logo

|

Home >

to-know >

irai-ilakkanam

இறை இலக்கணம்

சித்தாந்த சிகாமணி, பேராசிரியர்

க. வடிவேலாயுதனார், M. A.,

தமிழ்த்துறைத் தலைவர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்.

[சிவஞான பூஜா மலர் - துந்துபி ஆண்டு - (1982)]
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை - 600 033.


      சைவ சமயத்துக்கு உயிர் நாடியாக உள்ளவை பதினான்கு சாத்திரங்களும் பன்னிரண்டு திருமுறைகளுமேயாம் என்பது ஆன்றோர் துணிபாகும். இவைகள் அனைத்தும் முதனூல்களேயாம். இதற்கு மாறான கருத்தும் உண்டு.

      பதினான்கு சாத்திரங்களும் திருமுறைகளின் கருத்துகளை அடியொற்றி இயற்றப் பெற்றுள்ளன. பதினான்கு சாத்திரங்களுள் எட்டு நூல்களை அருளியவர் உமாபதி சிவாசாரியார் ஆவர். அவைகள் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்ற எட்டு நூல்களாகும். இவற்றை ‘சித்தாந்த அஷ்டகம்’ என்ற பெயரால் வழங்குதல் மரபு.

      இவற்றுள் திருவருட்பயன் என்ற நூல் திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயன்றது. பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்களையுடையன. நாற்பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்றவற்றுள் மூன்று பொருள்களையே திருக்குறள் விரித்து விளக்கியுள்ளது. என்றாலும், “முப்பாலில் நாற்பால் மொழிந்தவர்” (திருவள்ளுவ மாலை – 19) என்றும், “அறம் பொருளின்பம், வீடென்னுமந் நான்கின், திறந்தெரிந்து செப்பியதேவு”; (திருவள்ளுவ மாலை – 8) என்றும், திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றிப் பாராட்டியுள்ளார்கள். அது திருக்குறளை நன்கு ஆய்வாருக்கு ஏற்புடைய கருத்தே.

      எனவே ‘திருக்குறளை அடியொற்றி அதன்கண் குறிப்பாகக் கூறப்பெற்றுள்ள மெய்ந்நூற்பொருளின் விளக்கமாக அருளிச்செய்யப் பெற்ற சைவசித்தாந்த நூலே ‘திருவருட்பயன்’ என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் க. வேள்ளை வாரணனார் கூறுவது மிகவும் பொருத்தமான விளக்கமாகும்.

      திருக்குறள் நூலுக்குப் பேருரை வகுத்த பரிமேலழகர் “வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்” என்று விளக்கந்தந்துள்ளது சிந்தனைக்குரியது. அக்கருத்தினை நிறைவேற்று வார்போல உமாபதி சிவாசாரியார் இலக்கணவகையால் திருவருட்பயனைச் செய்துள்ளார் எனக் கோடல் ஒரு வகையில் அமைதி கொள்ளும் கருத்தாகும்.

      நூறு குறள் வெண்பாக்குளுள் முதலாவதாக விளங்குவது,

                “அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும்

       நிகரிலிறை நிற்கும் நிறைந்து

 

என்று குறள்வெண்பா. இது கடவுள் வாழ்த்துப் போல விளங்குகிறது. இதன் பொருள்விளக்கமே இந்நூலின் ஏனைய தொண்ணூற்றொன்பது குறட்பாக்களும் என்று ஒருவாறு விளக்கம் தரலாம். ‘அகர முதல’ எனத் திருவள்ளுவர் தம்நூலைத் தொடங்கியிருப்பதும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

      “எழுத்துக்களுக்கெல்லாம் ‘’ கரம் ஆகிய எழுத்து உயிராய் நின்றாற்போலத் தனக்கு ஓர் உவமன் இல்லாத் தலைவனாகிய கடவுள், ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவாகி, சடப்பொருளிலும் சித்துப்பொருளிலும் ஒழிவற நிரம்பி ஞானவுருவாய் அழிவின்றி நிலைபெறுவான்” என்பது இக்குறளின் திரண்ட பொருளாகும்.

