ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே. 1
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே. 3
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 4
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 5
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னியவாறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 6
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே. 8
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே. 9
உளங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
கலங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 11
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 12
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பி( வ ?)து
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 13
சுடருற ஓங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞானத் துறவியன் ஆமே. 14
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 15
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 17
திருச்சிற்றம்பலம்