின்றனர் - வெற்றிச் சங்கு ஊதுகின்றனர்.  

67. தெழிக்கின்றனர் - பேரொலி செய்கின்றனர்.)

 

நெய்யுண்டனர் ததியுண்டனர் பாலுண்டனர் நீடுந்

துய்யுண்டனர் இமையோர்கடந் தொகைக்காமென உய்க்கும்

ஐயுண்டதொர் அவியுண்டனர் மகவேள்வியில் வந்தே

நையுண்டவர் உயிர்கொண்டிடு நாளுண்டவ ரெல்லாம்.            68

 

உலகத்துக்கடை அனலைக்கடல் உவர்நீர்தணித் தெனவே

மகத்தில்திரி விதவேதியில் வைகுங்கனல் அதனை

மிகத்துப்புர வுளதென்றுகொல் வியப்பார்தம துயிரின்

அகத்துப்புனல் விடுத்தேவிரைந் தவித்தார்மகம் அழித்தார். 69

 

தடைக்கொண்டதொர் சிறைதோறுள சாலைக்கத வெல்லாம்

அடைக்கின்றனர் தழலிட்டனர் அவணுற்றவர் தம்மைத்

துடைக்கின்றனர் கலசத்தொடு தொடர்கும்பமும் விரைவால்

உடைக்கின்றனர் தகர்க்கின்றனர் உதிர்க்கின்றனர் உடுவை.          70

 

தவக்ககண்டகத் தொகையார்த்திடத் தனிமாமகத் தறியில்

துவக்குண்டய ரணிமேதகு துகடீர்பசு நிரையை

அவிழ்க்கின்றனர் சிலர்கங்கையின் அலையிற்செல விடுவார்

திவக்கும்படி வானோச்சினர் சிலவெற்றினர் படையின்.            71

 

பங்கங்கள் படச்செய்திடு பதகன்மகந் தனிற்போய்க்

கங்கங்களை முறிக்கின்றனர் கவின்சேரா மகளிர்

அங்கங்களைக் கறிக்கின்றனர் அறுக்கின்றனர் அதனை

எங்கெங்கணும் உமிழ்கின்றனர் எறிகின்றனர் எவரும்.              72

 

படுகின்றவர் வருமூர்தியும் படர்மானமுந் தேருஞ்

சுடுகின்றனர் அவர்கொண்டிடு தொலைவில்படைக் கலமும்

இடுகுண்டல முடிகண்டிகை எவையுந்தழல் இட்டே

கடுகின்றுக ளாகப்பொடி கண்டார்திறல் கொண்டார்.        73

 

அடிக்கொண்டதொர் மகச்சாலையுள் அமர்வேதியை அடியால்

இடிக்கின்றனர் பொடிக்கின்றனர் இருந்தோரணத் தொகையை

ஒடிக்கின்றனர் பெருந்தீயினை உமிழ்கின்றனர் களிப்பால்

நடிக்கின்றனர் இசைக்கின்றனர் நமனச்சுறுந் திறத்தோர்.            74

 

தருமத்தினை அடுகின்றதொர் தக்கன்றனக் குறவா 

மருமக்களைப் பிடிக்கின்றனர் வாயாற்புகல் ஒண்ணாக்

கருமத்தினைப் புரிகின்றனர் கரத்தாலவர் உரத்தே

உருமுற்றெனப் புடைக்கின்றனர் உமிழ்வித்தனர் அவியே.          75

 

(68. ததி - தயிர்.  துய் - சோறு. 

69. உகத்துக் கடை அனல் - ஊழிக் காலத்துப் பிரளயாக்கினி. 

திரிவித வேதி - மூவகை வேதிகை.  உயிர் - இங்கு ஆண் குறி. 

அகத்துப்புனல் - இங்குச் சிறுநீர்.  70. உடுவை - ஆடுகளை. 

71. தவக்கண்டகத்தொகை ஆர்த்திட - மிகவும் கழுத்தில் கண்ணுள்ள 

மணிகள் ஒலிக்கவும்; (யாகத்திற்குரிய ஆடுகளின் கழுத்தில் உணவுக்காக,

காரை முதலிய முட்செடிகளைக் கட்டுதல் மரபு ஆதலின், ஆடுகளுக்குத்) 

தவத்திற்குரிய காரை முட்செடிகளை உண்பிக்க.  தவக்கண்டகத் தொகை 

ஆர்த்திட்ட - மந்திர செபம் செய்தலாகிய தவத்துடன் தோயலிடப்பட்ட 

வாளாயுதத்தல் அறுத்தற்கு.  கண்டகம் - வாள்.  மகத்தறி - யூபஸ்தம்பம். 

பசு என்றது யாகத்திற்குரிய ஆடுகளை.  72. பங்கம் - இழிவு. 

பதகன் - கீழ்மகன்; தக்கன்.  கங்கம் - பருந்து.)

