logo

|

Home >

to-know >

stalaviyal

ஸ்தலவியல்

 

  1. புண்ணிய தலங்கள் என்பன எவை?

     

    புண்ணிய ஸ்தலங்களாவன மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் வ்ருக்ஷம் புராணம் போன்றவற்றால் சிறப்புற்ற சிவஸ்தலங்கள் ஆவன.

     

  2. இவற்றில் திருமுறைத் தலங்கள் என்பன எவை?

     

    திருஞானசம்பந்த சுவாமிகள், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும் சமயாசாரியர்கள் கட்டளை இட்டருளிய திருப்பதிகம் பெற்று விளங்கும் ஸ்ரீ கைலாச முதலிய ஸ்தலங்களுமாம்.

     

  3. மேற்கூறிய ஸ்தலங்களுக்கு இப்போது பதிகங்கள் இருக்கின்றனவா?

     

    274 ஸ்தலங்களுக்கு இருக்கின்றன. இந்த ஸ்தலங்கள் சோழநாட்டில் 190; பாண்டிய நாட்டில் 14; மலை நாட்டில் 1; ஈழநாட்டில் 2; கொங்குநாட்டில் 7; நடுநாட்டில் 22; தொண்டை நாட்டில் 32; துளுவநாட்டில் 1; வடக்கில் 5.

     

  4. ஆலயங்க ளிலிருக்கும் மூர்த்திகளிடமாய்ப் பரமசிவன் ஏதாவது மகத்துவம் விளக்கியிருக்கின்றாரா?

     

    விளக்கியிருக்கின்றார். புண்ணிய ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களிலெல்லாம் மகத்துவம் காண்பித்திருக்கிறார். ஆனால் சில புண்ணிய ஸ்தலங்களில் நடந்திருக்கிற மகத்துவமாத்திரம் பிரசித்தமாய் வழங்கப்பட்டிருக்கிறது.

     

  5. எந்த ஸ்தலங்களில்?

     

    திருக்கடவூரிலே மார்க்கண்டேயருக்காகச் சிவலிங்கத்தினிடமாய்த் தோன்றி யமனையுதைத்து அவருக் கென்றும் பதினாறு வயதாக அருளிச்செய்தார். காளத்தியில் கண்ணப்ப சுவாமிகளுக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனங் கொடுத்து மோக்ஷ மருளினார். திருவானைக்காவில் ஒரு சிலந்திப்பூச்சிக்குச் சிவலிங்கத்தினின்றுந் தரிசனமாகி ஒரு ராஜனாகப் பிறக்கும்படிக் கடாக்ஷிக்க, அப்படியே சோழ வம்சத்திற் பிறந்த கோச்செங்கட்சோழ நாயனாரென்பர் அநேகம் திருப்பணிகள் செய்து அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரானார். காஞ்சிபுரத்தில் தம்மைக் கல்லாலெறிந்த சாக்கிய நாயனாருக்குச் சிவலிங்கத்தி னிடமாய்த் தரிசனமாகி மோக்ஷங்கொடுத்தருளினார். திருவிடைமருதூரில் வரகுண பாண்டியருக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்தருளினார். திருவிரிஞ்சிபுரத்தில் ஒரு சிறிய பிராமணப்பிள்ளை தம்மைப் பூசிக்கும்படி திருமுடி சாய்த்தருளினார். திருவாலவாயனென்னும் மதுரையில் அநேகருக்குத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்திருக்கின்றார். இப்படிப் பூமியிலுள்ள புண்ணியதலங்களில் அன்பர்களை இரக்ஷிக்கும்படி அவர் காண்பித்திருக்கிற மகிமையை யெல்லாம் சொல்ல வேண்டுமானால் அளவுபடாது.

     

  6. பரமசிவன் அடியார்களுடைய வினையை நீக்கி இரக்ஷிக்கும் பொருட்டு, மனிதவுருவமாகி ஏதாவது மகத்வம் விளங்கச்செய்தாரா?

     

    அநேகஞ் செய்திருக்கிறார். மதுரையில் அவர் மனிதவுருவமாய் எல்லாம்வல்ல சித்தரென்னும் பெயருடையவராய் வந்தருளிக் கிழவர்களைக் குமரர்களாகச்செய்தும், மலடிகளைப் பிள்ளைபெறச் செய்தும், கூன், குருடு, செவிடு, ஊமை, நீக்கியும், நொண்டிகளுக்குக் கால்கூடச்செய்தும், கல்லானை கரும்பு தின்னச் செய்தும் இன்னுமநேக மகத்துவங்கள் விளங்கச் செய்தருளினார்.

     

  7. இன்னுமென்ன மகத்துவங்கள் விளங்கச் செய்தார்?

