எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஒதிச்சிவாயநம என்னும்
குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2
சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவமது அகன்று பரசிவன் ஆமே. 3
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்
தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாய மலமற்ற உண்மையே. 4
நமாதி நனாதி திரோதாயி யாகித்
தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்
சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல்1 எண்ணவே
பா-ம் : 1சிவவாதல் 5
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர்1 உள்ளுறும் மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.
பா-ம் : 1ஈன்றவள் 6
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. 8
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9
திருச்சிற்றம்பலம்