 

தறிக்கின்றனர் சிலதேவரைத் தலைமாமயிர் முழுதும்

பறிக்கின்றனர் சிலதேவரைப் பாசங்கொடு தறியில் 

செறிக்கின்றனர் சிலதேவரைச் செந்தீயிடை வதக்கிக்

கொறிக்கின்றனர் சிலதேவரைக் கொலைசெய்திடுங் கொடியோர்.    76

 

நாற்றிக்கினும் எறிகின்றனர் சிலர்தங்களை நல்லூன்

சேற்றுத்தலைப் புதைக்கின்றனர் சிலர்தங்களைச் செந்நீர்

ஆற்றுக்கிடை விடுக்கின்றனர் சிலர்தங்களை அண்டப்

பாற்றுக்கிரை இடுகின்றனர் சிலர்தங்களைப் பலரும்.               77

 

இடைந்தாரையும் விழுந்தாரையும் எழுந்தாரையும் எதிரே

நடந்தாரையும் இரிந்தாரையும் நகையுற்றிட இறந்தே

கிடந்தாரையும் இருந்தாரையுங கிளர்ந்தாரையும் விண்மேல்

படர்ந்தாரையும் அவர்க்கேற்றதொர் பலதண்டமும் புரிந்தார்.        78

 

உலக்குற்றிடு மகங்கண்டழு துளம்நொந்தனர் தளரா

மலக்குற்றிடும் அணங்கோர்தமை வலிதேபிடித் தீர்த்துத்

தலக்கட்படு மலர்ப்பொய்கையைத் தனிமால்கரி முனிவால்

கலக்கிற்றெனப் புணர்கின்றனர் கணநாதரில் சிலரே.               79

 

குட்டென்பதும் பிளவென்பதும் கொல்லென்பதும் கடிதே

வெட்டென்பதும் குத்தென்பதும் உரியென்பதும் விரைவில்

கட்டென்பதும் அடியென்பதும் உரையென்பதும் களத்தே

எட்டென்பதொர் திசையெங்கணும் எவரும்புகல் வனவே.           80

 

கையற்றனர் செவியற்றனர் காலற்றனர் காமர்

மெய்யற்றனர் நாவற்றனர் விழியற்றனர் மிகவும்

மையுற்றிடு களமற்றனர் அல்லாமலர் அயன்சேய்

செய்யுற்றிடு மகத்தோர்களில் சிரைவற்றவர் இலையே.            81

 

வேறு

 

இத்திறம் யாரையும் ஏந்தல் தானையும் 

பத்திரை சேனையும் பரவித் தண்டியா

மெத்துறும் அளைகெழு வேலை யில்பல

மத்துறு கின்றென மகத்தை வீட்டவே.                           82

 

செழுந்திரு வுரத்திடை தெருமந் துற்றிடத்

தொழுந்திறல் பரிசனந் தொலைய மாயவன்

அழுந்திடு கவலொடும் அயர்வு யிர்த்தவண்

எழுந்தனன் மகம்படும் இறப்பு நோக்கினான்.                      83

 

திருத்தகும் வேள்வியைச் சிதைவின் றாகயான்

அருத்தியிற் காத்ததும் அழகி தாலெனாக்

கருத்திடை உன்னினன் கண்ணன் வௌ¢கியே

உருத்தனன் மானநின் றுளத்தை ஈரவே.                  84

 

(76. தறித்தல் - வெட்டுதல்.  பாசம் - கயிறு.  தறி - தூண்.

77. பாற்று - பாறு - பருந்து.  78. மலக்கு - கலக்கம். 

அணங்கு - தேவமாதர்.  82. ஏந்தல் - வீரபத்திரன். 

83. செழுந்திரு - இலக்குமி.  உரம் - மார்பு.  

84. திருத்தகும் - செல்வமிகுந்த.  கண்ணன் - திருமால்.)

 

பரமனை இகழ்ந்திடு பான்மை யோர்க்கிது

வருவது முறையென மனத்துட் கொண்டிலன்

தெருமரு முணர்வினன் திறல்கொள் வீரன்மேல்

பொருவது கருதினன் பொருவில் ஆழியான்.                     85

 

உன்னினன் கருடனை உடைந்த தாதலுந்

தன்னுறு சீற்றமாந் தழலை ஆங்கொரு

பொன்னிருஞ் சிறையபுள் ளரசன் ஆக்கலும்

அன்னது வணங்கியே அரிமுன் நின்றதே.                 86

 

நிற்றலும் அதன்கையின் நீல மேனியான்

பொற்றடந் தாள்வையாப் பொருக்கென் றேறியே

பற்றினன் ஐம்பெரும் படையும் வேள்வியுள் 

முற்றுறு பூதர்மேல் முனிவுற் றேகினான்.                87

 

எடுத்தனன் சங்கினை இலங்கு செந்துவர்

அடுத்திடு பவளவாய் ஆரச் சேர்த்தியே

படுத்தனன் பேரொலி பரவைத் தெண்டிரைத்

தடக்கட லுடைந்திடு தன்மை போலவே.                 88

 

மீச்செலும் அமரர்கள் புரிந்த வேள்வியந்

தீச்சிகை உதவிய சிலையை வாங்கியே

தாச்செலும் வசிகெழு சரங்கள் எண்ணில

ஓச்சினன் வீரன துரவுத் தானைமேல்.                           89

 

காளிகள் தொகைகளுங் கழுதின் ஈட்டமுங்

கூளிகள் தொகைகளுங் குழுமி யேற்றெழீஇ

வாளிகள் தொகைசொரீஇ மாயற் சூழ்வுறா

நீளிகல் புரிந்தனர் நிகரில் வன்மையார்.                  90

 

தண்டுள வலங்கலந் தடம்பொற் றோளுடை

அண்டனுந் தன்படை அனைத்து நேர்கொடு

மண்டமர் புரிதலை மற்ற எல்லையில்

கண்டனன் நகைத்தனன் கடவுள் வீரனே.                 91

 

வெருவரும் பெருந்திறல் வீரன் தண்டுழாய்

அரியொடு போர்செய ஆதி நாயகன்

திரைகடல் உலகமுற் சிறிது தானென

ஒருபெருந் தேரினை உய்த்திட் டானரோ.                 92

 

(85. ஆழியான் - திருமால்.  ஆழியான் மனத்துட் கொண்டிலன் என்க. 

86. உடைந்தது - வீரபத்திரனுக்குப் பயந்து ஓடியது.  புள்ளரசன் - கருடன்.

