logo

|

Home >

to-know >

ta-srkthkl-kannappa-nayanar

கண்ணப்ப நாயனார்

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


                    மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
                 காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்;
                 நாவலர் புகழ்ந்து போற்ற நல் வளம் பெருகி நின்ற
                பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.

 

             பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகர் என்ற  வேடர் குலத் தலைவன்,  தன் மனைவி தத்தையுடன் வாழ்ந்து வந்தான்.  நெடு  நாட்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லாமல் , பின் தங்களுடைய குல தெய்வமான  முருகனை வழிபட்டு . அவர் திருவருளால், ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போதே உடல் வலிமையும், கனமும் கொண்டு இருந்தமையால்  ‘ திண்ணன் ‘ என்ற பெயர் வைத்துக் கொண்டாடினர் .திண்ணனார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார் .தங்கள் குல வழக்கப்படி , குழந்தைக்கு உரிய பருவத்திலே ஆசிரியனைக் கொண்டு வில்வித்தை பயிற்றுவித்தார்கள்.  இதையே ஒரு விழாவாகக் கொண்டாடினர்.

 

            திண்ணப்பருக்கு பதினாறு வயது நிரம்பியதும். தனக்கு முதுமை எய்திவிட்டதை எண்ணி நாகன் , தம் வேடர் குலத் தலைமையைத் தாங்குவதற்கு தன்னுடைய மகனையே தேர்ந்தெடுத்தான். அப்படியே வேடர்களுக்குத் தலைவனாக திண்ணனாரை ஆக்கினார்கள். தெய்வங்களுக்குப் பூஜை போடும் தேவராட்டியை அழைத்து வந்து பூஜை செய்வித்தபின் ,தம் தோற் கச்சையையும் , உடை வாளையும் ஒப்படைத்து, திண்ணப்பரை  வேடர் தலைவனாகவும் , அந்த மலைப்பகுதிக்கு அரசனாகவும் ஆக்கினான் .

 

            அன்று குல வழக்கப்படி முதன்முறையாக வேடர்களோடு வேட்டையாடப், புறப்பட்டார் வேடர் சிங்கமாகிய திண்ணனார். பறைகளையும், கொம்புகளையும் முழக்கி ஆரவாரத்தோடு சென்று , அங்கங்கே புதர்களில் மறைந்திருந்த விலங்குகளை   வெளி வரச் செய்து,அம்பினால் வீழ்த்தினார். இவ்வாறு வேட்டையாடும்பொழுது ஒரு காட்டுப் பன்றி சிக்காது ஓடியது , திண்ணனார் தன் துணைவர்கள் நாணன் , காடன் என்பவர்களோடு  அந்தப் பன்றியைத் துரத்துவதில் முனைந்தார்.  

 

            ஓடிய பன்றி ஒரு குன்றின் அடிவாரத்தில்  வந்து நின்றது,. அதைத் தொடர்ந்து ஓடி வந்த திண்ணனார் தன் உடை வாளால் அதை ஒரே போடு போட்டு இரண்டு துண்டாக வெட்டி வீழ்த்தினார். அவருடன் ஓடி வந்த நாணனும் , காடனும் திண்ணனாரின் வேகத்தையும் ,உறுதியையும் , ஆற்றலையும் கண்டு வியந்தனர்.

 

           வெகு தூரம் ஓடி வந்ததால் யாவரும் களைப்படைந்தனர் , பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. “ இந்தப் பன்றியைப் பக்குவம் செய்து தின்று தண்ணீர் அருந்துவோம் “ என்று அவ்விருவரும் கூறினர். “ தண்ணீர் எங்கே இருக்கிறது ? “ என்று கேட்டார்   திண்ணனார்.

 

         “ இந்த தேக்க மரக் கூட்டத்தைத் தாண்டிச் சென்றால் பொன் முகலி என்ற ஆறு ஓடுகிறது.” என்று நாணன் கூறினான். அவன் முன்பே இங்கெல்லாம் வந்து பழகியிருக்கிறான்

.