     

    திருவண்ணாமலையில் சந்ததியில்லாமல் நெடுநாளாக மனவருத்தப்படுத் தமக்கு அன்போடு பணிசெய்திருந்த வல்லாளராஜனுக்குக் குழந்தையாகிப் பிள்ளைக்கலி தீர்த்தருளினார். திருவிரிஞசிபுரத்தில் அம்மார்க்கமாகப் போன வைசியருக்கு வழித்துணையாய்ச சென்று காப்பாற்றி மார்க்கசகாயரென்னுந் திருநாமம் பெற்றருளினார். சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனாரிடத்துக்கு மனிதவுருவமாக எழுந்தருளிவந்து அவரும் அவருடைய பத்தினியாரும் கிழத்தன்மை நீங்கி இளமை யடையும்படிக் கிருபை செய்தருளினார். சிறுத்தொண்டநாயனாரிடத்தில் வயிரவ சங்கம ரூபமாயெழுந்தருளி அவருடைய பிள்ளையைக் கறிசமைத்திடச் சொல்லி மறுபடியுமந்தப் பிள்ளையைப் பிழைக்கும்படிச் செய்து அவர்களுக்கு மோக்ஷமருளினார்.

     

  8. இத்தகைய பெருங்கருணையுள்ள பெருமானை வேதாகம விதிப்படி அன்புடன் தொழுது துதித்துப் பேறு பெற்ற அடியார்களுண்டோ?

     

    அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் மாணிக்கவாசக சுவாமிகள் முதலானவர்களுமாம்.

     

  9. அவர்கள் திருப்பெயர்களைக் கூறும் தேவாரப் பதிகத்தை ஓதுக?

     

    ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளருளிய

    திருத்தொண்டத்தொகை
    
    பண் - கொல்லிக்கௌவாணம்
    
    திருச்சிற்றம்பலம்
    
    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.				1
    
    இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
    ஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
    கடவூரிற் கலயன்ற னடியார்க்கும் அடியேன்
    மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
    எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்
    அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.				2
    
    *மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்
    செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த
    அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				3
    (* விபூதி, ருத்திராக்ஷம், சடைமுடி. )
    
    திருன்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்
    பெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்
    பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்
    ஒருநம்பி அப்பூதி யடியார்க்கு மடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
    அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
    ஆரூரின் ஆரூரி லம்மானுக் காளே.				4
    
    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
    மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
    எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
    ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்
    நம்பிரான் திருமூல னடியார்க்கு யடியேன்
    நாட்டம்மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கு மடியேன்
    அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				5
    
    வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
    கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கு மடியேன்
    கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்
    ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				6
    
    பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
    மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
    விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்
    ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				7
    
    கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
    கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்
    நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்
    துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
    தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்
    அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				8
    
    கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
    மன்னவனாஞ் செருத்துணைத னடியார்க்கு மடியேன்
    புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப்
    பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
    அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				9
    
    பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
    பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.				10
    
    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்
    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணணார்க் கடியேன்
    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
    அன்னவனாம் ஆரூர னடிமைகேட் டுவப்பார்
    ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே.				11
    
    திருச்சிற்றம்பலம்.
    

     

  10. பரமசிவம் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன?

     

    தேசங்கள் பலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச் சிவதரிசனஞ் சித்திப்பதருமை. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப் பலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று வினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள் அங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் பரமசிவம் கட்டளையிட்டருளினார்.

     

  11. சிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்?

     

    சைவபுராணம் பத்துக்குட்பட்ட ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.

     

  12. ஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷமென்னை?

     

    இவை ஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு ஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங் கருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை யுணர்த்துவனவாம்.

     

  13. அற்றேல் சிவாலயங்களில் ஸ்தூலலிங்காதி வைபவங்கள் எதற்கு அறிகுறி?

     

