logo

|

Home >

to-know >

history-of-thirumurai-composers-drama-thirumurai-kanda-puranam-drama

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம் - நாடகம் (Thirumurai Kanda Puranam - Drama)

aum namaH shivAya

Drama

 

 

 

காட்சி - 1.

இடம் : அரசவை.

பின்குரல் : [இராசராச சோழன் தம் அரசவையில் அமர்ந்து, அமைச்சர்களுடன் தம் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை சிறப்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்.]

திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான சோழர் குல பேரரசர்! மாமன்னர், இராசராசர்! வாழ்க!! வாழ்க!!!

மன்னர் : அமைச்சரே! நம் பொன்னி வளத்திருநாட்டில் நம் குடிமக்கள் அனைவரும் நீதி வழுவாது அறத்தின் வழியே நிற்பது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.

அமைச்சர் : வளவர் பெருமானே! மனுநீதி வழுவாது திருநீற்று நெறிகாத்து அரசாட்சி புரியும் தங்களுடைய ஆட்சியின்கீழ் வாழ நம் சோழவளநாட்டு மக்களாகிய நாங்கள் பெரும் தவம் செய்தோம். தங்கள் வாள் மற்றும் தோள் வலிமையினாலும், மக்கள் பகைவர் அச்சுறுத்தலின்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மழையும் தவறாது காலங்களில் பொழிவதால், பூமி செழிப்பாக உள்ளது.

மன்னர் : மிக்க மகிழ்ச்சி! எல்லாம் பிறையை சூடிய திருவாரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் திருவருட் கருணை! நம் நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் விதி முறைப்படி ஆறுகால பூசை சிறப்பாக நடைபெறுகின்றதா?!

அமைச்சர் : ஆம் அரசே, தங்கள் அருள் ஆணையின்படி, நம் சோழவள நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் விதிமுறைப்படி ஆறுகால பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சிவாலயங்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரிபவர்களுக்கும் மிகுந்த நிபந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மதியணிந்தார் இன்னருளால் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

மன்னர் : மிக்க நன்று. அரனாருக்குச் செய்யப்படும் பூசைகள் மற்றும் வேள்விகளின் பலனால்தான், நம் சோழநாடு எந்த குறையும் இன்றி செழிப்பாக உள்ளது. அமைச்சரே! திருவாரூர் பூங்கோயில் சென்று நம் இறைவனை வழிபட என் மனம் ஏங்குகின்றது. நாம் இப்பொழுதே திருக்கோயில் சென்று இறைவனை வழிபடுவோம்.

அமைச்சர் : உத்தரவு அரசே!

சிவபாத சேகரர் பேரரசர், இராசராச சோழர்! வாழ்க!! வாழ்க!!!

--------------------------

காட்சி - 2.

இடம் : திருவாரூர் பூங்கோயில்.

பின்குரல் : [இராசராச சோழர் திருவாரூர் பூங்கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கின்றார். அப்பொழுது மூவர் பெருமக்கள் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை சுவாமித் திருமுன்பு திருக்கோயில் ஓதுவார் பாடிக்கொண்டிருக்கின்றார். அதைக் கேட்டு சோழ மன்னர் நெஞ்சம் உருகுகின்றார்.]

அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ

மன்னர் : அடியவரே! இறந்தாரையும் எழுப்பும் தகைமையும், ஊழ்வினையை மாற்றும் பெற்றிமையும், வீடுபேற்றையும் அளிக்கும் திறனுடைய மூவர் பெருமக்கள் அருளிச் செய்த இத்தேவாரத் திருப்பாடல்கள் எங்குள்ளன?!

ஓதுவார் : வென்றி மனு வேந்தனுடைய குலத்தோன்றலே! நீள்நிலம் காத்து, அரசளித்து, மன்றில் நடம் புரிவார் தம் வழித்தொண்டின் வழி நிற்கும் சோழப் பேரரசே! மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் இருக்குமிடம் யாமறியோம். எம்முடைய முன்னோர்கள் வழிவழியே கற்றுத் தந்த தேவாரப் பாடல்களையே நாங்கள் பயின்று வருகின்றோம்.

