ஆசாரியராவர் யாவர்?
பெத்தான்மாக்களாகிய நாம் இருவினை யொப்பு மலபரிபாகம் பெற்று, தானென்னும் போதம் நீங்கித், தன்சொரூபம் பரமேசுவர னடியார்களி னடியார்களுக்கு அடிமைத்திறம் பூண்டு மகிழ்வதே யென்றறிந்து, பிறவிப்பிணி தீர்ந்து, அஞ்ஞானம் நீங்க ஞானமாகிய விளக்கினைக்கொண்டு அருட்பெருஞ்சோதி எம்மையன் நம்மிருதயமாகிய புண்டரீக வீட்டினுள் ஆநந்தத்தாண்டவம் புரிந்தருளும் முறைமையைக் காட்டி, அவ்வாறு ஆடும் நம்பேரருளாளன் ஸ்ரீ குஞ்சிதபாதத்தின் கண்ணே நம்மான்மாக்க ளொடுங்கிச் சதாசிவானுபவத்தை அனுபவிக்கச் செய்யும் பரம கருணாசாலியராம்.
அவரெப்படிப்பட்டவர்?
ஆன்மகோடிகளிலும் ஈசுவரனிலு மதிகனென்றுகொள்ளல் வேண்டும். ஆசாரியன் ஈசுவர ரூபியானாலும் அயப்பிண்டத்துக்கு அக்கினி சம்பந்தத்தாலே அக்கினியைவிட உஷ்ணாதிக்யம் அந்த அயப்பிண்டத்தில் விளங்குவதுபோலும், கதிரவன் வெப்பத்திலும் அவன் கிரணங்கள் காய்ந்த மணலில் வெப்பம் அதிகமா யிருத்தல்போலும் சிவபெருமானிலும் சிவபெருமானா லதிட்டிக்கப்பட்ட ஆசாரியன் அதிகன். இதனால் நம்போலிகளுக்குக் காரிய சித்தியும் அதிகம். கேவலம் பகவத்சொரூபனாம்போது சுவாதந்தரியப் பிரகாசனாகின்றான். அதிட்டிக்குமளவிலே அடியார்கட்கெளிவரும் சுலபனாகின்றான். ஆசாரிய விஷயத்தில் சர்வசித்திகளும் திண்ணமாகையால், ஆசாரியன் பகவத்சொரூபத்திலும் அதிகனென்பது இரகசியபோதகமாயுள்ளது.
ஆசாரியன் ஈசுவரரூபி யாவ தெப்படி?
ஆன்மகோடிகளனைத்தும் அறிவித்தலன்றி அறியாவுளங்கள் என்றமையினாலே ஏனையோர்க்கறிவிக்கும் சக்தியில்லாமை தானே போதரும். அவ்வாறு அறிவிக்கும் சித்து சிற்றம்பலவன் சிற்சபேசன் என்னும் சப்தவாச்சியனாகிய அம்பலவாணர் ஒருவரேயாதலால் அம்மூர்த்தியே தனது காளகண்டம் திரிநேத்திரம் முதலியவற்றை மறைத்து மானைக்காட்டி மானைப்பிடிக்கும் வழக்கம்போல் மானிடச் சட்டை சாத்தி அறிவிக்கப்படும் சித்தாகிய ஆன்மா தன்னையும் தலைவனையும் உணருமாறு அருட்கோலங்கொண்டு எழுந்தருளிய அவதரம் குருமூர்த்தமாதலால் அவர் ஈசுவர ரூபியேயாம்.
ஆசாரியனுக் கிருக்கவேண்டிய முக்கிய இலக்கணங்களென்ன?
சிவபெருமானுடைய அதிசயப் பிரபாவங்களை ஆன்ம கோடிகளுக்கு அற்புதவாயிலாய் நடததிக்காட்டலும், தான் வேறொரு ஆசாரியனை அபேக்ஷியாதிருத்தலுமாம். இன்றேல் முக்காலத்தும் ஆசாரியனாகான்.
அவ்வாசிரியன் எவ்வாறு ஆன்மகோடிகளை இரக்ஷிக்கின்றான்?