          “ சரி . அங்கே போகலாம். இந்தப் பன்றியை இழுத்து வாருங்கள் “ என்று திண்ணனார் சொல்ல மற்ற யவரும் அவர் பின்னே சென்றனர்.  தொலை தூரத்தில் கண்ட ஒரு குன்றைக் காண ஆவலாக இருக்கிறது என்று நாணனிடம் திண்ணனார் கூற , அவனும் அங்கே தான் குடுமித்தேவர் இருப்பதாகத் தெரிவித்தான்.

 

          “ இந்த மலையைப் பார்த்தால்  .எனக்கு ஏதோ ஒரு வகையான இன்பம் தோன்றுகிறது. என்மேல் உள்ள   பாரம் குறைந்தாற்போல் உணர்கிறேன் . அந்தக் குடுமித் தேவர் எங்கு இருக்கிறார் ?”என்று கேட்டு வேகமாக முன்னேறினான்.  அவர்கள்  பொன் முகலி ஆற்றை அடைந்தனர். அங்கே பன்றியை வைத்து விட்டு காடனை நோக்கி ,” நீ தீக்கடைக் கோலால் தீயை மூட்டு. அதற்குள் நானும் , நாணனும் மலையில் ஏறிச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறோம்.”என்று திண்ணன் சொன்னார்.

 

             அவர்கள் இருவரும் பொன் முகலி  ஆற்றைக் கடந்து , திருக்காளத்தி மலைச் சாரலை அடைந்தனர். மலையில் ஏறும்போது , திண்ணனாருக்கு ,முன் செய்த தவத்தின் பயனாய்,முடிவிலா இன்பத்தைத் தரும் அன்பின் முதிர்ச்சி அப்போது  அவர்  பால் உண்டாயிற்று. மலையின் மேல் ஏற, ஏற அவர் உள்ளம் நெகிழ்ந்தது.

 

            மலையின் மேல் வீற்றிருக்கும் சிவலிங்கப் பெருமானைக்  கண்டவுடன் ஆனந்த வெள்ளத்தில் அழுந்தினார். பலகாலம் காணாமல் இருந்த தாயைக் கண்ட குழந்தை போல் ஆனார். புளகாங்கிதம் அடைந்தார். அப்பெருமானை அணுகும்  ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொறு யுகமாகத் தோன்றியது. வேகத்தோடும் ,மோகத்தோடும் ஓடி சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டார். முத்தமிட்டார் , மோர்ந்து பார்த்தார், கண்ணிலே ஒற்றிக் கொண்டார் செய்வதறியாது பெருமூச்சு விட்டார். கண்ணிலிருந்து நீர் அருவியாக வழிந்தது. அவர் அனுபவத்தைச் சொல்ல முடியாது , ஆனந்தத்தில் மிதந்தார். 

 

             இப்படி  வெகு நேரமாக  இன்பக் கொந்தளிப்பிலே ஈடுபட்டிருந்த திண்ணனார், “ எனக்கு இவர் அகப்பட்டது , என்னே பாக்கியம் ! “ என்று கூத்தாடினார். பிறகு சுதாகரித்துக் கொண்டு ,” எம்பெருமானே ! வன விலங்குகள் நடமாடும் இடத்தில் நீர் இத்தனை நாளும் தனியாக இருந்தீரா? துணைக்கு ஒருவரும் இல்லையே! “ என்று அங்கலாய்த்தார். அவர் கையிலுள்ள வில் தானே நழுவிக் கீழே விழுந்தது. அது மட்டுமல்ல அகப்பற்று, புறப்பற்று எல்லாமே நழுவியது. உடம்பையும் ,பசியையும் மறந்தார்.