    குண்டலிஸ்தானம் ஸ்தூலலிங்க கோபுரவாயில் (மூலாதாரம்), உந்திஸ்தானம் பலிபீடம் (சுவாதிஷ்டானம்), ஹிருதயஸ்தானம் துவஜஸ்தம்பம் (மணிபூரகம்), கண்டஸ்தானம் நந்திபீடம் (அநாகதம்), வாக்குஸ்தானம் சூக்ஷ்மலிங்கம் உட்கோபுரவாயில் (விசுத்தி) நாசிஸ்தானம் துவாரபாலகர், புருவ மத்தியஸ்தானம் மகாகாரணலிங்க அந்த்ராள கோபுரவாயில் (ஆக்ஞை) இடதுகண் ஸ்தானம் சுப்பிரமணியர் சந்நிதி, வலது கண் ஸ்தானம் கணபதி சந்நிதி, இடதுகானம் சண்டேசுரர் சந்நிதி, வலதுகாது ஸ்தானம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதி, மஸ்தகமத்திய ஸ்தானம் நடேசர் சந்நிதி, இடதுபாக மஸ்தக மத்திய ஸ்தானம் பார்வதி சந்நிதி, பிர்மரந்திரம் சிவலிங்க மூலஸ்தானம் என அறிக. பலிபீடம் வரையில் பிருதிவி மண்டலம், துவஜஸதம்பமும் நந்தியும் அப்புமண்டலம், துவாரபாலகர்வரையில் வாயுமண்டலம், கணபதிவரையில் அக்கினி மண்டலம், மேல் ஆகாயமண்டலமென அறிக. அன்றி, சிவலிங்கம் - பதி, இடபம் - பசு, பலிபீடம் - பாசம் எனவுமறிக.

     

  14. சிவஸ்தலங்களுள் விசேஷத் தலங்கள் யாவை?

     

    நடனத்தலங்கள், சப்த தியாகஸ்தலங்கள், ஆறாதாரஸ்தலங்கள், பிண்டஸ்தலங்கள், பஞ்சஸ்தலங்கள், நாடிஸ்தலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை விசேஷமாம்.

     

  15. நடன ஸ்தலங்கள் யாவை?

     

    “ஓங்குலகந் துயர்தீர நடம்புரியு முயர்தான முரைப்பங்கேள் நீ 
    பாங்குதருங் கயிலாயஞ் சிவலோகம் பனிவரைநூல் பரவுஞ்சொர்க்க
    தீங்ககல்பத் திரபீடம் நேபாளம் கங்கைநதி சிறந்த காசி
    கோங்கலருந் தடங்காம ரூபமொடு நைமிசமேகுருவின் தானம்.
    
    மந்தரமால் வரைகமலா நந்தவரை யுங்ககுல வரையே மாசு
    சிந்துசுராட் டிரங்கதலித் தானமலி கேதாரந் திருவால்மிக்கு
    முந்துபரி யாத்திரஞ்சந் திரத்தானஞ் சுமிந்தரஞ்சுந் தரமாமூசு
    சந்துமலி தருமரா புரந்தாமே விசாலாக்ஷம் நடம்பொன் மேரு.
    
    சண்பகமா வனம்போட மாடவியோ டாமிரதஞ் சாரதைப்பீடம்
    மண்பரவுந் துளசிவன மயவந்தி சூல்வரைசி கண்ட மற்றும்
    விண்பயிலு மாசோத மஞ்சரிகாம் பீரியமா விர்த்த மேலோர்
    எண்பதமாம் பிரமாண்ட மயிராவதி மாயூரம்சித்தி ரசேனாகம்.
    
    புட்கரணி பாதாள மந்திராச் சிரமமணி பொழிபொற் கூடம்
    கட்கமழும் கமலமணி சிவாச்சிரமம் சித்தராச் சிரம ரூப
    நட்புறுசித் திரகூட மல்லிகார்ச் சுனங்கங்கா நதித்து வாரம்
    புட்பயிலும் புஷ்பரத முதயவரை புன்னாக வனமு மற்றும்.
    
    நந்திபுர மாமாங்கம் சாளரத்தம் சிரபுரஞ்சோம் பீட நாறும்
    சந்தணிகேத் திரஞ்சாளக் கிராமமிட பாசலமே தமைந்த தீமை
    சிந்துசரச் சுவதிமறைத் தெளிவாகுஞ் சிதம்பரமாந் திகழுந்தானம்
    இந்தியமைந்தடக்கினர் தம்மிதையத்தும் நடம்புரிவமியலா லென்றும்"
    என்றபடி அறுபத்து நான்குமாம்.
    

     

  16. இவற்றுள் சிதம்பரம் மேலானதற்குக் கரண மெனன?

     

    இங்குச் செய்யும் நடனம் ஆன்மாக்களுக்கு ஆணவவிருளைப் போக்கிப் பேரின்பமாகிய ஆனந்தத்தை அருளும் ஆநந்த நடனமாதலால் விசேஷமென அறிக.

     

  17. சப்த விடங்கத் தலங்கள் யாவை?

     

    திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்கோளிலி, திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு என்னும் ஏழுமாம்.

     

  18. இந்தத் தலங்களிலுள்ள தியாகர்களின் திருநாமங்களையும் நடனங்களையும் சொல்லுக?