சமதமாதி ஆன்மகுணங்க ளுண்டான பின்னும், தானுடைமை அவனுடையவன், உடைமை உடையவளிட்டவழக்காயிருக்கும் என்ற சொரூபஞானமுண்டாய்ச் சொத்தினுடைய லாப நஷ்டம் சொத்துக்காரனுக்கே யென்னு மகாவிசுவாச முண்டானபின்னும் இரக்ஷிக்கிறவன் ஈசுவரன். இவ்விதமான சேதன கிருத்தியத்தைப் பாராது தன்னுடைய நிர்ஹேதுகமான அபிமானத்தினாலேயே மருந்து அருந்தாத சிசுவுக்குச் சங்கிலிட்டு வார்க்கும் தாய்போல இரக்ஷிப்பவன் ஆசாரியன்.
ஆசாரியன் ஆன்மகோடிகளின் அஞ்ஞானத்தை எவ்வாறு அகல்விப்பான்?
ஆசாரியன் உபகாரகாசரியனாம் போது தீக்ஷாக்கிரமத்தினால் தத்துவ நியதிசெய்து ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை யுபதேசித்து, பதி, பசு, பாச, பதார்த்த த்ரயஞானத்தையும் ஆன்மசொரூபம், பிரமசொரூபம், பிரமத்தையடையும் உபாயத்தின் சொரூபம், பிரமத்தை யடையவொட்டாதபடிச் செய்யும் திரோதையின் சொரூபம், ஆன்மாக்களடையும் புருஷார்த்தத்தின் சொரூபம் ஆகிய அர்த்த பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி ஈசுவரனே உபாய உபேயமென்று காட்டி யகல்விப்பன். அவன் உத்தாரகாசாரியனாம் போது தன்னுடைய விசேஷாபிமானத்தாலே அவனுக்குச் சொரூபயாதாத்மய ஞானத்தை விளங்கச் செய்து தானேயுபாய உபேயமாகின்றான்.
தீக்ஷையாவதென்ன?
பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் என்பது பொருள்.
தீக்ஷை யெத்தனை வகைப்படும்?
சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷை, யோகதீக்ஷையென அறுவகையாம்.
மேற்கூறிய அறுவகை தீக்ஷைகளையும் விளக்குக?
(1) அத்துவா மார்க்கம் குறியாது குறித்துச் சுருக்கிப் பாசம் கழலப் பார்த்தல் சக்ஷுதீக்ஷையாம்.
இத்தீக்ஷைகளிற் பேதமுண்டோ?
நிர்ப்பீஜம், சபீஜம் என இருவகைத்தாம்.
இவை முறையே எவ்வெவருக்கு அருகமாம்?
பாலர், சத்தினிபாத லக்ஷணம் காண்பிவிக்கும் சாமர்த்தியமுடையராய ஆசாரமனுஷ்டிக்கும் சாமர்த்தியமிலராய் நிரம்பவோதி உணராதவர்களாய், பதினாறு வயதுட்பட்டவர்களாய் அனுஷ்டானத்தில் அசக்தராய் உள்ளவர்கள். எழுபது வயதுக்குமேற்பட்டார், சத்தினிபாதத்து மகளிர்கள், யோக வாஞ்சையுள்ளவர்கள், வியாதியாளர்கள், இவர்களுக்குச் செய்யுந்தீக்ஷை நிர்ப்பீஜமாம். ஓதியுணர்ந்து ஒழுக்கம் குறைவுபடாதிருக்கும் உத்தமர்களுக்குச் செய்வது சபீசதீக்ஷையாம்.
தீக்ஷையில் பேதமுண்டோ?
சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிர்வாணதீக்ஷை எனமூன்று வகை. அவைகளில் சமயதீக்ஷை எவ்வகைப்பட்டவர்களுக்கும் செய்யப்படுவது. மற்ற இரண்டு வகை தீக்ஷையும் சீஷனுடைய பக்குவமறிந்து செய்யத்தக்கது.
முதல் தீக்ஷைக்குக் சமயதீக்ஷை என்கிற பெயர் எதனா லுண்டாயது?
இந்த தீக்ஷை செய்துகொண்டாலே சைவ சமயத்துக்கு உரியவனாகிறான். அதனால் சமயதீக்ஷை என்று பெயர். இந்த சமயதீக்ஷையினுஞ் சிறப்புள்ள தாகையால் விசேஷதீக்ஷை யென்றும், மோக்ஷந் தரத்தக்கதாகையால் நிர்வாண தீக்ஷை யென்றும் மற்ற இரண்டு தீக்ஷைக்கும் பெயருண்டாயது. (நிருவாணமென்பது மோக்ஷத்துக்கொருபெயர்.)