மன்னர் : வீடு பேற்றினை அருளிச் செய்யும் மூவர் முதலிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பாடல்களை கண்டுபிடித்து இவ்வுலக மக்களுக்கு அளிப்பது நம்முடைய கடமையாகும். அமைச்சரே! இப்பொழுதே பறை அறிவியுங்கள்; மூவர் பெருமக்கள் அருளிச் செய்த திருப்பாடல்கள் இருக்குமிடம் பற்றி யாரேனும் தகவல் தந்தால் அவர்களுக்கு மிகுந்த சன்மானம் அளிக்கப்படும்.

பறையறிவித்தல் : (பறையறையப்படுகின்றது - இதனால் நாட்டு மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் மூவர் பெருமக்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முழுமையாகப் பெற நம் மாமன்னர் இராசராசர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இத்திருப்பாடல்களின் முழுமையான தொகுப்பு பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம் வழங்கப்படும். இது அரசு உத்தரவு!)

----------------------------

காட்சி - 3.

இடம் : அரசவை.

பின்குரல் : [மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் பற்றி பறை அறிவித்த நிலையில், வெகு நாட்கள் ஆகியும் இதுநாள் வரை எந்த செய்தியும் வராமைக் கண்டு, மன்னனும், அமைச்சர்களும் கவலையுற்று, அது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.]

அமைச்சர் - 1 : அரசே, நாம் மூவர் தேவாரத் திருப்பாடல்கள் குறித்து பறையறிவித்து பல நாட்கள் சென்றுவிட்டன; இதுவரை ஒருவரிடமிருந்தும் தகவல் வரவில்லை.

மன்னர் : சிவ சிவ; அமைச்சரே, நானும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேவாரம் ஓதுவிப்பவர்களிடமும், சிவனடியார்களிடமும், சைவச் சான்றோர்களிடமும் இத்தேவாரங்கள் பற்றி ஏதாவது செய்தி கிடைக்குமா என்று முயற்சி செய்தேன்; ஒருவராலும் நமக்கு பதில் கூற இயலாதது எனக்கு மிகப்பெரும் வருத்தத்தை அளிக்கின்றது. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையனாகிய நம் பெருமான் தான் நமது விண்ணப்பத்திற்கு இரங்கி திருவருள் செய்ய வேண்டும்.

அமைச்சர் - 2: பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்தபிரான் பதம் பணிந்து செங்கோலோட்சி வரும் சோழப் பேரரசே! தங்களுக்கு ஓர் நற்செய்தி கொண்டு வந்துள்ளேன்.

மன்னர் : அமைச்சரே! என்ன நற்செய்தி அது; கூறுங்கள்.

அமைச்சர் - 2: திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி என்னும் ஞானப்பிள்ளை, பொள்ளாப்பிள்ளையாரால் ஆட்கொள்ளப்பட்டு, பேரதிசயங்களை நிகழ்த்தி வருகின்றார். இப்பிள்ளை அளிக்கும் திருவமுதினை விநாயகப்பெருமான் தானே ஏற்று உட்கொன்கிறாராம். இத்திருவருட் செய்தி தமிழகமெங்கும் பரவியுள்ளது.

மன்னர் : சிவ சிவ; நம் சோழ மண்டலத்தில் இப்படி ஒரு அதிசயமா?! மிகுந்த கவலையில் இருந்த எனக்குப் பெருமகிழ்ச்சி தரும் செய்தியைத் தந்தீர்கள்; அமைச்சரே! மூத்தப்பிள்ளையார் விரும்பும் நிவேதனப் பொருட்களாகிய வாழைக்கனி, தேன், அவல், அப்பம், எள்ளுருண்டை ஆகியவற்றைத் தயார் செய்யுங்கள்; நம் சேனைகள் தயாராகட்டும்; நாம் இப்பொழுதே திருநாரையூர் சென்று பொள்ளாப் பிள்ளையாரின் பேரருளைப் பெற்ற நம்பியாண்டார் நம்பி தாள் பணிவோம்.

அமைச்சர் - 1: உத்தரவு மாமன்னா.

சோழர் குல பேரரசர்! பேரரசர், இராசராச சோழர்! வாழ்க!! வாழ்க!!!

--------------------------

காட்சி - 4.

இடம் : திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் திருக்கோயில்.