அரி - திருமால்.  89. தீச்சிகை - யாகாக்கினி.  சிலை - வில்.   

தாச் செலும் - தாவிச் செல்லுகின்ற.  வசி - வன்மை. 

90. கழுது - பேய்.  சொரீஇ - விடுத்து. 

92. ஆதிநாயகன் - சிவபெருமான்.)

 

பாயிரந் தானெனப் பகரும் வேதமா

மாயிரம் புரவிகள் அளப்பில் கேதனங்

காயிரும் படைகள்மீக் கலந்த தாகிய

மாயிருந் தேரவண் வல்லை வந்ததே.                           93

 

தேரவண் வருதலுந் திறல்கொள் வீரனால்

பாரிடை வீழ்ந்தயர் பங்க யாசனன்

ஆருயிர் பெற்றென அறிவு பெற்றெழீஇ

நேரறு மகம்படு நிகழ்ச்சி நோக்கினான்.                   94

 

அரிபொரு நிலைமையும் ஆடல் வீரன

துருகெழு செற்றமும் உம்பர் தன்னிடை

இர தம்வந் திட்டதும் யாவும் நோக்கியே

கருதினன் யானுயுங் கால மீதெனா.                             95

 

விண்ணிழி தேரிடை விரைவில் நான்முகன் 

நண்ணினன் வலவனின் நகைமுட் கோல்கொடு

துண்ணென நடத்தியே தொழுது வீரனாம்

புண்ணியன் தனக்கிது புகறல் மேயினான்.                96

 

நீறணி பவளமெய் நிமலன் நிற்கிதோர்

வீறணி தேர்தனை விரைவில் உய்த்தனன்

தேறலர் தமையடுந் திறல்கொள் வீரநீ

ஏறுதி துணைவியோ டென்று போற்றினான்.                      97

 

போற்றினன் இரத்தலும் பொருவில் வேதன்மேல்

சீற்றமுள் ளதிலொரு சிறிது நீங்கியே

ஆற்றல்கொள் வீரன்எம் மன்னை தன்னுடன்

ஏற்றமொ டதன்மிசை இமைப்பின் மேவினான்.                   98

 

மேவிய காலையில் வெலற்க ருந்திறல்

சேவக அடியனேன் திறத்தைக் காண்கெனத்

தாவகல் தேரினைத் தண்டு ழாய்முடிக்

காவலன் முன்னுறக் கடாவி உய்ப்பவே.                 99

 

வரனுறு நான்முக வலவன் உய்த்திடு

திருமணித் தேர்மிசைத் திகழ்ந்த வீரன்முன்

ஒருதனி வையமேல் உம்பர்க் காகவே

புரமட வருவதோர் புராரி போன்றனன்.                   100

 

எல்லையில் பெருந்திறல் இறைவன் ஏறுதேர்

அல்லியங் கமலமேல் அண்ணல் உய்த்திடச்

சொல்லருந் தானையின் தொகையை நீக்கியே

வல்லைசென் றிறுத்ததம் மாயன் முன்னரே.                     101

 

(93. கேதனம் - கொடி.  95. உம்பர் தன்னிடை - ஆகாயத்தில்.

97. போற்றினான் - (பிரமன்) வணங்கினான். 

98. ஏற்றமொடு - கவுரவத்துடன். 

99. தாஅகல் - குதிரைகளை மிகுதியாகப் பூட்டிய. 

தா - பாய்தல்; குதிரை : ஆகுபெயர்.  100. வலவன் - சாரதி. 

புராரி - சிவபெருமான்.  101. அல்லி - அகவிதழ்.)

 

பாருல களவினும் பரந்த பைம்பொனந்

தேரவண் எதிர்தலுந் திருவு லாவிய

காருறழ் மேனியங் கண்ணன் கண்ணுதல்

வீரனை நோக்கியோர் மொழிவி ளம்பினான்.                     102

 

வேறு

 

தெழித்த வார்புனற் கங்கையஞ் சடைமுடிச் சிவனைப்

பழித்த தக்கனை அடுவதல் லாலவன் பாலில்

இழுக்கில் தேவரை அடுவதென் வேள்வியை எல்லாம்

அழித்த தென்னைநீ புகலுதி யாலென அறைந்தான்.               103

 

பாடல் சான்றிடு மாலிது புகறலும் பலரும்

நாடு தொல்புகழ வீரன்நன் றிதுவென நகையா

ஈடு சேர்இமில் ஏற்றுடன் வயப்புலி யேறொன்

றாடல் செய்தல்போல் ஒருமொழி உரைத்தனன் அன்றே.           104

 

எல்லை இல்லதோர் பரமனை இகழ்ந்தவன் இயற்றும்

மல்லல் வேள்வியில் அவிநுகர்ந் தோர்க்கெலாம் மறைமுன்

சொல்லுந் தண்டமே புரிந்தனன் நின்னையுந் தொலைப்பாம்

வல்லை யேல்அது காத்தியென் றனன்உமை மைந்தன்.            105

 

வீரன் இங்கிது புகறலுஞ் செங்கண்மால் வெகுண்டு

பார வெஞ்சிலை குனித்தனன் நாணொலி படுத்தி

யாரும் விண்முகில் ஒன்றுதன் வில்லொடும் அப்பு

மாரி பெய்தெனப் பகழியால் பூதரை மறைத்தான்.         106

 

கணங்கள் தம்மிசை மால்சரம் பொழிதலுங் காணூஉ

அணங்கு தன்னொடு நகைசெய்து வீரனாம் அமலன்

பணங்கொள் ப•றலைப் பன்னகக் கிறைவனாற் படைத்த

குணங்கொள் மேருவே அன்னதோர் பெருஞ்சிலை குனித்தான்.     107

 