விபூதி ருத்திராக்ஷம் தரித்துக் கொள்ளவும் சிவதரிசனம் சிவார்ச்சனை செய்யவும் விவேகமில்லாத மிருக முதலான செந்துக்களுக்குச் சிவபுண்ணிய மெவ்வாறு சித்திக்கும்?
பரமேசுவரன் அநாதி கேவலத்திற் கிடந்த ஆன்மாக்களை அநாதி சிருஷ்டிசெய்கிற காலத்திலே தான் தலமாகவும் தீர்த்தமாகவும் மூர்த்தியாவும் திருமேனி கொண்டெழுந்தருளிச் சிவஸ்தலங்களிலே புழு முதலானவை சனித்தாலும் நசித்தாலும் சிவபுண்ணியம் உண்டாகவும் தீர்த்தத்திலே மீன் முதலானவை சனித்தாலும் வசித்தாலும் நசித்தாலும், நாற்கால் மிருகங்கள் மனிதர் முதலானவர்கள் பக்ஷிகள் முதலானவைகள் தீர்த்தத்தைக் குடித்தாலும் முழுகினாலும் திவலைகள் தெறிக்கப்பட்டாலும் சிவபுண்ணிய முண்டாகவும் அருளினார். மறு பிறவியில் சிவலிங்கப் பெருமானுக்குச் செய்யும் அபிஷேகம் அருச்சனை நிவேதனம் முதலானவைகளுக்குரிய விருக்ஷ சாதிகளாகவும் நெல் முதலிய பயிர்களாகவும் பசு முதலாகிய மிருக சாதிகளாகவும் சனிப்பித்துச் சிவபுண்ணிய முண்டாக்குவர்.
பசு முதலான சில மிருகங்கள் சிவலிங்கப் பெருமானுக்குச் செய்யும் அபிஷேக முதலானவைகளுக்கு எவ்வாறு உதவுகின்றன?
பசு தன்னிடத்திலுண்டாகும் பஞ்சகவ்வியம் கோரோசனை யிவைகளாலுதவுகின்றது. பச்கவ்வியமாவது, பால், நெய், தயிர், கோமயம், கோசலம் என்பவைகளாம். இவ்வாறு அபிஷேகத்துக் குதவுதலமன்றிப் பால், தயிர், நெய், நிவேதனத்துக்கும் உதவுகின்றது.
இன்னும் எதற்கு உதவுகின்றது?
பசுவும் அதனினமாகிய எருதும் பேரி மத்தள முதலான தோற்கருவி மூலமாகவும் யாழ் முதலான நரம்புக்கருவி மூலமாகவும் உதவுகின்றது. இன்னும் கோரோசனம், கொம்பு அபிஷேகமான சிருங்கி முதலியன தந்துதவுகின்றது.
பஞ்சகவ்வியம் என்பது யாது?
பஞ்சகவ்வியம் என்பது பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர் ஆகிய ஐந்துமாம். பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகிய இரண்டையும் நீக்கிச் சிலர் வெண்ணெய் திரட்டுப் பால் என்பது ஆகமங்கட்கும் உலக வழக்குக்கும் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள திருக்கோயில் வழக்குக்கும் முரணாகும். உதாரணமாக தெஇக.8-66 என்ற திருவண்ணாமலைக் கல்வெட்டில் "திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்சகவ்வியம் ஆடியருள நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்னாமலை என்னும் நாழியால் கோமூத்ரம் உழக்கும் கோமயம் ஆழாக்கும் பால் நாழி உழக்கும் தயிர் நாழி உரியும் நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும்..." என்றிருத்தல் காண்க. இதில் கோமூத்ரம் கோமயம் அளவுகளையும் நோக்குக.
(கருப்பக் கிரகத்தில் சூரிய வெப்பமும் காற்றோட்டமும் இல்லாத நிலையில் கிருமிகள் விளைநிலமாதலைத் தடுத்தற்குக் கிருமிக் கொல்லிகளாகிய (Germicides) கோமூத்ரமும் கோமயமும் நிறைய உபயோகிக்கப் படுதல் அவசியம்.)
பஞ்சகவ்வியம் (ஆன் ஐந்து) சிவ வழிபாட்டிற் குகந்தது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?
