logo

|

Home >

to-know >

thiruvembavai-karuthu

திருவெம்பாவைக் கருத்து

சிவமயம்

( இது 1871-ஆம் வருடம் வித்வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் அவர்கள் வெளியிட்ட பதிப்பில் உள்ளது)

    ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய இராத்திரியாகவும், தை மாதம் முதல் ஆனி மாதம்
முடிய பகலாகவுமிது தேவர்களுக்கொரு நாள். சங்கார காலத்துக்குஞ் சிருஷ்டிகாலத்துக்கும்
பிரமாணமாக இந்த ஆறு மாதமும் பிரிந்து நடக்கும். மார்கழி மாதம் உதய காலமாய் இது
சிருஷ்டிகாலத்துக் கேதுவாயிருக்கும். பிரபஞ்ச சிருஷ்டியைத் திருவுளத்தடைந்து வைந்தவ
சத்தியைச் சிருஷ்டிக்கத் தொடங்குகிற அவசரம் திருப்பள்ளியெழுச்சியென வழங்கும். இனி
அந்தச் சுத்தமாயை நாதவிந்துகளாகவுஞ் சாதாக்கியமாகவும், மகேசுரமாகவும், சுத்த வித்தையாகவும் 
அஞ்சுதலமாயிருக்கும். 

     நாதவிந்துகளாகிய தலங்களிலே பரமும் பரையும் அதிஷ்டிக்கும். 
சாதாக்கியமாகிய தலத்திலே சதாசிவமூர்த்தி எழுந்தருளியிருப்பர். போகாங்கங்கள்
ஆகிய அணுசதாசிவரே சேவிக்கவும் இதன் கீழே ஈசுரற்கு அதிட்டானமாகிய மகேசுர தலத்திலே
யனந்தாதி அஷ்டவித்தியேசுரர் சேவிக்கவும் இதன் கீழே உருத்திரர்க்கு அதிஷ்டானமாகிய
சுத்தவித்தியா தலத்திலே மந்திரேசுவரர் சேவிக்கவும் இப்படி பிரபஞ்சவனுக்கிரக காரியமாகப்
பராசத்தியின் தோன்றிய ஞானக் கிரியைகளொத்த விச்சையே திருமேனியான சதாசிவமூர்த்தி
திருவருளாலந்த மகேசுர தத்துவத்திலே,  சத்தி மண்டலத்திலிருந்த மனோன்மணிச் சத்தியைப் பிரேரிக்க ,
அந்தச் சத்தி சருவபூத தமனியைச் சிருஷ்டிக்க, அந்தச் சருவ பூத தமனி பெலப்பிரம தனியைப் பிரேரிக்க,
அந்தச் சத்தி பெலவி கரணியைப் பிரேரிக்க, அந்தச் சத்தி காளியைப் பிரேரிக்க, 
அந்தச் சத்தி இரவுத்திரியைப் பிரேரிக்க, அந்தச் சத்தி சேட்டையைப் பிரேரிக்க,
அந்தச் சத்தி வாமையைப் பிரேரிக்க இப்படி பிரேரியா நிற்கப்பட்ட நவசத்திகள் பிரேரகத்தினால் 
மாயையை  அதிஷ்டித்திருக்கிற அனந்த தேவராலே அசுத்தமாயை காரியப்பட்டுப் பிருதிவி முடிவான 
பிரபஞ்ச காரியம் நடக்கும். இனி,

    ஆதியுமந்தமும் - மனோன்மணியென்னுஞ் சத்தியின் திருவாக்காய்ச் சருவபூத தமனியை உணர்த்தும் . 
பாசம்பரஞ்சோதி- சர்வ பூத தமனியென்னுஞ் சத்தியின் திருவாக்காய்ப்  பெலப்பிரமதனி யென்னுஞ் சத்தியை உணர்த்துகிறது. 
முத்தன்ன - பெலப்பிரம தனியென்னுஞ்  சத்தியின் திருவாக்காய்ப்  பெலவிகரணி என்னும் சத்தியை உணர்த்துகிறது. 
ஒண்ணித்தில- பெலவிகரணி என்னும் சத்தியின்  திருவாக்காய்க் காளி என்னும் சத்தியை உணர்த்துகிறது. 
மாலறியா - காளி என்னும் சத்தியின் திருவாக்காய் இரவுத்திரி என்னும் சத்தியை உணர்த்துகிறது.
மானேநீ - இரவுத்திரி என்னும் சத்தியின் திருவாக்காய்ச் சேட்டை என்னும் சக்தியை உணர்த்துகிறது. 
அன்னேயிவையும் - சேட்டை என்னும் சத்தியின் திருவாக்காய் வாமை என்னும் சத்தியை உணர்த்துகிறது. 
கோழிசிலம்ப - வாமை என்னும் சத்தியின் திருவாக்காய்ச் சுத்த மாயையைப் பிரேரிக்கிற அநந்ததேவரை ஆசரித்து 
அப்பால் பிரகிருதியில் விகுர்தியான ஆத்மதத்துவம் நடப்பது பொருட்டாக விஷ்ணுவினிடத்தில் அதிஷ்டிக்கிற 
சிவ சத்தியை நோக்கி ஆழியானன்புடைமையாமாறும் இவ்வாறோவென்று பிரேரித்ததாகக் கருதினது .  
ஆக இப்படி நவசத்திகள் கூடி விசுவ காரியம் பண்ணுகிறதே பாட்டாகப் பாடியபடி .