செற்ற மீக்கொள ஐயன்வில் வாங்கினன் சிறிதே

பற்றி நாணொலி எடுத்தலும் ஒடுங்கின பரவை

பொற்றை யாவையுங் கீண்டன துளங்கின புவனம்

இற்றை வைகலோ இறுதியென் றயர்ந்தனர் எவரும்.              108

 

கோளி லாகிய புற்றிடை ஓரராக் குறுகி

மீளில் வெஞ்சினக் குழவிகொண் டேகலின் வீரன்

தோளில் வாங்கிய சிலையினில் தூணியில் துதைந்த

வாளி வாங்கியுய்த் தொருதனி மாயனை மறைத்தான்.            109

 

செங்க ணான்தனை மறைத்தபின் மற்றவன் செலுத்துந்

துங்க வெங்கணை யாவையும் பொடிபடத் தொலைப்ப

அங்கொ ராயிரம் பகழியை ஐதெனப் பூட்டி

எங்கள் நாயகன் திருமணிப் புயத்தின்நேர் எய்தான்.               110

 

எய்யும் வெங்கணை யாவையும் வீரருள் இறையாம்

ஐயன் ஆசுகம் ஆயிரம் ஓச்சினன் அகற்றி

ஒய்யெ னக்கரி யோன்நுதல் மீமிசை ஒருதன்

வெய்ய பொத்திரம் ஏவினன் அவனுளம் வெருவ.         111

 

ஏவு தொல்கணை மாயவன் நுதலிடை இமைப்பின்

மேவு கின்றுழி அனையவன் தளர்தலும் வீரன்

வாவு தேர்மிசை ஊன்றினன் சிலையைவார் கணையுந்

தூவு கின்றிலன் மாலிடர் நீங்குறுந் துணையும்.                   112

 

இன்னல் அத்துணை யகன்றுமால் எதிர்தலும் எமது

மன்னும் நேர்ந்தனன் இருவரும் வரிசிலை வளையாப்

பொன்னின் வாளிகள் பொழிந்தனர் முறைமுறை பொருதார்

அன்ன பான்மையர் செய்தபோர் யாவரே அறைவார்.              113

 

மாறு கொண்டபோர் இவ்வகை புரிதலும் வயத்தால்

வீறு கொண்டுயர் முக்கணான் வெய்யதீ வடவைக்

கூறு கொண்டதோர் படையினை ஓச்சலுங் குவட்டில் 

ஏறு கொண்டலை அனையவன் உரத்தில்எய் தியதே.              114

 

எய்து காலையில் உளம்பதை பதைத்திட இரங்கி

வெய்து யிர்ப்புடன் உணர்வொரீஇ உளம்நனி மெலிந்து

நொய்தின் மையலை நீங்கலும் முகுந்தனை நோக்கிச்

செய்தி போரென உரைத்தனன் சரபமாந் திறலோன்.               115

 

மெய்வ தத்தினை யாவர்க்கும் விரைவினில் இழைக்குந்

தெய்வ தப்படை முழுவதுஞ் செங்கண்மால் செலுத்த

அவ்வ னைத்தையும் அனையஅப் படைகளால் அகற்றிக்

கவ்வை முற்றினன் நுதல்விழி அளித்திடுங் கடவுள்.              116

 

வேறு

 

தேன்றிகழ் பங்கயத் திருவின் நாயகத்

தோன்றல்தன் படைக்கலந் தூண்ட எங்கணுஞ்

சான்றென நின்றவன் தனயன் வீரமாம்

வான்திகழ் படைதொடா வல்லை மாற்றவே.                     117

 

அரியதன் பின்னுற ஆதி வீரன்மேல்

பொருகணை அளப்பில பொழிய மாற்றியோர்

சரமது செலுத்திமால் சார்ங்கம் ஒன்றையும்

இருதுணி படுத்தினன் இறைவன் மைந்தனே.                     118

 

(111. நுதல்மீமிசை - நெற்றிமேல்.  பொத்திரம் - அம்பு.  

114. கொண்டலை அனையவன் - திருமால்.  

115. சரபமாம் திறலோன் - வீரபத்திரன்.  

சரபம் - எண் கால்களையுடைய ஒரு பறவை.  

116. மெய்வதம் - உடல் அழிவு.  கவ்வை - அட்டகாசம்; 

பேரொலியுமாம். 118. சார்ங்கம் - சாரங்கம் - வில்;

இது திருமால் வில்.)

 

பின்னுமத் துணைதனில் பெருந்தி றற்பெயர்

முன்னவன் இருகணை முறையின் ஓச்சியே

பன்னக மிசைத்துயில் பகவன் ஊர்திதன்

பொன்னிருஞ் சிறையினைப் புவியில் வீட்டினான்.         119

 

ஆயதோர் அமைதியில் ஆழி யங்கையான்

மாயவன் ஆதலின் வரம்பில் கண்ணரை

மேயின காதலின் விதிப்ப வீரன்முன்

பாயிருள் முகிலெனப் பரம்பி னாரரோ.                   120

 

அங்கவர் யாரையும் அமலன் வெய்யகட்

பொங்கழல் கொளுவிநுண் பொடிய தாக்கலும்

பங்கய விழியினான் பரமன் அன்றருள்

செங்கையில் ஆழியைச் செல்கென் றேவினான்.                  121

 

விடுத்ததோர் திகிரியை வீரன் அங்கையால்

பிடித்தவண் விழுங்கினன் பெயர்த்து மாயவன்

எடுத்திடு கதையினை எறிய அன்னது

தடுத்தனன் தனதுகைத் தடம்பொற் றண்டினால்.                  122

 

