logo

|

Home >

to-know >

lyrics-of-thevaram-thirumurai-song-mp3s-in-unicode-tamil-font

Lyrics of thevaram thirumurai song mp3s In Unicode Tamil font

In Unicode Tamil font

This page has the lyrics of the thirumuRai songs that are available at the Shaivam Audio gallery

திருச்சிற்றம்பலம்

திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் 	பண் - நட்டபாடை

அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.		1.6.1

திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை

அரும றையனை ஆணொடு பெண்ணனைக் 
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் 
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர் 
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.		5.79.3

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று 
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே 
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர் 
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.	5.79.8

திருநீலகண்டம்   		பண் - வியாழக்குறிஞ்சி

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.		1.116.1

திருவதிகைவீரட்டானம்		பண் - கொல்லி

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.			4.1.6

திருக்குறுக்கை - திருநேரிசை

சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.	4.49.4

திருத்தோணிபுரம்     		பண் - பழந்தக்கராகம்

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடல் தோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.		1.60.10

திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை

சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.	5.39.2

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.		5.39.3

திருப்பழனம்                   பண் - பழந்தக்கராகம்

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.		4.12.1

நமச்சிவாயப்பதிகம்        பண் - காந்தாரபஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.		4.11.1

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.	4.11.10

திருக்குருகாவூர் - வெள்ளடை	பண் - அந்தாளிக்குறிஞ்சி 

சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.		3.124.1

காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே.		3.124.6

திருவையாறு - திருத்தாண்டகம்

எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
	திருவையா றகலாத செம்பொற் சோதீ.		6.38.7

திருவாய்மூர் - திருக்குறுந்தொகை

எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்(டு)
அங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனார தென்கொலோ.		5.50.1

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.		5.50.8

திருச்சேறை - திருக்குறுந்தொகை 

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே 
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் 
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி 
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.				5.77.2		

திருவாவடுதுறை  			பண் - காந்தாரபஞ்சமம்
நாலடிமேல் வைப்பு 

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.		3.4.1

திருக்காளத்தி  			பண் - நட்டபாடை

இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

திருச்சிவபுரம்  			பண் - வியாழக்குறிஞ்சி

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.			1.112.1

சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.		1.112.11

நமச்சிவாயத் திருப்பதிகம்  		பண் - கௌசிகம் 

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.				3.49.1

கண்டபத்து

கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை
வல்லாளனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம்
பல்லோரும் காண, என்தன் பசு-பாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே.	8.31.4

திருக்கோத்தும்பீ

நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்
சீஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய்ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!		8.10.12

திருநீலக்குடி - திருக்குறுந்தொகை

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் 
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் 
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.				5.72.7

திருநல்லூர்ப்பெருமணம் 	பண் - அந்தாளிக்குறிஞ்சி 

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.			3.125.1

நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.			3.125.11

திருமயிலாடுதுறை    	 பண் - தக்கராகம்

கரவின் றிநன்மா மலர்கொண்டே
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.				1.38.1

ஊர்த்தொகை			பண் - பழம்பஞ்சுரம்	

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்  டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.

திருவாவடுதுறை  		பண் - தக்கேசி

குறைவிலா நிறைவே குணக்குன்றே
     கூத்தனே குழைக் காதுடையானே
உறவிலேன் உனை அன்றிமற்றடியேன்
     ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறைவண்டார் பொழில் சூழ் திருவாரூர்ச்
     செம்பொனே திருவாவடு துறையுள்
அறவனே யெனை அஞ்சல்என் றருளாய்
     ஆர் எனக்குற வமரர்கள் ஏறே.			7.70.6

திருவதிகைவீரட்டானம்    	பண் - கொல்லி

கூற்றாயின வாறுவிலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர இரவும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.		4.1.1

திருத்தருமபுரம்  		பண் - யாழ்மூரி

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூத இனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமோடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கும் மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.	1.136.1

திருவையாறு             	பண் - காந்தாரம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.	4.3.1

திருவொற்றியூர் - திருநேரிசை

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா(து)
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே.	4.46.2

திருஆலவாய் 					பண் - புறநீர்மை

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கைம் மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே.	3.120.1

திருக்கழுமலம் 			பண் - கொல்லி 

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.		3.24.1

திருபாண்டிக்கொடுமுடி	பண் - பழம்பஞ்சுரம்	

மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை  வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்கறையூரிற் பாண்டிக்கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.	7.48.1

திருஆவடுதுறை - திருநேரிசை 	பண் - காந்தாரம் 

மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே. 		4.56.1

திருவாரூர்		பண் - செந்துருத்தி

மீளா அடிமை  உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
முளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.			7.95.1

திருக்கச்சூர்ஆலக்கோயில்பண் - கொல்லிக்கெளவாணம்

முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடூம் மலையான் மகள்தன் மணவாப஡
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே.		

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தாரூரன் ஆரூரன் பேர் முடிவைத்த
மன்னுபுலவன் வயல்நா வலர்கோன் செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவரெந் தலைமேற் பயில்வாரே.