 

            இறைவன் மேல் பச்சிலையும், பூவும், நீரும்  இருப்பதைப்பார்த்து ,” யாரோ இதெல்லாம் செய்திருக்கிறார்களே!”  என்றார்  அப்போது ,நாணன் .”  ஆம் எனக்குத் தெரியும் நான் முன்பே தங்கள் தந்தையுடன் இங்கு வந்திருக்கிறேன். ஒருபார்ப்பான் இந்தக் குடுமித்  தேவரை நீரால் ஆட்டி பச்சிலையும் , பூவும் வைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.”என்றான்.

 

            “ அப்படியா?  எம்பெருமானுக்கு அப்படிச் செய்தால் உவப்படைவான் போலும்!. அப்படியானால் நானும் இதைச் செய்வேன். இவர் பட்டினியாகக் கிடக்கிறாரே , இதோ நானே இறைச்சியைக் கொண்டு வந்து ஊட்டுகிறேன். ஐயோ! எத்தனை காலம் பட்டினியாக இருந்தாரோ!” என்று புலம்பினான்.  உடனே மனதில் “இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் “ என்று தோன்றும் , ஓடுவார்  , அடுத்த நிமிடத்தில் ”  இவரைத் தனியே விட்டுப் போவதா? “ என்று தோன்றும் மீண்டும் வருவார்

 

            இப்படிப் போவதும் வருவதுமாகச் சில நாழிகைகள் கழிந்தன. .பின் மனதைத் திடப்படுத்திக்  கொண்டு வில்லை ஏந்தி,  திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மலையினின்றும் கீழே இறங்கினார். காடனிடம் விட்டுச் சென்ற பன்றியை , நெருப்பில் வாட்டி , அம்பிலே கோர்த்து எடுத்தார். தசைகள் யாவும் நன்றாக வெந்திருக்கிறதா என பல்லால் கடித்துச் சுவை பார்த்து நல்லவைகளை ஒரு பக்கம் சேர்த்து வைத்துக் கொண்டு அவைகளை ஒரு தேக்கு இலை தொன்னையில் திரட்டினார். அருகில் உள்ள செடிகளிலிருந்த மலர்களைப் பறித்துத் தம் தலையில் செருகிக்கொண்டார். எம்பிரானுக்கு நீராட்ட வேடுமே என்ற எண்ணம் உதித்து , தன் வாய் நிறைய பொன் முகலி நீரை நிரப்பிக் கொண்டார். ஒருகையில் தொன்னை, ஒருகையில் வில்லும் அம்பும் , தலையில் மலர்கள் வாயில் அபிஷேகத்திற்காக நீர் என்ற கோலத்தில் , சாமி அங்கு தனியா இருக்குமே என்று நினைத்து மலைக்கு ஓடினார்..

 

 

       'இளைத்தனர் நாயனார்' என்று ஈண்டச் சென்று எய்தி. வெற்பின்
        முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
        வளைத்த பொன் செருப்பால் மாற்றி, வாயின் மஞ்சன நீர் தன்னை
        விளைத்த அன்பு உமிழ்வார் போல, விமலனார் முடிமேல் விட்டார்.

 

             மலையின் மேல் ஏறி சிவலிங்கப் பெருமானைக் கண்டார். முதலில் அதன் மீதிருந்த மலர்களையும், இலைகளையும்  தன் செருப்புக்காலால் அகற்றினார். பின் தன் அன்பை உமிழ்வார் போல் வாயில் உள்ள திருமஞ்சன நீரை உமிழ்ந்தார் அவருடைய நாவாகிய இந்திரியம்  அப்போது அடங்கி, அந்த நீரின் தன்மையையோ , சுவையையோ உணராமல் இருந்தது. பிறகு மெல்ல வளைந்து தன் தலை மேல் இருந்த பூக்களை சிவலிங்கத்தின் மீது உதித்தார். அப்பால் தான் கொண்டு வந்த ஊனை அவர் முன்னே வைத்து ,” என் நாயகரே ! இந்த இறைச்சி அம்பிலே கோத்து நன்றாகப் பக்குவம் பண்ணியது. நாவினால் அதுக்கிப் பார்த்து , இனிமையானவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வந்தேன். மிகவும் சுவையாக இருக்கிறது. இதைத் தாங்கள் தின்ன வேண்டும் சாமி ! “ என்றான். 