வேறு

 

சங்கார் செங்கைப் புங்கவன் ஏவுந் தண்டம்போய்

மங்கா அங்கண் வீழ்வது காணா வாள்வாங்கிப்

பொங்கா நின்றே உய்த்திட எய்தும் பொழுதின்கண்

உங்கா ரஞ்செய் திட்டனன் அம்மா உமைமைந்தன்.               123

 

ஒய்யென் றையன் சீற்றமொ டங்கண் உங்காரஞ்

செய்யுங் காலத் தோவியம் என்னச் செயனீங்கிக்

கையும் வாளு மாய்அவண் நின்றான் கடலூடே

வையம் முண்டு கண்டுயில் கின்ற மாமாயன்.                    124

 

சான்றகல் மாயன் அச்சுற வெய்தித் தளர்காலை

மூன்றுகண் வீரன் யாது நினைந்தோ முனிவெய்த

ஆன்றதொர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே

தோன்றிய தம்மா கண்ணுதல் ஈசன் சொல்லொன்றே.             125

 

அந்தர மீதே வந்திடு சொல்லங் கதுகேளா

எந்தை மனங்கொள் வெஞ்சினம் நீங்கி யிடுபோழ்தில்

அந்தின் மணித்தேர் உய்த்திடு பாகன் அதுநோக்கி

வந்தனை செய்தே போற்றியொர் மாற்றம் வகுப்பானால்.          126

 

(120. வரம்பில் கண்ணரை - அளவற்ற திருமால்களை.  

121. பங்கயவிழியினான் - திருமால்.  

126. அந்தரமீதே வந்திடு சொல் - அசரீரி.

 

 

வேறு

 

அறத்தினை யொருவிச் செல்லும் அழிதகன் உலக மெல்லாம்

இறத்தலை யெய்த இங்ஙன் இயற்றிய மகத்தின் மேவிப்

பெறத்தகும் அவியை நுங்கும் பேதையேன் பிழையை யெல்லாம்

பொறுத்தனை கொண்மோ என்னாப் பொன்னடிக் கமலம் பூண்டான்.127

 

பூண்டிடும் உலகந் தந்த புங்கவன் தன்னை நோக்கி

ஆண்டகை வீரன் அ•தே ஆகவென் றருள லோடும்

நீண்டதோர் மாயன் அன்னான் நீடருள் நிலைமை காணூஉ

ஈண்டிது காலம் என்னா ஏத்தினன் இயம்ப லுற்றான்.              128

 

 

பாரவெஞ சிலையும் வீட்டிப் பல்படைக் கலமுஞ் சிந்திச்

சேரலர் உயிர்கள் உண்ட திகிரியுஞ் செல்ல நுங்கிப்

போரிடை எனையும் வென்று புகழ்புனைந் திடுதி யென்றால்

வீரநின் றகைமை யாரே முடிவுற விளம்ப வல்லார்.              129

 

ஆசறு நெறியின் நீங்கும் அயன்மகன் இயற்று கின்ற

பூசனை விரும்பி வேள்வி புகுந்தனன் புந்த யில்லேன்

மாசறு புகழாய் நின்னால் மற்றிது பெற்றேன் அந்தோ

ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எணணம் மிக்கோர்.      130

 

ஆதிநா யகனை ஒல்லார் அனையவர்ச் சேர்ந்தார்க் கெல்லாம்

வேதமே இசையா நிற்கும் வியன்பெருந் தண்டம் அன்றோ

ஈதெலாம் எம்ம னோர்பால் இயற்றிய இனைய தன்மை

நீதியால் எம்பால் அன்றி நின்கணோர் குறையும் உண்டோ. 131

 

விழிதனில் முறுவல் தன்னில் செய்துயிர்ப் பதனில் ஆர்ப்பின்

மொழிதனில் புவன மெல்லா முதலொடு முடிக்க வல்லோய்

பழிபடு வேள்வி தன்னில் பலரையும் படையி னோடும்

அழிவுசெய் திட்ட தம்மா அடிகளுக் காடல் அன்றோ.              132

 

உறுநர்தந் தொகைக்கு வேண்டிற் றுதவிய முதல்வன் ஏவும்

முறையதை உன்னி வேள்வி முடிப்பதோர் ஆடல் ஆகச்

சிறிதெனும் அளவை தன்னில் சிதைத்தனை அன்றி எந்தாய்

இறுதிசெய் திடநீ யுன்னின் யார்கொலோ எதிர்க்கும் நீரார்.  133

 

இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா

அறைதரு சத்தி நான்காம் அரன்தனக் கையை காளி

முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்

பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியும் மறைகள் பேசும்.           134

 

அன்னதோர் பரிசால் ஈசன் அரும்பெருஞ் சத்தி என்னில்

பின்னமன் றவற்கி யானும் ரெ¤துமன் புடையேன் முக்கண்

முன்னவன் தன்பால் ஈண்டென் மொய்ம்புடன் இழந்த நேமி

இன்னுமங் கவன்தாள் அர்ச்சித் திமைப்பினில் எய்து கின்றேன்.     135

 

(129. நுங்கி - விழுங்கி.  121. ஒல்லார் - பகைத்தவர். 

132. ஆர்ப்பு - அட்டகாசம்.  முதலொடு அடியொடு.  

133. உறுநர் - அடியடைந்த அன்பர்.  

134. இறுதிசெய்திடல், சீற்றம், இன்பம், ஆண்மை இவை

நான்கும் இறைவனுக்கு துர்க்கை, காளி, கௌரி, திருமால் 

என்னும் சக்திகளாகும்.  யான் - இங்குத் திருமால்.)