     

    1. திருவாரூர், வீதிவிடங்கர் - அசபாநடனம்.
    2. திருநாகைக்காரோணம், சுந்தரவிடங்கர் - அலைநடனம்.
    3. திருக்கோளிலி, அவனிவிடங்கர் - பிரமரநடனம்.
    4. திருநள்ளாறு, நகவிடங்கர் - உன்மத்தநடனம்.
    5. திருக்காறாயில், ஆதிவிடங்கர் - குக்குடநடனம்
    6. திருவாய்மூர், நீலவிடங்கர் - கமலநடனம்.
    7. திருமறைக்காடு, புவனிவிடங்கர் - அமிர்தநடனம்.

     

  19. ஆறாதார ஸ்தலங்கள் யாவை?

     

    (மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிஷ்டானம்) திருவானைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்ஞை) காசி என்னும் ஆறுமாம். (கயிலையை சஹஸ்ரதளமாகவும், மதுரையை துவாதசாந்தமாகவும் கூறுவர்.)

     

  20. பிண்ட ஸ்தலங்கள் யாவை?

     

    (சிரசு) ஸ்ரீபர்வதம், (லலாடம்) கேதாரம், (புருவ மத்தியம்) காசி, (இருதயம்) சிதம்பரம், (மூலாதாரம்) திருவாரூர், (குதஸ்தானம்) குருக்ஷேத்திரம் என்னும் ஆறுமாம்.

     

  21. பஞ்சபூத ஸ்தலங்கள் யாவை?

     

    (பிருதுவி) திருவாரூர், (அப்பு) திருவானைக்கா, (தேயு) திருவண்ணாமலை, (வாயு) திருக்காளத்தி, (ஆகாயம்) சிதம்பரம் என ஐந்துமாம்.

     

  22. நாடி ஸ்தலங்கள் யாவை?

     

    இலங்கை - இடைகலை, இமயம் - பிங்கலை, தில்லை - சுழுமுனை எனவறிக.

     

  23. சிவாலயங்களிலே நடக்கும் மாத விசேஷ உத்ஸவங்கள் எவை?

     

    சித்திரை மாதத்தில் விஷுபுண்ணிய காலோத்ஸவம் பிரமோத்ஸவம் சைத்திரோத்ஸவம், ஸ்ரீ நாவுக்கரசு சுவாமிகள் மகோத்ஸவம், வைகாசியில் வசந்தம் ஸ்ரீ ஞானசமபந்த சுவாமிகள் மகோத்ஸவம், ஆனி மாதத்தில் திருமஞ்சனம் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் மகோத்ஸவம், ஆடிமாதத்தில் ஆடிப்பூர உத்ஸவம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் மகோத்ஸவம், ஆவணிமாதத்தில் ஸ்ரீ விநாயக உத்ஸவம், ஆவணி மூலமகோத்ஸவம், புரட்டாசி நவராத்திரி மகோத்ஸவம், ஐப்பசி ஸ்கந்தோத்ஸவம், கார்த்திகை தீப மகோத்ஸவம், மார்கழி திருவெம்பாவை உத்ஸவம், ஸ்ரீ ஆருத்திராதரிசன மகோத்ஸவம், தை உத்தராயணபுண்ணியகால மகோத்ஸவம் பூச மகோத்ஸவம், மாசி மகோத்ஸவம் சிவராத்திரி மகோத்ஸவம், பங்குனி தெப்போத்ஸவம் உத்திர உத்ஸவம் ஆகிய இவைகளாம்.

     

  24. சிவராத்திரி யாவது யாது?

     

    பிரம விஷ்ணுக்கள் ஒரு கற்பத்திலே தான் பிரமம் தான் பிரமமென்று தருக்குற்ற காலையில் ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்தாணு ரூபமாய் நின்ற அவதாரமென்றும், மகாபிரளயத்துக்கப்பால் ஆன்மகோடிகள் மாயையிலொடுங்கிநிற்க ஏகாதச ருத்திரர்கள் பெருமானை ஏகாந்தமாய்ப் பூஜித்த காலமென்றும், பின்னொரு கற்பத்தில் சர்வசம்ஹாரகாலத்தினிறுதியில் உமைகேள்வன் ஸ்ரீ பராசத்தியாருடன் வீணாகானம் செய்துகொண்டிருந்தகாலையில் அம்மையார் ஆணவ கேவலத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மகோடிக ளனைத்தையும் பக்குவப்படுத்தி நிரதிசயானந்தப் பெருவாழ்வைத் தருவான் வேண்டி மீட்டும் பஞ்சகிருத்தியந் தொடங்கியருள வேண்டுமென்று பிரார்த்தித்து ஸ்ரீ பரமேஸ்வரனை அபிஷேகாதி வைபவங்களால் மகிழ்விக்கச் செய்த இரவு என்றுங் கூறுவர் மேலோர்.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்