படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1
தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 2
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 4
ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 5
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 6
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 7
அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்
தொழுகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 8
பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 9
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 10
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 11
திருச்சிற்றம்பலம்