உண்டு. "ஆன் அஞ்சாடும் முடியான்" - 2.6.5 "ஆனிலங் கிளரைந்து மாடுவர்" - 2.91.2 "ஆனில் நல்ஐந்துகந்தாடுவர்" - 3.92.5 "ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்" - 4.11.2 "அஞ்சுகொலாம் அவர் ஆடினதாமே" - 4.18.5 "ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை" - 7.40.7 "பாலொடான் அஞ்சும் ஆடவல்லானை" - 7.68.2 திருவண்ணாமலை திருக்கோயிலில் அதிகாலை பஞ்சகவ்விய அபிஷேகக் கட்டளை உள்ளது; மேலும் இதுகுறித்து கல்வெட்டும் உள்ளது. இவ்வாறு நிறைய கூறலாம்.
மற்ற எந்த மிருகம் இவ்வாறு உதவுகின்றது?
புனுகுபூனை கஸ்தூரிமிருகம் இவைகளும் உதவுகின்றன. மயில் விசிறிரூபமா யுதவுகின்றது.
விருக்ஷசாதிகளெவ்வாறு உதவுகின்றன?
சந்தனம் அபிஷேக அலங்காரத்திற்கும், வாழை, பலா, மா, தெங்கு முதலிய சில விருக்ஷங்கள் அபிஷேகத்துக்கும் நிவேதனத்துக்கும் உரிய கனிவர்க்க மூலமாகவும் எலுமிச்சை, நாரத்தை முதலாகிய மரங்கள் அபிஷேகத்துக்கும் நிவேதனத்துக்கும் கனிமூலமாகவுமுதவுகின்றன. இதவுமின்றி திருமஞ்சனத்திரவிய மூலமாக உதவுகின்றன. வில்வம் முதலான விருக்ஷங்கள் செடிகள் கொடிகள் சிவார்ச்சனைக்குரிய திருப்பள்ளித்தாம மூலமாக உதவுகின்றன. (திருப்பள்ளித்தாமமாவது பத்திர புஷ்பம். இந்தப் புஷ்பங்கள் கோட்டுப்பூ, சொடிப்பூ, நீர்ப்பூ, புகர்ப்பூ என நாலுவகையாயிருக்கின்றன.)
இதற்கு உதாரணமாகச் சரித்திரங்களுண்டோ?
பல விசேஷத்தினால் கரிக்குரவி நாரையென்னும் பக்ஷிகளும் பன்றியும் மோக்ஷமடைந்தன. இதுவுமின்றி யானை, நாகம், சிலந்தி, வானரம், தவளை, அணில், எறும்பு முதலியவைகள் மோக்ஷமடைந்தன. திருஞானசம்பந்த சுவாமிகள் ஆண்பனை பெண்பனையாகும்படிப் பதிக மருளிச்செய்த போது அந்தப்பனைக்கு மோக்ஷங்கிடைத்தது. சந்தானாசாரியர்களிலொருவராகிய உமாபதிசிவாசாரியார் சிதம்பரத்தில் ஒரு முள்ளிச்செடிக்குத் தீக்ஷைசெய்ய அச்செடி அப்போதே தீய்ந்து மோக்ஷமடைந்தது.
வீடுபேறாகிய முத்தியைப் பெறுவதற்கு நேர்வழி யாது?
(1) ஞானத்தை உயிர்க்கு ஏற்படுத்தும் பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் முதலில் தான் கற்க வேண்டும்; (2) பின்பு பிறர்க்கு கற்பிக்க வேண்டும்; (3) அவற்றில் உள்ள சிறந்த பொருள் நுட்பங்களை நல்லாசிரியரிடம்தான் கேட்க வேண்டும்; (4) பின்பு பிறர்க்கு எளிமையாக எடுத்துரைக்க வேண்டும்; (5) அத்தகு அரிய பெரிய பொருள்களைப்பற்றிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். இந்த ஐந்து வழிகளும் இறைவன் திருவடியாகிய முத்திப்பேற்றினை அடைவதற்கு உரிய மேலான நேர்வழிகளாகும்.
இதற்குப் பிரமாணம் வருமாறு :-
“ஞானநூல் தனைஓதல்; ஓதுவித்தல்; நற்பொருளைக் கேட்பித்தல்; தான் கேட்டல், நன்றாய் ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானபூசை" - சித்தியார் (275)
இத்தகு ஞானம் உயிர்க்கு எப்போது கிட்டும்?