 

முனிவுடன் அடிகள் ஈண்டு முறைபுரிந் ததனுக் கின்னல்

மனனிடை கொள்ளேன் இன்னான் மற்றிது பெறுத லாலே

புனிதமாக் கொள்வன் தண்டம் புரிந்தனை பொறுத்தி குற்றம்

இனியருள் புரிதி என்னா இணையடி இறைஞ்ச லோடும்.          136

 

வீரருள் வீரன் மாலோன் விளம்பிய மாற்றங் கேளா

நாரணற் கன்பு செய்து நணியதோர் காலை தன்னில்

பாரிடஞ் சூழ நந்தி பரவிட உமையா ளோடு

மூரிமால் விடை மேற் கொண்டு தோன்றினன் முடிவிலாதான்.     137

 

தேங்கிய கங்கை சூடுஞ் செஞ்சடைக் கடவுள் தோன்ற

ஆங்கது தெரிந்த வீரன் அச்சமோ டங்கை கூப்பிப்

பாங்குற நிற்ப மாலும் பங்கயத் தயனுந் தாழா

நீங்கிய தாயை நேருங் குழவியின் நிலைய ரானார்.               138

 

கண்டனன் கவுரி வேள்விக் களத்திடைக் கழலுங் கையும்

துண்டமும் தலையும் மார்பும் தோள்களும் துணிந்து வீழ

அண்டருந் தக்கன் தானும் ஆவிபோய்க் கிடந்த தன்மை

கொண்டதோர் சீற்றம் நீங்கி அருள்வரக் கூறு கின்றாள்.           139

 

வேறு

 

பொன்னார் சடையெம் புனிதன்தனை நோக்கி

முன்னா கியபொருட்டு முன்னோனே வேள்விக்கு

மன்னா னவற்கும் இமையோர்க்கும் மற்றெவர்க்கும்

என்னால் முடிவெய்திற் றென்றுரைக்கும் இவ்வுலகே.             140

 

மற்ற வர்கள்புந்தி மயக்குற் றுனதுதொல்சீர்

சற்று முணராது தவறுசெய்த தன்மையினால்

செற்ற மிகுவீரத் திருமகனால் இஞ்ஞான்று

பெற்றன ரேயன்றோ பெறத்தக்க தோர்பரிசே.                     141

 

முந்தும் இவரை முடித்தியென வெ•தியதும்

தந்து முடித்தாய் தனிவீர னாலனையர்

உய்ந்து குறைபோய் உயிர்பெற் றெழும்வண்ணம்

இந்த வரமும் எனக்கருளாய் எங்கோவே.                 142

 

என்று தொழுதாங் கெமையுடையாள் கூறுதலும்

நன்றுன் னருளென்று நகைசெய்து தன்பாங்கர்

நின்ற திறலோனை நேர்நோக்கி இம்மாற்றம்

ஒன்று பகர்ந்தான் உயிர்க்குயிராய் உற்றபிரான்.                   143

 

ஈண்டை மகத்தில் எமையிகழந்து நின்சினத்தான்

மாண்டு சிதைவுற்ற வலியிலோர் தம்முயிரை

மீண்டு அளித்துருவு மேனா ளெனப்புரிதி

ஆண்டகை நீயென்றே அரனருளிச் செய்தலுமே.          144

 

(137. முடிவிலாதான் - அழிவில்லாத சிவபெருமான்.  

139. கழலும் - காலும்.  துண்டம் - மூக்கு.  துணிந்து - துண்டுபட்டு.

142. முந்தும் - முன்னரும்.  முடித்தி - அழித்தி.)

 

வீர னதற்கிசைந்து மேனா ளெனஇறந்தீர்

யாரும் எழுதி ரெனஉரைப்ப வானவர்கள்

சோரு முனிவர் மறையோர் துயிலுணர்ந்த

நீர ரெனஉயிர்வந் தெய்த நிலத்தெழுந்தார்.                       145

 

தண்டம் இயற்றுந் தனிவீர னாற்சிதைந்த

பிண்ட முழுதுருவும் பெற்றார் மகம்புக்கு 

விண்ட செயலுமுயிர் மீண்டதுவுங் கங்குலிடைக்

கண்ட புதிய கனவுநிலை போலுணர்ந்தார்.                146

 

அந்தண் முனிவோர் அனைவோரும் வானவரும்

இந்திர னேயாதி இமையோர் களும்வெருவிச்

சிந்தை மருண்டு சிவனை இகழ்ந்ததனால்

வந்த பழியுன்னி வருந்திமிக வௌ¢கினரால்.                     147

 

பாணார் அளிமுரலும் பைந்தார் புனைவீரன்

மாணா கத்தன்னோர் மருங்காகத் தேவியுடன்

பூணார் அரவப் புரிசடையெம் புண்ணியனைச்

சேணார் ககனந் திகழுஞ் செயல்கண்டார்.                 148

 

துஞ்சல் அகன்ற சுரரும் முனிவரரும்

நஞ்ச மணிமிடற்று நாயகனைக் கண்ணுற்றே

அஞ்சி நடுங்க அதுகண் டெவர்இவர்க்குத்

தஞ்சம் எமையல்லால் என்றுதள ரேலென்றான்.                  149

 

என்றாங் கிசைத்த இறைவன் அருள்நாடி

நன்றா லிதென்று நனிமகிழ்ந்து முன்னணித்தாய்ச்

சென்றார் தொழுதார் திசைமுகன்மா லாதியராய்

நின்றார் எவரும் நெறியால் இவைஉரைப்பார்.                    150

 

