சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2
ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3
துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார்
உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யாரறி வாரே. 5
தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே. 6
வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்
துய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்து நின்றானே. 7
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8
பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9
பதிக வகை: மகா வாக்கியம்
நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10
உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவ வேதத்து
இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற வோமய மாமே. 11
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவாக் காதி கலாதி
சேய்நா டொளியாச் சிவகதி யைந்துமே. 12
அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாது பிரானென்று பேணுங்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14
அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
கடிதொழ காண் என்னுங் கண்ணுத லானே. 16
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17
துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18
மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19
திருச்சிற்றம்பலம்