பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3