சிந்தை அயர்வுற்றுச் சிறுவிதிதன் வேள்விதனில்

எந்தை நினையன்றி இருந்தேங்கள் கண்முன்னும்

வந்து கருணை புரிந்தனையால் மைந்தர்க்குத்

தந்தை யலது பிறிதொருவர் சார்புண்டோ.                151

 

அற்றமில் அன்பில்லா அடியேங்கள் பாலடிகள்

செற்ற மதுபுரியிற் செய்கைமுத லானசெயல்

பற்றி முறைசெய் பதமுளதோ அஞ்சலென

மற்றொர் புகலுளதோ மன்னுயிருந் தானுளதோ.                  152

 

வேதத் திறங்கடந்த வேள்விப் பலியருந்தும்

பேதைச் சிறியேம் பெரும்பகலுந் தீவினையில்

ஏதப் படாமே இமைப்பி லதுதொலைத்த

ஆதிக் கெவன்கொல் அளிக்கின்ற கைம்மாறே.                    153

 

(147. அம் - அழகிய.  தண் - தண்ணளியினையுடைய.

உன்னி - நினைத்து.  வௌ¢கினர் - வெட்கமுற்றார்கள்.  

149. துஞ்சல் - இறத்தல்.  152. அற்றம் - அழிவு. 

இல் - இல்லாத.  செய்கை முதலான செயல் - படைப்பு முதலிய 

தொழில்கள்.  153. வேள்விப்பலி - அவி.)

 

இங்குன் னடிபிழைத்தோம் எல்லோரும் வீரனெனுஞ்

சிங்கந்தன் கையாற் சிதைபட்ட வாறெல்லாம்

பங்கங்கள் அன்றே பவித்திரமாய் மற்றெங்கள்

அங்கங் கட்கெல்லாம் அணிந்த அணியன்றோ.                    154

 

கங்கை முடித்ததுவுங் காய்கனலை ஏந்தியதும்

வெங்கண் மிகுவிடத்தை மேனாள் அருந்தியதும்

நங்கை யுமைகாண நடித்ததுவும் முற்பகலும்

எங்கண் மிசைவைத்த அருளன்றோ எம்பெருமான்.                155

 

ஐய பலவுண் டறிவிலேம் நின்றனக்குச்

செய்ய வருபிழைகள் சிந்தைமிசைக் கொள்ளாமல்

உய்யும் வகைபொறுத்தி உன்னடியேம் என்றலுமே

தைய லொருபங்கன் தணிந்தனமால் அ•தென்றான்.               156

 

ஏற்றுத் தலைவன் இயம்புந் திருவருளைப்

போற்றித் தொழுதுதம் புந்தி தளிர்ப்பெய்திக்

கூற்றைத் தடிந்த குரைகழற்றாள் முன்னிறைஞ்சித்

தேற்றத் துடன்பாடி யாடிச் சிறந்தனரே.                  157

 

அன்ன பொழுதத் தயன்முதலாந் தேவர்கள்மேல்

உன்ன அரிய ஒருவனருட் கண்வைத்து

நுந்நும் மரசும் நுமக்கே அளித்தனமால்

முன்ன ரெனவே முறைபுரிதி ரென்றுரைத்தான்.                   158

 

மாலயனே யாதியராம் வானவர்கள் எல்லோரும்

ஆல மிடற்றண்ணல் அருளின் திறம்போற்றி

ஏல மகிழ்வெய்த இறந்தெழுந்தோர் தங்குழுவில்

சீலமிலாத் தன்மகனை காணான் திசைமுகனே.                   159

 

மாண்டதொரு தக்கன் வயவீரன் தன்னருளால்

ஈண்டுசனந் தன்னோ டெழாவச் செயல்நோக்கிக்

காண்டகைய நாதன் கழலிணைமுன் வீழ்ந்திறைஞ்சி

ஆண்டு கமலத் தயன்நின் றுரைக்கின்றான்.                       160

 

வேறு

 

ஐயநின் வாய்மை எள்ளி அழல்கெழும் மகத்தை யாற்றுங்

கையன தகந்தை நீங்கக் கடிதினில் தண்டஞ் செய்து

மையுறு நிரயப் பேறு மாற்றினை அவனும் எம்போல்

உய்யவே அருளு கென்ன உமாபதி கருணை செய்தான்.           161

 

(154. பங்கங்கள் அன்றே - குற்றங்கள் அன்றாம். 

பவித்திரம் - பரிசுத்தம்.  157. ஏற்றுத்தலைவன் - சிவபெருமான். 

159. திசைமுகன் தன் மகனைக் காணான் - பிரமன் தன் மகனான

தக்கனைக் கண்டிலன்.  160. மாண்ட - இறந்த.  ஆண்டு - அங்கே.

161. கையன் - கீழ்மகனான தக்கன்.)

 

இறையருள் கண்டு வீரன் எல்லையங் கதனில் எந்தை

அறைகழல் கண்டு போற்றி அவற்றியல் வினவித் தாழாப

பொறியுள தென்று தக்கன் புன்றலை புகுத்த வுன்னாக்

குறையுடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி என்றான்.      162

 

வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர்

உய்த்தலும் அதன்மேல் வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த

மைத்தலை கண்ட சேர்த்தியெழு கென்றான் மறைகள் போற்றும்

அத்தனை இகழும் நீரர் ஆவரிப் பரிசே என்னா.           163

 

என்றலும் உயிர்பெற் றங்கண் எழுந்தவத் தக்கன் முன்னம்

நின்றதோர் வீரற் கண்டு நெஞ்சுதுண் ணென்ன அஞ்சித்

தன்றக விழந்து பெற்ற தலைகொடு வணங்கி நாணி

அன்றுசெய் நிலைமை நாடி அரந்தையங் கடலுட் பட்டான். 164

 

