உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம்
வழுவா ஒருமை நெறி
கொள்ளும் இயல்பில் குடி முதலோர்
மலிந்த செல்வக் குலபதியாம்
தெள்ளும் திரைகள் மதகு தொறும்
சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு
மருகல் நாட்டுத் தஞ்சாவூர். 1
சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து
வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை
நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ்
மெய்யன்பு உடைய சைவர் எனப்
பாரில் நிகழ்ந்த செருத் துணையார்
பரவும் தொண்டின் நெறி நின்றார். 2
ஆன அன்பர் திருவாரூர்
ஆழித் தேர்வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு
நலம் சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள்
செய்து காலங்களின் வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார்
தொண்டு பொலியக் குலவு நாள். 3
உலகு நிகழ்ந்த பல்லவர் கோச்
சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து
மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து
பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து
எழுந்த வேகத்தால் எய்தி. 4
கடிது முற்றி மற்றவள் தன்
கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப்
பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திருப்பூ மண்டபத்து
மலர் மோந்திடும் மூக்கைத்
தடிவன் என்று கருவியினால்
அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர். 5
அடுத்த திருத் தொண்டு உலகறியச்
செய்த அடல் ஏறு அனையவர்தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி
முடியார் அடிமைத் தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழச் செய்து
உய்யச் செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே
இறவா இன்பம் எய்தினார். 6
செங்கண் விடையார் திருமுன்றில்
விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்த அதற்கு
அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத்
துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை
அடிமை எடுத்து உரைப்பாம். 7
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம் - செருத்துணை நாயனார் புராணம்