      இக்குறளின் ஒவ்வொரு சொல்லும் நிரம்பப் பொருள் ‘செறிந்ததாய் அமைந்துள்ளமையை இனிக் காண்போம். ‘அ’கர எழுத்து உந்தியினின்று எழும். உதானன் என்ற காற்றெழுப்ப எழுந்து, கண்டத்தைப்பொருந்தி முயற்சி விகாரமின்றி இயல்பாக இயங்கும் ஒலியாம் என்று கூறுவர். இவ்வொலியினாற்றன் ஏனைய ஒலிவடிவமாகிய எழுத்துக்கள் யாவும் இயங்கும். இவ்வொலி இல்லையாயின் மற்ற எழுத்துக்கள் இயங்கமாட்டா. வாயைத் திறந்த அளவிலேயே ‘’கரம் தோன்றும் என்பது உண்மையாயினும் அதற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. வாயைத் திறவாமல் மெளனமாக இருக்கும் போதும் நாதமாகிய ஒலியாக இருப்பதும் ‘அ’கரமே. அதனால் எல்லா எழுத்துக்களிலும் ‘அ’கரம் இரண்டறக் கலந்திருக்கிறது. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் என்ற தொல்காப்பிய எழுத்ததிகார மொழி மரபு 13-ம் சூத்திரத்திற்கு உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதிய விளக்கம் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்குரியது.

      “இங்ஙனம் மெய்க்கண் ‘அ’கரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் ‘அ’கரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க, இறைவன் இயங்கு திணைக் கண்ணும், நிலைத்திணைக்கண்ணும், பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல, ‘அ’கரமும் உயிர்க்கண்ணும், தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. அகரமுதல என்னும் குறளான். ‘’கரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அது போல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என திருவள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் ‘’கரமாகின்றேன் யானே’ எனக் கூறிய வாற்றானும் பிறநூல்களானும் உணர்க.”

      இவ்வளவு சிறப்பான காரணங்களால் இறைவனுக்கு ‘அ’கரம் உவமையாயிற்று. உவமேயப் பொருளினும் உவமானப்பொருள் சிறந்திருத்தல் மரபு. ஆயினும் இறைவனைக் காட்டிலும் சிறந்த உவமானம் இல்லை. ஆகையால் இவ்வுவமானம் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. எனினும் ‘அ’கர ஒலி சடப்பொருளாகும். சடப்பொருளுக்கு உயிர் இன்மையின் அறிவு கிடையாது. இறைவன் ‘அ’கரத்தைவிட உயர்ந்தவன் என்று வேறுபாடு தோன்ற அறிவாகி என்ற சொல்லைப் பயன் படுத்தி இறைவனது தூய அறிவினைக் காட்டினார். திருவள்ளுவனாரும் தமது நூலில் வாலறிவன் என்று கூறியுள்ளது ஒப்பு நோக்கத் தக்கது. எங்கும் நிறைந்தவன் என்பதையும் அவனுக்கு எதுவும் உவமையாகாது என்ற பொருளும் தோன்ற எங்கும் நிகரில் இறை என்று சிறப்பித்துள்ளார் உமாபதி சிவனார்.உவமன் இல்லி என்பது தேவாரம்.

      இறைவன் கட்டியறிப்படாதவன். மனம் வாக்குகளால் சிந்திப்பதற்கும் ஓதுதற்கும் அரியவன். அவன் அசைவற நிற்பவன் என்ற கருத்துத் தோன்ற,நிறைந்து என்ற சொல்லை ஆண்டுள்ளார். என்றும் அழியாது நிலைத்து நிற்பவன் என்ற கருத்தினை நிற்கும் என்ற பதம் விளக்கியுள்ளது மகிழ்ந்து இன்புறத் தக்கது.

      இவ்வாறு திருக்குறளைப்போலப் பதசாரம் நிறைந்து திருவருட்பயனை ஓதி உணர இவ்வொரு குறள் வெண்பாவே சிறந்த சான்றாகும். இதனை அருளிய சந்தானாசாரியருள் ஒருவராகத் திகழும் உமாபதி சிவாசாரியார் திருவடிகளை வணங்கி வாழ்த்துவோமாக.

- சிவம் -


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

 

Related Content

சைவ சித்தாந்தம்

சைவ சமயம் - கட்டுரை