அல்லல்கூ£ந் திரங்கு கின்ற அசமுகன் அடல்வௌ¢ ளேற்றின்

மெல்லிய லோடு முற்ற விமலன் துருவங் காணூஉ

ஒல்லென வெருக்கொண் டாற்ற உற்றனன் அச்ச மற்றவ்

வெல்லையில் இறைவன் தக்கா அஞ்சலை இனிநீ என்றான்.       165

 

அஞ்சலென் றருள லோடும் அசமுகத் தக்கன் எங்கோன்

செஞ்சரன் முன்னர்த் தாழ்ந்து தீயனேன் புரிந்த தீமை

நெஞ்சினும் அளக்கொ ணாதால் நினைதொறுஞ் சுடுவ தையா

உஞ்சனன் அவற்றை நீக்கி உனதருள் புரிந்த பண்பால்.            166

 

அடியனேன் பிழைத்த தேபோல் ஆர்செய்தார் எனினும் என்போல்

படுவதே சரத மன்றோ பங்கயத் தயனை நல்கும்

நெடியவன் துணையென் றுன்னி நின்பெரு மாயை யாலே

அடிகளை இகழ்ந்தேன் யாதும் அறிகிலேன் சிறியேன் என்றான்.     167

 

காலையங் கதனில் அம்மை காளிதன் னோடு போற்றிப்

பாலுற நின்ற வீர பத்திரன் தனைவம் மென்றே

வேலவன் றேவி யென்ன வெரிந்புறம் நீவி அன்னார்க்

கேலநல் வரங்கள் ஈந்தாள் ஈசனுக் கன்பு மிக்காள்.        168

 

மீத்தகு விண்ணு ளோரும் வேள்வியந் தேவும் மாலும்

பூத்திகழ் கமலத் தோனும் புதல்வனு முனிவர் தாமும்

ஏத்தினர் வணங்கி நிற்ப எம்மையா ளுடைய முக்கண்

ஆத்தனங் கவரை நோக்கி இவைசில அருளிச் செய்வான்.  169

 

வம்மினோ பிரம னாதி வானவர் மகஞ்செய் போழ்தில்

நம்மைநீர் இகழ்ந்தி யாரு நவைபெறக் கிடந்த தெல்லாம்

உம்மையில் விதியாந் தண்டம் உமக்கிது புரிந்த வாறும்

இம்மையின் முறையே நாணுற் றிரங்கலீர் இதனுக் கென்றான்.     170

 

(162. தாழாப் பொறியுளது - குறையாத அடையாளம் உளது;  

கெடாத குறிப்பு ஒன்றுளது எனினுமாம்.  

பானு கம்பன் - சிவகணங்களில் ஒருவன். 

163. வீந்த - இறந்த.  மைத்தலை - ஆட்டின் தலை.  

165. அசமுகன் - ஆட்டு முகத்தனான தக்கன்.  

167. சரதம் - உண்மை.  நெடியவன் - திருமால். 

168. வேலவன் தேவி என்ன - குமரக் கடவுளையும் அவன் 

தேவியையும் போல.  வெரிந் - முதுகு.  நீவி - தடவி. 

169. வேள்வியந் தேவும் - யாகத் தெய்வமும்.)

 

 

வேறு

 

இனைத்தருள் புரிதலும் எண்ண லாரையும்

நினைத்தருள் புரிதரு நிமலன் தாள்தொழாச்

சினத்தொடு மகத்தைமுன் சிதைத்து ளோனையும்

மனத்தகும் அன்பினால் வணங்கிப் போற்றவே.                   171

 

வீரரில் வீரனும் விசய மேதகு

நாரியும் அயல்வர நந்தி முன்செலப்

பாரிடம் எங்கணும் பரவ மாதொடே

போரடல் விடையினான் பொருக்கென் றேகினான்.         172

 

கயிலையி லேகியே கவுரி யோடரன்

வியனகர் மன்றிடை வீற்றி ருந்துழி

வயமிகு வீரற்கு வான மேக்குற

இயலுமோர் பதமளித் திருத்தி யாங்கென.                173

 

இருவர்தந் தாளையும் இறைஞ்சி அன்னவர்

தருவிடை பெற்றன னாகித் தக்கன

துரியதோர் மகம்அடும் உலப்பில் பூதர்கள்

திரைகட லாமெனத் திசைதொ றீண்டவே.                174

 

தந்தைமுன் விடுத்ததோர் தடம்பொற் றேரயல்

வந்ததங் கதன்மிசை வயங்கொள் ஆடலான்

பைந்தொடி யொடும்புகாப் பானு கம்பன

துந்திட அரனருள் உலகிற் போயினான்.                  175

 

போயினன் அதனிடைப் பொருவில் தொல்பெருங்

கோயிலின் எய்தியே குழுக்கொள் சாரதர்

மேயினர் சூழ்தர வீர பத்திரன்

ஏயதோர் துணைவியோ டினிது மேவினான்.                      176

 

(172. விசயமே தகு நாரி - பத்திரகாளி.  173. பதம் - பதவி. 

174. இருவர் - உமாதேவியும் சிவபெருமானும் ஆகிய இருவர். 

175. பானு கம்பன் அது உந்திட - பானு கம்பன் சாரதித் தொழில் செய்ய.)

 

ஆகத் திருவிருத்தம் - 1562

     - - -


·  முந்தையது : தக்ஷ காண்டம் - பகுதி - 3

·  அடுத்தது : தக்ஷ காண்டம் - பகுதி - 5


 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்