திருந்துமா களிற்றிள மருப்பொடு
திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும்
பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட்
டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ்
நெஞ்சமே புகலதாமே. 1
ஏலமார் இலவமோ டினமலர்த்
தொகுதியா யெங்கும்நுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி
கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு
கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட
நெஞ்சமே அஞ்சல்நீயே. 2
பொன்னுமா மணிகொழித் தெறிபுனற்
கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந்
தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங்
கொச்சையே மருவின்நாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகாண்
நெஞ்சமே அஞ்சல்நீயே. 3
கந்தமார் கேதகைச் சந்தனக்
காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம்
நெஞ்சமே அஞ்சல்நீயே. 4
மறைகொளுந் திறலினார் ஆகுதிப்
புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணி செழும்பதி
திகழ்மதிற் கொச்சைதன்பால்
உறைவிட மெனமன மதுகொளும்
பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை இறைஞ்சிவாழ்
நெஞ்சமே அஞ்சல்நீயே. 5
சுற்றமும் மக்களுந் தொக்கவத்
தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப்
பங்கமா உள்கினானோர்
குற்றமில் லடியவர் குழுமிய
வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை
நம்பிடாய் நாளும்நெஞ்சே. 6
கொண்டலார் வந்திடக் கோலவார்
பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித்
தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களும் அமரரும்
முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே
உள்குநீ அஞ்சல்நெஞ்சே. 7
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா
மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார்
உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமுந்
தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண்
கொச்சையே பேணுநெஞ்சே. 8
அரவினிற் றுயில்தரும் அரியும்நற்
பிரமனும் அன்றயர்ந்து
குரைகழற் றிருமுடி யளவிட
அரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகள்
மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார்
கொச்சையே கருதுநெஞ்சே. 9
கடுமலி யுடலுடை அமணருங்
கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை இகழ்பவர்
கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை
யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ்
நெஞ்சமே அஞ்சல்நீயே. 10
காய்ந்துதங் காலினாற் காலனைச்
செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென இருந்தநல்
லடிகளை ஆதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை
ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர்
நல்லர்வா னுலகின்மேலே.
சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 11
திருச்சிற்றம்பலம்