    முன்னைப் பழம்பொருள்-அனாதியாய் உள்ளவர்களுக்கு எல்லாம் அனாதியாய் உள்ளவனுமாய் 
அனுபவிப்பவர்களுக்கு மேன்மேலும் புதுமை கொடுக்கும் ஆநந்தத்தைக் கொடுப்போனும் ஆயிருக்கிற 
உன்னடியார் அடிபணிதலும் அவர்களை ஆசரித்தலும் அவர்களே பத்தாவாக அங்கீகரித்தலும் 
அவர் ஏவல்பணி செய்தலும் யாங்களுரிமையாயிந்த முறைமை ஒழியா வண்ணம் பிரசாதித்தருளி 
ஒருகுறைப்பாடும் இல்லோம் என்று நவசத்திகளும் தம்மில் சொல்லியது.

    உன்னடியா ரென்பது-  விஞ்ஞானிகளில் மலபக்குவராய் அணுசதாசிவரென்னும் பேர்பெற்றிருப்பார் ஒருவகையும், 
அதிகார மலத்துடனே கூடியனந்தாதி அஷ்டவித்தியேசுரர்  என்னும் பேர் பெற்றிருப்பார் ஒருவகையும்,
ஆணவமல சகிதராய்ச் சத்தகோடி மகாமந்திரேசுரர் என்று பேர் பெற்றிருப்பார் ஒருவகையுமாக, 
விஞ்ஞானகலர் மூன்றுவகையையும் உன்னடியார் என்றது. இனி நிரல்நிறையாக அணுசதாசிவர்            
தாள்பணிவோம்,     அட்டவித்தியேசுரர்க்குப் பாங்காவோம், சத்தகோடி மகாமந்திரேசுரர் எங்களுக்குப் 
பத்தாக்களாவார்கள், சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் என்பது, அவர்கள் ஏவலால் 
அசுத்த மாயையைப் பிரேரியா நிற்போம்.

    பாதாளமேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலரென்பது - எண்பத்து நூறாயிரம் யோஜனையான பூமியின் கனத்தையும் ,
சிவஞான மன்றியே தவசுபண்ணுகிறவர்கள் சென்றிருக்குமிடமாகிய கனிட்ட பாதாளத்தையும்,
அதன் கீழேயுண்டாகிய அசுரகண்டம், சர்ப்ப கண்டம், இராக்கதகண்டம் இப்படி ஒவ்வொன்று மும்மூன்று 
கண்டமாய் ஆடகேசுரர்க்குப் புவனமுமாயிருக்கிற ஏழு பாதாளத்துக்கும் அதன் கீழாக ரவுரவம் கும்பீபாகம் அவிசிகம் 
என்று சொல்லப்பட்ட மயிரராசநரக  மூன்றும் இவையுட்படப் பதின்மூன்று நரகம் ஒரு அடுக்காகவும், 
பத்து நரகம் ஒரு அடுக்காகவும், ஒன்பது நரகம் ஒரு அடுக்காகவும், ஆக முப்பத்திரண்டு நரகமும் இவர்களைச் சூழ்ந்து 
சேவித்திருக்கிற நூற்றெட்டு நரகமுமாக நூற்றுநாற்பது நரகமுமாகக் கூர்மாண்ட தேவர் என்னும் உருத்திரர்க்குப் 
புவனமாயிருக்கப்பட்ட நரகபுவனங்களுக்குக் கீழ் காலாக்கினி-உருத்திரர் புவனம் பதினேழுகோடி யோஜனையாய் 
அண்டகடாகமூடப்பட்ட புவனமாயிருக்கும்.

     இப்படிச் சொல்லப்பட்ட பிரமாண்ட முதலாக அண்டங்களனைத்துக்கும் ஆதார பூதமாய்ச் சிவசத்தியான 
ஆதார சத்திக்கும் அப்பாற் சிவனுடைய பூரணத்துக்குள் எல்லைப் படுத்தி இன்னமட்டென்று சொல்லுதற்கு 
முடியாதாதலாற் சொற்கழிவாயிருக்கப் பட்டது மலர்போன்ற சீபாதம். 