அச்சோப்பதிகம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்த மலம் அறுவித்துச் சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!		8.51.1

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
மும்மை மலம் அறிவித்து, முதல் ஆய முதல்வன் - தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!		8.51.9

திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்   பண் - குறிஞ்சி

முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.	4.21.1

திருக்கோளிலி 			பண் - பழந்தக்கராகம்

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.		1.62.1

தனி - திருக்குறுந்தொகை

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் 
நமச்சி வாயவே நானறி விச்சையும் 
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே 
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.			5.90.2

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் 
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.		5.90.10

திருக்கோளிலி  			பண் - நட்டராகம்

நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி  எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.		7.20.1

திரு அண்ணாமலை   		பண் - தக்கேசி

ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.	1.69.3

கோயில் - திருவிசைப்பா		பண் - பஞ்சமம்

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
     உணர்வுசூழ் கடந்ததோர்  உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக்குன்றே!
     சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
     அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
     தொண்டனேன் விளம்புமா விளம்பே!	9.1.1

அம்மானை

பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலி மதுரை
மண்சுமந்து கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி- பாடுதும்காண்; அம்மானாய்!	8.8.8

திருக்கழுமலம் - திருத்தாளச்சதி 		பண் - வியாழக்குறிஞ்சி

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்
	பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
	சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
	தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
	காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.		1.126.1

திருவையாறு - திருவிராகம்  	பண் - வியாழக்குறிஞ்சி

பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.		1.120.1

நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.			1.120.11

திருக்கேதாரம்  			பண் - நட்டபாடை

பண்ணின் தமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெரியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே.

நாவின் மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக் கடியான்அடித் தொண்டன்
தேவன் திருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின் தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.

திருவீழிமிழலை    		பண் - நட்டபாடை

பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.		1.11.4

திருவையாறு			பண் - காந்தாரபஞ்சமம்

பரவும் பரிசொன் றறியேன்நான்
     பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
     எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
     தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
     தையா றுடைய அடிகளோ.		7.77.1

கூடி அடியார் இருந்தாலும்
     குணம்ஒன் றில்லீர் குறிப்பிலீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
     உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன்
     திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
     தையா றுடைய அடிகளோ.		7.77.10

திருநாகைக்காரோணம் 	 பண் - கொல்லிக்கெளவாணம்

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
     பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார் தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
     செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
     அவை பூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
     கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

திருவலிவலம் - திருவிராகம் 	பண் - வியாழக்குறிஞ்சி

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.		1.123.5

திருவெண்ணெய்நல்லூர்		பண் - இந்தளம்

பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத்தென்பால்வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.		7.1.1

திருவாழ்கொளிபுத்தூர்    	 பண் - தக்கராகம்

பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
பூதகணம் புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற் றானடி காண்போம்.		1.40.1

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடு தல்எளி தாமே.			1.40.11

திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு 
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் 
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் 
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை 
மாடச் சுடர்க்கொழுந்தே. 				4.110.1

திருச்சதகம்

போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றியோ நமச்சிவாய புறமெனைப் போக்கல் கண்டாய் 
போற்றியோ நமச்சிவாய சய சய போற்றி போற்றி.		8.5.62

திருச்சாழல்

பூசுவதும் வெண்ணீறு, பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டு என்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!		8.12.1

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணேடீ
பெண்பால் உகந்திலனேல், பேதாய்! இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ!		8.12.9


திருவையாறு  				பண் - மேகராகக்குறிஞ்சி

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மே஧லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே.		1.130.1

திருப்பராய்த்துறை  			பண் - மேகராகக்குறிஞ்சி

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.				1.135.1		

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.				1.135.11

திருஓத்தூர்   				பண் - பழந்தக்கராகம்

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.				1.54.1

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.	1.54.11

திருநொடித்தான்மலை		பண் - பஞ்சமம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர்வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே.		7.100.1

திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை

தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.	4.29.4

காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்கள் ஏத்தச்
சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.	4.29.8

கோயில் - திருப்பதிகம்

தந்தது, உன் - தன்னைக் கொண்டது, என் - தன்னைச்
     சங்கரா! ஆர் - கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று, இல்லா ஆனந்தம் பெற்றேன்;
     யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்!
     திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்;
     யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!			8.22.10

திருச்சிறுகுடி - திருமுக்கால் 			பண் - சாதாரி

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே.					3.97.1

திருமயேந்திரப்பள்ளி 		பண் - கொல்லி 

திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே.			3.31.1

வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.			3.31.11

வடதிருமுல்லைவாயில்  		பண் - தக்கேசி

திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
     சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
     மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
     வாயிலாய்  வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
     பாசுப தாபரஞ் சுடரே.

திருப்பிரமபுரம்  			பண் - நட்டபாடை

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.		1.1.1


திருக்கேதாரம் 			பண் - செவ்வழி

தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.   	2.114.1

கோயில் - திருக்குறுந்தொகை

ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே.			5.1.5

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.		5.1.10

திருவையாறு - திருத்தாண்டகம்

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.		6.38.6

திருவேணுபுரம்  		பண் - நட்டபாடை

வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.		1.9.1

அடைக்கலப்பத்து

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்;
தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக்கொள்ளாய்
அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.	8.24.10

கோளறு திருப்பதிகம்  	பண் - பியந்தைக்காந்தாரம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே. 			2.85.1

திருஆலவாய் - திருவிராகம் 		  பண் - கௌசிகம் 

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.		3.52.1

சீகாழி - திருமாலைமாற்று  			பண் - கௌசிகம் 

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.			3.117.1

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.		3.117.11


திருவீழிமிழலை - திருவிசைப்பா	பண் - பஞ்சமம்   

கற்றவர் விழுங்கும் கற்பகக் கணியைக்
     கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
     மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
     திருவீழி மிழலைவீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம்
     குளிரஎன்  கண்குளிர்ந் தனவே.

கோயில் - திருப்பல்லாண்டு		பண் - பஞ்சமம்

ஆரார் வந்தார் அமரர் 
     குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன்
     அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்
     குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் 
     ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

இறவாத இன்ப அன்பு 
     வேண்டிப் பின் வேண்டு கின்றார்
ஓபிறவாமை வேண்டும்; மீண்டும் 
     பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்; இன்னும்
     வேண்டு நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போதுன்
     அடியின் கீழ் இருக்க என்றார்.

திருச்சிற்றம்பலம்

 

Related Content

Lyrics of Tevaram through periyapuranam