முதலில், ஞானத்தைப் பெறவேண்டும் என்னும் வேட்கையைப் பெருக்கும் (வேணவா) உயிர்க்கு ஏற்பட வேண்டும். அந்த வேட்கை பெருகப் பெருக, உயிர்கள் பல சிவப்பணிகளில் ஈடுபடும். அத்தகைய ஈடுபாடு, உயிர்க்கு மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை நிகழ்த்தும். அப்போது உயிர்க்கு ஞானம் கிட்டும்.
மலபரிபாகம் என்பது யாது?
ஆணவமலத்தின் ஆற்றல், ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மறைக்க இயலாமல், நிற்கும் நிலையே, “மலபரிபாகம்" எனப்படும். (மலம் - ஆணவமலம், பரி - உபசர்க்கம்; பாகம் - திரிவு; பக்குவம்) அ•தாவது ஆணவமலத்தின் காரியங்கள் ஆகிய மோகம், மதம், இராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம், என்னும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். மலபரிபாகத்தின் பயன் இருவினை ஒப்பு.
இருவினை ஒப்பு என்பது யாது?
ஒருவன் தான் செய்த நல்வினைப் பயன் ஆகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப் பயன் ஆகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாமல் இரண்டு பயன்களையும் சமமாகக் கருதும் நிலையை எய்துவதே, ‘இருவினை ஒப்பு' எனப்படும். இருவினை ஒப்பின் பயனாகச் சத்திநிபாதம் நிகழும்.
சத்திநிபாதம் என்பது யாது?
சத்தி - இறையருள்; நிபாதம் - வீழ்ச்சி உயிரின் அறிவு இச்சை செயல்களைத் திரோதானமாய் நின்று, மறைப்பைச் செய்து வந்த இறைவனது அருளாற்றல், மலபரிபாகமும் இருவினை ஒப்பும் எய்தப்பெற்ற உயிரின் மீது பதிதல், “சத்திநிபாதம்" எனப்படும். அதன் பயன், சிவபுண்ணியம் ஆகிய தவம் ஆகும்.
புண்ணியம் எத்தனை வகைப்படும்?
புண்ணியம், பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும்.
இருவகைப் புண்ணியங்களின் இயல்பு யாது?
பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.
பசு புண்ணியம் பயன் அழிந்துவிடுவதற்கு ஓர் எடுத்துக் காட்டு வருமாறு :-
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில்,
“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம்."என்று மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார்.
உயிர்களுக்கு செய்யும் நல்வினைகள், இறைவனை நினைந்து, அவனருளால் செய்யப்படுவதாகக் கருதிச் செய்வோமானால், அவை பதி புண்ணியங்களாகும்.
இத்தகு சிவப்புண்ணியங்களில் ஈடுபடுதற்கு வழியாது?
இத்தகு சிவ புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு நற்குருவை நாட வேண்டுவது முதற்கண் செய்யவேண்டியது ஆகும். அத்தகு குருவருளில் நின்று ஒழுகினால், தவ முயற்சியாகிய சிவ புண்ணியத்தில் ஈடுபாடு ஏற்படும்.
நற்குரு என்பவர் யார்?
சரியை, கிரியை, யோகம் ஆகிய நெறிமுறைகளை உணர்த்துபவர் ‘கிரியாகுரு' எனப்படுவார்; ஞானத்தை உணர்த்துபவர் ‘ஞானகுரு' எனப்படுவார். ஞானத்தைச் சிவபெருமான் ஒருவனே உணர்த்துவான். எனவே, அவனே “ஞானகுரு" ஆவான்.
கிரியா குரு, சரியை முதலியவற்றை எவ்வாறு உணர்த்துவார்?
சமய தீக்கை, விசேட தீக்கை முதலியவற்றைத் தவமுயற்சியில் ஈடுபடும் மாணவர்க்கு அளித்து, சரியை முதலியவற்றை உணர்த்துவார்.
தீக்கை என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
தீட்சை (தீக்ஷை) என்ற வடசொல் திரிந்து தீக்கை ஆயிற்று. தீ - கெடுத்தல்; க்ஷை - கொடுத்தல். அ•தாவது பாசத்தைக் கெடுத்து மோட்சத்தைத் தரும்பொருட்டு குருவிடமிருந்து பெறும் மந்திர உபதேசம் பொதுவாகத் ‘தீக்கை' எனப்படும்.