 

              கதிரவன் மறைந்து இரவு நெருங்கும் வேளை வந்தது. அந்தக் காளத்தி மலையின் மீது அன்பே உருவகமாக  மாறிய திண்ணனார் பசியை மறந்தார், பொறி உணர்ச்சியை மறந்தார். ஊரையும் ,உறவையும் மறந்தார். உயிர் நாயகனை மட்டும் பற்றிக் கொண்டார். இரவும் வந்தது. “ எம்பிரானை வனவிலங்குகள் துன்புறுத்துமே . அதனால் நான் தூங்காது அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் “ என்று காவலாக அங்கேயே வில்லை ஏந்தி நின்று கொண்டிருந்தார்.  பொழுது விடிந்தது. “ இன்று , காட்டில் வேட்டையாடி , எம்பிரானுக்கு  நல்ல இறைச்சியாகக் கொண்டு வர வேண்டும் “. என்று சொல்லிக் கொண்டே , மலையிலிருந்து இறங்கி பல விலங்குகளைக் கொன்று வேட்டையாடினார்.

 

             திண்ணனார் போனவுடன் ,காலையில்  இறைவனுக்குப் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் , திருக்காளத்தி அப்பனிடம் வந்தார் ,, மலர்களும் , இறைச்சியும் , எலும்பும் சிதறிக் கிடந்த  காட்சியைக் கண்டு பதறினார். “ ஐயோ! இந்த அநாசாரத்தை யார் செய்தார்கள்? “ என்று சொல்லிக் கொண்டே உடல்  நடுங்கிய நிலையில்  அவைகளை அப்புறப் படுத்தினார். யாரோ வேடர்கள்தாம் செய்திருக்க வேண்டும் என நினைத்து , பொன் முகலி ஆறு சென்று நீராடி, பின் இறைவனுக்குச் செய்ய  வேண்டிய  பூசைகளை ஆசாரத்துடன்  செய்து விட்டு, வீடு திரும்பினார்.

 

            தீ மூட்டி, விலங்குகளைப் பக்குவமாக நெருப்பில் காய்ச்சி , வெந்ததா என்று பார்த்துச் சுவைத்து தொன்னையிலிட்டு , பூக்களைத் தலையில் சூடி , நீரை வாயில் தேக்கி , முன்னாளில் செய்தது போலவே இறைவனுக்கு அருச்சனை செய்து மகிழ்ந்திருந்தார் திண்ணனார். இரவில் இறைவனைக் காத்து நின்று மறுநாட்காலை மறுபடியும் வேட்டையாடச் செல்லும் பொழுது சிவகோசியார் வேடன் பூசித்தவைகளை  அப்புறப்படுத்தி , தான் ஆசாரமாக பூசிக்கும் வழக்கமாகியது. . இப்படி ஐந்து நாட்கள் கடந்தன.   

 

             நாணனும் , காடனும் , திண்ணனாருக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லி இதைத் தெரிவிக்க ஊர் சென்றனர்.

 

            இங்கே சிவகோசரியார்   மனம் நொந்து ,” தினம் தினம் இந்த அபசாரத்தைக் கண்டு என் மனம் பொறுக்கவில்லை . இதற்கு ஏதும் வழி இல்லையா? இதை யார் செய்கிறார்கள் என்று   தெரிய வில்லையே ! “ என்று மனம் நொந்தார்

 