பின்குரல் : [நம்பியாண்டார் நம்பிகள் கொடுக்கும் நிவேதனப் பொருட்களை திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் மனமுவந்து தாமே ஏற்றுக் கொள்ளும் செய்தியறிந்த சோழமன்னன், தாமும் பொள்ளாப்பிள்ளையாருக்கு வேண்டிய நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு, நம்பியாண்டார் நம்பியையும், பொள்ளாப் பிள்ளையாரையும் காணும் பொருட்டு, தன் சேனைகளுடன் திருநாரையூர் வருகிறார்.

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

மன்னர் : பொள்ளாப் பிள்ளையாரின் பேரருளைப் பெற்ற நம்பிகள் பெருமானே, தங்கள் திருவடிகளைப் பணிகின்றோம். அடியேன் கொண்டு வந்துள்ள இந்த நிவேதனப் பொருட்களைத் தாங்கள் ஏற்று பொள்ளாப் பிள்ளையாருக்கு நிவேதனம் செய்தருளுமாறு வேண்டுகிறேன். சிவ சிவ.

நம்பியாண்டார் நம்பி : சிவ சிவ; தேவரீர், ஆனைமுகக் கடவுளே, மாமன்னர் மிகுந்த அன்போடு கொண்டு வந்த இந்நிவேதனப் பொருட்களை திருவமுது செய்து அருள வேண்டும்.

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு

(நம்பிகள் உரைக்கு இசைந்து விநாயகப் பெருமான் திருவமுது செய்தருள்கிறார்.)

அனைவரும் : அ/மி. பொள்ளாப் பிள்ளையார் திருவடிகள் போற்றி! போற்றி!!

மன்னர் : நம்பிகள் பெருமானே, தாங்கள் விண்ணப்பிக்க விநாயகப் பெருமானே திருவமுது உட்கொண்ட இப்பேரதிசயத்தை கண்டு பெரும் பேறு பெற்றோம். தங்கள் பெருமை சொல்லொண்ணாதது. திருவருள் முழுவதும் கைவரப்பெற்ற தங்கள் திருவடிக்கு ஓர் விண்ணப்பம்; மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்கள் இந்நிலவுலகில் விளக்கம் பெறுதல் வேண்டும்; அதற்கு தாங்கள் ஆவண செய்து அருள வேண்டும்.

நம்பியாண்டார் நம்பி : மாமன்னா! எம்பெருமான் விநாயகப் பெருமான் திருவடிகளிடத்து இவ்விண்ணப்பத்தைச் செய்து திருவருள் பெருவோம்.

(நம்பியாண்டார் நம்பி தம் கண்களை மூடி விநாயகப் பெருமானைத் தியானிக்கிறார்)

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

நம்பியாண்டார் நம்பி : விநாயகப் பெருமானே, மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்கள் இருக்குமிடத்தை இவ்வுலகம் உய்யும்படி திருவருள் செய்தருள வேண்டும்.

பொள்ளாப்பிள்ளையார் : தில்லையில் பொன்னம்பலத்தின் அருகில் சிற்றம்பலத்திற்கு மேற்கு திசையில் உள்ள அறையில் தேவார ஆசிரியர்கள் மூவரின் அழகிய கையடையாளமிட்ட கதவின் உள்ளே தேவாரங்கள் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன.

நம்பியாண்டார் நம்பி: மாமன்னா, பொள்ளாப் பிள்ளையாரின் திருவருளினால் மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் தில்லையில் பொன்னம்பலத்தின் அருகில் சிற்றம்பலத்திற்கு மேற்கு திசையில் உள்ள ஓர் அறையில் பூட்டப்பட்டுள்ளன என்பதை அறிந்தோம்; நாம் உடனே தில்லை சென்று இத்திருமுறைகளைப் பெற்று இவ்வுலகம் முழுவதும் விளங்கும்படி செய்வோம்.

மன்னர் : நம்பிகள் பெருமானே, பெருவாழ்வு பெற்றோம், என்னுடைய மனக்கவலை எல்லாம் தங்கள் அருளால் நீங்கியது; நாம் இன்றே தில்லை செல்வோம்.

அனைவரும் : அ/மி. பொள்ளாப் பிள்ளையார் மலரடிகள் போற்றி! போற்றி!! நம்பியாண்டார் நம்பி திருவடிகள் போற்றி! போற்றி!!

