வையம் புரக்கும் தனிச் செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம் பணையும் செழும்
நீர்த் தடமும் புடை உடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறை நூல்
புரிந்த சீலப் புகழ் அதனால்
எய்தும் பெருமை எண் திசையும்
ஏறூர் ஏமப் பேர் ஊரால். 1
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு
பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு
மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்த இருள்
சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேத ஒலி
கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய். 2
பணையில் விளைந்த வெண் நெல்லின்
பரப்பின் மீது படச் செய்ய
துணர் மென் கமலம் இடை இடையே
சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்விக்
களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடை
இடையே வளர்த்த செந்தீமானுமால். 3
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும்
நீற்றுச் சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர்
தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல்
இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து
அருமை புரிவார் நமிநந்தி
அடிகள் என்பார் ஆயினார். 4
வாய்மை மறை நூல் சீலத்தால்
வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்
தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப்
பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல்
வழிபட்டு ஒழுகும் தன்மை நிலை
யாம இரவும் பகலும்
உணர்வொழியா இன்பம் எய்தினார். 5
அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன்
விரை சூழ் மலர்த்தாள் பணிவுறுதல்
எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம்
உடையார் பல நாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப் பாதங்கள் வணங்கினார். 6
செம் பொற்புற்றின் மாணிக்கச் செழுஞ்சோதியை
நேர் தொழுஞ் சீலம்
தம் பற்றாக நினைந்து அணைந்து
தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொற் புரிசைத் திருமுன்றில்
அணைவார் பாங்கோர் அரநெறியில்
நம்பர்க்கு இடமாம் கோயிலின்
உட்புக்கு வணங்க நண்ணினார். 7
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று
எழுந்த காதல் உடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார்
அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்கு பல
பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த
கருத்தின் இசைந்து எழுவார். 8
எழுந்த பொழுது பகல் பொழுது
அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியினிடை அப்பால் செல்லில்
செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு
நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை
ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார். 9
கையில் விளங்கும் கனல் உடையார்
தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்
ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு
உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்
பொய்யும் மெய்யும் ஆம் என்னும்
பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார். 10
அருகர் மதியாது உரைத்த உரை
ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து
போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை
முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ
ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில். 11
வந்த கவலை மாற்றும் இனி
மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர்
முகந்து கொடுவந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான்
அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி
அடிகள் செய்வது அறிந்திலரால். 12
சென்னி மிசை நீர் தரித்த பிரான்
அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு நாதர்
நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி
அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும்
திரி மேல் நீர் வார்த்தார். 13
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்
சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரநெறியார் கோயில்
அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு
நீரால் எரித்தார் நாடு அறிய. 14
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும்
அளவும் நின்று எரியக்
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள
வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும்
மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே
அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார். 15
இரவு சென்று தம் பதியில்
எய்தி மனைப்புக்கு என்றும் போல்
விரவி நியமத் தொழில் முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்து அருளிப்
பள்ளி கொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து
ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார். 16
வந்து வணங்கி அரநெறியார் மகிழும்
கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து
புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம்
முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு
எங்கும் ஏற்றி அடி பணிவார். 17
பண்டு போலப் பல நாளும் பயிலும்
பணி செய்து அவர் ஒழுகத்
தண்டி அடிகளால் அமணர் கலக்கம்
விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும்
குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல்
அமரர் பணியும் மணி ஆரூர். 18
நாத மறை தேர் நமிநந்தி
அடிகளார் நல் தொண்டு ஆகப்
பூத நாதர் புற்றிடங் கொள்
புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும்
நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்து அமைத்தான்
வேத ஆகம நூல் விதி விளங்க. 19
வென்றி விடையார் மதிச் சடையார்
வீதி விடங்கப் பெருமாள் தாம்
என்றும் திருவாரூர் ஆளும்
இயல்பின் முறைமைத் திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம்
திருநாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி
செய்தருளும் நிலைபெற்றார். 20
இன்ன பரிசு திருப் பணிகள்
பலவும் செய்தே ஏழ் உலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர்
அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு
ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமி நந்தி
அடிகள் தொழுதார் நாம் உய்ய. 21
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு
ஒரு நாள் எழுந்து அருள
யாவர் என்னாது உடன் சேவித்து
எல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன்
சேவித்து அணைந்து விண்ணவர்தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே
கண்டு களிப்புற்றார். 22
பொழுது வைகச் சேவித்துப் புனிதர்
மீண்டும் கோயில் புகத்
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து
தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு
புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார்
வந்து உள் புகுத மொழிகின்றார். 23
திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச்
செய்யும் கடன் முறையால்
அங்கி தனை வேட்டு அமுது செய்து
பள்ளி கொள்வீர் என அவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி
சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு
தொடக்கிற்று எனை என்று. 24
ஆதலாலே குளித்து அடுத்த
தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசனையைத் தொடங்க
வேண்டும் அதற்கு நீ
சீத நன்னீர் முதலான கொண்டு
இங்கு அணைவாய் எனச் செப்பக்
காதன் மனையார் தாமும் அவை
கொணரும் அதற்குக் கடிது அணைந்தார். 25
ஆய பொழுது தம்
பெருமான் அருளாலேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய
விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார்
துயிலும் பொழுது கனவின் கண். 26
மேன்மை விளங்கும் திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார்
போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார்
எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச்
செய்து அங்கு எதிர் அகன்றார். 27
ஆதி தேவர் எழுந்து அருள
உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து
விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத
எதிர் அந் நகர் காண்பார். 28
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத்த னைய மணிகண்டர் வடிவே
ஆகிப் பெருகு ஒளியாம்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம்
பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை
விழுந்து பணிந்து களிசிறந்தார். 29
படிவம் மாற்றிப் பழம் படியே
நிகழ்வும் கண்டு பரமர் பால்
அடியேன் பிழையைப் பொறுத்து அருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவாரூர் அகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார். 30
நீறு புனைவார் அடியார்க்கு
நெடுநாள் நியதி ஆகவே
வேறு வேறு வேண்டுவன
எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப் புற்றில்
இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப்
பெற்ற பெருமையினார். 31
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா
உலகும் தொழச் செய்து
நன்மை பெருகும் நமிநந்தி
அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும்
அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும்
வளர் பொற் சோதி மன்னினார். 32
பதிக வகை: சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள்
உலந்த ஐம் படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாட்டா மரையின் மடுவின் கண்
தனி மா முதலை வாய் நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே. 33
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்