திருச்சிற்றம்பலம்
தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1
பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்
றாகத்து நீறணி யங்கக் கபாலஞ்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே. 3
காதணி குண்டலங் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4
திருச்சிற்றம்பலம்