-----------------------------------

காட்சி - 5.

இடம் : தில்லை.

பின்குரன் : [மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் தில்லைத் திருக்கோயிலின் ஒரு அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும் செய்தியைத் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் துணைக் கொண்டு அறிந்த சோழ மன்னன், அத்தேவாரத் திருப்பதிகங்களை வெளிக்கொணரும் நோக்கில் தில்லை திருக்கோயில் வருகிறார்.]

மன்னர் : அருமறை நான்கினோடு ஆறங்கமும் பயின்று, மன்றில் நடம்புரிவாருக்கு வழிவழி தொண்டு புரியும் அந்தணர் பெருமக்களே! மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் சிற்றம்பலத்திற்கு மேற்கு திசையில் உள்ள ஓர் அறையில் பூட்டப்பட்டுள்ளன என்பதை அறிந்தோம்.பூட்டப்பட்டுள்ள கதவை தாங்கள் திறந்து, இத்திருந்து உலகம் தேவாரத் திருப்பதிகங்களின் பயனை அடைவதற்கு தாங்கள் வழி செய்ய வேண்டும்.

தில்லைவாழ் அந்தணர் : மேன்மை கொள் சைவநீதி உலகெலாம் விளங்கும்படி செங்கோலோட்சி வரும் சோழப் பேரரசே! மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் உள்ள அறை மிகவும் ரகசியமானது. தாங்கள் எவ்வாறு அதனை அறிந்திர்கள்?

மன்னர் : திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்த நாம் அறிந்தோம்.

தில்லைவாழ் அந்தணர் : சிவ! சிவ! வளவர் பெருமானே!அவ்வறை மூவர் பெருமக்களுடைய கைகளினால் இடப்பட்ட இலச்சினையுடன் பூட்டப்பட்டுள்ளது; அம்மூவரும் வந்தால் மட்டுமே இவ்வறையைத் திறக்க இயலும்; இதுவே மரபாகும்.தாங்கள் மன்னித்தருள வேண்டும்.

மன்னர் : என்ன?! மூவர் பெருமக்கள் வந்தால்தான் இவ்வறைத் திறக்க இயலுமா?! சிவ சிவ! தேவாரங்கள் இருக்கும் இடத்தை அறிந்த பின்னும் அதைப் பெறுவதற்கு காலதாமதம் ஆகின்றதே! சிவ சிவ! பெருமானே தாங்கள் தான் இதற்கு திருவருள் செய்ய வேண்டும். அமைச்சரே! தில்லை அம்பலவர்க்கு உற்ற செல்வ விழா எடுத்து அளவில்லா பெருமையை உடைய மூவர் பெருமக்களை ஐம்பொன் சிலையில் எழுந்தருளச் செய்து அணி வீதி உலா கொண்டு இவ்வறையின் முன்னே எழுந்தருளச் செய்து இறைவன் திருவருளைப் பெறுவோம்.

அமைச்சர் : உத்தரவு மன்னா!

-------------------------------------------

காட்சி - 6.

 

இடம் : தில்லை திருக்கோயில்.

பின்குரல் : [“மூவர் பெருமக்களும் இவ்வறையின் முன்பு எழுந்தருளினாலன்றி, இக்கதவம் திறக்கலாகாது” என்று கூறிய தில்லைவாழ் அந்தணர்களின் கூற்றுப்படி, சோழ மன்னன் மூவர் பெருமக்களின் திருப்படிமங்களையும் ஐம்பொன்னால் செய்து, விழா எடுத்து, தில்லைத் திருக்கோயில் - அவ்வறையின் முன்பு எழுந்தருளச் செய்தான்.]

மன்னர் : தில்லைவாழ் அந்தணர் பெருமக்களே, தாங்கள் கூறியபடி மூவர் பெருமக்களும் இவ்வறையின் முன்னே எழுந்தருளியுள்ளனர்; இக்கதவைத் திறப்பித்து உலக மக்கள் தேவாரத் திருப்பதிகங்களைப் பெறும்படி செய்தருள வேண்டும்.

