வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1
மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே. 2
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே. 3
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. 4
உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன
துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. 5
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. 6
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தபின்1 ஆறுமே.
பா-ம் : 1 அடைந்தன்பில் 7
அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே. 8
கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. 9
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 10
திருச்சிற்றம்பலம்