    போதார்புனை முடியு மெல்லாப் பொருண்முடிவென்றது - இனிப்பிருதிவிகண்டம் முன் சொன்ன 
அண்டகடாகமுதல் ஐம்பதுகோடி யோஜனையுட்பட மேற்புவலோகமுதல் சிவலோகம் அளவாக ஏழுலோகமும், மேல்
அண்ட கடாகம் உட்பட ஐம்பதுகோடி யோஜனையுமாகப் பிரமாண்டம், நூறு கோடி யோஜனையாக அதற்குமேல் 
அதிற் பதின்மடங்கு அப்பு அண்டம், அதற்கு மேல் அதிற் பதின்மடங்குதேயு அண்டம், அதற்கு மேல் பதின்மடங்கு வாயுவண்டம், 
அதற்குமேல் பதின்மடங்கு ஆகாசஅண்டம்,  அதற்கு மேல் பதின்மடங்கு  மனவண்டம், அதற்கு மேல் பதின்மடங்கு புத்தியண்டம், 
அதற்குமேல் பதின்மடங்கு ஆங்கார அண்டம், அதற்குமேல் பதின்மடங்கு குணவண்டம், அதின்மேல் நூறுமடங்கு பிரகிருதியண்டம், 
அதின்மேல் நூறுமடங்கு அராகவண்டம், அதின்மேல் நூறுமடங்கு வித்தையண்டம், அதின்மேல் நூறு மடங்கு கலையண்டம், 
அதின்மேல் நூறுமடங்கு நியதியண்டம், அதின் மேல் நூறுமடங்கு காலவண்டம், அதின்மேல் ஆயிரமடங்கு அசுத்த மாயை, 
அதின்மேல் பதினாயிரமடங்கு சுத்த மாயையிற் சுத்தவித்தை, அதற்குமேல் பதினாயிரமடங்கு மகேசுவரம் ,
அதற்கு மேல் சாதாக்கியம், அதற்கு மேல் பரவிந்து, அதற்குமேல் பரநாதம், அப்பால் சிவனுடைய பூரணமளவு 
எல்லைப்படாதாதலால் எல்லாப் பொருளுக்கு முடிவும் ஆயிருப்பது திருமுடியாதலாற் சிவபாதமுந் திருமுடியும் 
ஒருவர்க்கும் அளவுபடுத்த முடியாதாதலாற் 'பேதையொருபாற் றிருமேனியொன் றல்லவென்பது ' முன் சொல்லி வரப்பட்ட
லோகங்களிடத்தும் அதற்கு மேலுங்கீழுஞ் சத்தி சிவான்மகப் பூரணமாக விருக்கையாலே ஒரு வடிவாய் ஏகதேசியுமாய் 
இரான் ஆதலாலும் என்பது.

    வேதமுதல் விண்ணோருமண்ணுந் துதித்தாலு மோதவுலவாவொரு தோழன் தொண்டருளன் என்பது-
சதுர்வேதங்களும் பிர்மவிஷ்ணுக்களாகிய தேவர்களும் பூமியில் உண்டானவர்களும் அளவற்ற தோத்திரம் 
பண்ணினாலும் அந்தத் தோத்திரத்தினால் இன்ன மட்டென்று அளவுபடுத்த முடியாமல் முன்சொன்ன தேவர்கள் 
திரட்சியாகிய வீட்டங்கள் தோன்றலுள் சாத்திரங்களைக் கிளறிக் கிளறிப் பலபடப் பன்னியுந்தெரியாத 
வஸ்துவைக் கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாளென்பது. உபாதிசூனியனாய் நின்மலனாய் 
அரன் என்னுந் திருநாமத்தை உடையவனுமாயிருக்கிற சிவனுக்கு ஆலயமான சுத்தமாயையிற் 
சுத்த வித்தையிலிருந்து தம்பிரானார் பணிவிடையாகப் பிரபஞ்சகாரியத்தைப் பண்ணுமவர் 
வாமை முதலாகிய சிவசத்திகள்.

    ஏதவனூரேதவன் பேராருற்றா ராரயலார்- இப்படியே உணர்ந்தார்க்கு உணர்வு அரியோனாகிய         
சிவக்கூறு ஏது பேரேது உறவார் அடுத்தோர் ஆர் இவைகள் ஒன்றும் இல்லாமையால் இந்த முறைமை 
உடைய சிவனைப்பாடும் வண்ணம் எவ்வண்ணமோ தோழி என்றவாறு.

                திருச்சிற்றம்பலம்.

Related Content