தீக்கையில் பல வகைகள் உள்ளன.அவற்றுள் மூன்று முக்கியமானவை. அவை வருமாறு :-
1. சமயத்தீக்கை:- ‘உபநயனம்' எனப்படும் பூணூல் போடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல ‘சைவசமயி' என்பவருக்குச் சமயத்தீக்கை அவசியமாகும். பூணூல் அணியாதவர், வேதியர் ஆகார்; அவ்வாறே “சமயதீக்கைபெறாதவர் சைவசமய ஆகார்." இது சமய நுழைவுக்கு அனுமதி பெறுவதாகும்.(It is just like an entrance to the saivism)
2. விசேட தீக்கை:- கிரியாபாத யோகபாத முறைகளில் செய்யப்படுவது. இந்தத் தீக்கை பெற்றவரே சிவலிங்க மூர்த்தியையோ, மகேசுவர மூர்த்தியையோ எழுந்தருளச் செய்து குருவிடம் பெற்றுச் ‘சிவபூசை' செய்வதற்குரிய தகுதி உடையவர் ஆவார். இந்த தீக்கையினைப் பெற்ற பின்னர் செய்யப்படும் புறப்பூசை மற்றும் அகப்பூசைகளில், சிவபெருமான் முனைந்து நின்று அருளை வழங்குகிறான் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
3. நிருவாண தீக்கை:- பாசபந்தம் அனைத்தையும நீக்கிச் சிவபெருமான் திருவடியை அடையும்படி செய்யும் தீக்கை நிருவாண தீக்கையாகும். இந்தத் தீக்கையில் குருநாதர், சீடனது மலத்தை நீக்கும் பொருட்டு, ஆறு அத்துவாக்களிலும் சஞ்சிதமாயிருக்கும் கன்மங்களை எல்லாம் போக்குவார். கன்மம் நீங்கவே மாயாகாரியங்களும் ஆணவத்தடையும் அறவே நீங்கும்; அப்போது திரோதான சத்தி அருட்சத்தியாக மாறி, ஞானத்தை வழங்கும். இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை சிவஞானபாடியத்தில் காணலாம்.
தீக்கையின்போது, உச்சரிக்கும் பொருட்டு மந்திரங்கள் உள்ளனவா?
சமயத்தீக்கையின்போது, அணிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு அங்கத்திலும் உரிய மந்திரம் சொல்லி, திருநீற்றைத் தண்ணீரில் குழைத்து இட்டுக்கொள்ள வேண்டும். பின்பு உருத்திராட்சிரமாலையைக் கொண்டு, குருநாதர் உபதேசித்தபடி அஞ்செழுத்து மந்திரத்தை மனத்தில் நூற்றெட்டுமுறை எண்ணவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தீக்கைக்கும் ஒவ்வொரு வகை மந்திரம் உண்டு. தீக்கைகளின்போது, கைவிரல்களால் செய்யப்படும் பல்வேறு முத்திரைகளும் உண்டு. இவற்றை எல்லாம் சற்று முயன்று கற்க வேண்டும்.
இதனைப் படிக்கும்போதே தலைசுற்றுகிறதே! சிவபுண்ணியத்தில் ஈடுபடுவதற்கு இவ்வளவு சிரமம் மேற்கொள்ள வேண்டுவது அவசியமா?
சிவபுண்ணியம் என்பது சிவனை நினைந்து செய்யும் நற்செயல்கள் என்று முன்பே கூறப்பட்டது நினைவிருக்கலாம். தீக்கை முறைகள் அனைத்தும் நமது உள்ளத்தைப் பக்குவப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சடங்குகளே ஆகும். பலர் சடங்கு மாத்திரையாக இவற்றை எல்லாம் செய்வார்கள். ஆனால் சிவனை நினைந்து நற்கருமம் செய்தல் என்னும் முதன்மையான விதியை மட்டும் கடைப்பிக்காமல் ஒழுகுவர். தாம் கற்ற சாத்திர அறிவைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அறிவே சிவனருனால் நமக்குக் கிடைத்தது என்ற உணர்வு மறந்து திரிவர்.