             அன்று இரவு அவர் கனவில் ,சிவபெருமான் எழுந்தருளி ,” யாரோ வேடன் செய்வது என்று நினைக்காதே. அவன் அன்பே உருவாக இருப்பவன். அவன் எண்ணம் , உரை , செயல் எல்லாம் நம்மைப் பற்றியவேயாகும். அவனுடைய அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவே . அவன் தன் செருப்புக்காலால் முன் இருந்த மலரை நீக்கும் பொழுது, முருகனைக் கொஞ்சும் போது அவன் சிற்றடி நம்மேல் படும்போது உண்டாகும் இன்பம் உண்டாகிறது. அன்புருவான அவன் உடம்பாகிய பாத்திரத்தில் வாய் வழியாக என்மேல் ஊற்றும் நீர் , ஒரு முனிவன் செவி வழியாக வந்த கங்கைப் புனலைவிடப் புனிதமானது. தன் தலையிலிருந்து அவன் உதிர்க்கும்  மலருக்குப் பிரம , விஷ்ணுக்கள் செய்யும் அருச்சனை மலர்களும் சமானம் ஆகாது.அவன் மென்று சுவைத்துப் பார்த்துத் தரும்  ஊன் , வேத வேள்விகளில் இடும் அவியைவிடச் சிறந்தது. வேத முனிவர்கள் சொல்லும் துதியைவிட , அவன் சொல்லும் அன்பு மொழிகள், எனக்கு இனிக்கின்றன. அவனுடைய அன்பு நிலையை உனக்குக் காட்டுகிறேன். நாளைக்கு நீ ஒளிந்திருந்து பார் “ என்று கூறியருளினார். சிவகோசரியார் தான் கண்ட கனவை நினைந்து மறுநாளுக்காகக் காத்திருந்தார்.

 

            அன்று ஆறாவது நாள். திண்ணனார் வழக்கமாக வேட்டையாடச் சென்று பூசைக்குரிய பொருட்களை ஏந்தி வரும்பொழுது பல கெட்ட சகுனங்கள் உண்டாயின.            “ ஐயோ ! எங்கள் சாமிக்கு ஏதோ உண்டாகிவிட்டதோ ? இது என்ன . இந்தச் சகுனங்கள் இரத்தக் குறியைக் காட்டுகின்றனவே ! “ என்று உணர்ந்து வேகமாக ஓடினார்.

 

           திண்ணனாரின் திண்ணிய பக்தியை வெளியுலகுக்குக் காட்ட வேண்டி,  இறைவன் அப்போது  ஒரு சோதனை செய்தான். சிவலிங்கப்பெருமானின் வலக் கண்ணில் இரத்தம் கசிந்தது. அங்கே வந்த திண்ணனார் அதைக் கண்டு துடி துடித்துப்போனார்.. நிலைகுலைந்து வீழ்ந்தார். எழுந்தார், பதறினார் , என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடினார். இறைவன் கண்ணைத் துடைத்தார். அப்படியும் இரத்தம் நிற்கவில்லை. மறுபடியும் விழுந்தார் ,பதை  பதைத்தார்.

 

         “ இந்தக் காரியம் செய்தவர் யார் ? வேடரோ? வனவிலங்கோ ? யாராக இருந்தாலும் இதோ தொலைத்து விடுகிறேன்  “ என்று கூறிக் கையில் வில்லையும் , அம்பையும் ஏந்தி அங்குமிங்கும் அலைந்தார். ஒருவரையும் கண்ணில் தென்படவில்லை ,” ஐயோ ! இதற்கு என்ன செய்வேன்.? எங்கள் ஐயருக்கு என்ன புண் வந்தது? என் உயிருக்குயிராம் உத்தமருக்கு யார் தீங்கிழைத்தார்கள் ? பச்சிலை கட்டினால் தீருமோ?” என்று புலம்பி அருகிலிருந்து , பச்சிலை எடுத்துக் கொண்டு வந்து அதைக் கையால் பிசைந்து சாற்றை கண்ணில்விட்டாலும் இரத்தம் வழிவது நிற்கவில்லை. “ இனி என் செய்வேன்சாமி ? “ என்று மறுபடியும் புலம்பியபோது நினைவிற்கு வந்தது ,  “ ஆம்! ஊனுக்கு ஊன்   என்று சொல்வார்களே ! அதைச் செய்து பார்க்கலாம் . நேரம் கடத்துவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை , என் கண்ணைப் பறித்து அப்புவேன் !” என்று கூறி ஓர் அம்பால் தம் கண்ணைத் தோண்டினார் திண்ணர். அதைக் குருதி வழிந்த இறைவன் கண்ணில் அப்பினார்.