தில்லைவாழ் அந்தணர் : மன்னர் பெருமானே, மேன்மைகொள் திருநீற்று நெறி பாதுகாத்து அரசளிக்கும் தங்கள் பெருமை அளவிட இயலாதது. இவ்வுலக மக்கள் உய்வடைய மூவர் தேவாரங்களைப் பெறுதற்கு தங்கள் விடாமுயற்சிக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.

(கதவு திறக்கப்படுகிறது - அறையின் உள்ளே மூவர் பெருமக்கள் அருளிய ஓலைச் சுவடிகள் கரையான் புற்றினால் மூடப்பட்டு சிதைந்த நிலையில் இருக்கின்றது.)

மன்னர் : சிவ! சிவ! முக்தி பேற்றினை வழங்கும் மூவர் தேவாரச் சுவடிகள் கரையான் புற்றினால் அரிக்கப்பட்டு இருக்கின்றதே! இதைக் காண்பதற்காகவா நாங்கள் இவ்வளவு பாடுபட்டோம் பெருமானே! இவ்விடத்தில் தைலத்தினை ஊற்றி ஓலையைச் சுவடிகளை மிக கவனமாகப் பிரித்தெடுக்க வேண்டும்.

(பணியாளர்கள் தைலத்தினை ஊற்றுகின்றார்கள்)

மன்னர் : பெரும்பாலான ஏடுகள் பழுதடைந்து இருக்கின்றதே, பராபரனே! பெருமானே!!

அசரீரி : கவலை கொள்ளாதே! வேதச் சைவ நெறித் தலைவர் என்னும் மூவர் பெருமக்கள் திருவாய்மொழிகளில், இக்காலத்திற்கு போதுமானவற்றை மட்டும் வைத்துள்ளோம்.

மன்னர் : அமைச்சரே, மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் புரம் எரித்தார் திருவருளினால் மீண்டும் கிடைத்துள்ளன. இப்பதிகங்கள் என்றும் அழியாதபடி செப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிகங்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து குடி மக்களின் இல்லத்திலும் இருக்க வேண்டும். அவை ஓலைகளிலேயே முடங்கிவிடாதபடி நம் சோழ வள நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், தேவையான அளவு ஓதுவார்களை நியமித்து, தேவார பதிகங்களை காலங்களில் பாட செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, இத்தில்லைச் சிற்றம்பலத்தில் சேகரிக்கப்பட்டு, சிற்றம்பலவாணர் திருவருளால் இவை வெளிப்பட்டதால், இனி தேவாரம் பாடுவதற்கு முன்னும் பின்னும் “திருச்சிற்றம்பலம்” என்று சிற்றம்பலத்தை நினைந்தே பாடப்படட்டும்.

அமைச்சர் : உத்தரவு மன்னா!

மன்னர் : நம்பிகள் பெருமானே, தங்கள் அருளினால் தான் இப்பதிகங்கள் இருக்கும் இடத்தை அறிந்தோம். தாங்களே இப்பதிகங்களை தொகுத்து அருளுமாறு வேண்டுகிறேன்

நம்பியாண்டார் நம்பி : சிவ சிவ, இறைவன் திருவருள் அதுவேயானால், அவ்வாறே செய்கிறேன்.

திருமுறைகண்ட சோழர்! மாமன்னர் இராசராச சோழர்! வாழ்க!! வாழ்க!!!

பின்குரல் : நம்பியாண்டார் நம்பிகள் சிவபாத சேகரர் இராசராசர் கூறிய படியே தேவாரத் திருப்பதிகங்களை ஏழு திருமுறைகளாகத் தொகுத்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழிவந்த வள்ளியம்மையார் அத்திருபதிகங்களுக்குப் பண்ணடைவு செய்து அளித்த வண்ணம் பண் முறையில் அவை ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் அவை பன்னிரு திருமுறைகளாக நிறைவு பெற்றன. மாமன்னர் இராசராசர் திருமுறைகளை கண்டு எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவை காலங்காலமாகப் பாதுகாக்கப்படவும், திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் ஓதி உய்யவும், பேருதவி செய்தார். திருமுறை கண்ட சோழமாமன்னர் நம் உயிர்த்துணையாகிய திருமுறைகளை நமக்கு அளித்தவர். சிவபெருமானை நினைந்து அன்போடு இத்திருமுறைகளை ஓதுவதே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறாகும்.

திருச்சிற்றம்பலம்

----------

Related Content