எனவே சடங்குகளை நினைந்து திகைப்படைய வேண்டா. சமய தீக்கை மட்டுமோ அல்லது விசேட தீக்கையுமோ பெற்று அளவோடு மந்திரங்களையும் முத்திரைகயும் கற்றுக்கொண்டு, இறையுணர்வோடு எப்போதும் ஒழுகி வந்தால் போதும். அதுவே தவம் ஆகும். தன்முனைப்பு சிறிது சிறிதாக அடங்கவேண்டும் ‘எல்லாம் அவன் செயல்; சிவன் செயல்' என்ற உணர்வு தலைப்பட வேண்டும். அஞ்செழுத்தை சதா எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். அதுவே போதும்.
சமயத்தீக்கை அஞ்செழுத்தை விதிப்படி எண்ணும் பழக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. விசேட தீக்கை நம்மை அன்றாடம் சிவபூசையில் பழக்குகிறது. எனவே இவ்விரு தீக்கைகளும் இன்றியமையாதனவே ஆகும். இவ்விரண்டிற்கும் நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் ஆகும். அ•தாவது நாம் செய்யலாம் அல்லவா? நம் உள்ளத்தில் சிவநினைவு ஒன்றே எப்போதும் வேண்டற்பாலது. பிற சடங்குகளில் எல்லாம் அவ்வளவு நாட்டம் தேவை இல்லை என்னும் உண்மையைச்,
“சாத்தி ரம்பல பேசும் குழக்கர்காள் கோத்தி ரமும் சலமும்கொண்டு என்செய்வீர்? பாத்தி ரம்சிவம் என்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளும்மாற் பேறரே" (5-60-3)என்று அப்பரடிகள் நமக்கு அருளிச்செய்துள்ள திருவாக்கிலிருந்து உணரலாம். அவரே,
“இருந்து சொல்லுவன் கேண்மின்கள் - அஞ்செழுத்து ஓதினால் அருந்தவம் தரும்" (5-60-4) என்று குருநாதராக அமர்ந்து கூறியதால் அதுவே நமக்குப் பரமப் பிரமாணமாக உள்ளது.
சரியை கிரியை யோகம் ஆகியவற்றைச் செய்தால் முத்தி கிடைக்குமா? அல்லது ஞானம் பெற்றால்தான் முத்தியைப் பெற முடியுமா?
‘ஞானம்' என்பது சரியை முதலிய தவங்களின் விளைவே ஆகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன முறையே அரும்பு, மலர், காய், கனி போன்றவை என்பதைத் தெளிவுபடுத்தி,
“விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனிபோல அன்றோ பராபரமே"என்று ‘தவராஜசிங்கம்' தாயுமானவர் அருளிச் செய்துள்ளார்.
சில நோய்களுக்கு அரும்பை மட்டும் உண்டால் அந்நோய் நீங்குவதைக் காண்கிறோம்.வேறு சில நோய்களுக்கு மலரை மட்டுமோ காயை மட்டுமோ உண்டாலே நோய் நீங்குகின்றது. அவ்வாறே சரியை நெறியில் நின்றாலும் மலநீக்கம் பெற்று வீடுபேறு எய்தலாம். கிரியை யோகம் ஆகிய நெறிகளில் நின்றாலும் முத்தி பெறலாம். ஞானம் கனி எனப் போற்றப்பட்டிருப்பதற்குக் காரணம் இறைவனை நினைந்து கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும் நிலைக்கு அது நம்மை இட்டுச் செல்வதாலேயே ஆகும்.
அந்நிலை ஞானத்தில் சரியை முதலியன உடையவருக்கும் உண்டு எனவேதான், “ஞானம் ஈசன்பால் அன்பே" (சம்பந்தர் புராணம் - பெ.பு) என்று சேக்கிழார் அருளிச் செய்தார்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளில் ஏதேனும் ஒரு நெறியில் உறைப்போடு நின்றால் வீடுவேறு பெறமுடியும் என்பதை மெய்ப்படுத்தும் பொருட்டே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களையும் நம் முன்பு தோன்றச் செய்து இறைவன் நமக்கு வழிகாட்டியுள்ளான். இந்நான்கும் சிவனை அடைவிக்கும் சிவநெறிகள் எனவே, இவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் சிவனடியார்கள் எனப்படுகிறார்கள்.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,
“ஞானம், யோகம், கிரியை, சரியை நாலும் நாதன்தன் பணி ஞான நாலினுக்கும் உரியன்." என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.