 

           உடனே இரத்தம் நின்றுவிட்டது. தம் கண்ணில் இரத்தம் வழிவதைத் திண்ணனார் உணரவில்லை. கண்ணுள்ள இடம் அம்பால் புண் ஆனதையும் உணரவில்லை. உடம்பை மறந்த அன்பு நிலையில் இருந்தார். இரத்தம் நின்றதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார் .தம்மையே தட்டிக்கொண்டார்.  ஆனால் அவர் களிப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

 

நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்;
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
'நன்று நான் செய்த இந்த மதி' என நகையும் தோன்ற,
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்.

 

             இறைவன் மீண்டும் சோதனையைத் தொடர்ந்தான் . வலக் கண்ணில் குருதி நின்றதும் , இடக்கண்ணில் இரத்தம் வரத் தொடங்கியது. அதைத் திண்ணனார் கண்டார் ஆனால் அஞ்சவில்லை இப்பொழுதுதான் அவருக்கு மருந்து தெரிந்துவிட்டதே!.                   “ கை கண்ட மருந்தைத் தெரிந்துகொண்டேன் , இன்னும் ஒரு கண்  எனக்கு இருக்கிறதே! அதையும் தோண்டி இடுவேன்” என்று எண்ணினார் ஆனால் தன் கண்ணை நோண்டினால் இறைவன் கண் இருக்கும் இடம் தெரியாதே ! அதனால் அதை அடையாளம் காண வேண்டி , , இறைவன் இடக் கண்ணில் , செருப்புடன் கூடிய தன் இடக்காலை ஊன்றினார். ஓர் அம்பை எடுத்துத் தன் கண்ணைப் பிடுங்க ஆயத்தமானார்.

 

              அதற்குள் இறைவனுக்குப் பொறுக்கவில்லை.தருமத்தையே வாகனமாகக் கொண்ட எம்பெருமான் , திண்ணனாரை ஆட்கொள்ள எண்ணி தன் திருக்கையை நீட்டித் திண்ணனாரின் கையைப் பிடித்து,” நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!  நில்லு கண்ணப்ப! “ என்று மூன்று முறை கூறியருளினார்.

 

            இந்த   நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைவிடத்திலிருந்து பார்த்த சிவகோசரியாருக்கு, வேடனைத் தவறாக எண்ணிவிட்டோமே என்று தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது.

 

           அப்பொழுது தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.  மீண்டும் சிவபிரான் திண்ணனாரை நோக்கி, ” கண்ணப்பா எப்போதும் நீ என் வலப்பாகத்தில் நின்றிருப்பாயாக! “ என்று அருளினார். கண்ணப்பர் ஆறே நாட்களில் இறைவன் திருவருளைப் பெற்றார்.

 

பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு' என் வலத்தில்
மாறு இலாய்! நிற்க' என்று, மன்னு பேர் அருள் புரிந்தார்.

 

           மணிவாசகப் பெருமான் ,” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டதற்பின் “ என்று கண்ணப்பரின் அன்பின் உச்சநிலையைப் பற்றிக் கூறினார்..கண்ணப்பர் வேறு அன்பு வேறு என்று கொள்ளக் கூடாது.. அன்பே உருவானவர் அவர். ஆதலால் ‘”கண்ணப்பன் ஒப்பவோ ரன்பன் இன்மை “ என்னாமல் ,” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை “ என்று பாடினார் மாணிக்கவாசகர் .ஆம்! அந்த அன்புக்கு இணையான அன்பு முன்பும் இல்லை , பின்பும் இல்லை என்றே கூறலாம் . 

 


மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர்
தங் கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேல் கொண்டே,
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலய னாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன்.


 

Related Content

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -

இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்

The History of Kannappa Nayanar

கண்ணப்ப நாயனார் புராணம்

Kannapar- part 2